ஜெஸ்யுட்ஸ் “எல்லாருக்கும் எல்லாமாக”?
ஸ்பெய்னிலுள்ள விழித்தெழு! நிருபர்
ஜெஸ்யுட் அமைப்புமுறை ஒருபோதும் நெறிமுறையின்மைக்காக புகழை விரும்பவில்லை. இயேசு சங்கத்தை 1540-ல் நிறுவிய போப்பின் கட்டளை “சர்ச் போர் வீரர்களின் ஆட்சிக்காக” என்ற தலைப்பைக் கொண்டிருந்தது.a அந்தச் சமயத்தில் இந்தப் புதிய போரிடும் அமைப்புமுறை, நடந்துகொண்டிருந்த மதப்போர்களில் கத்தோலிக்க மதத்தைப் பாதுகாப்பதற்கு ஏற்ப பொருத்தியமைக்கப்பட்டதாய்த் தோன்றிற்று.
இக்னேஷியஸ் லாயோலா தன்னுடைய சீஷர்களை “சிலுவை கொடியின் கீழ் . . . யுத்தம் செய்யுங்கள்” என துரிதப்படுத்தியிருந்தாலும், அவர்தாமே “எல்லாருக்கும் எல்லாமாக,” இருக்கும்படி அறிவுரை கூறினார். இரண்டாவதாக சொன்னதை அவர்கள் பின்பற்றினால், முதலாவதாக சொன்னதை நல்லமுறையில் நிறைவேற்றமுடியும்; வளைந்துகொடுப்பது பல காரியங்களை அடைய திறவுகோலாக இருக்கும், என்றெல்லாம் ஜெஸ்யுட்ஸ் நம்பினர்.
விரைவில், தக்கவாறு தங்களை அமைத்துக்கொள்ளும் கல்வியறிவுடைய ஜெஸ்யுட்ஸ், ஆசிரியர்களாகவும், ஆட்சி வல்லுநர்களாகவும், அரசவை உறுப்பினர்களாகவும், ஜனங்களின் பாவங்களைக்கேட்டு ஆலோசனை வழங்கும் அதிகாரமுடைய குருக்களாகவும் அதிகம் தேவைப்பட்டார்கள். ஒருவேளை அவர்கள் லாயோலா நினைத்திருந்ததைவிட அதிகத்தை நிறைவேற்றினர். அநேக துறைகளில்—சிறப்பாக அரசியலில்—வெற்றி அவர்களுக்கு அதிகாரத்தையும் பணத்தையும் கொண்டுவந்தது, ஆனால் அது அழிவிற்கான வித்துக்களையுங்கூட விதைத்தது.
போப் க்ளெமண்ட் XIV, 1773-ல் பிரான்ஸ், போர்ச்சுகல், ஸ்பெய்ன் ஆகிய நாடுகளிலிருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக ஜெஸ்யுட் அமைப்புமுறையை “நித்தியத்துக்கும்” கலைத்துவிட்டார். அதன் உள்நோக்கம்? “சர்ச்சினுள் ஒரு நீடித்த, மற்றும் உண்மையான அமைதியை நிலைநாட்டுவதே.” தங்களுடைய அரசியல் செல்வாக்கின் காரணமாக, ஜெஸ்யுட்ஸ் ஒரு பாரமாகிவிட்டனர். போப்பின் இந்தக் கட்டளை 41 வருடங்களுக்குப்பின் ரத்து செய்யப்பட்டாலும், ஜெஸ்யுட்ஸ் மீண்டும் ஒருபோதும் அந்தப் பழைய புகழ்நிலையை அடையவில்லை.
இன்று உலகமுழுவதிலும் ஏறக்குறைய 23,000 பேர் ஜெஸ்யுட்ஸ் இருக்கின்றனர். விடுதலை இறையியலாக இருந்தாலும் சரி, பாதிரிமார்களின் அரசியல் ஈடுபாடாக இருந்தாலும் சரி, அல்லது பிறப்புக் கட்டுப்பாடாக இருந்தாலும் சரி, ஜெஸ்யுட்ஸ் கத்தோலிக்க கருத்துவேறுபாட்டின் மையமாக இன்னும் இருந்து வருகின்றனர். அவர்களின் இணக்கமின்மை போப்பின் வெறுப்பைச் சம்பாதித்தது. போப் ஜான் பால் II, 1981-ல் தன்னுடைய ஆளை அவர்களின் மத ஒழுங்கு தலைவராக்குவதற்கு ஜெஸ்யுட் தேர்தல் முறையிலிருந்து வழிவிலகினார்.
கடந்த சில வருடங்களாக, போப் தன் சர்ச்சின் பாதுகாப்பிற்காக ஓபுஸ் டேயி-யைb பின்பற்றுவோரிடமாக அதிகமாகத் திரும்பியிருக்கிறார். இருப்பினும், இந்த ஜெஸ்யுட்ஸ் சாதாரண கத்தோலிக்க அமைப்பு இல்லை. கத்தோலிக்கர் மத்தியிலுங்கூட, இவர்கள் ஏன் இவ்வளவதிக கருத்துவேறுபாட்டை ஏற்படுத்தியுள்ளனர்? இயேசு சங்கம்—என்ற தனது பெயருக்கேற்ப வாழ்ந்திருக்கிறனரா? உண்மையில் அவர்களுடைய குறிக்கோள் என்ன?
ஒரு குறிக்கோளையுடைய மனிதர்
தொடக்கத்தில், தனது சிறிய தொகுதியைக்கொண்டு பரிசுத்த தேசத்திலுள்ள மக்களை மதமாற்றுவதற்காக லாயோலா எண்ணங்கொண்டிருந்தார். ஆனால், 16-ம் நூற்றாண்டின் நிகழ்ச்சிகள் அவர்களைத் திசை திருப்பிற்று. புராட்டஸ்டண்டினரின் உட்பிரிவு ரோமன் சர்ச்சை ஆபத்துக்குள்ளாக்கியது. கீழ்த்திசை நாடுகளுக்கும் அமெரிக்க நாடுகளுக்கும் புதிய கடல்-வழிகள் திறக்கப்பட்டுக்கொண்டிருந்தன. இவ்வாறு ஜெஸ்யுட்ஸ், இரட்டை அம்சங்களைக் கொண்ட ஒரு குறிக்கோளைத் தெரிந்தெடுத்தனர்—கிறிஸ்தவமண்டலத்திற்குள் இருக்கும் “கருத்து முரண்பாட்டை” எதிர்ப்பதும் கத்தோலிக்கரல்லாத உலகத்தை மதமாற்றுவதும். தங்களுக்கு முன் வைத்துக்கொண்ட வேலையோ மிகப்பெரிது, ஆனால் தங்களுடைய எண்ணிக்கையோ குறைவு. எனவே ஜெஸ்யுட்ஸ் ஒவ்வொருவரும் நன்கு பயிற்றுவிக்கப்படவேண்டும் என்று லாயோலா தீர்மானித்தார்.
அவர் நான்கு ஜெஸ்யுட் உறுதிமொழிகளை ஏற்படுத்தி, அனுபவமில்லாதவர்களுக்கு ஒரு தொடர்ச்சியான ஆவிக்குரிய பயிற்சிகளைத் திட்டமிட்டு, அமைப்பு விதித்தொகுதியை அல்லது ஜெஸ்யுட் நடத்தைநெறிகளை வகுத்தார். (பெட்டியைப் பார்க்கவும்.) சர்ச்சுக்கு முழுமையான கீழ்ப்படிதல் என்பது அவர்களின் கொள்கைச் சொல்லாயிற்று. லாயோலாவின் முதல் சீஷர்களில் ஒருவரான பிரான்சிஸ் சேவியர் இவ்வாறு சொன்னார்: “பரிசுத்த சர்ச் தடைசெய்யுமானால் சுவிசேஷத்தையுங்கூட நம்பமாட்டேன்.” அவர்கள் தங்கள் குறிக்கோளை நிறைவேற்றுவதிலிருந்து அவர்களை எதுவுமே தடுத்து நிறுத்துவதாக இல்லை. “எங்கெங்கெல்லாம் மனிதரைப் பார்க்கிறீர்களோ அவர்களுக்காக போராடுங்கள், உங்களுக்கிருக்கும் எல்லா வழிகளிலும் போராடுங்கள்,” என்பதாக லாயோலா அவருடைய ஆட்களுக்குச் சொன்னார். அவர்களுக்கிருக்கும் வழிகள் யாவை?
புராட்டஸ்டண்ட் அலையை எதிர்த்து
வளர்ந்துவரும் புராட்டஸ்டண்ட் மதத்தின் வளர்ந்துவரும் செல்வாக்கைக் குறைக்க, கல்வி மற்றும் பாவ மன்னிப்புமுறை ஜெஸ்யுட்ஸின் ஆயுதங்களாக இருந்தன. எந்த ஒழுங்குபடுத்தப்பட்ட பிரசங்க வேலையைவிட, அவர்கள் புதிதாகத் தொடங்கிய தரமான பள்ளிகள் அரசர்கள், உயர்குடிமக்கள் போன்றவர்களின் மனதில் மிகவும் திறம்பட்ட வகையில் கத்தோலிக்கத்தைப் பதியவைப்பதாக அநேகமாக தற்செயலாய் கண்டுபிடித்தனர். மேலும் 16-ம் நூற்றாண்டில், உயர்குடி மக்களே தங்கள் ராஜ்யத்தின் மதத்தைத் தீர்மானிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருந்தனர்.c
லாயோலாவே குறிப்பிட்டார்: “இந்த அமைப்புமுறை ரோமன் நலனுக்கு செய்யக்கூடிய நன்மை, நம்முடைய கல்லூரிகளில் போதிப்பதைவிட பிரசங்கிப்பதைக் குறைந்தளவே சார்ந்துள்ளது.” ஜெஸ்யுட்ஸினால் ஏற்படுத்தப்பட்ட உயர்குடிமக்களுக்கான பள்ளிகள், அதிகாரத்திற்கு வரும்போது புராட்டஸ்டண்டினரை அடக்கி ஒடுக்கும் மனச்சாய்வுள்ள எதிர்கால ஐரோப்பிய ஆட்சியாளர்களுக்குப் போதித்து, தங்களுடைய கோட்பாடுகளைக் கற்பித்தன. தொடக்கத்தில் கிடைத்த இந்த வெற்றி, பாவமன்னிப்புமுறைக்கு ஒரு புதிய அணுகுமுறையின்மூலம் வலுப்படுத்தப்பட்டது. வரலாற்று ஆசிரியர் பால் ஜான்சன் விவரிக்கிறார்: “பாவமன்னிப்புமுறையில், ஜெஸ்யுட்ஸும் அவர்களிடத்தில் பாவ அறிக்கை செய்யும் செல்வாக்குடையோரும் வக்கீல்-வாடிக்கையாளர் உறவுமுறையைக் கொண்டிருந்தனர்.” ஆச்சரியமின்றி இந்தப் புதிய அணுகுமுறை மக்கள் விரும்புகிறதாய் இருந்தது. விரைவில், ஐரோப்பாவின் அநேக முடியரசர்கள் பாவங்களைக் கேட்க தங்களுக்குச் சொந்தமாக ஜெஸ்யுட் குருக்களைக் கொண்டிருந்தனர். இந்த ஜெஸ்யுட்ஸ் தாங்கள் ஆலோசனை வழங்கிவந்த செல்வாக்குடைய எல்லாருக்கும் எல்லாமுமாக இருப்பதில் சிறந்து விளங்கினர்.
பாவ மன்னிப்பளிக்கும் ஜெஸ்யுட்ஸ் ஒழுக்கக் காரியங்களில் கட்டுப்பாடு செய்யாமல் விட்டு, ஆனால் “திருச்சபைக்கு முரணான கோட்பாடுடையோ”ரைக் கடுமையாக நடத்தினர். பிரெஞ்சு அரசர் லூயிஸ் XV-ன் பாவங்களைக் கேட்கும் ஒரு ஜெஸ்யுட், “மரியாதையின் அக்கறைக்காக,” அரசன் தன்னுடைய படுக்கையறைக்கும் தன்னுடைய அரண்மனைத் தனியரங்குத் தலைவியின் படுக்கையறைக்கும் ஒரு ரகசிய படிக்கட்டு அமைத்துக்கொள்ள பரிந்துரை செய்தார். அதே சமயம், (பிரஞ்ச் புராட்டஸ்டண்டினர், அல்லது கத்தோலிக்க மதத்திலிருந்து பிரிந்து போன ஹூகனாட்ஸ் ஆகியோருக்கு கட்டுப்படுத்தப்பட்ட வழிபாட்டுரிமையைக் கொடுத்த) எடிக்ட் ஆஃப் நாண்ட்ஸ் ஆணையை ரத்து செய்யும்படி அவருடைய பாட்டனாகிய லூயிஸ் XIV, பாவஅறிக்கை கேட்கும் தன்னுடைய சொந்த ஜெஸ்யுட் குருவினால் அறிவுறுத்தப்பட்டார். இந்த நடவடிக்கையானது ஹூகனாட்ஸுக்கு எதிராக ஒரு பயங்கரவாத அலையை எழுப்பிவிட்டது, அநேகர் படுகொலை செய்யப்பட்டனர்.
கிறிஸ்தவத்தின் வரலாறு என்ற தனது புத்தகத்தில், பால் ஜான்ஸன் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “எல்லாவற்றிற்கும் மேலாக, கத்தோலிக்க அக்கறைகள் அபாயத்திலிருக்கும்போது ஒழுக்க சட்டங்களை ஏதாவது ஒரு வழியில் மீறலாம் என்ற மனநிலையைக் கொண்டிருந்ததாக ஜெஸ்யுட்ஸ் அறியப்பட்டிருந்தனர். . . . மதவேறுபாடுகளின் அழுத்தங்கள் தங்களுடைய ஒழுக்க மதிப்பீடுகளைத் தாறுமாறாக்க அனுமதித்த பலமான செயல்நோக்கமும் அதிக படிப்பறிவுள்ள செல்வந்தர்களுக்கு ஜெஸ்யுட்ஸ் ஒரு தெளிவான உதாரணமாகும்.”
ஜெஸ்யுட்ஸ், ஒழுக்க சம்பந்தமாக இருமனப்போக்குள்ள தயக்கத்தைக் காண்பித்திருந்தபோதிலும்—அல்லது காண்பித்ததனால்—சமய சீர்திருத்த மறுப்பு இலக்கத்தில் முக்கிய பங்கு வகித்தனர். அவர்களுடைய அமைப்புத் தோன்றி 41 வருடங்களுக்குப் பின், போப் கிரகரி XIII எழுதினார்: “தற்போதைய நாளில் கருத்து முரண்பாடுள்ளோரை அடியோடழிப்பதற்காக உங்களுடைய (ஜெஸ்யுட்ஸின்) பரிசுத்த அமைப்பைவிட கடவுளால் வடிவமைக்கப்பட்ட வல்லமைபொருந்திய துணை ஒன்றுமில்லை.” அதிகாரமும் செல்வாக்கும் நிறைந்த உயர் இடத்து ஆட்களோடுள்ள செல்வாக்கும், வளைந்து கொடுத்தலும் “கருத்துவேறுபாடுகளை” முறியடிக்க வெற்றியளிப்பனவாய் நிரூபித்தன. அது ஆட்களை மதம் மாற்றுவதிலும்கூட வெற்றிகாணுமா?
ஜெஸ்யுட்டின் தக்கவாறு அமைத்துக்கொள்ளும் தன்மை
கீழ்த்திசை நாடுகளில், ஐரோப்பாவில் தாங்கள் செய்ததுபோலவே, ஜெஸ்யுட்ஸ் ஆட்சியாளர்களையும் அதன் மூலம் அவர்களின் பிரஜைகளையும் மதமாற்ற குறிக்கோள் கொண்டனர். இந்தக் குறிக்கோளை நிறைவேற்றும் முயற்சியில், எல்லாருக்கும் எல்லாமுமாகவேண்டுமென்ற லாயோலாவின் கட்டளையை அளவுக்குமீறி பின்பற்றினர். இந்தியாவில் 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ராபேர்ட்டோ டே நோபிலி என்ற இயேசு சங்க மிஷனரி, ஆளும் வகுப்பினருக்குத் தங்களுடைய கொள்கைகளைப் போதிப்பதற்காக ஓர் உயர்ஜாதி பிராமணனைப்போல வாழ்ந்தார். சகபிராமணர்களைக் கோபமூட்டுவதைத் தவிர்க்க, தீண்டப்படாத கீழ்ஜாதி ஜனங்களுக்கு ஒரு கோலினால் அப்பம் அல்லது பரிசுத்தமாக்கப்பட்ட பூசை மெல்லப்பத்தைக் கொடுத்தார்.
மாடேயோ ரிச்சி, ஒரு கணிதமேதையாகவும் வானயியல் நிபுணராகவும் இருந்ததன் முக்கிய காரணமாக சீன அரசவையில் ஒரு செல்வாக்குள்ள அங்கத்தினரானார். அவர் தன்னுடைய மத நம்பிக்கைகளை தனக்குள்ளே வைத்துக்கொண்டார். மிங் அரசரவையில் அவருக்குப் பின் தொடர்ந்து வந்த ஜெஸ்யுட் யோஹான் ஆடம் ஷால் ஃபோன் பெல், ஒரு துப்பாக்கி தொழிற்சாலையையும்கூட நிறுவி, (கத்தோலிக்க “புனிதர்களி”ன் பெயர் கொடுக்கப்பட்ட) அந்தத் துப்பாக்கிகளைக் கையாள சீன படைகளுக்குப் பயிற்சி கொடுத்தார். ஆட்களை மதம் மாற்றுவதில் வெற்றியடைய, ஜெஸ்யுட்ஸ் சீன கத்தோலிக்கர் மூதாதையர் வழிபாட்டைத் தொடர்ந்து நடத்த அனுமதித்தனர். இது ஒரு கருத்து முரண்பாடுள்ள தீர்மானமாகையால் இறுதியில் போப் இதனை நிராகரித்தார். இவ்வளவு விட்டுக்கொடுத்தபோதிலும் இந்தியாவிலும் சீனாவிலும் அரசாளுபவர்கள் மாற்றப்படாமலேயே இருந்தனர்.
தென்னமெரிக்காவில் ஒரு குடியேற்ற ஆட்சி அணுகுமுறை கையாளப்பட்டது. குடியேற்றப்படா உள்நாட்டுப்பகுதிகளில், ஜெஸ்யுட்ஸ் தன்னாட்சி உரிமையையுடைய குடியேற்றங்களை அமைத்தனர். இக்குடியேற்றங்களில் குவாரனி இந்தியர்கள் பெரும்பாலும் ஜெஸ்யுட் மிஷனரிகளால் ஆளப்பட்டனர். இதற்குப் பதிலாக அவர்கள் விவசாயம், இசை, மதம் போன்றவற்றில் பயிற்றுவிக்கப்பட்டனர். செழித்தோங்கினபோது 1,00,000 சொந்தநாட்டவரைக் கொண்டிருந்த இதுபோன்ற குடியேற்றங்கள், போர்ச்சுகீசிய மற்றும் ஸ்பானிய வர்த்தக அக்கறைகளுக்கு முரண்பாடாக இருந்தபோது அவை இறுதியாக சிதைந்துபோயின. போர்ச்சுகீசியர்களுக்கு எதிராக ஒரு முறையாவது தீவிரமாக போர் செய்திருந்த 30,000 இந்தியர்களைக்கொண்ட ஒரு படைக்கு ஜெஸ்யுட்ஸ் பயிற்சி கொடுத்திருந்தபோதிலும், 1766-ல் இந்தக் குடியேற்றங்கள் அழிக்கப்பட்டு ஜெஸ்யுட்ஸ் நாடு கடத்திச் செல்லப்பட்டனர்.
நூற்றாண்டுகளாக பல தனி ஜெஸ்யுட், கத்தோலிக்க கொள்கையைத் தொலைதேசங்களில் பரப்ப துணிச்சலுடன் வீரதியாகங்களைச் செய்திருக்கின்றனர். முக்கியமாக, ஜப்பானில், அவர்கள் எடுத்த முயற்சிகளுக்காக கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டனர். அங்கு ஜப்பானிய படைத்தலைவர் (Shogun) அவர்களுடைய நடவடிக்கைகளைத் தடைசெய்யும் முன்பு அவர்கள் ஓரளவு வெற்றியடைந்தனர்.d
ஜெஸ்யுட்ஸுக்கு வைராக்கியமும் தியாக ஆவியும் இருந்தபோதிலும், உலகத்தை மதமாற்றும் அவர்களது முயற்சிகள் முக்கியமாக தங்களுடைய சொந்த சூழ்ச்சித் திட்டமுறைகளின் காரணமாகவே முறியடிக்கப்பட்டன.
ஓர் அரசியல் சுவிசேஷம்
கடந்தகாலங்களில் பிரச்னைகள் இருந்தபோதிலும், 20-ம் நூற்றாண்டு ஜெஸ்யுட்ஸ் அரசியலிலிருந்து விலகிக்கொள்ள வருத்தப்படுவதாக தோன்றுகிறது. நோக்குநிலையில் ஒரு மாற்றம் காணப்படாதிருப்பதில்லை. நூற்றாண்டுகளாக பழைமைவாத, வலதுசாரி அரசாங்கங்களுக்கு ஆதரவளித்த பின், இன்றைய ஜெஸ்யுட்ஸ், குறிப்பாக அவர்கள் ஒரு வளரும் நாட்டில் வாழ்ந்துவருவார்களேயானால், புரட்சிகளுக்கான காரணத்தை ஆதரிப்பதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. நிகரகுவா ஓர் எடுத்துக்காட்டாகும்.
நிகரகுவாவில் சோண்டினிஸ்டாஸ் (Sandinistas) ஆட்சிக்கு வந்தபோது, அவர்கள் அரசாங்கத்தில் பதவிகளை ஏற்றுக்கொண்ட ஃபெர்னான்டோ கார்டினால், ஆல்வாரோ ஆர்க்வேயோ என்ற இரண்டு பிரபல ஜெஸ்யுட் குருக்களின் ஆதரவைப் பெரிதாக மதித்தனர். “புரட்சியில் ஈடுபட விரும்பாத யாரேனும் நிகரகுவாவில் இருப்பானேயானால், நிச்சயமாக அவன் கிறிஸ்தவனல்ல. இன்று ஒரு கிறிஸ்தவனாக இருக்கவேண்டுமானால், ஒரு புரட்சியாளனாக இருப்பதும் அவசியம்” என்று பெருமை பாராட்டுவதன்மூலம் ஆர்க்வேயோ தனது அரசியல் பதவியைக் காத்துக்கொண்டார். புரிந்துகொள்ளக்கூடியவிதமாகவே, இதைப்போன்ற ஓர் அரசியல் சுவிசேஷம் உண்மை மனதுள்ள அநேகரைப் புண்படுத்துகிறது.
மெகேல் டே யுனாமுனோ ஒய் ஜுகோ, ஒரு பிரபல ஸ்பானிய தத்துவஞானி, ஜெஸ்யுட்ஸ் அரசியலில் தலையிடுவது இயேசுவின் போதனைகளுக்குப் புறம்பானது என்பதாக 1930-ல் குறைகூறினார். அவர் இவ்வாறு எழுதினார்: “ஜெஸ்யுட்ஸ் . . . அடிக்கடி இயேசு கிறிஸ்துவின் சமூக ராஜ்யத்தின் கதைகளைச் சொல்கின்றனர், மேலும் அதே அரசியல் கொள்கையோடு, அரசியல், பொருளாதார, சமூக பிரச்னைகளை அணுக விரும்புகின்றனர். . . . பொது உடைமையோடோ அல்லது சொந்த உடைமையோடோ கிறிஸ்து சம்பந்தம் கொண்டிருக்கவில்லை. . . . தம்முடைய ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல என்று அவர் கூறினார்.”
கோட்பாட்டு நடவடிக்கைகளில் நவீனகால ஜெஸ்யுட்ஸ்கூட புரட்சிகரமாக இருக்க நாடுகின்றனர். மைக்கேல் பக்லே என்ற ஒரு பிரபல அமெரிக்க ஜெஸ்யுட், பெண்பாதிரிகளின்மீதான வத்திக்கனின் தீர்ப்பைப் பகிரங்கமாக குறைகூறினார். எல் சால்வடாரில், யோன் சொப்ரினோ விடுதலைக் கொள்கையையும், “இறைமையியல் காரியங்களைப் புரிந்துகொள்ளுதலின்பேரிலான கருத்துக்களில் மார்க்ஸின் செல்வாக்கை”யும் ஆதரிக்கிறார். ஜெஸ்யுட்ஸின் மத ஒழுங்கு தலைவர் 1989-ல் கருத்தடையின்மீதான வத்திக்கனின் தீர்மானத்தைக் குறைகூறுவதிலிருந்து விலகியிருக்கவேண்டுமென ஆணையிட்டு ஜெஸ்யுட்ஸ் அனைவருக்கும் ஒரு கடிதம் அனுப்ப கடமைப்பட்டிருப்பதாக உணர்ந்தார்.
ஜெஸ்யுட்ஸின் கடந்தகால மற்றும் தற்கால பதிவின் நோக்குநிலையில், அவர்கள் ஓர் இயேசு சங்கம் என்று உண்மையிலேயே கூறமுடியுமா?
ஓர் உண்மையான இயேசு சங்கமா?
“நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்,” என்று இயேசு கூறினார். (யோவான் 15:14) இயேசுவின் உண்மையான ஒரு நண்பன் மற்றும் சீஷன் வேறு யாருக்குமின்றி கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் மட்டுமே முழு கீழ்ப்படிதலைக் காண்பிக்க கடமைப்பட்டிருக்கிறான். (அப்போஸ்தலர் 5:29) கடவுளுக்குக் கீழ்ப்படிவதைவிட மனிதனுக்குக் கீழ்ப்படிவது, தவிர்க்கமுடியாதவகையில் கிறிஸ்துவின் செய்தியைத் தவறாகப் பயன்படுத்தவும் அரசியலில் ஈடுபடுத்தவும் வழிநடத்துகிறது.
சந்தேகமின்றி, ஜெஸ்யுட்ஸ் புராட்டஸ்டண்டினருக்கு எதிராக போராடிய சில போர்களில் வெற்றி பெற்றனர். ஆனால் எப்படி? அயலானிடம் காட்டும் அன்பைவிட மறைமுகமான அரசியல் சூழ்ச்சிகளிலே வெற்றி அதிகம் சார்ந்திருந்தது. அவர்களுடைய நற்செய்தி அறிவிப்பு அரசியல் கருத்துக்களினாலும் பேராவல்களினாலும் மாசுபடுத்தப்பட்ட நற்செய்தியைப் பரப்ப ஏதுவாயிருந்தது. உலகத்தை மாற்றுவதற்காகப் புறப்பட்ட ஜெஸ்யுட்ஸ், அதன் ஒரு பாகமாகவே மாறிவிட்டனர். இதைத்தான் இயேசு விரும்பினாரா?
இயேசு தம்முடைய உண்மை சீஷர்களைப்பற்றி சொன்னார்: “நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.” (யோவான் 17:16) அப்போஸ்தலன் பவுல் “எல்லாருக்கும் எல்லாமா”னது உண்மைதான். (1 கொரிந்தியர் 9:22, டூவே) ஆனால் இது அவருடைய செய்தியைக் கேட்போருக்கேற்ப அமைப்பதையே குறிக்கிறது, மதம் மாற்றுவதற்கும் அரசியல் செல்வாக்கைத் தங்கள் பிடியில் வைத்திருப்பதற்கும் கிறிஸ்தவ நியமங்களை விட்டுக்கொடுப்பதையல்ல.
இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக ஜெஸ்யுட்ஸ் தங்களையே உலகுக்கு அளிக்கவேண்டுமென லாயோலா நோக்கங்கொண்டிருந்தார். ஆனால் இந்தக் குறிக்கோளானது அரசியலாலும் சாக்குப்போக்குகளாலும் கறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அவர்கள் “எல்லாருக்கும் [எல்லா மனிதர்களுக்கும், NW] எல்லாமா”னார்கள், ஆனால் “எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்”யவில்லை.—1 கொரிந்தியர் 10:31. (g92 11/8)
[அடிக்குறிப்புகள்]
a சொல்லர்த்தமாக “கடவுளுடைய வேலை”க்கு என்ற பொருள் லத்தீனிலிருந்து வந்தது. இது முக்கியமாக கத்தோலிக்க செல்வந்தர்களைக்கொண்ட அமைப்பு. ஸ்பெய்னில் 1928-ல் ஓசே மாரியா எஸ்க்ரிவா என்ற கத்தோலிக்க குருவால் நிறுவப்பட்டது.
b தி பீஸ் ஆஃப் ஆக்ஸ்பர்க் (The Peace of Augsburg) 1555-ல் லத்தீனில் கூயுஸ் ரெஜியோ ஏயஸ் ரிலிஜியோ (cuius regio eius religio) (அவருடைய மதம் யாருடைய ஆட்சி [இது]) என்று விவரிக்கப்படும் சட்டத்தை ஸ்தாபித்தது.
c வெற்றிபெறுவோர் மிஷனரிகளின் அடிச்சுவடுகளைப் பின்பற்றவேண்டும் என்ற பயமுறுத்துதலுக்குப் பதிலளிக்கும்பொருட்டு, ஜப்பானிய ஷோகன் ஹிடெயோஷி அநேக ஜெஸ்யுட்ஸையும் பிரான்ஸிஸ் மடத்துறவிகளையும் கொன்றார். பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பானிய தொண்டர்களின் உதவியால் சீனாவை வெல்வதற்கான ஜெஸ்யுட்ஸின் திட்டம், ஐயமின்றி ஜப்பானில் ஜெஸ்யுட்ஸுக்கிருந்த உள்நோக்கத்தின்பேரில் வலுத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. அங்கு 1614-ல் வந்த அரசாங்கத் தடை, “நாட்டின் அரசை மாற்றி தேசத்தைத் தனதாக்கிக்கொள்வதே” கத்தோலிக்கர்களின் நோக்கம், என்ற பயத்தைக் குறிப்பாக வெளிப்படுத்தியது.
[பக்கம் 19-ன் பெட்டி/படம்]
ஒரு ஜெஸ்யுட்டை உருவாக்குதல்
நான்கு உறுதிமொழிகள். முதலாவது மூன்று உறுதிமொழிகள் இருக்கின்றன: வறுமை, தூய்மை, கீழ்ப்படிதல். பன்னிரண்டு வருடங்களுக்குப்பின் ஒரு ஜெஸ்யுட், “ரோமாபுரி போப்பின் ஒவ்வொரு அறிவுரைக்கும் கீழ்ப்படிவதாக” உறுதிகூறி, தனது நான்காவது உறுதிமொழியை எடுக்கிறான்.
ஆவிக்குரிய பயிற்சிகள் நான்கு வார தியான நிகழ்ச்சியை விவரிக்கும் ஒரு கையேடு. இது ஜெஸ்யுட்ஸின் நலனுக்காக வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும் ஓர் ஒப்புக்கொடுத்தலைப் புதியவரின் மனதில் பதியவைப்பதற்காக அமைக்கப்பட்டது.
முதல் வாரத்தின்போது, பங்குபெறுபவன்—தன் எல்லா உணர்வோடும்—நரக வேதனைகளைக் கற்பனை செய்து பார்க்கிறான். இரண்டாம் வாரத்தில், அவன் ஒரு ஜெஸ்யுட்டாக ஆவானா என்பதைத் தீர்மானிக்கவேண்டும். மூன்றாவது வாரம் இயேசுவின் பாடுகள் மற்றும் மரணம் ஆகியவற்றின் பேரில் விரிவாக தியானம் செய்வதற்கு அற்பணிக்கப்படுகிறது. இறுதி வாரமோ கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை “அனுபவிக்க,” (ஆழ்ந்த தியானம்) ஒதுக்கப்படுகிறது.
படிப்படியாக அறிவுரைகள் கொடுக்கப்படுகின்றன. முதல் வாரத்தில், உதாரணமாக, “நரகத்தின் புகை, கந்தகம், புழுங்கும் நாற்றம், அழிவு ஆகியவற்றை முகர்ந்து பார்க்கும்படியும், அந்தத் தீக்கொழுந்து எவ்வாறு ஆத்துமாக்களைப் பிடித்து பட்சிக்கிறது என்பதை உணரும்படியும்” புதியவன் சொல்லப்படுகிறான்.
அமைப்பு விதி இக்னேஷியஸ் லாயோலாவால் இயற்றப்பட்ட சட்டங்களும் நெறிமுறைகளும் அடங்கிய யூத சட்டத்தொகுப்பைப்போன்ற ஒரு புத்தகம். மற்ற காரியங்களோடு, கைகளை எந்த நிலையில் வைக்கவேண்டும், அதிகாரமுடையவரை எவ்வாறு நோக்கவேண்டும், ஏன் மூக்கில் சுருக்கம் விழுவதைத் தடுக்கவேண்டும் என்று ஜெஸ்யுட்ஸ் சொல்லப்படுகின்றனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக, அமைப்பு விதி, ஜெஸ்யுட் அவனுடைய மேலானவர்களுக்கு முழுமையான கீழ்ப்படிதலைக் காட்டுவதை அழுத்திக் காட்டுகின்றன: “கீழானவன் தன்னுடைய மேலானவனின் கைகளில் பிணத்தைப்போலிருக்கிறான்.”
ஏன் ஒரு ஜெஸ்யுட் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரானார்
பொலிவியாவின் ஏழ்மையான அத்தியட்சாதீனங்களில் வேலை செய்துகொண்டிருக்கும்போதுதான் எனக்கு சந்தேகங்கள் எழும்பின. முதன்முதல் அது சர்ச்சைப் பற்றியவை அல்ல, ஆனால் அதன் பிரதிநிதிகளைப் பற்றியவையே. உதாரணமாக, விசேஷ பூசைகள், திருமணங்கள், சவஅடக்கங்கள் போன்றவற்றிற்காக பெறப்படும் நன்கொடைகளிலும் கட்டணங்களிலும் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஒவ்வொரு மாதமும் உள்ளூர் பிஷப்பிடம் நான் ஒப்படைக்கவேண்டும். என்னுடைய அத்தியட்சாதீனம் ஏழ்மையான ஒன்றாகையால், பிஷப்பின் பங்கு ஒருபோதும் கவரும் அளவு அதிகமிருந்ததில்லை. அவர் இகழ்ச்சியோடே: “நீ எனக்குக் கொண்டுவந்த கஞ்சத்தனமான காணிக்கை இது தானா?” என்று சொல்லி உறையைத் திறக்கும்போது அது என்னை ஆழ புண்படுத்தியது. தெளிவாகவே, ‘விதவையின் இரண்டு காசுக்கு’ அவரிடத்தில் மதிப்பில்லை.—லூக்கா 21:1-4, டூவே.
மற்றொரு காரியமும்கூட என்னை தொந்தரவு செய்தது. அது கத்தோலிக்க சர்ச்சின் அதிகாரத்தின் க்ரெஸ்டோ டே லா வெரா-க்ருஸ் [Cristo de la Vera–Cruz] (உண்மை சிலுவையின் கிறிஸ்து) என்ற எனது அத்தியட்சாதீன ஆலயத்தில் உள்ள ஒரு சிலையை வழிபடுவதன் சம்பந்தமாக உள்ளூர் புறமத கருத்துக்களையும் பழக்கங்களையும் ஏற்றுக்கொண்டு அனுமதிப்பதற்கான விருப்பமேயாகும். பல காரியங்களில் இந்தப் பழக்கங்கள் பேய்வெறியின் பகிரங்க வெளிக்காட்டுதல்களாகும். கூடுதலாக அடிக்கடி குடிவெறி இந்த மதவிழாக்களோடு சம்பந்தப்படுத்தப்படுகிறது. ஆனால் இந்தப் புறமதக் குடிவெறிக்கெதிராக அதிகாரப்பூர்வமான குரலெழுப்பப்படவில்லை.
நூற்றாண்டுகளினூடே, கத்தோலிக்க சர்ச் பைபிள் சத்தியத்திலிருந்து விலகி, அதனை மனித பாரம்பரியங்களாலும், தத்துவங்களாலும் மாற்றீடு செய்தது என்றும் வெறுமனே மனிதர்கள் தனிப்பட்ட நபர்களாக மட்டும் தவறுவது கிடையாது என்றும் நான் நம்பினேன். ஆதலால் இருதயத்தில் நான் இனியும் கத்தோலிக்கன் இல்லை என்பதை உணர்ந்தேன்.—ஹூலியோ இனியஸ்டா கார்சியா
[பக்கம் 18-ன் படங்கள்]
ஜெஸ்யுட்ஸ் ஸ்தாபகர், இக்னேஷியஸ் லாயோலாவும், ஸ்பெய்னிலுள்ள அவருடைய ஆலயமும்
[பக்கம் 20-ன் படம்]
ஜெஸ்யுட்ஸ் மறைமுகமான அரசியல் சூழ்ச்சிக்கு நன்கு அறியப்பட்டிருந்ததன் காரணமாக, அவர்கள் 1767-ல் ஸ்பெய்னிலிருந்து வெளியேற்றப்பட்டனர்
[அடிக்குறிப்புகள்]
d அவருடைய முழு வரலாற்றை ஆங்கில காவற்கோபுரம் நவம்பர் 15, 1982-ல் காண்க.
[பக்கம் 11-ன் படங்கள்]
ஸ்பானிய ஸ்தாபகர், இக்னேஷியஸ் லாயோலாவால் இந்த அமைப்புமுறைக்குக் கொடுக்கப்பட்ட பெயர் இயேசு சங்கம் என்பதாகும். அவர்கள் பொதுவாக அறியப்படுகிற “ஜெஸ்யுட்ஸ்” என்ற பெயர் புராட்டஸ்டண்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது.