மென்மையான சிறகுகளில் மரணம்
தலைப்புச் செய்தியில் இடம் பெறக்கூடிய ஒரு யுத்தம் அல்ல அது; எனினும் அது எண்ணிலடங்கா லட்சக்கணக்கான மனித உயிர்களைக் கொள்ளைகொண்டிருக்கிறது. அது வெடிகுண்டுகளையும், துப்பாக்கிக்குண்டுகளையும் கொண்டு நடத்தப்படும் ஒரு யுத்தமும் அல்ல; இருப்பினும் அது விளைவிக்கும் துயரத்தையும், இழக்கப்படும் உயிர்களையும் எண்ணும்போது, அது அத்தகைய யுத்தங்களோடு போட்டியிடுகிறது அல்லது அத்தகைய யுத்தங்களையும் விஞ்சிவிடுகிறது. இந்த யுத்தத்தில், மரணம் வெடிகுண்டுகளைச் சுமந்துவரும் சரக்குப் பெட்டிகளில் அல்ல, ஆனால் ஒரு பெண் கொசுவின் மென்மையான சிறகுகளில் வருகிறது.
நைஜீரியாவிலுள்ள விழித்தெழு! நிருபர்
அது இரவுவேளை; வீட்டார் அயர்ந்து உறங்குகின்றனர். படுக்கையறைக்கு உள்ளே காற்றில் மெல்ல பறந்து வருகிறது ஒரு கொசு. அதன் சிறகுகள் நொடிக்கு 200 முதல் 500 தடவைகள் வரை அடிக்கின்றன. அவள் மனித இரத்தத்திற்காக பசிகொண்டிருக்கிறாள். ஒரு பையனுடைய கையின்மேல் மெல்ல இறங்குகிறாள். அவளுடைய எடை 1,000 கிராமில் 3 பங்கு மட்டுமே இருப்பதனால், அந்தப் பையன் அசையவில்லை. பின்னர் அவள் தனது வாய்பாகங்களில் முள்போன்ற முனையிலுள்ள ரம்பப் பற்களைக்கொண்ட ஊசிபோன்ற உறுப்பை வெளிநீட்டுகிறாள். இதன் உதவியால் அந்தப் பையனின் தோலில் ஓர் இரத்த தந்துகியின் மேல் குத்துகிறாள். அவள் தலையிலுள்ள இரண்டு பம்புகள் அவனுடைய இரத்தத்தை உறிஞ்சுகின்றன. அதேசமயம், கொசுவின் உமிழ்நீர்ச் சுரப்பிகளிலிருந்து மலேரியா ஒட்டுண்ணி அந்தப் பையனின் இரத்த ஓட்டத்தில் சென்று கலக்கிறது. செயல்முறை விரைவில் முடிவடைகிறது, அந்தப் பையனும் எதையும் உணரவில்லை. இரத்தத்தினால் தன்னுடைய உடலின் எடையைப் போல மூன்று மடங்குக்கு உப்பி, கொசு பறந்துசெல்கிறது. ஒருசில நாட்களுக்குள், அந்தப் பையன் சாகக்கூடிய அளவுக்கு நோய்வாய்ப்பட்டிருக்கிறான். அவனுக்கு மலேரியா வந்துவிட்டது.
கோடிக்கணக்கான முறைகள் மீண்டும் மீண்டும் நடந்திருக்கிற ஒரு காட்சியாகும் இது. இதன் விளைவு பேரளவு துயரமும் மரணமுமாக இருந்துவந்திருக்கிறது. சந்தேகமின்றி மலேரியா மனிதவர்க்கத்தின் ஒரு கொடூரமான, இரக்கமற்ற எதிரியாகும்.
நோயாளி எதிரியைத் தேடுதல்
மலேரியாவுக்கெதிரான போராட்டத்தில் அடிப்படையான கண்டுபிடிப்புகளில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது, ஐரோப்பாவின் மாபுகழ்பெற்ற விஞ்ஞானிகளால் அல்ல, ஆனால் இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த ஒரு பிரிட்டிஷ் இராணுவ மருத்துவராலேயாகும். இதற்குமுன் இரண்டாயிரம் வருடங்களாக நிலவி வந்த எண்ணத்துக்கு இசைவாகவே, 19-ம் நூற்றாண்டு விஞ்ஞானிகளும், மருத்துவர்களும், சதுப்புநில அசுத்தக்காற்றைச் சுவாசிப்பதனால்தான் மக்கள் இந்த நோயைப் பெறுகின்றனர் என்று ஊகித்தனர்.a எதிர்மாறாக, டாக்டர் ரானல்ட் ராஸ், இந்த நோய் ஒரு நபரிடமிருந்து அடுத்த நபருக்குக் கொசுக்கள் மூலம் கடத்தப்படுவதாகக் கருதினார். மலேரியா நோய், மனித இரத்த ஓட்டத்தில் உள்ள ஒட்டுண்ணிகளை உட்படுத்தியிருந்தது என்று அறிந்த பிறகுங்கூட, ஆராய்ச்சியாளர்கள் சதுப்புநில நீரிலிருந்தும், காற்றிலிருந்தும் வழிகாட்டும் குறிப்புகளுக்காகத் தொடர்ந்து தேடிக்கொண்டிருந்தனர். இதற்கிடையில், ராஸ் கொசுக்களின் வயிறுகளை ஆராய்ந்தார்.
அவர் பயன்படுத்தவேண்டியிருந்த பழங்கால ஆய்வுக்கூட சாதனங்களைக் கவனிக்கையில், கொசுக்களின் வயிறுகளினுள் ஆராய்ந்து பார்ப்பது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை. அவர் வேலை செய்துகொண்டிருக்கும்போது, கொசுக்கள் மற்றும் ஒலுங்குகளின் (gnats) மேகங்கள் அவரைச் சுற்றி மொய்த்துக்கொண்டிருந்தன. ராஸ் கூறுகிறபடி, அவை “தங்களுடைய நண்பர்களின் மரணத்திற்காக” பழிவாங்க தீர்மானித்திருக்கின்றன.
இறுதியில், 1897, ஆகஸ்ட் 16-ம் தேதி அனாபிலிஸ் கொசுவின் வயிற்றுச் சுவர்களில், ஒரே இரவில் அளவில் பெரிதாக வளர்ந்த உருண்டை வடிவ உயிரினங்களை, ராஸ் கண்டுபிடித்தார். மலேரியா ஒட்டுண்ணிகள்!
பெருமகிழ்ச்சியால் நிரப்பப்பட்டு, “பத்தாயிரக்கணக்கான மனிதர்களை” காப்பாற்றும் அந்த இரகசியத்தைத் திறந்துவிட்டதாக ராஸ் தன்னுடைய குறிப்புப் புத்தகத்தில் எழுதினார். கொரிந்தியர் என்ற பைபிள் புத்தகத்திலிருந்து ஒரு வசனத்தையும் அவர் எழுதினார்: “மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயமெங்கே?”—1 கொரிந்தியர் 15:55-ஐ ஒப்பிடவும்.
மலேரியாவின் பாழாக்குதல்கள்
மலேரியாவுக்கெதிரான போரில் ராஸின் கண்டுபிடிப்பு ஒரு மைல் கல்லாக இருந்தது. அது அந்த நோய்க்கெதிராகவும் அதைப் பரப்புகிற பூச்சிகளுக்கெதிராகவும் உள்ள மனிதனின் முதல் பெரிய தாக்குதலுக்கான வழியைத் திறந்துவைக்க உதவிய ஒன்றாகும்.
வரலாற்றின் பெரும்பகுதி முழுவதும், மலேரியாவினால் மனிதவர்க்கத்திற்கு ஏற்பட்ட இழப்புப் பேரளவானதாகவும், நீடித்ததாகவும் இருந்துவந்திருக்கிறது. கிறிஸ்து பூமியில் நடந்ததற்கு 1,500 வருடங்களுக்கு முன்பே, எகிப்தியரின் புனித எழுத்துக்களும், நாணற்புல் எழுத்துக்களும் மலேரியாவின் படுகொலைக்குச் சான்றளிக்கின்றன. அது பழங்கால கிரீஸின் தாழ்நில நகரங்களைப் பாழாக்கி, மகா அலெக்ஸாந்தர் தன் புகழின் உச்சியிலிருக்கும்போது அவரைக் கொன்றது. அது ரோம நகரங்களின் பெரும்பகுதியை அழித்து, செல்வந்தர்களை மேட்டுநிலங்களுக்குத் துரத்தியது. சிலுவைப் போர்களிலும், அமெரிக்காவின் உள்ளூர் போரிலும் இரண்டு உலக யுத்தங்களிலும், அது மற்ற அநேக பெரிய யுத்தங்கள் கொன்றதைவிட அதிக ஆட்களைக் கொன்றது.
ஆப்பிரிக்காவில் மலேரியா மேற்கு ஆப்பிரிக்காவுக்கு “வெள்ளையரின் கல்லறை” என்ற பட்டப்பெயர் கிடைக்கச்செய்தது. உண்மையிலேயே, ஆப்பிரிக்காவைக் குடியேற்ற நாடாக்கிக்கொள்வதற்கான ஐரோப்பாவின் போராட்டத்திற்கு, இந்நோய் அவ்வளவு இடையூறு உண்டாக்கியது. இதன் காரணமாக மேற்கு ஆப்பிரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்று இந்தக் கொசுவை ஒரு தேசிய வீரன் என்று பறைசாற்றிற்று! மத்திய அமெரிக்காவில், பனாமா கால்வாய் கட்டுவதற்கான பிரான்சு நாட்டவரின் முயற்சிகளைத் தோற்கடிக்க மலேரியா உதவிற்று. தென்னமெரிக்காவில், மமோரி-மடீரா ரயில்பாதையை பிரேஸிலில் அமைக்கும்போது, மலேரியா, ஒவ்வொரு தண்டவாளப் படுகைக் கட்டைக்கும் ஒரு மனித உயிர் என்ற வீதத்தில் எடுத்துக்கொண்டதாகச் சொல்லப்பட்டது.
வெல்லுவதற்கான போராட்டம்
அறிந்து மலேரியாவுக்கெதிராக இல்லையென்றாலும், கொசுவுக்கெதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள், ஆயிரக்கணக்கான வருடங்களாக எடுத்துவரப்படுகின்றன. பொ.ச.மு. 16-ம் நூற்றாண்டில், பலனைட்ஸ் உவில்சோனியானா என்ற மரத்தின் எண்ணெயை எகிப்தியர் கொசுவிரட்டியாக உபயோகப்படுத்தியிருக்கின்றனர். ஓராயிரம் வருடங்களுக்குப் பின், பூச்சிகளைத் தடுப்பதற்கு எகிப்திய மீனவர்கள் இரவுநேரங்களில் தங்களுடைய வலைகளைத் தங்கள் படுக்கைகளைச் சுற்றி மூடி கட்டிக்கொண்டனர் என்று ஹெரோடோடஸ் எழுதினார். பதினேழு நூற்றாண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் செல்வந்தர்கள் இரவுநேரத்தில் மூடிக்கொள்ளக்கூடிய பாதுகாப்பான மூடுதிரைகளைக் கொண்ட படுக்கைகளில் உறங்கினர் என்று மார்க்கோ போலோ அறிக்கை செய்தார்.
மற்ற இடங்களில், உண்மையிலேயே மதிப்புவாய்ந்த இயற்கை மருந்துகளையும் மனிதர்கள் கண்டுபிடித்தனர். இரண்டாயிரம் வருடங்களுக்குமுன்பிருந்தே, சீனாவில் சின்ஹாவ்சு என்றழைக்கப்படும் ஒரு செடியால், மலேரியாவுக்கு வெற்றிகரமாக சிகிச்சையளிக்கப்பட்டு வந்திருந்தது. இதே மூலிகை மருந்துதான் சமீப வருடங்களில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. தென்னமெரிக்காவில், பெரு இந்தியர்கள் சின்கோனா மரப்பட்டைகளை உபயோகித்தனர். பதினேழாம் நூற்றாண்டில், சின்கோனா ஐரோப்பாவுக்கு வந்தது. அதிலிருந்து, 1820-ல் இரண்டு பாரிஸ் நாட்டு மருந்தாளர்கள் க்வினைன் என்றழைக்கப்படும் ஒரு காரகத்தை (alkaloid) வடித்தெடுத்தனர்.
புதிய ஆயுதங்கள்
மலேரியாவைத் தடுப்பதில் மற்றும் குணப்படுத்துவதில் க்வினைனின் மதிப்பு மெதுவாகவே போற்றப்பட்டது. ஆனால் அதன் மதிப்பை உணர்ந்தவுடன், அதுவே ஒரு நூறு வருடங்களுக்குச் சிபாரிசு செய்யப்பட்ட மருந்தானது. பின்னர், இரண்டாம் உலக யுத்தத்தின் தொடக்கத்தில், ஜப்பானிய படைகள் தூர கிழக்குத் தேசங்களின் முக்கிய சின்கோனா தோட்டங்களைக் கைப்பற்றின. இதன் விளைவாக ஐக்கிய மாகாணங்களில் க்வினைனுக்கு ஏற்பட்ட கடும் பற்றாக்குறை, மலேரியாவை எதிர்க்கும் செயற்கை மருந்துகளைக் கண்டுபிடிக்க ஆழ்ந்த ஆராய்ச்சிசெய்யும்படி தூண்டியது. அதன் விளைவுதான் க்ளோரோக்வினைன். இது மிகவும் பாதுகாப்பான, மிகவும் பலனுள்ள, உண்டாக்க அதிக செலவு தேவைப்படாத ஒரு மருந்தாக இருந்தது.
க்ளோரோக்வினைன் மிக விரைவிலேயே மலேரியாவுக்கெதிரான ஒரு முக்கிய ஆயுதமானது. மேலும் 1940-களில் DDT என்ற பூச்சிக்கொல்லி அறிமுகம் செய்யப்பட்டது. இது கொசுக்களைக் கொல்லும் ஒரு பலம்வாய்ந்த மருந்தாகும். DDT டைக்ளோரோடைஃபினைல்ட்ரைக்ளோரோஈத்தேன் என்ற பயமுறுத்தும் இரசாயனப் பெயரைக் குறிப்பதாக இருந்தாலும், ஆங்கிலம் பேசும் அநேகர் இந்த எழுத்துக்களை “drop dead twice” (இருமுறை செத்து விழுதல்) என்ற வார்த்தைகளாலே ஞாபகம் வைக்கின்றனர். இது பொருத்தமான ஒரு ஞாபகம் வைக்கும் வழியாகவே இருக்கிறது. ஏனென்றால் DDT தெளிக்கப்படும்போது அது கொசுக்களை மட்டும் கொல்லுவது கிடையாது, ஆனால் பின்னர், தெளிக்கப்பட்ட சுவற்றில் இருக்கும் அதனுடைய எச்சமானது, பூச்சிகளையும் கொல்லுகிறது.b
தளராத எதிர்த்தாக்குதல்
இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து, விஞ்ஞானிகள் DDT, க்ளோரோக்வினைன் ஆகியவற்றின் துணைகொண்டு, மலேரியாவுக்கு எதிராகவும் கொசுக்களுக்கு எதிராகவும், உலகளாவிய ஓர் எதிர்த்தாக்குதலை ஒழுங்கமைத்தனர். அந்த யுத்தம் இருமுனைத் தாக்குதலைக் கொண்டிருந்தது—மனித உடலில் இருக்கும் ஒட்டுண்ணிகளைக் கொல்ல மருந்துகள் உபயோகிக்கப்படும், அதேசமயம் கொசுக்களை முற்றிலும் ஒழித்துக்கட்ட பூச்சிக்கொல்லிகள் பரவலாக எங்கும் தெளிக்கப்படும்.
அந்த நோக்கம் முழுவெற்றியடைந்தது. மலேரியா முற்றிலும் வேரோடு ஒழிக்கப்படவிருந்தது. இந்தத் தாக்குதலை முன்னின்று நடத்தியது புதிதாக நிறுவப்பட்ட உலகச் சுகாதார நிறுவனமாகும் (WHO). இது இந்த ஒழிப்புத் திட்டத்தைத் தனது முதன்மை நோக்கமாக ஆக்கிக்கொண்டது. இதன் தீர்மானம் பணத்தால் ஆதரிக்கப்பட்டது. உலகளாவிய ஒழிப்புத் திட்ட இயக்கத்தில், 1957-க்கும் 1967-க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், நாடுகள் 140 கோடி டாலர் செலவு செய்திருக்கின்றன. விரைவான விளைவுகள் கவனத்தைக் கவருவதாக இருந்தன. இந்த நோய் ஐரோப்பா, வட அமெரிக்கா, சோவியத் யூனியன், ஆஸ்திரேலியா, போன்ற நாடுகளிலும், தென்னமெரிக்காவில் சில நாடுகளிலும் முறியடிக்கப்பட்டது. மலேரியா போராட்டத்தில் அனுபவமிக்க, பேராசிரியர் L. J. ப்ரூஸ் ஷ்வாட் இவ்வாறு பிரதிபலித்தார்: “அமைதியான அந்தக் காலகட்டத்தின்போது, ஒழிப்பதைப்பற்றிய பொதுக்கருத்து உலகமுழுவதும் ஏற்படுத்திய பேரார்வத்தை, இன்று விவரிப்பது கடினமானதாக இருக்கும்.” மலேரியா ஊசலாடிக்கொண்டிருந்தது! “மலேரியா ஒழிப்பு நம்முடைய சக்திக்குள்ளேயே ஓர் உண்மையாகிவிட்டது,” என WHO பெருமை பாராட்டியது.
மலேரியா எதிர்த்தெழுகிறது
ஆனால் வெற்றி இன்னும் கிடைப்பதாக இல்லை. இந்த இரசாயன கடுந்தாக்குதலைத் தப்பிப்பிழைத்த கொசுக்களின் தலைமுறைகள், பூச்சிக்கொல்லிகளை எதிர்க்கும் சக்தியைப் பெற்றன. DDT இவற்றை முன்பு கொன்றதுபோல அவ்வளவு எளிதாக ஒருபோதும் கொல்லவில்லை. அதேபோல, மனிதனுக்குள் இருக்கும் மலேரியா ஒட்டுண்ணிகள் க்ளோரோக்வினைனை எதிர்க்கும் சக்தியைப் பெற்றன. இவையும் வேறு மற்ற பிரச்னைகளும், வெற்றி நிச்சயம் என்று தோன்றிய சில நாடுகளில், பழையநிலை பயங்கரமாகத் தலைதூக்குவதில் விளைவடைந்தன. உதாரணமாக, 1963-ல் மலேரியா முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதாகக் கருதப்பட்ட ஸ்ரீலங்கா, ஐந்தே வருடங்களுக்குப் பிறகு லட்சக்கணக்கானோரைத் தாக்கிய கொள்ளைநோயைக் கண்டது.
மலேரியா முறியடிக்கப்படமுடியாத ஓர் எதிரி என 1969-ல் பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்டது. “ஒழிப்பு” என்ற வார்த்தைக்குப்பதில் “கட்டுப்பாடு” என்ற வார்த்தை நடைமுறைக்கு வந்தது. “கட்டுப்பாடு” என்பதன் அர்த்தம் என்ன? WHO மலேரியாப் பிரிவின் தலைவர் டாக்டர் ப்ரையன் டோபர்ஸ்டைன் இவ்வாறு விவரிக்கிறார்: “இப்போது நமக்குச் செய்யமுடிவதெல்லாம் மரணங்களையும் துன்புறுத்தலையும் ஒரு நியாயமான எல்லையில் வைத்தலேயாகும்.”
மற்றொரு WHO அதிகாரி இவ்வாறு வருத்தம் தெரிவிக்கிறார்: “1950-களில் எடுக்கப்பட்ட மலேரியா ஒழிப்பு முயற்சிகளுக்குப் பிறகும், பூச்சிகளுக்கெதிரான DDT உபயோகத்திற்குப் பிறகும் சர்வதேச சமுதாயம் தளர்ந்துவிட்டது. ஏழ்மை, இணைப்பமைவுகள் (infrastructure) இன்மை, மருந்துகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்கு எதிரான எதிர்ப்புச் சக்தியின்மை போன்றவை அந்நோய் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கு வழிநடத்தியிருக்கின்றன. உண்மையிலேயே, நாம் அந்த நோயினால் வெல்லப்பட்டிருக்கிறோம்.”
மற்றொரு காரணம் என்னவென்றால், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் ஆராய்ச்சியில் பின்வாங்கிவிட்டன. ஒரு மலேரியா விஞ்ஞானி சொன்னார்: “பிரச்னை என்னவென்றால், அதற்கு முதலீடு அதிகம் தேவைப்படுகிறது, ஆனால் லாபமோ, உற்சாகமூட்டுதலோ ஒன்றும் கிடைப்பதில்லை.” ஆம், அநேக யுத்தங்களில் வெற்றி கண்டிருந்தாலும், மலேரியாவுக்கு எதிரான யுத்தம் இன்னும் ஓயவில்லை. எனினும் “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்”லாத, அண்மையிலுள்ள ஒரு காலத்தை பைபிள் சுட்டிக்காட்டுகிறது. (ஏசாயா 33:24) அதுவரை, வியாதியும் மரணமும் மென்மையான சிறகுகளில் வந்துகொண்டுதான் இருக்கும். (g93 5/8)
[அடிக்குறிப்புகள்]
a “மலேரியா” என்ற வார்த்தை மாலா (அசுத்த) ஆரியா (காற்று) போன்ற இத்தாலிய வார்த்தைகளிலிருந்து வந்தது.
b DDT சுற்றுச் சூழலுக்குக் கெடுதி விளைவிப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு, 45 தேசங்களில் கடுமையாகத் தடுக்கப்பட்டு அல்லது தடைசெய்யப்பட்டிருக்கிறது.
[பக்கம் 25-ன் பெட்டி]
கொசுவுக்கெதிராக மனிதன்
அது பெரும்பாலும் வெப்பமண்டலத்தில் நூறு நாடுகளுக்குமேல், அநேகமாக பாதி மனிதகுலத்தையே நேரடியாக அச்சுறுத்துகிறது. குறிப்பாக ஆப்பிரிக்கா அதன் ஓர் அரண்காப்பாகத் திகழ்கிறது.
வெப்பமண்டல பகுதிகளிலிருந்து போகும் விமானங்களில் தொற்றிச் சென்று, சர்வதேசிய விமானநிலையங்களுக்கு அருகில் வாழும் மக்களைத் தாக்குவதற்குக் கொசுக்கள் அறியப்பட்டிருக்கின்றன.
ஏற்படுத்தும் மரணங்கள். அது ஒவ்வொரு வருடமும் 27 கோடி மக்களைத் தாக்கி, 20 லட்சம் வரை கொல்லுகிறது. குறிப்பாக கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுக்கும் இது இரக்கமற்ற ஒன்றாக இருக்கிறது. சராசரியாக ஒவ்வொரு நிமிடமும் இரண்டு இளைஞரை இது கொல்லுகிறது.
இது வெப்பமண்டலப் பகுதிகளுக்குச் செல்லும் பிரயாணிகளைத் தாக்குகிறது. ஒவ்வொரு வருடமும் ஐரோப்பாவில் சுமார் 10,000 பேரும், வட அமெரிக்காவில் 1,000-க்கும் அதிகமான ஆட்களும் மலேரியாவைப் “பெற்றுக் கொண்டதாக” அறிக்கை செய்யப்படுகின்றனர்.
தந்திரங்கள். பெண் அனாபிலிஸ் கொசு மனிதர்களைப் பெரும்பாலும் இரவிலேயே தாக்குகிறது. மலேரியா இரத்தமேற்றுதல் மூலமும், அபூர்வமாக நோய்த் தொற்றப்பட்ட ஊசிகள் மூலமும் கடத்தப்படுகிறது.
மனிதவர்க்கம் சமீப வருடங்களில்தான் எதிர்த்துப் போராடுவதற்கான அறிவையும் வழிகளையும் பெற்றது. இந்தக் கொள்ளைநோயை வெல்ல முயற்சி செய்துகொண்டிருக்கும் 105 நாடுகளின் கூட்டுமுயற்சிகள் இருந்தபோதிலும், மனிதவர்க்கம் போராட்டத்தில் தோல்வியையே காண்கிறது.
[பக்கம் 26-ன் பெட்டி]
கொசுக்கடிக்கு எதிராக பாதுகாத்துக்கொள்ளுங்கள்
உங்கள் படுக்கையை வலையினால் மூடிக்கொண்டு உறங்குங்கள். பூச்சிக்கொல்லிகளில் முக்கிவைத்த வலைகள் மிகச் சிறந்தவையாகும்.
இரவு நேரங்களில் முடிந்தால் ஏர் கண்டிஷனரை உபயோகிப்பது நல்லது, அல்லது வலைகள் பொருத்தப்பட்ட சன்னல்கள் மற்றும் கதவுகளுள்ள அறைகளில் உறங்குங்கள். வலைகள் பொருத்தப்படவில்லையெனில் கதவுகளையும் சன்னல்களையும் அடைத்துவையுங்கள்.
சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, முழுக்கை, முழுக்கால் சட்டைகளை அணிவது சிபாரிசு செய்யப்படுகிறது. திண்ணிய வண்ணங்கள் (dark colours) கொசுக்களைக் கவருகின்றன.
உடைகளால் மறைக்கப்படாத உடற்பகுதிகளில் பூச்சி விரட்டிகளை (insect repellent) பூசுங்கள். டைஎதில்டொலுவமைட் (deet), அல்லது டைமெதில்ஃப்தலேட் போன்றவை அடங்கியுள்ள ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்.
கொசுக்கொல்லி தெளிப்பான்கள், பூச்சிக்கொல்லிகள், அல்லது கொசுவத்திகள் போன்றவற்றை உபயோகியுங்கள்.
[பக்கம் 27-ன் பெட்டி]
“‘மந்திர துப்பாக்கிக்குண்டுகள்’ இல்லை”
முழுவெற்றிக்கான வாய்ப்புத் தென்படவில்லையென்றாலும், மலேரியாவுக்கு எதிரான யுத்தம் தொடர்கிறது. காங்கோவின் பிரேஸவில்லாவில், அக்டோபர் 1991-ல் மலேரியாவைப்பற்றி நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், WHO பிரதிநிதிகள், நிலவியிருக்கும் “அழிவுக்குரிய மனநிலையிலிருந்து” விலகும்படி வற்புறுத்தி, மலேரியாவைக் கட்டுப்படுத்த ஒரு புதிய உலகளாவிய ஆதரவைத் திரட்டும்படி பரிந்துரை செய்தார். அத்தகைய முயற்சிகள் எவ்வளவு வெற்றிகரமானவையாக இருக்கும்?
“‘மந்திர துப்பாக்கிக்குண்டுகள்’ இல்லை. ஆகவே, பல்வேறு முனைகளிலிருந்தும் அதற்கெதிரே நாம் போரிடவேண்டும்,” என்று WHO பொது இயக்குநர், ஹிரோஷி நாகாஜிமா கூறினார். சமீப காலத்தில் அதிக பிரபலமான மூன்று போர்முனைகள் இங்குக் கொடுக்கப்படுகின்றன:
தடுப்பூசி மருந்துகள். மலேரியாவுக்கு எதிரான ஒரு தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் வருடக்கணக்கில் ஆராய்ச்சி செய்துகொண்டு இருந்திருக்கின்றனர். செய்தித்துறையும் அவ்வப்போது ஆராய்ச்சியின் “சாதனைகளை” அறிக்கை செய்கிறது. மட்டுக்குமீறிய நம்பிக்கையை ஒழிக்கும்வண்ணம், “அண்மையில் மலேரியாவுக்கு எதிரான தடுப்பூசி மருந்து கிடைக்கும் என்ற கனவு”க்கெதிராக WHO எச்சரிக்கிறது.
தடுப்பூசி மருந்து ஒன்றைக் கண்டுபிடிப்பதில் உள்ள பிரச்னைகளில் ஒன்று என்னவென்றால், மனிதனில் இருக்கும் மலேரியா ஒட்டுண்ணி, அதை அழிப்பதற்கான மனித உடலின் தடுப்பமைப்பின் முயற்சிகளிலிருந்து திறம்பட தப்பித்துக்கொள்வதில் குறிப்பிடத்தக்கவகையில் வெற்றிகரமாக இருந்துவந்திருக்கிறது. பலவருடங்களாக மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டிருந்தாலும், மக்கள் இந்நோய்க்குக் குறைந்தளவு தடுப்பாற்றலையே வளர்க்கின்றனர். அட்லான்டாவின் ஐ.மா. நோய்த் தடுப்பு மையங்களின் கொள்ளைநோய் நிபுணர், டாக்டர் ஹான்ஸ் லோபெல் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “வெறுமனே ஏதோ சில தாக்குதல்களுக்குப் பிறகு நீங்கள் தடுப்பாற்றலை வளர்ப்பதில்லை. எனவே [ஒரு தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடிப்பதில்] நீங்கள் இயற்கையை முன்னேற்றுவிக்க முயற்சி செய்கிறீர்கள்.”
மருந்துகள். தற்போது உபயோகத்திலிருக்கும் மருந்துகளை எதிர்க்கும் சக்தி மலேரியா ஒட்டுண்ணிகளுக்கு அதிகரிக்க அதிகரிக்க, WHO ஆர்ட்டீதர் என்னும் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துக்கொண்டுவருகிறது. இது சின்ஹாவ்சு* என்ற சீன மூலிகை சாற்றிலிருந்து பெறப்படுகிறது. சின்ஹாவ்சு இயற்கை மருந்து வகைகளில் முற்றிலும் புதிதான ஒன்றாக இருக்கலாம் என்றும், உலக சமுதாயத்திற்குப் பத்து வருடங்களுக்குள் கிடைக்கலாம் என்றும் WHO நம்புகிறது.
படுக்கை வலைகள். இரண்டாயிரம் வருடங்களாக கொசுக்களுக்கு எதிராக உபயோகத்தில் இருந்துவரும் இந்தப் பாதுகாப்பு, இன்றும் பலனுள்ளதாக இருக்கிறது. மலேரியா கொசுக்கள் வழக்கமாகவே இரவு நேரங்களில் தாக்குகின்றன. ஒரு வலை அவற்றைத் தடுக்கிறது. பெர்மெத்ரின் போன்ற பூச்சிக்கொல்லிகளில் முக்கி வைக்கப்பட்டிருந்த வலைகள் மிக பலனுள்ளவையாய் இருக்கின்றன. முக்கி வைக்கப்பட்ட வலைகள் அறிமுகப்படுத்தப்பட்ட கிராமங்களில், மலேரியா மரணம் 60 சதவீதம் குறைந்துள்ளது என்று ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் காண்பிக்கின்றன.
* சின்ஹாவ்சு என்பது ஆர்டிமிஸியா அன்னுவா என்ற காஞ்சிரை வகைப்பூண்டுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒன்றாகும்.
[பக்கம் 28-ன் பெட்டி/படம்]
வெப்பமண்டலங்களுக்குப் பயணம் செய்கிறீர்களா?
மலேரியா ஓர் அச்சுறுத்தலாக இருந்துவரும் பகுதிக்குப் பயணம் செய்ய திட்டமிடுவீர்களேயானால், கீழ்க்கண்டவற்றைக் கடைப்பிடியுங்கள்:
1. உங்கள் மருத்துவரிடமிருந்து அல்லது ஒரு தடுப்பூசி மையத்திடமிருந்து ஆலோசனை கேளுங்கள்.
2. உங்களுக்குக் கொடுக்கப்பட்ட அறிவுரைகளைச் சரிவர பின்பற்றுங்கள். மலேரியா எதிர்ப்பு மருந்தை உட்கொள்கிறீர்களென்றால், மலேரியா இருக்கும் பகுதியை விட்டுச்சென்ற பிறகும் நான்கு வாரங்களுக்குத் தொடர்ந்து உட்கொள்ளுங்கள்.
3. கொசுக்கடிக்கெதிராக உங்களையே காத்துக்கொள்ளுங்கள்.
4. மலேரியா நோயின் அறிகுறிகளை அறிந்துகொள்ளுங்கள்: காய்ச்சல், தலைவலி, தசைகள் வலி, வாந்தி, மற்றும்⁄அல்லது பேதி போன்றவை. நீங்கள் மலேரியா எதிர்ப்பு மருந்தை உட்கொண்டிருந்தாலும், மலேரியா உள்ள பகுதியை விட்டு வந்தபின்னர், ஒரு வருடம் கழித்துங்கூட மலேரியா வெளிப்படலாம் என்பதை மனதில் வையுங்கள்.
5. உங்களுக்கு அந்த அறிகுறிகள் இருந்தால் ஒரு மருத்துவரைச் சென்று பாருங்கள். மலேரியா விரைவில் மோசமடைந்து, முதல் அறிகுறி தோன்றிய 48 மணிக்குக் குறைவான நேரத்திற்குள் மரணத்தை உண்டாக்கக்கூடும்.
ஆதாரம்: உலகச் சுகாதார நிறுவனம்.