நான் மாற்றிக்கொள்ள விரும்பாத ஒரு வாழ்க்கை
அநேக மக்கள் தாங்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையை குறித்து வருந்துகின்றனர். அவர்கள் சொல்லலாம்: ‘வாழ்க்கையை என்னால் மீண்டும் தொடங்க முடிந்தால், எவ்வளவு காரியங்களை நான் வித்தியாசமாக செய்வேன்!’ ஆனால் என்னுடைய வாழ்க்கையை திரும்பவும் நினைத்துப்பார்க்கையில், சுலபமான ஒன்றாக இல்லாதபோதிலும், நான் மாற்றிக்கொள்ள விரும்பாத ஒரு வாழ்க்கையாக அது இருந்திருக்கிறது.
என்னுடைய பெற்றோரால் யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தியாக நான் வளர்க்கப்பட்டேன், கடவுளுடைய சட்டங்கள் சிசு பிராயத்திலிருந்து என்னுடைய இருதயத்தில் பதியும்படி செய்யப்பட்டேன். (2 தீமோத்தேயு 3:15) யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் நான் போகாத சமயத்தை என்னால் நினைவுகூர முடியவில்லை. ஓர் இளம் பெண்ணாக, கடவுளுடைய ராஜ்ய ஆட்சியில் பரதீஸான பூமியின்மீது பைபிளினுடைய நித்திய ஜீவ நம்பிக்கையைப்பற்றி மக்கள் கற்றுக்கொள்ளும்படி உதவிசெய்ய அவர்களைச் சந்திப்பதற்கு வயதான சாட்சிகளோடும் நான் சென்றேன். (மத்தேயு 24:14) அந்த ராஜ்யம், உலகத்தின் நம்பிக்கை (The Kingdom, the Hope of the World) என்று தலைப்பிடப்பட்ட சிறுபுத்தகத்தை ஐந்து வயதில் மற்றவர்களுக்கு அளித்துக்கொண்டிருந்ததை என்னால் இன்னும் நினைவுகூர முடிகிறது.
என்னுடைய பெற்றோர் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய சத்தியத்தை முதலாவதாக 1917-ல் கேள்விப்பட்டார்கள். சர்ச்சுக்குப் போகிறவர்களாக இருந்தபோதிலும், அ.ஐ.மா., நியூ ஜெர்ஸியிலுள்ள பிரிட்ஜ்டனில், உவாட்ச்டவர் சொஸையிட்டியின் பிரயாணப் பிரதிநிதி ஒருவரால் கொடுக்கப்பட்ட சொற்பொழிவில் சத்தியத்தின் தொனியை அவர்கள் அறிந்துகொண்டனர். என்னுடைய தாத்தா அதே சொற்பொழிவை செவிகொடுத்துக் கேட்டார், அவரும்கூட தான் கேட்டுக்கொண்டிருந்தது சத்தியம் என்பதை நம்பும்படி செய்யப்பட்டார். பின்பு, நான் 14 வயதாய் இருக்கையில், மிச்சிகன், டெட்ராய்ட்டில் நடந்த யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டில், என்னுடைய வாழ்க்கையை யெகோவாவுக்கு நான் ஒப்புக்கொடுத்திருப்பதை அடையாளப்படுத்திக்காட்டும் வகையில் முழுக்காட்டப்பட்டேன்.
அந்த ஆண்டுகளில் பைபிள் படிப்புக்கான எங்களுடைய வாராந்தர கூட்டங்கள் எங்களுடைய வீட்டில் நடத்தப்பட்டன. கடைசியாக ஒரு கடை வாங்கப்பட்டு, ஒரு ராஜ்ய மன்றமாக மாற்றப்பட்டது. அப்போது ஒருசில ராஜ்ய மன்றங்களே இருந்தன. ஆனால் இன்றோ, உலகமுழுவதுமாக, இப்படிப்பட்ட பத்தாயிரக்கணக்கான மன்றங்கள் 70,000-ற்கும் மேலான யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளுக்கு இடவசதியளிக்கின்றன.
முழுநேர ஊழியத்தை ஆரம்பித்தல்
1939-ல் என்னுடைய தாயார் ஒரு முழுநேர ஊழியராக அவர்களுடைய வாழ்க்கைத் தொழிலை ஆரம்பித்தார்கள், 85-ம் வயதில் அவர்கள் மரிக்கும் வரையாக தொடர்ந்து செய்தார்கள். என்னுடைய அண்ணன் டிக்கும் நானும் எங்களுடைய முழுநேர சேவையாகிய வாழ்க்கைத் தொழிலை ஏப்ரல் 1, 1941-ல் ஆரம்பித்தோம்; அந்தச் சமயத்தில் இரண்டாவது உலகப் போர் ஐரோப்பாவில் உச்சநிலை அடைந்தது. யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிரான பகைமை எங்கும் பரவியிருந்தது, ஏனென்றால் அரசியல் சம்பந்தமாக நாங்கள் நடுநிலைமை வகித்தோம்.
எங்கள் சபையிலிருந்த மூன்று இளம் ஆண் சாட்சிகள் தங்களுடைய நடுநிலைமையின் காரணமாக ஐந்து ஆண்டுகளுக்குச் சிறை தண்டனை விதிக்கப்பட்டார்கள். அவர்களில் இரண்டு பேர் இன்னும் சபையில் மூப்பர்களாக இருப்பதைக் காண்பது எவ்வளவு உற்சாகமூட்டுவதாக இருக்கிறது! பின்பு என்னுடைய அண்ணன் யெகோவாவின் சாட்சிகளுடைய உலக தலைமை காரியாலயம் இருக்கிற நியூ யார்க்கிலுள்ள புரூக்லின் பெத்தேலில் சேவைசெய்தார். எங்களுடைய சொந்த ஊராகிய நியூ ஜெர்ஸியிலுள்ள மில்வில்லில் இன்னும் மூப்பராக சேவைசெய்துகொண்டிருக்கிறார்.
அந்தப் போர் வருடங்கள், மற்ற இடங்களில் இருந்ததைப்போலவே, ஐக்கிய மாகாணங்களிலும் யெகோவாவின் சாட்சிகளுக்கு அதிகக் கடினமாக இருந்தன. கலகக்கும்பலின் நடவடிக்கை சர்வசாதாரணமாய் இருந்தது. பள்ளியிலிருந்து பிள்ளைகள் நீக்கப்பட்டார்கள். (லில்லியன் கோபைட்டாஸ் குளோஸா வாழ்க்கையின்பேரில் ஜூலை 22, 1993, ஆங்கில விழித்தெழு!-வைப் பார்க்கவும்.) எங்களுடைய ஆயிரக்கணக்கான ஆவிக்குரிய சகோதரர்கள் சிறைச்சாலைக்குச் சென்றார்கள், எனவே பெண்களாகிய நாங்கள் பலவிதமான சபை வேலைகளைச் செய்ய வேண்டியதாயிருந்தது. அதனால்தான், இளம் வயதிலேயே நான் புத்தக ஊழியக்காரியாக இருந்தேன். நாங்கள் யெகோவாவின் உதவியுடன் கடினமான போர் வருடங்களைத் தப்பிப்பிழைத்தோம். சகோதரர்கள் சிறைச்சாலையிலிருந்து திரும்பி வந்தபோது, காரியங்கள் முன்னேறத் தொடங்கின.
இந்தச் சமயத்தில்தான், பெத்தேலிலிருந்து வந்த லைமன் ஸ்விங்கல் என்பவர் எங்களுடைய சபைக்கு விஜயம்செய்தார். புரூக்லினுக்கு வந்து, இரண்டாவது உலகப் போரை தொடர்ந்து ஐரோப்பாவிலுள்ள எங்களுடைய உடன் சாட்சிகளின் சார்பாக செய்யப்பட்டு வருகிற நிவாரணப் பணிகளில் உதவிசெய்யும்படி அவர் என்னை உற்சாகப்படுத்தினார். ஆகவே, மார்ச் 1948-ல் நான் புரூக்லினுக்குச் சென்றேன்.
ஒரு புதிய சபையில் மகிழ்ச்சியான வருடங்கள்
புரூக்லின் சென்டர் என்ற என்னுடைய புதிய சபைக்கு நான் நியமிக்கப்பட்டேன். அப்பொழுது வித்தியாசமான ஒரு பெயரில் இருந்தபோதிலும், முதல் உலகப் போருக்கு முன்பு நியூ யார்க் நகரத்திலும் அருகிலுள்ள பகுதிகளிலும் ஏற்படுத்தப்பட்டிருந்த சபைகளில் அதுவே முதல் சபையாக இருந்தது. அச்சமயத்தில் அது புரூக்லின் ஹைட்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், 1948-ல் புரூக்லின் சென்டருக்கு நான் வந்தபோது, புரூக்லினிலுள்ள 5-வது சாலை, 8-வது தெருவில் அது இருந்தது. சுமார் 30 ஆண்டுகளாக, குறுகிய தூரத்திற்கு அப்பாலுள்ள ஒரு புதிய மன்றம் வாங்கப்பட்டது வரையாக, வாடகைக்கு எடுக்கப்பட்ட அந்த இடம் எங்களுடைய கூட்டம் நடக்கும் இடமாக சேவித்தது.
புரூக்லினில்—ஹென்றி தெருவில்—நான் செய்த பிரசங்க வேலையின் முதல் நாளை ஒருபோதும் மறக்கமாட்டேன். சிறு பட்டணத்தில் சாட்சிகொடுப்பதிலிருந்து சற்று வித்தியாசமாக அது இருந்தது. ஆனால் விரைவிலேயே நான் ஓர் இளம் பெண்ணை சந்தித்தேன். அவள் பைபிள் பிரசுரங்களை ஏற்றுக்கொண்டு, ஒரு வீட்டு பைபிள் படிப்புக்கும் சம்மதித்தாள். காலப்போக்கில், அவளுடைய இரண்டு பிள்ளைகள் செய்ததுபோல, யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட ஓர் ஊழியக்காரியாக அவள் மாறினாள். அவளுடைய மகன் ஆர்தர் ஐயனோனீ தன்னுடைய மனைவி லின்டாவுடனும், அவர்களுடைய மகனோடும் மருமகளோடும் தற்பொழுது புரூக்லின் பெத்தேலில் சேவைசெய்துவருகிறார்.
நாங்கள் பிரசங்கம்செய்த சபையின் பிராந்தியம் பெரியதாகவும் பலன்தருவதாகவும் இருந்தது. யெகோவாவின் உதவியுடன், என்னுடைய பைபிள் மாணாக்கர்களில் அநேகர் சத்தியத்தைக் கற்று முழுக்காட்டுதல் பெற்றதை என்னால் காணமுடிந்தது. இந்நாள் வரையாக, அவர்களில் சிலர் முழுநேர ஊழியர்களாக இந்நாட்டில் சேவைசெய்துவருகிறார்கள். மற்றவர்கள் தூர தேசங்களில் மிஷனரிகளாக இருக்கிறார்கள். சிலர் சபைகளில் மூப்பர்களாக ஆனார்கள். மேலும் அநேகர் கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியின் உண்மையுள்ள அறிவிப்பாளர்களாக வேறுசில பொறுப்புகளில் சேவைசெய்திருக்கிறார்கள்.
வளர்ச்சியானது மலைக்க வைப்பதாய் இருந்தது. ஆரம்பத்தில் நியூ யார்க் நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் ஒரேவொரு சபை இருந்த இடத்தில், இப்பொழுது நியூ யார்க் நகரத்தில் மட்டுமே சுமார் 400 சபைகள் இருக்கின்றன. இந்த விஸ்தரிப்பு சிலவற்றில் பங்குபெற்றதால் என்னே அருமையான நினைவுகளை நான் உடையவளாயிருக்கிறேன்!
பிரெஞ்சு பேசும் விருப்பம் மலர்கிறது
1960-களில், ஹைதியிலிருந்து குடிபெயர்ந்து வந்திருந்த பிரெஞ்சு பேசுகிற மக்கள் அநேகரை நாங்கள் சபையின் பிராந்தியத்தில் கண்டுபிடிக்க ஆரம்பித்தோம். பெரும்பான்மையர் கொஞ்சம்தான் ஆங்கிலம் பேசினர் அல்லது கொஞ்சம்கூட பேசவில்லை. இங்கே ஒரு சவால். பைபிளைப்பற்றி அதிகத்தைக் கற்றுக்கொள்ள நாங்கள் அவர்களுக்கு எவ்வாறு உதவமுடியும்? நான் பிரெஞ்சு பேசவில்லை, ஆனால் ஓர் அடிப்படை பைபிள் பாடநூலின் ஆங்கிலப் பிரதியை ஒரு கையிலும், அந்தப் புத்தகத்தின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பை மறுகையிலும் வைத்துக்கொண்டு என்னால் பைபிள் படிப்புகள் நடத்தமுடிந்தது.
என்றபோதிலும், இப்படிப்பட்ட மக்கள் ஆவிக்குரிய விதத்தில் வளருவதற்கு பிரெஞ்சில் எந்தக் கூட்டங்களும் நடைபெறவில்லை. அதனால்தான் புரூக்லினைப் பார்வையிட வந்த பிரெஞ்சு பேசும் மிஷனரியாகவுள்ள சாட்சி எவரும் உதவிக்காக உடனடியாகக் கேட்கப்பட்டனர். எங்களுடைய உதவிக்கு வந்தவர்களில் முதலானவர் நிக்காலா ப்ரிஸார் என்பவராவார், அவர் குஆடலூப்பில் கிளைக் காரியாலயக் குழுவின் ஒத்திசைவிப்பாளராக இருக்கிறார். சகோதரி பெர்தா லுவீடோண் வீட்டில் எங்களுக்கு முதல் பொதுப் பேச்சை பிரெஞ்சில் அவர் கொடுத்தார், இந்தச் சகோதரி இன்னும் யெகோவாவை உண்மையுடன் சேவித்துக்கொண்டிருக்கிறார். இருபத்தேழு பேர் ஆஜராயிருந்தார்கள்.
இருப்பினும், அந்தச் சமயத்தில், ஸ்பானிய மொழியைத் தவிர, நியூ யார்க் நகரில் அந்நிய மொழிபேசும் சபைகளே இல்லை. ஆகவே, முறைப்படியான பிரெஞ்சு பேசும் சபையை ஸ்தாபிப்பதைப்பற்றிய எண்ணத்தைக் கற்பனைசெய்து பார்ப்பதுவும்கூட கடினமாய் இருந்தது. உண்மையில் சொல்லப்போனால், பிரயாணக் கண்காணி ஒருவர் காரியங்களை இன்னும் சோர்வூட்டும்படி தோன்றச் செய்தார்; அப்பொழுதிருந்த கொள்கையானது, இந்நாட்டில் வசிக்கிற மக்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ளும்படி உற்சாகப்படுத்துவதே என்று எங்களுக்குத் தெரிவித்தார்.
உவாட்ச் டவர் சொஸையிட்டியின் தலைவராக பின்பு ஆன சகோதரர் ஃப்ரட் W. ஃப்ரான்ஸ் உற்சாகத்தின் ஊற்றுமூலராய் திகழ்ந்தார். அவர் சொன்னார்: “யெகோவாவுக்கு சித்தமானால், மேரி, பிரெஞ்சு சபை ஒன்று உருவாகும்.” மேலும், புரூக்லின் சென்டர் சபையின் நடத்தும் கண்காணியாக இருந்த சகோதரர் ஹாரி பலாயன் என்பவரும் உற்சாகமூட்டுபவராய் இருந்தார். இராஜ்ய மன்றத்தைப் பயன்படுத்தாத மாலைவேளைகளில், பிரெஞ்சு பேசக்கூடிய சிறப்புப் பேச்சாளர் வருகிறபொழுதெல்லாம் நாங்கள் முறைப்படியற்ற சபை புத்தக படிப்பையும் பொதுப் பேச்சுக்களையும் அனுபவிக்கலாம் என்பதாக அவர் சொன்னார்.
இதற்குள்ளாக, ஹைதியிலிருந்து இங்கு மாறிவந்த முழுக்காட்டுதல் பெற்ற எண்ணற்ற சகோதரர்களை நாங்கள் கொண்டிருந்தோம்; ஆனால் பிரெஞ்சு மொழியில் அமைப்பு சார்ந்த வழிநடத்துதலை அளிப்பதற்கு இன்னும் ஒருவரும் போதிய அனுபவமில்லாமல் இருந்தனர். பின்பு, பாரிஸில் படித்தவரும் இப்பொழுது புரூக்லின் பெத்தேல் குடும்பத்தின் அங்கத்தினருமான சகோதரர் தீமோத்தி கால்ஃபஸ் என்பவர் எங்களுடைய சூழ்நிலைமையை அறிந்துகொண்டார். பெத்தேலில் வேலைசெய்த பிறகு ஒவ்வொரு சனிக்கிழமையும் அவர் ஊழியத்தில் ஈடுபட வருவார். இங்கு வசித்துக்கொண்டு ஆனால் எங்கு கூட்டுறவுகொள்வது என்று தெரியாமலிருந்த ஹைதி நாட்டு சகோதர சகோதரிகளை நாங்கள் தேடுவோம்.
விரைவில் சுமார் 40 பேர் எங்களோடு கூட்டுறவுகொள்ள ஆரம்பித்தார்கள். பிரெஞ்சில் முறைப்படியான சபை புத்தக படிப்பு ஒன்றை நடத்த எங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக சங்கத்திற்கு எழுதும்படி எங்களுடைய வட்டாரக் கண்காணியை நாங்கள் கேட்டுக்கொண்டோம். இதற்கு ஒப்புதலளிக்கப்பட்டபோது நாங்கள் எவ்வளவாய் மகிழ்ச்சியடைந்தோம்! பின்பு, வழக்கமான பொதுப் பேச்சுக்களும் வாராந்திர காவற்கோபுர படிப்பும் நடத்துவதற்கான அனுமதியையும் நாங்கள் பெற்றோம்.
முதல் பிரெஞ்சு சபை
டிசம்பர் 1, 1967-ல், ஐக்கிய மாகாணங்களிலேயே முதலாவதான பிரெஞ்சு பேசும் சபையை ஸ்தாபிப்பதற்கான அங்கீகாரத்தை நாங்கள் பெற்றோம். புரூக்லின் சென்டர் மற்றும் பிராஸ்பெக்ட் சபைகளோடு ராஜ்ய மன்றத்தை அது பகிர்ந்துகொள்ளும். நாங்கள் கிளர்ச்சியடைந்தோம்! தாங்கள் புரிந்துகொள்கிற மொழியில் எல்லாரும் அதிகளவான ஆவிக்குரிய முன்னேற்றத்தைச் செய்வார்கள் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். சபை உருவாகுவதற்கு நாங்கள் அரும்பாடுபட்ட அந்த எல்லா ஆண்டுகளின்போதும் அதிகமாகப் போற்றப்பட்டது, புரூக்லின் சென்டர் ஊழியக் குழுவை ஏற்படுத்திய ஹாரி பலாயன், ஜார்ஜ் ஹேடடு, கார்லோஸ் க்வைலஸ் போன்ற சகோதரர்களின் ஆதரவே.
நாங்கள் வேகமாக வளர்ச்சியடைந்தோம். சீக்கிரத்திலேயே நியூ யார்க்கிலுள்ள மன்ஹாட்டன், க்வீன்ஸ், நையாக் ஆகிய இடங்களில் புதிய பிரெஞ்சு சபைகள் உருவாக்கப்பட்டன. இந்த விஸ்தரிப்பில் உதவிசெய்தவர்கள், புரூக்லின் பெத்தேலில் இருந்த ஜெஃப் கெல்ட்ஸும் டாம் சீசலும் ஆவர். சகோதரர் கெல்ட்ஸ் எங்களுடைய வட்டாரக் கண்காணியாக சேவித்தார், சகோதரர் சீசல் எங்களுடைய மாவட்ட மாநாட்டு குழுவில் சேவைசெய்திருக்கிறார். பிரெஞ்சுமொழி பேசப்படுகிற நாடுகளிலிருந்து தங்களுடைய உடல்நிலையின் காரணமாக ஐக்கிய மாகாணங்களுக்குத் திரும்பிவரவேண்டியதாய் இருந்த மிஷனரிகள் போன்ற வேறுசிலரும் உதவிசெய்தனர். அவர்களுடைய உதவி எவ்வளவு விலையேறப்பெற்றதாய் இருந்தது! அவர்களில் ஒருவர் ஸ்டேன்லி போகஸ் ஆவார், இவர் நடத்தும் கண்காணியாகவும் உதவி வட்டாரக் கண்காணியாகவும் சேவிக்கிறார்.
5-வது சாலை, 8-வது தெருவில் இருந்த அந்தச் சிறிய பிரெஞ்சு தொகுதி டஜன் கணக்கான சபைகளாகவும் இரண்டு வட்டாரங்களாகவும் வளர்ந்திருப்பதைக் காண்பது என்னே ஒரு சந்தோஷமான சமயமாய் இருந்திருக்கிறது! உண்மையில் சொல்லப்போனால், ஏப்ரல் 1970-ல் எங்களுடய முதல் வட்டார மாநாட்டை பிரெஞ்சில் நாங்கள் கொண்டிருந்தோம். உவாட்ச் டவர் சங்கத்தின் அப்போதைய தலைவராக இருந்த சகோதரர் நேதன் H. நார், வெள்ளிக்கிழமை இரவு ஒரு சொற்பொழிவாற்றி எங்களை பாராட்டி பேசினார். அந்தக் கோடைகாலத்தில், நியூ ஜெர்ஸியிலுள்ள ஜெர்ஸி நகரில், ரூஸ்வெல்ட் ஸ்டேடியத்தின் பலகை இருக்கைகள்கொண்ட திறந்தவெளியில் எங்களுடைய முதல் மாவட்ட மாநாட்டையும் நாங்கள் அனுபவித்தோம். அது வெப்பமாகவும் தூசி நிறைந்ததாகவும் இருந்தது, ஆனால் ஆஜராயிருந்த 200-க்கும் மேற்பட்டவர்கள், நாடகம் உட்பட, முழு நிகழ்ச்சிநிரலையும் பிரெஞ்சில் கேட்பதற்கு மிக்க மகிழ்ச்சியாய் இருந்தனர்.
எங்களுடைய மாவட்ட மாநாட்டிற்காக யெகோவாவின் சாட்சிகளுடைய ஜெர்ஸி நகர அசெம்பிளி மன்றத்தைப் பயன்படுத்துவதற்கு 1986-ல் அனுமதிக்கப்பட்டதும் அதிகக் கிளர்ச்சியூட்டுவதாய் இருந்தது. கடந்த வருடத்தில் நடந்த பிரெஞ்சு மாநாட்டில் அங்கு 4,506 பேர் ஆஜராயிருந்தனர், 101 பேர் முழுக்காட்டுதல் பெற்றனர். அதேசமயத்தில், மற்றொரு பிரெஞ்சு மாநாடு ஃப்ளாரிடாவில் நடத்தப்பட்டது.
உண்மையுள்ள அறைத்தோழிகள்
அதிக இன்பகரமாய் இருந்திருக்கிற என்னுடைய வாழ்க்கையின் மற்றொரு பகுதியானது, புரூக்லினிலுள்ள ஓர் அப்பார்ட்மென்டை முழுநேர சேவையிலிருந்த மற்ற சகோதரிகளுடன் பகிர்ந்துகொண்டதாகும். முதல் வந்த இரண்டுபேர் (ரோஸ் லூயிஸ் பலாயன் மற்றும் மேட்லன் மர்டக் உவைல்டுமேன்) பெத்தேலுக்குச் சென்றுவிட்டனர். பிறகு இன்னும் இரண்டுபேரும் (லைலா ராஜர்ஸ் மாலஹன் மற்றும் மார்கெரட் ஸ்டெல்மா) பெத்தேல் குடும்பத்தின் அங்கத்தினர்களாக ஆனார்கள். மற்ற இரண்டுபேர் (பார்பரா ரபஸ்கி ஃபோர்ப்ஸ் மற்றும் வர்ஜிணியா புர்ரிஸ் பெல்ட்ரமெலீ) உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளிக்குச் சென்று, முறையே குவாதமாலா மற்றும் உருகுவேயில் இன்னும் சேவைசெய்துகொண்டிருக்கிறார்கள்.
சகோதரிகளாகிய நாங்கள் எப்பொழுதும் எங்களுடைய நாளைத் தொடங்குவதற்கு ஒரு வேதவசனத்தைக் கலந்தாலோசிக்க நேரமெடுத்துக்கொண்டோம். பின்பு நாங்கள் எங்களுடைய உலகப்பிரகாரமான வேலைக்கும் ஊழியத்துக்கும் போனோம். நாங்கள் இரவுநேரத்தில் களைப்பாகவும் பசியோடும் திரும்பிவந்தோம், ஆனால் மகிழ்ச்சியோடு திரும்பிவந்தோம்! பகிர்ந்துகொள்வதற்கான அநேக கட்டியெழுப்பும் அனுபவங்களை நாங்கள் கொண்டிருந்தோம்! உதாரணமாக, ஒரு சமயத்தில், எலீஸா போமாண் ஃபரீனா என்ற ஓர் இளம் பெண்ணுடன் நான் படித்துக்கொண்டிருந்தேன். தன்னுடைய படிப்பை இரவு 10:00 மணிக்கு வந்து நடத்தும்படி அவள் வற்புறுத்தினாள். அவள் வேகமாக முன்னேறினாள். நான் முதன்முறையாக அவளை ஊழியத்திற்கு அழைத்துச்சென்றேன், அவள் சொன்னாள்: “எப்பொழுதும் இதை நான் செய்யப்போகிறேன் என்று நினைக்காதீர்கள்!” ஆனால் அவள் முழுநேர ஊழியராக ஆனாள். பின்பு கிலியட் பள்ளிக்கு ஆஜராகி, அநேக ஆண்டுகள் ஈக்வடாரில் சேவைசெய்தாள். நியூ ஜெர்ஸியிலுள்ள ட்ரென்டனில் அவள் இன்னும் முழுநேரமாக சேவைசெய்துவருகிறாள்.
என்னுடைய அறைத்தோழிகளில் சிலர் பிள்ளைகளைப் பெற்று வளர்த்திருக்கிறார்கள், அவர்களும் யெகோவாவைப் போற்றி சேவைசெய்கின்றனர். என்னுடைய முன்னாள் அறைத்தோழிகளில் ஒருத்தியின் (வர்ஜிணியா ஹென்டி ராபர்ட்சன்) மகள், ஜோடி ராபர்ட்சன் சாக்கீமா கடந்த வருடத்தில் திருமணம் செய்துகொண்டு, தற்பொழுது அவளுடைய கணவனுடன் புரூக்லின் பெத்தேலில் சேவைசெய்கிறாள்.
என்னுடனிருந்த 20-க்கும் மேலான எண்ணிக்கையுடைய அறைத்தோழிகளில் அனைவரும் யெகோவாவுக்கு உண்மையுடன் நிலைத்திருந்தனர் என்று சொல்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர்களில் அநேகர் இன்னும் முழுநேர சேவையில் தொடர்ந்திருக்கின்றனர்.
எங்களுடைய உலகளாவிய குடும்பத்தை மகிழ்ந்தனுபவித்தல்
மற்ற தேசங்களிலுள்ள அநேக சாட்சிகளுடன் அறிமுகமானதும் எனக்கு சந்தோஷத்திற்கான ஊற்றுமூலமாக இருந்திருக்கிறது. உதாரணமாக, சங்கத்தின் தலைமை காரியாலயத்திற்கு அருகில் நாங்கள் வசித்துவந்ததால், அப்போது புரூக்லின் பெத்தேலில் இருந்த கிலியட் மிஷனரி பள்ளிக்கு ஆஜராகிற மாணாக்கர்களோடு கூட்டுறவுகொள்ளும் சிலாக்கியத்தை நாங்கள் கொண்டிருந்தோம்.
தற்பொழுது ஆஸ்திரியா கிளைக்காரியாலயத்தில் சேவைசெய்துவருகிற கியுண்ட்டர் புஷ்பெக், ஜெர்மனியிலுள்ள கிளைக்காரியாலயத்தில் சேவைசெய்துவருகிற வில்லி கோன்ஸ்டான்டி என்ற இரு மாணாக்கர்களும், கிலியடுக்கு ஆஜராகிக்கொண்டிருக்கையில் புரூக்லின் சென்டர் சபைக்கு நியமிக்கப்பட்டார்கள். உற்சாகத்தின் என்னே ஓர் ஊற்றுமூலராக அவர்கள் இருந்தார்கள்! என்னுடைய அறைத்தோழிகள், விரைவிலேயே கிலியட் சேவையில் ஈடுபடுவதைக் குறித்து சிந்தித்துக்கொண்டிருக்குமளவுக்கு, அவர்கள் நம்பிக்கையூட்டும் செல்வாக்கைச் செலுத்தினர்.
அநேக தடவைகள், அயல்நாடுகளுக்குப் பயணம்செய்வதன்மூலம் எங்களுடைய உலகளாவிய குடும்பத்துடன் என்னுடைய நட்பை விஸ்தரிக்கும் சிலாக்கியத்தைப் பெற்றேன். நான் சர்வதேச மாநாடுகளில் ஆஜராயிருந்திருக்கிறேன், நான் முன்பு அறிந்திருந்த அநேக கிலியட் பட்டதாரிகளை அவர்களுடைய நியமிப்புகளில் மீண்டும் பார்த்திருக்கிறேன்.
ஒரு முழுநிறைவான வாழ்க்கை
என்னுடைய வாழ்க்கையை திரும்பவும் நினைத்துப்பார்க்கையில், அது அதிசயிக்கத்தக்கதாய்—ஆசீர்வாதங்கள் நிறைந்த மகிழ்ச்சியான வாழ்க்கையாய்—இருந்திருக்கிறது என்று என்னால் சொல்லமுடியும். இந்தக் காரிய ஒழுங்குமுறையோடு வருகிற வழக்கமான பிரச்னைகளை நான் அனுபவித்திருக்கிறபோதிலும், என்னுடைய கடந்தகாலத்தைக் குறித்து வருந்துவதற்கு அல்லது அருமையான முழுநேர ஊழிய சிலாக்கியத்தைக் கைவிடுவதற்கு ஒன்றும் என்னை எப்பொழுதும் தூண்டுவிக்கவில்லை.
சிறுபிராயத்திலேயே என்னுடைய தாயார் சங்கீதம் 126:5, 6-ன் வார்த்தைகளை என் மனதில் பதியச்செய்தார்: “கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.” அந்த வசனம் இன்னும் எனக்கு ஒரு வழிகாட்டியாக சேவிக்கிறது. பிரச்னைகள் என்னவாக இருந்திருந்தாலும்சரி, அவற்றை மேற்கொள்ளுவதற்கான வழியைக் கண்டுபிடிப்பதற்கும் அந்தச் சந்தோஷத்தைக் காத்துக்கொள்வதற்கும் யெகோவா எனக்கு உதவிசெய்தார்.
என்னுடைய வாழ்க்கை, நிச்சயமாகவே நான் மாற்றிக்கொள்ள விரும்பாத ஒரு வாழ்க்கை. முழுநேர ஊழியத்தில் சுமார் 53 ஆண்டுகளை யெகோவாவுக்கு அளித்ததில் எனக்கு எந்த வருத்தமுமில்லை. அவருடைய புதிய உலகில் நித்தியகாலம் முழுவதுமாக அவரைத் தொடர்ந்து சேவிக்க நான் எதிர்நோக்கியிருக்கிறேன்.—மேரி கென்டல் கூறியபடி.
[பக்கம் 16-ன் படம்]
மேரி கென்டல்