வன்முறையான டிவி கார்ட்டூன்கள் தீங்கானவையா?
பிரிட்டனிலுள்ள விழித்தெழு! நிருபர்
“பக்ஸ் பன்னி பள்ளி சண்டைகளுக்காக குற்றம்சாட்டப்படுகிறது,” என்ற தலைப்புச் செய்தியைத் தாங்கிவந்தது லண்டனின் தி டைம்ஸ். டிவி கார்ட்டூன்களில் வரும் வன்முறைக் காட்சிகளைப் பார்த்துப் பழகுவதாக உறுதிசெய்யப்பட்டிருக்கும் சிறுவர்களின் நடத்தையைப்பற்றி சில ஆசிரியர்கள் எவ்வாறு உணருகின்றனர் என்பதன் பேரில் அந்தச் செய்தித்தாள் அறிக்கை செய்தது.
“பெரும்பாலான கார்ட்டூன்கள் வன்முறையானவை,” என்று வலியுறுத்திக் கூறினார் ஒரு தொடக்கப் பள்ளியின் துணை தலைமை ஆசிரியை, “இறுதியில் நல்லவன் வெற்றி பெற்றாலும், அவன் எவ்வழியில் வெற்றி பெறுகிறானோ அது அவ்வளவு விரும்பத்தக்கது அல்ல.” டிவி கார்ட்டூன்களின் போக்கைப்பற்றி நீங்களும் அதேபோலத்தான் உணருகிறீர்களா?
இப்போது வீடியோவில் பரவலாக கிடைக்கும் உயிரூட்டுதல் (animation) அதிகப் பிரபலம் ஆகிக்கொண்டிருக்கும் நிலையை எதிர்ப்படுவதால், அநேக பெற்றோர் கவலையடைகின்றனர். தங்களுடைய இளம் பிள்ளைகளின் ‘கார்ட்டூன் மனநிலையால்’ சிலர் துயரப்படுத்தப்படுகின்றனர். கார்ட்டூன்கள் வன்முறையையும் ஏமாற்றுதலையும், கீழ்ப்படியாமையையும் ஊக்குவிக்கின்றன என்றும்கூட அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆனால் அவை சில வன்முறைக் காட்சிகளைக் கொண்டிருந்தாலும், கார்ட்டூன்கள் காண்பதில் உண்மையிலேயே ஏதேனும் கெடுதி இருக்கக்கூடுமா?
ஏதாவது கெடுதியா?
பிரிட்டிஷ் பிராட்காஸ்ட்டிங் கார்ப்பரேஷன் (BBC) விதிமுறைகள்படி, டிவி தயாரிப்பாளர்கள் தங்களுடைய நிகழ்ச்சிகள் சித்தரித்துக் காண்பிக்கும் எந்த வன்முறையின் விளைவுகளையும் மிகக் கவனமாக யோசித்துப்பார்க்க வேண்டும். இவற்றில் கார்ட்டூன்களும் உள்ளடங்குகின்றன. “சூழ்நிலைமையை அடையாளம் கண்டுகொள்ளும் திறமை பார்ப்பவருக்கு அதிகரிக்க அதிகரிக்க, வன்முறையின் விளைவாக உணர்ச்சித் தூண்டுதலும் அதிகரிக்கிறது,” என்பதுதான் அதிகாரப்பூர்வ கருத்து.
கார்ட்டூன்கள் அவற்றின் தன்மையினாலேயே, விசித்திரமான சூழ்நிலைமைகளைக் காண்பிக்கின்றன; ஆகவே ஆபத்து குறைவா? பேரார்வத்துடன் டிவி கார்ட்டூன்களைப் பார்க்கும் பெரும்பாலான இளைஞர் தெளிவாக பொழுதுபோக்குக்காக அதையே செய்கின்றனர். கார்ட்டூன்கள் மனமகிழ்ச்சியைத் தருகின்றன. ஆனால் அவை அதிகத்தைச் செய்யக்கூடுமா? உண்மையிலேயே செய்யக்கூடும். காரணம், எந்தக் கார்ட்டூனும் நீடித்திருக்கும் எண்ணப்பதிவை ஏற்படுத்த வல்லதாய் இருக்கிறது. பிள்ளைகள் பார்க்கும் கார்ட்டூன்கள், பிள்ளைகளின் கொடுங்கனவுகளில் அதிகளவில் வரும் “அரக்கர்கள், பேய்கள், அல்லது கொடிய மிருகங்கள்,” போன்றவற்றின் ஒரு மூலமாக இருக்கின்றன என்று ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் க்ரகரி ஸ்டார்ஸ், நிகழ்ச்சிநிரல் பட்டியலளிக்கும் டிவி டைம்ஸ் என்ற பத்திரிகையிடம் சொன்னார்.
அதைப்போலவே, ஒரு பிள்ளை திரைப்படத்தை யாருடன் இருந்து பார்க்கிறானோ அவர்களின் கூட்டு, அவன்மேல் அது கொண்டிருக்கும் பாதிப்பின்மீது செல்வாக்கு செலுத்துகிறது என்று திரைப்பட வன்முறையும் திரைப்பட தணிக்கையும் என்ற பிரிட்டிஷ் அரசாங்க ஆராய்ச்சி ஒப்புக்கொள்கிறது. எனவே மேற்பார்வையின்றி கார்ட்டூன் பார்ப்பதில் பிள்ளைகளுக்கான ஆபத்து அடங்கியிருக்கலாம்.
பள்ளிப்பருவம் அடையாத பிள்ளைகள் தாங்கள் காண்கிற வன்முறை செயல்களை உடனடியாக நடப்பிக்கின்றனர். சுமார் ஐந்து அல்லது ஆறுவயதுள்ள வளர்ந்த பிள்ளைகள் தாங்கள் கற்றுக்கொண்ட முரட்டுச் செயல்களில் “உணர்ச்சிவசத்தின் ஏதோவொருவகை ‘தூண்டுதலுடன்’” ஈடுபடுகின்றனர் என்று அதே அறிக்கை வாதாடுகிறது.
அதன் விளைவாக, காலப்போக்கில், தொலைக்காட்சியில் காண்பிக்கப்படும் வன்முறையைக் காணுதல், பிள்ளைகளுடைய வயது என்னவாக இருந்தாலும்சரி, “சுரணையற்று போகச்செய்யும் அல்லது அற்பமாக்கிக்காட்டும் பாதிப்பை குறிப்பாக பிள்ளைகள் மேல்” கொண்டிருக்கக்கூடிய சாத்தியத்தை ஒளிபரப்பாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர். இது அவர்களை, தாங்களே வன்முறையில் ஈடுபடுவதற்கு உணர்வு குறைந்தவர்களாக அல்லது மற்றவர்களிடம் வன்முறையாய் நடந்துகொள்ளும்போது மரத்துப்போனவர்களாகச் செய்யக்கூடும்.
“பக்ஸ் பன்னி” அல்லது “டாம் அன்ட் ஜெர்ரி” போன்றவற்றுக்கு அடிமையானவர், அந்தத் திரைப்பட பாத்திரங்களை திரைகளில் வருடங்களுக்குமுன் முதன்முதலாக பார்த்திருப்பார். அவர்கள் இப்போது ஒரு பெற்றோராக இருக்கலாம், ஆனாலும் ஒரு பட்டனைத் தட்டியவுடன், தங்களுடைய நவீனகால கேளிக்கைப் பாத்திரங்களைப் பெறும் டிவி அலைவரிசைக்குப் போகலாம். ஆனால் தராதரங்கள் மாறிவிட்டன. தங்களுடைய பிள்ளைகளை மனதில்கொண்டு, இன்று காண்பிக்கப்படும் கார்ட்டூன்களின் பொருளைக் கவனித்துக்கொள்ள பெற்றோர் நிச்சயமாக வகைதேடுவர்.
‘பருவவயது மாற்றமடைந்த நிஞ்சா ஆமைகளை’ (Teenage Mutant Ninja Turtles) எடுத்துக்கொள்ளுங்கள். இந்த அமெரிக்க திரைப்பட பாத்திரங்கள் ஐரோப்பிய பார்வையாளர்கள் அநேகரால் மிகவும் வன்முறையானவையாக கருதப்பட்டன. அதன் விளைவாக, பாவனை கார்ட்டூன் தொடரை பிரிட்டனில் திரையிடுமுன், BBC சில காட்சிகளை வெட்டிவிட்டது. அது “நிஞ்சா” என்ற வார்த்தையைக்கூட நீக்கிவிட்டது. காரணம் அது ஜப்பானிய போர்வீரர்களைக் குறிக்கிறது. அதற்குப்பதிலாக, அது “பருவவயது மாற்றமடைந்த ஹீரோ ஆமைகள்” (Teenage Mutant Hero Turtles) என்று அவற்றை அழைத்தது.
அப்படியிருந்தும், பெற்றோர் ஓரளவு கவலையைத் தெரிவித்தனர். ஸ்காட்ஸ்மேன் செய்தித்தாளிடம் ஒரு தாய் சொன்னார்: “பிள்ளைகள் எளிதில் ஏமாற்றப்படுபவர்களாக இருக்கின்றனர். எனக்கு ஐந்து வயது மகன் ஒருவன் இருக்கிறான். அவன் ஓர் ஆமை பித்தன். நான் அவனை பள்ளியிலிருந்து கூட்டிக்கொண்டுவர செல்லும்போது விளையாட்டு மைதானத்தில் உள்ள பிள்ளைகள் அனைவரும் ஒருவரை ஒருவர் உதைக்க முயன்றுகொண்டிருக்கின்றனர்.”
பெற்றோராலும் ஆசிரியர்களாலும் உணரப்பட்ட அக்கறையை எதிர்பாராதவிதமாக சில விளையாட்டு பொம்மைக் கடைக்காரர்களும் தெரிவித்தனர். பிரிட்டனில் பிள்ளைகள் “ஒருவரையொருவர் கராத்தே உதைகளால் அச்சுறுத்திக்கொண்டு சாக்கடையில் ஒளிந்துகொள்வதன்மூலம் தங்களை சாவுக்கேதுவான அபாயத்தில் வைத்துக்கொள்ளும்” பயத்தின் மத்தியில் பிரிட்டிஷ் கடை ஒன்று இந்த ஊர்ந்துசெல்லும் போர்வீரர்களின் விற்பனை தடைசெய்யப்பட்டதாக அறிவித்தது. வேறு ஆபத்துக்கள் ஏதேனும் இருக்கின்றனவா?
ஒளிந்திருக்கும் ஆபத்துக்கள்
“ஒருவேளை எக்காலத்திலும் இருந்ததைவிட அதிக நம்பகமற்றதாயினும் வெற்றிகரமான பிள்ளைகளுடைய வியாபார கண்டுபிடிப்பு.” “ஆமைகள்” கார்ட்டூன்களுக்கும் அதோடு தொடர்புடைய பொருட்களின் வியாபாரத்திற்கும் இடையே உள்ள தொடர்பை ஒரு செய்தித்தாள் இவ்வாறுதான் விவரித்தது. அத்தகைய தொடர்புபடுத்துதல் புதியது அல்ல. ஆனால் “ஆமைகளில் புதிதாக இருப்பது என்னவென்றால்” அதன் விற்பனையின் “பேரளவாகும்.”
இந்த விஷயத்தில் உரிமக்காரர்கள், காமிக்ஸ், T–ஷர்ட்டுகள் போன்ற கணக்கிடப்பட்ட 400 ஆமை பொருட்களை, வசியப்படுத்தப்பட்ட இளைஞருக்கு விற்க ஆவலாய் இருக்கின்றனர். இப்போது கார்ட்டூன் பார்ப்பது இந்தப் பொருட்களை விரும்பும் அளவுக்கு அவர்களை வசீகரிக்குமானால், அதே கார்ட்டூன்களில் அவர்கள் பார்க்கும் காட்சிகள் அவர்கள் மீது ஏதாவது பாதிப்பை நிச்சயமாகவே கொண்டிருக்கவேண்டும்! இருப்பினும், இந்தப் புதிய பித்து அதிக நாள் நீடிக்காது என்று சிலர் சொல்லலாம்.
இந்தப் பித்து தொடராமல் போனாலும், நேயர்களால் விரும்பப்படும் பழைய கார்ட்டூன்கள் தங்களுடைய கவர்ச்சியை தக்கவைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. “மாற்றமடைந்த ஆமைகள் வரலாம் போகலாம், ஆனால் டாம் அன்ட் ஜெர்ரியோ என்றென்றுமாக நிலைத்துநிற்கும்,” என்று வாதாடுகிறது லண்டனின் தி டைம்ஸ். ஆகவே நீங்கள் உங்களையே சில கேள்விகள் கேட்டுக்கொள்வது அவசியமாக இருக்கலாம். அத்தகைய கார்ட்டூன்களை உங்களுடைய வீட்டிலிருந்து காண்பது, அதில் காட்டப்படும் ஒவ்வொரு செயலையும் நீங்கள் அங்கீகரிக்கிறீர்கள் என்று உங்கள் பிள்ளைகளுக்குக் குறித்துக்காட்டுகிறதா? விலங்குகளைக் கொடுமைப்படுத்துவதாக உள்ள காட்சிகளைப்பற்றி என்ன? சந்தேகமின்றி, கார்ட்டூன்களை நிஜ வாழ்க்கையோடு சமானப்படுத்தக்கூடாது என்று நீங்கள் நியாயவிவாதம் செய்யலாம். ஆனால் கார்ட்டூன்களுக்கு இப்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? அனிமேட்ரானிக்ஸ்!
“அனிமேட்ரானிக்ஸ்” என்பது கற்பனை கார்ட்டூன் உருவங்களை நிஜமாகத் தோன்றச் செய்யும் எலக்ட்ரானிக் மாயாசக்தியாகும். அது அவ்வளவு நிஜமாக தோன்றுவதால் பார்ப்பவர்கள் கார்ட்டூனையும் நிஜத்தையும் பிரித்தறிவதைக் கடினமாகக் காண்கின்றனர். “விசித்திர கற்பனைத் தந்திரங்கள் நிறைந்த திரைப்படங்களைப் பார்த்துப் பழகிப்போன, தந்திரங்களை எளிதில் கண்டுபிடிக்கும் பார்வையாளர்களும்கூட, ஒரு பொய் துளையாலோ அல்லது போலி சுருக்கத்தாலோ கவனம் சிதறடிக்கப்படாத அளவுக்கு அருகில் இருந்து எடுக்கப்பட்ட அனிமேட்ரானிக் ராஜ்யம் அவ்வளவு நம்பவைக்கக்கூடியதாக இருக்கிறது” என்று தி ஸண்டே டைம்ஸ் மேகஸின் அறிவிக்கிறது. இவ்வகையில் காண்பிக்கப்படும் வன்முறைக் காட்சிகள் அதிர்ச்சி தரும் ஒரு நிஜத்தைக் கொண்டிருக்கின்றன.
அடுத்த தலைமுறைக்கு நவீன கார்ட்டூன்கள் அளிக்கும் நடத்தையின் தராதரங்களையும் யோசித்துப் பாருங்கள். புதிய பாணி கார்ட்டூன் ஒன்றில் சித்தரித்துக் காட்டப்பட்ட திரைப்பட பாத்திரங்கள் “உரக்க, சினமூட்டிப்பேசுபவர்கள், சோம்பேறிகள், ‘திறம்பட்ட வகையில் சாதிக்க இயலாதவர்கள்’ அடங்கிய வெறுக்கத்தக்க ஒரு குடும்பம்” என்று லண்டனின் தி டைம்ஸ் அறிக்கை செய்கிறது. “அதிகாரத்தை கடுமையாய் எதிர்ப்பவர்களாக இருக்கும் பாதி காரணத்துக்காக,” அவர்கள் கவர்ச்சியுடைவர்களாக இருக்கின்றனர்.
ஆம், பெற்றோரே, உங்கள் பிள்ளைகளுடைய கார்ட்டூன் பார்க்கும் பழக்கத்தை நீங்கள் கவனிக்கையில் கவலைகொள்வதற்கான காரணம் உங்களுக்கு இருக்கலாம். அப்படியானால், நீங்கள் என்ன செய்யக்கூடும்?
‘வன்முறையான பொழுதுபோக்கை’ ஒதுக்கித் தள்ளுங்கள்
தயாரிக்கப்பட்ட பொழுதுபோக்கின் நன்மைகளையும் தீமைகளையும் சீர்தூக்கிப் பாருங்கள். குடும்பத்தின் நலன்கருதி, டிவி இல்லாமலிருக்க சில பெற்றோர் தீர்மானித்திருக்கின்றனர். மற்றவர்களோ, தங்களுடைய பிள்ளைகள் பார்க்கும்படி அனுமதிக்கப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகளின் நல்ல மற்றும் கெட்ட விளைவுகளை சீர்தூக்கிப் பார்க்க அவர்களுக்கு உதவுகின்றனர். “ஒரு கார்ட்டூன், ஒரு விளம்பரம், அல்லது ஒரு செய்தி ஒளிபரப்பு ஆகியவற்றில் உள்ள குறைகளை கண்டறிந்து, பகுத்தாராய்ந்து பார்ப்பதில் ஒரு பிள்ளை (அல்லது வளர்ந்தவரும்கூட) எவ்வளவதிகம் திறம்படைத்ததாய் இருக்கிறதோ அவ்வளவதிகம் அவளோ அவனோ அந்தத் தகவல் மூலங்களிலிருந்து பயனடைவார்,” என்று லண்டனின் தி இன்டிப்பென்டன்ட் விவரிக்கிறது. தங்களுடைய பிள்ளைகள் இதைச் செய்வதில் உதவ நிச்சயமாக பெற்றோரே மிகச் சிறந்த நிலையில் இருக்கின்றனர்.
குடும்ப வாழ்க்கையில் தொலைக்காட்சி கொண்டிருக்கும் ஈடுபாட்டைப்பற்றிய ஒரு சமீபத்திய ஆராய்ச்சி வித்தியாசப்பட்ட இரண்டு போதனாமுறைகளின் பேரில் கவனம் செலுத்திற்று. அதில் ஒன்று நியாயங்காட்டுதல் மற்றும் விளக்குதலோடு, பிள்ளையின் சாதனை உணர்ச்சிக்குக் கவர்ச்சியூட்டுதலையும் உட்படுத்துகிறது. மற்றொன்று அடிப்படையாக தண்டனையளித்தலையும் பயமுறுத்தல்களையும் பயன்படுத்துகிறது. முடிவுகள் எதைக் காட்டின?
எந்தப் பிள்ளைகளின் பெற்றோர் தண்டனையோடு பயமுறுத்தினரோ அவர்கள் “சமூகவிரோத தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்” மீது விருப்பம் காண்பித்தனர். ஆனால் “முக்கியமாக நியாயங்காட்டுதலோடும் விளக்கத்தோடும் சிட்சித்த தாய்மார்களைக் கொண்ட பிள்ளைகள்,” அத்தகைய காட்சிகளால், “மிகக் குறைவாகவே பாதிக்கப்பட்டனர்.” இதன் காரணமாக, அக்கறையுள்ள பெற்றோர் வன்முறையான கார்ட்டூன்களைப் பார்ப்பது ஏன் விவேகமற்றது என்று தங்களுடைய பிள்ளைகளுக்கு விளக்குகின்றனர். ஆனால், இளைஞர் பிறப்பிலேயே பார்த்துப் பழகும் சுபாவம் உடையவர்கள் என்று ஞாபகத்தில் வையுங்கள். ஆகவே இது பொழுதுபோக்குக்காக வன்முறைக் காட்சிகளைப் பார்ப்பதைத் தவிர்க்கும் ஒரு பெரிய பொறுப்பை பெற்றோர்மீது வைக்கிறது. நீங்கள் அதைப் பார்த்தீர்களேயானால், உங்கள் பிள்ளைகளும் அதைக் காண்பதில் எந்தவொரு தவறையும் காணமாட்டார்கள்.
‘அப்படியென்றால், நான் என் பிள்ளைகளுக்கு மனமகிழ்ச்சி அளிப்பது எவ்வாறு?’ என்று நீங்கள் கேட்கலாம். ஓர் ஆலோசனை: உயிருள்ள உண்மை விலங்குகளின் கேளிக்கைகளைப் பார்ப்பதன்மூலம் ஏன் பொழுதுபோக்கை நாடக்கூடாது? குடும்பமாக சென்று காணும்படி ஒரு வனவிலங்கு பாதுகாப்பகத்திற்கு அருகிலோ விலங்கியல் பூங்காவிற்கு அருகிலோ நீங்கள் குடியிருக்கிறீர்களா? இல்லையென்றால், வனவிலங்கு வீடியோக்களை வீட்டில் பார்ப்பதை நீங்கள் எப்போதுமே தெரிந்துகொள்ளலாம்.
வருந்தத்தக்க வகையில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் உலகின் வன்முறையிலிருந்து நம்மில் யாரும் தற்போதைக்குத் தப்பமுடியாது. ஆனால் நாம் இளைஞரோ வளர்ந்தவரோ, விரும்பினால், வன்முறையை வளர்க்கும் எதையும் பார்ப்பதைத் தவிர்க்க நாம் ஞானமாக தெரிந்துகொள்ளலாம். (g93 12/8)
[பக்கம் 12-ன் படம்]
கார்ட்டூன்கள் வன்முறையை அதிகரிக்கச் செய்கின்றன