பெற்றோரும் குழந்தைகளும் இங்கு ஒன்றாக செவிகொடுத்து, கற்றுக்கொள்கிறார்கள்
ஜப்பானிலுள்ள விழித்தெழு! நிருபர்
“ஒரு துப்புரவுப்பணி கம்பெனியாக, நாம் நம்மைக் குறித்து வெட்கப்பட்டுக்கொள்ள வேண்டும். ஆனால் நீங்கள் [சுத்தம்] செய்யும்போது அதிக சுத்தமாக இருக்கிறதுபோல தோன்றுகிறது.” யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய “தெய்வீக போதனை” மாவட்ட மாநாட்டுக்காகச் செய்யப்பட்ட தயாரிப்பு சம்பந்தமாக ஜப்பானிலுள்ள ஃபூகுவோகா டோம் அரங்கத்தின் துப்புரவுப்பணி கம்பெனிக்கு பொறுப்பாளராக இருக்கும் மனிதர், 1993-ன் கோடைகாலத்தில் இதைச் சொன்னார். முந்தின வருடம் டோக்கியோ டோம் அரங்கத்தில் நடந்த யெகோவாவின் சாட்சிகளுடைய “ஒளி கொண்டுசெல்வோர்” மாவட்ட மாநாட்டிலும் ஈடுபட்டவராக இருந்தார்; அவர் மிகவும் மனங்கவரப்பட்டார். மாநாடுகளின் முடிவில், அது வாடகைக்கு விடப்பட்ட நிலையைவிட அரங்கம் சுத்தமாக இருந்தது. அவர் மேலும் சொன்னார்: “குழந்தைகளின் நடத்தை தலைசிறந்ததாய் இருந்தது. ‘பிரமாதம்!’ என்றுதானே நான் சொல்வேன்.”
கடந்த வருடம், டாக்கமாட்சூ நகரிலும் “தெய்வீக போதனை” மாவட்ட மாநாடு நடந்தது. மாநாட்டு பிரதிநிதிகளைக் கவனித்துக் கொண்டிருந்த நடுத்தர வயது மனிதர் ஒருவர், “நீங்கள் கிறிஸ்தவர்களா?” என்று அவர்களைக் கேட்டுவிட்டு, இவ்வாறு தொடர்ந்தார்: “கடந்த வருடமும் நீங்கள் மாநாடு வைத்திருந்தீர்களல்லவா? மாநாட்டு சமயத்தில் உங்களுடைய பிள்ளைகளைக் காணோமே?” இதற்குப் பிரதிநிதிகள், “அவர்கள் பேச்சுக்களைக் கேட்டு, தங்களுடைய பெற்றோரோடு சேர்ந்து தங்களுடைய சொந்த பைபிளை திறந்துபார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று பதிலளித்தபோது, அந்த மனிதர் சொன்னார்: “அது நல்லது! ஒவ்வொரு கோடைகாலத்திலும் நான் உங்களுடைய ஜனங்களைக் காண்கிறேன், உங்களுடைய பிள்ளைகள் நல்ல நடத்தை உடையவர்களாக நடந்துகொள்கிறார்கள் என்பதில் எப்போதும் மனங்கவரப்படுகிறேன்.” பிறகு பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே சந்ததி பிளவு என்பதைப் பற்றி அதிகத்தை தான் கேள்விப்பட்டாலும் யெகோவாவின் சாட்சிகளுடைய குழந்தைகளின் நடத்தையிலிருந்து அவர்களுக்கு இடையே உள்ள பெற்றோர்-பிள்ளை உறவு மிக நேர்த்தியாக இருக்கிறது என்று தன்னால் சொல்ல முடியும் என அவர் மேலுமாக அறிந்துகொண்டார்.
மாக்குஹாரி மெஸ்சியில் நடந்த யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாடு ஒன்றில் ஆஜராயிருந்த ஒரு தொடக்கப் பள்ளி ஆசிரியை, மாநாடு நடந்த இடத்தில் பிள்ளைகளின் நடத்தையைக் கண்டு பிரம்மித்துப்போனார். மற்றவர்கள் பேசுவதைக் கேட்டுக் கற்றுக்கொண்டு முன்னேற வேண்டிய பள்ளியில் பிள்ளைகள் கேட்பதற்கு விரும்புவதில்லை என்பதை அவர் உணர்ந்திருந்தார். எனினும், மாநாட்டில் வித்தியாசமான நிலையைக் கண்டார். “அந்தக் குழந்தைகள் முழுக்கவனம் செலுத்தி, நீண்ட நேரத்துக்கு உட்கார்ந்திருக்கிறார்கள். மேலும் என்ன காணப்படுகிறதென்றால், அவர்கள் தங்களுடைய பென்சில்களை கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருந்து, குறிப்புகளை எடுக்கின்றனர். தங்களுடைய மடிகளில் வைத்து எழுதவேண்டியதிருந்தாலும் ஜப்பானிய எழுத்துக்களைச் சரியாக எழுதுகின்றனர். சாட்சிகளின் பிள்ளைகள் மற்ற பிள்ளைகளிலிருந்து வித்தியாசமானவர்களாக இருக்கிறார்கள். பள்ளியிலும்கூட, அவர்களுடைய பேசும்முறை, செவிகொடுத்தல்முறை, மேலும் அவர்களுடைய உடை, சிகையலங்காரம் போன்றவற்றில் அவ்வாறு இருக்கிறார்கள்.” பின்பு அவர் தொடர்ந்து சொன்னார்: “அது ஏனென்றால் அவர்களுடைய தினசரி பயிற்றுவிப்பாலும் அவர்கள் யெகோவாவைத் துதிப்பதாலும் அவர்களுடைய குடும்பங்கள் ஒன்றுபட்டு உழைப்பதாலுமாகும் என்று நான் நினைக்கிறேன்.”
‘புருஷர்களும் ஸ்திரீகளும் பிள்ளைகளும் கேட்டு கற்றுக்கொள்ளும்படி ஜனத்தைக் கூட்டிச்சேரும்,’ என்று சொன்ன தெய்வீக கட்டளையைப் பின்பற்றின இஸ்ரவேலர்கள்போல, இன்றைய யெகோவாவின் சாட்சிகளும், முதிர்வயதினரும் இளைஞரும், ஆண்களும் பெண்களும், அதேபோன்ற போதகத்தைப் பெறுவதற்காகக் கூடிவருகின்றனர். மேல்கொடுக்கப்பட்டுள்ள வசனம் தொடர்ந்து சொல்லி காரணத்தைக் கொடுக்கிறது: ஏனெனில் ‘உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கவேண்டும்.’—உபாகமம் 31:12.