கிரெடிட் கார்டுகள்—உங்களுக்குச் சேவைசெய்யுமா அல்லது உங்களை அடிமையாக்குமா?
ஐக்கிய மாகாணத்தை சேர்ந்த ஆங்கில ஆசிரியர் ஒருவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ஒவ்வொரு மாதமும், கிரெடிட் கார்டின் விவரங்களை நான் திறந்து பார்த்த மாத்திரத்தில், என்னால் சிரிக்கவும் முடியவில்லை அழவும் முடியவில்லை. பாக்கி இருந்த தொகையை என்னால் நம்பமுடியாமல் முறைத்து முறைத்து பார்க்கிறேன், பண விஷயங்களைப் பொருத்தமட்டில் என்னுள் இருக்கும் வேறு ஒரு மனிதன், செலவு என்னும் வண்டியை ஓட்டிக்கொண்டு விளையாட்டு பொருட்கள் விற்கும் கடைகளுக்கும், சாமான்கள் விற்கும் கடைகளுக்கும், சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும், பெட்ரோல் பங்க்குகளுக்கும் போனான் போலும்.”
கிரெடிட் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும்போது கடன் மடமடவென்று பெருகுவதை டாலோரஸ் என்பவரும் புரிந்துகொண்டார். அவர் சொல்கிறார்: “எந்தவித கஷ்டமும் இன்றி கிரெடிட் கார்டை உபயோகிக்கலாம். அது பணமாக இருந்தால் நான் அப்படி செலவழிக்க மாட்டேன். ஆனால் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு ஷாப்பிங் செய்வதில் வித்தியாசம் இருக்கிறது. காசு கரைவதை உங்களால் பார்க்கவே முடியாது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கார்டை கொடுக்கவேண்டும் அது உங்களிடத்திற்குத் திரும்பவும் வரும்.”
ஐக்கிய மாகாணங்களில் கடந்த ஜூன், 1995-ல் கிரெடிட் கார்டின் கடன் தொகை $19,520 கோடியை எட்டியது, இது கார்டு வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் சராசரி கடன் தொகை $1,000-க்கும் அதிகம் என்பது ஆச்சரியமாய் இல்லை! ஆனால், ஆரம்பகால வட்டி குறைவு, ஆண்டு கட்டணம் கிடையாது போன்ற சில சலுகைகளைக் காட்டியே இந்தக் கிரெடிட் கார்டு கம்பெனிகள் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துக்கொண்டே இருக்கின்றன. சமீப மாதங்களில் கிரெடிட் கார்டுகளை வாங்கும்படி எத்தனை அழைப்புகள் உங்களுக்கு வந்தன? ஐ.மா.-வில் உள்ள ஒரு சராசரி குடும்பத்திற்கு, வருடத்திற்கு சுமார் 24 என்ற கணக்கில் அழைப்புகள் வருகின்றன. ஐக்கிய மாகாணத்தில், கார்டை வழக்கமாக வைத்திருக்கும் ஒருவர் 1994-ல் பத்துக் கார்டுகள் என்ற கணக்கில் உபயோகித்தார், இது கடந்த ஆண்டை விட அவரது கடன் தொகையில் 25 சதம் அதிகரிப்பை குறிக்கிறது.
ஜப்பானில் டெலிபோன்களைவிட கிரெடிட் கார்டுகளே அதிகம்; 20 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு ஜப்பானியருக்கும் சராசரியாக இரண்டு கார்டுகள் என்ற விகிதத்தில் கிரெடிட் கார்டுகள் உள்ளன. மற்ற ஆசிய நாடுகளில் கிட்டத்தட்ட 12 குடிமக்களில் ஒருவருக்கு என்ற கணக்கில் 12 கோடிக்கும் அதிகமான கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மாஸ்டர்கார்டு இன்டர்நேஷனலை சேர்ந்த ஜேம்ஸ் கெஸின் கூறுகிறார்: “கிரெடிட் கார்டு கொடுக்கல் வாங்கலுக்குப் பெருமளவில், அதிவேகமாக வளர்ந்துவரும் இடம் ஆசியா.” விசா இன்டர்நேஷனலின் பிரெஸிடெண்ட் எட்மன்டு பி. ஜென்சன் முன்கணிக்கிறார்: “கார்டை மையம்கொண்ட ஒரு சமுதாயமாக நீண்ட காலத்திற்கு நாம் இருப்போம்.”
மனித வாழ்க்கை என்னும் அஸ்திபாரத்தின் அடியில் கிரெடிட் கார்டு தொடர்ந்து ஆழ குழி தோண்ட போவது என்னவோ நிச்சயம். சரியாக உபயோகித்தால் அவை ஆதாயம் தரும் பொருளாகவும் மாறலாம். ஆனால், தவறாக உபயோகித்தால் தேளைப்போல் கொட்டவும் செய்யலாம். கிரெடிட் கார்டைப்பற்றி அடிப்படை அறிவை பெற்றிருப்பது, இந்தப் பொருளாதார உபகரணத்தைப் பயன்தரும் விதத்தில் உபயோகிக்க உங்களுக்கு உதவலாம்.
கார்டுகளின் வகைகள்
விசா கார்டுகள், மாஸ்டர் கார்டுகள் போன்ற பாங்கு கார்டுகளே அதிக பரவலாக மதிக்கப்படுபவை. இந்தக் கார்டுகள் நிதி நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன, அவற்றிற்கு ஆண்டு கட்டணம் உண்டு, உதாரணமாக வருடத்திற்கு $15 முதல் $25 வரை இருக்கும். சில சமயங்களில் வாடிக்கையாளர் கடனை எப்படி அடைத்தார் மற்றும் உபயோகித்தார் என்ற பதிவை பார்த்து கட்டணம் விலக்கப்படும். ஒவ்வொரு மாதமும் முழு தொகையைச் செலுத்திவிடலாம், பொதுவாகவே இதற்கு வட்டி இருக்காது அல்லது மாதாந்தர தவணையில் தொகையைச் செலுத்தலாம், ஆனால் இதில் அதிக வட்டி உள்ளடங்கியுள்ளது. விண்ணப்பதாரரின் கடன் பின்னணியைப் பார்த்து செலவு செய்வதற்கான வரம்பு நிர்ணயிக்கப்படும். அவர் கடனை திருப்பி அடைக்கும் திறனைப் பார்த்து பெரும்பாலும் இந்த வரம்பு உயர்த்தப்படும்.
தானியங்கி “கேஷ்-மெஷின்”-லிருந்து முன் பணம் பெறுவதற்கும் அல்லது வங்கி அளிக்கும் செக்குகளைப் பெறுவதற்கும் பாங்கு கார்டுகளில் வழிவகைகள் உள்ளன. ஆயினும், பணத்தை இப்படி பெறுவது அதிக செலவை உட்படுத்தும். பொதுவாகவே கடன்வாங்கிய ஒவ்வொரு $100-க்கும் $2 முதல் $5 வரை ஒருவரிடமிருந்து வசூலிக்கப்படும். அத்தகைய முன் பணத்திற்கு, பணம் எடுக்கப்பட்ட தேதியிலிருந்தே வட்டி ஈட்டப்படும்.
பாங்குகளைத் தவிர பல ஸ்டோர்களும், சங்கிலி தொடர் தேசிய ஸ்டோர்களும் கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன, அவை அதே நிறுவன ஸ்தாபனங்களால் மதிக்கப்படுகின்றன. அத்தகைய கார்டுகளுக்குப் பொதுவாகவே ஆண்டு கட்டணம் கிடையாது. இருப்பினும், கெடுவுக்குள் முழு தொகையும் செலுத்தவில்லை என்றால், வங்கி கார்டுகளைக் காட்டிலும் உயர்ந்த அளவு வட்டி விதிக்கப்படலாம்.
எண்ணெய் கம்பெனிகள் ஆண்டு கட்டணம் இல்லாத கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. இத்தகைய கார்டுகள் பொதுவாகவே கம்பெனிகளின் சர்வீஸ் நிலையங்களில் மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, சில சமயங்களில் குறிப்பிட்ட ஹோட்டல்களில் ஏற்கப்படுகின்றன. ஸ்டோர்களின் கார்டுகளைப் போலவே தொகையை வட்டி இன்றி முழுவதுமாக செலுத்தலாம் அல்லது தவணையில் ஒரு காலப்பகுதிக்கு வட்டியோடும் செலுத்தலாம்.
பயணத்திற்கும் பொழுதுபோக்கிற்கும் டைனர் கிளப், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போன்ற கார்டுகளும் உள்ளன. இத்தகைய கார்டுகளுக்கு ஆண்டு கட்டணம் உண்டு, ஆனால் வட்டி கிடையாது, ஏனென்றால் மாதாந்தர பில் வந்தவுடன் முழு தொகையும் செலுத்தப்படுகிறது. இருப்பினும், இந்தக் கார்டுகளுக்கும் வங்கி கார்டுகளுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெளிவாக இல்லை. உதாரணத்திற்கு, அதே அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஆப்டிமா கார்டுகளையும் வழங்குகிறது, இதற்கு வட்டி உண்டு, இது வங்கி கார்டை போன்றே உள்ளது.
ஐ.மா. மார்க்கெட்டில் நுழைந்துகொண்டிருக்கும் வேறு வகையான ஒரு கார்டுதான் ஸ்மார்ட் கார்டு, அதில் ஒரு மெமரி சிப் புதைக்கப்பட்டிருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. கேஷ் கார்டை போலவே இதனை உபயோகிக்கலாம், ஏனென்றால் அந்தச் சிப்பில் வரையறுக்கப்பட்ட தொகைக்கு புரோகிராம் செய்யப்பட்டிருக்கும். வாங்கப்படும் பொருளின் விலையை அதில் பங்கெடுத்துக்கொள்ளும் வியாபாரி இதிலிருந்து கழித்துவிடுவார். கடந்த வருடத்திற்குள் பிரெஞ்சுக்காரர்கள் 2.3 கோடி, ஜப்பானியர்கள் 1.1 கோடி ஸ்மார்ட் கார்டுகளை ஏற்கெனவே உபயோகித்துக் கொண்டிருந்தனர். 2000 வருடத்திற்குள் உலகம் முழுவதிலும் அத்தகைய கார்டுகளின் எண்ணிக்கை 100 கோடிக்கும் மேல் கிடுகிடுவென்று உயரும் என முன்கணிக்கப்படுகிறது.
ஒரு கார்டை வாங்குவதற்கு முன், கார்டின் நிபந்தனைகளின் பேரில் ஒருவர் கவனம் செலுத்தினால் அவர் புத்திசாலி. ஐ.மா. அரசாங்க கூட்டாட்சி வங்கி முறையால் (Federal Reserve System) வெளியிடப்பட்ட சிற்றேட்டின்படி “வருடாந்தர விகித அளவு (annual percentage rate [APR]), ஆண்டு கட்டணம், சலுகை காலம் முதலியன சிந்திக்க வேண்டிய முக்கிய நிபந்தனைகளாகும்.” முன் பணம் பெறும் போதும், வரம்பு மீறி செலவு செய்யும்போது எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதும், கெடு முடிந்தப்பின் பணம் செலுத்தும்போது எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய மற்ற காரணிகளில் அடங்கும்.
பண கட்டணங்கள்—எவ்வளவு அதிகம்?
மக்கள் தங்களுடைய மாதாந்தர கடன் பாக்கியை முழுமையாக செலுத்த தவறும்போது அவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் பண கட்டணங்கள் அவர்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும். கடனின் உண்மையான மதிப்பை அளவிட APR-ஐ உதாரணத்திற்கு எடுத்துக்கொளுங்கள். வருடாந்தர வட்டி விகிதத்திற்கும் APR-க்கும் உள்ள தொடர்பை பின்வருமாறு விளக்கலாம். உங்களுடைய நண்பர் ஒருவருக்கு நீங்கள் $100 கடன் கொடுத்ததாக வைத்துக்கொள்வோம், வருட கடைசியில் அவர் $108-ஆக உங்களுக்குத் திருப்பி தருகிறார். அப்படியென்றால், உங்களுடைய நண்பர் உங்களுக்கு வருடாந்தர வட்டியாக 8 சதவிகிதம் தருகிறார். இருப்பினும், ஒருவேளை அவர் $100 கடனை 12 மாத தவணைகளாக, ஒவ்வொரு மாதமும் $9-ஆக திருப்பி தந்தார் என்று வைத்துக்கொள்வோம். வருட கடைசியில் மொத்த தொகை $108-ஆகத்தான் இருக்கும், ஆனால் கடன் கொடுத்த நீங்கள் ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்தப்பட்டபோது அதனை உபயோகிக்க முடிந்தது. அந்தக் கடனுக்கு கணக்கிடப்பட்ட APR 14.5 சதவிகிதம்!
ஐ.மா. கூட்டாட்சி வங்கி முறையால் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, பாங்கு கிரெடிட் கார்டுகளின் மீதான APR-கள் 9.94 சதவிகிதத்தில் தொடங்கி 19.80 சதவிகிதம் வரை செல்கிறது, பொதுவாகவே 17 முதல் 19 சதவிகிதத்திற்கு இடையே உள்ளது. சில நிதி நிறுவனங்கள் குறைந்த அளவான ஆரம்ப கால வட்டி விகிதங்களை அளிக்கின்றன; பொதுவாகவே 5.9 சதவிகிதம் அளிக்கின்றன, ஆரம்ப காலம் முடிந்தவுடன் அவை உயர்த்தப்படலாம். ஏதேனும் அபாயம் நேரலாம் என ஒருவேளை நிறுவனம் உணர்ந்தால், வட்டி விகிதங்களின் அளவும்கூட உயர்த்தப்படும். தாமதமாக பணம் செலுத்துவோருக்கு சில நிறுவனங்கள் வட்டி விகிதத்தை உயர்த்துவதன் மூலம் அபராதம் விதிக்கின்றன. வரம்பு கடந்து செலவு செய்வோருக்கும் அபராதம் விதிக்கப்படும்.
ஆசிய நாடுகளில் வருடாந்தர கட்டண விகிதங்கள் மிகவும் உயர்வாக இருக்கக்கூடும். உதாரணத்திற்கு சில பாங்கு கார்டுகளின் மீது ஹாங்காங்கில் 24 சதவிகிதமும், இந்தியாவில் 30 சதவிகிதமும், இந்தோனீஷியாவில் 36 சதவிகிதமும், பிலிப்பீன்ஸில் 45 சதவிகிதமும், சிங்கப்பூரில் 24 சதவிகிதமும், தைவான்னில் 20 சதவிகிதமும் வட்டியாக வசூலிக்கப்படுகின்றன.
தெளிவாகவே, கிரெடிட் கார்டுகள் சுலபமான ஆனால் அதிக செலவை உட்படுத்தும் கடனை அளிக்கின்றன. ஸ்டோருக்குச் சென்று கிரெடிட் கார்டை கொண்டு வாங்குவதன் மூலம் கட்டணங்கள் அதிகரித்து கொண்டே போவதும், அதற்கான பணத்தைத் தவணை முறையில் செலுத்துவதும் எப்படி இருக்கிறது என்றால், நீங்கள் பாங்குக்குப் போய் எக்கச்சக்கமான வட்டிக்கு பணத்தை கடன் வாங்குவதைப்போல் இருக்கிறது. இருந்தாலும், ஐக்கிய மாகாணங்களில் கார்டு வைத்திருப்பவர்களில் சுமார் 4 பேரில் 3 பேர் அதையே செய்கிறார்கள்! அவர்கள் கடன் பாக்கியை வைத்துக்கொண்டு, அதிக வட்டி கட்டுகிறார்கள். ஐக்கிய மாகாணங்களில், கடந்த ஆண்டில் விசா மற்றும் மாஸ்டர் கார்டில் இருந்த சராசரி மாதாந்தர கடன் பாக்கி $1,825, இந்தக் கடன் தொகையை பலபேர் கிரெடிட் கார்டுகளாக சுமந்து திரிகிறார்கள்.
உங்களை சிக்க வைக்கும் வலை
கார்டை உபயோகிப்போர் தாங்கள் சிக்கிக்கொண்டு தவிக்கும் பணப் பிரச்சினைகளை உணர்வதே கிடையாது என்று பாங்கு கார்டுஹோல்டர்ஸ் ஆஃப் அமெரிக்காவின் நிர்வாக இயக்குனராக இருக்கும் ரூத் சுஸ்வைன் கூறுகிறார். அவர் பின்வருமாறு சுட்டிக்காட்டுகிறார், அட்டையாளர் ஒருவர் குறைந்தபட்ச செலுத்தும் தொகையாக மாதத்திற்கு $36 கட்டினால், கிரெடிட் கார்டின் பாக்கி தொகையான $1,825 கடனை அடைக்க அவருக்கு 22 வருடங்களுக்கு மேல் எடுக்கும். a அவ்வளவு காலத்திற்குள், அசலோடு வட்டியும் சேர்ந்துகொள்வதால், அவர் பட்ட $1,825 கடனுக்காக, சுமார் $10,000 கட்டவேண்டியிருக்கும்! அதுவும் அந்தக் கார்டில் வேறு எந்தக் கட்டணமும் திணிக்கப்படாதிருந்தால் மாத்திரமே! ஆகவே, அதிகம் செலவழிக்கும் இயல்புடையவாராக நீங்கள் இருந்தால், உங்கள் பர்ஸில் உள்ள கிரெடிட் கார்டே உங்களை சிக்க வைக்கும் வலையாக மாறிவிடும்.
மக்கள் எவ்வாறு சிக்கிக்கொள்கிறார்கள்? முதல் கட்டுரையில் குறிப்பிட்ட ராபர்ட் சொல்கிறார்: “தேவை இல்லாத பொருட்களையெல்லாம் நாங்கள் வாங்கினோம். உடற்பயிற்சி கிளப்பில் சேர்ந்தோமே ஒழிய அதனை பயன்படுத்தவே இல்லை. ஊர்தி மனையை (mobile home) வாங்கி, அதைப் பொருத்துவதில் ஆயிரக்கணக்கான டாலர்களை செலவு செய்தோம், அது அவ்வளவு விலைபெறுமா என்றுகூட கணக்கிடவில்லை. எங்கள் கடனின் பின்விளைவுகளை நாங்கள் உண்மையில் சிந்திக்கவேயில்லை.”
முந்தைய கட்டுரையில் குறிப்பிடப்பட்ட ரீனா, தனக்கும் தன் கணவர் மைக்கேலுக்கும் என்ன நேர்ந்தது என்று விளக்குகிறார்: “அதை ஏன் கேட்கிறீர்கள், நாங்கள் அப்படியே கடனில் விழுந்துவிட்டோம். கல்யாணத்திற்கு அப்புறம், எங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் கிரெடிட் கார்டை கொண்டு வாங்கினோம். ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தைக் கட்டுவதற்கும், கார்டுகளால் வாங்க முடியாத பொருட்களை வாங்குவதற்கும் நாங்கள் எங்களுடைய கிரெடிட் கார்டுகளின் மீது முன் பணம் வாங்கினோம். ஒரேவருடத்தில் எங்களுடைய கடன் $14,000-ஐ எட்டியது. மாதா மாதம் கிரெடிட் கார்டுக்கு நாங்கள் செலுத்திய பணத்தில் பெரும் பகுதி வட்டிக்கே போகிறது என்று நாங்கள் உணர்ந்தபோது, அது எங்கள் கண்களைத் திறந்தது.”
நீங்கள் கார்டுகளை வைத்திருக்க வேண்டுமா?
கோடிக்கணக்கான மக்களை பொருளாதாரம் என்னும் புதைசேரில் அமுக்கியுள்ள இந்தக் கிரெடிட் கார்டுகளைப்பற்றி சிந்தித்தப்பின், ஐயோ எனக்கா, வேண்டவே வேண்டாம் என்று சிலர் சொல்லலாம். 32 வயதான டாஃப்னி சொல்கிறார்: “என் அப்பா அம்மா ஒருபோதும் கிரெடிட் கார்டை உபயோகிக்கவில்லை, ஒன்று வேண்டுமே என்று அவர்கள் ஆசைப்படுவதும் கிடையாது.” உண்மையில் ஐ.மா.-வில் உள்ள அட்டையாளர்களில் 4 பேரில் ஒருவர்தான் தன்னுடைய கார்டை புத்தியோடு உபயோகிக்கிறார். அவரே மிக உயர்ந்தளவான வட்டி கட்டுவதன் தொல்லை ஏதும் இல்லாமல் நன்மை அடைகிறார். அப்படிப்பட்ட ஒருவர்தான் மரியா. அவர் சொல்கிறார்: “இதிலிருக்கும் வசதி எனக்குப் பிடித்திருக்கிறது. என்னுடன் அதிகப் பணத்தை சுமந்து செல்ல வேண்டியதில்லை. எங்கேனும் எனக்குத் தேவையான பொருட்கள் தள்ளுபடி விற்பனையில் கிடைக்கும்போது என்னால் வாங்க முடிகிறது.”
மரியா தொடர்ந்து கூறுகிறார்: “பொருட்களை வாங்குவதற்கு போதுமான பணம் என்னிடம் இருக்கிறதா என்பதை நான் எப்போதும் நிச்சயப்படுத்திக்கொள்வேன். முன் பணம் பெறும் சலுகையை நான் ஒருபோதும் உபயோகிப்பதில்லை. எந்தவொரு பண கட்டணத்தையும் நான் செலுத்தியது கிடையாது.” ஒரு ஹோட்டலில் ரிசர்வேஷன் கண்டிப்பாக கிடைப்பதற்கு கிரெடிட் கார்டை உபயோகிப்பது வசதியாக உள்ளது, ஐக்கிய மாகாணங்களில் ஒரு காரை வாடகைக்கு எடுக்கும்போதும் கிரெடிட் கார்டு அவசியம் தேவை.
இருப்பினும், சிலர் ஷாப்பிங் செய்கையில் பார்த்த மாத்திரத்தில் தூண்டப்படுகிறார்கள். அவர்கள் ஒருவேளை பணத்தைக் கொண்டு வாங்கும்போது அதிக ஜாக்கிரதையோடு வாங்குபவர்களாக இருக்கலாம். கடனே தங்கள் வாழ்க்கை போக்காக ஆகவேண்டும் என்று மைக்கேலும் ரீனாவும் விரும்பவில்லை. எனவே அவர்கள், அவசரம் இருந்தால் ஒழிய கிரெடிட் கார்டுகளை ஐந்து வருடங்களுக்கு பயன்படுத்தக்கூடாது என்று முடிவுசெய்தார்கள்.
கார்டுகளை உபயோகிக்கலாமா வேண்டாமா என முடிவுசெய்வது உங்களுடைய தனிப்பட்ட தீர்மானம். ஆனால், நீங்கள் உபயோகித்தால், அவற்றை கவனமாக உபயோகியுங்கள். வசதிக்கான ஒரு சாதனமாக அவற்றை உபயோகியுங்கள். கூடுமானவரை கடன் மேலும் மேலும் சேருவதைத் தவிர்த்திடுங்கள். உங்களுடைய வரவு செலவை வெற்றிகரமாக சமாளிப்பதில், கிரெடிட் கார்டு செலவை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகவும் அவசியம். உங்களால் இன்னும் என்ன செய்ய முடியும் என்று சிந்தியுங்கள்.
[அடிக்குறிப்பு]
a குறைந்தபட்ச செலுத்தும் தொகை என்பது $10 அல்லது புதிய பாக்கியில் கணக்கிடப்படும் ஒரு சிறிய சதவிகிதத்திற்கு சமமான தொகை, இரண்டில் எது அதிகமோ அது.
[பக்கம் 7-ன் படம்]
கிரெடிட் கார்டுகளின் உபயோகம் தொல்லையின்றி இருப்பது எதுவரை—பில்கள் கைக்கு வரும்வரை