போட்டி விளையாட்டுகளில் கடவுள் ஒரு அணியினரை மட்டும் ஆதரிக்கிறாரா?
வெற்றி வாகைசூடிய ஒரு ஓட்ட வீராங்கனை, தான் படைத்த சாதனைக்காக நன்றி செலுத்தும்பொருட்டு, மண்டியிட்டு ஜெபம் செய்வதைப்போன்று சைகை செய்கிறாள். ஆயினும், அந்தப் போட்டியில் பங்குபெற்ற மற்ற ஓட்டக்காரர்களும் தங்களுக்கு வெற்றிதரும்படி கடவுளிடம் ஜெபம் செய்தனர்—ஆனாலும் தோற்றுப் போயினர் என்பதை நாம் நினைத்துக்கொள்ள வேண்டும்.
குத்துச் சண்டைப் போட்டியின் முதல்சுற்று தொடங்குமுன், இரண்டு குத்துச் சண்டை வீரர்கள் குத்துச் சண்டை மேடையின் எதிர் மூலைகளில் மண்டியிடுகின்றனர். வெற்றியை வேண்டி கடவுளிடம் செய்யும் மெளன ஜெபத்திற்கு அறிகுறியாக, இருவரும் தங்களுக்குத்தானே சிலுவை அடையாளமிட்டுக் கொள்கின்றனர். பின்னர் ஒருவன் மற்றவனைக் குத்தி வீழ்த்துகிறான். மற்றுமொரு போட்டியில், ஒரு வீரன் மட்டுமே வெற்றிக்காக கடவுளிடம் வேண்டலாம், ஆனாலும் அவன் எத்தனைமுறை ஜெயிக்கிறானோ அத்தனைமுறை தோற்றுப் போகிறான்.
அணிகளாக பங்குபெறும் போட்டிகளில், விளையாட்டுத் தொடங்குமுன், விளையாடிக் கொண்டிருக்கும்போது அல்லது விளையாட்டிற்குப் பிறகும்கூட, விளையாட்டு வீரர்களின் அணிகள் ஜெபிக்கலாம். எடுத்துக்காட்டாக, அமெரிக்கன் சூப்பர் பெளல் கால்பந்தாட்டப் போட்டியின் இறுதி நொடிகளின்போது, உதையாளன் ஒருவன் ஒருநிலை உதைக்காக தயாராகிறான். அந்த உதையில் அவன் கோல் போட்டால் அவனது அணி வெற்றிபெறும், கோல் போட தவறினால் தோற்றுவிடும். அந்த உதையாளன் பின்னர் சொன்னான்: “அதற்காக நான் ஜெபம் செய்தேன்.” ஆனால் எதிர் அணியினரில் சிலரும் அதற்காகத்தான்—எதிர் அணியினரின் தோல்விக்காகத்தான்—ஜெபித்தார்கள்.
இரு அணியினருமே ஜெபித்தாலும், எப்படியோ ஒரு அணி தோற்றுத்தான் ஆகவேண்டும். வெற்றிக்காக ஜெபித்த விளையாட்டு வீரர்கள் உள்ள வெற்றிபெற்ற அணியும்கூட அடுத்த போட்டியில் தோற்றுப்போகலாம். மெய்யாகவே, இறுதியில், கால்பந்தாட்டப் போட்டிப் பருவம் முடிவடைகையில், ஒரு அணியைத் தவிர மற்ற அணிகள் அனைத்தும் தோற்கத்தான் வேண்டும். ஏனென்றால் ஒரு தொடராட்டப் போட்டியில் ஒரே ஒரு அணி மட்டுமே அனைத்து அணிகள்மீதும் வெற்றிபெற முடியும். எனினும், தோல்வியடைந்த அந்த அணிகளிலும்கூட வெற்றிக்காக ஜெபித்த ஆட்டக்காரர்கள் இருக்கத்தான் செய்தனர்.
“ப்ளீஸ், உங்கள் ஜெபங்களை சேர்த்து வையுங்கள்,” என்ற தலைப்பைக் கொண்ட ஒரு ஆங்கிலக் கட்டுரையில், போட்டி விளையாட்டு எழுத்தாளர் ஒருவர் எழுதினார்: “நீங்கள் கடவுளோடு எவ்வளவு நெருங்கிய உறவைக் கொண்டிருக்கிறீர்கள் என்று ஒரேயடியாக பீத்திக்கொண்டிருப்பதனாலேயே அது கண்டிப்பாகவே உண்மையாகிவிடாது. . . . இரண்டாம் உலக யுத்தத்தில், ஜெர்மானியப் போர் வீரர்களின் பெல்ட்களில் காட் மிட் யூன்ஸ் என்ற வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன. அதன் மொழிபெயர்ப்பானது: ‘கடவுள் எங்களோடு இருக்கிறார்’ என்பதே.” மற்றொரு போட்டி விளையாட்டு எழுத்தாளர் இவ்வாறு குறிப்பிட்டார்: “கால்பந்தாட்ட போட்டிகளில் கடவுள் எந்த அணியையும் ஆதரிப்பதில்லை. இதைப்போன்ற பூமிக்குரிய காரியங்களெல்லாம் சர்வவல்லமையுள்ள கடவுளால் அல்ல, ஆனால் ஆண்களாலும் பெண்களாலுமே தீர்மானிக்கப்படுகின்றன.”
அப்போஸ்தலன் பேதுரு எழுதினார்: “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல . . ., எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்.” வன்முறையான போட்டி விளையாட்டுகளில் ஈடுபடுவது ‘நீதியைச் செய்வதல்ல.’ (அப்போஸ்தலர் 10:34, 35; ரோமர் 14:19) வெற்றிக்காக கேட்பவர்களின் ஜெபத்தைக் கடவுள் கேட்டிருந்து, விளையாட்டு வீரன் ஒருவன் காயமடைந்திருந்தாலும் அல்லது மரித்திருந்தாலும்கூட கடவுள்மேல் பழியைப் போடலாமா?
கடவுளுடைய வார்த்தை சொல்லுகிறது: ‘நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படிகேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார்.’ (1 யோவான் 5:14) ஜெபங்கள் கேட்கப்பட வேண்டுமென்றால், ஒருவர் கடவுளுடைய சித்தத்தையும் அவருடைய நோக்கங்களையும் அறிந்திருக்கவேண்டும்; செயல்களும் அதற்கு இசைவாக இருக்கவேண்டும்.—மத்தேயு 6:9, 10-ஐ ஒப்பிடுக.
கடவுளுடைய சித்தமும் நோக்கங்களும் போட்டி விளையாட்டுகளோடு சம்பந்தப்பட்டவையாக இல்லை, இல்லவேயில்லை. ஆகவே, விளையாட்டுகளில் வெற்றிக்காக ஜெபங்கள் செய்யப்படும்போது, கடவுள் கேட்கிறாரா? மிக நிச்சயமாக இல்லவேயில்லை.