அறிவியல் 21-ம் நூற்றாண்டின் சவால்களைச் சமாளிக்கமுடியுமா?
“பூமித்தாய் தனது அக்கறையற்ற, கட்டுப்பாடற்ற பிள்ளைகளை இன்னும் அதிக காலம் சமாளிக்க முடியாது என்று சொல்வதற்கு இப்போது அளவுக்கதிக அறிவியல்பூர்வமான அத்தாட்சி இருக்கிறது.” —தி யூரப்பியன், மார்ச் 19-25, 1992.
சூழலியல் நிபுணர்கள் பூமிக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்து, வெறுமனே துரும்பைத் தூணாக்குகிறதுபோலல்லாமல், வினைமையானது என்றும் அது கவனம் செலுத்துவதற்குப் போதிய ஆதாரமாயிருக்கிறது என்றும் அபிப்பிராயம் தெரிவிக்கின்றனர். உண்மையிலேயே, பேரழிவு தவிர்க்கப்பட வேண்டுமானால் உடனடி நடவடிக்கை இன்றியமையாதது என்று அவர்கள் சொல்கின்றனர். “நிலைமைகளை மாற்றியமைக்க முயற்சி செய்வதற்கு இன்னும் தலைமுறைகள் இல்லை, ஆனால் வருடங்கள் மட்டுமே இருக்கின்றன,” என்று உலககவனிப்பு நிலையத்தின் தலைவர் 1980-களின் இறுதியில் கூறினார்.
இந்தக் கோளத்தைக் காப்பாற்ற 5000 நாட்கள் (5000 Days to Save the Planet) என்ற புத்தகத்தின் ஆசிரியர்கள், தங்களுடைய புத்தகத்தை 1990-ல் வெளியிட்டபோது மிகவும் குறிப்பாகத்தான் இருந்தனர். அச்சமயத்திலிருந்து அவற்றின் இறங்குமுகக் கணிப்பு (Countdown) தொடர்ந்து வந்திருக்கிறது. அவர்களுடைய கெடுவின்படி, இக்கோளைக் காப்பாற்ற எஞ்சியிருக்கும் காலம், 4,000-நாள் குறியைச் சுற்றியிருக்கிறது. இதற்கிடையில் அசாதாரணமான ஏதாவது நிகழ்ந்தாலொழிய, 21-ம் நூற்றாண்டு தொடங்கும் சமயத்தில், அந்த எண்ணிக்கை சுமார் 1,500 நாட்களாகக் குறைந்துவிட்டிருக்கும்.
வழக்கத்திற்கு மாறான என்ன சூழ்நிலைமைகள் இத்தகைய தெளிவான நெருக்கடி நிலையை உருவாக்கியிருக்கின்றன? நெருங்கி வரும் நூற்றாண்டுக்கு முன்னிருக்கும் சவால்கள் எவை?
பிரச்னைகளுக்குக் குறைவில்லை
பனிப்போர் முடிவுற்றதென சமாதானத்தை விரும்பும் மக்கள் சந்தோஷமடைகின்றனர். ஆனால் உலக சமாதானத்தை அடைந்து அதைக் காத்துவருவது என்பது ஓர் உண்மையான சவாலாகவே இருக்கிறது. ஐரோப்பிய ஐக்கியத்தின் பிரச்னைகளைப்பற்றி, ஜனவரி 1990-ல் பேசிய பிரான்ஸின் ஜனாதிபதி மிட்டரன்ட் இவ்வாறு சொன்னார்: “நாம் ஒரு நேர்மையற்ற ஆனால் நிலையான உலகத்தை விட்டுச் செல்கிறோம், அவ்வுலகம், மிக நேர்மையானதாக இருக்கும் என்று எதிர்நோக்கியிருக்கிறோம், ஆனால் நிச்சயமாக மிகவும் நிலையற்றதாக இருக்கும்.” மேலும் தி யூரப்பியன் தினசரி எழுதியது: “[முன்னாள் சோவியத் கூட்டுத் தேசங்களில்] சுதந்திரத்தின் விலை ஓர் அதிகரித்துவரும் நிலையற்ற தன்மையாக இருக்கிறது. அது அணுஆயுத யுத்தத்தின் ஆபத்தை அதிகரித்திருக்கிறது. இந்த ஆபத்துச் சிறிதளவேயெனினும் ஆபத்தாகவே இருக்கிறது.”
உண்மையில், இந்த உலகம் இப்போது எதிர்ப்படும் சில சவால்கள், பனிப்போர் தொடங்கியபோது அநேகமாய் அறியப்படாதவையாகவே இருந்தன. அது இந்தக் கோளத்தைக் காப்பாற்ற 5000 நாட்கள் குறிப்பிடுவதுபோல: “ஐம்பது வருடங்களுக்கு முன்பு கூட உலக சுற்றுச்சூழல், பெரும்பாலும் சமநிலையிலேயே இருந்தது. . . . இந்த உலகம் பெரிய, அழகான, வல்லமைமிக்க ஓர் இடமாக இருந்தது; நாம் எப்படி அதை நாசப்படுத்தியிருக்கமுடியும்? நம்முடைய கோள் நெருக்கடியிலிருக்கிறது, ஓர் உலகளாவிய அழிவுக்கு வழிநடத்தும்வகையில் நாம் நம்முடைய வழியை அழித்து அசுத்தப்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்று இன்று சொல்லப்படுகிறோம்.”
இயற்கை பேரழிவுகள் என்றழைக்கப்படும் பெருவெள்ளம், புயல்கள், நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் போன்றவை எங்கும் சம்பவிக்கின்றன. சுற்றுச்சூழலில் மனிதனின் குறுக்கீடு எந்தளவுக்குக் காரணமாயிருக்கிறது என்பது அநிச்சயமாக இருக்கலாம். பூமியின் பாதுகாப்புப் படலமாகிய ஓசோன் படலம் சில இடங்களில் ஆபத்தான அளவுக்கு மென்மையாகியுள்ளது என்பதற்கு அத்தாட்சி இருக்கிறது. துயரங்களை விளைவிக்கக்கூடிய தட்பவெப்பநிலை மாற்றங்கள், படிப்படியாக ஏற்படுவதைவிட திடீரென தாக்குகின்றன என சில விஞ்ஞானிகள் இப்பொழுது எச்சரிக்கின்றனர்.
புற்றுநோய், இருதயநோய், இரத்தஓட்ட பிரச்னைகள் போன்றவையும் மற்றநேக நோய்களும் மருத்துவ துறையின் திறமைக்கு வெகுகாலமாகவே சவால்விட்டிருக்கின்றன. வருடக்கணக்காக மருத்துவ துறையில் முன்னேற்றம் இருந்தபோதிலும், இந்த வியாதிகள் இன்னும் ஆட்களைக் கொல்லுகின்றன. ஐரோப்பாவில் மட்டும், ஆண்டுதோறும் மதிப்பிடப்பட்ட 12,00,000 பேர் புற்றுநோயினால் மரிக்கின்றனர். இது பத்தாண்டுகளுக்கு முன் இருந்ததைவிட கிட்டத்தட்ட 65 சதவீதம் அதிகமாகும். இதைவிட மிகக் குறைவான ஆட்களையே கொல்லும் எய்ட்ஸ் என்ற புதிய கொள்ளைநோயினால் ஏற்படும் பயம் இருந்துவருவதால், இந்த மாபெரும் உயிரிழப்புப் பெரும்பாலும் கவனிக்கப்படாமலேயே போய்விடுகிறது.
மற்றொரு சவால்: 200 வருடங்களுக்குக் குறைவான காலப்பகுதியில், உலக மக்கள் தொகை நூறு கோடியிலிருந்து சுமார் ஐந்நூற்றைம்பது கோடியாக பெருகிவிட்டிருக்கிறது. வருடாந்தர வளர்ச்சி வீதம் சமீபத்தில் வீழ்ச்சியடைந்திருந்தபோதிலும், உலக மக்கள் தொகை 2025-ம் வருடத்தில் 800 கோடியை ஒருவேளை கடந்துவிட்டிருக்கும், 2050-ல் 1,000 கோடி குறியை அணுகும் என்றெல்லாம் சிலர் மதிப்பிடுகின்றனர். இந்த மக்கள் எல்லாரும் எங்கு வாழ்வார்கள்? அவர்கள் எதை உண்பார்கள்? ஒரு நூறு கோடி மக்கள் ஏற்கெனவே முழுமையான வறுமையில் வாழ்கின்றனர், அவர்களுடைய வாழ்க்கை “ஊட்டச்சத்துக்குறைவு, படிப்பறிவின்மை, நோய்நொடிகள் போன்றவற்றால் அந்தளவு தனிப்படுத்திக் காட்டப்பட்டிருக்கிறது. இதனால் அவர்களுடைய வாழ்க்கை மனித மதிப்பு என்று விவரிக்கப்படும் எந்த நியாயமான விவரிப்புக்கும் கீழாக இருக்கிறது,” என்பதாக 1991-ல் வெளியிடப்பட்ட ஓர் ஐநா அறிக்கை மதிப்பிட்டது.
“ஏழை நாடுகளில் மக்கள் நெருக்கடி அவர்களை வறுமைக்குட்பட்டவர்களாக வைக்கப்பார்க்கிறது. ஆனால் பணக்கார நாடுகளிலோ மக்கள் நெருக்கடி ஏற்படுவது உயிரை ஆதரிக்க உள்ள முழு கோளின் திறனை அழிக்கப் பார்க்கிறது,” என்று சொல்வதன்மூலம் இப்பிரச்னையின் கொடுமையைக் குறிப்பிடுகிறார், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் மக்கள்தொகை துறையின் பேராசிரியர் பால் R. எர்லிச்.
மேற்கூறப்பட்ட காரியங்கள்—அல்லது போதை மருந்து துர்ப்பிரயோகம், வீட்டுவசதி குறைவு, குற்றச்செயல், இனக் கலவரங்கள் போன்ற மற்ற காரியங்களும்—அண்மை எதிர்காலத்தில் ஓர் உலகளாவிய அழிவைத் தூண்டிவிடுவதற்கான சாத்தியம், உண்மையான அக்கறை காட்டுவதற்குக் காரணத்தைத் தருகிறது. சவால் தெளிவாக இருக்கிறது. ஆனால் அதை எப்படி சமாளிப்பது என்பது தெளிவாக இல்லை.
சமாளிக்க வழிகளைத் தேடுதல்
என்றபோதிலும், இப்பிரச்னைகளின் வினைமைத் தன்மையின் காரணமாக, வெவ்வேறு நிலை அவசரத் தன்மையுடன் அரசாங்கங்கள், தீர்வுகளை நாடிக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, சுற்றுச்சூழல் துறையில், இதுவரை எப்பொழுதும் கூட்டப்பட்ட சூழலியல் கூட்டங்களிலேயே மிகப் பெரிய கூட்டம், கடந்த ஜூன் மாதம் ரியோடி ஜனிரோவில் கூட்டப்பட்டது. ஐநா-வின் ஆதரவில் நடத்தப்பட்ட இந்தச் சூழலியல் கூட்டம், 1972-ல் ஸ்வீடனிலுள்ள ஸ்டாக்ஹோமில் நடத்தப்பட்டதற்கடுத்து, இவ்வகை கூட்டங்களில் இரண்டாவதாகும். அச்சமயத்தில் பிரபலமான ஜெர்மானிய அரசியல்வாதி ஒருவர் கூறினார்: “இக்கோளத்திற்கு ஏற்படப்போவதில் இம்மாநாடு ஒரு திருப்புமுனையாக இருக்கக்கூடும்.”
சந்தேகமின்றி, 1972-ன் கூட்டம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை. மாரிஸ் F. ஸ்ட்ராங், 1972-ன் மற்றும் 1992-ன் இவ்விரண்டு கூட்டங்களின் தலைமை அமைப்பாளர் ஒப்புக்கொண்டார்: “சுற்றுச்சூழல் நிறுவனங்கள் கொண்டிருக்கும் ஒரே ஓர் உண்மையான கருவியாகிய சுற்றுச்சூழல் ஒழுங்குமுறைவிதி இன்றியமையாததுதான், ஆனால் போதுமானதல்ல. அது நம்முடைய பொருளாதார நடத்தைகளுக்கான மறைந்துகிடக்கும் உள்நோக்கங்களில் ஏற்படும் முக்கியமான மாற்றங்களையும் தன்னோடு கொண்டிருக்கவேண்டும். ஸ்டாக்ஹோம் மாநாட்டுக்குப் பிறகு 20 வருடங்களாக இதைத்தான் நாம் கற்றுக்கொண்டோம்.”
எனினும், 1992-ன் மாநாடு, இந்த “முக்கிய மாற்றங்களை” கொண்டுவருவதில், 1972-ன் மாநாட்டைவிட மிக வெற்றிகரமாய் இருந்ததாக நிரூபிக்குமா? அவ்வாறு இல்லையெனில், இன்னும் 20 வருடங்கள் கழித்து 2012-ல் மூன்றாம் சூழலியல் மாநாட்டை நடத்துவதற்கு நம்முடைய கோளம் இருக்குமா?
அதன் மிகப் பெரிய சவாலை எதிர்ப்படுதல்
உலகப் பிரச்னைகளைத் தீர்த்துவைப்பதற்கான மதத்தின் திறமையைக் குறித்தும், அரசியலின் திறமையைக் குறித்தும் மக்கள் பொதுவாகவே அதிகமதிகம் சந்தேகிக்கின்றனர். ஆனால் மதத்தால் முடியாது, அரசியலால் முடியாது என்றால், பிறகு 21-ம் நூற்றாண்டின் மாபெரும் சவால்களை எதுதான் சமாளிக்க முடியும்?
ஜெர்மானிய கூட்டாட்சியின் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப அமைச்சரகத்தினால் வெளியிடப்பட்ட ஒரு சிற்றேடு இக்கேள்வியின் பேரில் விளக்கம் தருகிறது. “இப்பிரச்னைகளைக் கையாளுவது அரசியல் திட்டமுறைகளைத் தேவைப்படுத்துகிறது. இது மனிதனால் கொண்டுவரும் எந்தக் கூடுதலான மாற்றங்களையும் தவிர்ப்பதற்கு மட்டுமல்லாமல், உலகளாவிய மாற்றங்களின் எதிர்விளைவுகளைத் தடுக்கவும் உதவுகிறது. நம்மை எதிர்ப்படும் பிரச்னைகளின் சிக்கலான தன்மையைப் பார்க்கும்போது, உறுதியான அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் நம்பத்தக்க முன்னறிவிக்கும் முறைகளின் அடிப்படையில் மட்டுமே அர்த்தமுள்ள அரசியல் தீர்மானங்களை எடுப்பது சாத்தியமாகும். இதுவே அதிக செலவை உட்படுத்தும் அல்லது விரும்பத்தகாத மற்றும் அழிவுக்குரிய வளர்ச்சிகளைத் தவிர்ப்பதற்கான ஒரே வழியாகத் தோன்றுகிறது. இந்தத் தகவல்களை அளிப்பது இன்று அறிவியல் சமுதாயத்திற்கு மிகப் பெரிய சவாலை அளிக்கிறது.”
அறிவியல் இதற்குமுன் சமாளிக்கமுடியாத சவால்களை எதிர்ப்பட்டு, ஓரளவாவது அவற்றைச் சமாளித்திருக்கிறது. இருப்பினும், நெருங்கி வரும் 21-ம் நூற்றாண்டுக்கு முன்னிருக்கும் தன்னிகரில்லா சவால்களை அறிவியல் சமாளிக்கமுடியுமா என்று கேட்பது தவறாகாது. நாம் நம்பிக்கை கொள்ள ஆதாரம் இருக்கிறதா?
இந்த முக்கியமான விஷயங்களின்பேரிலான கலந்தாலோசிப்பை அறிவிப்பதில் விழித்தெழு! மகிழ்ச்சியடைகிறது. இது இவ்விதழில் தொடங்கும் தொடர்கட்டுரைகளில் கொடுக்கப்படவிருக்கிறது. பகுதி 1 தொடர்கிறது.
[பக்கம் 4-ன் படங்கள்]
தூய்மைக்கேடு, நோய்கள், மக்கள் நெருக்கடி போன்றவற்றைக்குறித்து அறிவியல் என்ன செய்யக்கூடும்?