சுவை—அன்புள்ள படைப்பாளரின் வரப்பிரசாதம்
“ஐம்புலன்களின் உலகில், சுவை உணர்வே மகாராணி” என்று சொல்கிறார் பிரபல சுவையுணர்வு நிபுணர், லிண்டா பார்டோஷக். எது உடம்புக்கு நல்லது எது கெட்டது என்று கண்டுணர உதவுவது சுவை உணர்வே. இது நம்மைப் பாதுகாக்கிறது, இன்பமும் தருகிறது.
நல்ல ஆரஞ்சு பழத்தின் இனிப்பு, மின்ட் ஐஸ் கிரீமின் இதமளிக்கும் குளிர்ச்சி, காலை காபியின் கசந்த சுண்டியிழுக்கும் வாசனை, சமையல்காரரின் கைப்பக்குவத்துக்கு ஏற்ப பார்த்து பார்த்து சமைத்ததால் வந்த தனி ருசி போன்றவை சுவை எனும் அற்புத உலகில் நாம் ருசித்துப் பார்க்கும் ஒருசில அம்சங்களே. சுவை உணர்வுகள் மனித வாழ்வில் அந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்துவதால், மனிதனின் குணங்களோடு ஒப்பிட்டு பேசப்படுகின்றன.
நீங்கள் சிலரை ‘அவர் இனிக்க இனிக்க பேசுவார்’ என்று சொல்லி இருக்கலாம். வேறுசிலருடன் உள்ள உறவைப் பற்றியோ “பழகப் பழக பாலும் புளிக்கும்” என சொல்லியிருக்கலாம். பகையை மனதில் வைத்து வளர்க்கிற ஒருவர் மனக்கசப்புடையவர் என்று அழைக்கப்படுகிறார். பைபிள், “மனக்கசப்புள்ளவர்கள்,” “கசப்பான வார்த்தை” போன்ற பதங்களைப் பயன்படுத்துகிறது.—நியாயாதிபதிகள் 18:25, NW; சங்கீதம் 64:4; 2 சாமுவேல் 17:8, NW.
உலக வரலாற்றில் சுவை
15, 16-ம் நூற்றாண்டுகளில் கடற்பயணம் செய்தவர்களிடையே சுவை முக்கிய பங்கு வகித்தது. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன், வாஸ்கோடா காமா ஆப்பிரிக்காவின் கீழ்ப்பகுதி வழியாக இந்தியாவுக்கு வந்து, போர்த்துகல் தேசத்துக்கு திரும்பிச் சென்றபோது, ஒரு கப்பல் நிறைய மசாலாப்பொருட்களை (ஸ்பைஸஸ்) கொண்டுபோனார். கிரேட் பிரிட்டன், பிரான்ஸ், போர்த்துகல், ஸ்பெய்ன், ஹாலந்து போன்ற நாடுகள் மசாலாப்பொருள் கிடைக்கும் இடங்களைக் கைவசம் கொண்டுவர முயற்சிசெய்தன. அதனால் அடுத்த முந்நூறு ஆண்டுகள் இந்த ஐரோப்பிய தேசங்கள் எங்கும் சண்டைகள் மூண்டன.
உங்கள் மனதில் “மசாலாப்பொருட்களுக்காகப் போய் ஏன் தேசங்கள் சண்டை போட வேண்டும்?” என்ற கேள்வி எழும்பலாம். அதற்கு காரணமே சுவை உணர்வுதான்! ஐரோப்பியர்கள் மசாலாப்பொருள் கலந்த உணவை ருசித்துச் சாப்பிட்டார்கள்; ருசியிலிருந்த ஆர்வம் அவர்களை அவ்வளவு ஆட்டிப்படைத்தது. இந்நாள்வரை, நவீனகால தொழில், வணிகம், அறிவியல் போன்ற எல்லா துறையும் சுவை என்ற உணர்வுக்குள் தஞ்சம் அடைகின்றன.
சுவை என்றால் என்ன? நம்முடைய மற்ற புலனுணர்வுகளுடன் இதற்கு சம்பந்தம் இருக்கிறதா?
நாக்கு வகிக்கும் பங்கு
நம் சுவை உணர்வைக் கட்டிக்காப்பவன் நாக்கு. அநேக சுவை மொட்டுக்கள் நாக்கில் இருக்கின்றன. வாயின் மற்ற பகுதிகளிலும், தொண்டைப் பகுதிகளிலும்கூட சில இருக்கின்றன. கண்ணாடிக்குப் பக்கத்தில் போய் உங்களுடைய நாக்கை கொஞ்சம் உற்றுப் பாருங்களேன். உங்கள் நாக்கில் நூற்றுக்கணக்கான சிறுசிறு மேடுகள் தெரியும், அதை நீங்கள் தொட்டுப் பார்த்தால், வெல்வெட் போல் மிருதுவாக இருக்கும். இவை நுண்காம்புகள் (papillae) என்று அழைக்கப்படுகின்றன. இந்த நுண்காம்புகள் நாக்கின் மேல்புறத்தில் இருக்கின்றன. இவற்றுக்குள் குட்டிகுட்டி சுவை மொட்டுக்கள் திரள்திரளாக திரண்டு காணப்படுகின்றன. “ஒவ்வொரு மொட்டுக்குள்ளும் கிட்டத்தட்ட நூறு சுவை செல்கள் (taste cells) இருக்கின்றன, இவை தூண்டப்படும்போது நரம்பு செல்லை செயல்பட வைத்து மூளைக்குச் செய்தியை அனுப்புகின்றன” என்று சையன்ஸ் பத்திரிகை சொல்கிறது.
சுவை மொட்டுக்களின் எண்ணிக்கை ஆளுக்கு ஆள் அதிகம் வேறுபடலாம், எனவே சுவை உணர்வும் வேறுபடுகின்றன. ஒரு மனிதனுடைய நாக்கு, 10,000 சுவை மொட்டுக்களை உடையதாகவும் இருக்கலாம் அல்லது 500 சுவை மொட்டுக்களை மட்டுமே உடையதாகவும் இருக்கலாம். சுவை மொட்டுக்களின் உடல்கூறு இயலைப் (அனாட்டமி ஆஃப் டேஸ்ட் பட்ஸ்) படித்த இங்லிஸ் மில்லர் இவ்வாறு எழுதினார்: “சுவை மொட்டுக்கள் அதிகம் உடையவர்கள் நுணுக்கமாக ருசிகண்டு சாப்பிடுவார்கள்; குறைவான சுவை மொட்டுக்கள் உடையவர்களோ அவ்வளவு ருசிபார்த்து சாப்பிடுவதில்லை.”
சுவை உணர்வு வேலை செய்யும் விதம்
சுவை உணர்வு அதிக சிக்கல் நிறைந்தது. சரியாகச் சொன்னால், இது ஒரு வேதியியல் வினை. உணவிலிருந்து வரும் கரைந்த வேதியியல் பொருட்கள், நம் நாக்கின் நுண்துளைகளில் நுழைந்து சின்ன சின்ன மேடுகளாக நீட்டிக்கொண்டிருக்கும் சுவையுணர்வு உள்வாங்கிகளை (taste receptors) அதாவது சுவையை உள்ளே உணரவைக்கும் பாகங்களைத் தூண்டி விடுகின்றன. உள்வாங்கி செல்கள் செயல்பட்டு, நரம்பு செல்களை (நியூரான்களை) ஊக்குவிக்கின்றன. இவை சுவை மொட்டிலிருந்து மூளைக்கு செய்திகளை அனுப்புகின்றன.
அற்புதகரமாக, ஒரு சுவை மொட்டு அநேக வித்தியாசமான நியூரான்களைத் தூண்டி செயல்பட வைக்க முடியும். மேலும் ஒரு நியூரானோ அநேக சுவை மொட்டுக்களிலிருந்து ஒரே சமயத்தில் செய்திகளைப் பெறலாம். சுவை உள்வாங்கிகளும், அவற்றின் மிகச் சிக்கலான அமைப்பும் இந்தச் செய்திகளை எல்லாம் எப்படி பகுத்தறிந்து செயல்படுகிறது என்பது யாருக்கும் புரியாத புதிர். தி என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா இவ்வாறு சொல்கிறது: “உள்வாங்கி செல்கள் அனுப்பும் மின்னணு செய்திகள் சிக்கலான ரகசிய பாஷையாக (complex coding) மாறி கடத்தப்படும்போது மூளை உணர்வுகளைப் பெறுகிறது.”
இந்தச் சுவை உணர்வுகளை மற்ற புலனுணர்வுகளும் தூண்டிவிடுகின்றன. த நியூ புக் ஆஃப் பாப்புலர் சையன்ஸ் குறிப்பிட்டது: “சில சமயங்களில் ஒருவர் சுவைத்துப் பார்க்கிறாரா அல்லது முகர்ந்து (smell) பார்க்கிறாரா என்று அறிவது ரொம்பக் கஷ்டம்.” உதாரணமாக, பேக்கரி பக்கம் நாம் செல்லும்போது, அப்போதுதான் சுடப்படும் ரொட்டியின் மணம் நம் மூக்கைத் துளைக்கும். நம் வாயிலோ எச்சில் ஊரும். நாம் அந்தக் கடைக்குள் போய், ரொட்டியை நம் கண்ணால் பார்த்து, அதனுடைய மொரமொரப்பான பகுதியைத் தொடும்போது, நம் புலனுணர்வுகள் இன்னும் அதிகம் தூண்டப்படுகின்றன. உடனே நம் கை அதை எடுத்து வாயில் போடப் போகும் அல்லவா!
அப்படியென்றால், இந்தச் சுவை உணர்வு என்பது என்ன? ஆம்னி என்ற பத்திரிகை விளக்குகிறது: “சாதாரண ஆளுக்கு, சுவை என்று சொல்லும்போது, மணம், ருசி, தொடு உணர்வு, மிருதுத்தன்மை, பார்வை, காரத்தின் எரிச்சல் (கார மிளகு, மின்ட் குளிர்ச்சி), சூடு போன்ற அநேக உணர்வுகளின் ஒட்டுமொத்த புலனுணர்வாக இருக்கலாம்.”
ஆனால், அந்தக் கட்டுரை தொடர்ந்து சொல்கிற பிரகாரம், “சுவை . . . மிகச் சாதாரண உணர்வு. அதில் இருப்பது வெறும் நான்கே சுவைகள்தான்: இனிப்பு, உவர்ப்பு (உப்பு), புளிப்பு, கசப்பு.” நாக்கு வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு சுவை உணர்வுத்திறன் உள்ளதாக இருக்கிறது என்று பிரபலமாக சொல்லப்படுகிறது. ஆனால், ஒரு சுவை மொட்டு, நாக்கின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அநேக சுவைகளை அல்லது எல்லா நான்கு சுவை உணர்வுகளையும் உணர முடியும்.
சுவை உணர்வு எப்படி உண்டாகிறது என்று விளக்கும் வேதியியலைப் பற்றி கற்றுக்கொள்ள வேண்டியதோ கடலளவு. எடுத்துக்காட்டாக, உணவில் புளிப்புச் சுவையுள்ள எலுமிச்சை சாற்றை சில துளி விட்டால், உணவின் உப்பு சுவை எப்படி அதிகரிக்கிறது என்று இதுவரை யாருக்கும் புரியவில்லை. இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு போன்ற சுவைகள், சுவை செல்களில் மின்செய்திகளை அனுப்புகின்றன, ஆனால் கசப்பு சுவையோ இந்தச் செல்களை ஒரு வேதியியல் வினைக்கு உட்படுத்தி, வேதியியல் செய்தியை உருவாக்கும்படி செய்கிறது.
ருசித்துச் சாப்பிட கற்றுக்கொள்ளலாம்
முன்பெல்லாம் பார்க்கவே பிடிக்காத தின்பண்டங்களை இப்பொழுது ருசித்துச் சாப்பிட நீங்கள் கற்றுக்கொண்டிருக்கலாம். இந்த ரகத்தில் பாவக்காய், ச்சீஸ், முள்ளங்கி, காரமான மசாலாப்பொருட்கள், கசப்பான பொருட்கள் போன்றவை இருக்கலாம். அந்தக்காலத்தில் இருந்தே, உணவில் புதுவித ருசிக்காக கசப்பான சேலட் கீரை வகையோ (endive), சிக்கரியோ சேர்க்கப்படுகிறது. இவை “கசப்பான கீரைவகைகள்” என்றழைக்கப்படுகின்றன. ஆனால் கசப்பான உணவை அனுபவித்துச் சாப்பிடுவதற்கு, சுவை உணர்வை நீங்கள் பழக்கப்படுத்த வேண்டும்.—யாத்திராகமம் 12:8, NW.
எந்தச் சூழ்நிலையில் சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்து ருசி மாறுகிறது என்று ஆராய்ச்சி காண்பிக்கிறது. உதாரணமாக, ஒரு பெண் ஒருபோதும் போலோனி ஸாசிஜ் (bologna sausage) சாப்பிட்டதில்லை. அதைப் பார்த்தாலே அல்லது அந்த வாடை அடித்தாலே போதும், அவருக்கு குமட்டிக்கொண்டு வரும். காரணம், அவருடைய அம்மாவுக்கு இப்படிப்பட்ட வெறுப்பு உணர்வு இருந்ததுதான். ஆனால், இருபதுக்கும் முப்பதுக்கும் இடைப்பட்ட வயதில் இருந்தபோது, ஒரு நாள் ரொம்ப பசியாக இருந்தார். அவருக்கு சாப்பிட கிடைத்ததோ, இந்தப் போலோனி மட்டும்தான். வேறு வழியில்லாமல் சாப்பிட்டார், அவருக்கே ஆச்சரியமாக இருந்தது, அந்தச் சுவை அவருக்கு அவ்வளவு இஷ்டமாகிவிட்டது!
ஆகவே, புதுசா எதையாவது சாப்பிட்டுப் பார்க்க நீங்கள் நினைத்தால், தயவுசெய்து நல்லா பசியா இருக்கும்போது ட்ரைப் பண்ணிப் பாருங்க. நீங்கள் தாயாகவோ தகப்பனாகவோ இருந்தால், சில உணவுப் பொருட்களைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதும் எந்தச் சமயத்தில் அவற்றை பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்துகிறீர்கள் என்பதும் உங்கள் பிள்ளைகளைப் பாதிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். புதிய உணவுப்பொருட்களை அறிமுகப்படுத்தும்போது இன்பகரமான சூழ்நிலையை உருவாக்குங்கள். உங்கள் பிள்ளைக்கு அந்த உணவின்மீது ஆசையைத் தூண்ட முயலுங்கள். ஒரு பெண் எழுத்தாளர் சொன்னதாவது:
“சமைக்கும்போது உங்கள் குழந்தையை சமையல் அறையிலேயே பாதுகாப்பான இடத்தில் அல்லது பிள்ளையை நாலா பக்கமும் விளையாடுவதற்கு சிறிது இடம்விட்டு அமைக்கப்பட்ட ஒரு சிறு சதுர பெட்டிக்குள்ளே (playpen) வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் பிள்ளை சந்தோஷமான, சொகுசான இடத்திலிருந்து உணவைப் பார்க்கவும் முடியும், முகரவும் முடியும். இப்படிப்பட்ட உணவுகளை சாப்பிடும் வயது வருவதற்கு முன்பாகவே அவன் அவற்றைப் பற்றி அறிந்திருப்பான். சில மாதங்கள் கழித்து, நீங்கள் தயாரிக்கும் உணவின் சிறுதுண்டுகளை, பச்சையாகவோ, பாதி சமைத்த வடிவிலோ அவனுக்குக் கொடுக்கலாம்.”
அவர் தொடர்ந்து சொல்கிறார்: “இதைச் செய்வதற்கு முன்கூட்டியே திட்டம் போடுவதும், அதிக நேரமும் அவசியம். ஆனால், சில சமயங்களில் புதிய அல்லது இஷ்டமில்லாத உணவைத் தயாரிக்கும்போது உங்கள் பிள்ளை உங்களுக்கு சிறுசிறு உதவிசெய்யட்டும். தயாரிக்கும்போது டேஸ்ட் பண்ணத் தூண்டுங்கள். பிள்ளை சாப்பிட ஆரம்பிக்கும்போது ஜாலியாகவும் பசியாகவும் இருப்பான். இதுவே புதுவித உணவை அறிமுகப்படுத்த பொருத்தமான சூழ்நிலை.”
சுவை குறையகுறைய
தாவீது ராஜாவின் வயதான நண்பர் பர்சிலா, “இப்பொழுது நான் எண்பது வயதுள்ளவன்; . . . புசிக்கிறதும் குடிக்கிறதும் உமது அடியேனுக்கு ருசிகரமாயிருக்குமோ?” என்று கேட்டார். (2 சாமுவேல் 19:35) எனவே, சுவை உணர்வு வயதாக வயதாக குறையலாம். மற்ற அம்சங்களும்கூட சுவை உணர்வு குறைவதற்கு அல்லது சுவை உணர்வை முழுவதுமாக இழப்பதற்கும் காரணமாக இருக்கலாம்.
தலையில் காயம், அலர்ஜி, இன்பெக்ஷன், மருந்து, நச்சுப்பொருட்கள் வாடை, அல்லது ஒருவேளை வெறும் ஜலதோஷம்கூட சுவை உணர்வை மங்கச் செய்யலாம். மனமுறிவு அடைந்தவர்களால் முகரவோ, சுவைக்கவோ முடியாது என்பதை ஒருவரின் சொந்த அனுபவம் நம் மனதில் ஆழப்பதிய வைக்கிறது. அவர் எழுதினார்: “காபி மணம், ஆரஞ்சு பழத்தின் இனிப்பு சுவை இதையெல்லாம் நாம் சட்டை செய்வதே கிடையாது. ஆனால், இப்படிப்பட்ட சுவை உணர்வுகளை இழக்கும்போதோ, சுவாசிக்கவே மறந்துவிட்டதுபோல் இருக்கிறது.”
போலி சுவை என்று அழைக்கப்படுவது ஒரு மிகப்பெரிய நோய். இல்லாத சுவையை இருப்பதுபோல் இந்த நோயாளி உணருவார். கீமோதெரபி சிகிச்சை பெறும் புற்றுநோயாளிகள் சில சமயங்களில் இப்படிப்பட்ட கண்டகண்ட சுவையை, வாசனையை உணர்கின்றனர்.
வரப்பிரசாதம்
நமக்கு நல்லா ருசிபார்க்க தெரிந்தால் எவ்வளவு ஆனந்தம்! வயதானவர்கள் பலர் தங்கள் இளம் பருவத்தில் அனுபவித்த சுவை உணர்வுகளை, பழுத்த பழங்களை மரத்திலிருந்து பறித்து சாப்பிட்டது, ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்ட உணவுவகைகளை ருசித்தது போன்ற சம்பவங்களை ஏக்கத்துடன் நினைத்துப் பார்க்கின்றனர். நாம் ருசிக்கவும், சுவை உணர்வுகளை அனுபவிக்கவும் வேண்டும் என்று படைப்பாளர் விரும்புகிறார். அவருடைய நீதியான புதிய உலகில் நமக்கு ஒரு விருந்து உள்ளது. அதில் “ஊனும் நிணமுமுள்ள பதார்த்தங்களும்” உண்டு என அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். அந்தச் சமயத்தில், துன்பம், முதிர்வயது, மரணம் என்றுமே இருக்காது.—ஏசாயா 25:6-9; யோபு 33:25; வெளிப்படுத்துதல் 21:3, 4.
சுவை உணர்வு நம் வாழ்க்கைக்கு மெருகூட்டுகிறது. அது இல்லையென்றால், ஒரு காருக்கு பெட்ரோல் போடுவதுபோல் சாப்பிடவேண்டுமே என்பதற்காக ஏனோதானோவென்று சாப்பிடுவோம். இது சகல ஞானமும் உள்ள அன்பான படைப்பாளரிடமிருந்து வந்த ஒரு வரப்பிரசாதமே!
[பக்கம் 24-ன் படம்]
சத்துள்ள உணவை பிரியத்துடன் சாப்பிட உங்கள் பிள்ளைக்கு கற்றுக்கொடுங்கள்