டைக்கூ சான் ஒரு கனவு வீட்டைக் கட்டுகிறார்
ஜப்பானிலுள்ள விழித்தெழு! நிருபர் கூறியது
ஜப்பானிற்கு வரும் அநேக பார்வையாளர்கள் இங்கு அவர்கள் காணும் அழகானப் பாரம்பரிய வீடுகளால் கவர்ச்சியூட்டப்படுகிறார்கள். சாய்வான கூரை, மேல்நோக்கிய இறவாரக் கூரைகள், நாலாபக்கமும் சூழ்ந்த தோட்டம், மற்றும் தாழ்வாரங்கள் ஆகிய இவையெல்லாம் அவற்றின் கவர்ச்சியை இன்னும் அதிகரிக்கிறது. எனினும், அக்கறையைத் தூண்டும் காரியம் என்னவென்றால், இப்படிப்பட்ட வகையான வீடு பெரும்பாலும் ஒரு நபரால் மட்டுமே வடிவமைக்கப்பட்டு, கட்டப்பட்டு, மற்றும் அழகுபடுத்தப்படுகிறது. அவர் டைக்கூ சான் அல்லது தேர்ச்சிப்பெற்ற தச்சன் என்றழைக்கப்படுகிறார்.
திரு. காட்டோ, 40 வருடங்கள் அனுபவம் உள்ள ஒரு டைக்கூ சான்-ஆக இருக்கிறார். பெரும்பாலான ஜப்பானியர்கள் தங்களுடைய கனவுவீடு என்று கருதும் வீட்டை இவரும் இவருடைய கலைத்தொழிலாளிகள் குழுவும் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்த வீட்டின் ஒப்பற்ற பாணியையும் இவர் அதை எப்படிக் கட்டுகிறார் என்பதையும் பற்றிய சில குறிப்புகளை இவர் விளக்கும்போது நாம் அதற்குச் செவிகொடுத்துக் கேட்கலாம்.
பழம்பெரும் அமைப்பு
“ஜப்பானியரின் பழம்பெரும் வீட்டின் தனிச்சிறப்பை,” ஒரு டைக்கூ சான் நமக்கு சொல்கிற பிரகாரம், “வெறுமென இரண்டு வார்த்தைகளில் சுருக்கமாகச் சொல்லலாம்: வாபீ, சாபீ.” மற்றவையோடு, இரண்டு வார்த்தைகளும் “நயத்தை, இன்பகரமான எளிமையை அர்த்தப்படுத்துகிறது.” “நுட்பநுணுக்கமான,” “நிறைவான,” மற்றும் “நேர்த்தியான,” போன்ற மற்ற வார்த்தைகள் ஜப்பானிய சிற்பக்கலையையும் அதன் கவர்ச்சித்திறனையும் புரிந்துகொள்வதற்கு நமக்கு உதவிசெய்கின்றன.
ஜப்பானில் கடும்புயல்களும் பூமியதிர்ச்சிகளும் அடிக்கடி வருவதாலும், கோடக்காலத்தில் அதிகமான ஈரப்பதம் இருப்பதாலும், மரக்கட்டை அதனுடைய தொய்வாற்றலுக்காக ஒரு குடும்ப வீட்டிற்கு பொறுத்தமான மூலப்பொருள் என்று டைக்கூ சான் விளக்குகிறார். உபயோகப்படுத்தப்படுகிற அடிப்படை மூலப்பொருள்களில் களிமண், மூங்கில், மற்றும் காகிதம் ஆகியவையும் உள்ளன. பார்வைக்கு ஒத்திசைவைக் கொடுப்பதற்காக வீடும் இயற்கைக்காட்சிகள் நிறைந்த தோட்ட அமைப்பும் ஒரே சமயத்தில் வடிவமைக்கப்படுகின்றன.
அந்தக் கனவுவீடும் அழகிய தோட்டச் சூழ்நிலையும் எதைப்போல் தெரிகிறது? இது எப்படிக் கட்டப்படலாம்? எப்படி டைக்கூ சான் ஒரு கனவுவீட்டைக் கட்டுகிறார் என்பதை நாம் நேரடியாக காண்பதற்கு, மற்றொரு கட்டிடம் கட்டப்படும் இடத்திற்கு நாம் போகும்படி டைக்கூ சான் ஆலோசனைக் கூறுகிறார்.
அஸ்திவாரத்திலிருந்து
நாங்கள் அந்தக் கட்டிடயிடத்தைச் சுற்றி நடந்துகொண்டிருக்கும்போது, “நூறு வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட வீடுகள் தரையில் நல்ல அஸ்திவாரத்தை உடையதாக இல்லை” என்று டைக்கூ சான் நம்மிடம் சொல்கிறார். “பாறைகளின் மேல் ஆதாரம்கொண்ட சிறு கம்பங்களினால் முட்டுக்கொடுக்கப்பட்ட கிடையான உத்திரங்களினுடைய பின்னலமைப்பின்மீது அவை அமைக்கப்பட்டிருந்தது.” இந்தக் கட்டிடங்களில் அநேகம் இன்னும் நிலையாக நிற்பது டைக்கூ சான் திறமையை உறுதிப்படுத்துகிறது. “இக்காலத்தில் ஆதாரங்களும் அஸ்திவாரங்களும் கான்க்ரீட்டினால் உருவாக்கப்படுகிறது. ஆனால் வடிவமைப்பு கோட்பாடுகள் மாறாமல் இருக்கின்றன,” என்று சொல்லப்படுகிறோம். இது சுவர்களுக்கும் பொருந்துகிறது. இவை மேல்-நாட்டுப்பாணி வீடுகளில் உள்ளவற்றிலிருந்து, அமைப்பிலும் கட்டுமானத்திலும் சிறிது வேறுபட்டதாக இருக்கின்றன.
ஒரு ஜப்பானிய வீட்டின் உட்புற சுவர்கள் உறுதியாக கட்டப்பட்ட இடைவேலிகளாக இல்லாமல் பெரும்பாலும் இடைத்தட்டிகளைப் போன்று இருக்கும்படியாக திட்டமிடப்படுகின்றன. கட்டப்பட்டுவருகிற ஒரு சுவரைக் காண்பித்து டைக்கூ சான் விளக்குகிறார், “நீளவாக்கில் பிளவுப்பட்ட மூங்கில்களின் ஒரு குறுக்குப்பின்னலமைப்பின்மீது, இரண்டு அல்லது ஐந்து களிமண் அடுக்குகள் போடப்படும். ஒவ்வொரு அடுக்குக்கும் இடையே உள்ள நெருக்க அளவு வித்தியாசம், மேலும் ஒவ்வொரு அடுக்கும் மற்றொரு அடுக்குப் போடப்படுவதற்கு முன்பு முற்றிலும் காய வேண்டும். இதன் காரணமாகவே சராசரியாக, ஒரு வீட்டைக் கட்டிமுடிப்பதற்கு மூன்று மாதங்கள் எடுக்கிறது.” (எதிர்பார்த்தவிதமாகவே, ஒரு கனவுவீட்டைக் கட்டுவதற்கு இன்னும் அதிக காலத்தை எடுக்கிறது.) ஜப்பானியர்களால் விரும்பப்பட்ட இயற்கையான கருமைநிறைந்த பழுப்புநிறத்திலுள்ள நுண்ணிய களிமண்ணினால், அல்லது மணலால் ஆன ஓர் அடுக்கினால் பூசப்பட்ட சுவர்கள், மிகுந்த ஈரப்பதம் உள்ள தட்பவெப்பநிலையில் கான்க்ரீட் சுவர்கள் நீர்க்கசிய ஆரம்பிப்பது போல கசியாமல், காற்றை உட்செல்ல அனுமதிக்கிறது.
அடுத்ததாக, டைக்கூ சான் நம்முடைய கவனத்தைத் தரைக்கு திருப்புகிறார். தாழ்வாரம், வீட்டுமுற்றம் மற்றும் சமையல் அறை ஆகியவற்றின் தரைகள் வயிரம்பாய்ந்த கட்டையினால் ஆனது. மற்ற அநேக அறைகளில் டாடாமி என்றழைக்கப்பட்ட இறுக்கமாய் நெசவுசெய்யப்பட்ட புல் பாய்கள் மூடிபரப்பப்பட்டிருக்கின்றன. இந்த விசேஷித்த தரை விரிப்பு குளிர்காலத்தில் வெதுவெதுப்பாகவும், கோடக்காலத்தில் சூடுதணிப்பதாயும் மற்றும் உறுதியாகயிருந்தாலும் உட்காரவும் அல்லது அதன் மேல் படுக்கவும் முடிந்தளவிற்கு மென்மையானதாகவும் இருக்கிறது. ஒவ்வொரு பாயும் ஏறக்குறைய ஒரு மீட்டருக்கு இரண்டு மீட்டர் என்ற அளவுடையது, மற்றும் ஐந்து சென்டிமீட்டர் தடிமனுடையது. அறைகள் அதில் எத்தனை பாய்களைப் பிடிக்குமோ அதை வைத்துத்தான் அடையாளப்படுத்தப்படுகின்றன. மேலும் அளவைப் பொறுத்து, எட்டு-, ஆறு-, அல்லது நான்கரை-பாய் அறைகள் என அழைக்கப்படுகின்றன.
மிகவும் மறைவாக வைக்கப்பட்ட குடும்ப ரகசியம்
சிறு தச்சு இணைப்புகளை திறம்பட பயன்படுத்துவதில்தான் டைக்கூ சான் திறமை உண்மையில் விஞ்சிவிடுகிறது. அவருடைய தந்தையினால் விட்டுச்செல்லப்பட்ட 70 வருடங்களுக்கும் மேலான பழமையுள்ள குறிப்பேடுகளை நம்முடைய வழிகாட்டிக் காண்பிக்கிறார். அவை பக்கம் பக்கமாக, சிக்கலான, கண்களைக் கவரும் இணைப்புச் செதுக்குகளின் படங்களை உடையதாயிருக்கிறது. பூர்வீக காலங்களில் ஒரு திறமைமிக்க தச்சன் தன்னுடைய இணைப்புமுறைகளின் நுணுக்கங்களை மிகவும் மறைவாக வைக்கப்பட்ட இரகசியமாக வைத்திருந்து, அவனுடைய மகனுக்கோ பின்னுரிமையாளருக்கோ கடத்திவிடுவான். இது இனிமேல் அத்தியாவசியமான தேவையில்லை என்றாலும், ஒரு முழு வீடும் ஓர் ஆணிகூட பயன்படுத்தப்படாமல் கட்டப்பட முடியும்.
“இந்த இணைப்பு நுணுக்கங்களில் சில, தச்சர்களால் மற்ற இடங்களில் பயன்படுத்தப்பட்டவையைப் போல் இருக்கிறது. உதாரணமாக, ஒன்றையொன்று பிணைத்து இறுக்கும் முளைசெதுக்கிப் பொருத்துதல், விளிம்பில் இசைப்புவாய் வெட்டுதல், முனைகளைச்சேர்த்தல், மற்றும் சாய்வுஇணைப்புகள்” என்று டைக்கூ சான் விளக்குகிறார். வெறுமென எந்த இணைப்புகள் பயன்படுத்தப்படுகிறது என்பது கட்டிடத்தின் அந்தப் பாகத்தில் உள்ள அடர்த்தியையும் பாரவிசையையும் பொருத்திருக்கிறது. சரியான இணைப்புகளும் பூமியதிர்ச்சிகளின் நடுக்கங்களை ஈர்த்துக்கொண்டு, அந்த வீடு அதிர்ச்சிகளினூடே அசைந்து நிற்க அனுமதிக்கிறது.
உச்சியின் பேரெழில்
ஒருவேளை ஒரு சம்பிரதாயமான ஜப்பானிய வீட்டின் மிகவும் தலைச்சிறந்த அம்சம் அதன் கூரை. வீட்டின் மற்ற பகுதிகளை ஒப்பிட்டுப் பார்த்தால், இது பெரியதாகவும் பாரமானதாகவும் இருக்கிறது. ஆனால் முரடான மற்றும் அமெரிக்க சாய மரவகை கூரை உத்தரங்களிலிருந்து, கூரை பலத்தைப் பெற்றுக்கொண்டு, தனிமங்களின் செயல்பாடுகளினால் உண்டான தட்பவெப்பநிலை மாற்றங்களுக்கு எதிராக உண்மையில் ஒரு சமநிலைப்படுத்தும் கருவியாக இது இருக்கிறது என்று டைக்கூ சான் சொல்கிறார். கூரைகள் அநேக விதங்களில் அமைந்தாலும் இவை முக்கோண அல்லது கூம்பு வடிவுடைய அல்லது இரண்டும் சேர்ந்த வடிவுடையதாக பொதுவாக இருக்கின்றன. சுட்டக் களிமண்ணினால் உருவாக்கப்பட்ட சில கூரை ஓடுகளை டைக்கூ சான் நமக்குக் காண்பிக்கிறார். பிரபலமான சுடரிடும் வானீலம் நீங்கலாக, பழுப்புநிறம் மீண்டும் செல்வாக்குப் பெறுகிறது.
“எதிர்காலத்தில் குடியிருக்க வருகிறவர்களின் வசதிக்காக உள்ள முக்கியமான குறிப்புகளாக இருப்பது சிறிது மேல்நோக்கியுள்ள மூலைகளும் அதிகமாக மேலே நீட்டிக்கொண்டிருக்கும் இறவாரங்களும் ஆகும்” என்று டைக்கூ சான் குறிப்பிடுகிறார். “இவை, தாழ்வாரத்தில் உள்ள தரையிலிருந்து உட்கூரை வரை நீளமுள்ள பக்கவாட்டில் நகரும் கண்ணாடிக் கதவுகளை நீங்கள் ஈரப்பதமிக்க மழைக்காலத்தில் திறந்து வைப்பதற்கு அனுமதிக்கிறது. கூடுதலாக அவை, கோடக்கால உஷ்ணம் உட்புகாதபடி காப்பதற்குத் தகுந்த வகையில் மிகச்சரியான கோணத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.”
கட்டிடவேலை நடக்கும் இடத்தைக் கூர்ந்தாராய்தல் முடிவடைகிறது. இப்பொழுது நம்முடைய வழிகாட்டி நம்மை ஒரு வீட்டைப் பார்க்க அழைக்கிறார். இந்த வீட்டைக் கட்ட அவருக்கு ஒன்றரை வருடம் ஆனது.
ஓர் உண்மையான கனவு வீடு
நாங்கள் காரில் சென்று அதனுடைய நேர்த்தியான முகத்தோற்றங்களைக் கண்டவுடன் இப்படிப்பட்ட வீட்டில் தான் எவருமே தன் சொந்த வீட்டில் இருப்பது போல் உணர்வர் என்று அறிந்துகொள்கிறோம். சிறுதச்சுவேலை இணைப்புகளால் இணைக்கப்பட்டு உட்புறத்தில் கண்ணாடியால் அமைக்கப்பட்ட பின்னலுள்ள மரவேலைப்பாடு உடையதாக முன்கதவு இருக்கிறது. இது பக்கவாட்டில் மிக எளிதாக திறக்கிறது, நாங்கள் அழகான நுழைவாயிலின் வழியாக நடந்துசெல்கிறோம். எங்களுடைய காலணிகளைக் கழற்றிய பின்பு வீட்டிற்குள் சென்றோம். வீட்டறையின் தரைவிரிப்புகள் எங்களுடைய பாதங்களுக்கு அடியில் அசையாதவையாக இருந்தன.
நாங்கள் வெளிப்படையாக அமைக்கப்பட்ட கம்பங்களைப் பார்க்க நின்றோம். அவை தொடுவதற்குப் பட்டுப்போலவும் மெருகிடப்பட்டதைப் போன்று பளபளப்பானதாகவும் இருக்கும் அளவிற்கு மென்மையாக இருக்கிறது. நம்முடைய நினைவுகளை அவர் ஏற்கெனவே அறிந்ததுபோல், “வீட்டில் உள்ள மரவேலைப்பாடுகள் எதற்கும் சாயமோ மெருகெண்ணெயோ போடப்படவில்லை,” என்று டைக்கூ சான் நமக்கு சொல்கிறார். “இது எவ்வளவு அருமையாக செய்யமுடியுமோ அவ்வளவிற்கு இழைத்து வழவழப்பாக்கப்படுகிறது.”
ஜப்பானிய பாணியில் இருந்த வரவேற்பறையில், அறையின் அம்சங்களை ஆராய்ந்தோம். பக்கவாட்டில் நகரும் கதவுகளுக்கு அல்லது மரச்சட்டங்களுக்கு மேலுள்ள நிலைக்கட்டை அல்லது குறுக்குக்கட்டை, மரக்கட்டைத் தோற்றத்தின் ஒரு கடுஞ்சிக்கலான செதுக்காக இருக்கிறது. அறையின் எல்லா பக்கமும் பக்கவாட்டில் நகரும் கதவுப்பலகைகள் உள்ளன. இவை மரச்சட்டங்களுக்கு மேலாக பரப்பிவைக்கப்பட்ட காகிதத்தினால் செய்யப்பட்டது. தாழ்வாரத்திற்கு எதிராக உள்ள நகரும் கதவுகள், பின்னல் வேலைப்பாடுகளோடும் மெல்லிய வெண்மையான இடைத்திரை காகிதத்தால் மூடப்பட்டதாகவும் இருக்க வேண்டும். நுழைவறை அல்லது மற்ற அறைகளின் வாயிலில் உள்ளவை [ஃபியுசுமா என்றழைக்கப்படுகிற] கடினமான காகிதத்தால் மூடப்படுகின்றன. அறைகளைப் பிரிக்கும் இடைச்சுவர்களாக பயன்படும் இந்த மரச்சட்டங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான தோரணிகளில் அலங்கரிக்கப்படுகின்றன. “இந்தச் சின்னஞ்சிறு அறைகள், நகரும் மரச்சட்டங்களை வெறுமென நீக்குவதன் மூலம் ஒரு பெரிய அறையாக மாறிவிடும்,” என்று டைக்கூ சான் விளக்குகிறார். எவ்வளவு எளிது!
மாடக்குழி, அல்லது படமுள்ள மாடக்குழியையும் அதைச் சேர்ந்துள்ள சுவரில் பொறுத்தப்பட்ட அலமாரி மூலையையும் ஒரேயொரு நிஜ சுவர் உடையதாக இருக்கிறது. “இது வீட்டின் மிக அழகான இடமாகும், மேலும் மிகச்சிறந்த மரமும் வேலைப்பாடும் இதில் அடங்கியிருக்கிறது,” என்று டைக்கூ சான் சொல்கிறார். இன்று கவர்ந்திழுக்கும் ஓர் அழகான கையெழுத்திடப்பட்ட காகிதச்சுருள் அங்கே தொங்குகிறது.
வீட்டின் எஞ்சியப் பகுதி முழுவதும் நாங்கள் பார்த்தோம். ஒவ்வொரு அறையிலும் தேவதாரு மரம், குவிந்தகாய்மரம், ஊசிஇலைமரம், மற்றும் நார்ப்பாய்மரம் இவற்றின் நறுமணங்கள் மெதுவாக எங்கும் பரவியிருக்கின்றன. ஒரு திறமைமிக்க எளிமை மற்றும் நேர்மைத்தன்மை வீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பரவியிருக்கிறது.
நாங்கள் வெளியே வரும்போது, தோட்டம் நம்முடைய சோதனைக்காக காத்திருக்கிறது. மிகப்பெரியதாக இல்லாவிட்டாலும், அது மென்மையானதாகவும் அமைதியாகவும் இருந்தது. இது பளபளப்பான வர்ணமிக்க மீன்களால் நிறைந்த நீர்த்தேக்கமும் கவர்ச்சியான நீர்வீழ்ச்சியையும் உடையதாகயிருக்கிறது. டைக்கூ சான் வீட்டைக் கட்டும்பொழுது வெளிக்காட்டும் அறிவுக்கூர்மையையும் திறமையையும் கண்டு வியப்படைந்து ஒருவித திருப்தி உணர்வோடு நாங்கள் வெளியேறுகிறோம். (g91 10⁄22)