சாத்தான் வழிபாடு—இன்றைய இளைஞர்—அதில் எளிதாகச் சிக்கிக்கொள்கின்றனரா?
“சாத்தான் வழிபாடு இளைஞர் மத்தியில் பரவி வருகிறது,” என்று பிப்ரவரி 27, 1993 ஃபின்னிஷ் பத்திரிகை ஒன்று அறிக்கை செய்தது. பின்லாந்திலுள்ள டம்பியர் போலீஸாருக்குக் கிடைத்த தகவலின்படி, போதைப்பொருட்களின் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள், இளைஞரை, குறிப்பாக வாலிபப் பெண்களைச் சாத்தானிய வழிபாட்டிற்குள் கொண்டுவருகின்றனர். அநேக சம்பவங்களில், இந்தப் பலியாட்களும் புதிதாகச் சேர்க்கப்பட்டவர்களும் 10-லிருந்து 15 வயதுள்ள பிள்ளைகள் ஆவர். “இன்றைய இளம் பருவவயதினரின் மத்தியில் சாத்தான் வழிபாடு செழுமையாக வளர்ந்து வருகிறது,” என்று அந்தச் செய்தித்தாள் அறிக்கை செய்தது.
“சாத்தான் வழிபாடு புதிதாக வந்திருப்பது வெறுமனே அந்நாட்டிற்குரிய (ஃபின்னிஷ்) ஒரு பாங்கல்ல,” என்று அந்தச் செய்தித்தாள் எச்சரித்தது. “உதாரணமாக, நாட்டின் பணக்கார, வெள்ளை இனத்தைச் சேர்ந்த இளைஞரை சாத்தான் வழிபாடு தூண்டுவதாக தென் ஆப்பிரிக்கப் பத்திரிகையாகிய ஜோஹன்ஸ்பர்க் ஸ்டார் சமீபத்தில் எச்சரித்தது.” உண்மையிலேயே, சாத்தான் வழிபாடு, சர்வதேச அளவில், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் ஒரு கொடுங்கனவாக இருக்கிறது.
அடிப்படையில், சாத்தான் வழிபாடு மிக கொஞ்சத்தைத் தேவைப்படுத்தி உங்களுக்கு அதிக நன்மையைத் தருவதாக தந்திரமாக வாக்களிக்கிறது. “பிசாசை வணங்குங்கள்; அவனுடைய ஊழல் செயல்களைச் செய்யுங்கள், அதற்குப் பதிலாக அவன் உங்களுக்கு விருப்பமானவற்றைத் தருவான். அதன் காரணமாகவே சில சிறுவர்கள் சாத்தான் வழிபாட்டை அவ்வளவு கவர்ச்சியானதாகக் காண்கிறார்கள்,” என்று டீன் பத்திரிகை விவரித்தது.
“வாழ்க்கையை முழுமையாக அனுபவித்து வாழ்வதில் நம்பிக்கை உடையவன் நான்,” என்று சாத்தானிய தொகுதி ஒன்றின் அங்கத்தினனாக இருப்பதாக ஒத்துக்கொள்கிற ஓர் இளம் பருவவயதினன் சொன்னான். “இயற்கையில் நான் இரண்டு சக்திகளைக் காண்கிறேன்: நன்மையும் தீமையும். தீமை என்று மக்கள் சொல்லுகிற அனைத்து காரியங்களும் உங்களை மகிழ்விக்கக்கூடிய காரியங்களாகும். பாவங்கள் உணர்ச்சி சம்பந்தமான, உடல் சம்பந்தமான, மனம் சம்பந்தமான திருப்திப்படுத்தலுக்கு வழிநடத்துகின்றன,” என்று அவன் சொன்னான்.
அ.ஐ.மா., கொலராடோவின் டென்வரைச் சேர்ந்த துப்பறிபவரான சாத்தானிய மதப்பழமைவாத அமைப்புகளின் நிபுணர் ஒருவர், பருவவயதினர் அவ்வளவு எளிதாக சாத்தான் வழிபாட்டை ஏற்பதாகத் தோன்றுவது ஏன் என்று கேட்கப்பட்டபோது, இவ்வாறு பதிலளித்தார்: “பருவவயதிலிருந்த சாத்தான் வழிபாட்டாளரில் ஒருவன் சொன்னதை என்னால் ஒருபோதும் மறக்கமுடியாது. அவன் சொன்னான், ‘வாழ்வதற்கு என்ன இருக்கிறது? நாம் இன்றைக்காக வாழப்போகிறோம்; எனவே நமக்கு விருப்பமானதைச் செய்யலாம். எதிர்காலம் எதுவும் இல்லை.’”
கனடாவிலுள்ள டார்ட்மவுத்தில் நோவா ஸ்காட்டியா ஹாஸ்பிட்டலிலுள்ள வளரிளமை பருவத்தினருக்கான சேவைப் பிரிவின் இயக்குநர் டாக்டர் காலில் அஹ்மத், சாத்தான் வழிபாட்டிற்கான கவர்ச்சியைக் குறித்து தன்னுடைய எண்ணத்தை விவரித்தார். “பருவவயதினர் கிளர்ச்சியை நோக்கி இருக்கிறார்கள். பெரும்பாலும் திறமை குறைவாக உள்ள, மனவுறுதியற்றவர்களே [சாத்தான் வழிபாட்டினிடமாக] கவரப்படுகிறார்கள். அது அவர்கள் வல்லமையைக் கொண்டிருப்பதைப் போன்ற ஒரு தவறான எண்ணத்தை அவர்களுக்குக் கொடுக்கிறது.”
சாத்தான் வழிபாட்டில் கவனம்செலுத்தும் மற்றொரு போலீஸ் அதிகாரியான சான் பிரான்ஸிஸ்கோவைச் சேர்ந்த துப்பறிபவர், பிரச்சினையை இவ்வாறு குறிப்பிடுகிறார்: “நம்முடைய உலகம் ஒரு அக்கறையற்ற இடம். நாம் ஒருவரிடம் ஒருவர் அக்கறை காண்பிப்பதைவிட நம்மைப்பற்றியே அதிக அக்கறை உள்ளவர்களாய் இருக்கிறோம். நாம் ஒரு வன்முறையான, எதிர்மறையான சமுதாயத்தில் வாழ்கிறோம். இளைஞர் அதை வழக்கமான வாழ்க்கை முறையாகக் காண்பதன் விளைவாக சாத்தான் வழிபாட்டிற்குள் இழுக்கப்படுகின்றனர்.”
சாத்தான் வழிபாட்டில் இன்றைய இளைஞர் எவ்வளவு ஆழமாக ஈடுபட்டிருக்கின்றனர்? “இளைஞர் தங்களையும் தங்கள் நண்பர்களையும் கொலை செய்கின்றனர். நாம் ஒரு பிரச்சினையைக் கொண்டிருக்கிறோம்,” என்று மதப்பழமைவாத அமைப்புகளின் பாதிப்பால் ஏற்படும் குற்றச்செயல்களை ஆராயும் நிறுவனத்தின் (Cult Crime Impact Network) தலைவரும், அ.ஐ.மா.-வின் இடாஹோவிலுள்ள பாய்ஸின் போலீஸ் படை துணைத் தலைவருமான லேரீ ஜோன்ஸ் எச்சரித்தார். மேல்நிலைப் பள்ளியில் போலீஸ் ஆலோசகராகப் பணியாற்றுகையில் சாத்தான் வழிபாட்டை உன்னிப்பாகக் கவனித்துவரும், இல்லினாய்ஸ் மாகாணத்திலுள்ள மற்றொரு போலீஸ் அதிகாரி, பிசாசின் வணக்கத்தோடு விளையாடும் இளைஞரில் 90 சதவீதமானோர் அது ஒரு புதுப்பாணியாக இருப்பதால் அதில் ஈடுபடுகிறார்கள், ஆனால் 10 சதவீதமானோர் “அதில் சிக்கிக்கொண்டு மிக ஆழமாகச் சென்றுவிடுகின்றனர்,” என்று சொன்னார்.
நியூ யார்க்கிலுள்ள புரூக்லினில் பள்ளி செய்தித்தாள் ஒன்றாகிய பள்ளிச் செய்தி தேசியளவில் (School News Nationwide) ஜனவரி-பிப்ரவரி-மார்ச் 1994 என்பது, “மதம்” என்ற பகுதியில், “சாத்தான் வழிபாடு ஏன் பருவவயதினரைக் கவர்கிறது” என்ற தலைப்பின்கீழ் ஒரு கட்டுரையைப் பிரசுரித்திருந்தது. அது இவ்வாறு அறிக்கை செய்தது: “மேல்நிலைப் பள்ளியின் சிற்றுண்டிச்சாலையில் இரு பையன்கள் சண்டைபோட்டப் பிறகு, ஜெயித்தவன் குதித்து, வித்தியாசமான விதத்தில் கைகளை வைத்து வணக்கம் தெரிவித்து, தன் சுட்டுவிரலும் சிறிய விரலும் மேல்நோக்கிய வண்ணம் மூடிய கையை உயர்த்தினான். வெள்ளாட்டுத் தலைகளை உடைய பேய்த்தனமான மனிதர்களின் படங்களை அநேக இளைஞர் ஏன் வரைந்தனர் என்று கலை ஆசிரியரால் அறிந்துகொள்ள முடியவில்லை. மேலும் பள்ளி நூலகத்திலிருந்து மாயமந்திரம் சம்பந்தமான புத்தகங்கள் தொடர்ந்து காணாமல் போய்க்கொண்டிருந்தன.
“உண்மையில், அந்த இளைஞர், சாத்தான் வழிபாட்டின் சக்தி, மாயமந்திரம், அதன் புதிர் போன்றவற்றோடு விளையாடிக்கொண்டிருந்தனர். அநேகருக்கு, அது கேலிக்கூத்தாகவும் கிளர்ச்சியூட்டுவதாகவும் இருந்தது. சிலருக்கு, அது பயங்கரமானதாக—சாத்தானிய பலியில் உயிரை இழந்த 17 வயது லாயிட் காம்பிளுக்கு அது சாவுக்கேதுவான விதத்தில் பயங்கரமானதாக இருந்தது.
“லாயிட்டின் மரணத்திற்கும் அவனுடைய 15 வயது தம்பி அந்தக் கொலைக் குற்றத்திற்காகக் கைதுசெய்யப்பட்டதற்கும் பிறகு, மன்ரோ மாகாணத்தின் பெரியவர்கள், முன்னர் புதிராக இருந்த அந்த அடையாளங்களைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தனர்: கை சமிக்கையான ‘பிசாசின் சின்னம்,’ வெள்ளாட்டுத் தலை படங்கள், பருவவயதினரின் கற்பனைகளுக்கு விருந்தளித்த புத்தகங்கள், சடங்காச்சாரங்கள் மற்றும் மந்திரங்கள்.”
பருவவயதினரும் அதைவிட குறைந்த வயதுள்ளவர்களும் தங்கள் பெற்றோரை அல்லது குடும்பத்தின் மற்ற அங்கத்தினர்களைச் சாத்தான் வழிபாட்டின் காரணமாகக் கொலை செய்வதுபற்றிய புகார்கள் முடிவுபெறாததாகத் தோன்றுகின்றன. அப்படிப்பட்ட நடவடிக்கைகளில், பிள்ளைகள் மற்ற பிள்ளைகளால் கொல்லப்பட்டிருக்கின்றனர். சாத்தான் வழிபாட்டைச் செய்யும் பெரியவர்களைப் போலவே, பிள்ளைகளும் மிருகங்களை உருச்சிதைவுசெய்து கொன்றிருக்கின்றனர். வீட்டில் வளர்க்கும் ஆசை விலங்குகள் சாத்தானிய சடங்காச்சார பீடத்தில் பலி செலுத்தப்பட்டிருக்கின்றன. பிசாசு வணக்கத்தின் மதத்தைத் தழுவியிருக்கும் பிள்ளைகளால் செய்யப்பட்டிருக்கிற சித்திரவதைகளில் ஒரு பகுதியைக்கூட இங்கு பிரசுரிப்பதற்கு இடம் போதாது.
இங்கே கொடுக்கப்பட்ட உதாரணங்கள், சாத்தான் வழிபாட்டில் வெறுமனே விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளைப் பற்றியனவா? பிசாசு வணக்கத்தில் மூழ்கியிருப்பவர்கள் வெகு குறைந்த எண்ணிக்கையினராகவே, அரிதாகவே இருக்கின்றனரா? அவ்வாறு இல்லை என்பதாக இந்த மாயவித்தை பழக்கத்தாரை விசாரணை நடத்தியிருப்பவர்கள் பதிலளிக்கிறார்கள். குற்றங்களைத் துப்பறிபவராக முன்னாளில் இருந்து, தூண்டுவிக்கும் பேச்சாளராக ஆன டேவட் டோமா, தான் பேசக்கூடிய ஒவ்வொரு பள்ளியிலும் பின்வரும் அதே கேள்வியைக் கேட்டதாகச் சொன்னார்: “சாத்தானிய பழக்கவழக்கங்களில் ஈடுபட்டிருக்கும் ஒருவரை அறிந்திருப்பவர்கள் அல்லது அவர்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்பவர்கள் உங்களில் எத்தனை பேர்?” “மூன்றில் ஒரு பகுதியான மாணவர்கள் தங்கள் கைகளை உயர்த்துகின்றனர்,” என்று அவர் கணிக்கிறார்.
தேசிய தகவல் தொடர்பு மையத்தின் (National Information Network) தலைவரான ஷேன் வெஸ்ட்ஹல்டரின்படி, மேல்நிலைப் பள்ளி மாணவர்களில் 30-லிருந்து 40 சதவீதமானவர்கள் ஏதாவது ஒரு வகையான மாயவித்தையில் ஈடுபட்டிருக்கிறார்கள். மேலுமாக, 17 வயதுக்குக் குறைவான பருவவயதினரால் செய்யப்படும் எல்லா குற்றச்செயல்களிலும் 70 சதவீதம், மாயவித்தையில் ஈடுபடுவதாலேயே தூண்டப்படுகிறது என்று வெஸ்ட்ஹல்டர் வாதிடுகிறார்.
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
இன்றைய இளைஞர் மத்தியில் சாத்தான் வழிபாடு செழிப்பாக வளர்ந்து வருகிறது