மலேரியா—இதற்கு எதிரான போராட்டத்தில் ஆரம்பகால தீர்வுக்கே திரும்புதல்
உள்நாட்டுப் போர், குற்றச்செயல், வேலையின்மை, இன்னும் மற்ற நெருக்கடிகளில் இந்த உலகத்தின் கவனம் ஊன்றவைக்கப்பட்டிருக்க, மலேரியாவினால் ஏற்படும் மரணங்கள் முக்கிய செய்திகளில் இடம்பெறுவதேயில்லை. என்றபோதிலும், உலக சுகாதார நிறுவனத்தின்படி (WHO), உலக ஜனத்தொகையில் ஏறக்குறைய பாதிபேர் இன்று மலேரியா ஏற்படும் அபாயத்தில் இருக்கின்றனர். மேலும், ஒவ்வொரு வருடமும் 30 கோடி முதல் 50 கோடி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்; இதனால் மலேரியா “வெப்பமண்டல வியாதிகளிலேயே அதிகம் பரவியிருக்கும் ஒன்றாகவும், அதிகளவில் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகவும்” இருக்கிறது. அது எவ்வளவு வினைமையானது?
ஒவ்வொரு 20 விநாடியும் ஒருவர் மலேரியாவால் மரிக்கிறார். அந்த எண்ணிக்கையானது ஒரு வருடத்திற்கு 15 லட்சத்திற்கும் அதிகமான மரணங்களில் விளைவடைகிறது. அது ஆப்பிரிக்க தேசமான போட்ஸ்வானாவின் முழு ஜனத்தொகைக்கும் ஈடானது. மலேரியா மரணங்களில் பத்தில் ஒன்பது, வெப்பமண்டல ஆப்பிரிக்காவில் நிகழ்கிறது. அங்கு பலி ஆகிறவர்களில் பெரும்பான்மையர் இளம் பிள்ளைகளே. அமெரிக்காக்களில் அமேசான் பகுதிதான் மலேரியாவால் அதிகமாக பாதிக்கப்படுகிறது என்று WHO பதிவுசெய்திருக்கிறது. காடுகளை அழித்தல் இன்னும் மற்ற சுற்றுச்சூழியல் மாற்றங்கள், மலேரியாவுக்கு பலியாகும் ஆட்களின் எண்ணிக்கையை உலகின் அந்த பகுதியில்தான் அதிகமாக ஏற்படுத்தியிருக்கின்றன. பிரேஸிலின் சில அமேசானிய சமுதாயங்களில், இந்தப் பிரச்சினையானது அவ்வளவு அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு 1,000 பேரிலும் 500-க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
ஆப்பிரிக்கா, அமெரிக்காக்கள், ஆசியா அல்லது மற்றெந்த பகுதியானாலும், மிகவும் ஏழையான ஜனங்களையே மலேரியா அதிகமாக தாக்குகிறது. WHO-வின்படி இந்த மக்கள் “உடல்நல அமைப்புகளுக்கு வாய்ப்பற்றவர்களாகவும், தனிப்பட்ட பாதுகாப்பை பெறமுடியாதவர்களாகவும், ஏற்பாடு செய்யப்படும் மலேரியா தடுப்பு நடவடிக்கைகளிலிருந்து அதிக தூரம் விலகியவர்களாகவும் இருக்கிறார்கள்.” அப்படியிருந்தாலும், இந்த ஏழைகளுக்கு நம்பிக்கை இல்லாமல் இல்லை. டிடிஆர் நியூஸ் என்ற வெப்பமண்டல-நோய்கள் ஆராய்ச்சி பற்றிய ஒரு செய்தித்தாள், சமீப ஆண்டுகளில் மலேரியா மரணங்களை தடுக்க மிகச் சிறந்த முறைகளில் ஒன்று எளிதில் கிடைக்கக்கூடியதாக இருக்கிறது என்று செல்லுகிறது. உயிரைக்காக்கும் அந்த முறையின் பெயரென்ன? பூச்சிக்கொல்லியில் தோய்க்கப்பட்ட கொசுவலைகள்.
கொசுவலையின் பயன்கள்
கொசுவலைகளைப் பயன்படுத்துவது ஆரம்பகால தீர்வுக்கே திரும்பச் செல்வதாய் இருந்தாலும், மலேரியாவிற்கு எதிரான போராட்டத்தில் அவற்றின் பயன்களை சோதித்துப் பார்ப்பதற்காக செய்யப்பட்ட சோதனைகளில் “மிகவும் கிளர்ச்சியூட்டும் முடிவுகள்” கிடைத்ததாக WHO-வின் ஆப்பிரிக்க அலுவலகத்தின் இயக்குநரான டாக்டர். இப்ராஹிம் சாம்பா, பானாஸ் நிறுவனத்தின் செய்தித்தாளான பானாஸ் ஃபீச்சர்ஸிடம் தெரிவித்தார். உதாரணமாக, கென்யாவில், தானாகவே எளிதில் சிதைவடையக்கூடிய பூச்சிக்கொல்லியில் தோய்த்த கொசுவலைகளைப் பயன்படுத்தியது ஐந்து வயதிற்குக் கீழ்ப்பட்ட குழந்தைகள் மத்தியில், மலேரியா மரணங்களை மட்டுமல்ல, எல்லாவிதமான மரணங்களையும் மூன்றில் ஒருபாகம் குறைத்திருக்கிறது. உயிர்களைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல் “வலைகளைப் பயன்படுத்துவது உடல்நல அமைப்புகள் மீதான அழுத்தத்தையும் அதிகளவில் குறைக்கும்” ஏனென்றால் மலேரியாவிற்காக சிகிச்சை பெறவேண்டியவர்கள் குறைவாக இருப்பார்கள்.
என்றாலும், தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை இன்னமும் இருக்கிறது: வலைகளுக்காக யார் செலவு செய்வது? ஒரு ஆப்பிரிக்க தேசத்திலுள்ளவர்கள் நன்கொடையளிக்கும்படி கேட்கப்பட்டபோது, பெரும்பான்மையர் மறுத்துவிட்டனர். அது ஆச்சரியமல்லவே. ஏனென்றால், உடல்நலத்திற்காக ஒரு நபருக்கு ஒரு வருடத்திற்கு ஐந்து (ஐ.மா.) டாலருக்கும் குறைவாகவே செலவழிக்கும் தேசத்தில் வாழும் மக்களுக்கு—பூச்சிக்கொல்லிகளுடனோ அது இல்லாமலோ—ஒரு வலையை கொண்டிருப்பதேகூட ஆடம்பர செலவாகும். என்றாலும், மலேரியா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதைவிட இந்த நோய்கட்டுப்பாட்டு முறையானது அரசாங்கத்திற்கு அதிக சிக்கனமானதாக இருக்கும். ஆகவே ஐநா நிபுணர்கள் கூறுகிறபடி “தோய்க்கப்பட்ட கொசுவலைகளை விநியோகிப்பதும் வாங்க உதவுவதும், குறைவாயுள்ள அரசு நிதியை அதிக சிக்கனமாக செலவழிப்பதற்கான வழியாயிருக்கும்.” உண்மையில், கொசுவலைகளைக் கொடுப்பது அரசாங்கங்களுக்கு பணத்தைக்கூட மிச்சப்படுத்தலாம். அவற்றின் லட்சக்கணக்கான ஏழை குடிமக்களுக்கோ இது அதிகத்தையும்கூட அர்த்தப்படுத்தும்—தங்கள் உயிர்களையே பாதுகாப்பதற்கான வழியாகும்.
[படத்திற்கான நன்றி]
CDC, Atlanta, Ga.