வீடு என்று நாம் அழைக்கும் இடங்களைப் பாருங்கள்
“இடம்பல திரிந்து இன்பம்பல கண்டாலும்எளியதோர் இடமேயெனினும், வீட்டுக்கு நிகரானதோர் இடமில்லை.”—ஜான் ஹவார்ட் பாய்னே.
நீங்கள் வீடு என்றழைப்பது என்ன? தொழிற்திறமை வாய்ந்த கட்டுபவர்களால் நவீன சாதனங்களை உபயோகித்து நன்றாகக் கட்டப்பட்ட ஒரு வீடா? அல்லது உள்ளூர் சுற்றுப்பகுதிகளில் கிடைத்தப் பொருட்களை வைத்து வீட்டுச் சொந்தக்காரர்களே கட்டிய ஒரு வீடா? உலகம் முழுவதும் மக்கள் வீடு என்று அழைக்கும் இடங்களுக்கு ஒரு கண்ணோட்டம் செலுத்துவோம் வாருங்கள்.
நம்முடைய முதல் நிறுத்தம் எல் சல்வடார் நாடாகும். இங்கு டேஹிஸ்டேபேகே என்ற சிறிய கிராமத்தில் நாம் ஹாரேவையும் அவருடைய பெற்றோரையும் சந்திக்கிறோம். ஹாரேவின் வீட்டில் நடந்துபோகையில், தரை மண்தரையாக இருக்கிறதைக் கவனிக்கிறோம். கூரையைத் தாங்கிநிற்கும் ஆதாரங்கள் அடிமரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கம்புகளாகும். இவை நிலத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. சூரிய வெப்பத்தில் உலர்த்தப்பட்ட செங்கற்களினால் கட்டப்பட்ட சுவர்கள் சேற்றினால் பூசப்பட்டிருக்கின்றன. ஓடுகளைக்கொண்டு வேயப்பட்ட கூரை சுவர்களுக்கு அப்பால் நீண்டிருக்கிறது. இது நிழல் தருவதற்கும் மழையிலிருந்து சுவரைப் பாதுகாப்பதற்கும் ஆகும். எனினும், எல் சல்வடாரில் அநேகர் ஓடுகளுக்குப் பதிலாக, நீண்ட புல்லை 15 சென்டிமீட்டர் உயரத்திற்கு அடுக்கிவைத்துக் கூரையை உருவாக்குகின்றனர்.
கொலம்பியாவில் வசிக்கும் சில ஏழை கிராமவாசிகள் ஏறக்குறைய இதேபோல வீடுகளில்தான் வசிக்கின்றனர். நிலத்தில் மூலைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் கம்புகளுக்கு இடையில் சேறு பூசப்பட்ட மூங்கில் தட்டிகள் சுவர்களாக வைக்கப்பட்டிருக்கின்றன. கம்புகளால் தாங்கப்பட்டிருக்கும் கூரை பனை ஓலைகளாலானது.
உருகுவேயிலுள்ள டாக்வாரம்போவில் சில வீடுகள் குதிரை சாணம், மண், தண்ணீர் போன்றவற்றால் செய்யப்பட்ட உலர்த்தப்பட்ட செங்கற்களால் கட்டப்பட்டவை. இந்தக் கலவை சமமான தளத்தில் மர அச்சுகளில் வார்த்துச் சூரிய வெப்பத்தில் உலர்வதற்கு வைக்கப்படுகிறது. கடினமாக்கப்பட்ட செங்கற்கள் சுவர்கள் உண்டாக்க பயன்படுத்தப்படுகிறது. வேயப்பட்ட ஒரு கூரை ஆதாரமாக இருக்கும் கூரை கம்புகளின்மேல் அமைந்திருக்கிறது. ஜன்னல்களில் கண்ணாடிகளுக்குப் பதிலாக, மரக்கதவுகள் உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றன, தரைகள் சாதாரண மண்தரைகளே.
உருகுவேயின் உள்நாட்டுப் பகுதிகளில் வாழும் சில ஏழை குடும்பங்கள் புல்தரை வீடுகளில் வாழ்கின்றன. உலர்த்தப்பட்ட செங்கல் வீடுகளைப் போலவே, இதுபோன்ற இருப்பிடங்கள் வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும் மழைகாலத்தில் வெதுவெதுப்பாகவும் இருக்கின்றன. புல் வளர்ந்த மண்கட்டிகள் ஒன்றோடொன்று பொருந்த இணையும் முறையில் பரப்பப்பட்டு 0.6 மீட்டர் பருமன் மற்றும் 1.8 மீட்டர் உயரமுள்ள சுவர்கள் உருவாக்கப்படுகின்றன. பதினெட்டு சென்டிமீட்டர் பருமனுள்ள கூரை உண்டாகும்படி கோரைப்புல் கூரை ஆதாரங்களின்மேல் கட்டப்படுகின்றன. சுவரின் வெளிப்புறம் ஒரு மிருதுவான மற்றும் உறுதியான பரப்பாக ஆவதற்குச், சில வீட்டுக்காரர்கள் சேறும் மாட்டுச்சாணமும் சேர்ந்த கலவையினால் பூசுகின்றனர். வீட்டின் தடுப்புச் சுவர்கள் சணற்பைகளினால் மூடிக்கட்டப்பட்ட இளஞ்செடிகளின் கட்டுமானத்தினாலானது. சிலசமயங்களில் இந்தச் சணற்பைகளின்மேல் சேறு பூசப்படுகிறது.
நீரோடைகளுக்கும் சதுப்பு நிலங்களுக்கும் அருகே உள்ள பகுதிகளில், உள்நாட்டுப் பகுதிகளில் வாழும் சில உருகுவேயினர் கோரைப்புல் வீடுகளில் வாழ்கின்றனர். இவை கோரைப்புல் கட்டுகளைப் புதிதாக வெட்டப்பட்ட மரக்கிளைகளில் வைத்து இறுக கட்டிய கட்டுமான அமைப்புகளைக் கொண்டவையாகும். இது எவ்வாறு செய்யப்படுகிறது? கோரைப்புல்கள் 1.5 மீட்டர் முதல் 1.8 மீட்டர் நீளத்திற்கு வெட்டப்பட்டு அவற்றிலுள்ள ஈரம் முழுவதும் போகும்வரை சூரிய வெப்பத்தில் உலர்த்தப்படுகின்றன. பிறகு இவை 23 சென்டிமீட்டர் விட்டத்தையுடைய கட்டுகளாகக் கட்டப்படுகின்றன. இறுதியில் இவை வரைச்சட்டங்களில் கட்டப்பட்டு வீடுகளின் சுவர்களாகவும் கூரையாகவும் அமைக்கப்படுகின்றன.
மிதக்கும் வீடுகள்
பெருவின் இக்யுடோஸ் நகரில், குறைந்த வசதி படைத்த ஒரு மனிதன் அமேசான் நதியின் மேல் தன் வீட்டைக் கட்டுகிறான். அவன் அந்த வீடு நீரோட்டத்தில் அடித்துக்கொண்டு போகாமல் எவ்வாறு தடுக்கிறான்? பெரிய கனமில்லா மரங்களைக் காடுகளிலிருந்து வெட்டி ஒரு கட்டுமர தளத்தைக் கட்டுகிறான். இந்தத் தளத்தை ஆற்றின் அடியில் நடப்பட்ட கம்புகளில் நங்கூரப்படுத்துகிறான். இவ்வாறு அத்தளத்தைப் பத்திரமாக அந்தக் கம்புகளில் கட்டிய பின், அதன்மீது தனது வீட்டைக் கட்டுகிறான். அது மூங்கில் ஆதரவுகளையும் வேயப்பட்ட கூரையையும் கொண்ட ஓரறை அமைப்பாகும். அந்த வீடு தனது சொந்த குளிர்சாதன வசதியைக்கொண்டிருக்கிறது—மூங்கில் ஆதரவுகளின் இடைவெளிகளினூடே காற்றுப் புகுந்து செல்லுகிறது. வெப்பமண்டலத்தின் அதிக சூட்டின் காரணமாக அடிக்கடி ஒரு முழு சுவரும் திறந்தவண்ணம் விடப்படுகிறது.
தூங்கும் வசதிகள் வழக்கமாக ஒரு மரப் படுக்கை, தொட்டில்கள் அல்லது தரையில் விரித்த பாய்கள் போன்றவற்றால் ஆனதாகும். இந்த வீடு இக்யுடோஸில் உள்ள அநேக வீடுகளை ஒத்துப்பார்க்கையில் பழங்கால வீட்டைப்போல இருந்தாலும் இது ஏழை மக்களின் வீடாகும்.
பெருவின் அழகிய டிடிகாகா ஏரியில், கோரைப்புல் வீடுகள் மிதக்கும் தீவுகளின்மீது கட்டப்படுகின்றன. இந்தத் தீவுகளும்கூட கோரைப்புல்லால் ஆனவை. இவை வித்தியாசப்பட்ட அளவுகளில் உள்ளன. சில தீவுகள் டென்னிஸ் ஆடுகளத்தைப்போல சிறியவை. கடல் மட்டத்திற்குமேல் 3,800 மீட்டர் உயரத்திலிருக்கும் இந்த ஏரியில் கோரைப்புல் ஏராளமாகக் கிடைக்கின்றன.
நுண்ணிய திறமையுடைய இவ்வூர் ஜனங்கள் கோரைப்புல்லைச் சேர்த்துக் கட்டுகளாகக் கட்டி, மிதக்கும் மேடைகளின் மேல் கட்டப்பட்ட தங்களுடைய வீடுகளின் சுவர்களாகவும் கூரைகளாகவும் அமைக்கிறார்கள். இம்மக்கள் வருடத்திற்கு ஒருமுறை மேடையின் மேற்பரப்பிலுள்ள கோரைப்புல்லை மாற்றுகிறார்கள். இது அடிப்பரப்பில் ஏற்படும் அழுகிப்போதலுக்கு ஈடுகட்டுகிறது. இம்மேடை 1.8 மீட்டர் பருமனுள்ளது. இதன் அடிப்பாகம் படிப்படியாக அழுகிப்போகிறது.
சில சீனர்களால் வீடு என்றழைக்கப்படும் ஒரு வித்தியாசமான மிதக்கும் வீடு ஹாங் காங்கில் காணப்படுகிறது. ஹாங் காங்கின் அபெர்டீன் துறைமுகத்தில் பிரயாணிகளைச் சுமந்து செல்லும் ஒரு சிறிய வாடகை படகைக் காணுவது பொதுவானதாகும். இதே வாடகை படகுதான் இதை இயக்குகிற குடும்பத்தின் மிதக்கும் வீடாகவும் பயன்படுகிறது. இந்தக் குடும்பம் இங்குதான் சமைக்கிறது, உண்கிறது, உறங்குகிறது. மற்ற சீனர்களின் குடும்பங்கள் ஜங்க் என்றழைக்கப்படும் மீன்பிடிக்கும் படகுகளில் தங்கள் முழு வாழ்க்கையையும் கழிக்கின்றனர். அது அவர்களுக்கு வீடாகிவிடுகிறது.
ஐரோப்பாவில் வாணிபப்பொருட்களைச் சுமந்து செல்வதற்காக விசைப்படகுகளால் உபயோகப்படுத்தப்படும் ஆறுகளும் நீரோடைகளும் அநேகம் இருக்கின்றன. இந்தப் படகுகளை இயக்குகிற குடும்பங்களில் சில படகின் ஒரு முனையைத் தங்கும் இருப்பிடங்களாக மாற்றுகின்றன. இவ்வாறு அந்தப் படகு அவர்களின் மிதக்கும் வீடாகிறது.
பார்னியோ-பாணியில் பலஅறை வீடுகள்
போர்னியோ தீவில், இபான்ஸ் அல்லது சி டையக்ஸ் என்று அறியப்படும் மக்கள், தங்களுடைய கருத்தில் பலஅறை வீடுகள் எனப்படும் நீண்ட வீடுகளைக் கட்டுகிறார்கள். நிலத்தில் ஊன்றப்பட்ட பல கம்புகளை ஆதாரமாகக்கொண்ட இந்த நீளமான, உயரம் குறைந்த அமைப்புகள், சமதளமாக்கப்பட்ட உயரமான ஆற்றங்கரைகளின்மீது அமைந்துள்ளன. ஒவ்வொரு நீண்ட வீடும் ஒரு முழு சமுதாயத்தையே, ஒரு கிராமத்தையே ஒரு கூரையின்கீழ் கொண்டுள்ளது.
வீட்டின் நீளம் பத்து முதல் நூறு ஜனங்களைக்கொண்ட சமுதாயத்தின் அளவைப் பொருத்து வித்தியாசப்படுகிறது. திருமணத்தின் மூலம் அதிக குடும்பங்கள் உருவாகும்போது, அவர்களுக்கும் இடமளிக்கும் வகையில் அந்த நீண்ட வீடு வெறுமனே நீட்டப்படுகிறது.
ஒவ்வொரு குடும்பமும் தன்னுடைய சொந்த அறையைக்கொண்டிருக்கிறது. குடும்ப அங்கத்தினர் தங்களின் இருப்பிடத்திற்குள் எவ்வாறு நுழைகின்றனர்? வீட்டின் முழுநீளத்திற்கும் அமைந்திருக்கும் ஒரு திறந்த இடைவழியின் மூலமாகும். மேலே தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு வேயப்பட்ட கூரை இந்த இடைவழிக்கு நிழலையும் மழையிலிருந்து பாதுகாப்பையும் தருகிறது. வீட்டிலிருக்கும்போது அதில் தங்குபவர்கள் தங்களின் அதிகப்படியான நேரத்தை இந்த இடைவழியில் இருந்துகொண்டு, கூடை பின்னுதல், அங்கிகள் நெய்தல் போன்ற கைத்திறவேலைப்பாடுகளில் ஈடுபடுவதிலும் அவற்றைப் பார்வையிடுவதிலும் செலவிடுகின்றனர்.
ஒவ்வொரு அறையிலும் இந்தக் குடும்பம் சமைத்து, உண்டு, உறங்குகிறது. இந்த அறைகளுக்கும் இடைவழிக்கும் மேல் ஒரு பரண் இருக்கிறது. இது விவசாயக் கருவிகளும் அரிசியும் வைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. இது மணமாகாத இளம்பெண்களுக்கு உறங்குமிடமாகவும் பயன்படுகிறது. மணமாகாத இளம் ஆண்கள் இடைவழியின் தரையில் வெளியே பாயின்மீது உறங்குகின்றனர்.
மேற்கத்திய நாடுகளில் உள்ள அடுக்குமாடிக் கட்டடங்களைப்போலன்றி, இந்த நீண்ட வீடுகளில் குளியலறைகள் அல்லது கழிப்பறைகள் கிடையாது. அருகிலுள்ள ஆற்றில் குளித்துக்கொள்கின்றனர். கழிவுப் பொருட்கள் வரிச்சல் தரையினூடே நிலத்திற்கடியில் 4 மீட்டர் ஆழத்தில் விழச் செய்யப்படுகின்றன. பன்றிகளும் கோழிகளும் அவற்றை அங்கிருந்து அகற்றுவதில் உதவுகின்றன.
நிலத்திற்கடியில் வீடுகள்
அமெரிக்காவில் முதன்முதலில் வந்து குடியேறினோரில் அநேகர், 19-ம் நூற்றாண்டில் புல் வளர்ந்த மண்கட்டிகளினாலோ மரங்களினாலோ வீடுகளைக் கட்டினர். ஆனால் வேறுசிலர் அவர்களுடைய வீடுகளை நிலத்திற்கடியில் கட்டினர். அவர்கள் ஓர் ஒற்றையறை வீட்டை அதன் கூரை மலையடிவாரத்தின் மட்டத்திலிருக்கும்வண்ணம் ஒரு மலையிடுக்கில் குடைகின்றனர். சமைக்கும்போதும் நெருப்பை சூடுபடுத்தும்போதும் வரும் புகை வெளியேறும் துவாரமாகக் கூரை வழியாக ஒரு புகைபோக்கி பொருத்தப்பட்டிருந்தது. இந்த நிலத்தடி வீடுகள் இருட்டாக இருந்தன என்பது உண்மைதான், ஆனால் குளிர்காலத்தில் அவை வெதுவெதுப்பாகவும் இருந்தன. தனியாக வசிக்கும் ஆண்கள் தங்கள் குதிரைகளையும் காளைகளையும் இவ்வீடுகளில் தங்கவைத்துக்கொள்வது பொதுவானதாக இருந்தது.
இன்று தைவானுக்கு அருகில் ஆர்ச்சிட் தீவில், ஏமிஸ் இன்னும் பழைய முறையில் வீடுகளைக் கட்டுகின்றனர். இவற்றில் பெரும்பாலானவை நிலத்தடி வீடுகளாகும். திறந்த குழியின் சுவர்களின் பரப்பைக் கற்கள் மூடியிருக்கின்றன. புயல்மழைகாலத்தில் இவ்வீடுகள் தண்ணீரினால் நிரப்பப்படுவதை ஒரு வாய்க்கால் தடுக்கிறது. மர உத்தரங்கள் கட்டுமர அமைப்பையும் வேயப்பட்ட கூரையையும் தாங்கியிருக்கின்றன. நிலத்திற்குமேல், ஒவ்வொரு வீடும் ஒரு சிறிய, வேயப்பட்ட மற்றொரு கூரையினால் மூடப்பட்ட, சிறிது உயர்த்தப்பட்ட மேடைபோன்ற தனியான சுவரில்லா அமைப்பைக் கொண்டிருக்கிறது. மறைவிடமான இந்த மேடை அந்தக் குடும்பத்தினர் வெப்பமண்டல உச்சி வெயிலின் சூட்டிலிருந்து தப்பித்துக்கொள்ளும் குளிர்காப்பிடமாகிறது. எனினும், முற்றிலும் நிலத்திற்கடியிலிருக்கும் வீடுகளைக் கொண்ட மற்ற மக்களும் இருக்கின்றனர்.
சில வருடங்களுக்கு முன், குகைகளை வீடுகளாகப் பயன்படுத்தும் எண்ணம் உலகின் மற்றொரு பாகத்தில் ஒரு புதிய அம்சமாயிற்று. பிரான்ஸின் லாய்ர் பள்ளத்தாக்கில், குகைவாசம் அநேக செல்வந்தர் குடும்பங்களின் மத்தியில் புதுப்பாணியாக மாறிவிட்டது. அங்கு ஒரு குகை இளைப்பாறும் அறையாகவும், சாப்பாட்டறையாகவும், சமையலறையாகவும்—இவ்வாறு ஒன்றன்பின் ஒன்றாக மலையின் செங்குத்தான பகுதிவரை அமைந்திருக்கும் அறைகளாக மாற்றப்பட்டுள்ளதை நீங்கள் காணமுடியும். மற்றொரு வீடு அடுத்தடுத்து உள்ள அநேக குகைகளைக்கொண்டு திட்டமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு குகையும் வெளிச்சத்தை உட்புகும்படி அனுமதிக்கிற ஜன்னல்களையும் அதன் நுழைவாயிலில் பொருத்தப்பட்டிருந்த ஒரு கண்ணாடி கதவையும் கொண்டிருந்தது. இந்தக் குகைகளில் வாழும் குடும்பங்கள் இந்தக் குகைகளைப் பல்வேறு வசதிகளோடு நவீனப்படுத்துவதற்காகக் கணிசமாக செலவு செய்தனர். இவ்வசதிகள் தண்ணீர், மின்சாரம், ஈரத்தையும் பூஞ்சணத்தையும் தவிர்க்க செயற்கை காற்றோட்டம் போன்ற வசதிகளையும் மற்றும் அநேகத்தையும் உள்ளடக்கும்.
இங்கு நாம் கவனித்த வீடுகள் உங்களுடைய வீட்டைவிட ஒருவேளை வித்தியாசமானதாய் இருக்கலாம். ஆனால் உலகின் இந்த வித்தியாசமான பகுதிகளில் வாழும் மக்களுக்கு, இது “வீடு, இனிய வீடு” ஆகும். (g92 12/8)