வீட்டில் பேச்சுரிமை—அது ஒரு குறித்தநேர வெடிகுண்டா?
கூட்டம் நிறைந்த ஓர் அரங்கத்தில் “தீ!” என்று ஒருவர் பொய்யாகச் சத்தம்போடும்போது, தப்புவதற்காக மக்கள் நெருக்கித்தள்ளிக்கொண்டு ஓடுகையில் சிலர் மிதிபட்டு செத்துப்போனால், ஏற்படுகிற சாவுகளுக்கும் விபத்துக்களுக்கும் சத்தம்போட்டவர் பொறுப்பேற்க வேண்டாமா? “நீங்கள் சொல்வதை நான் ஒத்துக்கொள்ளவில்லை, ஆனால் அதைச் சொல்வதற்கு உங்களுக்கு இருக்கும் உரிமையை நான் பாதுகாப்பேன்,” என்று ஒருவர் சொல்லும்போது, விளைவுகளைப் பொருட்படுத்தாமல், வெளிப்படையாக நீங்கள் விரும்பியதை எல்லாம் சொல்வதற்கு உங்களுக்கு முழுச்செயலுரிமை, கட்டுப்பாடற்ற சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறதா? அவ்வாறு நினைப்பவர்கள் இருக்கிறார்கள்.
உதாரணமாக, பிரான்ஸில், ராப் இசைக்குழுவினர் போலீஸைக் கொல்வதைப் பரிந்துரைத்தபோது, அந்த இசையைக் கேட்ட சிலரால் போலீஸார் கொல்லப்பட்டபோது, அந்த ராப் இசைக்குழுவினர் வன்முறையைத் தூண்டிவிட்டதற்கு பொறுப்புள்ளவர்களாகக் கருதப்பட்டிருக்க வேண்டுமா? அல்லது அவர்கள் உரிமைகள் சாசனம் ஒன்றின்கீழ் பாதுகாக்கப்பட வேண்டுமா? வானொலி ஒலிபரப்பாளர்களும் தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்களும் கம்ப்யூட்டர் வலைப்பின்னல்களும் பிள்ளைகள் பார்க்க முடிகிற வன்முறை மற்றும் ஆபாச உருவரைக் காட்சிகளை அமைக்கையில், இந்தக் காட்சிகளை சில பிள்ளைகள் தங்களுக்கும் மற்றவர்களுக்கும் கேடு விளைவிக்கும் வகையில் செயல்படுத்தும்போது, அப்படிப்பட்ட காட்சிகளை அமைத்து அளித்தவர்கள் அதற்கான பொறுப்பேற்க வேண்டுமா?
அமெரிக்க உளவியல் கழகத்தால் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று, “ஒரு வாரத்திற்கு 27 மணிநேரங்கள் டிவி பார்க்கிற, மாதிரிக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட பிள்ளை, 3 வயதிலிருந்து 12 வயதுக்குள்ளாக 8,000 கொலைகளையும் 1,00,000 வன்முறை செயல்களையும் பார்ப்பதாக கணக்கிடப்பட்டது,” என்று ஐ.மா.செய்தி மற்றும் உலக அறிக்கை (ஆங்கிலம்) பத்திரிகை அறிக்கை செய்தது. இது தங்கள் பிள்ளைகள்மீது அரிதாகவே எவ்வித பாதிப்பையும் கொண்டிருக்கிறது என்பதாகச் சொல்லி பெற்றோர் இதை விட்டுவிடுவது சரியாக இருக்குமா? அல்லது இது ஒரு “தெளிவானதும் தற்போது நிகழ்வதுமான ஆபத்தை” உட்படுத்தக்கூடுமா? இங்குதான் ஓர் எல்லைக்கோடு வரையப்பட வேண்டுமா அல்லது பேச்சுரிமைக்கு ஒரு வரையறை வைக்கப்பட வேண்டுமா?
நான்கு வயதுள்ளவர்களின் ஒரு தொகுதிக்கு “முஷ்டிகள் பறக்க சண்டையிடும் சூப்பர்ஹீரோக்களின்” கார்ட்டூன்களும் வேறொரு தொகுதிக்கு “கிளர்ச்சியற்ற இயல்புடைய” கார்ட்டூன்களும் நிலையாகக் காண்பிக்கப்பட்டபோது, அந்த ஹீரோக்களின் செயல்துடிப்பைப் பார்த்தவர்கள் அதற்குப் பிறகு பொருட்களைத் தாக்குவதற்கும் எடுத்தெறிவதற்குமான சாத்தியம் அதிகமாய் இருந்ததாக பல்கலைக்கழக உளவியலாளர்களால் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியது. டிவி வன்முறையின் பாதிப்புகள் பிள்ளைப்பருவத்திற்குப்பின் மறைந்துவிடுவதும் இல்லை. வேறொரு பல்கலைக்கழக ஆய்வு, 1960-லிருந்து 1995 வரையாக 650 பிள்ளைகளை, அவர்களுடைய டிவி பார்க்கும் பழக்கத்தையும் நடத்தையையும் கவனித்தப்பின், இளைஞராக இருக்கையில் மிகவும் வன்முறையான தொலைக்காட்சி காட்சிகளைப் பார்த்தவர்கள் வயதுவந்தவர்களாக ஆனபோது, வாழ்க்கைத் துணையைக் கொடுமைக்குள்ளாக்குதல் மற்றும் குடித்துக்கொண்டு வாகனம் ஓட்டுதல் உட்பட பெரிதளவு தாக்குதல் நடத்தையில் ஈடுபடுபவராக வளர்ந்துவந்ததைக் கண்டறிந்தது.
தொலைக்காட்சியும் திரைப்படங்களும் தங்கள்மீது கொண்டிருக்கும் பாதிப்புகளைச் சில பிள்ளைகள் ஒத்துக்கொள்ளாமல் இருக்கக்கூடும் என்றாலும் மற்றவர்கள் ஒத்துக்கொள்வார்கள். 1995-ல், பிள்ளைகள் இப்போது என்ற கலிபோர்னிய ஆதரவு குழு, 10-லிருந்து 16 வயதுகளிலிருந்த 750 பிள்ளைகளிடம் வாக்கெடுப்பு நடத்தியது. டிவியில் பாலினம், மிக இள வயதில் பாலுறவு கொள்ளும்படி பிள்ளைகள்மீது செல்வாக்கு செலுத்தியதாக பத்தில் ஆறு பேர் கூறினர் என்று அந்த ஆய்வு காண்பித்தது.
தொலைக்காட்சி மற்றும் திரைப்பட வன்முறை, பிள்ளைகளால் சொல்லர்த்தமாக எடுத்துக்கொள்ளப்படாது என்பதாகவும் அந்தப் பேரச்சமூட்டும் திரைப்படங்கள் அனைத்தும் அவர்கள்மீது எவ்வித பாதிப்பையும் கொண்டிருக்காது என்பதாகவும் சிலர் வாதாடக்கூடும். பிரிட்டிஷ் செய்தித்தாள் ஒன்று இவ்வாறு குறிப்பிட்டது: “அவ்வாறிருந்தால், அமெரிக்காவின் மத்திப மேற்கு பகுதியிலுள்ள பள்ளி அதிகாரக்குழு ஒன்று, பருவவயது மாற்றமடைந்த நிஞ்சா ஆமைகள் உள்ளூர் வடிகுழாய்களில் இல்லை என்று ஏன் ஆயிரக்கணக்கான பிள்ளைகளுக்குச் சொல்ல வேண்டியிருந்தது? ஏனென்றால், ஆமைகளின் இளம் விசிறிகள் அவற்றைத் தேடி வடிகுழாய்களுக்குள் தவழ்ந்து சென்றுகொண்டிருந்தனர்.”
இன்று ஐக்கிய மாகாணங்களில் அநேக இடங்களில், பேச்சுரிமைக்கும் கருக்கலைப்புக்கு எதிரான பேச்சால் ஏற்படுத்தப்பட்ட வன்முறைக்கும் இடையிலான குறிப்பிடத்தக்க வேறுபாடாக சிலர் கருதுகிற ஒன்றின் பேரில் காரசாரமான விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. கருக்கலைப்புக்கு எதிராக வாதாடுகிறவர்கள், கருக்கலைப்பைச் செய்யும் மருத்துவர்களும் கிளினிக் பணியாளர்களும் கொலைபாதகர்கள் என்றும், அவர்கள்தாமே வாழ்வதற்கான உரிமையைக் கொண்டில்லை என்றும் வெளிப்படையாக முறையிடுகிறார்கள். அவர்களில் வைராக்கியமான ஒருசிலர், இந்த மருத்துவர்களும் அவர்களுடைய உதவியாளரும் கொல்லப்படும்படி கேட்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் வாகன லைஸன்ஸ் ப்ளேட் எண்களைக் கண்டுபிடிக்கும்படி வேவுகாரர்கள் வைக்கப்பட்டு, அவர்களுடைய பெயர்களும் முகவரிகளும் அளிக்கப்படுகின்றன. அதன் விளைவாக, மருத்துவர்களும் கிளினிக் பணியாளர்களும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
“இது பேச்சு சுதந்திரத்தைப் பற்றிய பிரச்சினை அல்ல,” என்று அமெரிக்காவின் திட்டமிட்டு பெற்றோராகுதல் கூட்டிணைக் கழகத் தலைவர் (Planned Parenthood Federation of America) கூறினார். “கூட்டம் நிறைந்த அரங்கத்தில் ‘தீ!’ என்று சத்தம்போடுவதற்கு சமமானது இது. கூட்டம் நிறைந்த ஓர் அரங்கத்தை நாம் கொண்டிருக்கிறோம்; கடந்த ஒருசில வருடங்களில் கிளினிக்குகளில் நடக்கும் பெருவெள்ளம் போன்ற கொலைகளைச் சற்று பாருங்கள்.” இந்த வன்முறையை ஆதரிப்பவர்கள், அமெரிக்காவின் அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தத்தில்—பேச்சுரிமை—தங்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ள உரிமையைத்தான் அவர்கள் செயல்படுத்துவதாக வாதாடுகிறார்கள். அது இவ்வாறு தொடர்கிறது. இந்த உரிமை மீதான போராட்டங்கள் தொடர்ந்து பொது தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமாகப் போராடப்படும், நீதிமன்றங்கள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும், கவலைக்குரியவிதத்தில், எல்லாருடைய திருப்திக்கும் ஏற்றவாறு அல்ல.
பெற்றோர் என்ன செய்யலாம்
வீடுகள் பிள்ளைகளுக்கு புகலிடங்களாக இருக்க வேண்டுமே தவிர, தங்களைத் தன்னலத்துக்காக பயன்படுத்துகிறவர்களுக்கும் துர்ப்பிரயோகம் செய்கிறவர்களுக்கும் எளிதான பலியாட்களாகும் இடங்களாக, அல்லது அமைதலான ஆளுமைகளை உடையவர்கள் திடீர் மனநிலை மாற்றங்களை வெளிகாட்டத் தூண்டும் இடங்களாக இருக்கக் கூடாது. “டிவி வன்முறையை நிலையான பழக்கமாக உட்கொண்டிருக்கிறபோதிலும், உங்கள் பிள்ளை வன்முறையுள்ளதாக ஒருபோதும் ஆகாதென நீங்கள் உறுதியாக நினைக்கலாம்,” என்று பெற்றோரிடம் பேசிக்கொண்டிருந்த ஐ.மா. பல்கலைக்கழக பேராசிரியர் சொன்னார். “ஆனால் அதேவிதமான நிலையான பழக்கத்தில் வளர்க்கப்பட்ட வேறொருவரின் பிள்ளையால் உங்கள் பிள்ளை கொல்லப்படாது அல்லது ஊனமாக்கப்படாது என்று நீங்கள் உறுதியாக இருக்க முடியாது.” பின்னர் அவர் இவ்வாறு தூண்டினார்: “டிவி வன்முறையை பிள்ளைகள் பார்ப்பதைக் கட்டுப்படுத்துவது, காரில் பாதுகாப்பு இருக்கைகள், சைக்கிளில் தலைக்கவசங்கள், தடுப்பூசிகள் போடுதல், நல்ல ஊட்டச்சத்து ஆகியவற்றோடுகூட பொது நல நிகழ்ச்சிநிரலின் பாகமாக வேண்டும்.”
தெரியாத ஒருவர் உங்கள் வீட்டிற்குள் வந்து மோசமான மொழியைப் பயன்படுத்தி, உங்கள் பிள்ளையிடம் பாலினத்தையும் வன்முறையையும் பற்றி ஆபாசமாக பேசுவதை நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள் என்றால், வானொலியும் தொலைக்காட்சியும் அந்தத் தெரியாதவராக இருக்க அனுமதிக்காதீர்கள். அதை எப்போது அணைக்க வேண்டும் அல்லது வேறொரு சானலுக்கு மாற்ற வேண்டும் என்று அறிந்திருங்கள். உங்கள் பிள்ளை தொலைக்காட்சியிலும் கம்ப்யூட்டரிலும், அவனுடைய அறையின் தனிமையிலும்கூட எதைப் பார்க்கிறானென்று அறிந்திருங்கள். கம்ப்யூட்டரையும் அவன் அணுகக்கூடிய வலைப்பின்னல்களையும் எப்படிப் பயன்படுத்துவது என்று அவன் அறிந்திருந்தால், ஒவ்வொரு இரவும் அவன் உட்கொள்கிறவற்றில் என்ன இருக்கிறது என்பதை அறிந்தால் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள். உங்கள் பிள்ளை என்ன பார்க்கிறானோ அதை நீங்கள் ஏற்கவில்லை என்றால், வெறுமனே கூடாது என்று சொல்லிவிட்டு, ஏன் என்று விளக்குங்கள். அவன் கட்டுப்படுத்தப்படுவதால் செத்துப்போய்விட மாட்டான்.
முடிவாக, உங்கள் பிள்ளைகள் இந்தப் பொல்லாத காரிய ஒழுங்குமுறையின் பழக்கங்களின்படி—அதன் ஆபாசமான வன்முறையான பேச்சு மற்றும் செயல்களுடன்—அல்ல, கடவுளுடைய நியமங்களின்படி வாழ கற்றுக்கொடுங்கள். (நீதிமொழிகள் 22:6; எபேசியர் 6:4) எல்லா கிறிஸ்தவர்களும் அதன்படி வாழ வேண்டிய சமயோசிதமான சில ஆலோசனைகளை அப்போஸ்தலன் பவுல் அளித்தார். “பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது. அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்.”—எபேசியர் 5:3, 4.
[பக்கம் 10-ன் படங்கள்]
சில டிவி நிழ்ச்சிகள் குற்றச்செயலுக்கும் ஒழுக்கக்கேட்டிற்கும் வழிநடத்தலாம்