என் குடும்பத்திற்கு நோய்த்தடைக்காப்பு அளிக்கப்படவேண்டுமா?
“குழந்தைக்குத் தடுப்பூசிகள் போடும் சமயம் இது,” என்று மருத்துவர் கூறுகிறார். ஒருவேளை அது ஒரு சிறுபிள்ளைக்குக் கேட்பதற்கு அச்சுறுத்தும் ஒரு கூற்றாக இருக்கலாம். ஆனால் பொதுவாகவே பெற்றோரிடமிருந்து வரும் ஒரு நம்பிக்கையூட்டும் புன்முறுவலிலும் ஒப்புதல் அளிக்கும் தலையாட்டுதலிலுமே அது முடிந்திருக்கிறது.
இருப்பினும், சமீபத்தில், பிள்ளைகளுக்கும் வயதுவந்தவர்களுக்கும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நோய்த்தடைக்காப்பு அளிக்கும் முறைகளைப்பற்றி கேள்விகள் எழும்பியுள்ளன. எந்தெந்தத் தடுப்பூசிகள் உண்மையிலேயே அவசியமாக இருக்கின்றன? பக்க விளைவுகளைப்பற்றி என்ன? தடுப்பூசி மருந்து (vaccine) ஒன்றைத் தயாரிப்பதில் இரத்தம் எவ்வகையிலேனும் ஈடுபடுத்தப்படுகிறதா?
அக்கறையுள்ள ஒரு கிறிஸ்தவ குடும்பம் சிந்தித்துப் பார்க்கவேண்டிய நல்ல கேள்விகளாகும் இவை. அவற்றின் பதில்கள் உங்கள் பிள்ளைகளின் மற்றும் உங்களுடைய சொந்த ஆரோக்கியம் மற்றும் எதிர்காலத்தின்மேல் நேரடி பாதிப்பைக் கொண்டிருக்கலாம்.
அதன் பின்னணி
ஆற்றல் வாய்ந்த தடுப்பூசி மருந்து ஒன்று 1950-களில் அறிமுகப்படுத்தப்பட்டது. அது பெரும்பாலான தேசங்களில் போலியோ நோய்க்கான பயத்தை அறவே நீக்கிற்று. திறம்பட்ட அம்மை குத்தல் திட்டங்களின் பலனாக, 1980-ன்போது பெரியம்மை கொள்ளைநோய் (smallpox) உலகமுழுவதிலிருந்தும் முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. “ஓர் அவுன்ஸ் தடைக்காப்பு ஒரு பவுன்ட் குணப்படுத்தலைக் காட்டிலும் மேல்,” என்று பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் சொன்ன வார்த்தைகளை இது உறுதிப்படுத்திற்று.
இன்று, நோய்த்தடைக்காப்புத் திட்டங்கள் பொதுவாகவே அநேக நோய்களைக் கட்டுப்படுத்துவதில் பலன்தரக்கூடியவையாக இருந்திருக்கின்றன—இசிப்பு (tetanus), போலியோ, தொண்டை அடைப்பான் (diphtheria), கக்குவான் (pertussis) (கக்குவான் இருமல் [whooping cough]) என்பவையே இவற்றில் சில. மேலும், ஏதோவொரு காரணத்திற்காக நோய்த்தடைக்காப்பு ஆற்றலிழந்துபோயிருக்குமானால் அந்த நோய் திரும்பவும் தாக்குகிறது என்பதாகக் காண்பிக்கப்படுகிறது. ஒரு நாட்டில் கக்குவான் இருமல் இவ்வாறு திரும்ப தாக்கியது.
இந்த நோய்த்தடைக்காப்பு என்ன செய்கிறது? அடிப்படையாகவே, இரண்டு வழிகளில் ஒன்றில், நோய்க்கிருமிகள் (pathogens) என்றழைக்கப்படும் தொற்றுநோய் உண்டாக்கும் காரணிகளின் தாக்குதலை எதிர்க்கும் உடலின் எதிர்ப்பாற்றலுக்கு ஆதரவளிக்கிறது. நுண்ணியிரிகளும் வைரஸ்களும் இக்காரணிகளுள் அடங்கும். முதல் வழி தன்வினை நோய்த்தடைக்காப்பு (active immunization) என்றழைக்கப்படுகிறது. இந்த முறையில் உடலுக்கு ஆபத்து ஏற்படுத்தாத வகையில் மாற்றப்பட்ட, ஆற்றல் குறைந்த அல்லது கொல்லப்பட்ட நோய்க்கிருமியை (அல்லது அதன் நஞ்சை) கொண்டுள்ளது அந்தத் தடுப்பூசி மருந்து. உடலின் சொந்த எதிர்ப்பாற்றல் அமைப்புகள் (defense mechanisms) உடற்காப்பு மூலங்கள் (antibodies) என்றழைக்கப்படும் கொல்லக்கூடிய துணுக்குகளை உற்பத்திசெய்யத் தொடங்குகின்றன. இவை உண்மையான நோய்க் காரணி வளருமானால் அதை எதிர்த்துப் போராடுகின்றன. தடுப்பூசி மருந்து நோய்க்கிருமிகளிலிருந்து வடிகட்டிய நஞ்சை (நுண்ணுயிர் நச்சை) உடையதாய் இருக்குமானால், அது நச்செதிர் ஊநீர் (toxoid) என்றழைக்கப்படுகிறது. அது உயிருள்ள ஆனால் ஆற்றலிழந்த (attenuated) நோய்க்கிருமிகளிலிருந்தோ கொல்லப்பட்ட உயிரிகளிலிருந்தோ உண்டாக்கப்பட்டிருந்தால் அது தடுப்பூசி மருந்து என்றழைக்கப்படுகிறது.
நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடிந்தவிதமாகவே, இந்தத் தடுப்பூசி மருந்துகள் உடனடி நோய்த்தடைக்காப்பை ஏற்படுத்துவதில்லை. பாதுகாப்பளிக்கும் உடற்பாதுகாப்பு மூலங்களை உண்டுபண்ணுவதற்கு உடல் ஒரு காலப்பகுதியை எடுத்துக்கொள்கிறது. இந்தத் தன்வினை நோய்த்தடைக்காப்பு பிள்ளைகளுக்கு ஏற்றப்படும் எல்லா தடுப்பூசி மருந்துகளையும் அம்மைக் குத்துதல் என்று பொதுவாகக் கருதப்படுபவற்றையும் உள்ளடக்குகின்றன. ஒரே ஒரு விதிவிலக்கைத் தவிர (பின்னர் கலந்தாலோசிக்கப்பட்டிருக்கிறது), இவை தயாரிக்கப்படும் எந்தப் படியிலும் இரத்தத்தின் உபயோகத்தை ஈடுபடுத்துவதில்லை.
மற்றொரு செயல்முறை பிறவினை நோய்த்தடைக்காப்பு (passive immunization) என்றழைக்கப்படுகிறது. இம்முறை வழக்கமாகவே ஒரு நபர் வெறிநாய்க்கடி (rabies) போன்ற ஒரு வினைமையான நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலைகளுக்காக ஒதுக்கிவைக்கப்படுகிறது. அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், உடல் தன்னுடைய சொந்த நோய் எதிர்ப்பு அமைப்பை ஏற்படுத்திக்கொள்ள நேரம் கிடைப்பதில்லை. எனவே பாதிக்கப்பட்ட அந்த நபருக்குள் இருக்கும் நோய்க்கிருமிகளுக்கு எதிராகப் போராட, ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட வேறு யாரோ ஒருவருடைய உடற்காப்பு மூலங்கள் உடலுக்குள் ஏற்றப்படலாம். காம்மா புரதம் (Gamma globulin), எதிர்நச்சு (antitoxin), நோய்த்தடைக்காப்பு மிகைப்பு ஊநீர் (hyperimmune serum) போன்றவை நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமுள்ள மனிதர்கள் அல்லது விலங்குகளின் இரத்தத்திலிருந்து பிரித்தெடுத்துத் தயாரிக்கப்படும் தடுப்பூசி மருந்துகளின் மற்றப் பெயர்களாகும். இந்தக் கடன்வாங்கப்பட்ட அல்லது பிறவினை நோய்த்தடைக்காப்புகள், தாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராட உடலுக்கு உடனடியான ஆனால் தற்காலிகமான உதவியளிப்பதற்கே அளிக்கப்படுகின்றன. கடன்வாங்கப்பட்ட அந்த உடற்காப்பு மூலங்கள் விரைவில் உடலுக்குப் புறம்பான புரதமாக உடலிலிருந்து வெளியேற்றப்படுகின்றன.
என் பிள்ளைக்குத் தடுப்பூசி போடவேண்டுமா?
இந்தப் பின்னணியைக் கேட்ட பிறகும், சிலர் ‘என் பிள்ளைக்கு எந்தத் தடுப்பூசிகள் போடவேண்டும்?’ என்று இன்னும் யோசிக்கலாம். உலகில் குழந்தைப்பருவ தடுப்பூசி உடனடியாகக் கிடைக்கும் பெரும்பாலான பகுதிகளில், ஒழுங்கான இடைவெளியில் அளிக்கப்படும் நோய்த்தடைக்காப்புகள் (routine immunizations), எந்தக் குழந்தைப்பருவ நோய்களுக்காக அவை கொடுக்கப்படுகின்றனவோ, அந்நோய்கள் குறிப்பிடத்தக்க வகையில் குறைவதில் விளைவடைந்திருக்கின்றன.
அமெரிக்க குழந்தை மருத்துவர்கள் கழகம், உலகமுழுவதுமுள்ள அதைப்போன்ற அமைப்புகளோடு செய்துகொண்ட பொது ஒப்பந்தத்தின்படி, பல வருடங்களாகக் கீழ்க்கண்ட நோய்களுக்கு ஒழுங்கான இடைவெளியில் நோய்த்தடைக்காப்பு அளிப்பதைச் சிபாரிசு செய்கிறது: தொண்டை அடைப்பான், கக்குவான், இசிப்பு. வழக்கமாக இம்மூன்றும் ஒன்றாகச் சேர்த்து ஒரே தடுப்பூசியாக—DPT—குறைந்தது இரண்டு மாத இடைவெளிகளில் மூன்று ஊக்கி (வலுவூட்டுதல்) DPT தடுப்பூசிகளோடு அளிக்கப்படுகிறது. இதிலிருந்து வித்தியாசப்பட்ட, தட்டம்மை, புட்டாளம்மை, ருபெல்லா (ஜெர்மானியத் தட்டம்மை) போன்ற நோய்களுக்கான நோய்த்தடைக்காப்பு—MMR—ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒரே தடுப்பூசியாகப் போடப்படுகிறது. மேலும் வாய்வழி போலியோ தடுப்பூசி மருந்து (OPV), DPT-க்கு ஒத்த அட்டவணையின் பிரகாரம் நான்கு வேளைக்குக் கொடுக்கப்படுகிறது.a
அநேக இடங்களில் ஒழுங்கான இடைவெளியில் வரிசையாகக் கொடுக்கப்படும் இந்தத் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் தேவையான ஊக்கித் தடுப்பூசிகளின் எண்ணிக்கை வித்தியாசப்படலாம். சமீபத்தில், பல தட்டம்மையின் திடீர்த்தோன்றல்களின் விளைவாக, ஒருசில சூழ்நிலைமைகளின்கீழ் கூடுதல் தட்டம்மைக்கான ஊக்கித் தடுப்பூசிகள் சிபாரிசு செய்யப்பட்டிருக்கின்றன. விவரங்களுக்கு உங்களுடைய உள்ளூர் மருத்துவரை நீங்கள் அணுகலாம்.
இவற்றிற்குக் கூடுதலாக, நுரையீரல் அழற்சி தடுப்பூசி மருந்து (நியூமோவேக்ஸ்) ஒன்றும் உண்டு. இது ஏதோ காரணத்துக்காக, சில குறிப்பிட்ட வகை நுரையீரல் அழற்சிகளால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும், வாழ்நாள் முழுவதும் நோய்த்தடைக்காப்பு அளிப்பதாகத் தோன்றுகிறது.
பிள்ளைகளுக்கான மற்றொரு தடுப்பூசி மருந்து ஹிப் தடுப்பூசி மருந்து என்றழைக்கப்படுகிறது. இது ஹிமாஃபிலஸ் இன்ஃபுளுவன்ஸா என்ற பொதுவான ஒரு குழந்தைப்பருவ நோய்க்கிருமிக்கு எதிராகப் பாதுகாக்க கொடுக்கப்படுகிறது. இந்தக் கிருமி குழந்தைகளுக்குப் பல்வேறு நோய்களை, மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் மூளை உறையழற்சியின் ஒரு கடுமையான வகையை உண்டாக்குகிறது. இந்தத் தடுப்பூசி மருந்து பொதுவாகவே பாதுகாப்பாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இது குழந்தைகளுக்குக் கொடுக்கும் வரிசையான தடுப்பூசிகளின் பாகமாக அதிகமதிகம் சிபாரிசு செய்யப்பட்டு வருகிறது.
தற்செயலாக, சின்னம்மைக்கு எதிராக ஒழுங்கான இடைவெளியில் கொடுக்கப்படும் நோய்த்தடைக்காப்பு இதுவரை இல்லை. மேலும் பெரியம்மைக்கான தடுப்பூசி இனிமேலும் கிடைப்பதில்லை. காரணம், முன்பே குறிப்பிட்டதுபோல, ஓர் உலகளாவிய தடுப்பூசித் திட்டம் மரணத்திற்கேதுவான இந்நோயை ஒழித்துவிட்டது.
பக்க விளைவுகளைப்பற்றி என்ன?
நோய்த்தடைக்காப்புப் பக்க விளைவுகளின் பேரிலான பிரச்னையைப்பற்றி என்ன? தடுப்பூசிகள் போடும் பெரும்பாலான தடவைகளில், பிள்ளையின் வழக்கமான திடீர் அலறல் மற்றும் கணநேர கண்ணீரைத் தவிர, பக்க விளைவுகள் வழக்கமாகவே, அதிகபட்சம் ஓரிரு நாள் காய்ச்சலுக்கு மட்டுப்படுத்தப்பட்டவையாய் இருக்கின்றன. இருப்பினும், அநேக பெற்றோர் இந்தத் தடுப்பூசிகளின் ஆபத்துகளைக் குறித்துக் கவலையுள்ளவர்களாய் இருக்கின்றனர். தங்களுடைய பிள்ளைகளின் உடல்நிலையைப்பற்றிய பெற்றோரின் அக்கறையைப்பற்றி ஒரு மருத்துவ ஆராய்ச்சி சுற்றாய்வு நடத்திற்று. சுற்றாய்வுச் செய்யப்பட்ட பெற்றோரில் 57 சதவீதத்தினர் நோய்த்தடைக்காப்புகளின் எதிர்விளைவுகளைப்பற்றி கவலையுள்ளவர்களாய் இருந்ததாக அது கண்டுபிடித்தது.
சமீபத்தில், DPT-யின் ஒரு பாகமாகிய கக்குவான் அல்லது கக்குவான் இருமலைப்பற்றி அதிக கவலை தெரிவிக்கப்பட்டது. இந்தத் தடுப்பூசி மருந்தின் வெற்றி முன்பு பயப்படப்பட்ட ஒரு நோய் குறிப்பிடத்தக்க வகையில் குறைக்கப்பட்டதில் விளைவடைந்தது. தடுப்பூசி போடுவதற்குமுன் ஆண்டுக்கு 2,00,000 நோயாளிகள் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டில் மட்டும், இந்தத் தடுப்பூசி பரவலாக உபயோகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஆண்டுக்கு 2,000 நோயாளிகளாகக் குறைக்கப்பட்டது. இருந்தாலும், சுமார் 1,00,000 தடவைகள் கொடுக்கப்பட்ட மருந்துகளில் ஒரு தடவைதான் வினைமையான பக்க விளைவுகள்—வலிப்புத் தாக்குதல்கள் மற்றும் மூளைக் கோளாறும்கூட—ஏற்பட்டன.
இதைப்போன்ற எதிர்விளைவு ஏற்படுவது மிக அபூர்வமே. ஆனாலும் பள்ளியில் சேர தகுதிபெறுவதற்கு வேறுவழியின்றி தடுப்பூசியை ஏற்றுக்கொள்ள தங்களுடைய பிள்ளைகளை அனுமதிக்க வேண்டியிருக்கும் பெற்றோருக்கு இது சற்றுக் கவலையை உண்டாக்குகிறது. இந்தக் கக்குவான் நோய் பொதுவாகத் தாக்கக்கூடியதாய் இல்லாதிருந்தபோதிலும், ஒரு சமுதாயத்தைத் தாக்குமானால் அது அவ்வளவு அழிவை ஏற்படுத்துவதாய் இருக்கிறது. இதன் காரணமாக, சராசரி பிள்ளைக்கு “அந்தத் தடுப்பூசி மருந்து அந்த நோயினால் தாக்கப்படுவதைவிட அதிக பாதுகாப்பாக இருக்கிறது,” என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர் வல்லுநர்கள். அத்தகைய வல்லுநர்கள் “முன்பு கொடுத்த மருந்து வலிப்பு, மூளையழற்சி, நரம்புச்சம்பந்தமான அறிகுறிகள் அல்லது தளர்ந்து வீழ்தல் போன்றவற்றில் விளைவடைந்திருந்தால்தவிர மற்றப்படி நோய்த்தடைக்காப்பு அளிக்கப்படலாம். மற்றும் ‘அளவுக்கு மீறி தூங்கும் மற்றும் அலறும் (இடைவிடாமல் அழுதுகொண்டிருக்கும் அல்லது 3 மணிநேரத்திற்கோ அதைவிட அதிக நேரத்திற்கோ அலறும்) அல்லது 105°F (40.5°C)-க்கும் அதிக உடல்வெப்பத்தைக் கொண்டிருக்கும் பிள்ளைகளும்’ கூடுதலான தடுப்பூசி மருந்தைப் பெறக்கூடாது,” என்பதாக அறிவுரை கூறுகின்றனர்.b
அநேக நாடுகளில் இந்தப் பிரச்னைக்கு உண்மையான தீர்வு என்னவெனில், தற்போது ஜப்பானில் நல்விளைவுகளை எதிர்பார்த்துக் கொடுக்கப்படுவதைப்போன்ற, செல்களைக் கொண்டிராத ஒரு தடுப்பூசி மருந்தாகும். இந்தப் புதிய மற்றும் தெளிவாகவே பாதுகாப்பான தடுப்பூசி மருந்து மற்ற நாடுகளிலும் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது.
தொடர்ந்து வரிசையாகக் கொடுக்கப்படும் மற்றக் குழந்தைத் தடுப்பூசிகள் செயல்விளைவைக் கொண்டவையாகவும் மற்றவற்றைவிட பாதுகாப்புள்ளவையாகவும் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளன.
வயதுவந்தவர்களுக்கான நோய்த்தடைக்காப்புகளைப்பற்றி என்ன?
ஒரு நபர் வயதடையும்போது, அவர் மனதில் வைத்துக்கொள்ளவேண்டிய தன்வினை நோய்த்தடைக்காப்புகள் ஒருசிலவே இருக்கின்றன. பிள்ளைப்பருவத்தில் பெற்ற நோய்த்தடைக்காப்பாலோ தட்டம்மை, புட்டாளம்மை, ருபெல்லா போன்ற நோய்களால் தாக்கப்பட்டதன் விளைவாகவோ, தகுதியாக, வயதுவந்த அனைவரும் இந்நோய்களுக்கான எதிர்ப்புச் சக்தியை ஏற்கெனவே கொண்டிருக்கவேண்டும். இத்தகைய நோய்த்தடைக்காப்பைப்பற்றி கேள்வி எழுமானால், மருத்துவர் ஒருவர் வயதுவந்த ஒருவருக்கு ஒரு MMR தடுப்பூசியைச் சிபாரிசு செய்யலாம்.
ஒவ்வொரு பத்து வருடங்களுக்கோ அதைவிட சற்றேறக்குறைந்த காலத்துக்கோ ஓர் இசிப்பு நச்செதிர் ஊநீர் (tetanus toxoid) தடுப்பூசி போட்டுக்கொள்வது வாய்ப்பூட்டு நோய்க்கு எதிரான நல்ல தடையாக இருக்கிறது. முதிர் வயதினரும், நீடித்த நோயைக் கொண்டிருப்போரும் வருடாந்தர இன்ஃபுளுவன்ஸா நோய்த்தடைக்காப்புகள் சம்பந்தமாகத் தங்களுடைய மருத்துவரோடு ஆலோசனை செய்ய விரும்பலாம். உலகின் சில பாகங்களுக்குப் பயணம் செய்வோர், மஞ்சள் காய்ச்சல், வாந்தி பேதி, நச்சுப்பரு, குடல் காய்ச்சல், அல்லது ப்ளேக் நோய் போன்ற நோய்கள் அவர்கள் செல்லும் தேசங்களில் ஆண்டு முழுவதும் காணப்படுமானால், அவற்றிற்கெதிரான நோய்த்தடைக்காப்புப் பெறுவதைப்பற்றி சிந்திக்கலாம்.
வேறொரு தன்வினை நோய்த்தடைக்காப்பு மருந்துக்கும் நாம் கவனம் செலுத்தவேண்டியிருக்கிறோம். காரணம் இரத்தத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒரே தன்வினை நோய்த்தடைக்காப்பு மருந்தாகும் அது. ஹெப்டவேக்ஸ்-B என்றழைக்கப்படும் ஓர் ஈரல் அழற்சி (hepatitis-B) தடுப்பூசி மருந்தாகும். இந்த நோய்த்தடைக்காப்பு ஈரல் அழற்சியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் இரத்தப் பொருட்களைத் தற்செயலாகத் தொட நேரிடும் சுகாதார பணியாளர்களைப் போன்ற சில தனிநபர்களுக்கென்று கொடுக்கப்படுகிறது. ஒரு பெரிய முன்னேற்றமென போற்றப்பட்டாலும், அந்தத் தடுப்பூசி மருந்து தயாரிக்கப்படும் முறை அநேகரைக் கவலை கொள்ளச் செய்கிறது.
அடிப்படையாகவே, ஹெபடைடிஸ்-B வைரஸைக் கொண்டிருப்பவர்களின் இரத்தத்தைச் சேகரித்து அதிலுள்ள எந்த வைரஸையும் கொல்லுவதற்காக அது கையாளப்பட்டு, ஒரு குறிப்பிட்ட ஹெபடைடிஸ்-B உடற்காப்பு ஊக்கி (antigen) பிரித்தெடுக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட, செயலிழக்கச்செய்யப்பட்ட இந்த உடற்காப்பு ஊக்கி ஒரு தடுப்பூசி மருந்தாக ஏற்றப்படலாம். எனினும், அநேகர் இந்தத் தடுப்பூசி மருந்தை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். பாலுறவு ஒழுக்க கட்டுப்பாடற்ற வாழ்க்கை நடத்தி அதனால் பாலுறவு நோயால் பீடிக்கப்பட்ட ஜனங்களிடமிருந்து இரத்தப் பொருட்களைப் பெற்றுக்கொள்வோமோ என்ற பயமே இதற்குக் காரணம். கூடுதலாக, இது வேறொரு நபரின் இரத்தத்திலிருந்து தயாரிக்கப்பட்டது என்ற அடிப்படையில் மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்ட சில கிறிஸ்தவர்கள் இந்தத் தடுப்பூசிக்கு மறுப்புத் தெரிவித்திருக்கின்றனர்.c
ஹெபடைடிஸ் தடுப்பூசி மருந்தின் மேல் இருந்த அத்தகைய எதிர்ப்பு, வேறொரு வகை, ஆனால் அதற்குச் சமமான ஆற்றல் உள்ள, ஹெபடைடிஸ்-B தடுப்பூசி மருந்து கிடைக்கும்படி செய்ததால் திறம்பட்டவகையில் நீக்கப்பட்டது. இது மரபியல் தொழில்நுட்பத்தின் உபயோகத்தால் மனித இரத்தத்தின் ஈடுபாடின்றி ஈஸ்ட் செல்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. நீங்கள் சுகாதார பராமரிப்புத் துறையில் வேலை செய்தாலோ ஏதோ வேறொரு காரணத்துக்காக ஹெபடைடிஸ்-B தடுப்பூசி மருந்து பெற்றுக்கொள்ளும்படி நீங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டாலோ, இவ்விஷயத்தை உங்கள் மருத்துவரோடு கலந்தாலோசிக்க நீங்கள் விரும்பலாம்.
தடுப்பூசி மருந்துகள் தயாரிப்பில் இரத்தம்
இரத்தத் துர்ப்பிரயோகத்தின் பேரிலான பைபிளின் தடையைப்பற்றி அக்கறையுள்ள கிறிஸ்தவர்களுக்கு இது ஒரு முக்கிய குறிப்பை எழுப்புகிறது. (அப்போஸ்தலர் 15:28, 29) இரத்தத்திலிருந்து தயாரிக்கப்படும் வேறு எந்தத் தடுப்பூசி மருந்துகளும் இருக்கின்றனவா?
ஒரு பொது நியதியாக, ஹெப்டவேக்ஸ்-B-யைத் தவிர, வேறு எந்தத் தன்வினை நோய்த்தடைக்காப்பு மருந்துகளும் இரத்தத்திலிருந்து தயாரிக்கப்படுவதில்லை. உதாரணமாக, இது எல்லா குழந்தை தடுப்பூசிகளையும் உட்படுத்துகிறது.
பிறவினை நோய்த்தடைக்காப்பைப் பொருத்தளவில் இதன் எதிர்ப்பதம் உண்மையாக இருக்கிறது. துருப்பிடித்த ஓர் ஆணியை மிதிப்பது அல்லது ஒரு நாயால் கடிக்கப்படுவது போன்ற பாதிக்கப்படும் வாய்ப்புகளுக்குப் பிறகு ஒரு தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி ஒருவர் ஆலோசனை கூறப்பட்டால், அவை (அவை வெறுமனே ஒழுங்கான இடைவெளியில் அளிக்கப்படும் ஊக்கித் தடுப்பூசியாக இல்லையென்றால்) நோய்த்தடைக்காப்பு மிகைப்பு ஊநீர் என்றும் இரத்தத்தை உபயோகித்துச் செய்யப்பட்டிருக்கிறது என்றும் ஒருவர் ஊகித்துக்கொள்ளலாம். Rh நோய்த்தடைக்காப்புப் புரதத்தை (ரோகம்) பொருத்தளவிலும் இதுவே உண்மையாக இருக்கிறது. நேரின Rh இரத்தமுள்ள ஒரு குழந்தையைப் பெறும்போது சம்பவிப்பதுபோல, ஏதோவொரு காரணத்திற்காக நேரின Rh இரத்தத்தோடு தொடர்புகொள்ளும் எதிரின Rh இரத்தமுள்ள தாய்மார்களுக்கு இது அடிக்கடி சிபாரிசு செய்யப்படுகிறது.
இந்தப் பிறவினை நோய்த்தடைக்காப்புகள் இரத்தத்தைப்பற்றிய பிரச்னையோடு சம்பந்தப்பட்டிருப்பதால், மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்ட கிறிஸ்தவன் என்ன நிலைநிற்கையை எடுப்பான்? இந்தப் பத்திரிகையின் இதற்கு முன்புள்ள கட்டுரைகளும் இதன் துணைப் பத்திரிகை காவற்கோபுரமும் ஓர் இசைவான நிலைநிற்கையைக் கொடுத்திருக்கின்றன: தனக்கும் தன் குடும்பத்துக்கும் இந்தச் சிகிச்சையை ஏற்றுக்கொள்வானா என்பது அந்தத் தனிப்பட்ட கிறிஸ்தவனின் பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனச்சாட்சியைப் பொறுத்திருக்கிறது.d
என் குடும்பம் நோய்த்தடைக்காப்புப் பெறவேண்டுமா?
கிறிஸ்தவர்கள் உயிருக்குப் பெருமதிப்பைக் காண்பித்துத் தங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்ததைச் செய்ய உண்மையாகவே விழைகின்றனர். உங்களுடைய குடும்பத்திற்கு நோய்த்தடைக்காப்பு அளிக்க மனச்சாட்சிப்பூர்வமாகத் தீர்மானிக்கிறீர்களா என்பது நீங்கள் எடுக்கவேண்டிய சொந்தத் தீர்மானமாக இருக்கிறது.—கலாத்தியர் 6:5.
ஒரு வல்லுநர் நிலைமையை இவ்வாறு நன்கு சுருங்கக் கூறினார்: “தங்களுடைய பிள்ளைக்கான ஒவ்வொரு மருத்துவ தலையிடுதலைப்பற்றியும் பெற்றோர் அறிவிக்கப்பட்டிருக்கவேண்டும். அவர்கள் தங்கள் பிள்ளையின் வெறுமனே சட்டப்பூர்வ பாதுகாவலர்களைக் காட்டிலும் அதிகமாக இருக்கின்றனர். தங்கள் பிள்ளை தங்களைச் சார்ந்திருக்கும் வாழ்நாட்களின்போது பிள்ளையுடைய நலனுக்கும் பாதுகாப்பிற்கும் அவர்கள் பொறுப்புள்ளவர்களாக இருக்கின்றனர்.” நோய்த்தடைக்காப்பைப்பற்றிய இந்த விஷயத்திலும் மற்ற மருத்துவ விஷயங்களிலும், யெகோவாவின் சாட்சிகள் அந்தப் பொறுப்பை மிகவும் முக்கியமான ஒன்றாக எடுத்துக்கொள்கின்றனர்.—ஒரு மருத்துவரால் அளிக்கப்பட்டது. (g93 8/8)
[அடிக்குறிப்புகள்]
a உலகின் பெரும்பாலான பகுதிகளில் ஈரல் அழற்சி-B-க்கு (hepatitis-B) எதிராகக் குழந்தைகளுக்கு ஒழுங்கான இடைவெளியில் நோய்த்தடைக்காப்பு அளிப்பதை இப்பொழுது உலக சுகாதார நிறுவனம் சிபாரிசு செய்துவருகிறது.
b வலிப்பு ஏற்படும் ஒரு குடும்ப வரலாற்றைக் கொண்டவர்களுக்கு அதிக எதிர்விளைவுகள் விளைவதாகத் தோன்றவில்லை. சுவாசமண்டல தாக்குதல்கள் எதிர்விளைவுகளால் பாதிக்கப்பட செய்வதில்லை. என்றாலும் பிள்ளை ஓரளவு சுகமில்லாமல் இருந்தாலும் தடுப்பூசி கொடுப்பதைத் தவிர்ப்பது விவேகமாகத் தோன்றுகிறது.
c ஆங்கில காவற்கோபுரம் ஜூன் 1, 1990-ல் உள்ள “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
d ஜூன் 15, 1978, ஆங்கில காவற்கோபுரம் பக்கங்கள் 30-1-ஐப் பார்க்கவும்.
[பக்கம் 26-ன் பெட்டி]
இரத்தத்திலிருந்து பெறப்படாத நோய்த்தடைக்காப்பு மருந்துகள்
குழந்தைத் தடுப்பூசிகள் (DPT, OPV, MMR)
ஹிப் தடுப்பூசி மருந்து
நியூமோவேக்ஸ்
நச்செதிர் ஊநீர்கள்
ஃப்ளூ தடுப்பூசி மருந்துகள்
ரிக்காம்பிவேக்ஸ்-HB
இரத்தத்திலிருந்து பெறப்படும் நோய்த்தடைக்காப்பு மருந்துகள்
ஹெப்டவேக்ஸ்-B
ரோகம்
எதிர்நச்சுகள்
ஆண்டிவெனின்கள் (பாம்பு மற்றும் சிலந்தி நச்சுகளுக்கு)
நோய்த்தடைக்காப்புப் புரதங்கள் (பலவகை நோய்களுக்கும்)
காம்மா புரதம்
நோய்த்தடைக்காப்பு மிகைப்பு ஊநீர் தயாரிப்புகள் (உதாரணமாக, வெறிநாய்க்கடிக்கெதிரான ஊநீர்)