இளைஞர் கேட்கின்றனர்
கிளர்ச்சியூட்டும் விளையாட்டுகள்—நான் துணிந்திறங்க வேண்டுமா?
மேடையின்மீது நின்று நடுங்கிக்கொண்டு இருக்கையில், “உங்கள் வாழ்க்கையின் அதிக அச்சமூட்டும் சமயம் இதுவே,” என்று நீங்கள் சொல்லப்படுகிறீர்கள். எண்ணிக்கை இறங்குவரிசையில் ஆரம்பிக்கிறது: “ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று—குதியுங்கள்!” குதிக்கையில் உணர்ச்சிவசப்படுவதன் காரணமாக உங்களுக்கு மூச்சடைக்கிறது. நிச்சயமாகவே சாகப்போவதுபோல் நீங்கள் படுவேகத்தில் விழுந்துகொண்டிருக்கிறீர்கள். ஆனால் திடீரென ஒரு எலாஸ்டிக் கயிறு மேல்நோக்கி இழுக்கப்படுவதை நீங்கள் உணர்கிறீர்கள். உந்துவிக்கும் ஒரு பாதுகாப்புணர்ச்சி உங்களைக் கொள்ளைகொள்கிறது. நீங்கள் தப்பிவிட்டீர்கள்!
பன்ஜீ குதித்தல் (Bungee Jumping).a ஒரு கணக்கின்படி ஐக்கிய மாகாணங்களில் மட்டும் பத்து இலட்சம் முதல் இருபது லட்சம் பங்கெடுப்போரை அந்த விளையாட்டு கவர்ந்திழுத்து இருக்கிறது. சொல்லப்போனால், சமீப காலத்தில் மிகப் பிரபலமாகியிருக்கிற செங்குத்தான பாறை ஏறுதல் (rock climbing), உயரத்திலிருந்து குதித்து கிளைடரில் அலையளாவுதல் (paragliding), நீர்வீழ்ச்சியில் பிரயாணம் (white-water rafting), வானத்தில் அலையளாவிச் செல்தல் (sky surfing) போன்ற பல விளையாட்டுகளில் ஒன்றுதான் அது. “1990-கள் கிளர்ச்சியூட்டும் விளையாட்டின் பத்தாண்டு,” என்று பன்ஜீ குதித்தலை ஊக்குவிப்பவர் ஒருவர் சொல்கிறார்.
ஆபத்தான செயல்கள் செல்வந்தர்களுக்கே உரியவை அல்ல. கிளர்ச்சியை நாடும் நகர்ப்புறத்திலுள்ளவர்கள் அப்படிப்பட்ட ஆபத்தான (மேலும் சட்டப்பூர்வமற்ற) வீரதீரச் செயல்களைச் செய்கின்றனர். உதாரணமாக, லிஃப்ட்டில் அலையளாவிச் செல்தல் (நகர்ந்துகொண்டிருக்கும் லிஃப்டுகளின் மேல் சவாரிசெய்தல்), சுரங்கப்பாதைகளுக்குள் செல்தல் (பெரிய கட்டடங்களின் நீர் போகும் சுரங்க கால்வாய் அமைப்புகளினூடே குதியாட்டமிட்டுச் செல்தல்), சுரங்கப்பாதையில் அலையளாவுதல் (சுரங்கப்பாதையில் போகும் ரயில்களின் கூரைகளிலே சவாரிசெய்தல்), படிக்கட்டு பல்டி (வழுக்குகிற படிக்கட்டுகளில் சறுக்கிவிளையாடுதல்) ஆகியவை.
எது கவர்கிறது?
“எனக்குத் திகிலூட்டும் எதையும் நான் முயற்சிசெய்வேன்,” என்று இளம் நார்பர்ட் சொல்கிறான். “நான் தளக்கட்டுப் பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம் போன்ற எல்லா விளையாட்டுகளையும் அனுபவித்து களிகூருகிறேன். ஆனால் பாலத்திலிருந்து குதித்தல் என்னைச் சிலிர்க்கவைத்தது! அது முற்றிலும் வித்தியாசமானதாக இருந்தது.” இளம் டக்லஸ் ஒத்துக்கொள்கிறான். “சாதாரண விளையாட்டுகள் கேளிக்கையூட்டுபவையாய் இருக்கின்றன. ஆனால் அவை ஒரு நோக்கத்தோடு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன,” என்று அவன் சொல்கிறான். “நீங்கள் எப்போதும் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறீர்கள். நான் விழும் உணர்வை விரும்புகிறேன். விழும்போது நீங்கள் உணரும் வேகம் . . . வேறு எந்த விளையாட்டுகளிலும் அப்படிப்பட்ட உணர்ச்சியை நீங்கள் ஒருபோதும் உணருகிறதில்லை.”
கிளர்ச்சியூட்டும் விளையாட்டுகள் உங்களுடைய விளையாட்டு திறமைக்குச் சவால் விடுவதைவிட அதிகத்தை உட்படுத்துகின்றன. அவை மரணத்தை முகமுகமாய் எதிர்ப்படும் நிலைக்கு உங்களைக் கொண்டுவருகின்றன! பங்கெடுப்போர் அட்ரீனலின் சுரக்கப்படுமளவு அதிகமாகும்போது அவர்கள் அதை அனுபவிப்பதுபோல் தெரிகிறது. ஒருசில மக்கள் மரபியல்பூர்வமாகவே T-வகை, அல்லது கிளர்ச்சியை நாடும், ஆளுமைகளை உடையவர்களாகத் திட்டமிடப்பட்டிருக்கிறார்கள் என சில அறிஞர்கள் வாதாடுகின்றனர். எனினும், அநேக இளைஞர் ஏதோ ஒருவகையான துணிகரச் செயலில் ஈடுபடுகின்றனர்; வரம்புகளைச் சோதித்து, சுய நம்பிக்கையை வளர்க்கும் அவர்களுடைய வழிமுறையாக அது இருக்கிறது.
பரிதாபகரமாகவே, இளைஞர் அவ்வாறு செய்கையில் நல்ல தீர்மானிக்கும் திறமையை எப்போதும் பயன்படுத்துவதில்லை. நீதிமொழிகள் 20:29 சொல்கிறது: “வாலிபரின் அலங்காரம் அவர்கள் பராக்கிரமம்.” ஆனால் சிலர் அவர்களுடைய வல்லமை வரம்பற்றது என்பதுபோல் நினைப்பதாகத் தெரிகிறது. பருவ வயதினர், பெரும்பாலும் “மற்றவர்களுக்கு நடக்கக்கூடிய சாத்தியக்கூறுகளின் சட்டங்களுக்கு உட்படாதவர்களாக, அவர்கள் விசேஷித்தவர்களாகவும் பிரத்தியேகமானவர்களாகவும் இருக்கிறார்கள்; விசேஷித்தவர்களாகவும் காயப்படாதபடி உறையிடப்பட்டு மூடப்பட்டதுபோலவும் உணரும் இந்த நம்பிக்கைதானே, காரியங்களில் துணிந்திறங்கும்படி பெரும்பாலான பருவ வயதினர் தீர்மானிப்பதற்கு உதவிசெய்கிறது” என நம்புகிறதாக டாக்டர் டேவிட் எல்கைண்டு சொல்கிறார். டாக்டர் ராபர்ட் பட்டர்வர்த் இதைப்போலவே குறிப்பிடுகிறார்: “வானத்தில் தலைகுப்புறப் பாய்ந்திறங்குதல் போன்ற ஒன்றை நீங்கள் செய்யும்போது, நடக்கக்கூடிய சாத்தியக்கூறுகளை எதிர்த்துப் போராடி, உங்களுடைய சொந்த விதியைக் கட்டுப்படுத்தும் ஒரு உணர்வை உங்களுக்கு அது கொடுக்கிறது.”
எனினும், துணிந்திறங்குதல் மனச்சோர்வான மனநிலைகளாலும் தூண்டப்படலாம். எழுத்தாளர் மேரி சூஸன் மில்லர் பிள்ளையழுத்தம்! (Childstress!) என்ற தன் புத்தகத்தில், பல இளம் மடத்துணிச்சலுள்ளவர்கள் முட்டாள்தனமான துணிகரச் செயல்களில் ஈடுபடுகின்றனர்; ஏனென்றால் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையின் அழுத்தங்களை வெறுமனே சமாளிக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறார். இவ்வாறு, கிளர்ச்சியூட்டும் விளையாட்டுகள் சுய அழிவை அல்லது தற்கொலைக்குரிய போக்குகளையும்கூட வெளிப்படுத்தக்கூடும். “விதியை எதிர்த்துப் போராடுவதன்மூலம் அது அவர்களைக் கொல்லுவதற்கு அனுமதிக்காததுபோல, அவர்கள் வீம்புக்கென்றே தங்களை ஆபத்தான சூழ்நிலைகளில் வைத்திருக்கின்றனர்,” என்று மில்லர் சொல்கிறார்.
உண்மையில் துணிகரமானதா?
அவர்கள் என்னவகையில் கவர்ந்திழுக்கப்பட்டாலும், கிளர்ச்சியூட்டும் விளையாட்டுகள் ஆபத்தானவையாய் இருக்கக்கூடும். ‘அதைப்போலவே, தெருவில் குறுக்கே கடந்துபோவதும் ஆபத்தானதாய் இருக்கலாம்,’ என்று சிலர் வாதிடுகின்றனர். ஆனால் தெருவில் குறுக்கே கடப்பவர் வீம்புக்கென்றே ஆபத்தை அல்லது கிளர்ச்சிகளைத் தேடியலைபவராக இல்லை. மேலும் பல விளையாட்டுகள், உதாரணமாக பன்ஜீ குதித்தல், ஓரளவுக்கு பாதுகாப்பான பதிவுகளை உடையதாக இருக்கின்றன. ஆனாலும், காரியங்கள் தவறாய் போகக்கூடும். மார்க் பிரக்கர், எம்.டி., இவ்வாறு சொன்னார்: “மிக ஆபத்தான இந்த விளையாட்டுகளில், ஏதேனும் தவறு ஏற்பட்டால், நிலைமை பேரழிவில் விளைவடையக்கூடும். விமானங்களிலிருந்து குதித்தல் அல்லது வானத்தில் தொங்கி அலையளாவுதல் (hang gliding) அல்லது மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் போன்ற எதுவாக இருந்தாலும்சரி, கிளர்ச்சியூட்டுதல் அதிகரிக்க அதிகரிக்க ஆபத்தும் அதிகரிக்கிறது.” நிலத்திலிருந்து 58 மீட்டர் அந்தரத்தில், ஒரு 20 வயது இளைஞன் சூடுகாற்று பலூனிலிருந்து பன்ஜீ குதித்தலைச் செய்தான். பிரச்சினை? அவனுடைய கயிறு 79 மீட்டர் நீளமுடையதாக இருந்தது! அவன் பயங்கரமான மரணமடையும்படி கீழே விழுந்தான்.
ஒருவேளை, சில செயல்கள், உதாரணமாக மோட்டார் சைக்கிள் ஓட்டுதல், ஓரளவுக்குப் பாதுகாப்பான, மிதமான முறையில் மகிழ்வூட்டுவதாக இருக்கக்கூடும். ஆனால் கிளர்ச்சியைத் தேடியலையும் நபர்களைக் குறித்து போட்டிவிளையாட்டு மருத்துவ நிபுணர் ஒருவர் இவ்வாறு சொல்கிறார்: “அவர்களுடைய திறமைகள் அதிகரிக்க அதிகரிக்க, இன்னும் கடினமான செயல்களைச் செய்ய துணிகின்றனர். இறுதியில் காயப்பட்டு கஷ்டப்படுகின்றனர்.” ஒரு இளைஞன் இவ்வாறு ஒப்புக்கொண்டான்: “நான் அடிமையாகிவிட்டேன். அந்தப் பயத்தின் அளவை, அந்தக் கிளர்ச்சியின் அளவைப் பெறுவது இப்போது அதிகக் கடினமானதாக இருக்கிறது.”
கிறிஸ்தவர்களுக்கா?
எல்லாவிதமான விளையாட்டுகளையும் ஒட்டுமொத்தமாக பைபிள் தடைசெய்கிறதா? இல்லை. முட்டாள்தனமான மிகுதியான போக்குகளே கண்டனம் செய்யப்படுகின்றன. பிரசங்கி 7:17-ல் பதிவுசெய்யப்பட்டபடி, சாலொமோன் கேட்டார்: “உன் காலத்துக்கு முன்னே நீ ஏன் சாகவேண்டும்?”
‘வாழ்க்கை குறுகியது. முழுபலத்தோடு விளையாடு,’ என்று விளையாட்டு காலணியைப் பற்றிய ஒரு விளம்பரம் உத்வேகப்படுத்துகிறது. ஆனால் நாம் நமக்காகவும், நம்மில் அன்புகூருகிறவர்களுக்காகவும், நம்முடைய சிருஷ்டிகருக்காகவும் நம் உயிரைப் பேணிக்காக்க பொறுப்புடையவர்களாக இருக்கிறோம். உயிர் கடவுளிடமிருந்து வந்த ஒரு பரிசு. (சங்கீதம் 36:9) விபத்தால் ஒரு உயிர் கொலைசெய்யப்பட்டால், பைபிள் காலங்களில் கடும் தண்டனைகள் கொடுக்கப்படலாம். (யாத்திராகமம் 21:29; எண்ணாகமம் 35:22-25) இவ்வாறு, கடவுளுடைய மக்கள் அத்தியாவசியமற்ற துணிந்திறங்கும் செயல்களைத் தவிர்க்கும்படி உற்சாகப்படுத்தப்பட்டனர்.—உபாகமம் 22:8-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.
அதைப்போலவே இன்று கிறிஸ்தவர்கள் உயிருக்கு மதிப்புக் காட்டவேண்டிய கடமையில் இருக்கிறார்கள். அத்தியாவசியமற்ற துணிகரமான செயல்களுக்கு உங்களை உட்படச் செய்யும் விளையாட்டு செயல்களை நாடித்தேடுதல் பொருத்தமானதா? பிசாசாகிய சாத்தான் இயேசுவைச் சோதிக்க முயற்சிசெய்தபோது, அவர் ஆலயத்தின் உச்சியிலிருந்து கீழே விழுந்தால் தேவதூதர்கள் அவரைத் தாங்கிக்கொள்வர் என்று சாத்தான் வாதிட்டான். இயேசு இவ்வாறு பதிலளித்தார்: “உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக.”—மத்தேயு 4:5-7.
அதோடுகூட, பலமுள்ளவர்களாயும் ஆரோக்கியமுள்ளவர்களாயும் உணர்ந்தாலும் பாதிப்பே அடையாத நபர் அல்ல நீங்கள். ‘அது எனக்கு நேரிடாது’ என்று வாதிடுவது உண்மைக்கு புறம்பானதாகும். ‘நம் அனைவருக்கும் சமயமும் எதிர்பாராத சம்பவமும் நேரிடுகிறது’ என்று பைபிள் நமக்கு எச்சரிப்பு கொடுக்கிறது.—பிரசங்கி 9:11, NW.
குதிக்கும்முன்னே சிந்தித்தல்
ஒரு பாரந்தூக்கியிலிருந்து குதித்தல், ஒரு விமானத்திலிருந்து குதித்தல், அல்லது மிக ஆபத்தானதாக தோன்றக்கூடிய எதையும் செய்தல் போன்ற செயல்களின் உத்தேசமான விளைவுகளை மிகவும் கவனமாக சிந்திப்பது ஞானமானதாக இருக்கும். யாரோ ஏதோ சொல்வதன்பேரில் அல்லது மற்ற இளைஞரின் உற்சாகமான அறிக்கைகளின்பேரில் வெறுமனே நம்பிக்கையை வைக்காதீர்கள். (நீதிமொழிகள் 14:15) உண்மைகளை அறிந்துகொள்ளுங்கள்.
உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட விளையாட்டின் விபத்து சதவிகிதம்தான் என்ன? என்ன பாதுகாப்பு நடிவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன? ஸ்க்யூபா டைவிங் பற்றி ஒரு வல்லுநர் இவ்வாறு சொல்கிறார்: “காற்று மண்டலத்திலிருந்து தண்ணீருக்குள் செல்வது ஆபத்தானது [என்று மக்கள் நினைக்கிறார்கள்]. . . . ஆனால் அதை சரியான அறிவுரை கொடுக்கப்படாமல் செய்தால்தான் ஆபத்தானது.” எனவே நீங்கள் இவ்வாறும் கேட்கவேண்டும், இந்த விளையாட்டுக்கு என்ன பயிற்றுவிப்பும் கருவிகளும் தேவைப்படுகின்றன? உடற்பயிற்சி போன்ற பிரயோஜனமான பலன்கள் ஏதும் இருக்கின்றனவா? ஆபத்துக்கள் ஏதோ ஒரு சமயத்தில் நடக்குமா அல்லது விளையாட்டின் முக்கிய நோக்கமே மரணத்தை எதிர்த்துப் போராடுவதா?
பிந்தினதே நிலைமையென்றால், ஆபத்தை எதிர்ப்படுவது உங்களுக்கு ஏன் அவ்வளவு கவர்ச்சியூட்டுவதாய் இருக்கிறது என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளலாம். அது வெறுமனே சலிப்புணர்வுக்கு அல்லது மனச்சோர்வுக்கு ஒரு பிரதிபலிப்பா? அப்படியென்றால், நீங்கள் அப்படிப்பட்ட உணர்ச்சிகளைக் கையாளுவதற்கு ஒரு பாதுகாப்பான, மிக நேர்த்தியான வழியை ஏன் கண்டுபிடிக்கக்கூடாது?b பருவவயது மன இறுக்கம் (Teenage Stress) புத்தகம் “மன இறுக்கத்தின் பாதகத்தைச் சமாளிப்பதற்கு ஒரு ஆபத்தான முற்றிலும் வீணான முறையாக” துணிந்திறங்குதல் இருக்கிறது என்று நினைவுபடுத்துகிறது.—நீதிமொழிகள் 21:17-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.
விஷயங்களை மிகத் தெளிவாக ஆராய்ந்த பிறகு, மேலும் காரியங்களை உங்கள் பெற்றோரோடு கலந்துபேசிய பிறகு, அளவுக்கு மீறிய கிளர்ச்சியூட்டும் விளையாட்டுகளைத் தவிர்ப்பது மேலானதாய் இருக்கும் என சரியாகவே தீர்மானிக்கப்படலாம். பொதுவாக உயிருக்கு ஆபத்தற்றதாகத் தோன்றும் விளையாட்டுகள், ஒரு சிலவற்றைப் பெயரிட, சைக்கிள் ஓட்டுதல், ஸ்கேட்டிங், பனிச்சறுக்கு விளையாட்டு, நீர்மூழ்கி விளையாட்டு (snorkeling) போன்றவற்றை நாடும்படி உங்களுடைய பெற்றோர் ஒருவேளை விரும்பக்கூடும். எனினும், ஓரளவுக்குப் பாதுகாப்பான செயல்களும்கூட பொருத்தமான முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படவில்லையென்றால் ஆபத்தானவையாக இருக்கக்கூடும்.
மலையேற தீர்மானித்துப் போன கிறிஸ்தவ இளைஞரின் ஒரு சிறிய தொகுதிக்கு இது நடந்தது. தங்கள் வழி மாறி, ஒரு செங்குத்தான பாறையின்மேல் குறுகலான ஓரத்தில் ஏற ஆரம்பித்தனர். கொஞ்சநேரத்திலேயே தாங்கள் ஆபத்தில் அகப்பட்டிருந்ததை உணர்ந்தனர். பாதுகாப்பாக முன்னாலும் போக முடியாமல், பின்னாலும் வர முடியாமல் இருந்தனர். தொகுதியை வழிநடத்துகிற இளைஞன் ஒரு திடீர் சத்தத்தைக் கேட்டான். அவனுடைய தோழர்களில் இரண்டுபேர் விழுந்து மரித்திருந்தனர். எவ்வளவு துயரகரமானது!
எனவே, தயவுசெய்து ஜாக்கிரதையாய் இருங்கள்! ‘உங்கள் இளமையில் சந்தோஷப்படுங்கள்,’ உங்களுக்கு ஆசீர்வாதமாகக் கொடுக்கப்பட்டிருக்கும் பலம் மற்றும் உடல் உறுதியை மகிழ்ந்து அனுபவியுங்கள். (பிரசங்கி 11:9) ஆனால், ஆபத்தான ஒன்றை செய்வதற்கான அழைப்பை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, இளம் பிரையன் செய்வதைச் செய்யுங்கள். அவன் சொல்கிறான்: “‘இதைப் பற்றி யெகோவா எப்படி உணருவார்? எனக்கு அவர் கொடுத்திருக்கும் ஜீவ பரிசின்மீது என் எண்ணத்தை இது எப்படிப் பிரதிபலிக்கும்?’ என்று நான் என்னையே கேட்கிறேன்.” ஆம் ஆபத்துக்களை யோசித்துப் பாருங்கள், உங்களுடைய எண்ணங்களை ஆராய்ந்து பாருங்கள். உயிர் அவ்வளவு மதிப்புக்குரியதாக இருப்பதால், இவ்வாறு செய்வதை புறக்கணிக்க முடியாது.
[அடிக்குறிப்புகள்]
a “பன்ஜீ குதித்தல்” என்ற விளையாட்டில் குதிப்பவர்கள் ஒரு நீண்ட எலாஸ்டிக் கயிறுடன் இணைக்கப்பட்டிருக்கின்றனர். இந்தக் கயிறுதான் பன்ஜீ என்றழைக்கப்படுகிறது. பாலங்கள், பாரந்தூக்கிகள், ஏன், சூடுகாற்று பலூன்களிலிருந்தும்கூட அவர்கள் குதித்தெழுகின்றனர். அந்தக் கயிறு நேராகி கீழே விழுவதை சற்று நிறுத்துவதற்கு முன்பு, இது உண்மையிலேயே ஒரு தடையின்றி விழுவதை அனுமதிக்கிறது.
b மனச்சோர்வுற்றிருந்தால் அல்லது தன்னைத்தானே அழிக்கும் தூண்டுதல்களை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தால், அனாவசியமான துணிந்திறங்குதல்களைச் செய்வதற்குப் பதிலாக நீங்கள் ஏன் ஒருவரிடம் பேசி உதவியை பெறக்கூடாது?—எங்களுடைய ஏப்ரல் 8, 1994 விழித்தெழு! இதழில் உள்ள “இளைஞர் கேட்கின்றனர் . . . தற்கொலைதான் பரிகாரமா?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
[பக்கம் 10-ன் படம்]
பன்ஜீ குதித்தல் போன்ற கிளர்ச்சியூட்டும் விளையாட்டுகளை கிறிஸ்தவ இளைஞர் நாடவேண்டுமா?