1996 “தேவ சமாதான தூதுவர்கள்” மாவட்ட மாநாடு
1 இந்தியாவில் நடைபெற்ற 1995 “சந்தோஷமாய் துதிப்போர்” மாவட்ட மாநாடுகளுக்கு வருகைதந்த 23,447 பேர்களில் அநேகரிடமிருந்து ஆவிக்குரிய வகையில் புத்துயிரூட்டும் அந்த நிகழ்ச்சிநிரலுக்காக நன்றியறிதலின் உள்ளார்ந்த போற்றுதல்கள் கேட்கப்பட்டன. யெகோவாவைத் துதிப்போரில் 861 பேர் தங்களது ஒப்புக்கொடுத்தலை தண்ணீர் முழுக்காட்டுதலினால் அடையாளப்படுத்தி காட்டுவதைக் காண்கையில் நம் இருதயங்கள் மகிழ்ச்சியால் பொங்கி வழிந்தன. யெகோவாவின் சாட்சிகளும் கல்வியும் (ஆங்கிலம்) மற்றும் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு ஆகிய இரண்டு பிரசுரங்களைப் பெற்றுக்கொள்ளும்போது நாம் களிகூர்ந்தோம். அத்தகைய செயல்தூண்டும் நிகழ்ச்சிநிரலை சென்றாண்டு அனுபவித்து களித்ததானது, 1996 “தேவ சமாதான தூதுவர்கள்” மாவட்ட மாநாடுகளுக்கான ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிநிரலுக்கு ஆஜராவதற்கான அனைத்து முயற்சியையும் செய்ய உண்மையிலேயே நம்மைத் தூண்டவேண்டும். நாம் அனைவரும் நமது பைபிள் மாணாக்கர்களைக் கண்டிப்பாக அழைக்கவேண்டும், அங்கே நம்முடன்கூட இருப்பதற்கு அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும். இந்தக் கடைசி நாட்களில் யெகோவாவைச் சந்தோஷமாக நாம் தொடர்ந்து சேவை செய்கையில், இந்த மாநாடுகள் உற்சாகத்திற்கும் பலத்திற்கும் உண்மையான ஊற்றுமூலமாக நிரூபித்திருக்கின்றன.
2 இந்த மகிழ்ச்சியூட்டும் ஆவிக்குரிய நிகழ்ச்சிநிரலை ஆரம்ப பாட்டு முதல் முடிவு ஜெபம் வரையாக அனுபவித்து மகிழ உங்களால் அங்கே இருக்க முடியும்படி மாநாட்டிற்கான உங்களது ஏற்பாடுகளை நன்கு முன்கூட்டியே செய்வதில் நிச்சயமாய் இருங்கள். எவருக்கு உதவி தேவைப்படுமோ, விசேஷமாய் புதிதாக அக்கறைகாட்டுவோரையும் உங்களது திட்டத்தில் அன்பாக சேர்த்துக்கொள்ளுங்கள், அதனால், அவர்களும் அனைத்து நிகழ்ச்சிநிரல்களுக்கும் ஆஜராக முடியும். வருவதற்காக ஒருவேளை திட்டம்போடும் எந்தவொரு பைபிள் மாணாக்கரோடும், இந்த உட்சேர்க்கையில் உள்ள விஷயத்தை சிந்திப்பது மிகவும் பயனுள்ளதாய் இருக்கும். (கலா. 6:6, 10) இவ்வருட மாவட்ட மாநாட்டின் நிகழ்ச்சிநிரல், நமது தேவ சமாதானத்தை நிலைபெறச்செய்வதற்கும் நிச்சயமாகவே உதவும், அத்தகைய சமாதானத்தை மற்றவர்கள் கண்டடைய உதவுவதில் நம் பங்கை அது விளக்கும். இந்த நிகழ்ச்சிநிரலில் எதையும் தவறவிடக்கூடாது என்பதற்காக நீங்கள் திட்டங்களைத் தீட்டிவிட்டீர்களா?
3 மூன்றுநாள் நிகழ்ச்சிநிரல்: கடந்த வருட “சந்தோஷமாய் துதிப்போர்” மாவட்ட மாநாட்டைப்பற்றிய ஒரு சாதகமான பாராட்டு பலரது எண்ணங்களை வெளிப்படுத்தியது: “மூன்று அருமையான நாட்களை அமைதியும் ஐக்கியமும் நிறைந்த கூட்டுறவிலும், யெகோவாவைத் துதிப்பதிலும் செலவிட்டதில் நாம் எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளோம்! நாம் அழகிய ஆவிக்குரிய பரதீஸில் வாழ்கிறோம் என்பதை நம் மாநாடு நிரூபித்துவிட்டது. இந்தத் தொல்லை நிறைந்த உலகிலும், மகிழ்ந்து களிகூருவதற்கான காரணத்தை உண்மையில் நாம் கொண்டுள்ளோம்.” இவ்வருட மாநாட்டையும் நீங்கள் முழுமையாக அனுபவித்து மகிழ்ந்து, புதுத்தெம்புடன் வீட்டுக்குத் திரும்புவீர்கள் என நாங்கள் அறிந்துள்ளோம். (2 நா. 7:10) இந்த வருடம் மீண்டும் நமக்கு மூன்றுநாள் நிகழ்ச்சிநிரல் இருக்கும். எல்லா நாட்களிலும் ஆஜராவதற்காக உலகப்பிரகாரமான வேலையிலிருந்து விடுப்பு எடுப்பதற்கு நீங்கள் ஏற்கெனவே ஏற்பாடுகள் செய்துவிட்டீர்களா? மாநாடுகளில் பல, பள்ளி விடுமுறையின்போது நடைபெறுவதில்லை. பள்ளி செல்லும் வயதுடைய பிள்ளைகள் உங்களுக்கு இருப்பார்களானால், தங்களுடைய மத பயிற்றுவிப்பின் இந்த முக்கிய பாகத்திற்காக இரண்டொரு நாட்களுக்கு அவர்கள் பள்ளிக்கு வரமாட்டார்கள் என்பதை அவர்களுடைய ஆசிரியர்களுக்கு நீங்கள் மரியாதைக்குரிய விதத்தில் தெரிவித்துவிட்டீர்களா?
4 இந்தியாவில் நடைபெறவிருக்கும் 15 மாநாடுகளுக்கான இடங்களையும், தேதிகளையும் ஜூலை 1 மற்றும் 15 காவற்கோபுர இதழ்கள் பட்டியலிடுகின்றன. ஆங்கிலத்தில் மட்டுமின்றி, கன்னடா, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் மாநாடுகள் நடைபெறவிருக்கின்றன. நிகழ்ச்சிநிரல் மூன்று நாட்களுமே காலை 9:30 மணிக்கு ஆரம்பமாகி, ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 4:00 மணியளவில் முடிவடையும். கதவுகள் காலை 8:00 மணிக்குத் திறக்கப்படும். அதற்கு முன்பு நுழைவதற்கு அனுமதிக்கப்படுகிறவர்கள், வேலை நியமிப்புகள் உள்ளவர்களே, அனைவருக்கும் கட்டடம் திறக்கப்படும் வரையாக இவர்கள் இருக்கைகளைப் பிடித்துவைக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதிக வசதியாகவும் செளகரியமாகவும் இருக்கிற இடங்களிலுள்ள இருக்கைகளைக் காலியாக விட்டுவிடுவதன் மூலமாக வயதான மற்றும் உடல்பலவீனமான நம்முடைய சகோதரர்களுக்கு நீங்கள் அன்பை வெளிப்படுத்திக் காண்பிப்பீர்களா? நினைவில் வையுங்கள்: ‘அன்பு தன் சொந்த அக்கறைகளை நாடாது.’—1 கொ. 13:4, 5, NW; பிலி. 2:4.
5 நீங்கள் கூர்மையாக்கப்படுவீர்களா?: ‘இரும்பை இரும்பு கூர்மையாக்கிவிடும்,’ என்ற நீதிமொழிகள் 27:17-ஐ (NW) மேற்கோள் காண்பித்த பிறகு, ஆகஸ்ட் 15, 1993, காவற்கோபுரம் இவ்வாறு கருத்துத் தெரிவித்தது: “நாமெல்லாம், வழக்கமாகக் கூர்மைப்படுத்தப்பட வேண்டிய கருவிகளைப் போன்றவர்கள். நாம் யெகோவாவிற்கான அன்பைச் செலுத்தி, நம் விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்ட தீர்மானங்களை எடுப்பது உலகத்திலிருந்து வித்தியாசப்பட்டிருப்பதை அர்த்தப்படுத்துவதால், நாம் தொடர்ந்து, பெரும்பான்மையினரிடமிருந்து வித்தியாசப்படுவதுபோல், வித்தியாசமான பாதையைத் தெரிந்தெடுத்தல் அவசியமாயிருக்கிறது.” அந்த அறிவுரையை நாம் எப்படிப் பொருத்தலாம்?
6 நாம் இந்த உலகத்திலிருந்து வித்தியாசப்பட்டவர்களாக இருக்கிறோம், இருக்கவும் வேண்டும். நற்கிரியைகளுக்கான பக்தி வைராக்கியம் உள்ளவர்களாக நாம் இருக்க வேண்டுமானால், இதை நிறைவேற்றுவதற்கான விடாமுயற்சியைக் காத்துக்கொள்ள வேண்டும். (தீத். 2:14) அதனால்தான் மேற்குறிப்பிடப்பட்ட காவற்கோபுர கட்டுரை தொடர்ந்து இவ்வாறு சொன்னது: “நாம் யெகோவாவை நேசிக்கிறவர்கள் மத்தியில் இருந்தால், ஒருவரையொருவர் கூர்மைப்படுத்திக்கொள்கிறோம்—அன்பிற்கும் நற்கிரியைகளுக்கும் ஒருவரையொருவர் ஏவிவிடுகிறோம்.” மாவட்ட மாநாடு, ஆவிக்குரிய விதமாக கூர்மையானவர்களாக நிலைத்திருப்பதற்கு நமக்கு உதவிசெய்ய யெகோவாவிடமிருந்து வருகிற ஏற்பாடுகளில் ஒன்றாயிருக்கிறது. மாநாட்டின் மூன்று நாட்களின்போது, ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஆஜராவதற்கு திடத்தீர்மானம் எடுப்போமாக. அந்த நிகழ்ச்சிநிரலில் எந்தப் பாகத்தையும் தவறவிட அனுமதிக்க முடியாது.
7 ஞானமான ஒரு நபர் செவிகொடுத்துக் கேட்பார்: நாம் கேட்கும் திறனுடன் பிறந்திருக்கலாம், ஆனால் செவிகொடுத்துக் கேட்கும் திறனுடன் பிறக்கவில்லை. செவிகொடுத்துக் கேட்பது, வளர்க்கப்படவேண்டிய ஒரு கலையாகும். ஒரு சராசரி ஆள் தான் கேட்கும் விஷயத்தில்—செவிகொடுத்துக் கேட்கும்போது தான் எவ்வளவு கவனமாக கேட்டதாக நினைத்தாலும்கூட—சுமார் பாதியளவுக்குத்தான் ஞாபகப்படுத்துகிறார் என்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. கவனச்சிதறல்களுள்ள ஒரு சகாப்தத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருப்பதால், நீண்ட நேரத்திற்கு கவனத்தை ஒருமுகப்படுத்துவது நமக்கு சிலசமயங்களில் கடினமாக இருக்கலாம். நாம் கவனம் செலுத்தும் கால அளவை அதிகரிப்பதற்கு, விசேஷமாக ஒருவர் பேசிக்கொண்டிருப்பதற்கு செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருக்கிற பெரிய மாநாடுகளில் இருக்கும்போது அப்படி செய்வதற்கு நாம் முயற்சிசெய்ய முடியுமா? மாநாட்டிலிருந்து வீடு திரும்பிய பிறகு ஒவ்வொரு நாளுக்குரிய நிகழ்ச்சிநிரலின் சுருக்கத்தைக் கொடுக்கும்படி நீங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டால், உங்களால் அவ்வாறு கொடுக்க முடியுமா? நாமனைவரும் எவ்வாறு செவிகொடுத்துக் கேட்கும் திறமையை வளர்த்துக்கொண்டு, மாநாட்டு நிகழ்ச்சிநிரலில் கொடுக்கப்படுகிற ஒவ்வொரு பாகத்திற்கும் கூர்ந்த கவனம் செலுத்த முடியும்?
8 கூர்ந்த ஆர்வம் இன்றியமையாதது, ஏனென்றால் அதில்லாமல் கடவுளுடைய பரிசாகிய ஞாபகசக்தி திறம்பட்ட விதத்தில் செயல்பட முடியாது. உதாரணமாக, ஒரு நபர் எந்தளவுக்கு ஒரு பொருளில் ஆர்வம் காண்பிக்கிறாரோ அந்தளவுக்கு ஒரு பேச்சிலுள்ள அல்லது நிகழ்ச்சிநிரலின் பாகத்திலுள்ள முக்கிய குறிப்புகளை ஞாபகப்படுத்துவது சுலபமானதாய் இருக்கிறது. இருப்பினும், மாவட்ட மாநாடுகளில் நாம் கேட்பதற்கு சிலாக்கியமளிக்கப்பட்டிருக்கிற காரியங்களுக்கு வழக்கத்துக்கும் மேலான கவனம் செலுத்துவதன் பேரில் அதிகம் சார்ந்திருக்கிறது. ஒருவேளை பொ.ச.மு. 1513-ல் எகிப்திலிருந்த இஸ்ரவேல் குடும்பங்கள் சில பஸ்காவின் கட்டளைகளுக்கு குறைந்தளவு கவனத்தைச் செலுத்தியிருந்தால் என்ன நடந்திருக்கும்? யாத்திராகமம் 12:28 சொல்கிறது: “இஸ்ரவேல் புத்திரர் போய் அப்படியே செய்தார்கள்; கர்த்தர் மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.” தெய்வீக கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பது இஸ்ரவேலின் தலைச்சன் பிள்ளையினுடைய உயிர் காப்பாற்றப்படுவதை அர்த்தப்படுத்தியது. மாநாட்டு நிகழ்ச்சிநிரலின் ஒவ்வொரு பாகத்திற்கும் நாம் கூர்ந்த ஆர்வம் காண்பிப்பதும் சுறுசுறுப்பாய் இருப்பதும் நம்முடைய தற்போதைய ஆவிக்குரிய நிலைமையின் பேரிலும் நம்முடைய எதிர்கால எதிர்பார்ப்புகளின் பேரிலும் சார்ந்திருக்கிறது. மாநாட்டில் நாம் யெகோவாவின் வழிகளில் போதிக்கப்படுகிறோம் மற்றும் உயிர்காக்கும் ஊழியத்தை நிறைவேற்றுவதற்காக அறிவுரைகளும் அளிக்கப்பெறுகிறோம். (1 தீ. 4:16) கொந்தளிக்கும் கடலில் உள்ள ஒரு கப்பலாக உங்களை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள். யெகோவாவின் வாக்குறுதிகள் நம்பிக்கை என்னும் உறுதியான நங்கூரம் போன்றவை. கிறிஸ்தவ நிகழ்ச்சிநிரல்களுக்கு ஒரு நபர் கவனம்செலுத்தாதவராக தன்னுடைய மனதை அலைபாயும்படி அனுமதித்தால் என்ன நேரலாம்? ஆவிக்குரிய கப்பல்சேதத்தை அனுபவிப்பதிலிருந்து தன்னை தடுத்துவைக்கக்கூடிய அறிவுரை மற்றும் புத்திமதி ஆகியவற்றின் பேரிலான இன்றியமையாத குறிப்புகளை அவர் தவறவிடக்கூடும்.—எபி. 2:1; 6:19.
9 உலகின் பெரும்பாலான பகுதிகளில், நம்முடைய சகோதரர்கள் கூட்டங்களுக்கு ஆஜராவதற்காக அதிக சரீரப்பிரகாரமான முயற்சியெடுக்கிறார்கள். மாநாடுகளில் அவர்களுடைய மெய்மறந்த கவனத்தைக் காண்பது ஆச்சரியத்திற்கேதுவானதாய் இருக்கிறது. இருந்தபோதிலும், சில இடங்களில், நிகழ்ச்சிநிரல் நடந்துகொண்டிருக்கும்போது மாநாட்டு மைதானங்களைச் சுற்றி தேவையில்லாமல் திரிந்துகொண்டிருப்பதன் மூலம் தனிப்பட்ட ஆட்கள் மற்றவர்களுடைய கவனத்தைத் திசைதிருப்பியிருக்கிறார்கள். சிலர் தாமதமாக வருகிறார்கள். கடந்த சில மாநாடுகளில், நிகழ்ச்சிநிரலின் முதல் ஒருசில நிமிடங்கள் கேட்பதற்கு கஷ்டமாக இருந்தது, ஏனென்றால் அநேகர் வராந்தாக்களிலும், இருக்கைகள் இருக்கும் பகுதிகளின் பின்புறத்திலும் திரிந்துகொண்டிருந்தார்கள். பொதுவாகவே இவர்கள், வேலை நியமிப்பில் உள்ள சகோதரர்களோ தங்களுடைய சிறுபிள்ளைகளைக் கவனித்துக்கொண்டிருக்கும் அன்னைமாரோ அல்லர். அதிகமான கவனச்சிதறல், வெறுமனே சுற்றி திரிந்துகொண்டும், பேசிக்கொண்டிருக்கும் ஆட்களிடமிருந்து வருகிறது. இவ்வருடம் இந்தப் பிரச்சினைக்கு அதிகமான கவனத்தை அட்டன்டன்டு இலாக்கா கொடுக்கவிருக்கிறது, அக்கிராசனர் அமரும்படி சொல்லும் சமயத்தில் நாம் அனைவரும் அமருவோம் என்றே நம்பலாம். இந்த விஷயத்தில் உங்களது ஒத்துழைப்பு பெரிதும் போற்றப்படும்.
10 மாநாட்டு நிகழ்ச்சிநிரலுக்கு அதிக கருத்தோடு கவனம் செலுத்துவதற்கும் அளிக்கப்படுகிற விஷயங்களை அதிகமாக ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கும் நடைமுறைக்கேற்ற என்ன ஆலோசனைகள் நமக்கு உதவிசெய்யும்? கடந்த காலத்தில் சொல்லப்பட்ட விஷயங்கள் திரும்பவும் சொல்லப்படுவது மிகவும் அவசியம்: (அ) மாநாடு நடைபெறும் நகரத்திற்கு செல்வதற்கான முக்கிய காரணத்தின்பேரில் கவனத்தை ஒருமுகப்படுத்துங்கள். பொழுதுபோக்கில் ஈடுபடுவதற்கு அல்ல, ஆனால் செவிகொடுத்துக் கேட்பதற்கும் கற்பதற்குமே ஆகும். (உபா. 31:12, 13) ஒவ்வொரு நாள் இராத்திரியும் போதுமானளவு ஓய்வெடுக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் மாநாட்டிற்கு மிகவும் களைத்துப்போய் வந்தீர்களென்றால், கவனத்தை ஒருமுகப்படுத்துவது கடினமாக இருக்கும். (ஆ) நிகழ்ச்சிநிரல் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, இருக்கையைக் கண்டுபிடித்து அமருவதற்கு தாராளமாக நேரம் அனுமதித்துக்கொள்ளுங்கள். கடைசி நிமிடத்தில் இருக்கைகளுக்கு அடித்துப்பிடித்து வருவதானது ஆரம்ப பாகம் சிலவற்றை தவறவிடுவதில் விளைவடையும். (இ) முக்கிய குறிப்புகளை சுருக்கமாக குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். மிதமிஞ்சிய விதத்தில் குறிப்பெடுப்பது நன்கு செவிகொடுப்பதற்கு தடையாக இருக்கக்கூடும். எழுதும்போது, உங்களுடைய குறிப்புகளின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்துவதன் காரணமாக மற்ற குறிப்புகளை தவறவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். (ஈ) மாநாட்டு பாகம் அறிமுகப்படுத்தப்படும்போது, ஆர்வமிக்க எதிர்பார்ப்புடன் கவனியுங்கள். ‘யெகோவாவுக்கான என்னுடைய போற்றுதலையும் அன்பையும் அதிகப்படுத்துகிற எதை இந்தப் பாகத்திலிருந்து நான் சிறுகச்சிறுக திரட்ட முடியும்? புதிய ஆளுமையை அதிக முழுமையாக வெளிப்படுத்துவதற்கு தகவல் எவ்வாறு எனக்கு உதவிசெய்யக்கூடும்? என்னுடைய ஊழியத்தில் முன்னேறுவதற்கு இது எவ்வாறு எனக்கு உதவிசெய்யும்?’ என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
11 நம் ஊழியத்தை அலங்கரிக்கும் நடத்தை: “நற்கிரியைகளுக்கு மாதிரியாக” தன்னை காண்பிக்கும்படி தீத்துவை பவுல் உற்சாகப்படுத்தினார். தன்னுடைய உபதேசத்தில் சீர்கேடின்மையைக் காட்டுவதன் மூலம், மற்றவர்கள் “நமது இரட்சகராகிய கடவுளின் உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்க” செய்வதற்கு தீத்துவால் உதவ முடியும். (தீத். 2:7, 10, தி.மொ.) நாம் மாநாட்டிற்கு போய்வருவதற்கு பிரயாணம் செய்யும்போதும், மேலும் நாம் ஹோட்டல்களிலும், ரெஸ்ட்டாரண்டுகளிலும், மாநாடு நடைபெறும் இடத்திலும்கூட இருக்கும் சமயத்தில் நமது தேவபக்திக்குரிய நடத்தை ஏன் அவ்வளவு முக்கியம் என்பதைப்பற்றி ஒவ்வொரு வருடமும், கனிவான நினைப்பூட்டுதல்களை நாம் பெறுகிறோம். இருதயத்திற்கு அனலூட்டும் பாராட்டுக்களை கடந்தாண்டு மறுபடியும் நாங்கள் கேள்விப்பட்டோம், அவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.
12 ஒரு ஹோட்டல் மேனேஜர் குறிப்பிட்டதாவது: “சாட்சிகளுக்கு இடமளிப்பது எப்போதும் இன்பமாக இருக்கிறது, ஏனென்றால் அவர்கள் பொறுமையானவர்கள், ஒத்துழைப்பவர்கள், தங்கள் பிள்ளைகளைக் கவனமாக கண்காணிப்பவர்கள்.” தனது வேலை “சாட்சிகள் வந்து பதிவு செய்யும்போதும், ஹோட்டலை காலி செய்து செல்லும்போதும் அதிக எளிதாக இருக்கிறது, ஏனென்றால் அவர்கள் வரிசையில் காத்திருக்கவேண்டியபோதிலும், அவர்கள் எப்போதும் பண்பட்டவர்களாகவும், பொறுமையுள்ளவர்களாகவும், புரிந்துகொள்பவர்களாகவும் இருக்கிறார்கள்,” என்று ஒரு ஹோட்டலின் மேஜை குமாஸ்தா கூறினார். நியூ இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி, தான் தங்கியிருந்த அதே மோட்டலில் தங்கிய சாட்சி இளைஞர்களின் நடத்தையால் அவ்வளவு கவரப்பட்டதால், நமது அமைப்பைப்பற்றிய சில பிரசுரங்களை வேண்டி கேட்டார்.
13 மறுபட்சத்தில், சில அம்சங்களில் முன்னேற்றம் செய்வதற்கான தேவை இருக்கிறது. சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட சில கூற்றுகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகள் ஹோட்டல்களில் இருக்கும்போது இன்னும் அதிக மேற்பார்வை செலுத்துவதற்கான தேவை இருக்கிறது என்பதாக ஒரு பயணக் கண்காணி அறிவித்தார். சிலர் வராந்தாவில் ஓடிக்கொண்டும், எலிவேட்டரில் மேலும் கீழும் பயணித்துக்கொண்டும், வரவேற்பறையைச் சுற்றி சத்தம் போட்டுக்கொண்டும் இருந்தது, தூங்கிக்கொண்டிருந்த மற்ற விருந்தினர்களை தொந்தரவுக்குள்ளாக்கியதாக கவனிக்கப்பட்டது. கிறிஸ்தவ நடத்தை குறிப்பிட்ட காலங்களுக்கு மாத்திரம் அல்ல என்பதை புரிந்துகொள்வதற்கு நம் பிள்ளைகளைப் பயிற்றுவிக்கவேண்டும். மாநாடு நடைபெறும் இடத்தைவிட்டு வெளியேறியவுடன் அது முடிந்துவிடுவதில்லை. ஒரு நாளின் 24 மணிநேரங்களும் அது நீடிக்க வேண்டும். நாம் மாநாட்டு நிகழ்ச்சிநிரல்களின்போதும் நம் சகோதரர்களுடன் அமர்ந்திருக்கையிலும், யெகோவாவால் போதிக்கப்படுகையிலும் எப்படி மரியாதையாக இருக்கிறோமோ அவ்வண்ணமே நம் நடத்தையானது ஹோட்டல்களிலும், ரெஸ்ட்டாரண்டுகளிலும், தெருக்களிலும் இருக்கவேண்டும்.—ஏசா. 54:13; 1 பே. 2:12.
14 நம் மாநாடுகளில் உணவு சேவையானது பெருமளவுக்குக் குறைக்கப்பட்டிருப்பதால், இடத்திற்கு வாடகை கொடுப்பதிலும், பல்வேறு இதர விஷயங்களை கவனிப்பதிலும் அடங்கியுள்ள கணிசமான செலவை சமாளிப்பதற்கு நாமாகவே முன்வந்து அளிக்கும் நன்கொடைகளின் தேவை அதிகம் இருக்கிறது. கொஞ்சம் பணத்துடன், தன்னுடைய பருவ வயது பிள்ளைகளோடு ஒரு சகோதரி மாநாட்டிற்கு வந்தார். இருந்தபோதிலும் அவர்களும், பிள்ளைகளும் சிறிதளவு நன்கொடையை அப்படியிருந்தும் கொடுத்து உதவினர். இந்த விஷயத்தில் ஒருவர் என்ன தீர்மானிக்கிறார் என்பது தனிப்பட்ட விஷயம், ஆனால் இத்தகைய நினைப்பூட்டுதல்களை நீங்கள் மதித்துணருகிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம்—அப். 20:35; 2 கொ. 9:7.
15 நாம் உடுத்துகிற உடையின் மூலம் அடையாளம் காணப்படுதல்: நாம் உடுத்தும் விதம் நம்மைப் பற்றியும் மற்றவர்களிடமாக நம்முடைய உணர்ச்சிகளைப் பற்றியும் அதிகத்தை வெளிப்படுத்துகிறது. பருவ வயதினர் பெரும்பாலானோரும் வயதுவந்தோர் அநேகரும் பள்ளியிலோ அல்லது தாங்கள் வேலைசெய்யும் இடத்திலோ உள்ள அடிக்கடி மாறிவரும் பாணியால், தொளதொளவென்று உடை உடுத்தும் பாணியால் சூழப்பட்டவர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் உடை உடுத்தும் விதம் மிதமிஞ்சியதாக, அதிர்ச்சியூட்டும் விதமாக மாறிவருகிறது. நாம் கவனமுள்ளவர்களாக இல்லையென்றால், உலகப்பிரகாரமான சகாக்கள் உடை உடுத்துகிறபடி அவர்களால் நாம் மிக எளிதாக செல்வாக்கு செலுத்தப்படக்கூடும். பல பாணிகள், வணக்கத்திற்கான கூட்டங்களில் உடுத்துவதற்குப் பொருத்தமற்றவையாக இருக்கின்றன. கடந்த வருடத்தில் நடந்த மாநாடுகளில் ஒன்றிற்குப் பிறகு நிகழ்ச்சிநிரலுக்கான போற்றுதலைத் தெரிவித்து ஒரு குறிப்பு வந்தது, ஆனால் அதோடு இவ்வாறு எழுதப்பட்டிருந்தது: “குட்டையான ஆடைகளையும், இறங்கிய கழுத்துடைய உடைகளையும் பக்கங்களில் நீட்டமாக வெட்டிவிடப்பட்ட ஆடைகளையும் அணிந்த இளம் பெண்கள் அநேகர் இருந்தனர் என்பது என்னை வியப்புக்குள்ளாக்கியது.” மாநாடு நடைபெறும் இடம், நிகழ்ச்சிநிரலுக்குப் பிறகு கூடிவரும் சமூக கூட்டுறவு ஆகிய இரண்டிலுமே கிறிஸ்தவ ஊழியர்களுக்குப் பொருத்தமான முறையில் உடை உடுத்த நாமனைவரும் நிச்சயமாகவே விரும்புகிறோம். “தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும்” கிறிஸ்தவர்கள் தங்களை அலங்கரித்துக்கொள்ளும்படி அப்போஸ்தலனாகிய பவுல் கொடுத்த ஆலோசனைக்குக் கீழ்ப்படிவது எல்லா சமயங்களிலும் நமக்கு பிரயோஜனமுள்ளது.—1 தீ. 2:9, 10.
16 அடக்கமான, “தகுதியான” வஸ்திரம் எது என்று யார் தீர்மானிக்க வேண்டும்? அடக்கமாக இருப்பது என்பது, “அகந்தையில்லாமலும் தன்னுரிமையை வலியுறுத்தாமலும்” இருப்பதை அர்த்தப்படுத்துகிறது. அடக்கத்தை “படாடோபமின்மை” என்பதாகவும் ஒரு அகராதி வரையறுக்கிறது. உடையை அல்லது சிகையலங்காரத்தைக் குறித்ததில் சங்கமோ அல்லது மூப்பர்களோ சட்டங்கள் போடமுடியாது. இருந்தபோதிலும், எந்த உடை பாணிகள் நிச்சயமாகவே அடக்கமானதல்ல அல்லது பண்பானதல்ல என்பது ஒரு கிறிஸ்தவருக்கு தெளிவாக இருக்க வேண்டாமா? (பிலிப்பியர் 1:9-ஐ ஒப்பிடுக.) நம் உடையும் தோற்றமும் வேண்டாத கவனத்தைக் கவரக்கூடாது. நாம் தோற்றத்தில் இதமானவர்களாக இருக்க வேண்டும், உலகப்பிரகாரமாகவோ அல்லது புண்படுத்துவதாகவோ இருக்கக்கூடாது. நற்செய்தியின் ஊழியர்களாக, மாநாடு நடைபெறும் நகரத்தில் நாம் இருக்கும் சமயத்தில் பொருத்தமாக உடை உடுத்தியிருப்பதும் சிகையலங்காரம் செய்திருப்பதும் யெகோவாவுக்கு கனத்தைக் கொண்டுவருகிறது, அதோடு அமைப்பின்மீது நல்லெண்ணத்தைப் பிரதிபலிக்கிறது. நாம் ராஜ்ய மன்றத்தில் கூட்டங்களுக்கு இயல்பாகவே அணியும் ஆடைகளுக்கு ஒத்தவாறே நமது தோற்றமும் ஆடைகளும் மாநாட்டு சமயத்தில், மாநாடு நடைபெறும் நகரத்திலும் இருக்கவேண்டும். இவ்வாறாக, பெற்றோர்கள் முன்மாதிரி வைத்து, பின்பு தங்களுடைய பிள்ளைகள் அந்த நிகழ்ச்சிக்காக தகுந்த விதத்தில் உடை உடுத்தியிருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்கிறார்கள். மூப்பர்கள் ஒரு நல்ல முன்மாதிரி வைத்து, தேவைப்படுமேயானால் அன்பான ஆலோசனை கொடுப்பதற்குத் தயாராக இருக்கவேண்டும்.
17 ஹோட்டல்கள்: சகோதரர்கள் பொறுமையுள்ளவர்களாகவும் பண்புள்ளவர்களாகவும் ஒத்துழைப்பவர்களாகவும் இருந்ததால் ஹோட்டல் சிப்பந்தி ஒருவர் கவரப்பட்டதாகச் சொன்னதை முன்பு நாங்கள் மேற்கோள் காண்பித்தோம். பதிவு செய்வதற்காக நாம் வரிசையில் நிற்க வேண்டியதாய் இருந்தால், இந்தக் கிறிஸ்தவ குணங்களை நாம் தொடர்ந்து காண்பிக்க விரும்ப வேண்டும். கொடுக்க முடிந்த விலையில் அறைகளை அளிப்பதில் சங்கத்துடன் ஒத்துழைத்திருக்கிற ஹோட்டல்களை நாம் போற்றுகிறோம். பயணத்தினால் நாம் களைத்துப் போயிருந்தபோதிலும், ஹோட்டலில் வேலைசெய்பவர்களை அன்புடன் நடத்துவதைப்பற்றி நாம் மனதில் வைத்திருக்க வேண்டும். இவ்விதமாக செய்வது சிலர் சத்தியத்தை கருத்தூன்றிய விதத்தில் ஆராயும்படி செய்யக்கூடும். அதோடு, ஹோட்டல் அறைகளில் அனுமதி வழங்கினால் தவிர அங்குச் சமையல் செய்யக்கூடாது.
18 வீடியோ கேமராக்கள், கேமராக்கள், டேப் ரெக்கார்டர்கள்: ஆஜராயிருக்கிற மற்றவர்களுக்காக நாம் கரிசனை காட்டும்பட்சத்தில், கேமராக்களும் பதிவுசெய்யும் மற்ற கருவிகளும் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. நிகழ்ச்சிநிரல் நடைபெறும்போது நாம் படம்பிடித்துக்கொண்டு நடந்து திரிந்தால், செவிகொடுத்துக் கேட்பதற்கு முயலுகிற மற்றவர்களுடைய கவனத்தை சிதறடிப்பது மட்டுமல்லாமல், நாம்தாமே நிகழ்ச்சிநிரல் சிலவற்றை தவறவிடுவோம். பேச்சாளர்களுக்கு கூர்ந்த கவனம் செலுத்துவதன் மூலமும் மிதமாக குறிப்பெடுப்பதன் மூலமும் மாநாட்டிலிருந்து நாம் பொதுவாய் அதிக பிரயோஜனமடைகிறோம். நோய்வாய்ப்பட்ட அல்லது ஊனமுற்ற ஒரு சகோதரர் அல்லது சகோதரிக்காக நாம் பதிவுசெய்துகொண்டிருக்கலாம்; இருந்தபோதிலும், நம்முடைய சொந்த உபயோகத்திற்காக நிகழ்ச்சிநிரலை அநேக மணிநேரங்களாக பதிவுசெய்த பிறகு, நாம் பதிவுசெய்தவற்றில் பெரும்பாலானவற்றைப் போட்டுக்கேட்பதற்கு நமக்கு நேரமில்லாதிருப்பதை வீட்டிற்கு திரும்பி வந்த பிறகு நாம் காணக்கூடும். மின்சார அல்லது ஒலி அமைப்புகளுடன் எந்தவிதமான பதிவுசெய்யும் கருவிகளும் இணைக்கப்படக் கூடாது; நடைபாதைகளை, வழிகளை அல்லது மற்றவர்கள் பார்ப்பதை எந்தச் சாதனமும் மறைக்கக்கூடாது.
19 இருக்கைகள்: இருக்கைகளைப் பிடித்துவைக்கும் விஷயத்தில் முன்னேற்றத்தை நாங்கள் தொடர்ந்து கவனிக்கிறோம். கடந்தாண்டு உங்களில் அநேகர் வழிநடத்துதல்களை பின்பற்றினீர்கள்: உங்களுடைய நெருங்கிய குடும்ப அங்கத்தினர்களுக்கும், ஒருவேளை உங்களோடு பிரயாணம் செய்பவர்களுக்கும் மாத்திரம் இருக்கைகளைப் பிடித்துவைக்கலாம். இந்த தெளிவான வழிநடத்துதல்களை பலர் பின்பற்றியதால், குறைந்தளவே பிரயாசை உள்ளதாக நீங்கள் அநேகமாக கண்டிருப்பீர்கள். அதிமுக்கியமாக உங்களது வளைந்துகொடுக்கும் தன்மையானது, யெகோவாவையும், ஆவிக்குரிய உணவை அளிக்கும் ‘உண்மையுள்ள அடிமையையும்’ மகிழ்விப்பதாய் இருந்தது.—மத். 24:45, NW.
20 விசேஷமான உடல் ஆரோக்கிய தேவைகள் இருப்பினும், மாநாட்டிற்கு வரும் சகோதரர்களின் எண்ணிக்கை வளர்ந்துகொண்டே இருக்கிறது. சிலர் சக்கர நாற்காலிகளில் வருகிறார்கள், அவர்களுடைய குடும்ப அங்கத்தினர்களால் அவர்கள் பராமரிக்கப்படவேண்டும். முற்றிய வியாதிகளான, இருதய கோளாறுகள் அல்லது தாக்கங்கள் ஆகியவற்றிற்கு பல்வேறு மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொண்டிருப்பவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். எந்தவொரு ஆவிக்குரிய உணவையும் தவறவிடக்கூடாது என்ற உறுதியோடு இருக்கும் இத்தகைய அருமையான சகோதர சகோதரிகளை மாநாட்டில் காணும்போது உண்மையில் நம் இருதயம் அனலூட்டப்படுகிறது. இருப்பினும், உதவியளிப்பதற்கு குடும்ப அங்கத்தினர்கள் அல்லது சபை அங்கத்தினர்கள் இன்றியே சில நேரங்களில், மாநாடு நடந்துகொண்டிருக்கையிலேயே சிலர் நோயுறுகின்றனர். சிலரது விஷயங்களில் மாநாட்டு நிர்வாகம், அவசர மருத்துவ சேவைக்கு தொடர்புகொண்டு, ஒரு சகோதரரையோ சகோதரியையோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. முற்றிய வியாதியுடையோரை பராமரிப்பதற்கான முதன்மையான உத்தரவாதம் குடும்ப அங்கத்தினர்களையும் நெருங்கிய உறவினர்களையும் சாரும். முற்றிய வியாதியுடையோரை பராமரிக்கும் நிலையில் மாநாட்டு முதலுதவி இலாக்கா இல்லை. உங்கள் குடும்ப அங்கத்தினர் ஒருவருக்கு விசேஷ பராமரிப்பு தேவையென்றால், அவசரமான சூழ்நிலைமை எழும்போது அவரை தனியே விட்டுவிடாதவாறு தயவுசெய்து உறுதிசெய்து கொள்ளுங்கள். கூடுதலாக, பொதுவாக இருக்கை வசதிகளுடைய பகுதிகளில் உட்காருவதை தடைசெய்யும் விதத்தில் ஒவ்வாமை உடையவர்களுக்கு இடமளிக்கும் விதத்தில் விசேஷ அறைகள் மாநாடுகளில் ஏற்பாடு செய்யப்படவில்லை. மூப்பர்கள், தங்கள் சபையில் விசேஷமான உடல் ஆரோக்கிய தேவைகள் உள்ள எவரைப்பற்றியேனும் விழிப்புள்ளவர்களாக இருக்க விரும்புவர் மற்றும் அவர்களது பராமரிப்புக்காக முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்வதை நிச்சயப்படுத்திக்கொள்வர்.
21 மாநாட்டு உணவு தேவைகள்: மாநாட்டில் உணவு அளிக்கப்படமாட்டாது என்பதாக சென்ற வருடம் அறிவித்தபோது, நம்மில் சிலர் ஒருவேளை சிறிது கவலைப்பட்டிருக்கலாம். இருப்பினும் பிற்பட்டு நாம், அநேக சகோதரர்களைப்போல், எளிமையான உணவுப்பண்டங்களை உண்பதன் அல்லது சொந்தமாக உணவை கொண்டுவருவதன் பயன்களினால் அதிகமாக மகிழ்ந்தோம். ஒரு சகோதரர் எழுதினார்: “இதிலிருந்து மிகப் பெரிய ஆவிக்குரிய நன்மை கிடைத்திருக்கிறது என்பதை என்னால் தெளிவாக காணமுடிகிறது. இப்போது எல்லா நேரத்தையும் சக்தியையும் ஆவிக்குரிய காரியங்களுக்காக செலுத்தமுடிகிறது. எதிர்மறையான குறிப்பு ஒன்றையும் நான் கேள்விப்படவில்லை.” ஒரு சகோதரி எழுதினார்: “முன்மாதிரியின் மூலமாக, அன்பான சகோதரர்களாகிய நீங்கள், தனிப்பட்ட கிறிஸ்தவர்களாக எங்களை நாங்களே சோதித்துப்பார்ப்பதற்கும் எங்களுடைய வாழ்க்கையை எளிதாக்கிக்கொள்வதற்கும் எங்களுடைய தேவராஜ்ய நடவடிக்கையை அதிகரித்துக்கொள்வதற்கான வழிகளைத் தேடுவதற்கும் எங்களை உற்சாகப்படுத்துகிறீர்கள்.” முன்னாள் உணவு சேவை ஏற்பாட்டைக் குறித்து ஒரு பயணக் கண்காணி எழுதினார்: “முன்பு செய்துவந்த ஏற்பாடு நிறைய சகோதரர்கள் முழு மாநாட்டு நிகழ்ச்சிநிரலையும் இழக்கும்படி செய்தது.” எளிமையான உணவுப்பண்டங்கள் கிடைப்பதன் சம்பந்தமாகவும், சகோதரர்கள் கொண்டுவந்த உணவு சம்பந்தமாக, மூப்பர் ஒருவர் இவ்வாறு எழுதினார்: “அவர்களுக்கு என்ன தேவையோ அதை அவர்கள் வைத்திருந்தார்கள்.” கடைசியாக, மற்றொரு சகோதரி எழுதினார்: “நிகழ்ச்சிநிரல்களுக்குப் பிறகு சந்தடியில்லாமலும் அமைதியாகவும் இருந்தது, சந்தோஷ காற்றை கொண்டிருந்தோம்.” ஆம், பிற்பகல் வேளை முழுவதுமாக தன்னைப் போஷித்துக்கொள்வதற்கு எளிமையான சிற்றுண்டி அல்லது போதுமானளவு உணவை ஒவ்வொருவரும் கொண்டுவர முடிந்தது. தங்கள் நண்பர்களை சந்திப்பதில் அதிகமான நேரத்தை அவர்கள் கொண்டிருந்தார்கள் என்ற உண்மையின் பேரில் பலர் குறிப்பை சொன்னார்கள்.
22 இந்த வருடமும் மாநாட்டிலே சாப்பாடு வழங்கப்படமாட்டாது, ஆனால் எளிமையான உணவுப்பண்டங்கள் கிடைக்கும். 1995 ஜூலை மாத நம் ராஜ்ய ஊழியத்தின் 6-ம் பக்கத்தில் உட்சேர்க்கையிலுள்ள பெட்டியில் நடைமுறையான, புத்துயிரளிக்கும் உணவுப் பொருட்களை கொண்டுவருவதன் பேரிலான ஆலோசனைகளை மறுபார்வை செய்ய நீங்கள் சில நிமிடங்களைத் தயவுசெய்து எடுத்துக்கொள்ளுங்கள். கண்ணாடி கொள்கலங்களை அல்லது மதுபானங்களை மாநாடு நடைபெறும் இடத்திற்கு கொண்டுவரக்கூடாது என்பதை தயவுசெய்து நினைவில் வையுங்கள். ஒருவேளை சிறிய குடிநீர் கலங்கள் தேவைப்படுமானால், அவை உங்கள் இருக்கையின்கீழே செல்லக்கூடியதாய் இருப்பது அவசியம். மதிய இடைவேளையின்போது, நீங்கள் கொண்டுவந்தவற்றை சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் போதுமான அவகாசம் இருக்கும் என்பதை மனதில் வையுங்கள். ராஜ்ய மன்றங்களில் கூட்டங்கள் நடைபெறும்போது செய்வதைப்போன்றே, நிகழ்ச்சிநிரல்களின்போதும் சாப்பிடாமல் இருப்பதை எப்போதும் தவிர்ப்போமாக. இவ்வாறு நாம் வணக்கத்திற்கான ஏற்பாட்டிற்கும், அளிக்கப்படும் ஆவிக்குரிய உணவிற்கும் மரியாதையை வெளிக்காட்டுவோம்.
23 “தேவ சமாதான தூதுவர்கள்” மாவட்ட மாநாட்டின் முதல் மாநாடு சீக்கிரத்தில் ஆரம்பமாகும். ஆஜராவதற்கான உங்களுடைய தயாரிப்புகளை முடித்துவிட்டு, மூன்று நாட்கள் சந்தோஷமான கூட்டுறவையும் ஆவிக்குரிய நற்காரியங்களையும் அனுபவித்து மகிழ்வதற்கு இப்பொழுது நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? இந்த வருட கோடைகாலத்தில் வரும் மாநாட்டிற்கு ஆஜராவதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிப்பார் என்பது எங்களுடைய இருதயப்பூர்வமான ஜெபம்.
[பக்கம் 6-ன் பெட்டி]
மாவட்ட மாநாட்டு நினைப்பூட்டுதல்கள்
முழுக்காட்டுதல்: முழுக்காட்டுதல் பெறுபவர்கள் சனிக்கிழமை காலை நிகழ்ச்சிநிரல் ஆரம்பிப்பதற்கு முன்பாக தங்களுக்கு நியமிக்கப்பட்ட பகுதியிலுள்ள இருக்கைகளில் அமர்ந்திருக்க வேண்டும். முழுக்காட்டுதல் பெற திட்டமிடுகிற ஒவ்வொருவரும் அடக்கமான குளியல் உடையையும் ஒரு துண்டையும் கொண்டுவர வேண்டும். முழுக்காட்டுதல் பெறப்போகும் நபர்களுடன் நம் ஊழியம் புத்தகத்திலுள்ள கேள்விகளை மறுபார்வை செய்கிற சபை மூப்பர்கள், அவர்கள் ஒவ்வொருவரும் இந்தக் குறிப்புகளைப் புரிந்துகொள்கிறார்களா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள விரும்புவர். பேச்சாளருடைய முழுக்காட்டுதல் பேச்சுக்கும் ஜெபத்துக்கும் பிறகு, நிகழ்ச்சிநிரல் அக்கிராசனர் முழுக்காட்டுதல் பெறப்போகிறவர்களுக்குச் சுருக்கமான அறிவுரைகளைக் கொடுத்து, பாடவிருக்கும் பாட்டைச் சொல்லுவார். பாட்டின் கடைசி சீர் பாடப்பட்ட பிறகு அட்டன்டன்டுகள் முழுக்காட்டுதல் பெறப்போகிறவர்களை முழுக்காட்டப்படும் இடத்திற்கு வழிநடத்தி செல்வர். முழுக்காட்டுதல் என்பது ஒப்புக்கொடுத்தலின் அடையாளம், யெகோவாவுக்கும் அந்தத் தனிநபருக்கும் இடையேயுள்ள ஒரு நெருக்கமான மற்றும் தனிப்பட்ட விஷயமாக இருப்பதால் துணை முழுக்காட்டுதல்கள் (partner baptisms) என்று அழைக்கப்படுகிற, முழுக்காட்டுதலின்போது இரண்டு அல்லது அதற்கும் அதிகமான முழுக்காட்டப்படும் நபர்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக்கொண்டோ, கைகளை பிடித்துக்கொண்டோ முழுக்காட்டப்படும் எந்த ஏற்பாடும் கிடையாது.
பேட்ஜ் கார்டுகள்: மாநாட்டிலும் மாநாடு நடைபெறும் இடத்திற்கு பயணம் செய்கையிலும் திரும்பி வருகையிலும் 1996-ம் ஆண்டிற்கான பேட்ஜ் கார்டை தயவுசெய்து அணிந்துகொள்ளுங்கள். பயணம்செய்கையில் ஒரு நல்ல சாட்சிகொடுப்பதை இது அடிக்கடி சாத்தியமாக்குகிறது. பேட்ஜ் கார்டுகளையும் உறைகளையும் உங்களுடைய சபையின் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும், ஏனென்றால் அவை மாநாட்டில் கிடைக்காது. உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தினருக்கும் தேவையான கார்டுகளைப் பெற்றுக்கொள்வதற்காக மாநாட்டுக்கு ஒருசில நாட்களுக்கு முன்பு வரை காத்திராதேயுங்கள். உங்களுடைய தற்போதைய மருத்துவ முன் கோரிக்கை/விடுவிப்பு அட்டையை (Advance Medical Directive/Release card) உடன் கொண்டுசெல்ல ஞாபகமாயிருங்கள்.
அறைவசதி: ஹோட்டலில் பிரச்சினையை ஒருவேளை நீங்கள் எதிர்ப்பட்டால், தயவுசெய்து மாநாட்டில் அறைவசதி இலாக்காவினுடைய கண்காணியின் கவனத்திற்கு கொண்டுவர தயங்காதீர்கள், அப்போதுதான் விஷயத்தை சரியான விதத்தில் தீர்ப்பதற்கு அவரால் உங்களுக்கு உதவ முடியும். அறை விண்ணப்பப் படிவங்களை (Room Request forms) உடனடியாக, பொருத்தமான மாநாட்டு விலாசத்திற்கு அனுப்பிவைப்பதில் சபை செயலர்கள் நிச்சயமாய் இருக்கவேண்டும். மாநாட்டு அமைப்பின்மூலம் தங்கும்வசதி செய்யப்பட்டதை ஒருவேளை நீங்கள் ரத்துசெய்யவேண்டுமானால், உடனடியாக, மாநாட்டு அறைவசதி இலாக்காவிற்குத் தெரியப்படுத்துங்கள், அப்போது அறையானது மறுநியமிப்பு செய்யப்படலாம்.
வாலண்டியர் சேவை: இனிமேலும் உணவு சேவை இல்லாததால், இந்த இலாக்காக்களில் முன்பு வேலைசெய்த பலர் மற்ற இடங்களில் தாங்கள் வாலண்டியராக வேலைசெய்ய முடியும் என்பதை இப்பொழுது காணலாம். இலாக்காக்கள் ஒன்றில் உதவிசெய்வதற்கு மாநாட்டில் சிறிது நேரத்தை உங்களால் ஒதுக்க முடியுமா? ஒருசில மணிநேரங்களாக இருந்தாலும், நம்முடைய சகோதரர்களுக்கு உதவிசெய்வது மிகவும் பிரயோஜனமாகவும் அதிக திருப்தியைக் கொண்டுவருவதாகவும் இருக்கக்கூடும். நீங்கள் உதவிசெய்ய முடிந்தால், தயவுசெய்து மாநாட்டிலுள்ள வாலண்டியர் சேவை இலாக்காவுக்குத் தெரியப்படுத்துங்கள். 16 வயதுக்குக் கீழுள்ள பிள்ளைகளும்கூட, பெற்றோர் அல்லது பொறுப்புவாய்ந்த மற்ற வயதுவந்தவர்களுடைய வழிநடத்துதலின்கீழ் வேலைசெய்வதன் மூலம் நன்கு உதவியளிக்க முடியும்.
எச்சரிக்கை: நடப்பதற்கு அதிக சாத்தியம் இருக்கும் பிரச்சினைகளைக் குறித்து விழிப்புடனிருப்பதன் மூலம், நாம் தேவையற்ற பிரச்சினையிலிருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும். தங்களுடைய வீட்டுச் சூழலிலிருந்து தொலைவில் இருக்கிற ஆட்களிடம் திருடர்களும் எந்தப் பழிபாவங்களுக்கும் அஞ்சாத வேறுசில ஆட்களும் அடிக்கடி சூறையாடிச் சென்றுவிடுவர். திருடர்களும் ஜேப்படிக்காரர்களும் பெரியளவில் கூடிவருகிற இடங்களில் கண்வைக்கிறார்கள். விலைமதிப்பு வாய்ந்த பொருட்கள் எதையும் உங்களுடைய இருக்கையில் விட்டுச்செல்வது ஞானமானதாய் இருக்காது. உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரும் ஒரு கிறிஸ்தவர் என்பதைக் குறித்து நீங்கள் நிச்சயமாய் இருக்கமுடியாது. எந்தச் சோதனைக்கும் ஏன் இடமளிக்க வேண்டும்? பிள்ளைகளை ஆசைகாட்டி ஏமாற்றி கொண்டுசெல்வதற்கு சில வெளி ஆட்கள் செய்த முயற்சிகளைப் பற்றிய அறிக்கைகளும்கூட வந்திருக்கின்றன. எல்லா சமயங்களிலும் பிள்ளைகளை உங்களுடைய மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள்.
பல ஹோட்டல்களில் கிடைக்கக்கூடிய சில கேபில் டிவி மற்றும் வீடியோ சேவைகளில் பெரும்பாலும் கெட்ட நடத்தையுள்ள, ஆபாசமான நிகழ்ச்சிகளே காட்டப்படுகின்றன. இந்தக் கண்ணியைக்குறித்து எச்சரிக்கையாய் இருங்கள், கண்காணிப்பு இன்றி அறையில் இருக்கும் டிவியை பிள்ளைகள் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்.
மாநாட்டைப்பற்றிய எந்த தகவலையும் பெறுவதற்காக, மாநாட்டு அரங்க நிர்வாகத்திற்கு தயவுசெய்து தொலைபேசியில் தொடர்புகொள்ளாதீர்கள். மூப்பர்களிடத்திலிருந்து தகவல் ஏதும் கிடைக்கவில்லையென்றால், ஆகஸ்ட் 1996, நம் ராஜ்ய ஊழியத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும் மாநாட்டு பணித் தலைமையிடங்களின் விலாசங்களில் ஒன்றிற்கு எழுதி கேட்கலாம்.