உலகை உருவமைத்த சுவைகள்
இந்தியாவிலுள்ள விழித்தெழு! நிருபர்
மார்க்கோ போலோ 13-ம் நூற்றாண்டில், அவற்றை ஏராளமாகக் கண்டார். கிறிஸ்தோபர் கொலம்பஸ் அவற்றைக் கண்டுபிடிக்க கடல் பிரயாணத்தை மேற்கொண்டு, அதற்குப்பதில் அந்தப் புதிய உலகைக் கண்டுபிடித்தார். வாஸ்கோ ட காமா இறுதியாக 15-ம் நூற்றாண்டில், கடல் வழியாக இந்தியாவை அடைந்து ஐரோப்பாவில் அவற்றை ஆர்வத்தோடு வாங்குபவர்களுக்குத் திரும்ப கொண்டுவந்தார். உண்மையிலேயே, மனிதர்கள் அவற்றைப் பெறுவதற்குத் தங்களுடைய உயிரையே பணயம் வைக்குமளவுக்கு நறுமணப் பொருட்கள் அக்காலத்தில் அவ்வளவு மதிப்புள்ளவையாகக் கருதப்பட்டன.
அரசியல் மாற்றங்கள் நிலவழி வாணிப மார்க்கங்களைத் தடை செய்தபோது, வாஸ்கோ ட காமா போர்த்துகலிலிருந்து ஆப்பிரிக்க முனையைச் சுற்றி தன்னை இந்தியாவுக்குக் கொண்டுச் சேர்த்துப் பிறகு திரும்பி கொண்டுச் சென்ற, ஒரு 39,000 கிலோமீட்டர் சுற்றுவழி-பயணத்தில் இரண்டு வருடங்களைக் கழித்தார். அவருடைய கப்பல்களில் இரண்டு பயணத்தில் தப்பிப்பிழைத்தன. அவை திரும்பி போகும்போது நறுமணப் பொருட்களும் மற்ற பொருட்களும் அடங்கிய, அந்தப் பிரயாணத்தின் செலவைவிட 60 மடங்கு அதிக விலைமதிப்புள்ள சரக்குகளைக் கொண்டுச் சென்றன! ஆனால் அவரது பிரயாணத்தின் வெற்றி ஐரோப்பிய நாடுகளைப் போரில் ஆழ்த்தியது. அதனைத் தொடர்ந்து வந்த மூன்று நூற்றாண்டுகளாக, போர்த்துகல், ஸ்பெய்ன், பிரான்ஸ், ஹாலந்து, கிரேட் பிரிட்டன் போன்ற நாடுகள் நறுமணப் பொருட்களின் மூலங்களைக் கட்டுப்படுத்துவதற்காகப் போட்டியிட்டன.
நறுமணப் பொருட்களின் வரலாறு, “ஒரு வீரசாகசம், ஆராய்ச்சி, வெற்றி, கப்பற்படைகளின் மூர்க்கமான போர் போன்றவற்றின் ஒரு கதையாகும்,” என்று ஓர் எழுத்தாளர் சுருங்கக் குறிப்பிட்டார். இளைய ஃப்ரெட்ரிக் ரோஸன்கார்ட்டன், தி புக் ஆஃப் ஸ்பைஸஸ் என்ற புத்தகத்தில் இவ்வாறு கூறினார்: “நறுமணப் பொருட்களைத் தேடி அரசர்கள் ஆராய்ச்சிக் குழுக்களை அனுப்பி வைத்தனர், வணிகர்கள் அதனை வாணிபம் செய்ய தங்கள் உயிரையும், செல்வங்களையும் பணயம் வைத்தனர், அவற்றைக் குறித்து யுத்தங்களும் நடத்தப்பட்டன, முழு மக்களும் அடிமைகளாக்கப்பட்டனர், முழு உலகமும் ஆராயப்பட்டது. அந்தளவுக்கு நறுமணப் பொருட்கள் அரசியல் துறையிலும் சரி பொருளாதாரத் துறையிலும் சரி, பயனுள்ளதாக, உண்மையிலேயே தவிர்க்கமுடியாதவையாக இருந்தன. மறுமலர்ச்சியாக வந்த இப்படிப்பட்ட பரவலான மாற்றங்கள், ஓயாத மற்றும் கொடிய போட்டிகளால் கொண்டுவரப்பட்டன.”
டச்சுக்காரர்கள் இந்த நறுமணப் பொருட்களின் வாணிபத்தைக் கட்டுப்படுத்தியபோது, அவர்கள் பிரிட்டனுக்கு விற்கையில் மிளகின் விலையை ஒரு பவுண்டுக்கு ஐந்து ஷில்லிங் என்ற வீதத்தில் உயர்த்தினர். இதனால் சினமூட்டப்பட்ட, லண்டனைச் சேர்ந்த வியாபாரிகளின் குழு ஒன்று, தங்களுக்கென ஒரு சொந்த வர்த்தக நிறுவனத்தை நிறுவ 1599-ல் ஒன்றுகூடினர். இது பின்னர் கிழக்கிந்திய கம்பெனி என்றறியப்பட்டது. இந்தக் கம்பெனியின் ஆதிக்கம் இறுதியில் 300 வருடத்திற்கும் மேலாக இந்தியாவின் மீது இருந்து வந்த பிரிட்டனின் ஆட்சிக்கு வழிநடத்தியது.
கடுமையான போட்டி மறைந்தது, ஆனால் நறுமணப் பொருட்களுக்கான உலகளாவிய சுவை தொடருகிறது. இப்பொழுது இங்கு இந்தியாவில் நறுமணப் பொருட்களைச் சுவைத்து மகிழ்வதைவிட அதிகம் ஒருவேளை வேறு எங்கும் சுவைக்கப்படுவதில்லை.
நறுமணப் பொருட்களோடு காதல்
நறுமணப் பொருட்களும் இந்திய சமையற்கலையும் பிரிக்கமுடியாதவையாய் இருக்கின்றன. எனவே இந்த நாடு நறுமணப் பொருட்களோடு காதல் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். ஒரு ஸ்ட்யூவைப்போல (Stew) உள்ள, காய்கறிகள், முட்டைகள், இறைச்சி, மீன் போன்றவற்றைக் கொண்டு செய்யப்பட்ட—இந்தியக் குழம்பைப்பற்றியோ, நறுமணமுள்ள பல்வகை நறுமணப் பொருட்களைக் கொண்டு சுவையூட்டப்பட்ட கோழியைப்பற்றியோ உண்மையிலேயே கேள்விப்படாதவர் யார்? இந்த நறுமணச்சுவைகளில் சில, உணவருந்திய பின் உட்கொள்ளும் இனிப்பு வகைகளிலும்கூட காணப்படுகின்றன. இது “சுவையான” (Spicy) என்றால் “காரமான” (Hot) என்பதற்கு இணைச்சொல் அல்ல என்பதை நிரூபிக்கிறது. இங்கு மிகவும் பிரபலமான பால் கலந்த இனிப்புத் தேநீரும்கூட, பெரும்பாலும் சிறிதளவு ஏலம், கிராம்பு, இஞ்சி போன்றவற்றால், அல்லது இவற்றின் நறுமணச்சுவைகளின் ஒரு கூட்டால் சுவையூட்டப்படுகிறது. அப்படிப்பட்ட சுவைகளுக்கான பசியிருக்கும்போது, தனிநபர் உட்கொள்ளும் (Per capita consumption) நறுமணப் பொருட்களின் அளவில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என்றால் அதில் ஏதும் ஆச்சரியம் இருக்கிறதா?
ஓர் இந்திய சமையற்காரரின் சமையலறைக்குச் சென்று பாருங்கள். பல்வேறு நிறங்களிலும் வடிவங்களிலும் உள்ள டஜன் கணக்கான நறுமணப் பொருட்களை உங்கள் கண்கள் காணும். சிறிய கருநிறமுள்ள கடுகு விதைகள்; நறுமணம் வீசும் குச்சிகளைப்போன்ற பழுப்பு நிறத்திலுள்ள லவங்கப்பட்டை; பச்சைநிற உறைகளில் காணப்படும் ஏலம்; மினுமினுக்கும் தங்க நிறத்திலுள்ள மஞ்சள்; மங்கலான, முண்டு முடிச்சுக்களையுடைய இஞ்சிவேர்; மிகச் சிவந்திருக்கும் மிளகாய் போன்றவற்றை அவற்றின் மத்தியில் காணலாம். பல நாடுகளின் பலசரக்குக் கடைகளில், இந்த வகைத் தொகுதிகளுக்கு முரணாக ஒரே பாட்டிலில் அடைக்கப்பட்ட குழம்புத் தூள் காணப்படுகிறது. சந்தேகமின்றி, இந்தக் குழம்புத் தூளும் பல நறுமணப் பொருட்களின் கலவையைக் கொண்டிருந்து ஒரு நோக்கத்தை நிறைவேற்றுகிறது. ஆனால் என்ன இருந்தாலும், இந்தியாவில் உபயோகப்படுத்தப்படும்—மசாலாக்கள் என்றழைக்கப்படும்—நறுமணப் பொருட்களின் கூட்டுக்கு இது ஒரு தரம்குறைந்த மாற்றுப் பொருளேயாகும்.
காய்கறிகள் உட்பட மீன், கோழி, இறைச்சி போன்ற வித்தியாசமான உணவுகளுக்கு ஏற்ற விசேஷித்த, ஆயத்த மசாலாக்கள் கலந்து வைக்கப்படுகின்றன. ஆனால் பெரும்பாலும், சமைத்துக்கொண்டிருக்கும் நேரத்திலேயே உண்டாக்கப்படும் குறிப்பிட்ட உணவைப் பொருத்து, தனிப்பட்ட நறுமணப் பொருட்கள், தகுந்த அளவில் தகுந்த வகைகள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன. கைதேர்ந்த இந்திய குடும்பப் பெண், சமைக்கும்போது ஒவ்வொரு நறுமணப் பொருளும் சேர்க்கப்படவேண்டிய சரியான நேரம் எது, எந்த வரிசையில் சேர்க்கவேண்டும் என்பதையெல்லாம் அறிந்திருக்கிறாள். வறுத்தல், அரைத்தல், சூடான எண்ணெயில் முழுசாக போடுதல், அல்லது மற்றவையோடு சேர்த்தல் போன்றவற்றின் மூலம் ஒரே நறுமணப் பொருளிலிருந்து வித்தியாசப்பட்ட நறுமணச்சுவையை வரவழைக்கவும் அவளுக்குத் தெரியும்.
இந்தியாவுக்கு வரும் பார்வையாளர்கள் அடிக்கடி பல்வகை உணவு தயாரிப்புகளைக் கண்டு ஆச்சரியமடைகின்றனர். வட இந்திய சமையற்கலை மற்றும் தென்னிந்திய சமையற்கலை என்ற பெரிய பிரிவுகளைத் தவிர, பெங்காலி, கோவன், குஜராத்தி, பஞ்சாபி போன்ற நாட்டின் வட்டார பண்பாடுகளும் தங்களுடைய சொந்த, தனித்தன்மை வாய்ந்த தயாரிப்புகளைக் கொண்டுள்ளன. மத நம்பிக்கைகளும் உணவின் சுவையைப் பாதிக்கின்றன. இதன் காரணமாக, குஜராத் மாநிலத்தில், ஓர் ஆள் பாரம்பரிய இந்து சைவ உணவைச் சாப்பிடலாம், ஆனால் இந்தியாவின் வட பகுதியில் அதே ஆள், முஸ்லீம்களுடைய வெற்றியின் காலத்தை நினைவுபடுத்தும், மொகலாய் இறைச்சி உணவை அருந்தலாம். ஆகவே இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் போன்றோரின் குடும்பங்களில் வெவ்வேறு இரவுகளில் சாப்பிடுவது, திரும்பத் திரும்ப அதே உணவை உண்பதில் விளைவடைவதில்லை.
நறுமணப் பொருட்களை வளர்க்கத் தகுந்தது
நறுமணப் பொருட்கள் உலகில் எங்கும் விளைந்தாலும், இந்தியா—60-க்கும் அதிகமான வகைகளில்—மற்ற நாடுகளைவிட அதிகம் உற்பத்தி செய்கிறது. இது நறுமணப் பொருட்களையும் அதன் துணைப் பொருட்களையும் முழுமையாகவும் தூளாகவும் 160-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. தென்னிந்தியா நாட்டின் நறுமணப் பொருள் உற்பத்தியில் முன்னணியிலிருக்கிறது. அரபிக்கடலில் இருக்கும் கொச்சின், அதன் அழகாலும் அதிக நீர்வழித் தடங்களாலும் அடிக்கடி “கிழக்கு வெனீஸ்” என்று அழைக்கப்படுகிறது. இது வளமிக்க வெப்பமண்டல மலபார் கடற்கரையின் நெடுகே வெகு காலமாக விளைந்துவரும் நறுமணப் பொருட்களை நேரடியாகத் தருகிறது.
பண்டைக் காலங்களிலிருந்தே கொச்சின் துறைமுகம் பினீசியர்கள், எகிப்தியர்கள், பெர்சியர்கள், சீனர்கள், ரோமர்கள், கிரேக்கர்கள், அரேபியர்கள் போன்றோருக்கு ஒரு சர்வதேச வாணிப சந்தையாக உபயோகப்பட்டு வந்திருக்கிறது. ஆர்வமூட்டும் வகையில், பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதல், ‘பூமியின் வர்த்தகர்களின்’ வாணிபத்தில் உட்பட்ட ‘எல்லாவித தந்தப் பொருட்கள், லவங்கப் பட்டை, இந்திய நறுமணப் பொருட்கள்’ போன்றவற்றைப்பற்றி குறிப்பிடுகிறது.—வெளிப்படுத்துதல் 18:11-13, NW.
வணிகர்களால் தொடக்கத்தில் வாஞ்சிக்கப்பட்டது, “நறுமணப் பொருட்களின் ராஜா” என்று சிறப்பாக அறியப்படும் கருமிளகே. அது உணவுக்குச் சுவையூட்டும் பொருளாக மட்டுமல்லாமல், இறைச்சிக்கும் அழுகக்கூடிய மற்ற உணவுப் பொருட்களுக்கும் ஒரு முக்கிய பதப்படுத்தும் பொருளாகவும் இருக்கிறது. நறுமணப் பொருட்களைச் சேர்ப்பதால், மற்றபடி அழுகி உபயோகமற்றுப் போகக்கூடிய உணவுப் பண்டங்களைக் குளிர்ப்பதனப் படுத்தாமலே ஒரு வருடத்திற்கோ அதற்கு அதிகமாகவோ பக்குவப்படுத்தி வைக்கமுடியும். பின்னர் மிளகு மட்டுமல்லாமல், வணிகர்கள் மற்ற நறுமணப் பொருட்களையும் விரும்பினர். ஏலம், கொத்துமல்லி, பெருஞ்சீரகம், வெந்தயம் போன்றவை அவைகளில் சில வகைகள்.
இருப்பினும், இந்தியாவில் வளர்க்கப்படும் எல்லா நறுமணப் பொருட்களுமே இங்குத் தோன்றியவையல்ல. சிகப்பு மிளகாய், உதாரணமாக, தென்னமெரிக்காவிலிருந்து அறிமுகம் செய்யப்பட்டதாகும். இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற, இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் C. V. ராமன் ‘மிளகாய் இல்லையென்றால் எந்த உணவும் சுவையற்றதும் உண்ணத்தகாததாயும் இருக்கிறது,’ என்று ஒருமுறை கூறினார். ஒரு வித்தியாசப்பட்ட உணவுப்பழக்கத்தில் வளர்க்கப்பட்ட அநேகர் உடனடியாக மறுக்கலாம். ஆனால், நன்றிசெலுத்தும் வகையில், ஓர் அன்பான சிருஷ்டிகரால் பூமியின் உணவுக் கிடங்கு, மிக வித்தியாசமான விருப்பங்களைத் திருப்திப்படுத்த, பல வகை பொருட்களால் நன்கு நிரப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
வெறுமனே நறுமணச்சுவையூட்டுபவை மட்டுமல்ல
நறுமணப் பொருட்கள் கவர்ச்சியூட்டும் ஒரு வரலாற்றைக் கொண்டிருக்கின்றன. அபிஷேக எண்ணெய்கள், தூபப் பொருட்கள், வாசனைப் பொருட்கள் (Perfumes) போன்றவற்றில் நறுமணப் பொருட்களுக்கு இருந்த பங்கைப் பற்றி பைபிள் சான்று பகருகிறது. அது எருசலேமில் யெகோவாவின் ஆலயத்தில் பயன்படுத்தப்பட்ட, பரிசுத்த அபிஷேக தைலங்கள், தூபவர்க்கங்கள் போன்றவற்றில் நறுமணப் பொருட்களின் உபயோகத்தைப்பற்றி குறிப்பிடுகிறது. திராட்ச ரசத்திலும் நறுமணப் பொருட்கள் சேர்க்கப்பட்டதாகவும் அது குறிப்பிடுகிறது. (யாத்திராகமம் 30:23-25, 34-37; உன்னதப்பாட்டு 8:2) மேலும், பூர்வீக கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் உடலை அடக்கம் செய்வதற்காகத் தயாராக்க நறுமணப் பொருட்களைக் கொண்டுவந்ததாக பைபிள் வெளிப்படுத்துகிறது.—யோவான் 19:39, 40.
இத்தேசத்தில், இஞ்சோடு சம்பந்தப்பட்ட ஒரு செடியின் மினுமினுப்பான தங்க நிற வேரை—மஞ்சளை—இந்தியப் பெண்கள் தலைமுறை தலைமுறையாக உபயோகித்திருக்கின்றனர். தோலின் நிலையை முன்னேற்றுவிக்க மஞ்சள் சாந்து அதன் மீது தேய்க்கப்படுகிறது. இன்று வாசனைப் பொருட்கள் மற்றும் அழகு சாதன தொழிற்சாலைகள் ஆவியாகும் மற்றும் ஆவியாகாத எண்ணெய்களைக் கலப்பதில், வால்மிளகு, பெருஞ்சீரக விதை, லவங்கப் பட்டை, கருவாமரவகை, கிராம்பு, ஜாதிக்காய், ஜாதிபத்திரி, ரோஸ்மேரி, ஏலம் போன்றவற்றிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெயை உபயோகித்து, டஜன் கணக்கில் கவர்ந்திழுக்கும் வாசனை பொருட்களை (Perfumes) தயாரிக்கின்றனர். இந்தக் கூட்டுப் பொருட்கள், சோப்புகள், நறுமணச் சுண்ணங்கள், சவரத்தின் பிறகு உபயோகிக்கும் திரவங்கள், கலோன்கள், வாய் கழுவும் திரவம் போன்றவற்றையும், எண்ணிலடங்கா மற்ற பொருட்களையும் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
கூடுதலாக, நறுமணப் பொருட்கள் வெகுகாலமாகவே மருத்துவத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. இஞ்சி, மஞ்சள், பூண்டு, ஏலம், மிளகாய், கிராம்பு, குங்குமப்பூ போன்றவை, இந்துக்களின் சமஸ்கிருத நூல்களாகிய, வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள, மருத்துவ விஞ்ஞானமாகிய ஆயுர்வேதம் சிபாரிசு செய்யும் நறுமணப் பொருட்களில் சில. ஓர் இந்திய மருந்து கடைக்குப் போகும் ஒருவர், வெட்டுக் காயங்களுக்கும் சூட்டுப் புண்களுக்கும் மஞ்சளால் ஆன ஒரு மருந்து, 13 நறுமணப் பொருட்களாலான ஒரு பற்பசை, பலவகையான நோய்களுக்கு இருபதுகணக்கில் மற்ற துணை நறுமண பொருட்கள் போன்றவற்றை இன்னும் காணமுடியும்.
இவ்வாறு, நறுமணப் பொருட்களின் வரலாற்றை ஆராய்தல், நறுமணப் பொருட்கள் இல்லாமலிருந்திருந்தால் உணவு விருப்பு வெறுப்புகள் வேறுவகையாயிருந்திருக்கும், மருந்துகள் இப்போதிருப்பதுபோல இருந்திருக்காது, வரலாறு வித்தியாசமாக எழுதப்பட்டிருக்கும். நறுமணப் பொருட்களுக்கான சுவைகள் உண்மையிலேயே—பல வழிகளில்—நம்முடைய உலகை உருவமைத்தன. (g93 2/22)
[பக்கம் 25-ன் படங்கள்]
உலகமுழுவதிலும் பிரபலமான நறுமணப் பொருட்களின் மாதிரிகள்
தெரு வியாபாரி வாடிக்கையாளருக்காக நறுமணப் பொருட்களை அளந்துகொண்டிருக்கிறாள்
கொச்சினிலுள்ள ஒரு கடையில் நறுமணப் பொருட்கள் வாங்குபவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது