அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஒரு கடிதம்
நல்ல பெற்றோர் எவ்வளவு முக்கியமானவர்கள்? தன்னுடைய அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நன்கு வளர்ந்த மகனிடமிருந்து வந்த பின்வரும் கடிதம் அவர்களுடைய மதிப்பை எடுத்துக்காண்பிக்கிறது:
“அன்புள்ள அம்மாவுக்கும் அப்பாவுக்கும்:
“நான் வீட்டைவிட்டு வந்து 16-க்கும் மேலான வருடங்களாகிவிட்டது, ஆகவே, இப்பொழுது இப்படிப்பட்ட ஒரு கடிதத்தை என்னிடமிருந்து பெறுவது உங்களை விசித்திரமாக உணரச் செய்யலாம். ஆனால் அதிகமாக யோசித்தப்பின்பு இதை எழுதவேண்டுமென்று நான் உணர்ந்தேன். பல ஆண்டுகளுக்கு முன்பு நான் உங்கள் வீட்டைவிட்டு வந்தபோது, அநேகப் பொருட்களை அனுமதி இல்லாமலே உங்களிடத்திலிருந்து எடுத்துவந்தேன். அவை சென்றுவிட்டதை ஒருவேளை நீங்கள் கவனிக்காமல்கூட இருந்திருக்கலாம். நான் அவற்றை எடுத்துவந்ததை அவ்வளவு திருட்டுத்தனமாக செய்ததால், கடந்த சில வருடங்கள் வரை நான் அவற்றை வைத்திருக்கிறேன் என்பதையே உணராமல் இருந்தேன். அவற்றை பின்வருமாறு காட்டப்பட்டுள்ளபடி வரிசைப்படுத்தி இருக்கிறேன்:
“சரியானதை நேசி: ஆ! இது என்னை எவ்வளவு பாதுகாத்தது!
“மக்கள் மீது அன்பு: அளவு, வடிவம், நிறங்கள் முக்கியமல்ல. உள்ளான குணங்களே முக்கியம்.
“நேர்மைத்தன்மை: என்னுடையது என்னுடையது தான், சிறந்த வகையில் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதற்காக பயன்படுத்தப்படவேண்டும். மற்றவர்களுடையதை, தனியாக விட்டுவிடு.
“தீர்மானிக்கும் தன்மை: என்னுடைய மிக கஷ்டமான காலங்களில் இது எனக்கு நன்றாக உதவிசெய்தது.
“பொறுமை: நீங்கள் என்னோடு மிகவும் தயவாயும், அன்போடும், மற்றும் பொறுமையோடும் நடந்துகொண்டீர்கள். நீங்கள் என்னிடத்தில் இதைக் காண்பிக்க ஒருபோதும் மறக்கவில்லை.
“சிட்சை: நீங்கள் ஒருபோதும் கொடூரமாகவோ அதிக விட்டுக்கொடுப்பவராகவோ இல்லை. ஆனால் அப்போது இது எனக்குப் புரியவில்லை. நீங்கள் என்னை மன்னிப்பீர்களா?
“விடுதலை: உடல், மனம், உணர்ச்சி சம்பந்தமான வலிகளைச் சுமத்துகிற புண்படுத்தும் பெற்றோரிடமிருந்து அநேக பிள்ளைகள் பெற்றுவரும் நோவுகளிலிருந்து விடுதலை. நீங்கள் எப்போதும் எனக்குச் சிறந்தது எதுவோ அதையே மனதில் கொண்டிருந்தீர்கள், மேலும் என்னை ஆபத்திலிருந்து பாதுகாத்தீர்கள். நீங்கள் எனக்குச் செய்ததை என்னால் என்றுமே மறக்க முடியாது.
“சாதாரணக் காரியங்களின் மீது அன்பு: மலைகள், நதிகள், நீல வானம், உல்லாச நடை, கூடாரமிட்டு தங்குவது. என் வாழ்க்கையை இன்பமானதாக்கினீர்கள். வேறு எந்தத் தாய்தந்தையும் இதை விட அதிகம் செய்திருக்க முடியாது. இதை நீங்கள் கடினமாகவே உணரவில்லையே.
“எச்சரிக்கை: நீ கேட்பதையெல்லாம் அவசரப்பட்டு நம்பிவிடாதே. ஆனால் அதை நீ நம்பிவிட்டால், என்ன நேரிட்டாலும் அதைக் கைவிடாதே.
“கடவுளுடைய வார்த்தையிலிருந்து சத்தியம்: எல்லாவற்றிலும் மிக முக்கியமானது இது. இது என்னுடைய பொக்கிஷம். பணமோ, படகுகளோ, வீடுகளோ, அல்லது எந்த செல்வமும் இதோடு ஒப்பிடப்பட முடியாது. இது எனக்கு மிக முக்கியமானதை—நித்திய ஜீவனைக்—கொடுக்கும்.
“மேற்சொல்லப்பட்டக் காரியங்களெல்லாம் மதிப்பிடப்பட முடியாதவை. அவற்றிற்கு விலை கிடையாது. அவற்றை நான் அவ்வளவு அதிகம் உபயோகித்திருக்கிறேன். இவற்றை நான் திருப்பிக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லையென்றால், இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்த விரும்புகிறேன். உங்களுக்கு மறுப்பு இல்லையென்றால், இவற்றை என் இளம் மகன்களுக்கும் கொடுக்க விரும்புகிறேன். மேலே குறிப்பிடப்பட்டவைகள் எனக்கு எப்படி பிரயோஜனமானதாக இருந்ததோ அதே போல் அவை என் மகன்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். மேலும் நான் இவற்றை எங்கிருந்து—பாட்டி தாத்தாவிடமிருந்து—பெற்றேன் என்பதை அவர்களுக்கு எப்போதும் சொல்வேன்.
“உங்கள் மகன்,”
(வேண்டுதலுக்கு இணங்க பெயர் குறிப்பிடப்படவில்லை.) (g92 10/8)