நரம்புச் சிலந்திப்புழு அதன் இறுதி நாட்களில்
நைஜீரியாவிலுள்ள விழித்தெழு! நிருபர்
தினந்தோறும் இருப்பதுபோலவே, அன்று உஷ்ணமாக இருக்கிறது. சின்யெரெ முதுகில் தன்னுடைய குழந்தையைக் கட்டிக்கொண்டு, இரண்டு சுரைக் குடுக்கைகளை எடுத்துக்கொண்டு, மற்ற கிராமவாசிகளோடு புழுதிநிறைந்த அந்தச் சாலையில் சேர்ந்துகொள்கிறாள். ஒன்றுசேர்ந்து நடந்து வெப்பத்தினால் பொசுங்கிகிடந்த நிலங்களைக் கடந்து அந்தச் சிறிய ஏரிக்குப் போகிறார்கள். அந்த வட்டாரத்திற்குத் தண்ணீர் கொடுக்கும் ஒரே ஒரு மூலம் அந்த ஏரியாகும். ஏரியில் அவள் சறுக்கும் சேற்றுக்கரையிலிருந்து கீழிறங்கி தண்ணீரெடுப்பதற்கு முழங்கால் அளவு தண்ணீரில் கவனமாக நடந்து செல்கிறாள்.
கரையோரம் உலர்ந்த புற்களில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் முதலைகளையும் ஏரியின் தண்ணீர் மட்டத்திற்குக்கீழ் மெதுவாக வட்டமிட்டுத் திரியும் முதலைகளையும் அவள் கவனிக்கிறாள், ஆனால் அவற்றிற்கு அவள் பயப்படவில்லை. அந்த ஏரியின் பக்கத்திலிருந்த ஒரு மனிதன் சொல்கிறதுபோல: “நாங்கள் அவற்றைத் தொந்தரவு செய்வதில்லை, அவையும் எங்களுக்குத் தொந்தரவு கொடுப்பது கிடையாது.”
இப்படிப்பட்ட ஒரு கூற்றை ஏரியில் வாழும் மற்றெந்த நுண்ணுயிரிகளைப்பற்றியும் நிச்சயமாகக் கூறிவிடமுடியாது. சின்யெரெ அவற்றைப் பார்க்கவில்லை, பார்க்கவும் முடியாது; அவை மிகச் சிறியன. அவளுடைய தண்ணீர் பாத்திரத்திற்குள் சென்றுகொண்டிருக்கும் தண்ணீரில் அவை இருக்கின்றன.
ஆபத்தான நரம்புச் சிலந்திப்புழு
சின்யெரெ மண்சுவர்களாலும் வேயப்பட்ட கூரைகளாலுமான தனது வீட்டுக்குத் திரும்புகிறாள். கொண்டுச்சென்ற தண்ணீரை ஒரு மட்பானையில் ஊற்றுகிறாள். அதிலுள்ள வண்டல் படிந்த பின் தண்ணீர் குடிக்கிறாள். ஒரு வருடம் கழித்துத் தன் காலின் கீழ்ப்பகுதியில் ஏதோ ஒன்றைக் கவனிக்கிறாள். அது ஒரு சிறிய சுருள் நரம்பைப்போல் காணப்படுகிறது மற்றும் உணரப்படுகிறது. ஆனால் அது நரம்பல்ல. அவள் குடித்த தண்ணீரிலிருந்த ஒரு நுண்ணுயிரி, ஓர் ஒல்லியான 80 சென்டிமீட்டர் நீளமுள்ள நரம்புச் சிலந்திப்புழுவாக வளர்ந்திருக்கிறது.
விரைவில் அந்தப் புழு வேதனை தரும் ஒரு கொப்புளத்தை அவளுடைய தோலின்மேல் உண்டுபண்ணும். பிறகு, அந்தக் கொப்புளம் உடைந்து, இளமஞ்சள் நிறமுள்ள புழு, ஒவ்வொரு நாளும் சில சென்டிமீட்டர் அளவு, வெளிவர தொடங்கும். அது முழுவதுமாக வெளிவருவதற்கு இரண்டு முதல் நான்கு—ஒருவேளை அதற்கதிகமான—வாரங்கள் செல்லும். இக்காலத்தின் பெரும்பாலான பகுதியில், சின்யெரெ சரீரப்பிரகாரமாக ஏலாநிலையிலாக்கப்பட்டு அவளுடைய வேதனை கடுமையாக இருக்க வாய்ப்பிருக்கிறது. உடைந்த கொப்புளம் நுண்ணுயிரிகளால் தாக்கப்பட்டு, இசிப்பு, குருதிநச்சுப்பாடு, மூட்டு வீக்கம், அல்லது ஒரு சீழ்க்கட்டி போன்றவற்றிற்கு வழிநடத்தும்.
சின்யெரெ ஒரே ஒரு புழுவினால்தான் கஷ்டப்படுகிறாள். ஆனால் ஒரு பலியாள் ஒரே சமயத்தில் பல, ஒரு டஜன் அல்லது அதற்கு மேலான, புழுக்களால்கூட தாக்கப்படுதல் வழக்கத்துக்கு மாறானதல்ல. வழக்கமாக அவை உடலின் கீழ் உறுப்புகளிலிருந்து வெளியேறுகின்றன. ஆனால் சிலசமயங்களில் உச்சந்தலை, மார்பு, நாக்குப் போன்ற உடலின் மற்ற பாகங்களுக்கு மாறிச்சென்று அங்கிருந்து வெளியேறுகின்றன.
எனினும், ஒரு சர்வதேசீய ஒழிப்புத் திட்டத்தின் காரணமாக இந்தப் புழு விரைவில் வெல்லப்படலாம். உலகச் சுகாதார நிறுவனத்தின்படி, அது இப்போது உலகளாவ, முப்பது லட்சத்திற்குக் குறைவான ஆட்களையே தாக்குகிறது. பெரும்பாலும் அவர்களில் எல்லாரும் பாகிஸ்தான், இந்தியா, மற்றும் 17 ஆப்பிரிக்க நாடுகளில் வாழ்கின்றனர். பத்து வருடங்களுக்குச் சற்றுக்குறைவான காலத்திற்குமுன், அது ஒரு கோடி வரை பாதித்தது. ஆசியாவில், இப்போது நரம்புச் சிலந்திப்புழு ஒழிக்கப்படும் விளிம்பில் உள்ளது; பாதிக்கப்பட்ட பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில் 1995-ன் முடிவில் இந்த ஒட்டுண்ணி முழுவதுமாக அழிக்கப்படலாம்.
ஒரு நீண்ட சரித்திரம்
நரம்புச் சிலந்திப்புழு குறிப்பாக மத்தியக் கிழக்கிலும் ஆப்பிரிக்காவிலும் பண்டைய காலத்திலிருந்தே மனிதவர்க்கத்தைத் துன்பப்படுத்தியிருக்கிறது. எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு 13 வயது பெண்ணின் பதப்படுத்தப்பட்ட உடலில் சுண்ணாம்பு படிந்த நரம்புச் சிலந்திப்புழு காணப்பட்டது. விசனகரமாகவே, அவளுடைய இரண்டு கால்களும் நீக்கப்பட்டன. இது ஒருவேளை நரம்புச் சிலந்திப்புழுவால் தாக்கப்பட்டதன் விளைவாக அழுகியதைக் கையாளுவதற்காக இருக்கலாம்.
பழங்கால இலக்கியங்களில் குறிப்புகள் நிறைந்திருக்கின்றன. நரம்புச் சிலந்திப்புழுவைப்பற்றிய எல்லாவற்றிற்கும் முற்பட்ட குறிப்பு எகிப்திய பாடநூல்களில் காணப்படுகின்றன. வெளியே வந்துகொண்டிருக்கும் புழுவை ஒரு குச்சியில் சுற்றும் பழக்கத்தை அது விவரித்தது. பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டில், நைடஸின் அகெத்தார்க்கெடிஸ் என்ற பெயருடைய ஒரு கிரேக்கன் எழுதினான்: “செங்கடலில் நோயுற்ற மக்கள், மற்ற புழுக்கள், சிறிய பாம்புகள் போன்றவற்றின் மத்தியில் விசித்திரமான மற்றும் இதற்குமுன் கேட்டிராத பல தாக்குதல்களால் துன்பப்பட்டனர். அவை அவர்கள்மேல் வந்து அவர்களுடைய கைகளையும் கால்களையும் கடித்துத் தொடும்போது தசைகளில் தங்களைச் சுருக்கிக்கொண்டும் சுற்றிக்கொண்டும் தாங்கமுடியாத வேதனையைத் தந்தன.”
சிகிச்சை
“வருமுன் காப்போம்” என்ற பழமொழி நிச்சயமாகவே நரம்புச் சிலந்திப்புழு நோய்க்குப் பொருந்தும். உண்மையிலேயே, ஒரு சிகிச்சையுமில்லை. ஒரு நபர் ஒருமுறை நரம்புச் சிலந்திப்புழு அடங்கிய தண்ணீரைக் குடித்தால், அந்தப் புழு தோலிலிருந்து வெளியே வருவதற்குத் தயாராகி, ஒரு கொப்புளத்தை உண்டாக்குவதற்குச் சற்றுமுன்புவரை மருத்துவரீதியில் ஒன்றும் செய்வதற்கில்லை. அந்த நிலையில் ஒரு திறம்பட்ட மருத்துவர் அதன் நீளத்தின் மையத்தில் அந்தப் புழுவின் பக்கமாக ஒரு சிறிய கீறலை ஏற்படுத்தி அந்த ஒட்டுண்ணியை ஒருவேளை அகற்றக்கூடும். அதன் பிறகு ஒரு கொக்கி பொருத்தப்பட்ட சாதனத்தைப் பயன்படுத்தி அந்தப் புழுவின் ஒரு பாகத்தை, தோலுக்குமேல் ஒரு கண்ணியை உண்டாக்கத்தக்கதாகத் தளர்த்திவிடுகிறார். முடிவில் மீதமுள்ள புழுவைக் கவனமாக வெளியே இழுக்கிறார். இந்தச் செய்முறை பல நிமிடங்களுக்குள் நிறைவேற்றப்படுகிறது.
எனினும், இந்தப் புழு ஒருமுறை தானாக வெளியே வர தொடங்கிவிட்டால், தோல்முறிவினால் ஏற்படும் வீக்கம் அது எளிதில் வெளியே இழுக்கப்படுவதிலிருந்து தடைசெய்யப்படுகிறது. பிறகு, பலியாள் செய்யக்கூடிய ஒரே ஒரு மிகச்சிறந்த காரியம் பண்டைய முறையைப் பின்பற்றி, புழு வெளியே வரும்போது கவனமாக ஒரு சிறிய குச்சியில் சுற்றிவைப்பதே. புழு அறுந்துவிடாதிருக்க கவனம் செலுத்தப்படவேண்டும். அவ்வாறு அறுந்துவிட்டால், அறுந்த பாகம் பலியாளுக்குள் சுருங்கிக்கொண்டு அதிக வீக்கம், வேதனை, மேலுமான தாக்குதல் போன்றவற்றில் விளைவடைகிறது.
பலியான மனிதனுக்குள் உள்ள ஒரு நரம்புச் சிலந்திப்புழுவை எதிர்த்துப்போராட மருத்துவ ரீதியில் அதிகம் செய்யமுடியாது. ஆனால் மனித உடலிற்கு வெளியே இந்த ஒட்டுண்ணியை வெல்ல அதிகத்தைச் செய்யமுடியும்.
நரம்புச் சிலந்திப்புழுவை வெல்லுதல்
நரம்புச் சிலந்திப்புழுக்களால் மாசுபடுத்தமுடியாத ஓர் ஆழ்குழாய்க்கிணறு போன்ற பாதுகாப்பான தண்ணீர் வசதிகளைக் கொடுப்பது ஒரு வழி. மற்றொரு வழி தங்களுடைய குடிநீரைக் கொதிக்கவைத்தோ ஒரு மெல்லிய துணியில் ஊற்றி வடிகட்டியோ குடிக்க கிராமவாசிகளுக்குப் போதிப்பதாகும். மூன்றாம் வழியாக அந்தப் புழுக்களைக் கொல்லக்கூடிய, ஆனால் மனிதருக்கும் விலங்குகளுக்கும் தீங்கு செய்யாத ஒரு ரசாயனப் பொருளைக் கொண்டு அந்த ஏரியைச் சுத்தப்படுத்தலாம்.
இந்த நோய் ஆண்டுமுழுவதும் பரவக்கூடியதாக இருக்கும் மற்ற நாடுகளில், மும்முரமான ஒழிப்புத் திட்டங்கள் நன்கு அமல்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்கள் பாதிக்கப்பட்ட கிராமங்களைக் கண்டுபிடித்து, தாக்கப்படாமல் தடுப்பதற்கு அதில் குடியிருப்பவர்களுக்கு உதவியளிக்கின்றன. இவ்வாறு இந்த முயற்சிகள் அதிக வெற்றியுடையதாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. இப்பொழுது நரம்புச் சிலந்திப்புழு தனது இறுதி நாட்களுக்குள் நுழைந்துவிட்டதாகத் தோன்றுகிறது. அது ஒழிந்துபோனால் ஒருவரும் துக்கம் அனுசரிக்கமாட்டார்கள். (g93 2/8)
[பக்கம் 20-ன் படம்]
மாசுபடுத்தப்பட்ட தண்ணீர் முதலில் கொதிக்கவைக்கப்பட்டு அல்லது வடிகட்டப்பட்டாலொழிய குடிக்கக்கூடாது