உங்களுடைய நண்பர்களை மகிழ்விக்க நீங்கள் விரும்புகிறீர்களா?
அது மாலை வேளையாயிருந்தது. ஒரு தோழமைக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. இசையாலும் சிறிய ஒரு வேடிக்கை நிகழ்ச்சியாலும் இரண்டு இளம் ஆண்கள் மகிழ்விக்கப்போகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டபோது ஆஜராயிருந்த அனைவரும் சந்தோஷமடைந்தனர்.
அந்த இருவரும் நிகழ்ச்சிகளைப் பலமுறை வெற்றிகரமாக நடத்தியிருக்கின்றனர். எனவே ஓர் உற்சாகமான பிரதிபலிப்பை எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களைக் குழம்பச் செய்யுமளவுக்கு, அசிங்கமான பார்வையும், அமைதியும், இறுதியாக, தயக்கத்தோடுகூடிய கைதட்டலுமே அவர்கள் வழங்கியவற்றிற்குப் பிரதிபலிப்பாயிருந்தன. அவர்களுடைய நிகழ்ச்சி தோல்வியுற்றது! நடந்த தவறுதான் என்ன?
உங்களுக்கு ஒரு திறமையிருந்து அதை உங்களுடைய நண்பர்களோடு பகிர்ந்துகொள்ள விரும்பினால், இதைப்போன்று ஓர் அனுபவம் ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தினால் தயங்குகிறீர்களா? உண்மையிலேயே மகிழ்விக்கப்பட்டதாக மக்களை உணரவைப்பதன் ரகசியம் என்ன? அல்லது ஒருவேளை நிகழ்ச்சிகளை நீங்களே நடத்தும் எண்ணம் உங்களுக்கு ஒருபோதும் இல்லாமல் இருந்து, உங்கள் வீட்டில் நடக்கும் கூட்டங்களில் நிகழ்ச்சிகளை நடத்தும்படி மற்றவர்களைக் கேட்டிருக்கலாம். அப்படியானால், நிகழ்ச்சியின் அளிப்பை உங்களுடைய விருந்தினர் அனுபவித்துக் களிப்பார்கள் என்று நீங்கள் எவ்வாறு நிச்சயமாக இருக்கலாம்?
பின்வரும் ஆலோசனைகள் வீட்டில் நடத்தும் இன்னிசை பொழுதுபோக்கு நிகழ்ச்சியை மனதில் வைத்துக் கொடுக்கப்பட்டவை. எனினும், பெரும்பாலான இந்நியமங்கள் வேடிக்கை நிகழ்ச்சிகள், படக்காட்சி ஸ்லைடுகளைக் காண்பித்தல், கதைகள், அனுபவங்கள் போன்றவற்றை அளிக்கும் மற்ற வகை பொழுதுபோக்குகளுக்கும் பொருந்துபவையாக நீங்கள் காண்பீர்கள்.
சூழ்நிலையை உருவாக்குதல்
ஓர் இன்னிசை நிகழ்ச்சி அளிப்பை உட்படுத்தும் ஒரு கூட்டத்தை நீங்கள் திட்டமிடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளலாமே. பொழுதுபோக்கின் ஓர் ஊற்றுமூலமாயிருக்க நீங்களோ (அல்லது நிகழ்ச்சியை நடத்துபவரோ) அதிக இசை நுணுக்கம் உடையவராய் இருக்கவேண்டிய தேவையில்லை. உண்மையிலேயே, திறம்பட்ட சில இசைக் கலைஞர்கள் நன்கு மகிழ்விப்பவர்களாக இருப்பதில்லை. இது ஏனென்றால் மற்றவர்களை மகிழ்விப்பது, மக்கள் தாங்களாகவே அனுபவித்துக் களிக்க எவ்வாறு உதவுவது என்பதை அறிந்திருப்பதையும் உட்படுத்துகிறது. அனுபவித்துக் களிப்பதற்குத் தகுந்த ஒரு சூழ்நிலையை உருவாக்குவதில் அது தொடங்குகிறது. உதாரணமாக, எத்தனை விருந்தினரை நீங்கள் அழைப்பீர்கள்?
ஒரு பெரிய கூட்டத்தைவிட ஒரு சிறு தொகுதி மக்களைக் கொண்டிருந்தால் அதை வெற்றிகரமாக நடத்துகிறவர்களாயிருப்பீர்கள். ஒரு சிறு தொகுதி, பேசிக்கொண்டிருக்கவும் மற்றவர்களுடைய கூட்டுறவை அனுபவிக்கவும் ஒவ்வொரு நபருக்கும் வாய்ப்பளிக்கிறது. அதேபோல, அனுபவித்துக் களிக்கும் ஒரு சூழலை ஏற்படுத்துவதற்கு உதவ உணவோ, சிற்றுண்டியோ அளிப்பதைப்பற்றி சிந்தியுங்கள். சிற்றுண்டி மட்டும் கொடுக்கப்போகிறீர்களென்றால், விருந்தினர் அதற்கதிகம் எதிர்பார்த்து வராதபடி அதைப்பற்றி அவர்கள் அறிந்திருக்கும்படி செய்யுங்கள்.
உங்களுடைய இன்னிசை நிகழ்ச்சியை எப்போது அளிக்க வேண்டும் என்று பகுத்துணரவேண்டும். அநேகர் தன்விருப்பார்வமுடையோராய் வழிநடத்துதலின்றி உண்பதிலும் உரையாடுவதிலும் மூழ்கிவிடுகின்றனர். உங்களுடைய விருந்தினரும் அவ்வாறு செய்வார்களேயானால், திட்டமிட்டிருக்கும் நிகழ்ச்சியைத் தொடங்குவதற்கு முன் அவர்களுக்கு நேரத்தை அனுமதியுங்கள். தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட இரண்டு இளம் ஆண்கள் இதைச் செய்வதில்தான் அசட்டையாய் இருந்துவிட்டனர். மற்ற செயல்களெல்லாம் குறையத் தொடங்கும்வரை அவர்கள் காத்திருந்தால், கேட்பவர்களும் நன்கு ஏற்பவர்களாக இருப்பதை அவர்கள் கண்டிருந்திருப்பார்கள்.
உடன் சேர்ந்து பாடும் நிகழ்ச்சியைத் திட்டமிட்டிருப்பீர்களானால், கணப்படுப்பைச் சுற்றி உட்காருவது அல்லது தரையில் உட்காருவது போன்று எல்லாரையும் நெருங்கி வரச் செய்வதை நீங்கள் வசதியாகக் காணலாம். மனநிலையும் சூழ்நிலைகளும் சரியாக இருக்கும்போது மக்கள் நன்கு பாடுகின்றனர். விருந்தினர் உங்கள் அளிப்பை நன்கு அனுபவித்துக் களிப்பதை நிச்சயப்படுத்திக்கொள்வதில், சரியான சூழ்நிலைகளை உருவாக்குவது அதிகத்தைச் செய்யக்கூடும். மேலும் அது உங்களுடைய இன்னிசை நிகழ்ச்சியை மனமார ஏற்றுக்கொள்ளும்படியான மிகச் சிறந்த மனநிலைக்கு அவர்களைக் கொண்டுவரும்.
உங்களுடைய விருந்தினருக்காக இசைக்கும் நேரம் இப்போது வந்துவிட்டது. உங்களுடைய நிகழ்ச்சியைக் கூடிவந்திருப்போரை நீங்கள் எவ்வாறு வெற்றிகரமாக மகிழ்விக்கலாம்?
கூடிவந்திருப்போரைக் கவர்ந்திழுத்தல்
அநேகர் ஒரு நல்ல நிகழ்ச்சியை அனுபவித்துக் களிக்கின்றனர். ஏன், ஒரு சமீபத்திய வருடத்தில் மட்டும், பிராட்வே காட்சிகளுக்கு (Broadway shows) 81,42,000 நுழைவுச் சீட்டுகள் விற்கப்பட்டன. இவற்றின் மதிப்பு 25 கோடியே 34 லட்சம் டாலர்களாகும்! நீங்கள் நடத்தும் நிகழ்ச்சி, கட்டணமில்லாத உங்களுடைய விருப்பவேலையாக இருக்குமானால், நீங்கள் அளிக்கும் பொழுதுபோக்கைத் தேடிக்கொண்டிராத கூடிவந்திருப்போரின் ஆர்வத்தைக் கவரும் சவாலை எதிர்ப்படுவீர்கள். அதற்குப் பரிகாரம்? கூடிவந்திருப்போரோடுள்ள தொடர்புடன் போதுமான தனித்திறமையைச் சேர்த்துக்கொள்ளுங்கள். கீழே சில ஆலோசனைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன:
நன்கு-கற்றுக்கொண்ட பொருளை உபயோகியுங்கள். கித்தார் இசைக்கருவி பயிற்றுநர் ஃபிரடரிக் நோட் எச்சரிக்கிறார்: “அநேகமாக வேறு எதையோ நினைத்துக்கொண்டே இசைக்குமளவுக்கு அந்த இசைத்தொகுப்பை நீங்கள் மிகவும் நன்றாக மனப்பாடம் செய்துவைத்திருக்கவேண்டிய அவசியம் இருக்கிறது.” எனவே புதிதாக கற்றுக்கொண்ட இசைத்தொகுப்புகளை எதிர்காலத்தில் உபயோகிப்பதற்காக வைத்திருப்பது விவேகமாய் இருக்கும். திரு. நோட் குறிப்பிடுகிறார்: “மனதில் ஆழமாக பதியத்தக்க ஓர் இசைத்தொகுப்பை அசிங்கமாக இசைத்துக் கொலைசெய்வதைவிட, எளிய இசைத்தொகுப்பொன்றை நன்கு இசைப்பது மிகவும் நல்லது.”
கூடிவந்திருப்போரையும் ஈடுபடுத்துங்கள். பல வருட வாழ்க்கைப்பணி அனுபவமுள்ள ஓர் இசைக் கலைஞர், கூடிவந்திருப்போரிடம் பாட்டுத்தாள்களைக் கொடுத்துவிட்டுச் சேர்ந்து பாடும்படி அவர்களை அழைப்பேன் என்று சொல்வதன்மூலம், கூடிவந்திருப்போர் ஈடுபடுவதன் மதிப்பை அழுத்திக்காட்டினார். கூடிவந்திருப்போரை உங்கள் அளிப்பின் ஒரு பாகமாக ஆக்கிக்கொள்வது அவர்களின் ஆர்வத்தோடுகூடிய ஆதரவைக் காத்துக்கொள்ள உதவும்.
பல்சுவையைக் குறியாக வையுங்கள். எல்லாவற்றையும் அச்சத்துடனும் மென்மையாகவும் இசைப்பது சிலரின் பொதுவான இயல்பாக இருக்கிறது. இருப்பினும், ஃபிரடரிக் நோட் இவ்வாறு பரிந்துரைக்கிறார்: “ஒவ்வொரு இசைத்தொகுப்பிலும் எப்பொழுதும் உரத்த மற்றும் மென்மையாக சப்தங்களை உண்டாக்க முயற்சி செய்யுங்கள்; உதாரணமாக, பாட்டின் ஒரு பகுதி திரும்பத் திரும்ப இசைக்கப்படும்போது, முதல் கூற்றைச் சப்தமாகவும் மீண்டும் மீண்டும் பாடுவதற்கான பகுதியை மென்மையாகவும் இசைப்பது மிக அடிக்கடி சிறந்ததாக இருக்கும். இது பெரும்பாலும் ஓர் எதிரொலியின் விளைவைக் கொடுக்கிறது. . . . இசைத்தலில் பாதி திருப்தி இசையை வெறும் சுரத்திலிருந்து வித்தியாசப்படுத்திக்காட்டும் இவ்வகையான மாற்றத்தில் கிடைக்கிறது.”
நீங்களும் அனுபவித்துக் களியுங்கள். நீங்கள் உயிரோட்டமில்லாமல், பயத்தோடு அல்லது தன்னுணர்வுள்ளவராகத் தோன்றினால் உங்களுடைய விருந்தினர்கள் தளர்ந்த மனநிலையில் இருக்கமாட்டார்கள். மேலும் நன்கறியப்பட்ட கலைஞர்களை உணர்வுடன் பின்பற்றினாலும் அவர்கள் மகிழப்போவது கிடையாது. அனைத்துக் கண்களும் உங்களைக் கவனித்துக்கொண்டிருக்கும்போது தளர்ந்த மனநிலையோடு இருப்பது கடினம்தான். ஆனால் தளர்ந்த மனநிலையிலும் ஆர்வத்துடனும் இருப்பதற்கும், நீங்கள் நீங்களாகவே இருப்பதற்கும், நீங்கள் எதைச் செய்கிறீர்களோ அதை அனுபவித்துக் களிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள். அப்படியிருந்தால் மட்டுமே கவனிப்பவர்கள் தளர்ந்த மனநிலையில் இருந்து உங்களுடைய பொழுதுபோக்கை அனுபவித்துக் களிப்பார்கள்.
அதைச் சுருக்கமானதாக வையுங்கள்! நன்கு மகிழ்விப்பவர் நேயர்கள் கேட்பதைவிட ஒரு பாட்டு அதிகமாக அல்ல ஆனால் குறைவாகவே பாடுவார். பகல் நேர அறையின் முறைப்படி அமையாத ஒரு பின்னணியில், 20 அல்லது 30 நிமிடங்களுக்குப் பிறகு மக்கள் சற்று அமைதியற்று உணர தொடங்கலாம். உங்களுடைய அளிப்பு முடிவடையும்போது, உங்களுடைய விருந்தினர் மீண்டும் தங்கள் மனம்போல காரியங்களைச் செய்யும்படி விட்டுவிடுங்கள். நிகழ்ச்சி இப்போது முடிந்துவிட்டது. ஆனால் அவர்கள் அதை இதமாகத் தொடர்ந்து ஞாபகப்படுத்திப் பார்க்கின்றனர். காரணம், இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது என்று அவர்கள் உணரும் நிலையில் அவர்களை விட்டதாகும்.
பயத்தைக் கையாளுதல்
அனுபவமுள்ளவர்கள்கூட மேடை ஏறும் பயத்தோடு போராடுகின்றனர். எனினும், அதை அடக்கக் கற்றுக்கொள்கின்றனர், மற்றும் பயமின்றி இருப்பதைப் போல தோற்றத்தையாவது கொடுக்கின்றனர். இதை நீங்களும் எப்படி செய்யலாம்?
ஒரு வழி, தயார் செய்யுங்கள்! ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான சொற்பொழிவுகளை மதிப்பிட்ட டேல் கார்னிஜி உறுதிப்படுத்தினார்: “தயார் செய்த பேச்சாளர் மட்டுமே நம்பிக்கையாய் இருக்கத் தகுந்தவராவர்.” மனமகிழ்விப்பவர்களுடைய விஷயத்திலும் நிச்சயமாக அதுவே உண்மையாக இருக்கிறது. முன்கூட்டியே பயிற்சி செய்வதும் காட்சி சமயத்துக்குச் சற்றுமுன் செய்யப்படும் ஊக்கப் பயிற்சிகளும் (warm-ups) நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தமுடியும். நிகழ்ச்சியை நடத்தும்போது உங்கள் பொருளோடு ஒன்றியிருங்கள். நீங்கள் இசைக்கக்கூடிய ஒவ்வொன்றையும் சிந்தித்து உணருங்கள். நியூ இங்கிலாந்து இசைக் காப்பகத்தின் ஃப்ரேங்க் பாட்டிஸ்டி இவ்வாறு ஆலோசனை கூறுகிறார்: “அந்த நபர் செய்யவேண்டிய ஒரு காரியமானது, தான் என்ன செய்கிறாரோ அதில் தன் கவனத்தை ஒருமுகப்படுத்தி, யாரோ ஒருவர் அதைப்பற்றி என்ன நினைக்கிறார் என்று கவலையேபடாதிருப்பதாகும். உங்களை அத்தகைய கவனத்திற்குக் கொண்டுவர முடியுமானால் உங்களை உண்மையிலேயே பயப்படுத்த முடியாது.”
நீங்கள் ஒரு தப்பைச் செய்கிறீர்களென்றால் எரிச்சலடைவதன் மூலம் கூடிவந்திருப்போரிடம் அதைக் காட்டிக்கொள்ளாதீர்கள். அந்தத் தப்பை ஒருசிலரே கவனித்திருப்பர், மற்றவர்கள் ஒருவேளை அதைப் பொருட்படுத்தமாட்டார்கள். அவர்கள் அடுத்தது என்ன என்பதிலேயே அக்கறையாயிருப்பார்கள். அந்தத் தப்பு ஒரு பொருட்டல்ல எனக் கருதி நீங்கள் நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருப்பீர்களானால், அவர்களும் அதை அவ்வாறே கருதுவர்.
சிருஷ்டிகரைக் கனப்படுத்தும் திறமை
இசை இசைக்கும்படி நண்பர்கள் அவ்வப்போது கேட்பார்களானால், உங்களுக்குப் போதிய திறமையில்லை என்று ஒருவேளை உணர்ந்து உடனடியாக மறுப்புத் தெரிவித்துவிடாதீர்கள். அவர்கள் பரிபூரணத்தை எதிர்பார்த்திருந்தால், அதற்குப் பதிலாக பதிவுசெய்யப்பட்ட இசையைக் கேட்பதைத் தெரிந்தெடுத்திருக்கமாட்டார்களா? அனுபவித்துக் களிக்கத்தக்க வீட்டில் நடத்தப்படும் தனது சிறு கூட்டங்களுக்காக தனது நண்பர்கள் மத்தியில் அறியப்பட்ட ஒரு பெண்மணி கூறினாள்: “ஒரு விருந்தாளி இசையார்வம் உடையவராக இருந்து, நிகழ்ச்சியில் உள்ள அனைவரையும் மகிழ்வித்து, உட்படுத்துவதற்குத் தயாராக வருவாரானால் அது எவ்வளவு ஆச்சரியமானதாக இருக்கும்!”
ஆம், உயிரூட்டமுள்ள வீட்டுப் பொழுதுபோக்குகளுக்கே உரித்தான கிளர்ச்சியையும் கேளிக்கையையும் அநேகர் பாராட்டுகின்றனர். உங்களுடைய நண்பர்கள் முழுமையான பொழுதுபோக்கைத் தேடிக்கொண்டிருக்கலாம் என்பதையுங்கூட மனதில் வையுங்கள். ஏனென்றால் பொழுதுபோக்கை ஒரு வாழ்க்கைப்பணியாக்கிவிட்டிருக்கும் உலகில் அதைக் கண்டடைவது மிகக் கடினமாகிக்கொண்டே வருகிறது. எனவே நீங்கள் மற்றவர்களை மகிழ்விக்கும் திறமைப் படைத்தவரானால், அதை ‘நன்மையான எந்த ஈவையும், பரிபூரணமான எந்த வரத்தையும்’ கொடுப்பவராகிய, மகத்துவமான சிருஷ்டிகரைக் கனம் பண்ண உபயோகிப்பீர்களாக.—யாக்கோபு 1:17. (g93 4/22)
[பக்கம் 15-ன் பெட்டி]
கூடுதலான துணைக் குறிப்புகள்
பல வகைகளைக் கொண்டிருங்கள். உங்களுக்குப் பல வித்தியாசமான பாணிகளில் இசைக்கமுடிந்தால், ஒவ்வொரு வகையிலும் ஒரு சில இசைத்தொகுப்புகளே இசைக்கமுடிந்தாலும் சரி, கூடிவந்திருப்போரின் விருப்பங்களையும் வேண்டுகோள்களையும் திருப்திப்படுத்தும் வாய்ப்பைக் கொண்டிருக்கிறீர்கள்.
உங்களுடைய பொருளைக் கவர்ச்சிகரமான முறையில் வரிசைப்படுத்துங்கள். வழக்கமாகவே, சிறிய மற்றும் எளிதில் அடையாளங் கண்டுகொள்ளக்கூடிய இசைத்தொகுப்புகளில் தொடங்கி முடிப்பது மிகச் சிறந்ததாக இருக்கிறது. நீண்ட மற்றும் இசைநுணுக்கத்தைத் தேவைப்படுத்தும் இசைத்தொகுப்புகள் ஏதேனும் இசைக்கப்படுமானால், அவற்றை நிகழ்ச்சியின் இடையில் வைப்பது சாலச் சிறந்தது.
கூடிவந்திருப்போருக்கு நன்றி செலுத்துங்கள். உற்றுப்பார்ப்பது அவர்களைச் சங்கோஜப்படுத்தக்கூடும். நீங்கள் நிச்சயமாக இசைத்தொகுப்புகளுக்கிடையே கூடிவந்திருப்போரைப் பார்த்துப் பேசலாம்.
நிகழ்ச்சி நடந்துகொண்டேயிருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அவ்வப்போது அறிமுகக் குறிப்புகளைச் சொல்வது (உங்களையும் உட்பட) அனைவரும் தளர்ந்த மனநிலையில் இருக்க உதவும். ஆனால் அதிகம் பேசிக்கொண்டிருக்கக்கூடாது. அளவுக்குமீறி மீண்டும் மீண்டும் சுருதியேற்றுவதன் மூலம் ஏற்படும் நீண்ட இடைவெளிகளையும் தவிருங்கள். கூடிவந்திருப்போர் அடிக்கடி ஏற்படும் தாமதங்களால் எரிச்சலூட்டப்படுவதைவிட ஒலியில் ஏற்படும் சிறிய ஏற்றத்தாழ்வு பிரச்னையைக் கவனிப்பதற்கு அதிக வாய்ப்பு இல்லை.