பிளாஸ்டிக் பணம்—உங்களுக்கு ஏற்றதா?
“மிஸ்டர் பிளாஸ்டிக் ஃபென்டாஸ்டிக்” என்று சிலரால் அறியப்படும் ஒரு கலிபோர்னிய ஆள், செல்லுபடியாகும் 1,265 கடன் அட்டைகளின் (credit cards) ஒரு திரளைத் திரட்டினார். இந்த ஆள் பொதுவாக கடன்-அட்டை வைத்திருக்கும் ஒருவரைப் பிரதிநிதித்துவம் செய்கிறதில்லை என்று வைத்துக்கொள்வோம். இருப்பினும், கடன் அட்டை வைத்திருக்கும் உண்மை நவீன மேற்கத்திய சமுதாயத்தின் நன்கு வளர்ந்த ஓர் அம்சமாக மாறியிருக்கிறது என்பது பரவலாக ஒப்புக்கொள்ளப்படுகிறது.
1986-ல் ஐ.மா.-வின் குடும்பங்களில் பெரும்பாலும் முக்கால் பாகம், ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கடன் அட்டைகளை வைத்திருந்தன என்று அமெரிக்கன் டிமோகிராஃபிக்ஸ் குறிப்பிடுகிறது. ஐக்கிய மாகாணங்களில் மட்டும் 25,000-க்கும் மேற்பட்ட வித்தியாசமான கடன் அட்டைகள் இருக்கின்றன. எண்ணெய் நிறுவனங்கள், சில்லறை விற்பனைக் கடைகள், விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் ஆகியவை தங்களுடைய சொந்த அட்டைகளை வழங்குகின்றன. 1991-ல், அமெரிக்கர்கள் 23 கோடியே 20 லட்சம் செல்லுபடியாகும் மாஸ்டர்கார்ட்ஸ் மற்றும் விசாஸ் என்ற அட்டைகளை வைத்திருந்தனர். இவை இரண்டும் மிகப் பேரளவில் உபயோகத்திலிருந்த அட்டைகளாகும்.
பிளாஸ்டிக்-பண வியாபார ஸ்தாபனம் என்றழைக்கப்படுவது ஐரோப்பாவிலும் வளர்ந்து வருகிறது. இது அங்குப் போட்டியிடும் வங்கிகள் மற்றும் கடனுதவி நிறுவனங்களுக்கு இடையில், ஆர்வமிக்க நுகர்வோரைத் தங்கள் வாடிக்கையாளர்கள் ஆக்கிக்கொள்வதற்கான தீவிர போட்டிகளைத் தூண்டுவிக்கிறது. உலகமுழுவதும் இருக்கும் செல்லுபடியான கடன் அட்டைகளின் மொத்த எண்ணிக்கை 100 கோடிக்கும் அதிகம்! ஏன் இவ்வளவு ஏராளமான பிளாஸ்டிக் பணம்? அதன் உபயோகத்திலிருந்து மிக அதிகம் பயனடைவது யார்? கடன் அட்டை வைத்திருப்பவர்கள் எதிர்ப்படும் அபாயங்கள் மற்றும் பிரச்னைகளில் சில யாவை?
பயனடைவது யார்?
வங்கிகளும் கடன்-அட்டை நிறுவனங்களும் கணிசமான லாபத்தைச் சம்பாதிக்கின்றன. இந்த லாபம்—வருடாந்தர அங்கத்துவ கட்டணங்கள், தாமத பண-அடைப்பு கட்டணங்கள், வரம்பு-மீறியதற்கான கட்டணங்கள் போன்றவற்றை உட்படுத்தும்—கட்டணங்களில் இருந்து மட்டும் கிடைப்பதில்லை. ஆனால் அவற்றிற்கு வந்துசேரவேண்டிய பணத்தின்மேல் அவை விதிக்கும் உயர் வட்டியிலிருந்தும் கிடைக்கின்றன. ஆனால், சந்தேகமின்றி, கடன்-அட்டை வைத்திருப்பவர்கள் கணிசமான கடனுக்கு ஆளாகாதவரை அவை பணக் கட்டணங்களில் இருந்து லாபம் அடையமுடியாது. அவை விரும்புகிறதுபோலவே, ஐக்கிய மாகாணங்களில் மட்டும் லட்சக்கணக்கானோர் நிரந்தர கடனுக்குள் தங்களைத் தாங்களே வெறுமையாக்கியிருக்கின்றனர். கடன்-அட்டை வைத்திருக்கும் அமெரிக்கர்களில் சுமார் 75 சதவீதத்தினர் தங்களுடைய கணக்குகளில் செலுத்தவேண்டிய பாக்கிகளை வைத்திருக்கின்றனர். இதற்காக அவர்கள் ஒவ்வொரு மாதமும் அளவுக்குமீறிய வட்டி கொடுக்கவேண்டும். பொதுவாக கடன்-அட்டை கடனுள்ள அமெரிக்கர் ஒருவர் தன்னுடைய மாத கணக்கில் $2,000-க்கும் அதிகம் கடன்பட்டிருக்கிறார்.
“தங்களுடைய கணக்கு அறிக்கையில் உள்ள முழு கடனையும் அவற்றைப் பெற்ற உடனேயே திருப்பிக் கொடுக்கக்கூடிய, அட்டை வைத்திருக்கும் 15 முதல் 20 சதவீதத்தினர் வங்கியின் இந்தத் திட்டத்திற்காக ஒன்றும் பங்களிப்பதில்லை,” என்று கடன் வனம் (The Credit Jungle) என்ற தனது புத்தகத்தில் அல் கிரிஃபின் குறிப்பிடுகிறார். “அட்டை வைத்திருப்போரில், மீதி 80 முதல் 85 சதவீதத்தினர் கடன் அட்டை திட்டத்தை, வங்கி நடத்திவரும் மிகவும் லாபகரமான சேவையாக்குகின்றனர். நடுத்தர அளவிலான $10 மில்லியன் வங்கி அட்டை சேவை ஆண்டுக்கு மொத்தம் $1.8 மில்லியன் லாபத்தைத் தரக்கூடும்,” என்று அவர் மேலும் கூறுகிறார். கடன்-அட்டை வியாபாரத்தில் மிகப் பெரும் பங்கைக் கொண்டிருக்கும் ஐ.மா. வங்கி 1990-ல், ஏறக்குறைய $100 கோடியை தனது நுகர்வோர் சேவைகளிலிருந்து, முக்கியமாக தனது கடன் அட்டை துணை நிறுவனத்திலிருந்து, லாபமாக அடைந்தது.
அபாயங்களுக்கு எச்சரிக்கையாய் இருங்கள்
இந்தச் சிறிய பிளாஸ்டிக் துண்டுகளுக்கு ஓர் இருண்ட பக்கமும் உண்டு. எடுத்துக்காட்டாக, சற்றுமுன் நீங்கள் வென்றிருக்கிற ஒரு பரிசைப்பற்றி முன்பின் தெரியாத ஒரு நிறுவனத்திலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு உங்களுக்கு எப்போதாவது வந்ததுண்டா? அநேகருக்கு வந்திருக்கிறது. உங்களுடைய பரிசைப் பெற்றுக்கொள்ள, நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் சில அடிப்படை கேள்விகளுக்குப் பதில் அளிக்கவேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறாக அழைத்தவர் உங்களுடைய கடன்-அட்டை எண்ணைக் கேட்கிறார். ஏன்? ஏனென்றால் எதார்த்தத்தில் நீங்கள் எந்தப் பரிசையும் வெல்லவில்லை. அவ்வாறு அழைப்பவர், உங்களுடைய கணக்கில் அஞ்சல் மூலமோ அல்லது தொலைபேசி வழியாகவோ பொருட்களைத் தருவித்து வாங்குவதற்காக, வெறுமனே உங்கள் கடன்-அட்டை எண்ணைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார்.
ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான டாலர்கள் நஷ்டம் ஏற்படுத்தும் கடன்-அட்டை மோசடிகளில் பல தரங்கள் உள்ளன. இந்தப் பிரச்னை உங்களை நேரடியாக பாதிக்காதபோதிலும்கூட, கடன் அட்டை ஒன்றை நீங்கள் வைத்திருந்தால், அத்தகைய ஏமாற்று வேலைகளுக்கு ஒருவேளை உயர் கட்டணம் மற்றும் வட்டி வீதங்கள் வழியாக நீங்கள் கொடுத்துக் கொண்டிருக்கலாம்.a
கடன் அட்டைகளின் உண்மையான அபாயம் கடனின் ஆழத்தில் நீங்கள் விழுந்தால் வரும் துன்பங்கள் மற்றும் வருத்தங்களில்தான் உள்ளது. “உடனடியாக பணம் கொடுத்து வாங்கவேண்டுமானால் தங்களுக்கு வாங்க இயலாத ஆடம்பர பொருட்களை வாங்குவதற்கும் சேவைகளைப் பெறுவதற்குமான தூண்டுதலை எதிர்க்கமுடிகிற எண்ணற்ற மக்கள், தங்களுடைய கைகளில் ஒரு கடன் அட்டை இருக்குமானால் அத்தூண்டுதலை அவர்களால் சிறிதுகூட எதிர்க்க முடிவதில்லை. குடும்பங்களில் அநேகம் ராஜபோகமாக சாப்பிட்டதற்காக கடந்த மாதம் கடன் அட்டையில் எழுதப்பட்ட கணக்கைக் கொடுத்துவிட்டு இரண்டு வாரங்களுக்கு அரை வயிற்றுச் சாப்பாடு சாப்பிடுகின்றன,” என்று குறிப்பிடுகிறது கடன் வனம்.
ஆனால் உங்கள் வருமானத்தின் பெரும்பகுதியை உங்கள் கடன்கள் உட்கொள்ளுமானால், உங்களுடைய உணவுப் பழக்கங்களைவிட அதிகம் பாதிக்கப்படக்கூடும். “அமெரிக்கர்கள் சராசரியாக, ஒவ்வொரு மாதமும் லோன்களுக்கும் கடன்களுக்கும் கடன் அட்டைகளுக்கும் திருப்பிக் கொடுக்க, தங்கள் வருமானத்தின் சுமார் 75 சதவீதத்தை செலவுசெய்கின்றனர்” என்று கிரெடிட்—தி கட்டிங் எட்ஜ் அறிவிக்கிறது.
வருந்தத்தக்க வகையில், நுகர்வோர் அநேகருக்கு, ஒரு கடன் அட்டை, பொருளாதார பரதீஸுக்கு நுழைவாயிலாய் இல்லாமல், நீண்டகால கடனுக்குள்ளும் கவலைக்குள்ளும் வழுக்கிவிடும் ஒரு வீழ்ச்சியாகவே இருக்கிறது. உதாரணமாக, அமெரிக்க நுகர்வோர், சமீப ஆண்டுகளில் கடன்-அட்டை கடனை சேர்த்துவைத்திருக்கின்றனர். இது அதிகளவு கடன்-அட்டைக்கு பணம் அடைக்கத் தவறுதலிலும், தவணைத் தவறுதலிலும், திவாலான நிலையிலும் விளைவடைந்திருக்கிறது. 1990-ல் ஐ.மா. நுகர்வோர் மொத்தத்தில் 3 லட்சத்து 20,000 கோடி டாலர்களை கடன் அட்டைகளிலும், வாகன லோன்களிலும், அடமானங்களிலும் கடன்பட்டிருந்தனர்! நடுத்தர குடும்பம் சுமார் $35,000 கடன்பட்டிருந்தது, ஒரு வருடத்திற்கு சுமார் $3,500 வட்டி கொடுத்தது.
ஆச்சரியமேதுமின்றி, தனி நபர் திவாலாகிப் போவது திடீரென அதிகரித்திருக்கிறது. 1990-ல் பதிவு ஏற்படுத்தும் வகையில் 7,20,000 அமெரிக்கர்கள் திவாலானதற்காக தாக்கல்செய்தனர். இது 1989-ஐவிட கிட்டத்தட்ட 17-சதவீத அதிகரிப்பாகும். 1991-ல் இந்த எண்ணிக்கை 8,00,000-த்திற்கு உயர்ந்தது. 1992-ல் புதிய பதிவு 9,71,517 தனிநபரின் திவால்களாக இருந்தது.
தங்கள் கடன் அட்டை உபயோகத்தைக் கட்டுப்படுத்த முடியாததாகக் கண்ட சிலர் அவற்றைத் தங்களிடமிருந்து நீக்கிப் போடுவதைத் தெரிந்து கொண்டிருக்கின்றனர். மறுபட்சத்தில், தங்களுடைய வாழ்க்கையை அநாவசியமாக சிக்கலாக்கிக் கொள்ளாமல் கடன் அட்டைகளை ஞானமாக பயன்படுத்த மற்றநேகரால் முடிகிறது. (g93 12/8)
[அடிக்குறிப்புகள்]
a கடன் அட்டை மோசடிகளைத் தவிர்க்கும் வழிகளைப் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, டிசம்பர் 8, 1986, ஆங்கில விழித்தெழு! பத்திரிகையில் “கடன் அட்டைகள்—ஒரு ‘பிளாஸ்டிக் கண்ணி’யா?” என்ற கட்டுரையை தயவுசெய்து பார்க்கவும்.