1997 “கடவுளுடைய வார்த்தையில் விசுவாசம்” மாவட்ட மாநாடு
1 “ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது.” (சங். 84:10) யெகோவாவின் ஆலயத்தில் சங்கீதக்காரன் வணங்கியபோது, சர்வ வல்ல தேவனுடைய பிரசன்னத்தை அவரால் உணர முடிந்தது. வருடாந்தர பண்டிகைகளுக்கு ஜனங்கள் ஒன்றுகூடி வந்தபோதும் உண்மை வணக்கத்தார் எருசலேமில் நிரம்பி வழிந்தபோதும், இஸ்ரவேலர்கள் ஆலய பிராகாரத்தில் கூடிவந்திருக்கையில் இனிய கூட்டுறவை மகிழ்ந்து அனுபவிப்பார்கள். யெகோவா தம்முடைய ஆசீர்வாதத்தையும் தயவையும் பொழிந்தருளிய பூமியிலுள்ள ஒரே மக்களாக தங்களுடைய தேசிய ஒற்றுமையைக் குறித்து நினைப்பூட்டப்பட்டார்கள். இதேபோன்றே ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான நம் சகோதர சகோதரிகளுடன் ஐக்கிய மற்றும் சந்தோஷ உணர்ச்சிகளில் பங்குகொள்ள நமக்கு வாய்ப்புள்ளது. நம்முடைய காலங்களில் நடத்தப்படும் வருடாந்தர மாவட்ட மாநாடுகள், யெகோவா தம்முடைய மக்களை போதனைக்காகவும் கூட்டுறவுக்காகவும் ஒன்றுகூடி வரச்செய்யும் அவருடைய வழிகளில் ஒன்றாகும்.
2 பண்டிகை காலங்களில் எருசலேமிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் வாழ்ந்த பெரும் எண்ணிக்கையான யெகோவாவின் மக்களைக் கவனித்துக்கொள்வது ஒழுங்கமைப்பைத் தேவைப்படுத்தியது. தங்குமிடங்கள், கூட்டம் நடைபெறும் நேரங்கள், பிற ஏற்பாடுகள் ஆகியவை சம்பந்தமாக அறிவுரைகளைக் கொடுப்பது, ஒழுங்கையும் அமைதியையும் காத்துக்கொள்வதற்கு தேவைப்பட்டிருக்கலாம். இந்த விஷயங்கள் அவர்களுடைய உண்மை வணக்கத்துடன் சம்பந்தப்பட்டிருந்த காரணத்தால், இஸ்ரவேலர்கள் இப்படிப்பட்ட அறிவுரைகளை சந்தோஷமாய் பின்பற்றுவார்கள்.—சங். 42:4; 122:1.
3 “வேதவசனங்கள் அனைத்தும் தேவ ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்பட்டிருக்கிறது” என தீமோத்தேயுவுக்கு அப்போஸ்தலன் பவுல் நினைப்பூட்டினார். (2 தீ. 3:16, NW) கடவுளுடைய வார்த்தை ஏவப்பட்டு எழுதப்பட்டிருப்பதால், அதில் விசுவாசம் வைப்பதற்கு நமக்கு எல்லா காரணமும் உள்ளது. இந்த வருட மாவட்ட மாநாட்டின் தலைப்பு, “கடவுளுடைய வார்த்தையில் விசுவாசம்” என்பதாகும். அநேக ஆண்டுகளாக சத்தியத்தை அறிந்திருந்தாலும்சரி அல்லது சமீபத்தில் யெகோவாவின் அமைப்புடன் தொடர்புகொள்ள ஆரம்பித்திருந்தாலும்சரி, இந்த நிகழ்ச்சிநிரலானது பைபிளில் நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்தும். முழு நிகழ்ச்சிநிரலுக்கும் ஆஜராயிருக்க நாமனைவரும் ஆயத்தம் செய்யவேண்டும். அக்கறைகாட்டும் புதியவர்கள், முக்கியமாய் நாம் படிப்பு நடத்துபவர்கள் நம்முடன் ஆஜராயிருந்தால் எவ்வளவாய் கட்டியெழுப்புவதாக இருக்கும்!
4 மாநாட்டு இலாகாக்களை ஒழுங்கமைப்பதில் எண்ணற்ற சகோதரர்கள் ஏற்கெனவே அநேக மணிநேரங்களை செலவழித்திருக்கிறார்கள். ஒரு மாநாட்டை நடத்துவதோடு தொடர்புடைய அநேக விபரங்களை ஒத்திசைவிப்பதற்கு இந்தச் சகோதரர்கள் சங்கத்தின் மாநாட்டு அலுவலகத்துடன் நெருங்கிய விதத்தில் ஒத்துழைக்கிறார்கள். நம்முடைய வருடாந்தர மாவட்ட மாநாடுகளுக்காக செலவழிக்கப்படும் அதிக அளவிலான நேரம், முயற்சி, பணம் ஆகியவற்றை நாம் ஒருவேளை தனிப்பட்ட விதமாக உணராமல் இருக்கலாம். ஆனால் உண்மையுள்ள சகோதரர்களாகிய இவர்கள் ஒவ்வொருவரும் காண்பிக்கும் சுயதியாக ஆவியை நிச்சயமாகவே நாம் அனைவரும் போற்றுகிறோம் அல்லவா?
5 நம்முடைய 1997 “கடவுளுடைய வார்த்தையில் விசுவாசம்” மாவட்ட மாநாட்டிற்காக ஆயத்தங்கள் நடைபெற்று வருகிறபடியால், உங்களுடைய அன்பான கவனத்தையும் ஆழ்ந்த சிந்தனையையும் தேவைப்படுத்துகிற சில குறிப்புகள் எங்களிடம் உள்ளன. நீங்கள் கொடுக்கும் ஒத்துழைப்பானது, உங்கள் சார்பாக செய்யப்படும் எல்லா ஏற்பாடுகளுக்கும் உங்களுடைய தனிப்பட்ட போற்றுதலை நீங்கள் காண்பிப்பதாய் இருக்கும். இவற்றில் சில விஷயங்கள் முன்பே சிந்திக்கப்பட்டிருக்கிறபோதிலும், நம்முடைய மாநாட்டு ஏற்பாடுகளை ஆதரிப்பதில் யெகோவாவுக்கு முன்பு நம் உத்தரவாதத்தை நாம் ஒவ்வொருவரும் தெளிவாக காண்பது முக்கியம்.
6 மூன்றுநாள் மாநாடு: நம்முடைய நன்மைக்காக இந்த வருடம் மூன்றுநாள் மாவட்ட மாநாட்டு நிகழ்ச்சிநிரல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிநிரல் காலை 9:30 மணிக்கு ஆரம்பமாகும். இந்தியாவில் நடைபெறவுள்ள 18 மாநாடுகளையும் ஒவ்வொரு மாநாடும் நடத்தப்படும் மொழிகளையும் ஜூன் 8, 1997, விழித்தெழு! பட்டியலிட்டிருக்கிறது. நீங்கள் எந்த மாநாட்டிற்கு ஆஜராவீர்கள் என்பதை இதற்குள் அறிந்துகொண்டு, அந்த நிகழ்ச்சிநிரல் நடைபெறும் மூன்று நாட்களும் ஆஜராக திட்டவட்டமான ஏற்பாடுகளை செய்திருப்பீர்கள். தேவையான விடுப்பு பெறுவதற்கு உங்களுடைய முதலாளியை அணுகிவிட்டீர்களா? பள்ளி செல்லும் வயதுடைய பிள்ளைகள் உங்களுக்கு இருந்து, பள்ளி நடக்கும் சமயத்தில் உங்கள் மாநாடும் வருகிறதென்றால், உங்கள் பிள்ளைகள் தங்களுடைய மத பயிற்றுவிப்பின் முக்கிய பாகமான இந்த மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதால் குறிப்பிட்ட சில தினங்களுக்கு வரமாட்டார்கள் என்பதை அவர்களுடைய ஆசிரியர்களிடம் தயவுடன் தெரிவித்துவிட்டீர்களா?—உபா. 31:12.
7 கவனம் செலுத்துவதன்மூலம் பயனடையுங்கள்: இருள் சூழ்ந்த இடத்தில் பிரகாசிக்கிற விளக்கைப் போன்ற தீர்க்கதரிசன வசனத்திற்கு கவனம் செலுத்துவதன் மூலம் பயனடையும்படி முதல் நூற்றாண்டிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பேதுரு நினைப்பூட்டினார். (2 பே. 1:19) இதுவே நம்முடைய விஷயத்திலும் உண்மையாக உள்ளது. சாத்தானின் பிடியிலுள்ள இந்தப் பழைய உலகத்தில் வாழ்வது இருளுள்ள பகுதியில் வாழ்வதைப் போன்றதே. ஆவிக்குரிய இருளிலிருந்து வெளியே வரும்படி அழைக்கப்பட்டிருப்பதற்கு நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். (கொலோ. 1:13; 1 பே. 2:9; 1 யோ. 5:19) வெளிச்சத்தில் தொடர்ந்திருக்க, யெகோவாவின் ஏவப்பட்டு எழுதப்பட்ட வார்த்தைக்கு கவனம் செலுத்துவதன் மூலம் நம்முடைய விசுவாசத்தை உறுதியாக காத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இந்த வருடம் நடைபெறும் நம்முடைய மாவட்ட மாநாடு, அதையே செய்ய நம்மை உற்சாகப்படுத்தும்.
8 நிகழ்ச்சிநிரலுக்கு நாம் கவனம் செலுத்த வேண்டுமானால் நம் பாகத்தில் முயற்சி தேவைப்படலாம்; ஆனால், அவ்வாறு செய்வதற்காக நாம் நிச்சயமாய் ஆசீர்வதிக்கப்படுவோம். நிகழ்ச்சி நடைபெறுகையில் விழித்திருக்கும்படிக்கு மாநாட்டு மன்றத்திற்குள் வருவதற்குமுன் நன்கு ஓய்வெடுப்பதற்கு நாம் முயற்சியெடுக்க வேண்டும். நிகழ்ச்சிநிரல் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே உங்கள் இருக்கைகளில் அமர்ந்திருக்கும்படிக்கு, ஒவ்வொரு நாளும் மாநாட்டு மன்றத்திற்கு முன்னதாகவே வர போதுமான நேரம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். பிறகு ஒவ்வொரு நாள் நிகழ்ச்சிநிரலின் ஆரம்ப பாட்டிலும் ஜெபத்திலும் கலந்துகொள்ளுங்கள். பெரியவர்கள் முன்மாதிரி வைக்க வேண்டும்; பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பயிற்றுவிக்க வேண்டும்.—எபே. 6:4.
9 அன்றைய தின நிகழ்ச்சிநிரல் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பேச்சுகளின் தலைப்புகளுக்கு ஒரு கண்ணோட்டம் விடுவோமானால், அந்த நிகழ்ச்சியின்போது என்ன குறிப்புகள் சொல்லப்படலாம் என்று எதிர்பார்த்திருக்க முயற்சி செய்யலாம். இது, பேச்சு கொடுக்கப்படுகையில் நம்முடைய அக்கறையை அதிகரிக்கும். கடவுளிலும், ஊக்கமாய் அவரைத் தேடுகிறவர்களுக்கு பலன் அளிப்பதற்கு இருக்கும் அவருடைய நிச்சயமான வாக்குறுதியிலும் நாம் ஏன் நம்பிக்கை வைக்கிறோம் என்பதை மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்ல நமக்கு உதவும் குறிப்புகளுக்கு நாம் கவனம் செலுத்தலாம். (எபி. 11:1, 6) நிகழ்ச்சிநிரலின் முக்கியக் குறிப்புகளை நினைவுபடுத்த நமக்கு உதவியாக சுருக்கமாய் குறிப்பெடுத்துக்கொள்ளும்படி சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது. நாம் நிறைய குறிப்பெடுத்தோமானால், எழுதுவதிலேயே கவனம் செலுத்துவதன் காரணமாக சில முக்கிய குறிப்புகளை தவறவிட்டுவிடுவோம்.
10 கடந்த வருடம், நம்முடைய நன்மைக்காக, ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பு’ அளித்தவற்றிற்கு செவிசாய்ப்பதற்கு பதிலாக அநேக பெரியவர்களும் இளைஞர்களும் நடைபாதைகளில் வீணாக நடந்துகொண்டிருந்ததும், வெளியிலே சுற்றிக்கொண்டிருந்ததும், நிகழ்ச்சிநிரல் நடந்துகொண்டிருக்கையில் மற்றவர்களிடம் போய் பேசிக்கொண்டிருந்ததும் மீண்டும் கவனிக்கப்பட்டிருக்கிறது. ஏற்ற காலத்தில் நமக்கு ஆவிக்குரிய உணவளிப்பதாக இயேசு வாக்களித்தார். (மத். 24:45-47, NW) எனவே, அந்த உணவிலிருந்து பயனடைய நாம் அங்கிருக்க வேண்டும்; போற்றுதலற்றவர்களாக நாம் இருக்கக்கூடாது. (2 கொ. 6:1) சில பிள்ளைகளுக்குத் தொடர்ந்து ஒரே இடத்தில் உட்கார முடியாதிருக்கையில், எழுந்திருப்பதற்கும் சுற்றிவருவதற்கும் வேண்டி அவர்கள் அடிக்கடி கழிவறைக்குச் செல்லவேண்டும் என்று சாக்குப்போக்கு சொல்வதாகவும் தோன்றுகிறது. பொதுவாக, வீட்டிலே கொடுக்கும் சரியான பயிற்றுவிப்பானது தேவையில்லாமல் அடிக்கடி கழிவறைக்குச் செல்வதைத் தவிர்க்கும். சிலசமயங்களில், வாலிபர்கள் ஒதுக்குப்புறமான இடங்களில் ஒன்றாக அமர்ந்துகொண்டு, பேசிக்கொண்டும், கிசுகிசுத்துக்கொண்டும், ஒருவருக்கொருவர் சிறு குறிப்புத் தாள்களை மாற்றிக்கொண்டும் இருக்கிறார்கள். இன்று பெரும் அழுத்தங்களை எதிர்ப்படும் நம்முடைய இளைஞர்கள், நிகழ்ச்சிநிரலின்போது வேறு காரியங்களைச் செய்துகொண்டிருக்காமல், கொடுக்கப்படும் பேச்சுகளுக்கு கவனம் செலுத்தவேண்டிய தேவை இருக்கிறது. பைபிள் நியமங்களுக்கு இணக்கமாய் இராத பாலிய இச்சைகள் தவிர்க்கப்படவேண்டும். (2 தீமோத்தேயு 2:22-ஐ ஒப்பிடுக.) பெரியவர்கள், இளைஞர்கள் உட்பட அனைவரும் கூர்ந்து கவனம் செலுத்துவது யெகோவாவை கனப்படுத்தி, அவரை மகிழ்விக்கச் செய்யும்.
11 இந்தக் காரியங்களில் யாருக்காகிலும் ஆலோசனை கொடுப்பது அட்டன்டன்டுகளில் ஒருவருக்கு அவசியமாக இருந்தால், அது யெகோவாவிடமிருந்து வரும் அன்பான உதவியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். (கலா. 6:1) நாம் முயற்சி எடுத்து மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வந்திருப்பதற்குக் காரணம், ‘கேட்டு கற்றுக்கொள்வதற்காகவே’ என்பதை நாம் அனைவரும் ஞாபகத்தில் வைக்கவேண்டும். (உபா. 31:12) மேலும், “புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்.” (நீதி. 1:5) மாநாட்டில் நீங்கள் கலந்துகொள்வதற்கு முன்பிருக்கும் நேரத்தில், நிகழ்ச்சிநிரலிலிருந்து முழுமையாக பலனடைவதற்காக கூட்டத்தாரோடுகூட குடும்பமாக அமர்ந்து, நிகழ்ச்சிநிரலின்போது இடையே எழுந்திருக்காமல் கூர்ந்து கவனிக்க வேண்டியதன் தேவையைக் குறித்து குடும்பமாக கலந்தாலோசியுங்கள்.
12 யெகோவாவைப் பிரியப்படுத்துகிற அலங்காரம்: யெகோவாவின் ஜனங்கள், உலகம் முழுவதிலுமுள்ளோருக்கு காட்சிப்பொருளாக இருக்கின்றனர். (1 கொ. 4:9, NW) உடை மற்றும் சிகையலங்காரத்துக்கான நம்முடைய சிறந்த தராதரத்திற்காக நாம் பொதுவாக அறியப்பட்டிருக்கிறோம். தாங்கள் கிறிஸ்தவ சபையுடன் கூட்டுறவுகொள்ள ஆரம்பித்த சமயத்தோடு ஒப்பிடுகையில், 1 தீமோத்தேயு 2:9, 10-லும் 1 பேதுரு 3:3, 4-லும் காணப்படும் பைபிள் நியமங்களைப் பொருத்தியது அநேகரின் தோற்றத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படுவதில் விளைவடைந்திருக்கிறது. நாம் உலகத்தில் காணும் உடை மற்றும் சிகையலங்காரம் சம்பந்தமாக தொடர்ந்து சீரழிந்து கொண்டிருக்கும் தராதரங்களோடு ஒப்பிடுகையில் இது முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. அடக்கமற்ற விதத்தில் உடுத்திக் கொண்டோ சிகையலங்காரத்தில் உலகப்பிரகாரமான நவீன பாணியை பின்பற்றிக் கொண்டோ அல்லது கண்ணியமற்ற விதத்தில் உடுத்திக் கொண்டோ இருப்பதன்மூலம் நம்முடைய தோற்றத்தில் உலகப்பிரகாரமான ஆட்களைப் போல் ஆகிவிடாமல் நம்மைக் காத்துக்கொள்ள கவனமாயும் விருப்பமுள்ளவர்களாயும் இருக்க வேண்டும். புதிதாக மாநாட்டில் கலந்துகொள்ள வரும் ஆட்கள், கிறிஸ்தவர்கள் தங்களை எப்படி உடுத்துவித்துக் கொள்ளவேண்டும் என்பதை காண உதவும் விதத்தில் நம்முடைய முன்மாதிரியான உடையும் சிகையலங்காரமும் இருக்க வேண்டும்.
13 கடந்த வருட மாநாடுகளில் பெரும்பாலானவர்கள் விட்டுச்சென்ற பதிவு வெகு சாதகமாக இருக்கையில், குறிப்பாக மாநாட்டிற்குப்பின் செலவழிக்கும் நேரங்களில், உலகப்பிரகாரமான உடையும் சிகையலங்காரமும் இன்னமும் சில சகோதர சகோதரிகளிடமுள்ள பிரச்சினையாக இருக்கிறது. மாநாட்டில் கலந்துகொள்ள நாம் திட்டமிடுகையில், நம்முடைய உடையையும் சிகையலங்காரத்தையும் குறித்து நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டியது அவசியம். பெற்றோர்களே, உங்கள் இளம் பிள்ளைகளும் வாலிபப் பிள்ளைகளும் எதை உடுத்திக்கொள்ளப் போகிறார்கள் என்பதை ஞானமாக கண்காணியுங்கள். நம்முடைய கிறிஸ்தவ தோற்றத்தில், உலகப்பிரகாரமான ரசனைகளும் நவீன பாணிகளும் தவறான விதத்தில் செல்வாக்கு செலுத்த அனுமதிக்காமல் இருப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.
14 நன்னடத்தையைக் காத்துக்கொள்ளுங்கள்: நன்னடத்தை உண்மை கிறிஸ்தவர்களுக்கு அடையாளமாக இருக்கிறது. (1 பே. 2:12) மாநாட்டிலோ உணவகங்களிலோ ஹோட்டல்களிலோ, அல்லது பயணம் செய்யும்போதுகூட, நாம் நடந்துகொள்ளும் முறை நற்சாட்சி கொடுத்து, கடவுளிலும் அவருடைய வார்த்தையிலும் கொண்டுள்ள விசுவாசம் ஜனங்களை எப்படி மாற்றும் என்பதைக் காண மற்றவர்களுக்கு உதவிசெய்யும். இது, யெகோவாவை அறிந்துகொள்ள சிலரைத் தூண்டலாம். (1 பேதுரு 3:1, 2-ஐ ஒப்பிடுக.) நம்முடைய நடத்தையின் மூலம் கடவுளை மகிமைப்படுத்தும் சிலாக்கியம் நமக்கிருக்கிறது. “எங்களிடம் தங்குகிறவர்களிலேயே மிக நேர்த்தியான, சிறந்த முறையில் நடந்துகொள்ளும் கூட்டத்தார்” என்று நம்முடைய மாநாட்டு பிரதிநிதிகளைப் பற்றி ஒரு ஹோட்டல் நிர்வாகத்தினர் சொன்னார்கள். “எதிர்காலத்தில் மீண்டும் உங்களுக்குச் சேவைசெய்வதில் சந்தோஷப்படுவோம்” என மேலுமாக சொன்னார்கள். மற்றொரு இடத்திலுள்ள சுற்றுலா துறை அதிகாரி ஒருவர் இவ்வாறு எழுதினார்: “ஒவ்வொரு வருடமும், உவாட்ச்டவர் சொஸைட்டி மாநாட்டை எங்கள் முழு சமுதாயத்தினரும் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறார்கள். உங்கள் அங்கத்தினர்கள் உண்மையிலேயே அருமையானவர்கள்; ரொம்ப கண்ணியமாகவும் மரியாதையாகவும் நடந்துகொள்கிறார்கள். எங்கள் வியாபாரிகள் இதை உணர்ந்து, ஒவ்வொரு வருடமும் விருந்தினராக அவர்களுடைய ‘குடும்பம்’ திரும்ப வருவதைப் போற்றுகிறார்கள்.” இப்படிப்பட்ட அறிக்கைகளை வாசிப்பது சந்தோஷமாய் இருக்கிறது, அல்லவா? எனினும், யெகோவாவின் மக்களுடைய நற்பெயரைக் காத்துக்கொள்ளும்படிக்கு, தொடர்ந்து விழிப்புள்ளவர்களாக இருக்க வேண்டிய தேவை இருக்கிறது.
15 நம்முடைய பிள்ளைகள் கவனிப்பாரின்றி ஹோட்டல்களில் அங்குமிங்கும் ஓடிக்கொண்டு தங்கியிருக்கும் மற்றவர்களைத் தொந்தரவு செய்ய அனுமதிக்காமல், அவர்களைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கு அநேக நினைப்பூட்டுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நம்முடைய பிள்ளைகளில் சிலர், கவனிக்கப்படாமல் இருந்ததும் ஹோட்டல் ஹாலிலும் பொது இடங்களிலும் ஓடிக்கொண்டிருந்ததைப் பற்றிய அறிக்கைகள் ஒவ்வொரு வருடமும் சங்கத்திற்கு வந்த வண்ணம் இருக்கின்றன. மற்ற சாட்சிகளைத் தேடி வந்து ஒவ்வொரு அறை கதவுகளையும் தட்டிக்கொண்டிருந்த குழந்தைகள் கூட்டம் ஒன்று, ஹோட்டலில் இரவு தங்கியிருந்த அதன் மேனேஜருடைய தூக்கத்தை இரவு 11:00 மணிக்குமேல் இருமுறை கலைத்துவிட்டது. மாநாடுகள், நம்முடைய சகோதர கூட்டத்தாரை சந்திக்கவும் அவர்களோடு கூட்டுறவுகொள்ளவும் நமக்கு வாய்ப்பளித்தாலும், எல்லா சமயத்திலும் தங்கள் பிள்ளைகளை தங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பை பெற்றோர் எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு பெற்றோருக்கும் யெகோவா கொடுத்திருக்கும் பொறுப்பு இது. (நீதி. 1:8; எபே. 6:4) மேற்பார்வை செய்யப்படாத பிள்ளைகளின் செயல்கள், மற்ற யெகோவாவின் சாட்சிகள் கடினமாக முயன்று அடைந்த சிறந்த நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கலாம்.—நீதி. 29:15.
16 நீங்கள் ஹோட்டலில் தங்கியிருந்தால், சமையலறை வசதி இருந்தால் தவிர ஹோட்டலில் சமையல் செய்யக்கூடாது என்பதை நினைவிற்கொள்ளுங்கள். நீங்கள் தனிப்பட்ட சேவைகளைப் பெறும்போது அவற்றிற்கு டிப்ஸ் கொடுப்பது பொருத்தமானது என்பதை மனதிற்கொள்ளுங்கள். ஏனெனில் பொது இடங்களில் சேவைசெய்கிற வெயிட்டர்கள், சுத்தம்செய்பவர்கள், பணிப்பெண்கள் போன்ற அநேகர் தங்களுடைய பிழைப்புக்காக பெருமளவில் இப்படிப்பட்ட டிப்ஸ்களையே நம்பியிருக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகளாக இந்த விஷயத்திலும்கூட நம்முடைய நல்நடத்தையை காண்பிக்க நாம் விரும்புவோம்.—ஆங்கில விழித்தெழு! ஜூன் 22, 1986, பக்கங்கள் 24-7-ஐக் காண்க.
17 மாநாட்டுச் செலவுகளை சமாளித்தல்: மாநாடுகளில் கலந்துகொள்வது சம்பந்தமாக நம் எல்லாருக்கும் செலவுகள் இருக்கின்றன. நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய மற்றொரு செலவும் இருக்கிறது. மாநாடுகளுக்காக உபயோகிக்கும் இடங்களுக்கு ஆகும் செலவு வெகு அதிகம். நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய இதர செலவுகளும் இருக்கின்றன. மாநாடுகளில் நம்முடைய தாராளமான மனமுவந்து கொடுக்கும் நன்கொடைகள் பெரிதும் போற்றப்படுகின்றன.—அப். 20:35; 2 கொ. 9:7, 11, 13.
18 இருக்கைகள்: பல வருடங்களாக கொடுக்கப்பட்டு வரும் அறிவுரைகள், முக்கியமாக, உங்களுடைய குடும்ப அங்கத்தினர்களுக்கும் யாரேனும் உங்களோடுகூட பயணம் செய்துவந்திருப்பவர்களுக்கும் மட்டுமே இருக்கைகள் பிடித்து வைக்கப்படலாம் என்பது எப்போதும் பொருந்தும். சமீப வருடங்களில் இத்தகைய அறிவுரைகளுக்கு அநேகர் செவிசாய்ப்பதைக் காண்பது சந்தோஷமளிக்கிறது; இது மாநாடுகளில் நிலவும் அன்பான சூழ்நிலையை பெருகச் செய்திருக்கிறது. அநேக இடங்களில், மற்ற இருக்கைகளைக் காட்டிலும் சில இருக்கைகள் எளிதில் சென்று அமரும் விதத்தில் இருக்கின்றன. யாருடைய சூழ்நிலைகள் அத்தகைய இருக்கைகளை தேவைப்படுத்துகின்றனவோ அப்படிப்பட்டவர்களுக்கு தயவு காண்பித்து, அதிக செளகரியமான இருக்கைகளை அவர்கள் அமர தயவுசெய்து கொடுங்கள்.
19 காமராக்களும் வீடியோ காமராக்களும் ஆடியோகேஸட் ரிகார்டர்களும்: மாநாடுகளில் காமராக்களும் பதிவு செய்வதற்கான கருவியும் பயன்படுத்தப்படலாம். எனினும், பார்வையாளர்களின் கவனத்தை சிதறடிக்காத வண்ணம் நாம் அவற்றை பயன்படுத்த வேண்டும். நிகழ்ச்சியின் போது, புகைப்படம் எடுப்பதற்கு நாம் அங்குமிங்கும் நடந்துகொண்டு இருக்கக்கூடாது; இது நிகழ்ச்சிநிரலில் கவனம் செலுத்த முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இடையூறாக இருக்கலாம். பதிவு செய்யும் எந்தக் கருவிகளும் மின் இணைப்புகளுடனோ அல்லது ஒலி அமைப்புகளுடனோ பொருத்தப்படவும் கூடாது; இடையே உள்ள வழியிலோ நடைபாதைகளிலோ அல்லது மற்றவர்களின் பார்வையை மறைக்கும் விதத்திலோ இடத்தை அடைத்துக் கொள்ளவும் கூடாது.
20 முதலுதவி: முதலுதவி இலாகா அவசரத் தேவைகளுக்கு மட்டுமே. நாள்பட்ட வியாதிக்கு அது சிகிச்சையளிக்க முடியாது. எனவேதான் உங்களுடைய மற்றும் உங்கள் குடும்பத்தாருடைய உடல்நல தேவைகளை நீங்கள் முன்கூட்டியே கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்குத் தேவையான ஆஸ்பிரின், ஜீரணத்திற்கான மாத்திரைகள், பாண்டேஜ்கள், ஊக்குகள் (சேஃப்டி பின்கள்) மற்றும் இதுபோன்ற பொருட்கள் மாநாட்டில் கிடைக்காதவை ஆகையால் தயவுசெய்து உங்களுடன் கொண்டுவாருங்கள். வலிப்புகள், நீரிழிவு, இருதய பிரச்சினைகள் போன்ற ஆபத்துகள் ஏற்பட சாத்தியமிருப்பவர்கள் தங்களுடைய தேவைகளை முடிந்தளவுக்கு அறிந்துணர்ந்தவர்களாய் இருக்க வேண்டும். தேவையான மருந்தோடுகூட, அவர்களுடைய சூழ்நிலையைப் புரிந்துகொண்டுள்ள குடும்பத்தின் அல்லது சபையின் அங்கத்தினர் ஒருவர் தேவையான எந்த உதவியையும் அளிக்கும் விதத்தில் எப்போதும் கூடவே இருப்பதும் அவசியம். நாள்பட்ட உடல்நல பிரச்சினைகளை உடையவர்கள் தனியாக விடப்பட்டிருக்கையில் சுகவீனமடைந்ததால் மாநாடுகளில் பிரச்சினைகள் எழும்பியிருக்கின்றன. பிரத்தியேக உடல்நல தேவைகள் உள்ளவர்களுக்கு உதவ குடும்ப அங்கத்தினர்கள் இல்லாதபட்சத்தில், அவர்களுடைய சபை மூப்பர்கள் சூழ்நிலையை சீர்தூக்கிப்பார்த்து, உதவியளிக்க தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
21 மாநாட்டில் உணவு: சிறு சிற்றுண்டிகள் தவிர மாநாடுகளில் உணவு சேவை இல்லாதது, இன்னுமதிகமானோர் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு ஆவிக்குரிய உணவின்பேரில் கவனம் செலுத்துவதில் விளைவடைந்திருக்கிறது. இந்த ஏற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து, எளிமையாக்கப்பட்ட இந்த முறைக்காக அநேக போற்றுதல்கள் வந்திருக்கின்றன. 1995, ஜூலை மாத நம் ராஜ்ய ஊழிய உட்சேர்க்கையில் ஆலோசனை கூறப்பட்டதுபோல, அவசியமாய் கருதுகிற எவரும் மதிய இடைவேளைக்காக தங்களுடைய வசதிக்கேற்ப சத்துள்ள எளிய உணவை கொண்டுவர திட்டமிட வேண்டும். மாநாடு நடக்கும் இடத்திற்குள் எந்தக் கண்ணாடி பாத்திரங்களும் மதுபானங்களும் கொண்டுவரப்படக் கூடாது. உங்கள் இருக்கைக்கு அடியில் வைக்குமளவுக்கு உணவு பாத்திரங்களும் வாட்டர் கேன்களும் சிறியவையாக இருக்கவேண்டும். நிகழ்ச்சிநிரல் நடந்துகொண்டிருக்கையில் பார்வையாளர்களில் சிலர் சாப்பிட்டுக்கொண்டும் குடித்துக்கொண்டும் இருப்பது கவனிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு செய்வது மரியாதையற்ற செயலாக இருக்கிறது. மாநாடு நடக்கும் இடத்தில் விற்கப்படும் உணவுப் பொருட்களையோ அல்லது வெளியே விற்பவர்களிடமிருந்தோ பொருட்களை வாங்குவதற்கு நிகழ்ச்சிநிரல் நடைபெறுகையில் நம்முடைய சகோதரர்களில் சிலர் சென்றிருப்பது கவனிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய செயல் பொறுத்தமற்றது. நம்முடைய ஆவிக்குரிய விருந்தையும், சிறிதுநேர மதிய இடைவேளைகளில் ஓய்வெடுத்து, கூட்டுறவுகொள்ளும் அமைதியான சூழ்நிலையையும் நாம் உண்மையிலேயே போற்றுகிறோம். இந்த ஏற்பாட்டுக்கு இணங்க, உங்களுடைய சகோதர சகோதரிகளுடைய கூட்டுறவை அனுபவித்து மகிழ அந்த நேரத்தைப் பயன்படுத்துங்கள்.
22 “கடவுளுடைய வார்த்தையில் விசுவாசம்” மாவட்ட மாநாடுகள் சீக்கிரத்தில் ஆரம்பிக்கவிருப்பது குறித்து நாம் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறோம்! யெகோவா தம்முடைய அமைப்பின் மூலம் நமக்காக ஏற்பாடு செய்திருக்கும் இந்தச் சிறந்த ஆவிக்குரிய விருந்தை முழுமையாக அனுபவித்துக் களிப்பதற்கு, நிகழ்ச்சிநிரல் முழுவதிலும் ஆஜராகும் விதமாக ஏற்பாடுகளை செய்திருப்பதை நாம் எல்லாரும் உறுதி செய்துகொள்ள வேண்டும். இவ்விதத்தில், வரவிருக்கும் நாட்களில் ‘எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவர்களாக’ நாம் ஆவோம்.—2 தீ. 3:16.
[பக்கம் 6-ன் பெட்டி]
மாவட்ட மாநாட்டு நினைப்பூட்டுதல்கள்
முழுக்காட்டுதல்: முழுக்காட்டுதல் எடுக்க இருப்பவர்கள் சனிக்கிழமை காலை நிகழ்ச்சிநிரல் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே தங்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியிலுள்ள இருக்கையில் அமர வேண்டும். முழுக்காட்டுதல் பெற திட்டமிட்டிருப்பவர்கள் ஒவ்வொருவரும் அடக்கமான குளியல் உடையையும், ஒரு டவலையும் தங்களுடன் எடுத்துவர வேண்டும். நம் ஊழியம் புத்தகத்திலுள்ள கேள்விகளை முழுக்காட்டுதல் எடுக்கவிருக்கும் ஆட்களோடு மறுபார்வை செய்கையில், இந்தக் குறிப்புகளை ஒவ்வொருவரும் புரிந்துகொண்டிருக்கிறார் என்பதை மூப்பர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். பேச்சாளரின் முழுக்காட்டுதல் பேச்சுக்கும் ஜெபத்துக்கும் பின்பு, நிகழ்ச்சியின் அக்கிராசனர் பாட்டுப்பாட அழைப்பார். கடைசி வரிக்குப் பின்பு, அட்டன்டன்டுகள் முழுக்காட்டுதல் எடுக்கவிருப்போரை அதற்கான இடத்துக்கு வழிநடத்துவார்கள். ஒருவருடைய ஒப்புக்கொடுத்தலின் அடையாளமான முழுக்காட்டுதல், தனிப்பட்ட ஒருவருக்கும் யெகோவாவுக்கும் இடையேயான மிக நெருங்கிய, தனிப்பட்ட விஷயமாகும். எனவே, முழுக்காட்டுதல் எடுக்கவிருப்பவர்கள், ஒருவரையொருவர் தழுவிக்கொண்டோ அல்லது முழுக்காட்டுதலின் சமயத்தில் கைகளைக் கோர்த்துக்கொண்டோ இருப்பது பொருத்தமற்றதாகும்.
பேட்ஜ் கார்டுகள்: 1997-க்கான பேட்ஜ் கார்டை, மாநாடு நடக்கும் நகரத்தில் இருக்கையிலும், மாநாட்டுக்கு பிரயாணப்பட்டு போகையிலும் வருகையிலும், எல்லா சமயத்திலும் தயவுசெய்து அணிந்திருங்கள். சிறந்த சாட்சி கொடுப்பதற்கான வாய்ப்புகளை இது நமக்கு அடிக்கடி ஏற்படுத்திக் கொடுக்கிறது. மாநாட்டில் பேட்ஜ் கார்டுகளும் அதற்கான ஹோல்டர்களும் கிடைக்காது, ஆகையால் அவற்றை உங்கள் சபையிலேயே பெற்றுக்கொள்ள வேண்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் தேவையான கார்டுகளைப் பெற்றுக்கொள்வதற்காக மாநாடு ஆரம்பிப்பதற்கு சில நாட்களே இருக்கும் சமயம் வரை காத்துக் கொண்டிருக்காதீர்கள். உங்களது தற்போதைய மருத்துவ முன்கோரிக்கை/விடுவிப்பு அட்டையை (Advance Medical Directive/Release card) உடன் கொண்டுசெல்ல மறந்துவிடாதீர்கள்.
அறைவசதி: இந்த விஷயத்தில் நீங்கள் ஏதேனும் பிரச்சினையை எதிர்ப்பட்டால், உடனடியாக பிரச்சினையை சரிசெய்வதில் அறைவசதி இலாகாவைச் சேர்ந்தவர்கள் உதவிசெய்யும்படிக்கு மாநாட்டில் இருக்கையிலேயே தயவுசெய்து அவர்களிடம் அறிவிக்க தயங்காதீர்கள். பொருத்தமான மாநாட்டு விலாசத்திற்கு ரூம் ரிக்வெஸ்ட் படிவத்தை உடனடியாக அனுப்புவதைக் குறித்து சபை செயலர்கள் நிச்சயமாய் இருக்க வேண்டும். தங்குமிடத்தை ரத்து செய்யவேண்டுமென்றால், மற்றவர்களுக்கு இந்த அறை கிடைக்கும்படி உதவ நீங்கள் மாநாட்டு அறைவசதி இலாகாவுக்கும் உடனடியாக தெரியப்படுத்துங்கள்.
வாலண்டியர் சேவை: மாநாட்டின் இலாகாக்கள் ஒன்றில் சேவை செய்வதற்காக உங்கள் நேரத்தில் கொஞ்சத்தை ஒதுக்கி வைக்க முடியுமா? சில மணிநேரங்களாவது நமது சகோதரர்களுக்காக சேவை செய்வது அதிக உதவியானதாகவும் தனிப்பட்ட திருப்தியைத் தருவதாகவும் இருக்கும். உங்களால் உதவிசெய்ய முடியுமானால், மாநாட்டிலுள்ள வாலண்டியர் சேவை இலாகாவுக்கு தயவுசெய்து தெரியப்படுத்துங்கள். 16 வயதுக்குக் கீழுள்ள பிள்ளைகளும்கூட தங்களுடைய பெற்றோர் அல்லது மற்ற பொறுப்புள்ள பெரியவரின் மேற்பார்வையின்கீழ் சேவை செய்வதன்மூலம் சிறந்த உதவியளிக்க முடியும்.
எச்சரிக்கை: தேவையற்ற கஷ்டத்தை தவிர்ப்பதற்காக சாத்தியமான பிரச்சினைகளுக்கு விழிப்புள்ளவர்களாய் இருங்கள். அடிக்கடி திருடர்களும் மற்ற போக்கிரிகளும், வேறு இடங்களிலிருந்து வந்திருப்பவர்களிடமிருந்து களவாடுகிறார்கள். திருடர்களும் ஜேப்படிக்காரர்களும் பெரும் கூட்டங்களிடம் நோட்டமிடுகின்றனர். உங்கள் இருக்கையில் விலையுயர்ந்த எந்தப் பொருட்களையும் விட்டுச்செல்வது ஞானமுள்ளதாக இருக்காது. உங்களை சுற்றியிருப்பவர்கள் அனைவருமே கிறிஸ்தவர்கள் என நீங்கள் உறுதியாக சொல்ல முடியாது. எந்தவொரு தூண்டுதலுக்கும் ஏன் இடமளிக்க வேண்டும்? வெளியாட்கள் சிலர் பிள்ளைகளை ஆசைகாட்டி கடத்திக்கொண்டு செல்வதற்கு முயற்சிகள் செய்திருப்பதாக அறிக்கைகள் வந்திருக்கின்றன. எல்லா சமயத்திலும் பிள்ளைகளை உங்களுடைய மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள்.
அநேக ஹோட்டல்களில் போடப்படும் தொலைக்காட்சி மற்றும் வீடியோ காட்சிகள் பெரும்பாலும் இழிவான, ஒழுக்கக்கேடான பாலுறவை சித்தரிக்கும் நிகழ்ச்சிகளாகவே இருக்கின்றன. இந்தக் கண்ணிக்கு எச்சரிக்கையாய் இருங்கள்; மேற்பார்வை செய்யப்படாத சமயத்தில் அறையிலுள்ள தொலைக்காட்சியை உபயோகிக்க பிள்ளைகளை அனுமதிக்காதீர்கள்.
மாநாடு நடக்கும் அரங்கத்தின் நிர்வாகத்தினரை போன் மூலமோ அல்லது கடிதம் மூலமோ தொடர்புகொண்டு, மாநாடு சம்பந்தப்பட்ட எந்தத் தகவல்களையும் தயவுசெய்து கேட்காதீர்கள். மூப்பர்களிடம் தேவையான தகவல் இல்லையென்றால், 1997, ஜூலை நம் ராஜ்ய ஊழியத்தில் உள்ளபடி, குறிப்பிட்ட மாநாட்டின் விலாசத்திற்கு நீங்கள் எழுதலாம்.