புதிய பெயருடைய அந்தக் கொட்டைப்பருப்பு
பொலிவியாவிலுள்ள விழித்தெழு! நிருபர்
அமேசோனியாவின் அடர்த்தியான மழைக் காடுகளில் ருசியான ஊட்டச்சத்து மிக்க கொட்டைப்பருப்பு ஒன்று காணப்படுகிறது. அதன் முந்தைய பெயரான “பிரேஸில் கொட்டைப்பருப்பு” இனிமேலும் பொருத்தமற்றது, ஏனென்றால் அதன் வழங்கீட்டில் பாதியளவு பிரேஸிலின் எல்லைகளுக்கு அப்பால் உள்ள காடுகளிலிருந்து, குறிப்பாக பொலிவியாவிலிருந்து இப்போது வருகிறது.
பொருத்தமாகவே, மே 18, 1992 அன்று, சர்வதேச கொட்டைப்பருப்பு கழகம் (International Nut Council), பிரேஸில் கொட்டைப்பருப்பு, கிரீம் கொட்டைப்பருப்பு, வெண்ணை கொட்டைப்பருப்பு, காஸ்டானியா டோ பாரா, பாரானுஸ், ன்வா டியு பிரேஸில் என்றெல்லாம் முன்னர் பலவாறு அறியப்பட்டிருந்த அந்தக் கொட்டைப்பருப்பின் பெயரை மாற்ற தீர்மானித்தது. இப்போது அது அமேசோனியா கொட்டைப்பருப்பு என்று அழைக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.
கொட்டைப்பருப்பு சேகரிப்பவர் ஒருவரின் கதை
அயல்நாட்டைச் சேர்ந்த இந்த காட்டுக் கொட்டைப்பருப்பைப் பற்றி, ஆறு வயது முதல் கொட்டைப்பருப்பை சேகரித்துவந்த கார்நெல்யோ சொல்வதைக் கவனியுங்கள்:
“பெரும்பாலான அமேசோனியா கொட்டைப்பருப்புகள் காட்டிலிருந்தே சேகரிக்கப்படுகின்றன. அவற்றைக் கண்டடைவதற்காகக் காட்டின் உட்பகுதிக்குள் செல்லவேண்டும். வளைந்துநெளிந்து செல்லும் ஆறுகள் மட்டுமே அவற்றை அடைவதற்கான ஒரே வழி. என்னுடைய 19 வயது மகனும் நானும் இரட்டை அடுக்கு ஆற்றுப் படகு ஒன்றில் பல நாட்கள் பயணப்பட்டு ஒரு முகாமுக்குச் செல்கிறோம்; அங்கு காட்டின் ஒரு பகுதி எங்களுக்கு நியமிக்கப்படுகிறது.
“பகல் வெளிச்சத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும்படியாக, நாங்கள் காலை 4:30 மணிக்கு எழுந்து, விடிவதற்குள் எங்கள் பகுதியிடமாக பயணப்பட்டுக்கொண்டிருப்போம். சேகரிக்கும் இடங்களுக்குச் செல்ல ஒருசில கிலோமீட்டர் வரையாகவே பாதைகள் உள்ளன; அங்கிருந்து நாங்கள் அடர்ந்த புதர்க்காடுகளினூடே வெட்டுக்கத்திகளுடன் வெட்டிக்கொண்டே முன்னோக்கிச் செல்கிறோம். அங்கு எவ்வித வழிகாட்டிக்குறிகளும் இல்லை. சூரியனை எங்களுக்கு ஒரு வழிகாட்டியாகப் பயன்படுத்த நாங்கள் அறிந்திருக்கவேண்டும், அல்லது நாங்கள் திரும்பி வருவதற்கான வழியை ஒருபோதும் கண்டுபிடிக்கவே முடியாது.
“காடானது அதன் பொக்கிஷங்களை நாடும் எவரையும் ஆபத்துக்களை எதிர்ப்படச் செய்கிறது. அங்கு மலேரியா போன்ற நோய்களும், எப்பொழுதும் பாம்புகளின் அச்சுறுத்தலும் இருக்கின்றன. பிரமாண்டமான மலைப்பாம்புகளைக் குறித்து நாங்கள் கவலைப்படுவதில்லை—அவை எங்களை ஒன்றும் செய்வதில்லை—ஆனால் நிலத்திலுள்ள சருகுகளுக்குள் கொடிய விஷமிக்க சிறிய பாம்புகள் ஒளிந்திருக்கின்றன. அவற்றின் நிறமும் அடையாளங்களும் முழுமையாக அவற்றின் உருவத்தை ஏமாற்றி மறைக்கின்றன. முதலில் அவற்றின் கடி வேதனையுள்ளதாக இல்லை, ஆனால் அந்த விஷம் அந்தப் பலியாளை மெதுவாகச் செயலிழக்கச் செய்கிறது. கிளைகளில் மறைந்திருக்கும் சிறிய பச்சை பாம்புகளும் அதைப்போலவே ஆபத்தானவையாக இருக்கின்றன.
“ஆல்மென்ட்ரோகள் என்றழைக்கப்படும் அழகிய கொட்டைப்பருப்பு மரங்களை நாம் எளிதில் காணலாம், ஏனென்றால் அவை 30-லிருந்து 50 மீட்டர் உயரத்தில், அந்தக் காட்டிலுள்ள மற்ற எல்லா மரங்களுக்கும் மிக அதிகமான உயரத்தில் காணப்படுகின்றன. காட்டிலுள்ள மரங்களின் மேற்பரப்பிற்கு மேலெழும்பும் வரையாக, பொதுவாக அடிமரம் எந்தக் கிளைகளையும் கொண்டிருப்பதில்லை. கிளைகளின் நுனிகளில் கோகோகள் காய்க்கின்றன; இவை 10 முதல் 15 சென்டிமீட்டர் குறுக்களவை உடைய உருண்டை வடிவ கொட்டை ஓடுகள். இவை ஒவ்வொன்றும் ஒரு தனிப்பட்ட ஓட்டிற்குள் ஆரஞ்சு சுளைகளைப்போல் அடுக்கப்பட்டிருக்கும் 10-லிருந்து 25 கொட்டைப்பருப்புக்களைக் கொண்டிருக்கின்றன.
“நவம்பர் முதல் பிப்ரவரி வரை நீடிக்கும் மழை காலத்தில் கோகோகள் நிலத்தில் விழுகின்றன. அவை உடனடியாக சேகரிக்கப்படவேண்டும், அல்லாவிட்டால் கெட்டுப்போய்விடும். 15-மாடி கட்டடத்திற்குரிய உயரத்திலிருந்து கோகோகள் கீழே விழுவதானது, உயிருக்கு ஆபத்தான மற்றொரு பிரச்சினையாகும். இந்த அபாயத்தைக் குறைப்பதற்காக, ஆல்மென்ட்ரோ-விலிருந்து கோகோகளை தொலைவிலுள்ள ஒரு குவியலுக்கு எறிந்துவிடுவதில், நாங்கள் வேகமாகச் செயல்படவேண்டும். ஆனால் பாம்புகளைக் குறித்து எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்! அவை சுருண்டுகொண்டு தங்கள் தலையை அந்த வளையத்தின்மேல் சாய்த்து வைத்து உறங்கியநிலையில் இருக்கும்போது, அவை அப்படியே கோகோவைப்போல காணப்படுகின்றன. சில வேலையாட்கள், கோகோ என்று நினைத்து ஒரு பாம்பை கையில் எடுத்துவிட்டு, பின்னர் தூக்கி எறிந்ததும் உண்டு.
“கோகோவை வெட்டி திறப்பதற்குத் திறமை தேவை. சரியான இடத்தில் பல முறைகள் முழு பலத்தோடு வெட்டுக்கத்தியை வைத்து உடைத்தால்தான், கொட்டைப்பருப்புகளைச் சேதப்படுத்தாமல் வெளியே எடுக்கமுடியும். கனமான சாக்குகளில் கொட்டைப்பருப்புகளைச் சுமந்துகொண்டு நாங்கள் திரும்புகிறோம். நாங்கள் எந்த வாகனங்களையோ பாரம் சுமக்கும் மிருகங்களையோ பயன்படுத்துவதில்லை. குறிப்பாக அறுவடை சமயம், வருடத்தின் வெப்பமான மற்றும் ஈரமான காலப்பகுதியில் ஏற்படுவதால், சேகரிப்பவர் பலமானவராகவும் சுறுசுறுப்பானவராகவும் இருக்கவேண்டும்.”
சேகரிப்பிற்குப் பின்
சேகரிக்கும்போது அந்தக் கொட்டைப்பருப்புகள் பச்சையாக இருக்கின்றன; அப்படியென்றால் அவை அதிக தண்ணீர் பதத்தை (சுமார் 35 சதவீதத்தை) கொண்டிருப்பதால் அழுகிவிடக்கூடியவை என்பதை அர்த்தப்படுத்துகிறது. அவை கெட்டுப்போவதைத் தடுப்பதற்கு, அந்தக் குவியலின் அடியில் உள்ளவை உலரும்படியாக ஒரு மண்வாரியை வைத்து அவை தினமும் கிளறிவிடப்படுகின்றன. பொலிவியாவின் கொட்டைப்பருப்புகளில் பெரும்பாலானவை ஏற்றுமதிக்காகத் தயாரிக்கப்படுகின்றன. அறுவடைசெய்ததைப் பதனப்படுத்துவதற்கு ஆறு மாதங்கள் ஆகின்றன.
பெரிய நீராவி பிரஷர் குக்கரில் அந்தக் கொட்டைப்பருப்புகளைச் சூடாக்குவதன்மூலம் பதனப்படுத்துதல் தொடங்குகிறது. அந்த வெப்பம், கொட்டைப்பருப்பை அதன் ஓட்டிலிருந்து பிரித்தெடுக்கிறது. எனவே, ஓடுகளிலிருந்து பிரித்தெடுக்கையில், அதிகப்படியான கொட்டைப்பருப்புகள் முழுமையாகவே வெளிவருகின்றன.
பின்னர் அந்தக் கொட்டைப்பருப்புகள் வெவ்வேறு அளவுகளைப் பொறுத்து தரம் பிரிக்கப்பட்டு, ஒயர் தட்டுகளில் பரப்பி வைக்கப்பட்டு, 4-லிருந்து 8 சதவீத தண்ணீர் பதத்திற்கு குறையும்படி சூட்டடுப்புகளில் சூடாக்கப்படுகின்றன. சூட்டடுப்புகளுக்குச் சூடேற்றும் எரிபொருளாக அந்த ஓடுகள் எரிக்கப்படுகின்றன. குறைந்த தண்ணீர் பதம் அந்தக் கொட்டைப்பருப்புகளை ஒரு வருடத்திற்கும் அல்லது குளிர்ப்பதனம் செய்யப்பட்டால் பல வருடங்களுக்கும் சேமித்து வைக்க உதவுகின்றன. அவற்றின் தரத்தையும் ருசியையும் பத்திரப்படுத்த, அந்தக் கொட்டைப்பருப்புகள் ஏற்றுமதிக்காக அலுமினியம் மென்தகடுகளில் காற்றுப்புகாமல் பொதியப்படுகின்றன.
உலகெங்கும் மிகப் பல்வேறு வழிகளில் அமேசோனியா கொட்டைப்பருப்புகளை லட்சக்கணக்கான மக்கள் விரும்புகின்றனர். சிலர் இந்தக் கொட்டைப்பருப்புகளைத் தங்களுடைய காலை உணவாக தானியத்தில் சேர்த்துக்கொள்கின்றனர். மற்றவர்கள் அவற்றை சாக்லேட்டில் தோய்த்து அல்லது உலர்ந்த பழங்களின் கலவையுடன் சேர்த்து அனுபவிக்கின்றனர். அடுத்த முறை, பசியைத் தூண்டும் இந்தக் கொட்டைப்பருப்பை நீங்கள் சாப்பிடும்போது, இதற்கு ஒரு புதிய பெயர் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்—அமேசோனியா கொட்டைப்பருப்பு!
[பக்கம் 15-ன் படங்கள்]
அமேசோனியா கொட்டைப்பருப்புகளும் அவற்றை விளையச் செய்யும் மரமும்