உலகத்தைக் கவனித்தல்
வானொலி நிலையம் அதன் இசையை மாற்றிக்கொள்கிறது
அதிகமாக ராப் இசையை ஒலிபரப்பும் ஒரு கலிபோர்னிய வானொலி நிலையம், “சமுதாயத்துக்கு பொறுப்பற்றதாக” வானொலி நிலையம் கருதும் பாடல்களை இனிமேலும் ஒலிபரப்பாது என்பதாக அண்மையில் அறிவித்து ஓர் அசாதாரணமான நிலைநிற்கையை எடுத்தது. “போதைப்பொருள் உபயோகத்தை மேன்மைப்படுத்துவதும், வெளிப்படையாக பால் சம்பந்தப்பட்டதாக இருப்பதும், வன்முறையை ஊக்குவிப்பதும் அல்லது பெண்களின் பெருமையைக் குறைப்பதுமான” எந்த இசையும் அதில் அடங்கும். நிலையம் ஏற்கெனவே வெளியிடமுடியாத தலைப்புகளைக் கொண்ட இப்படிப்பட்ட ஒன்பது பாடல்களைத் தடைசெய்துவிட்டதாக அண்மையில் தி நியூ யார்க் டைம்ஸ் அறிவித்தது. சமுதாயத்தை மேம்பட்ட விதத்தில் சேவைசெய்யும் ஆசையே மாற்றத்தைத் தூண்டியதாக நிலைய நிகழ்ச்சி இயக்குநர் உறுதியாக கூறுகிறார். போட்டி நிலையங்கள் விளம்பரம் பெறும் ஆசையே இந்தப் புதிய கொள்கையைத் தூண்டியதாக தெரிவிக்கின்றன.
எறும்பு பயணம்
எறும்புகள் எவ்வாறு பயணம் செய்கின்றன? அநேக எறும்புகள் ஓர் இரசாயன மணத்தைப் பின்னால் விட்டுச்செல்கின்றன, அவற்றின் அடிச்சுவட்டினைக் கண்டுபிடித்து வந்தவழியே அவற்றால் வீடு திரும்பமுடிகிறது. ஆனால் ஸ்விட்ஸர்லாந்தில், ஜூரிச் பல்கலைக்கழகத்திலுள்ள ஒரு விலங்கியலர் டாக்டர் ருடிகர் வானர் சகாராவில் எறும்புகள் எவ்வாறு பயணம் செய்கின்றன என்பதாக அதிசயப்பட்டார். பாலைவன உஷ்ணம் நிமிடங்களில் இரசாயன மணத்தை நீராவியாக மாறச்செய்துவிடுமே. டெக்ஸஸ் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய ஓர் உரையில், டாக்டர் வானர், எறும்புகள் எவ்வாறு ஒருசமயம் இரண்டாம் உலகப் போரில் விமான பயணத்தில் பயன்படுத்தப்பட்ட ஓர் உபாயத்தைப் போன்ற மிகவும் முன்னேற்றமடைந்த பயண அமைப்பைப் பயன்படுத்துகின்றன என்பதை விவரித்தார். எறும்புகள் ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து அங்கே மனித கண்களுக்குப் புலப்படாத காந்தசக்திப் பெற்ற ஒளியின் சிக்கலான உருவமைப்புகளைக் காண்கின்றன. தாங்கள் இருக்கும் இடத்தைத் தெரிந்துகொள்ள அவை அந்த உருவமைப்புகளின் கீழ் சுற்றி வந்து நேராக வீடுநோக்கிப் பயணம் செய்கின்றன. தி டல்லாஸ் மார்னிங் நியூஸ் வேடிக்கையாகச் சொன்னது: “வட சகாரா பாலைவனத்தில் நடுப்பகலில் நீங்கள் தொலைந்துவிட்டால் வழியை ஒரு எறும்பினிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.”
மற்றொரு போலி புதைப்படிவம்
ஓர் அம்பர் பாளத்தில் அல்லது புதைப்படிவ மென்மரப்பகுதியில் தொங்கவிடப்பட்டிருந்த ஓர் ஈ, 3 கோடியே 80 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த துல்லியமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு மாதிரி என்பதாக நீண்டகாலமாக அறிவியல் வட்டாரங்களில் மதிக்கப்பட்டுவந்தது. எனினும், உயர்வாக மதிக்கப்பட்ட இந்த மாதிரி உண்மையில் “பில்ட்டெளண் மேன் மோசடிக்குச் சமமான ஒரு பூச்சியியல் குற்றச்செயலாகவே” ஆகியிருக்கிறது என்பதாக நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை அறிவிப்புசெய்தது. குறைந்தபட்சம் 140 ஆண்டுகளுக்கு முன்பாக, மோசடிசெய்வதில் நிபுணராக இருந்த ஓவியர் ஒருவர் உண்மையில் அம்பரை பிளந்து ஒரு பாதியில் ஒரு குழிவை உண்டுபண்ணி அதற்குள் ஓர் ஈயை உள்ளே வைத்தார். இந்த “புதைப்படிவம்” 1922-ல் இங்கிலாந்தின் இயற்கை சரித்திர அருங்காட்சியகத்துக்கு விற்கப்பட்டது. அப்போது முதற்கொண்டு முதன்மையான அறிவியல் அறிஞர்களால் ஆய்வுசெய்யப்பட்டு, 1992-ல் சமீபத்தில் புதைப்படிவங்களைப் பற்றி வெளியிடப்பட்ட ஒரு புத்தகத்திலும்கூட குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் முஸ்லீம் குரு
ஐ.மா. படைப்பிரிவுகள் 243 பல்வேறு மதங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் சுமார் 3,152 குருக்களைப் பணியில் கொண்டிருக்கின்றன—அவர்களில் அனைவரும், சமீபகாலம் வரையாக, “யூதேய-கிறிஸ்தவ” வகையினராக இருந்தனர். இப்பொழுது, தி உவாஷிங்டன் போஸ்ட் அறிவிக்கிற பிரகாரம், படைப்பிரிவு அதன் முதல் முஸ்லீம் குருவை நியமித்திருக்கிறது. பிறை வடிவ விருது சின்னத்தை தன் சீருடையில் அணிந்த குரு ஒரு முஸ்லீம் சமய பள்ளிவாசல் தலைவராக இருக்கிறார். படைப்பிரிவிலுள்ள இஸ்லாமிய தொகுதி, உண்மையான எண்ணிக்கை 10,000-க்கு அருகாமையில் இருப்பதாக உறுதியாக சொன்னாலும் ஐ.மா. பாதுகாப்பு இலாக்கா ஐ.மா. படைப்பிரிவில் 2,500 முஸ்லீம்கள் இருப்பதாக சொல்கிறது. பெர்சிய வளைகுடாப் போரின்போது சவூதி அரேபியாவில் தங்கியிருந்தச் சமயத்தில் சில அமெரிக்க போர் வீரர்கள் இஸ்லாமுக்கு மதம்மாறியதாக சொல்லப்பட்டன. இப்பொழுது புத்த மதத்தைச் சேர்ந்த போர் வீரர்கள் தங்கள் படை குருவாக சேவைசெய்வதற்காக ஒரு வேட்பாளரைத் தேடிக்கொண்டிருக்கின்றனர்.
காட்டுக் குதிரைகள் எண்ணிக்கையில் குறைந்துவருகின்றன
லவ்ரடேரோஸ் என்றழைக்கப்படும் காட்டுக் குதிரைகள் வட பிரேஸிலின் கரடுமுரடான லவ்ரடோ பகுதியில் கட்டுப்பாடின்றி திரிந்துகொண்டிருக்கின்றன. சாவோ பாலோவின் சின்சியா ஓஷி பத்திரிகையின்படி, அவை உலகிலேயே எந்த ஒரு வகையான அதிகாரப்பூர்வமான அரசாங்க பாதுகாப்பும் இல்லாத கடைசி காட்டுக் குதிரைகளாகும். வேட்டையாடுதல், இனக்கலப்பு செய்தல், வியாபாரம் செய்தல் ஆகியவற்றினால் அவை வேகமாக எண்ணிக்கையில் குறைந்துகொண்டே வருகின்றன. லவ்ரடோ பகுதியிலுள்ள மக்கள், குதிரைகளின் எண்ணிக்கை ஒருசில ஆண்டுகளுக்கு முன்பாகக்கூட 3,000 இருந்ததாக மதிப்பிடுகின்றனர்; இன்று 200 மட்டுமே உள்ளன. லவ்ரடேரோஸ் வழக்கத்துக்கு மீறி கருவளம் பெற்றதாக, நோய் எதிர்க்கும் சக்தியுடையதாக, வேகமாக செல்பவையாக இருக்கின்றன—அரை மணிநேரத்துக்கு அவற்றால் மணிக்கு ஏறக்குறைய 55 கிலோமீட்டர் வேகத்தில் ஓடமுடியும்!
பிரிட்டன் நாட்டு திருமணத் துயரங்கள்
ஐரோப்பாவில் எல்லா இடங்களிலும் திருமண ஏற்பாடு பிரச்னைகளுக்குள்ளாகி வருகிறது, ஆனால் பிரிட்டனைப் போல அதிகமாக வேறு எந்த இடத்திலும் இல்லை என்பதாக அண்மைக்கால ஒரு சுற்றாய்வு கண்டுபிடித்திருக்கிறது. யூரோஸ்டேட் என்றழைக்கப்படுகிற ஐரோப்பிய யூனியனுக்கான புள்ளி விவர அலுவலகம், ஐரோப்பிய யூனியனின் உறுப்பின தேசங்களில் வாழும் 17 கோடியே 70 லட்சம் பெண்களின் வித்தியாசமான வாழ்க்கைப் பாணிகளைக் கணக்கிட முயன்றது. சராசரியாக, 6.5 சதவீத பெண்கள் ஒரு துணைவரின்றி பிள்ளைகளை வளர்த்துக்கொண்டிருந்தனர், ஆனால் பிரிட்டனில் சராசரி அதிகமாக இருந்தது—10.1 சதவீதம். அடுத்த உயர்ந்த சராசரி ஜெர்மனியிலிருந்து வந்தது—7.7 சதவீதம். ஐரோப்பிய யூனியன் பெண்களைவிட பிரிட்டன் நாட்டுப் பெண்கள் இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டனர்—24 வயது ஆவதற்கு முன்பே. மேலும் பிரிட்டனின் மணவிலக்கு விகிதம் மிக அதிகமானதாக இருந்தது.
தற்கொலை கையேடு
தற்கொலை பற்றிய முழு கையேடு (The Complete Manual of Suicide) அண்மையில் ஜப்பானில் மிகச் சிறப்பாக விற்பனையாகும் புத்தகமாக ஆகியிருக்கிறது; ஏற்கெனவே மிகப் பல மரணங்களுக்கு அது ஒரு காரணமாயிருந்திருக்கிறது. பிஜி மலை அடிவாரத்தில் 6,000 ஏக்கர் பரப்புள்ள அயோக்காக்ரா காட்டுப் பகுதியைத் தற்கொலைச் செய்வதற்கு “மிகச் சிறந்த இடம்” என்பதாக அப்புத்தகம் விவரிக்கிறது. பிரசுரமான மூன்றே மாதங்களுக்குள், இரண்டு சடலங்கள் அயோக்காக்ராவில் கண்டெடுக்கப்பட்டன; இருவருமே கையேடு வைத்திருந்தனர். தற்கொலைச் செய்துகொள்ளவிருந்த மற்றொருவர் புத்தகத்தோடு காட்டில் திரிந்துகொண்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அக்டோபர் 1993-ன் முடிவுக்குள், அயோக்காக்ராவில் தற்கொலைகள் முந்தைய முழு ஆண்டைவிட ஏற்கெனவே 50 சதவீதம் அதிகரித்துவிட்டிருந்தது. இருப்பினும் புத்தகத்தின் ஆசிரியர் தற்கொலைகளுக்கும் தன்னுடைய புத்தகத்துக்கும் எந்த நேரடியான சம்பந்தமுமில்லை என மறுப்பு தெரிவித்தார். அவர் சொன்னார்: “தற்கொலையை வாழ்க்கையின் தெரிவுகளில் ஒன்றாகச் சேர்ப்பதன் மூலம் இந்தப் புத்தகத்தைக்கொண்டு வாழ்க்கையை நான் எளிதாக்க முயற்சி செய்கிறேன்.”
“தீரா டிவி பசி”
சமீபகால ஆய்வு ஒன்றின்படி, எண்ணிக்கையில் அதிகரித்துவரும் இத்தாலியர்கள் அதிகமதிகமாக டெலிவிஷன் நிகழ்ச்சிகளை நுகர்வதற்கான அடக்கமுடியாத “தீரா டிவி பசி”யினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு மாதிரி வாரத்தின் போது, இத்தாலியர்களில் 82 சதவீதத்தினர் டிவி பார்த்திருக்கின்றனர், ஒரு நாளுக்கு “அவ்விதமாகச் செய்தவர்கள் திரைக்கு முன்னால் சராசரி ஐந்துக்கும் சற்று குறைவான மணிநேரங்கள் இருந்திருக்கிறார்கள்,” என்று லா ரிப்பப்ளிக்கா உறுதிசெய்கிறது. நான்கிலிருந்து ஏழு வயதுள்ளவர்கள் மத்தியில், டிவி நுகர்வு முந்தைய ஆண்டைவிட 15 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் “ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் தீரா டிவி பசிக்கு அதிகமாக பாதிக்கப்பட்டோர் பருவ வயதினரும் தொடக்க கல்விக்குமேல் படிப்பைத் தொடராதவர்களுமே.” டிவி நிகழ்ச்சிகள் முன்னேற்றமடைந்திருப்பதால் மக்கள் அதிகமாக டிவி பார்க்கிறார்களா? சுற்றாய்வை ஆராய்ந்த நிறுவன இயக்குநர் ஃபிரான்செஸ்கோ சில்லேஷியோ உறுதியாக கூறினார்: “புள்ளிவிவரங்கள் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளின் தரத்தோடு எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டதாக தோன்றவில்லை.”
மற்றொரு வகையான போக்குவரத்து ஆபத்து
பொறுப்புள்ள பெற்றோர் பல்பொருள் அங்காடிக்குத் தங்கள் பிள்ளைகளோடு காரில் செல்லும்போது, குறுகிய தொலைவாயிருந்தாலும்கூட அவர்களை வார்ப்பூட்டுப் போட்டு இறுக்கிக்கட்டி நியாயமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கின்றனர். ஆனால் அங்காடிக்குச் சென்றபிறகு பிள்ளைகள் எதிர்ப்படும் ஆபத்தை வெகு சிலரே உணர்ந்திருக்கின்றனர். பல்பொருள் அங்காடியில் சாமான் சுமை வண்டியிலிருந்து விழுந்தபிறகு ஐக்கிய மாகாணங்களில் 1991-ல் ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 19,000 பிள்ளைகள் மருத்துவமனையின் அவசர சிகிச்சை அறைகளுக்கு துரிதமாக அழைத்துச் செல்லப்பட வேண்டியவர்களாக இருந்தனர் என்பதாக சமீபத்தில் பெற்றோர் (Parents) பத்திரிகை குறிப்பிட்டது. இதன் விளைவாக சாமான் சுமை வண்டிகளை உற்பத்திசெய்யும் தேசத்தின் இரண்டு பெரிய உற்பத்தியாளர்கள், நியூ யார்க்கிலும் டெக்ஸஸிலும் அவர்கள் விற்கும் எல்லா சாமான் சுமை வண்டிகளிலும் பிள்ளைகளுக்காக இருக்கை வார்களைப் பொருத்த ஒப்புக்கொண்டிருக்கின்றனர். பிள்ளைகளைத் தனியாக விட்டுச்செல்லாதிருக்கும்படி சாமான் சுமை வண்டியிலிருக்கும் அறிவிப்புகளும்கூட பெற்றோரை எச்சரிக்கும்.
பறவை உச்சரிப்புகள்
ஒரு பறவை, மற்றொரு பறவை பாடும் விதத்தைக் கேட்பதன் மூலம் அது வேறொரு பிராந்தியத்திலிருந்து வந்திருப்பதைச் சொல்லமுடியுமா? நேஷனல் ஜியாக்ரஃபிக் அறிக்கை செய்கிறபடி வேல்ஸில் க்ளாமார்கன் பல்கலைக்கழகத்தில் விலங்கு மனோவியலில் நிபுணரான லான்ஸ் வொர்க்மேன் சொன்ன பிரகாரம், ராபின்கள் (மார்பு சிவந்த சிறு பறவை) மத்தியில் ஆம் என்பதே ஆணித்தரமான பதிலாகும். ராபின்களின் பாடல்களை நாடாவில் பதிவுசெய்து அதை ஒழுங்குபடுத்தி தொகுத்தபோது, பறவை இங்கிலாந்தின் எந்தப் பிராந்தியத்திலிருந்து வந்தது என்பதை அவரால் வகைப்படுத்த முடிந்தது. உண்மையில் சுசாக்ஸிலிருந்து வந்த ஓர் ஆண் பறவை, பதிவுசெய்யப்பட்ட வேல்ஸின் ஆண் பறவையின் பாடலைக் கேட்ட போது, அது தன் சிறகுகளை மிகுந்த கோபத்துடன் விரித்து டேப் ப்ளேயரைத் தாக்கியது.
தந்தைக்குக் கற்பித்தல்
தங்கள் பிள்ளைகளோடு நாளொன்றுக்கு சராசரியாக 36 நிமிடங்கள் மாத்திரமே செலவழிக்கும் ஜப்பானிய தந்தைமார்களுக்குக் கல்விபுகட்ட ஜப்பானிய கல்வி அமைச்சகம் ஒரு திட்டத்தில் இறங்கியிருக்கிறது. வீட்டு வேலைகளில் உதவியாக இருந்து தங்கள் பிள்ளைகளோடு அதிக நேரம் செலவழிக்கும்படித் தந்தைமார்களைச் செய்விப்பதைக் குறிக்கோளாகக் கொண்ட ‘வீட்டுக் கல்வி’ பற்றிய தொடர் கருத்தரங்குகளை அமைச்சகம் ஏற்பாடுசெய்கிறது என்பதாக மைனிச்சி டெய்லி நியூஸ் அறிவிப்புசெய்கிறது. ஒவ்வொன்றும் ஒன்றரையிலிருந்து இரண்டு மணிநேரங்கள் நீடிக்கும் ஐந்து பிரிவுகளைக் கொண்டிருக்கும் பயிற்சி, தந்தைமார்கள் ஆஜராவதை எளிதாக்குவதற்காக வசதியான நேரங்களில் வேலைசெய்யுமிடத்தில் அல்லது அதற்கு அருகாமையில் நடைபெறும். அதிகப்படியாக நீண்ட மணிநேரங்கள் வேலைசெய்வதைத் தேவைப்படுத்துவதற்கு பெயர்பெற்றதாய் இருக்கும் கல்வி அமைச்சகத்தில் வேலைபார்க்கும் தந்தைமார்களே பயிற்சியிலிருந்து பயன்பெற இருப்பவர்களில் முதன்மையானவர்களாய் இருப்பதே இதில் வேடிக்கையாகும்.
வாசிப்பதை விளையாட்டாக்குவது
கனடா நாட்டில் வயதுவந்தவர்களில் 29 லட்சம் பேர் “தினசரி வாழ்க்கையில் காணப்படும் செய்திகளை வாசித்து புரிந்துகொள்ள” இயலாதவர்களாக இருப்பதை புள்ளிவிவரங்கள் காண்பிப்பதை தி டோரன்டோ ஸ்டார் அண்மையில் அறிவித்தது. எழுத்தறிவின்மையை சமாளிக்கும் முயற்சியில், கனடா நாட்டுப் பிள்ளைகள் புத்தக வாரம், “வாசிப்பதிலிருக்கும் மகிழ்ச்சியையும் விருப்பத்தையும்” மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இசை, தொலைக்காட்சி மற்றும் வீடியோக்களின் இன்றைய சகாப்தத்தில் பிள்ளைகளுக்கு வாசிப்பதை விரும்பக் கற்றுக்கொடுப்பது எளிதல்ல. பிள்ளைகள் மிகவும் இளைஞராக இருக்கும்போதே ஆரம்பிப்பதும் கவனத்தைத் திசைதிருப்பும் காரியங்களைக் குறைப்பதுமே உயிர்நாடியாகும். பத்து வயது சிறுமி, இவ்விதமாகச் சொல்வதாக செய்தித்தாள் மேற்கோள் காண்பித்திருந்தது, அவர்களுடைய குடும்பத்தினர் தங்கள் டெலிவிஷனை ஒழித்துக்கட்டியிருந்தார்கள்: “வாசிப்பது விளையாட்டாக இருக்கிறது, கற்றுக்கொள்ள எனக்கு உதவி செய்கிறது.” பத்து வயது பையன் ஒருவன் இவ்விதமாகச் சொன்னான்: “எனக்கு வாசிப்பது பிடிக்கும், ஏனென்றால் எதைப்பற்றியும் எல்லாவற்றைப்பற்றியும் தெரிந்துகொள்வதற்கு இது ஒரு வழியாகும்.”