உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g94 11/8 பக். 3-9
  • சரஜெவோ—1914 முதல் 1994 வரை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சரஜெவோ—1914 முதல் 1994 வரை
  • விழித்தெழு!—1994
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • யுகோஸ்லாவியாவும் முதல் உலகப் போரும்
  • யுகோஸ்லாவியாவும் இரண்டாம் உலகப் போரும்
  • உலகை மாற்றிய தோட்டாக்கள்
  • 1914-ன் சம்பவங்களை விளக்குவதற்கு முயற்சிகள்
  • உலகத்தை அதிர வைத்த அந்த வருடம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • யுகோஸ்லாவியா கவர்ச்சியூட்டும் வேற்றுமைகள் நிறைந்த ஒரு தேசம்
    விழித்தெழு!—1989
  • முன்னறிவிக்கப்பட்ட உலக அழிவு எப்பொழுது வரும்?
    உண்மையான சமாதானம்
  • யுத்தங்களை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு யுத்தம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
மேலும் பார்க்க
விழித்தெழு!—1994
g94 11/8 பக். 3-9

சரஜெவோ—1914 முதல் 1994 வரை

ஸ்வீடனில் உள்ள விழித்தெழு! நிருபர் எழுதியது

ஜூன் 28, 1914 அன்று சரஜெவோவில் அந்த அழிவுநோக்கிய துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டு எண்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. சுடப்பட்ட அந்தக் குண்டுகள் ஆஸ்திரிய பேரரசரின் மகனாகிய பிரான்ட்சிஸ் பெர்டினான்டையும் அவருடைய மனைவியான சோஃபியையும் கொன்றன. இதற்குப்பின், ஆஸ்திரிய-ஹங்கேரிக்கும் செர்பியாவுக்கும் இடையே இருந்த பகை முதல் உலகப் போராக எழும்பியது. போர்க்களங்களுக்கு அனுப்பப்பட்ட 6 கோடி 50 இலட்சம் இளைஞரில், சுமார் 90 இலட்சம் பேர் திரும்பி வரவேயில்லை. படைத்துறை சாராத பொதுமக்களோடு சேர்த்து மொத்தமாக 2 கோடி 10 இலட்சம் பேர் கொல்லப்பட்டனர். ஆகஸ்ட் 1914-ல் அந்தப் போர் ஆரம்பித்த சமயத்தை இன்னும் சிலர் “உலகம் பைத்தியமாகிவிட்ட சமயம்” என்று குறிப்பிடுகின்றனர்.

மறுபடியும் துப்பாக்கி வெடிசத்தங்கள் சரஜெவோ முழுவதிலும் எதிரொலிக்க ஆரம்பித்திருக்கின்றன. சரஜெவோவில் மட்டுமல்ல, முன்னர் யுகோஸ்லாவியா கூட்டு பேராட்சியில் இருந்த ஆறு குடியரசுகள் பலவற்றிலும் ஒலிக்கின்றன.a (Jugoslavien—Ett land i upplösning) யுகோஸ்லாவியா—சிதைவுறும் ஒரு தேசம் என்ற புத்தகம் சொல்லுகிறது: “அயலான் அயலானோடு சண்டையிடும் உள்நாட்டு போர் இது. நீண்டகாலம் வேரூன்றிய வன்மமும் சந்தேகமும் பகையாக மாறிவிட்டிருக்கின்றன. இந்தப் பகை சண்டைக்கும், சண்டை அதிகமான கொலைக்கும் அதிக அழிவுக்கும் வழிநடத்தியிருக்கிறது. இது ஒரு நச்சுச் சுழலைப் போன்று, இன்னும் சொல்லப்போனால், அதிகரித்துக்கொண்டே போகும் பகை, சந்தேகம், கொலை ஆகியவற்றுக்கு சுற்றி சுற்றி வழிநடத்துவதாக உள்ளது.”

ஜூன் 1991-ல் யுகோஸ்லாவியாவில் சண்டைகள் ஆரம்பித்தபோது, அநேக மக்கள் சரஜெவோவில் ஜூன் 1914-ல் வெடித்த துப்பாக்கி குண்டு சப்தங்களை நினைவுகூர்ந்தது ஆச்சரியப்படுவதற்கில்லை. இப்புதிய சண்டையும் அதே அழிவுண்டாக்கும் விளைவுகளுக்கு வழிநடத்துமா? ஐரோப்பிய சமாதானம் ஆபத்துக்குள்ளாகுமா? இந்த “இன சுத்திகரிப்பு” திட்டம் (பிற இன, அரசியல், கலாச்சார தொகுதிகளைச் சேர்ந்தோரை வேண்டுமென்றே கொல்வதும் துரத்திவிடுவதும்) உலகின் பிற பகுதிகளுக்கும் பரவிவிடுமா? இச்சண்டையை நிறுத்துவதற்கு சர்வதேச முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் முன்னாள் யுகோஸ்லாவியாவில் உள்ள கஷ்டங்களுக்கு பின்னால் உண்மையில் மறைந்திருப்பவை யாவை? 1914-ல் நடந்த சதிக்கொலைக்கும் சரஜெவோவில் சமீபத்தில் நடந்த சம்பவங்களுக்கும் தொடர்பு ஏதாவது உண்டா?

யுகோஸ்லாவியாவும் முதல் உலகப் போரும்

இப்பிளவுகள் புதியவை அல்ல. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தின் போதே, பால்கன் தீபகற்பம் “ஐரோப்பாவின் அமைதியற்ற மூலை” என்பதாக அழைக்கப்பட்டது. யுகோஸ்லாவியா—சிதைவுறும் ஒரு தேசம் சொல்கிறது: “வெகுகாலமாக பதற்றம் வளர்ந்து வரும் ஓர் ஐக்கிய குடியரசின் சிதைவு இது. உண்மையில், முதல் உலகப் போரின் இறுதியில் செர்பியா, க்ரோஏஷியா மற்றும் ஸ்லோவேனியா ராஜ்யம் [யுகோஸ்லாவியாவின் முன்னாள் பெயர்] உருவாக்கப்பட்ட போதே இப்பிளவுகள் அங்கு ஏற்கெனவே இருந்தன.” சரித்திர பின்னணியைச் சிறிது பார்ப்பது தற்போதைய பிளவுகள் முதல் உலகப் போருடன் எவ்விதம் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்பதைக் காண நமக்கு உதவும்.

1914-ல் பிரான்ட்சிஸ் பெர்டினான்ட் சதிக்கொலை செய்யப்பட்ட போது, தென் ஸ்லாவிக் தேசங்கள் ஸ்லோவேனியாவும், க்ரோஏஷியாவும், பாஸ்னியா மற்றும் ஹெர்ஸகோவினாவும் ஆஸ்திரிய-ஹங்கேரி பேரரசின் பகுதிகளாக இருந்தன என்று சரித்திரம் நமக்கு சொல்கிறது. மறுபட்சத்தில், செர்பியா ரஷ்யாவினால் பலமாக ஆதரிக்கப்பட்டு 1878 முதல் ஒரு தனி தேசமாக இருந்து வந்தது. ஆயினும், அநேக செர்பியர்கள் ஆஸ்திரிய-ஹங்கேரியின் ஆட்சியில் இருந்த பகுதிகளில் வாழ்ந்து வந்தனர். எனவே பால்கன் தீபகற்பத்தில் அவர்கள் வாழ்ந்த பகுதிகளையெல்லாம் ஆஸ்திரிய-ஹங்கேரி தந்துவிட வேண்டும் என செர்பியா விரும்பியது. க்ரோஏஷியாவுக்கும் செர்பியாவுக்கும் இடையே பிளவுகள் இருந்தபோதிலும், அவை அந்நிய ஆதிக்கத்திலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரு விருப்பத்தில் ஒன்றுபட்டிருந்தன. தேசிய பற்றுள்ளவர்கள் தென் ஸ்லாவியர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரே பேரரசாக உருவாக்கும் நாளை எதிர்பார்த்தனர். அத்தகைய சுதந்திரமான தேசத்தை உருவாக்குவதில் செர்பியர்கள் மிக பலமான சக்தியாக செயல்பட்டனர்.

அப்போது ஆண்டுக்கொண்டிருந்த பேரரசர் பிரான்ட்சிஸ் ஜோசப் 84 வயதானவர். பேரரசரின் மகன் பிரான்ட்சிஸ் பெர்டினான்ட் சீக்கிரத்தில் பேரரசராக ஆக இருந்தார். செர்பிய தேசியவாதிகள் ஒரு தென் ஸ்லாவிக் பேரரரசை உருவாக்க வேண்டும் என்ற தங்கள் கனவுக்கு பிரான்ட்சிஸ் பெர்டினான்டை ஒரு தடையாக கண்டனர்.

செர்பியாவிலிருந்த இளம் மாணவர்கள் சிலர் சுதந்திர தென் ஸ்லாவிக் தேசத்திற்கான ஆவலினால் வெறியூட்டப்பட்டனர், அதற்காக சாகவும் தயாராக இருந்தனர். பேரரசரின் மகனை சதிக்கொலை செய்ய அநேக இளைஞர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆயுதங்கள் கொடுக்கப்பட்டு, அவர்கள் கறுப்பு கை என்றழைக்கப்பட்ட இரகசிய செர்பிய தேசியவாதி தொகுதியால் பழக்குவிக்கப்பட்டனர். இவ்விளைஞரில் இருவர் சதிக்கொலை முயற்சி செய்தனர், அவர்களில் ஒருவன் அதை செய்து முடித்தான். அவனுடைய பெயர் காவ்ரிலா பிரின்ட்ஸிப். அவனுக்கு வயது 19.

இந்தச் சதிக்கொலை அக்குற்றத்தைத் தூண்டியவர்கள் விரும்பிய நோக்கத்தை நிறைவேற்றியது. முதல் உலகப் போர் முடிவுற்றபோது, ஆஸ்திரிய-ஹங்கேரியின் அரச வம்சம் மறைந்துவிட்டிருந்தது, ஸ்லாவியர்களை ஒருங்கிணைத்து ஒரு தேசத்தை உருவாக்குவதில் இப்போது செர்பியா தலைமை தாங்க முடியும். 1918-ல் அத்தேசம் செர்பியர்கள், க்ரோஏஷியர்கள் மற்றும் ஸ்லோவியர்களின் பேரரசு என்று அழைக்கப்பட்டது. அந்தப் பெயர் 1929-ல் யுகோஸ்லாவியா என்று மாற்றப்பட்டது. ஆயினும், இந்தப் பல்வேறு தொகுதிகள் ஆஸ்திரிய-ஹங்கேரிக்கு எதிரான தங்கள் பொது விரோதத்தில் ஒன்றுபட வேண்டிய தேவை இனிமேலும் இராத காரணத்தால், இத்தொகுதிகளிடையே இருந்த வேறுபாடுகள் புலப்பட ஆரம்பித்தன. ஏறக்குறைய 20 விதமான ஜனத்தொகுதிகளும், நான்கு அரசு மொழிகளும், பிற அநேக மொழிகளும், இரண்டு வித்தியாசமான (ரோமன், சிரிலிக்) எழுத்துக்களும், மூன்று பிரதான மதங்களும்—கத்தோலிக்கர், முஸ்லிம்கள், செர்பிய ஆர்த்தடாக்ஸ் பிரிவினர்—உள்ளனர். மக்களைப் பிரிக்கும் அம்சமாக மதம் தொடர்ந்து இருந்து வருகிறது. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், அந்தப் புதிய பேரரசில் நாள்பட்ட பிரிவினை சக்திகள் இருந்தன.

யுகோஸ்லாவியாவும் இரண்டாம் உலகப் போரும்

இரண்டாம் உலகப் போரில் யுகோஸ்லாவியாவின் மீது ஜெர்மனி படையெடுத்தது. யூகோஸ்லாவிய ஆஸ்விட்சும் வத்திக்கனும் (The Yugoslav Auschwitz and the Vatican) என்ற புத்தகத்தின் பிரகாரம், நாசிக்களுடன் ஒத்துழைத்த கத்தோலிக்க க்ரோஏஷியர்களால் “2,00,000-க்கும் மேற்பட்டோர், அவர்களில் பெரும்பான்மையர் ஆர்த்தடாக்ஸ் செர்பியர்கள், கிரமமாக கொல்லப்பட்டனர்.” ஆயினும் க்ரோஏஷியனான யோசப் டிட்டோ தன் கம்யூனிச கட்சியாளர்களோடும் ஆங்கிலேய, அமெரிக்கர்களின் ஒத்துழைப்போடும் யுகோஸ்லாவியாவை விட்டு ஜெர்மானியர்களைப் பின்வாங்கச் செய்தார். போர் முடிந்த போது அவரே ஐயத்துக்கிடமில்லாத வகையில் தேசத்தின் தலைவராக தோன்றினார், அதை இரும்புக் கரங்களால் ஆளவும் ஆரம்பித்தார். அவர் தன்னிச்சையாக செயல்படுபவராக இருந்தார். யுகோஸ்லாவியாவை மற்ற கம்யூனிச தேசங்களுடன் இணக்கமாக கொண்டுவரும்படி அவரை இசைவிக்க ஸ்டாலினால் கூட முடியவில்லை.

‘டிட்டோ ஆளாதிருந்தால் இந்த ஐக்கிய குடியரசு எப்போதோ பிளவுபட்டு போயிருக்கும். அதை ஒன்றாக கட்டியமைத்திருப்பதற்கு வேண்டிய மனவலிமையும் தேவையான அதிகாரமும் அவருக்கு மட்டுமே இருந்தது,’ என முன்னாள் யுகோஸ்லாவியாவைச் சேர்ந்த சிலர் சொல்லியிருக்கின்றனர். இது உண்மையாக நிரூபித்தது. 1980-ல் டிட்டோவின் மரணத்துக்குப் பின் பிளவுகள் மறுபடியும் எழும்பின. இறுதியில் 1991-ல் உள்நாட்டு போராக வலுத்தன.

உலகை மாற்றிய தோட்டாக்கள்

பிரான்ட்சிஸ் பெர்டினான்டின் கொலையைப் பற்றி ஆசிரியர் பிரெடரிக் மார்ட்டன் தன் புத்தகமாகிய விடியற்காலையில் இடிமுழக்கம்—வியன்னா 1913/1914-ல் (Thunder at Twilight—Vienna 1913/1914) எழுதினார்: “அவருடைய தொண்டைக்குள் பாய்ந்த அந்தத் தோட்டா, மனிதகுலம் அதுவரை அறிந்திராத பாழாக்கும் படுகொலையின் ஆரம்ப வெடியாக ஒலித்தது, இரண்டாம் உலகப் போருக்கு வழிநடத்திய தொடர்ச்சியான செயல்களை அது ஆரம்பித்தது . . . தற்போதைய உலகின் சூழ்நிலைக்கு வழிவகுத்த நூல் இழைகள் அந்தப் பேரரசரின் மகன் சதிக்கொலை செய்யப்பட்டதற்கு ஒன்றரை வருடங்களுக்கு முன் டான்யூப் கரையோரத்திலிருந்த தேசங்களில் நெய்யப்பட்டன.”—நேரெழுத்துக்கள் எங்களுடையவை.

1914 வரை தொடர்புடைய “தற்போதைய உலகின் சூழ்நிலைக்கு வழிவகுத்த நூல் இழைகள்” முன்னாள் யுகோஸ்லாவியாவில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள் மட்டுமல்ல. மற்ற சரித்திர ஆசிரியர்களும் ஒத்துக்கொள்ளும் கருத்தை சரித்திர ஆசிரியர் எட்மன்ட் டெய்லர் கூறுகிறார்: “முதல் உலகப் போரின் ஆரம்பம் இருபதாம் நூற்றாண்டின் ‘கஷ்ட காலத்தை’ அறிமுகம் செய்தது . . . கடந்த நூற்றாண்டின் கடைசி பாதியின் குமுறல்கள் யாவும் நேர்முகமாகவோ மறைமுகமாகவோ 1914-ல் தோன்றி வளர்வுற்றவையேயாகும்.”

சரஜெவோவில் வெடித்த அந்தத் துப்பாக்கி குண்டுகள் எப்படி அத்தகைய பேரிடர் பயக்கவல்ல விளைவுகளைக் கொண்டுவந்தன என்பதை விளக்க அநேகர் முயலுகின்றனர். ஒரு “பள்ளிக்கூட பையன்” சுட்ட இரண்டு தோட்டாக்கள் அநேக தேசங்களில் போரைத் தூண்டி, நம் நாள் வரை தொடர்ந்திருக்கும் வன்முறையும் குழப்பமும் நிறைந்த காலப்பகுதியை எப்படி வரவழைக்க முடியும்?

1914-ன் சம்பவங்களை விளக்குவதற்கு முயற்சிகள்

விடியற்காலையில் இடிமுழக்கம்—வியன்னா 1913/1914 என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் 1914-ல் தேசங்கள் பேரில் செல்வாக்கு செலுத்திய “புதிய சக்தியைப்” பற்றி குறிப்பிட்டு போருக்கு காரணத்தை விளக்க முயற்சிக்கிறார். இந்தச் “சக்தி” என்பது உண்மையில் ஒன்றாக செயல்பட்ட அநேக அம்சங்களாகும் என்று அவர் சொல்கிறார். அமைதியை விரும்பின ஒருசிலர் எழுப்பிய குரல்களும் போருக்கான அறைகூவலில் மூழ்கடிக்கப்பட்டு விட்டன. ஒரு தேசம் படைகளை திரட்டியது மற்ற தேசங்களும் திரட்டும்படி துரிதப்படுத்தியது. ஆட்சியாளர்களிடமிருந்த அதிகாரம் இராணுவத் தளபதிகளிடம் மாற்றப்பட்டது. அநேக ஆட்கள் போரின் மூலம் ஒரு “மகத்தான தேசிய துணிகரச்செயலை” அனுபவித்து அதன் மூலம் அன்றாடக வாழ்க்கையின் கிளர்ச்சியற்ற நிலையிலிருந்து விடுபட நல்ல வாய்ப்பாகக் கருதினர். பின்னர் ஓர் அதிகாரி எழுதினார்: “கோடைக்கால புழுக்கத்திலிருந்து விடுபட ஒரு புயலை விரும்பும் ஆட்களைப் போல் 1914-ன் சந்ததி போர் கொண்டுவரக்கூடிய விடுதலையை எதிர்பார்த்திருந்தது.” ஜெர்மானிய ஆசிரியர் ஹெர்மான் ஹெஸ்ஸி “ஒரு மந்தமான முதலாளித்துவ சமுதாயத்தின் அமைதியிலிருந்து” உலுக்கி எழுப்பப்படுவது அநேக ஜனங்களுக்கு நன்மை பயக்கும் என்று சொன்னார். போர் என்பது “ஒரு சுத்தப்படுத்துதல், ஒரு மாபெரும் நம்பிக்கை” என்ற கூற்று நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய ஆசிரியரான டோமாஸ் மேன் என்பவரால் சொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. வின்ஸ்டன் சர்ச்சிலும்கூட போரின் சிந்தையால் வெறியூட்டப்பட்டவராய் எழுதினார்: “போர் தயாரிப்புகள் எனக்கு அதிர்ச்சியூட்டும் கவர்ச்சியைக் கொண்டிருக்கின்றன. இத்தகைய பயமுள்ள பொறுப்பற்ற மனநிலைகளுக்காக கடவுள் என்னை மன்னிக்கவேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்.”

இந்தப் “புதிய சக்தி”யின் காரணமாக ஐரோப்பா எங்கிலும் போர்வீரர்கள் யுத்தத்திற்கு அணிவகுத்து புறப்பட்டபோது சுவாரஸ்யமான காட்சிகள் நடந்தேறின. பச்சையான சிறுகிளைகள் அவர்களுடைய தொப்பிகளில் குத்தப்பட்டன. பீரங்கிகளைச் சுற்றி ரோஜா மாலைகள் தொங்கவிடப்பட்டன. இசைக்குழுவினர் இசைக்கருவிகளை வாசித்தனர். வீட்டிலிருந்த பெண்கள் ஜன்னல் வழியாக தங்கள் கைக்குட்டைகளை அசைத்தனர். மகிழ்ச்சி நிறைந்த பிள்ளைகள் போர்வீரர்களின் பக்கத்தில் சேர்ந்து ஓடினர். மக்கள் போரின் வருகையை கொண்டாடி வரவேற்றதைப் போன்று தோன்றியது. ஒரு பண்டிகை போன்ற வேடத்தில் உலகப் போர் வந்தது.

முதல் உலகப் போரின் காரணத்தை நாம் புரிந்துகொள்வதற்கு உதவி செய்யும் என்பதாக கருதப்பட்ட, ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட மார்ட்டன் “புதிய சக்தி” என்றழைத்ததன் சுருக்கம் இதுவே. ஆனால் இந்தச் “சக்தி” எங்கிருந்து வந்தது? சரித்திர ஆசிரியர் பார்பரா டக்மன் தொழில் வளர்ச்சியடைந்த சமுதாயம் மனிதனுக்கு புதிய சக்திகளையும் புதிய அழுத்தங்களையும் தந்திருந்தது என எழுதினார். உண்மையில், “சமுதாயம் . . . புதிய அழுத்தங்களினாலும் தேங்கியிருந்த சக்திகளினாலும் வெடித்துக் கொண்டிருந்தது.” அந்தச் சமயத்தில் வியன்னாவிலிருந்த ஓர் இளம் அறிஞனாகிய ஷ்டெஃபான் சுவீக் எழுதினார்: “நாற்பது ஆண்டுகால சமாதானத்தின்போது தேங்கியிருந்து இப்போது ஒரு வன்முறையான விடுதலையை நாடிய உள்ளான ஆற்றல் செயல்படும் முறைமையின் விபரீத விளைவு, அதிகப்படியான சக்தி என்பதைத் தவிர வேறு எந்த வழியின் மூலமும் என்னால் விளக்கமுடியாது.” “வேறு எந்த வழியின் மூலமும் என்னால் விளக்கமுடியாது,” என்ற அந்த வார்த்தைகள் அவர் அதை விளக்குவதற்கு கடினமாக இருப்பதாக உணருவதைக் காட்டுகிறது. விடியற்காலையில் இடிமுழக்கம் என்ற புத்தகத்தின் முன்னுரையில் பிரெடரிக் மார்ட்டன் எழுதுகிறார்: “அது ஏன் அந்தக் குறிப்பிட்ட சமயத்தில் அந்தக் குறிப்பிட்ட இடத்தில் நடந்தது, எப்படி நடந்தது? . . . திகைப்பூட்டும் இந்த எல்லா சம்பவங்களையும் புரிந்துகொள்வதற்கு ஏதாவது ஒரு துப்பு உள்ளதா?”

ஆம், 1914-ஐ விளக்க முயற்சிக்கும் அநேகர் அதிக அடிப்படையான காரணங்கள் உண்மையில் எளிதில் புரியமுடியாதவை என்று உணருகின்றனர். போர் ஏன் நேரடியாக சம்பந்தப்பட்ட தரப்பினர்களோடு மட்டும் நின்றுவிடவில்லை? அது ஏன் ஒரு உலகப் போராக வளர்ந்தது? ஏன் அது அவ்வளவு நீண்டகாலமாயும் அழிவுண்டாக்குவதாயும் இருந்தது? 1914-ன் இலையுதிர்க்காலத்தின் போது மனிதவர்க்கத்தைக் கட்டுப்படுத்திய அந்த விநோதமான சக்தி உண்மையில் எது? 10-ம் பக்கத்தில் உள்ள எமது அடுத்த கட்டுரை இக்கேள்விகளுக்கு வேதப்பூர்வமான பதிலைக் கலந்தாலோசிக்கும்.

[அடிக்குறிப்புகள்]

a யுகோஸ்லாவியா என்பதன் பொருள் “தென் ஸ்லாவியர்களின் தேசம்” ஆகும். அந்தக் குடியரசுகள்: க்ரோஏஷியா, செர்பியா, ஸ்லோவேனியா, பாஸ்னியா மற்றும் ஹெர்ஸகோவினா, மாசிடோனியா, மான்டிநீக்ரோ ஆகியவை.

[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]

“கோடைக்கால புழுக்கத்திலிருந்து விடுபட ஒரு புயலை விரும்பும் ஆட்களைப் போல் 1914-ன் சந்ததி போர் கொண்டுவரக்கூடிய விடுதலையை எதிர்பார்த்திருந்தது.”—எர்னஸ்ட் U. கார்மன்ஸ், ஆஸ்திரிய நாட்டு தூதுவர்

[பக்கம் 8, 9-ன் பெட்டி/படங்கள்]

1914

1914 முதற்கொண்டு சம்பவித்துள்ள நாசகரமான நிகழ்ச்சிகளை பைபிள் தீர்க்கதரிசனமுரைத்தது

“அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலைசெய்யத்தக்கதாகச் சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப் போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது; ஒரு பெரிய பட்டயமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான். அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒரு படி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன். அவர் நாலாம் முத்திரையை உடைத்தபோது, நாலாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லுஞ் சத்தத்தைக் கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன்பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்ட மிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலைசெய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது.” வெளிப்படுத்துதல் 6:4-8 (லூக்கா 21:10-24; 2 தீமோத்தேயு 3:1-5 ஆகிய வசனங்களையும் பாருங்கள்.)

“1914-18-ன் மகா யுத்தம் தீய்ந்து கருகிய ஒரு மண்டலத்தைப் போல் அக்காலத்தை நம் காலத்திலிருந்து பிரிக்கிறது. அதைத் தொடர்ந்த ஆண்டுகளில் செயல்பட்டிருந்திருக்கக்கூடிய அத்தனை அநேக உயிர்களைத் துடைத்தழிப்பதிலும், நம்பிக்கைகளை அழிப்பதிலும், எண்ணங்களை மாற்றுவதிலும், குழப்பம் நிறைந்த ஆறாத புண்களை விட்டுச்செல்வதிலும் இரண்டு சகாப்தங்களிடையே அது வெளிப்படையான மற்றும் மனோதத்துவ பிளவை உருவாக்கியது.”—பார்பரா W. டக்மன் எழுதிய அகந்தையுள்ள கோபுரம் (The Proud Tower) புத்தகத்தின் முன்னுரை.

“கிரஹாம் வாலஸ் எழுதியவிதமாக [1914-ஐ] பின்தொடர்ந்த நான்கு வருடங்கள் ‘மனிதகுலம் அதுவரை செய்திராத அதிஉக்கிரமும் வீரமும் கொண்ட முயற்சிகள் நிறைந்த நான்கு ஆண்டுகளாகும்.’ இந்த முயற்சி முடிவுற்றபோது, 1914 வரை சாத்தியமாகத் தோன்றிய கற்பனைகளும் உற்சாகங்களும் பெரும் குழப்பமான கடலினுள் மெதுவாக மூழ்கின. மனிதகுலம் செலுத்திய விலைக்கு அதற்குக் கிடைத்த பெரிய இலாபம் தன் சொந்த வரையறைகளைப் பற்றிய வேதனைமிக்க கருத்தே ஆகும்.”—அதே புத்தகத்தில் பின்னுரை

[படத்திற்கான நன்றி]

The Bettmann Archive

The Trustees of the Imperial War Museum, London

National Archives of Canada, P.A. 40136

[பக்கம் 7-ன் வரைப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

ஆகஸ்ட் 1914-ல் ஐரோப்பா இருந்த விதம்

1. கிரேட் பிரிட்டனும் அயர்லாந்தும் 2. பிரான்ஸ் 3. ஸ்பெய்ன் 4. ஜெர்மன் பேரரசு 5. ஸ்விட்ஸர்லாந்து 6. இத்தாலி 7. ரஷ்யா 8. ஆஸ்திரிய-ஹங்கேரி 9. ருமேனியா 10. பல்கேரியா 11. செர்பியா 12. மான்டிநீக்ரோ 13. அல்பேனியா 14. கிரீஸ்

[பக்கம் 5-ன் படம்]

காவ்ரிலா பிரின்ட்ஸிப்

[பக்கம் 6-ன் படம்]

Germans receiving flowers on their way to war

[படத்திற்கான நன்றி]

The Bettmann Archive

[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]

Culver Pictures

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்