அலிகேட்டர்கள்—அபூர்வமானவை, வெண்ணிறமானவை, நீலநிறக் கண்களுடையவை!
ஆடுபான் இன்ஸ்டிட்யூட் சார்பாக குர்ட் பர்னட்டால் தயாரிக்கப்பட்ட இந்தக் கீழ்க்கண்ட செய்தி வெளியீடு, தனிச்சிறப்பு வாய்ந்த வெள்ளை அலிகேட்டர்களைப் பற்றிய கதையை சொல்கிறது.
“அமெரிக்க அலிகேட்டரின் ஒரு மரபியல் திடீர்மாற்றமே (genetic mutation) வெள்ளைத் தோலையும் நீலநிறக் கண்களையுமுடைய அலிகேட்டர்கள் ஆகும். அவை வித்தியாசமான ஓர் இனத்தைச் சேர்ந்தவையல்ல. இந்தத் திடீர்மாற்றம் லூசிஸம் என்றழைக்கப்படுவதால், இவை லூசிஸ்டிக் அலிகேட்டர்கள் ஆகும். அல்பினோஸ் வெள்ளைத் தோலையும் இளஞ்சிவப்பு-மஞ்சள் நிற கண்களையும் கொண்டிருக்கின்றன. லூசிஸ்டிக் விலங்குகள் வண்ண புள்ளிகளையுடைய கண்களைக் கொண்டிருக்கின்றன. அல்பினிஸம் அபூர்வமாக இருக்கிறது, ஆனால் லூசிஸமோ அதைவிட அதிக அபூர்வமாக இருக்கிறது. லூசிஸம் மற்ற ஒருசில இனத்தைச் சேர்ந்த விலங்குகளில் இருப்பதாக அறியப்பட்டிருந்த போதிலும், வெள்ளை அலிகேட்டர்கள்தான் முதன்முதலாக அறியப்பட்ட லூசிஸ்டிக் அலிகேட்டர்களாக இருக்கின்றன.
“18 வெள்ளை அலிகேட்டர்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் ஒரே இனப்பெருக்க இடத்திலிருந்து (nest), 1987-ன் ஆகஸ்ட் மாத பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன. நியூ ஆர்லியன்ஸின் தென்மேற்கில் உள்ள லூயிஸியானாவின் ஹோமாவிற்கு அருகில் மூன்று கேஜன் மீனவர்கள் அவற்றைக் கண்டுபிடித்தனர். ஆடுபான் மிருகக்காட்சி சாலைக்கு 1987, செப்டம்பர் 5-ல் முதலில் கொண்டுவரப்பட்டவை வந்தடைந்தபோது அவை ஏறக்குறைய 1-2 வார வயதை அடைந்தவையாகவே இருந்தன. அந்த 18 வெள்ளை அலிகேட்டர்களோடுகூட, சாதாரண நிறமுடைய 7 குஞ்சுகளும் பிடிக்கப்பட்டன. கணக்கிடப்படாத எண்ணிக்கையையுடைய சாதாரணமானவை தப்பித்துப்போயின. அந்த இனப்பெருக்க இடம், லூயிஸியானா லேண்ட் அண்ட் எக்ஸ்ப்ளொரேஷன் கம்பெனிக்கு (LL&E) சொந்தமான நிலத்தில் அமைந்திருந்தது. அந்த இனப்பெருக்க பகுதி கவனிக்கப்பட்டு, முட்டைகள் சேகரிக்கப்பட்டு பொரிக்கப்பட்டிருந்தாலும், அதன்பிறகு ஒருபோதும் வெள்ளை அலிகேட்டர்கள் கூடுதலாக கண்டுபிடிக்கப்படவில்லை.
“18 வெள்ளை அலிகேட்டர்கள், அவற்றின் சாதாரண 7 குஞ்சுகள் ஆகிய அனைத்தும் ஆண்களாக இருக்கின்றன. இது சாத்தியமானதே, ஏனென்றால் ஒரு அலிகேட்டர் குஞ்சின் பாலினம், இனப்பெருக்க இடத்தின் தட்பவெப்பநிலையால் தீர்மானிக்கப்படுகிறது. ஆகவே அவை எல்லாமே ஆணாக இருக்கவோ, எல்லாமே பெண்ணாக இருக்கவோ அல்லது கலந்திருக்கவோ சாத்தியமுண்டு. இது எழுதப்படும்போது, அந்த அலிகேட்டர்கள் பாலின முதிர்ச்சியை அடைந்துவருகின்றன (5-6 வருடங்கள்). அந்த 18 அலிகேட்டர்களின் அளவு சுமார் 5 அடி [1.5 மீட்டர்], 50-60 பவுன்ட் [22-27 கிலோகிராம்] முதல் 8 அடி [2.5 மீட்டர்], 250 பவுன்ட் [112 கிலோகிராம்] வரையாக வேறுபடுகிறது. அது வித்தியாசப்பட்ட பராமரிப்பு முறைகளின் (management techniques) விளைவாக இருக்கிறது. LL&E-யின் அலிகேட்டர் பண்ணையில் வளர்க்கப்படுகிற அலிகேட்டர்கள் அதிவிரைவில் வளர்ந்துவருகின்றன.
“LL&E வெள்ளை அலிகேட்டர்களில் 14-ஐ சொந்தமாக கொண்டிருக்கிறது; 4-ஐ ஆடுபான் இன்ஸ்டிட்யூட்டுக்கு கனிவுடன் நன்கொடையாக அளித்துவிட்டது. அந்த இன்ஸ்டிட்யூட் தற்போது தனது ஆடுபான் மிருகக்காட்சி சாலையில் 2-ஐயும் தனது அமெரிக்காக்களின் மீன்காட்சி சாலையில் 2-ஐயும் காட்சிக்கு வைத்திருக்கிறது. மற்ற மிருகக்காட்சி சாலைகளுக்கும் மீன்காட்சி சாலைகளுக்கும் இரண்டு அலிகேட்டர்கள் சுழற்சிமுறையில் கொடுக்கப்பட்டுவருகின்றன. அவை ஏற்கெனவே ஐ.மா.-வில் ஒரு டஜனுக்கும் அதிகமான காட்சி சாலைகளுக்கும், ஜப்பானில் ஒன்றிற்கும் விஜயம் செய்திருக்கின்றன.
“வெள்ளை அலிகேட்டர்கள் உலகம் முழுவதும் புகழ்பெற்றும் மக்களால் அறியப்பட்டும் இருக்கின்றன. அவற்றின் கண்டுபிடிப்பு CNN ஒளிபரப்பு நிறுவனத்தினரால் உலகம் முழுவதும் ஒலிபரப்பப்பட்டது. அவை எண்ணற்ற முறைகள் டெலிவிஷனில் காட்சியளித்திருக்கின்றன. இவற்றில் டுடே ஷோ, நாஷ்வில்லி நெட்வர்க், டுநைட் ஷோ, CBS மார்னிங் நியூஸ், லேட் நைட் வித் டேவிட் லெட்டர்மேன், கிறிஸ்டியன் ப்ராட்காஸ்ட் நெட்வர்க், MTV, அநேக வெளிநாட்டு செய்திகள், காலை காட்சிகள் போன்றவை உள்ளடங்கும். செய்தித்தாள் கட்டுரைகளும் பத்திரிகை கட்டுரைகளும் அவ்வப்போது அவற்றை உலகளாவ முக்கியப்படுத்திக் காட்டுகின்றன. சில வருடங்களுக்குமுன் ஒரு பிரெஞ்சு பத்திரிகை அவற்றைப்பற்றி ஒரு கட்டுரையையும் போட்டோக்களையும் வெளியிட்டிருந்தது. பொதுமக்களிடமிருந்து அமோக வரவேற்பு இருந்ததால், அவர்கள் ஒரு தொடர் கட்டுரையை வெளியிட்டனர்.
“வெள்ளை அலிகேட்டர்கள் ஏன் அவ்வளவு குறைவாக இருக்கின்றன? அதெப்படி இதற்குமுன் யாரும் ஒன்றையும் கண்டதேயில்லை? முதலாவது இது ஓர் அபூர்வ திடீர்மாற்றமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், லூசிஸ்டிக் மற்றும் நிறமற்ற அலிகேட்டர்கள் சாதாரண அலிகேட்டர்களைவிட ஒரு தனித்தன்மை வாய்ந்த, சாவுக்கேதுவான பிரதிகூலத்தைக் கொண்டிருக்கின்றன. ஒரு அலிகேட்டர் குஞ்சு பொரிக்கப்படும்போது, அது 8-10 அங்குலம் [20-25 சென்டிமீட்டர்] நீளத்தையுடையதாகவே இருக்கிறது. சிறிது காலத்திற்கு தாய் அலிகேட்டர் அதன் இனப்பெருக்கிடத்தைப் பாதுகாக்கிறது. ஆனால் விரைவில் அலிகேட்டர் குஞ்சுகள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்கின்றன. சாதாரண அலிகேட்டர் குஞ்சுகள் மஞ்சள் மற்றும் கறுப்பு வரிகளைக் கொண்டதாக இருக்கின்றன. ஆகவே அவை தங்களுடைய சுற்றுப்புறங்களோடு இரண்டற ஒன்றிப்போய் காணப்படுகின்றன. ஒரு வெள்ளை குஞ்சோ மிக எளிதில் கண்டுபிடிக்கப்பட்டு பலவித கொன்றுதின்னும் விலங்குகளுக்கு இரையாகிறது.
“வெள்ளை அலிகேட்டர்களைப் பற்றிய ஆச்சரியமூட்டும் மற்றும் விநோதமான கடைசி இரண்டு உண்மைகள்: அவற்றின் கரும்புள்ளிகளும் அவற்றின் உணர்ச்சியியல்பும். வெள்ளை அலிகேட்டர்களில் வெகு சில மட்டுமே கரும்புள்ளிகளோடு பொரிக்கப்பட்டன. பெரும்பாலானவற்றிற்கு அவை இல்லவேயில்லாதிருந்தது. எனினும், அவை வளர்ந்துவந்தபோது, அநேகத்திற்கு சில கரும்புள்ளிகள் உண்டாகத் தொடங்கின. அநேகமாக எல்லா புள்ளிகளும் தலையையும் கழுத்தையும் சுற்றியே உருவாயின. அது அவற்றை தனித்தனியாக அடையாளம் கண்டுகொள்வதை சுலபமாக்கியிருக்கிறது. ஆனால் சில எந்தவித புள்ளிகளையும் ஒருபோதும் பெறவில்லை.
“இறுதியாக, அவை சாதாரண அலிகேட்டர்களைவிட உயிரூட்டத்தோடுகூடிய வம்புசெய்யும் மற்றும் உணர்ச்சிவசப்படும் சுபாவமுடையவையாக இருக்கின்றன. வெள்ளை அலிகேட்டர்களோடு பழகிய ஒவ்வொருவராலும் இது ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. இது ஏனென்றுதான் யாருக்கும் புரியவில்லை. ஆனால் அவை ஒப்பிடுகையில் மெதுவாக இயங்கும், எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கும் அலிகேட்டர்களைப் போல் நடத்தப்படுவதைவிட வேகமாக இயங்கும் முன்கோபி முதலைகளைப்போல நடத்தப்படுகின்றன. சதுப்புநிலத்தின் இந்த வெள்ளை அதிசயங்களைச் சூழ்ந்திருக்கும் அநேகப் புதிர்களில் மற்றொன்று!”—ஆடுபான் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த குர்ட் பர்னட்டால் எழுதப்பட்டது.