யுகோஸ்லாவியா கவர்ச்சியூட்டும் வேற்றுமைகள் நிறைந்த ஒரு தேசம்
யுகோஸ்லாவியாவிலுள்ள விழித்தெழு! நிருபர் எழுதியது
“யுகோஸ்லாவிய மொழியில் நீங்கள் இதை எப்படிச் சொல்வீர்கள்?” அந்நிய தேசத்தானின் இந்தக் கேள்வி, குறைந்தபட்சம் மூன்று வித்தியாசமான பதில்களை வெளிவரச் செய்யும்—ஒவ்வொன்றும் ஒவ்வொரு மொழியில்! மேலுமாக, யுகோஸ்லாவியா நாட்டைச் சேர்ந்த ஒருவனை “நீங்கள் எந்த தேசத்தான்?” என்பதாகக் கேட்டுப் பாருங்கள். அவன் குறைந்தபட்சம் ஆறு வித்தியாசமான பதில்களில் ஒன்றை உங்களுக்குத் தருவது சாத்தியமாக இருக்கும்—அதில் ஒன்றுகூட “யுகோஸ்லாவிய தேசத்தான்” என்று இருக்காது!
ஆம், யுகோஸ்லாவியா ஆச்சரியத்தைத் தரும் வேற்றுமைகள் நிறைந்த ஒரு தேசமாகும். பெரிதளவில் அதன் நில இயல் அமைப்புதானே அதை அவ்விதமாகச் செய்கிறது. யுகோஸ்லாவியா ஐரோப்பாவின் தென்கிழக்குப் பகுதியில் ஏட்ரியாடிக்-ஈஜியன் தீபகற்பத்தில் அமைந்திருக்கிறது. இதற்கு மேற்கே இருப்பது ஏட்ரியாடிக் கடலாகும். ஏழு தேசங்களோடு—இத்தாலி, ஆஸ்டிரியா, ஹங்கேரி, ரோமானியா, பல்கேரியா, கிரீஸ், மற்றும் அல்பேனியா—நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதால் யுகோஸ்லாவியா பல்வேறு கலாச்சார செல்வாக்குகளுக்கு உட்பட்டதாயிருக்கிறது.
சீதோஷ்ண நிலையும் வித்தியாசப்படுகிறது: கடற்கரையோரத்தில் உஷ்ணமான, வறட்சியான கோடைகாலமும், வெதுவெதுப்பான, மழைபெய்கிற குளிர்காலமும்; மலைப்பாங்கான பிரதேசங்களில் குறுகிய மட்டான குளிர்ச்சி வாய்ந்த கோடையும், நீண்ட கால பனிமிகுந்த மழைக்காலமும்; வடக்கேயுள்ள சமவெளியில் உஷ்ணமான கோடையும் கடுங்குளிரான குளிர்காலமும். கிழக்கிலிருந்து மேற்காக அதனுடைய அகலமான முனையில், நீளவாட்டில் 600 மைல்களும் குறுக்கே 400 மைல்கள் மட்டுமே இருக்கும் ஒரு தேசத்தில் இப்படியாக இருக்கிறது.
பன்னாட்டு மக்களைக் கொண்ட ஒரு தேசம்
ஆனால் இன்னும் அதிகமான வேற்றுமை அதனுடைய மக்களிடையே காணப்படுகிறது. 1987 மதிப்பீட்டின்படி, தேசத்தில் குடியிருக்கும் 235 லட்சம் மக்களில் ஒரு சிறு விகிதத்தினரே யுகோஸ்லாவியர் (தென் ஸ்லவிய இனத்தினர்) என்று தங்களைச் சொல்லிக் கொள்கின்றனர். மக்கள் தொகையில், மீதமுள்ளோர் தங்களை செர்பிய நாட்டவர், குரோஷியா இனத்தவர், பாஸ்னியர்கள், தென் ஸ்லவோனியர், மக்கதோனியர், மான்டிநீக்ரோவைச் சார்ந்தவர் அல்லது எண்ணற்ற சிறுபான்மையானோரில் ஒருவராக தங்களைக் கருதுகின்றனர்.
ஆக, “யுகோஸ்லாவிய” மொழி என்று ஒன்று இல்லை; செர்பிய-குரோஷிய மொழிக்கும், ஸ்லவோனிய மொழிக்கும் மக்கதோனியா மொழிக்கும் யுகோஸ்லாவியாவின் உத்தியோக மொழி என்ற பெருமை உண்டு. மேலும் வேற்றுமையைக் கூட்ட இரண்டு அரிச்சுவடிகள் இங்கு உபயோகத்தில் உள்ளன: லத்தீன் மற்றும் ஸ்லவோனிய அரிச்சுவடி.
இது ஏனென்றால், ஒவ்வொன்றும் அதன் சொந்த மொழியையும், பழக்க வழக்கங்களையும் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் கொண்ட பல சிறிய தேசங்கள் ஒருங்கிணைந்ததே உண்மையில் யுகோஸ்லாவியாவாக இருக்கிறது. என்றபோதிலும் தேசங்களின் இந்தக் கூட்டு ஒப்பிடுகையில், குறுகிய காலமே நிலைத்திருந்தது. ஏனென்றால் செர்பிய, குரோஷிய மற்றும் ஸ்லவோனிய ராஜ்யம் 1918-ல் தோன்றியபோதுதானே அவை நேசநாடுகளாயின. இது ஓர் அசெளகரியமான உறவாக இருந்தது. ஆனால் இரண்டாம் உலகப் போர் துவங்கும்வரை இது நிலைத்திருந்தது. அந்தப் போரின் சாம்பலிலிருந்துதானே யுகோஸ்லாவிய சோஷியலிஸ (சமதரும) கூட்டரசு குடியரசு உருவானது. ஆரம்பம் முதற்கொண்டே, யுகோஸ்லாவியா வேற்றுமைகள் நிறைந்ததாக இருந்திருக்கிறது. மேலுமாக கடந்த காலங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்திருந்த இரண்டு பெரிய சாம்ராஜ்யங்களின் கலாச்சார தடங்களை தாங்கியதாகவும்கூட இருக்கிறது: வடக்கே ஆஸ்டிரியா-ஹங்கேரியும் தெற்கே துருக்கிய சாம்ராஜ்யமும்.
சுவையுணர்வை இதமாக கிளறிவிட பல்சுவை
வேற்றுமைகள் என்பது இந்தத் தேசத்தின் உள்ளியல்பாகவே இருப்பதால், அசல் யுகோஸ்லாவிய பதார்த்தம் என்ற ஒன்றை காண எதிர்பார்க்க முடியாது. வடமேற்கில், நீங்கள் மத்திய ஐரோப்பிய உணவை அனுபவித்துச் சாப்பிடலாம். நடுப்பகுதியிலும் தென்கிழக்கிலும், துருக்கிய-கிழக்கத்திய அருஞ்சுவை உணவை சாப்பிடலாம். கரையோரப் பகுதியில் மீனும் நேர்த்தியான திராட்சரசமும் பரிமாறப்படுகிறது. என்றபோதிலும் ஒரு சில உணவுப் பொருட்கள் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பரிச்சயமானதாக இருக்கிறது. அநேகர் சேவாப்சீசீ கேட்டு வாங்குகிறார்கள். இது ஆசையூட்டும் நறுமணத்தைக் கொண்ட வறுக்கப்பட்ட காரசாரமான மாமிசமாகும். மேலுமாக, ப்ளம் என்ற பழத்திலிருந்து செய்யப்பட்ட ஷிலீவோவீட்சா என்ற பிரபலமான பிராந்தியும்கூட கிடைப்பதற்கு அரிதாக உள்ளது. தேசமுழுவதிலுமுள்ள உபசரிக்கும் குடும்பங்களில் உங்களுக்கு எப்போதும் டர்ஸ்கா கேஃபா என்ற கருப்பு காப்பி பரிமாறப்படும்—நண்பர்களின் கூட்டத்தில் கட்டாயமாகவே இது பரிமாறப்படுகிறது. ஃபில்ஜீன் என்றழைக்கப்படும் ஒரு சிறிய கோப்பையில் இது பரிமாறப்பட்டாலும், சம்பாஷணை முடியும் வரையாக அது மெதுமெதுவாக உறிஞ்சி குடிக்கப்படுகிறது.
மாறுபடுகின்ற மனோபாவங்கள்
யுகோஸ்லாவிய மக்கள் மனநிலையிலும், மனோபாவத்திலும்கூட வித்தியாசப்பட்டவர்களாக இருக்கிறார்கள். வடக்கே, மக்கள் மத்திய ஐரோப்பிய மக்களைப் போல இருக்கிறார்கள். அவர்கள் ஏறக்குறைய ஒதுங்கி வாழ்பவர்களாக, தங்கள் உறவுகளின் நெருக்கத்தை கட்டுப்படுத்தியவர்களாக, மற்றவர்களின் தனிமையை மதிக்கிறவர்களாக இருக்கிறார்கள். ஆனால் தெற்கேயுள்ளவர்கள், இந்த நடத்தையை உடன் மானிடரின் நலனில் அக்கறையின்மைக்கு அறிகுறியாக இருப்பதாகச் சொல்கிறார்கள். இதற்கு நேர் எதிர்மாறாக, அவர்களுடையது அசல் ஏட்ரியாடிக்-ஈஜியன் மக்களுக்குரிய மனோபாவமாக உள்ளது: இவர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறவர்களாக, நெருக்கமான உறவுகளை போற்றுகிறவர்களாக, ஒத்துழைப்பு தருகிறவர்களாக, சிலர் சொல்வது போல் அவர்கள் சம்பந்தப்பட்டில்லாத விஷயங்களிலும் தலையிடும் அளவுக்கு துடிப்பான ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்கள்!
உதாரணமாக, தெற்கே ஒருவர் பொதுவாக மாலை வேளைகளில் எந்த ஒரு காரணமுமின்றி தெருவில் ஜனக்கூட்டம் மேலும் கீழுமாக நடந்து கொண்டிருப்பதைக் காண்கிறார். இது கொர்சோ என்றழைக்கப்படுகிறது—இது தெருவில் ஓய்வுநேர சுற்றுலாவாகும், இங்கே ஒருவர் நிச்சயமாக தன் நண்பர்களை சந்திக்கக்கூடும் அல்லது புதிய நண்பர்களை உண்டுபண்ணக்கூடும். ஆட்கள் கும்பலாக தங்கள் வீடுகளுக்கு முன்னால் அல்லது தங்களுக்கு விருப்பமான கடைகளுக்கு முன்னால் உட்கார்ந்து அல்லது குந்தின நிலையில் அமர்ந்து கொண்டிருப்பதையும்கூட அவர் பார்க்கமுடியும். அந்நியர்கள் இந்தச் சுற்றுவட்டாரங்களில் எவர் கண்ணிலும் படாமல் கடந்து செல்ல முடியாது. ஏன், நீங்கள் ஒரு வீட்டை முதல் முறையாகச் சந்திக்கச் செல்கையில், பிள்ளைகளும் பெரியவர்களும் ஒன்றாகச் சேர்ந்து உங்களைச் சூழ்ந்து கொண்டு “நீங்கள் யார்?” “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” “உங்களுக்கு என்ன வேண்டும்?” போன்ற கேள்விகளைக் கேட்டு உங்களைத் திணறடித்துவிடுவார்கள். ஆனால் அடுத்த முறை நீங்கள் வரும்போது அந்தத் தெருவிலுள்ள அனைவருக்குமே நீங்கள் யார் என்பது தெரிந்திருக்கிறது!
மதசம்பந்தமான வேற்றுமைகள்
யெகோவாவின் சாட்சிகளுடைய வேலையின் மீது இது அக்கறையூட்டும் ஒரு பாதிப்பையுடையதாக இருக்கிறது. யெகோவாவின் சாட்சிகள் உலகம் முழுவதிலும் அவர்களுடைய வீட்டுக்கு வீடு சந்திப்புகளுக்காக அறியப்பட்டிருக்கிறார்கள். முதல் சந்திப்பு, அக்கம் பக்கத்திலுள்ளவர்களிடமிருந்து இத்தனை கவனத்தை ஈர்க்கும் இந்தத் தேசத்தில் இது ஒன்றும் குறைவாக இல்லை. மறுபடியுமாகச் சந்திக்கையில், சாட்சிகள் சுற்றுவட்டாரத்திலுள்ள அனைவரும் அவர்களைப் பற்றி பலமான அபிப்பிரயாயங்களை ஏற்படுத்திக் கொண்டிருப்பதை அநேகமான காண்கிறார்கள். சந்தேகத்திற்கிடமற்ற நம்பிக்கையான அபிப்பிரயாயங்கள் ஏற்பட்டுள்ள இடங்களில் அவர்கள் அனலான வரவேற்பைக் காண்கிறார்கள்.
யெகோவாவின் சாட்சிகள் அவர்களுடைய வேலையில் பல்வேறு மதநம்பிக்கைகளையுடைய அநேகரை சந்திக்கிறார்கள். செர்பிய ஆர்த்தடாக்ஸ் சர்ச், ரோமன் கத்தோலிக்க சர்ச், முகமதிய மதம், மற்றும் மக்கதோனிய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுகளுக்கு அதிகமான ஆதரவு இருப்பதாக சொல்லப்படுகிறது. மறுபடியுமாக இப்படிப்பட்ட வேற்றுமை, வரலாற்று சக்திகளுடைய விளைவாக இருக்கிறது. கிழக்கே கிரேக்க மிஷனரிமார்களும், மேற்கே பிராங்கோனிய மிஷனரிமார்களுமாகிய கிறிஸ்தவ மண்டல மிஷனரிமார்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் ஸ்லவிய மக்களை மதம் மாற்றினர். ஆனால் கிறிஸ்தவமண்டலத்தில் மேற்கத்திய ரோமன் கத்தோலிக்கர் என்றும் கிழக்கத்திய ஆத்தடாக்ஸ் சர்ச்சுகள் என்றும் பிளவு ஏற்பட்டபோது, ஸ்லவிய மக்கள் மத்தியிலும் இந்தப் பிரிவினை உண்டானது. இன்றுவரையாக யுகோஸ்லாவியாவின் வடமேற்கில் ரோமன் கத்தோலிக்க சமயமும் தென்கிழக்கே கிழக்கத்திய ஆத்தடாக்ஸ் விசுவாசமும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஏட்ரியாடிக்-ஈஜியனை துருக்கியர் படையெடுத்தபோது, இந்தத் தேசத்தில் முகமதிய நம்பிக்கையை அவர்கள் கொண்டுவந்தார்கள்.
யுகோஸ்லாவிய அரசாங்கம், பல்வேறு மதங்களின் சம்பந்தமாகவும் சகிப்புத்தன்மையுள்ள ஒரு நோக்கை கொண்டிருப்பது பாராட்டுக்குரியதாகும். விசேஷமாக யெகோவாவின் சாட்சிகள் ஒன்றாகச் சேர்ந்து சுயாதீனமுடன் வணங்க முடிவதைப் போற்றுகிறார்கள். சமீப ஆண்டுகளில் ஸ்லவோனிய பிராந்தியத்தில் அவர்கள் பொது மன்றங்களையும் உடற்பயிற்சிகூடங்களையும் அவர்களுடைய மாநாடுகளுக்காக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறார்கள். கவர்ச்சியூட்டும் வேற்றுமைகள் நிறைந்த இந்தத் தேசத்தில் மற்றவர்களோடு பைபிள் சத்தியங்களை பகிர்ந்து கொள்ள முடிவது குறித்து அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். (g88 9⁄8)
[பக்கம் 13-ன் வரைப்படம்/படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
இத்தாலி
ஆஸ்டிரியா
ஹங்கேரி
ரோமானியா
ஏட்ரியாடிக் கடல்
பெல்கிரேட்
யுகோஸ்லாவியா
பல்கேரியா
அல்பேனியா
கிரீஸ்
[படத்திற்கான நன்றி]
Mladinska knjiga; Turistička štampa
[பக்கம் 15-ன் படத்திற்கான நன்றி]
Mladinska knjiga; Turistička štampa