மாநாடுகளிலிருந்து பயனடைய இளைஞருக்கு உதவிசெய்யுங்கள்
1 ஒவ்வொரு வட்டார மாநாட்டிற்கும், முக்கியமாக “தெய்வ பக்தி” மாவட்ட மாநாட்டிற்கும் வரும்படியான அழைப்பு யெகோவாவின் வணக்கத்தார் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படுகிறது. நம் மத்தியிலிருக்கும் மிகத்திரளான இளைஞர்களை மனதில் கொண்டு மாநாட்டு நிகழ்ச்சிநிரல்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆம், இளைஞர்கள் “சிறு பிள்ளைகளும்கூட” ஆஜராகும்படி எதிர்ப்பார்க்கப்படுகின்றனர்.—உபா. 31:12.
2 இந்த மாநாடுகள் அவர்களுக்கும் உரியது என்பதை பெற்றோர் பிள்ளைகளுக்குக் கற்பிக்கவேண்டும். தாங்கள் அங்கே ஆஜராக இருப்பதும் மாநாட்டு நிகழ்ச்சிநிரலுக்குச் செவிகொடுப்பதும் தங்களுடைய வணக்கத்தின் பாகம் என்பதை பிள்ளைகள் புரிந்துகொள்ளுகையில் சிறந்த ஆவிக்குரிய முன்னேற்றம் ஏற்படுகிறது. நிகழ்ச்சிநிரலின்போது இளைஞர் அப்படியே அமர்ந்திருப்பதும் அமைதியாயிருப்பதும் கவனமாய் செவிகொடுப்பதும் எப்பொழுதுமே சுலபமல்ல என்பது ஒத்துக்கொள்ளக்கூடியதே. அதோடு, அங்கு பேசப்படும் சில தகவல்கள் ஒருவேளை அவர்கள் புரிந்துகொள்வதற்கு கடினமாக இருக்கக்கூடும். எனவே, பெற்றோரின் பங்கில், தொடர்ச்சியான கவனிப்பும் முயற்சியும் ஆம்! கடின உழைப்பும் முக்கியமானதாயிருக்கின்றன.
3 மாநாட்டுக்கு ஆஜராகக்கூடிய இளம் பிள்ளைகளாலும் பருவ வயதினராலும் ஆவிக்குரிய நன்மைகளில் மனமார்ந்த ஆர்வம் வெளிக்காட்டப்படுவதை கவனிப்பது உற்சாகமூட்டுவதாயிருக்கிறது. ஒருவேளை இந்த ஆர்வத்தில் கொஞ்சம் பயணம் செய்வதற்குக் கிடைக்கும் வாய்ப்பு, பெரும் கூட்டத்தை காணும் கிளர்ச்சி, வெளியிடங்களில் சாப்பிடுவது போன்ற காரியங்களினால் பெரும்பாலும் உண்டாகிறது என்றாலும், மாநாட்டை தானே மதித்துணருவதற்கும் அதிலிருந்து ஆவிக்குரிய நன்மைகளை அடைவதற்கும் சிறு பிள்ளைக்கும்கூட உதவி அளிக்கப்படலாம்.
பெற்றோர் எவ்வாறு உதவலாம்?
4 மாநாட்டை எதிர்நோக்கியிருக்கையில் பிள்ளைகளுடைய மனதை ஆவிக்குரிய காரியங்களிடமாக திருப்புவது அவசியம். ஒரு மாநாட்டுக்கு ஆஜராவதற்கு முன்பு உங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து உட்கார்ந்து உட்பார்வை (Insight) புத்தகத்தில் “தெய்வ பக்தி” என்ற தலைப்பின் கீழுள்ள தகவலை ஏன் நீங்கள் விமர்சித்துப் பார்க்கக்கூடது? மாநாட்டு நிகழ்ச்சி நிரலிலிருந்து குடும்பத்திலுள்ள அனைவரும் நன்மையடைவதற்கு அது உதவிசெய்யும்.
5 அநேக பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு அவர்களுக்கென்று ஒரு சொந்த பைபிளையும் பாட்டு புத்தகத்தையும் மற்ற பிரசுரங்களையும் கொடுப்பதன் மூலம் சிறந்த பலன்களை அறுவடை செய்திருக்கின்றனர். பைபிளையும் பிரசுரங்களையும் குறித்து சரியான நோக்குநிலை அவர்கள் உடையவர்களாய் இருந்தால், அவற்றின் மீது வரைவதன் மூலம் அல்லது எழுதுவதன் மூலம் புத்தகங்களை விளையாட்டு பொருள்களாக கருதும் மனப்போக்கை கட்டுப்படுத்தும். பிள்ளைகள் குறிப்பு எடுக்கும்படி உற்சாகப்படுத்துங்கள். பின்பு மாலையில் எல்லாக் குடும்ப அங்கத்தினருடனும் அதை விமரிசனம் செய்யுங்கள். அதோடு மாநாட்டுக்கு வரும்போது பொம்மைகளையோ வண்ணம் தீட்டும் புத்தகங்களையோ மற்ற விளையாட்டுப் பொருட்களையோ கொண்டு வராமலிருப்பது சிறந்ததாக இருக்கும்.
கட்டுப்பாட்டிற்கும் புறத்தோற்றத்துக்கும் கவனம் செலுத்துங்கள்
6 சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளை நிகழ்ச்சி நிரலின்போது தொந்தரவுசெய்ய அனுமதிக்கின்றனர். ஜெபம் செய்யும் சமயங்களிலும்கூட சில பிள்ளைகள் விளையாடி மற்றவர்களை கவனம் சிதற வைக்கின்றனர். உங்களை நீங்களே பின்வருமாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ஜெபம் செய்யப்படும்போது என்னுடைய பிள்ளைகள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? நிகழ்ச்சிநிரலின்போது தங்களுடைய இருக்கைகளை விட்டு எழுந்துச்செல்ல அவர்கள் அனுமதிக்கப்படலாமா? சம்பந்தப்பட்ட பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு அருகில் உட்காருவதை ஞானமுள்ளதாக காண்கின்றனர். இது அவர்கள் சரியான மேற்பார்வை செய்வதற்கு உதவியாக இருக்கிறது. அப்பொழுது அவர்கள் மற்றவர்களுடைய கவனத்தை சிதறவைப்பவர்களாக இருக்கமாட்டார்கள். மாநாடு சம்பந்தப்பட்ட உத்தரவாதங்களையுடைய பெற்றோரும்கூட நிகழ்ச்சிநிரலின்போது தங்கள் பிள்ளைகளுடன் உட்காருவதற்கு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும். பிள்ளைகளுக்கு அவர்களுடைய சொந்த பெற்றோரின் மேற்பார்வை தேவை. மாநாடு நடைபெறும் இடத்துக்கு வெளியேயும்கூட, பொழுதுபோக்குக்கான சமயங்களிலும் அவர்களுடைய மேற்பார்வை அவசியம்.
7 நம்முடைய இளைஞர்கள் மாநாட்டிற்காக எப்படி உடை உடுத்துகிறார்கள்? அவர்கள் கண்ணியமற்ற உடைகளையும் விளையாடுகையில் அணியப்படும் காலணிகளையும் அணிந்து வருவார்களானால் அந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வதற்கு இது அவர்களுக்கு உதவி செய்யுமா? மறுபட்சத்தில், கிறிஸ்தவ கூட்டங்களுக்குப் பொருத்தமான ஆடைகளை அணியும் பிள்ளைகள் அந்த நிகழ்ச்சிக்கு உயர்ந்த மதிப்பையும் உள்ளார்ந்த அக்கறையையும் பிரதிபலிக்கிறார்கள். இது யெகோவாவின் பெயருக்குத் துதியையும் கனத்தையும் கொண்டுவருகிறது.
8 நிகழ்ச்சிநிரலுக்குப் பின்பு பிள்ளைகள் சில வேலைகளை செய்வதற்கு ஏற்பாடு செய்வதன்மூலம் ஒரு பொறுப்புணர்ச்சி வாய்ந்த மனசிந்தையை உற்சாகப்படுத்தலாம். ஏற்கெனவே குறிப்பிட்டபடி 16 வயதுக்குக் கீழான இளைஞர்கள் பெற்றோர்களுடனோ அல்லது மற்ற உத்தரவாதமுள்ள பெரியவர்களின் வழிநடத்துதலின்பேரில் வாலண்டியர் சேவை இலாக்காவில் பணியாற்றலாம். இது மாநாட்டின் பயனுள்ள அம்சமென அநேக இளைஞர் கருதுகின்றனர்.
9 இந்த ஆலோசனைகளை சிந்தித்துப் பார்ப்பதன் மூலம் பெற்றோரும் மற்றவர்களும் மாநாடுகளிலிருந்து மிகுதியான பலன்களை இளைஞர்கள் அடைவதற்கு உதவிசெய்ய விழிப்புடனிருக்கலாம்.