உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g94 7/22 பக். 28-29
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1994
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பத்து லட்ச சதவீத பணவீக்கம்
  • மத ஈடுபாடு
  • தண்ணீர் பஞ்சம் உருவெடுக்கிறது
  • அகதிகளுக்குக் கதவடைப்பு
  • போப் வீட்டுக்குவீடு ஊழியத்தை ஆதரிக்கிறார்
  • ரஷ்யாவில் சூழலியல் பெருஞ்சேதம்
  • வன்முறையான பிள்ளைகள்
  • குழந்தையோடு உறங்குதல்
  • இஸ்ரேலும் வாடிகனும் ஒப்பந்தம் செய்கின்றன
  • உயிரியல் ஒப்பந்தம் சட்டமாகிறது
  • அதிகரிக்கும் எண்ணிக்கையான அகதிகள்
    விழித்தெழு!—1996
  • சந்தோஷமாக யெகோவாவுக்குச் சேவை செய்ய மற்ற தேசத்தாருக்கு உதவுங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
  • பாப்பாவை படுக்க வைப்பது எவ்வாறு?
    விழித்தெழு!—1999
  • தீர்வு என்ன?
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
விழித்தெழு!—1994
g94 7/22 பக். 28-29

உலகத்தைக் கவனித்தல்

பத்து லட்ச சதவீத பணவீக்கம்

டிசம்பர் 1993-ல் யுகோஸ்லாவிய குடியரசு கூட்டாட்சியின் பணவீக்க வீதம் பத்து லட்ச சதவீதமாக உயர்ந்தது என்று அந்நாட்டின் கூட்டாட்சி புள்ளிவிவர செயலகம் கூறுகிறது. வாழ்க்கைச் செலவு முந்தைய மாதத்தில் இருந்ததைவிட 2,839 மடங்கு அதிகமாகவும், அவ்வருட துவக்க காலத்தில் இருந்ததைவிட ஆறு லட்சம் கோடி மடங்கு அதிகமாகவும் இருந்தது. அதன் விளைவாக அச்சடிக்கப்பட்ட பணநோட்டு வெளியிடப்பட்டு ஒருசில தினங்களிலேயே மதிப்பில்லாமல் போய்விடுகிறது. நிலைமையைச் சமாளிக்க, மத்திய வங்கி தினாரிலிருந்து (Dinar) பூஜ்ஜியங்களைக் குறைத்துக்கொண்டு வந்திருக்கிறது. மூன்றே மாதங்களில், ஐந்து லட்சம் கோடி தினார்கள் ஐந்தே ஐந்து தினார்களாக குறைந்திருக்கின்றன.

மத ஈடுபாடு

சுற்றாய்வு ஒன்றில், 90 சதவீதத்திற்கு அதிகமான அமெரிக்கர்கள் தாங்கள் கடவுளில் விசுவாசம் வைத்திருப்பதாக சொன்னார்கள்; 40 சதவீதத்திற்கு அதிகமானோர் தாங்கள் ஒவ்வொரு வாரமும் சர்ச்சு ஆராதனைக்கு போவதாக அடித்துக்கூறினர். ஐக்கிய மாகாணங்களில் உள்ள புராட்டஸ்டன்டினரில் 45 சதவீதத்தினரும் கத்தோலிக்கர்களில் 51 சதவீதத்தினரும் ஏதோவொரு குறிப்பிட்ட வாரத்தில் சர்ச்சுக்குப் போனதாக 1992-ல் நடத்திய ஒரு பொது சுற்றாய்வு காண்பித்தது. எனினும், உண்மையிலேயே மதப்பற்று உடையவர்களாக இருந்து சர்ச்சுக்குப் போகிறவர்களைவிட அதிகமான மக்கள் தாங்கள் மதப்பற்று உள்ளவர்கள் என்றும் தவறாது சர்ச்சுக்குப் போகிறவர்கள் என்றும் உரிமைபாராட்டுவதாக புதிய ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. ஆராய்ச்சியாளர்களின் குழு ஒன்றின்படி, உண்மையில் புராட்டஸ்டன்டினரில் 20 சதவீதத்தினரும் கத்தோலிக்கர்களில் 28 சதவீதத்தினரும் மட்டுமே வாராவாரம் சர்ச்சுக்குப் போகிறார்கள். வயதுவந்த 3 கோடியே 60 லட்சம் அமெரிக்கர்கள்—19 சதவீதத்தினர்—மட்டுமே தங்களுடைய மதத்தை ஒழுங்காக கடைப்பிடிக்கிறார்கள் என்றும், 18 வயதைக் கடந்த அமெரிக்கர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் முழுக்க முழுக்க மதப்பற்றில்லாத ஒரு மனப்பான்மையைக் கொண்டிருக்கிறார்கள் என்றும் மற்றொரு ஆராய்ச்சிக் குழு கண்டுபிடித்திருக்கிறது. “அமெரிக்க தேசம் முழுவதும் மதம் பரவியிருந்தபோதிலும், ஒரு சிறுபான்மையினரே அதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்,” என்று நியூஸ்வீக் சொல்கிறது. “அமெரிக்க மக்கள்தொகையில் பாதிப்பேர், தங்களுடைய மனப்பான்மைகளின்மீதோ நடத்தையின்மீதோ செல்வாக்கே செலுத்தாத ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதாக சொல்லிக்கொள்கின்றனர்.”

தண்ணீர் பஞ்சம் உருவெடுக்கிறது

“உறைபனியும் மழையும் ஓரளவு மாறாதவையாக இருப்பதால், புதுப்பிக்கப்படும் தண்ணீர் கட்டாயமாகவே வரையறைக்கு உட்பட்டதாகவே இருக்கிறது,” என்று சயன்ஸ் பத்திரிகை குறிப்பிடுகிறது. “2025-க்குள், தண்ணீர் பஞ்சம் உள்ள நாடுகளில் வாழும் மக்களின் எண்ணிக்கை 300 கோடி என்ற குறியைச் சென்றெட்டும்.” மேலும் ஏற்கெனவே “2000-க்குள், ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் விசேஷித்த வகையில் மோசமாக பாதிக்கப்படும்.” பாப்புலேஷன் ஆக்‍ஷன் இன்டர்நேஷனல் வெளியிட்ட அறிக்கையின்படி, அநேக நாடுகள் ஏற்கெனவே தங்களுடைய நிலத்தடி நீர்வளத்தைக் குறைத்துவருகின்றன; மேலும் அநேக நாடுகள் தங்களுடைய நெடுங்கால திட்டங்களைப் போடும்போது புதுப்பிக்கப்படக்கூடிய மற்றும் புதுப்பிக்கப்படமுடியாத தண்ணீரை வித்தியாசப்படுத்திப் பார்க்க தவறிவிடுகின்றன. தண்ணீர் வசதியை முன்னேற்றுவிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கிறபோதிலும், மக்கள்தொகை வளர்ச்சியால் அம்முயற்சிகள் ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டிருக்கின்றன.

அகதிகளுக்குக் கதவடைப்பு

கடந்த இருபது ஆண்டுகளில் அகதிகள் எட்டு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்திருக்கின்றனர் என்பதாக அகதிகளுக்கான ஐநா உயர் ஆணையர், சாடாகோ ஓகாடா சொல்கிறார். ஆகவே இது, “பகைமையுணர்வு மற்றும் அந்நியர்களைப்பற்றிய பயம் கலந்த நோக்குநிலைகளின் அச்சுறுத்தும் திடீர் அதிகரிப்”பில் விளைவடைந்திருக்கிறது. கடந்த வருடத்தின் முடிவின்போது, 1 கோடியே 97 லட்சம் அகதிகள் தங்களுடைய தாயகத்திலிருந்து வெளியே வாழ்ந்தனர்; மேலும் 2 கோடியே 40 லட்சத்தினர் தங்களுடைய எல்லைகளுக்குள்ளே இடப்பெயர்ச்சி செய்யப்பட்டனர். உலகம் முழுவதும், ஒவ்வொரு 125 பேரிலும் ஒருவர், வன்முறை, உள்நாட்டுப் போர், அல்லது துன்புறுத்துதல் போன்றவற்றினால் தங்களுடைய சாதாரண குடும்ப வாழ்க்கையைத் துறந்திருக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார். இது “பிரதிபலிப்பதற்கான உலகத்தின் திறமையையும், தஞ்சமளிக்கும் மனிதகுலத்தின் பண்பாட்டையும்” சமாளிக்கமுடியாத நிலைமைக்கு உள்ளாக்கியிருக்கிறது என்று அகதிகளைப் பற்றிய இந்த முதல் உலகளாவிய ஆராய்ச்சியைப்பற்றி குறிப்பு சொல்லும்போது தி வாஷிங்டன் போஸ்ட் அறிக்கைசெய்கிறது. பின்னடைவினாலும், தீர்த்துவைக்க முடியாதவையாய்த் தோன்றும் சச்சரவுகள் ஏற்படுத்திய சலிப்பினாலும் ஏற்கெனவே பாரம் சுமத்தப்பட்டிருக்கும் அநேக நாடுகள் அகதிகளுக்குத் தங்களுடைய கதவை அடைக்க நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன. “அநேகமாக மக்களை அகதிகளாக்கும் சச்சரவுகள் எல்லாமே இவ்வுலகில் . . . 1993-ன் போது நாடுகளுக்கிடையில் ஏற்பட்டதைவிட நாடுகளுக்குள் ஏற்பட்டவையாக இருந்து,” உள்நாட்டுப் போர்களை முடிவுக்குக் கொண்டுவர ஒரு சர்வதேச நியமத்தைத் தேவைப்படுத்துகிறது என்று ஆராய்ச்சி கூறிற்று. இதற்கிடையில், அகதிகள் ஒரு “உபசரிப்பில்லாத சூழ்நிலைமையை” எதிர்ப்படுகின்றனர்.

போப் வீட்டுக்குவீடு ஊழியத்தை ஆதரிக்கிறார்

ஜான் பால் II-ன் தூண்டுதலுக்கு இணங்கி, கத்தோலிக்க மதமாற்ற இயக்கத்தின் (Catholic Neo-Catechumenal movement) ஆதரவாளர்கள், ரோமிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும், வீடுவீடாகவும் தெருக்களிலும் பிரசங்கம் செய்வதாக ஒப்புக்கொண்டிருக்கின்றனர். லா ரேப்பூப்லிக்கா செய்தித்தாளில் அறிக்கை செய்யப்பட்டிருந்தபடி, “யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக வம்பளக்கும்” இந்த “எதிர்கோஷ்டியினர், இயேசுவின் வாழ்க்கை சரித்திரத்தை சொல்”வார்கள். முதல் தொகுதி 15 குடும்பங்களால் மட்டுமே ஆகியது, ஆனாலும் இந்தத் திட்டம், “எல்லா இடங்களிலும் அபாரமான பலனளிக்கலாம்,” என்று போப் நம்புகிறார். இந்தப் புதிய நடவடிக்கை தொடங்கப்பட்டது ஏன்? அது “தனது வசீகரிக்கும் திறமையையும் அதன் மதக் கவர்ச்சியையும் இழந்துவிட்டது,” என்பதாக கத்தோலிக்க அதிகாரவர்க்கம் உணர்ந்திருப்பதாக சமூகவியல் ஆராய்ச்சியாளர் மரியா மாச்சாட்டி கூறுகிறார். மேலும், “உணர்ச்சியைக் கைவசப்படுத்தும் வல்லமையான கவர்ச்சியினால் அங்கத்தினர்களாக மாற்றும்படி,” அத்தகைய இயக்கங்களை போப் உற்சாகப்படுத்துகிறார். “எதுவானாலும் பிரயோஜனமானதாக இருக்கலாம் என்ற நம்பிக்கையின் அல்லது மனக்கோட்டையின் காரணமாக, அவர் எந்த வாய்ப்பையும் நழுவவிட விரும்பாததுபோல் தோன்றுகிறது,” என்று கத்தோலிக்க எழுத்தாசிரியர் செர்ஸோ க்வின்ட்ஸ்யோ மேலும் கூறுகிறார்.

ரஷ்யாவில் சூழலியல் பெருஞ்சேதம்

“ரஷ்யாவின் சுற்றுச்சூழல் மந்திரி, விக்டர் டானீலாஃப்-டான்யில்யன், ரஷ்யாவின் 15 சதவீத நிலப்பரப்பை சூழலியல் பெருஞ்சேதம் ஏற்படும் பகுதி என்று அறிவித்திருக்கிறார்,” என்று ஜெர்மானிய செய்தித்தாள் ஃப்ராங்க்ஃபர்ட்டர் ஆல்கெமைனா ட்ஸைடுங் அறிக்கை செய்கிறது. அந்த அறிக்கையின்பிரகாரம், ரஷ்யாவில் உள்ள வேளாண்மை நிலத்தில் பாதியளவு விளைநிலமாக பயன்படுத்த ஏற்றதல்லாததாக இருக்கிறது, மேலும் 1,00,000-க்கும் அதிகமான ஆட்கள் கதிரியக்கம் மிக அதிகம் உள்ள இடங்களில் வாழ்ந்துவருகின்றனர். மேலும், ரசாயன ஆயுதம் தயாரிக்கப்பட்டுவந்த தொழிற்சாலைகளில் ஏற்பட்ட விஷ பாதிப்பால் பல்லாயிரக்கணக்கானோர் மரித்ததாக அறிக்கை செய்யப்பட்டனர். இரசாயன பாதுகாப்பு சங்கத்தின் தலைவர், ல்ஜெஃப் ஃப்யாடராஃப், “மருத்துவ நோக்குநிலையில் இருந்து பார்க்கையில், ரசாயன யுத்தத்திற்கான நம்முடைய தயாரிப்புகள் பேரழிவுகளில் விளைவடைந்தன,” என்று குறிப்பிட்டார்.

வன்முறையான பிள்ளைகள்

கொலைசெய்கிற, திருடுகிற, கற்பழிக்கிற, மற்றும் துன்புறுத்துகிற பிள்ளைகள் அநேக தேசங்களில் காணப்படுகின்றனர்; அந்தக் குற்றச் செயல்களும் காட்டுமிராண்டித்தனமும் அதிகரித்துக்கொண்டே போகின்றன. ஐக்கிய மாகாணங்களில் 18 வயதுக்குக் கீழுள்ள இளைஞரால் செய்யப்படும் கொலைகளின் எண்ணிக்கை கடந்த ஐந்து வருடங்களில் 85 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்தக் குற்றவாளிகள் வெளிக்காட்டும் அசட்டையான மனப்பான்மை அதைப்போலவே கவலையூட்டுவதாக இருக்கிறது. இந்த மாற்றங்களுக்கெல்லாம் காரணம் என்ன? “அரிக்கப்பட்டுப்போன தராதரங்களை உடைய, நம்முடைய ஆக்கிரமிக்கும் சமுதாயம், வன்முறையை ஏற்கப்படத்தக்கதாக ஆக்கியிருக்கிறது,” என்று டேர் ஷ்பீகெல் என்ற ஜெர்மானிய செய்திப் பத்திரிகை கூறுகிறது. “சரி தவறு, நல்லது கெட்டது போன்றவற்றின் தெளிவான தராதரங்கள் . . . இனியும் பகுத்தறிய முடியாதவையாகி இருக்கின்றன.” அது மேலும் கூறுகிறது: “இளம் குற்றவாளிகள் பலியாட்களாகவும்கூட இருக்கின்றனர். தாங்கள் வளர்ந்துவரும், வயதுவந்தோரின் உலகத்தின் பிரதிபிம்பங்களாக அவர்கள் இருக்கின்றனர். . . . வன்முறையாக நடந்துகொள்ளும் ஒவ்வொரு பிள்ளையும் நம்பமுடியாத அளவு வன்முறையைப் பார்த்தும், தங்களுடைய குணாதிசயத்தின் பாகமாக்கிக்கொண்டும் இருக்கிறது.” டிவியின் மூலம் பிள்ளைகள் “முழு பூமியிலும் நடக்கக்கூடிய வன்முறையை” பார்க்கின்றனர். அவர்கள் வன்முறை வீடியோக்கள், கம்ப்யூட்டர் விளையாட்டுகள், கொலையையும் மற்ற வன்முறைச் செயல்களையும் மகிமைப்படுத்தும் பாடல்கள் போன்றவற்றால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றனர். டிவி நிகழ்ச்சிகள் பிரச்சினைகளை நிவர்த்திசெய்வதற்கும் சண்டைச் சச்சரவுகளைத் தீர்ப்பதற்கும் நியாயமான ஒரு வழி வன்முறை என்று ஆதரிக்கின்றன. “நாம் மனிதாபிமானம் இல்லாத ஒரு சமுதாயத்தினராக ஆகிவிட்டோம், நம்முடைய பிள்ளைகளும்கூட அவ்வாறே வளர்ந்துவருகின்றனர்,” என்று ஹாம்பர்க் உளவியல் பேராசிரியர் ஷ்டெஃபான் ஷ்மிட்ச்சென் கூறுகிறார்.

குழந்தையோடு உறங்குதல்

“தாய்மார்கள் ஒரே ஒரு காரியத்தைச் செய்தார்களேயானால் குழந்தையின் திடீர் மரண அறிகுறிகளை (Sudden Infant Death Syndrome [SIDS]) நாம் குறைப்பதுமட்டும் அல்லாமல் ஆரோக்கியமுள்ள, மகிழ்ச்சியான குழந்தைகளை வளர்ப்போம்: தங்களுடைய குழந்தைகளை அவர்களின் தொட்டில்களில் தனிமைப்படுத்துவதைவிட, முதல் வருடத்தில் தங்களோடு படுக்கையில் படுக்கவைத்துக் கொள்வதேயாகும்,” என்று கலிபோர்னியாவின் பொமோனா கல்லூரியில் உள்ள ஒரு பேராசிரியர், ஜேம்ஸ் மெக்கென்னா சொல்கிறார். பெற்றோரோடு ஒட்டிப் படுத்துத் தூங்குவது, “இரவு முழுவதும் குழந்தையின் உடல் இயக்கங்களை சீர்படுத்துவதற்கு உதவுகிறது,” என்று தி டல்லாஸ் மார்னிங் நியூஸ் அறிவிக்கிறது. ஒரு குழந்தை தன்னுடைய தாய்க்குப் பக்கத்தில் தூங்கும்போது, குழந்தையின் “சுவாச முறைகள், இருதயத் துடிப்பு வீதங்கள், மற்றும் தூங்கும் கட்டங்கள் அதன் அம்மாவுடையதைப் பின்பற்றுகின்றன,” என்பதாக சோதனைகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. அம்மாவும் குழந்தையும் வழக்கமாகவே ஒருவரையொருவர் பார்த்தவண்ணம் படுத்திருப்பதால், குழந்தை தனக்குத் தேவைப்படும்போதெல்லாம் சுலபமாக பால் குடிக்கமுடியும். “தொட்டில்களில் தனியே விடப்படும் குழந்தைகள், உணர்ச்சிப்பூர்வமான இழப்பினால் அவதிப்படுகின்றன,” என்று Mr. மெக்கென்னா சொல்கிறார். “இது அத்தியாவசியமான புத்திக்கூர்மையின் வளர்ச்சி குன்றிப் போவதற்கும், ஒருவேளை SIDS-ன் ஆபத்து விளைவடைவதற்கு மிகவும் சாதகமான நிலைமைகளுக்கும் வழிநடத்தக்கூடும் என்று நாங்கள் கருதுகிறோம்.” குழந்தைகள் வழக்கமாகவே தங்களுடைய தாய்மார்களோடு படுத்துறங்கும் நாடுகளில் SIDS-ன் வீதங்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன என்பதாக புள்ளிவிவரங்கள் காண்பிக்கின்றன.

இஸ்ரேலும் வாடிகனும் ஒப்பந்தம் செய்கின்றன

பல வருட மறுப்புக்கும் 17 மாத பேச்சுவார்த்தைகளுக்கும் பிறகு, வாடிகன் இஸ்ரேலோடு ஒரு அரசியல் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இரு தரப்புப் பிரதிநிதிகளும் தலைக்கவிகைத் தொப்பிகளை அணிந்திருந்தனர். இஸ்ரேலுக்காக துணை வெளிநாட்டு அமைச்சர் யோசி பைலினும், வாடிகன் சார்பாக வெளிநாட்டு உதவி அமைச்சர் மான்ஸைனர் க்ளாடியோ ச்சேல்லியும் கையொப்பமிட்டனர். “இப்போது இஸ்ரேலிலும் உலகம் பூராவும் கத்தோலிக்கர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தைக்கும் மதிப்போடுகூடிய கூட்டுறவுக்கும் புதிய ஊக்கமும் சக்தியும் அளிக்கப்படும் என்று போப்பின் அரசாங்கம் நம்பவைக்கப்பட்டிருக்கிறது,” என்று ச்சேல்லி சொன்னார். யூதர்களுக்கு எதிரான பகைமையை எதிர்த்துப் போராடும் பொறுப்பை அந்த ஒப்பந்தம் வாடிகனிடம் ஒப்படைக்கிறது. மேலும் பேச்சுரிமையையும் இஸ்ரேலில் சமூக நல திட்டங்களை அமல்படுத்துவதற்கான உரிமையையும் சர்ச்சுக்குக் கொடுப்பதாக இஸ்ரேல் ஒப்புக்கொள்கிறது. இஸ்ரேலில் உள்ள சர்ச் சொத்துக்கள் மீதான வரிகள், புனித ஸ்தலங்களுக்குள் அனுமதி போன்ற இன்னும் சில விஷயங்கள் தீர்க்கப்படவேண்டியிருக்கின்றன. ஜெரூசலமைப்பற்றிய விஷயம் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படவில்லை, என்றாலும் அந்நகரத்தின் இறுதி ஸ்தானத்தைக் குறித்ததில் இப்போது தனக்கு அதிகாரம் இருக்கும் என்பதாக வாடிகன் நம்புகிறது.

உயிரியல் ஒப்பந்தம் சட்டமாகிறது

பிரேஸிலில் ஜூன் 1992-ல் 167 நாடுகளால் கையெழுத்திடப்பட்ட ஒரு ஒப்பந்தம் இந்த வருட தொடக்கத்தில் சர்வதேச சட்டமாயிற்று. உயிரின வேற்றுமை மீதான மாநாடு என்று அழைத்த அந்த ஒப்பந்தம், தங்களுடைய எல்லைகளுக்குள்ளும் தேவையான உறைவிடங்களுக்குள்ளும் இருக்கும் விலங்குகளையும் தாவரங்களையும் நுண்ணுயிர்களையும் பாதுகாப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை அதில் கையெழுத்திடும் நாடுகளிடம் அந்த ஒப்பந்தம் ஒப்படைக்கிறது. கையெழுத்திடும் நாடுகள் அழியும் அபாயத்திலிருக்கும் இனங்களைப் பாதுகாக்கவும், உயிரின வளங்களைத் தகுந்தமுறையில் உபயோகிப்பதைப்பற்றியும் பாதுகாப்பிற்கான அவசியத்தைப் பற்றியும் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தவும் தேவையான சட்டங்களைப் பிறப்பிக்கவேண்டும். இனங்கள் அழிவது அதிவேகமாக அதிகரித்துக்கொண்டிருந்ததைப்பற்றிய அறிவும் எஞ்சியிருக்கும் எல்லா இனங்களிலும் பாதி 2050-ம் ஆண்டுக்குள் அழிந்துவிடும் என்ற பயமுமே இந்த ஒப்பந்தம் செய்துகொள்வதைத் தூண்டிவிட்டது. இந்த ஒப்பந்தம் எவ்வாறு சரியாக செயல்படும் என்பதைத் தீர்மானிக்க, கையெழுத்திடும் நாடுகள் இவ்வருடத்தின் பிற்பகுதியில் ஒன்றுகூடி வரவிருக்கின்றன.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்