சுய சரிதை
என் பெற்றோரின் முன்மாதிரி என்னைப் பலப்படுத்தியது
யனெஸ் ரெக்கெல் சொன்னபடி
அது 1958-ம் வருடம். நானும் என் மனைவி ஸ்டன்க்காவும் யுகோஸ்லாவிய-ஆஸ்திரிய எல்லைப்பகுதியில் அமைந்துள்ள காரவாங்க்கன் ஆல்ப்ஸ் மலையில் இருந்தோம். ஆஸ்திரியாவுக்குத் தப்பியோட முயன்றுகொண்டிருந்தோம். அது ஆபத்தானதாய் இருந்தது, ஏனெனில் ஆயுதம் தரித்த யுகோஸ்லாவிய எல்லைப் பாதுகாப்புப் படையினர் படு உஷாராய் ரோந்து சுற்றிக்கொண்டிருந்தனர். நாங்கள் இருவரும் மலைமீது உயரஉயர ஏறிக்கொண்டே இருந்தோம், கடைசியில் செங்குத்தான ஒரு பாறையின் விளிம்பை அடைந்தோம். அந்த மலைத்தொடரின் ஆஸ்திரிய பகுதியை அப்போதுதான் முதன்முறையாக நானும் ஸ்டன்க்காவும் பார்த்தோம். பிறகு கிழக்கு நோக்கி நடக்க ஆரம்பித்தோம், பாறைகளும் கருங்கற்களும் கிடந்த கரடுமுரடான ஒரு சரிவை அடைந்தோம். அதன்பின், கையில் எடுத்துச் சென்றிருந்த தார்ப்பாயை எங்களைச் சுற்றிக் கட்டிக்கொண்டு அந்த மலைச்சரிவில் அப்படியே கீழ்நோக்கி சறுக்க ஆரம்பித்தோம், என்ன நடக்குமென்றே தெரியாமல்!
இப்படியொரு சூழ்நிலை எங்களுக்கு எப்படி ஏற்பட்டது? அதோடு, கஷ்ட காலங்களில் யெகோவாவுக்கு உண்மையோடு நிலைத்திருக்க என் பெற்றோரின் விசுவாசமிக்க உதாரணம் என்னை எப்படித் தூண்டியது? சொல்கிறேன், கேளுங்கள்.
நான் வளர்ந்தது ஸ்லோவேனியாவில்; இன்று இது மத்திய ஐரோப்பாவிலுள்ள ஒரு சிறிய நாடு. வடக்கே ஆஸ்திரியாவும், மேற்கே இத்தாலியும், தெற்கே குரோஷியாவும், கிழக்கே ஹங்கேரியுமாக ஐரோப்பிய ஆல்ப்ஸ் மலைத்தொடரில் அது அமைந்திருக்கிறது. ஆனால் என் அப்பா ஃப்ரேன்ட்ஸ் ரெக்கெலும், அம்மா ரோஸல்லியாவும் பிறந்த சமயத்தில் ஸ்லோவேனியா, ஆஸ்திரிய-ஹங்கேரி பேரரசின் பாகமாக இருந்தது. முதல் உலகப்போரின் முடிவிலோ செர்பியர், குரோஷியர், ஸ்லோவேனியர் ஆகியோரின் ராஜ்யம் என அழைக்கப்பட்ட ஒரு புதிய நாட்டின் பாகமாக அது ஆனது. 1929-ல், அதற்கு யுகோஸ்லாவியா என்று பெயரிடப்பட்டது, அதன் அர்த்தம் “தெற்கு ஸ்லாவியா” என்பதாகும். நான் அதே வருடத்தில் ஜனவரி 9-ம் தேதி, அழகிய ப்ளெட் ஏரிக்கு அருகே உள்ள போதோம் என்ற கிராமத்தின் எல்லைப்புறப் பகுதியில் பிறந்தேன்.
அம்மா, கத்தோலிக்க மதத்தில் ஊறிப்போன குடும்பத்தில் வளர்ந்தவர். அவருடைய சித்தப்பா ஒருவர் பாதிரி, மூன்று அத்தைமார்கள் கன்னிகாஸ்திரீகள். தனக்கென்று சொந்தமாக ஒரு பைபிளை வைத்துக்கொள்ள வேண்டும், அதைப் படிக்க வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும் என்றெல்லாம் அம்மாவுக்கு ஆசையோ ஆசை. ஆனால் அப்பாவுக்கு எந்த மதத்தின் மீதும் ஒரு நல்ல அபிப்பிராயம் இருக்கவில்லை. 1914-18-களின்போது நடந்த உலகப் போரில் மதத்தின் நடவடிக்கைகளைப் பார்த்து வெறுத்துப் போயிருந்தார்.
சத்தியத்தைக் கற்றுக்கொள்ளுதல்
உலகப் போர் முடிந்து கொஞ்ச நாட்களுக்குள், அம்மாவின் உறவினரான யனெஸ் ப்ரெயட்ஸ் என்பவரும் அவரது மனைவி ஆனக்காவும் பைபிள் மாணாக்கராக ஆனார்கள்; அப்போது யெகோவாவின் சாட்சிகள் அப்படித்தான் அழைக்கப்பட்டார்கள். அந்தச் சமயத்தில் அவர்கள் ஆஸ்திரியாவில் வசித்து வந்தார்கள். சுமார் 1936 முதல் ஆனக்கா பல முறை வீட்டுக்கு வந்து அம்மாவுடன் பேசினார். ஸ்லோவேனிய மொழியில் காவற்கோபுர பத்திரிகைகள், பைபிள் பிரசுரங்கள் ஆகியவற்றோடு ஒரு பைபிளையும் அம்மாவுக்குக் கொடுத்தார், அவற்றை அவர் விரைவிலேயே படித்து முடித்தார். கடைசியில், 1938-ல் ஆஸ்திரியாவை ஹிட்லர் கைப்பற்றியதால், யனெஸும் ஆனக்காவும் ஸ்லோவேனியாவுக்கே குடிமாறினார்கள். அவ்விருவரும் நன்கு படித்தவர்கள், யெகோவாமீது உண்மையான அன்பு வைத்திருந்தவர்கள், வெகுபுத்திசாலிகள். அம்மாவிடம் பைபிள் சத்தியங்களைப் பற்றி அடிக்கடி பேசி வந்தார்கள், பலன்? யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்க அம்மாவின் மனம் தூண்டப்பட்டது. 1938-ல் முழுக்காட்டப்பட்டார்.
அம்மா, கிறிஸ்மஸ் போன்ற வேதப்பூர்வமற்ற பண்டிகைகளை, பழக்கவழக்கங்களை நிறுத்தியபோதும், இரத்தத்தினாலான சாஸேஜ் சாப்பிடுவதை நிறுத்தியபோதும், முக்கியமாக வீட்டிலிருந்த எல்லா உருவப்படங்களையும் எடுத்துச் சுட்டெரித்தபோதும் அக்கம்பக்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சீக்கிரத்திலேயே எதிர்ப்பு கிளம்ப ஆரம்பித்தது. கன்னிகாஸ்திரீகளாக இருந்த அம்மாவின் அத்தைமார், கடிதம் மேல் கடிதம் எழுதி, மரியாளிடமும் கத்தோலிக்க சர்ச்சிடமும் அவரைத் திருப்புவதற்கு முயன்றார்கள். ஆனால், சில பைபிள் கேள்விகளுக்குப் பதில் கேட்டு அம்மா கடிதம் எழுதியபோது, அவர்களிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை. அத்தைமார் போதாதென்று, அம்மாவின் அப்பாவும் அவரைப் பலமாக எதிர்க்க ஆரம்பித்தார். அவர் மோசமானவர் அல்ல, ஆனால் உறவினரும் சமுதாயத்தினரும் அவரை மூட்டிவிட்டதால்தான் அப்படி எதிர்த்தார். இதன் காரணமாக, அம்மா வைத்திருந்த பைபிள் பிரசுரங்களை பல முறை அவர் நாசப்படுத்தினார், இருந்தாலும் அம்மாவுடைய பைபிளை மட்டும் தொடவே இல்லை. திரும்பவும் சர்ச்சுக்கு வந்துவிடச்சொல்லி மண்டியிட்டுக் கெஞ்சிப் பார்த்தார். கத்தியைக் காட்டி மிரட்டியும் பார்த்தார். ஆனால், தாத்தா மறுபடியும் அப்படி நடந்துகொண்டால், தான் சும்மா இருக்கப் போவதில்லை என அவரிடம் என் அப்பா உறுதியாகச் சொல்லிவிட்டார்.
பைபிள் படிப்பதற்கும் மத நம்பிக்கைகளை தன் இஷ்டப்படி தேர்ந்தெடுப்பதற்கும் அம்மாவுக்கு இருந்த உரிமையை அப்பா தொடர்ந்து ஆதரித்தார். 1946-ல், அவரும் முழுக்காட்டப்பட்டார். எதிர்ப்பின் மத்தியிலும் பயப்படாமல் சத்தியத்தில் நிலைத்திருக்க அம்மாவை யெகோவா எப்படியெல்லாம் பலப்படுத்தினார், அவருடைய விசுவாசத்திற்காக எப்படியெல்லாம் அவரை ஆசீர்வதித்தார் என்பதைப் பார்த்தது யெகோவாவுடன் பலமான உறவை வளர்த்துக்கொள்ள என்னை மிகவும் தூண்டியது. பைபிளிலிருந்தும் பைபிள் பிரசுரங்களிலிருந்தும் அம்மா எனக்குச் சப்தமாக வாசித்துக் காண்பிப்பார், அதிலிருந்தும்கூட நான் பெருமளவு நன்மை அடைந்தேன்.
அம்மா தன்னுடைய தங்கை மரியா ரெப்பெவிடமும் மணிக்கணக்காக பைபிளைப் பற்றிப் பல முறை பேசினார்; கடைசியில், 1942 ஜூலை மத்திபத்தில் நானும் மரியா சித்தியும் ஒரே நாளில் முழுக்காட்டுதல் பெற்றோம். அந்தச் சமயத்தில் சுருக்கமான பேச்சைக் கொடுக்க சகோதரர் ஒருவர் வந்திருந்தார், வீட்டிலிருந்த ஒரு பெரிய மரத்தொட்டியில் நாங்கள் முழுக்காட்டப்பட்டோம்.
இரண்டாம் உலகப் போரின்போது கட்டாய உழைப்பு
1942-ல், இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்தபோது, ஜெர்மனியும் இத்தாலியும் ஸ்லோவேனியாவைக் கைப்பற்றி, தங்களுக்குள் பிரித்துக்கொண்டன; ஹங்கேரிக்கும் அதில் பங்கு கிடைத்தது. அப்பாவும் அம்மாவும் ஃபோக்ஸ்ப்யுன்ட் என்றழைக்கப்பட்ட நாசிக்களின் அமைப்பில் சேர மறுத்தார்கள். ஸ்கூலில், “ஹைல் ஹிட்லர்” என்று சொல்ல நான் மறுத்தேன். எதிர்பார்த்தபடியே, என் டீச்சர் அதை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
பவேரியாவிலுள்ள ஹுட்டென்பாக் என்ற கிராமத்திற்கு அருகே இருந்த ஓர் அரணுக்குச் செல்லும் ஓர் இரயிலில் நாங்கள் ஏற்றப்பட்டோம்; அந்த இடம் கட்டாய உழைப்பு முகாமாகப் பயன்படுத்தப்பட்டது. அங்கு ரொட்டி தயாரிக்கும் தொழில் செய்துவந்த ஒரு குடும்பத்தாருடன் தங்கி வேலை பார்க்க அப்பா எனக்கு ஏற்பாடு செய்துகொடுத்தார். இந்தச் சமயத்தில், நானும் ரொட்டி தயாரிக்கக் கற்றுக்கொண்டேன்; இப்படிக் கற்றுக்கொண்டது பிற்பாடு எனக்கு ரொம்பவும் உதவியாக இருந்தது. காலப்போக்கில், எங்கள் குடும்பத்தில் மீதியுள்ளவர்கள் (மரியா சித்தியும் அவருடைய குடும்பம் உட்பட) எல்லோருமே குன்ஸன்ஹௌஸன் முகாமிற்கு மாற்றப்பட்டார்கள்.
போர் முடிவடைந்தபோது, ஒரு கோஷ்டியோடு சேர்ந்து என் பெற்றோர் இருந்த இடத்திற்கு பயணப்பட இருந்தேன். ஆனால் கிளம்புவதற்கு முந்தினநாள் மாலை, திடுதிப்பென்று அப்பாவே வந்துவிட்டார். நான் மட்டும் அந்தக் கோஷ்டியோடு சேர்ந்து சென்றிருந்தால் எனக்கு என்ன ஆகியிருக்குமென்றே தெரியாது, காரணம் அந்தக் கோஷ்டியினர் சந்தேகத்திற்குரியவர்களாய் இருந்தார்கள். யெகோவா என் பெற்றோரைப் பயன்படுத்தி, என்னைப் பாதுகாத்து பயிற்சி அளித்ததன் மூலம் அவருடைய கரிசனையை மீண்டும் உணர்ந்தேன். எங்கள் குடும்பத்தாரைச் சந்திப்பதற்காக நானும் அப்பாவும் மூன்று நாட்கள் நடந்தே சென்றோம். ஜூன் 1945-க்குள் நாங்கள் எல்லோரும் வீடு திரும்பினோம்.
போர் முடிந்த பிறகு, ஜனாதிபதி யோசீப் ப்ரோஸ் டீட்டோவின் தலைமையின் கீழ், கம்யூனிஸ்டுகள் யுகோஸ்லாவியாவில் ஆட்சி அமைத்தார்கள். இதனால், யெகோவாவின் சாட்சிகளுடைய நிலைமை தொடர்ந்து கஷ்டமாகவே இருந்தது.
1948-ல், ஆஸ்திரியாவிலிருந்து வந்திருந்த ஒரு சகோதரரை எங்கள் வீட்டிற்குச் சாப்பிட அழைத்தோம். அந்தச் சகோதரர் சென்ற இடங்களுக்கெல்லாம் போலீசாரும் பின்னாலேயே சென்று, அவர் சந்தித்த சகோதரர்களைக் கைதுசெய்தார்கள். அவரை உபசரித்ததற்காகவும் அவரைப் பற்றி போலீசிடம் தகவல் தெரிவிக்காததற்காகவும் அப்பாகூட கைதுசெய்யப்பட்டார், பின்னர் அதற்காக இரண்டு வருட சிறைதண்டனையும் பெற்றார். அந்தச் சமயத்தில் அம்மாவுக்கு ரொம்பவுமே கஷ்டமான சூழ்நிலை, அப்பா இல்லாததால் மட்டுமல்ல, நானும் என் தம்பியும் சீக்கிரத்திலேயே நடுநிலை வகிப்பு காரணமாகப் பிரச்சினையை எதிர்ப்பட இருந்ததாலும்கூட.
மாசிடோனியாவில் சிறைவாசம்
நவம்பர் 1949-ல், இராணுவத்தில் சேரச்சொல்லி எனக்கு அழைப்பு வந்தது. மனசாட்சிக்கு விரோதமாய் என்னால் இராணுவத்தில் சேவை செய்ய முடியாது என்பதை நேரில் விளக்குவதற்காக அங்கு போனேன். ஆனால் அந்த அதிகாரிகள் நான் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கவே இல்லை, இராணுவத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டவர்ளோடு என்னையும் யுகோஸ்லாவியாவின் மறுகோடியிலுள்ள மாசிடோனியாவுக்கு இரயிலேற்றினார்கள்.
மூன்று வருடங்களுக்கு குடும்பத்தாருடனும் சகோதரர்களுடனும் என்னால் தொடர்புகொள்ள முடியாமல் போனது; அதோடு என்னிடம் எந்தப் பிரசுரமும் இருக்கவில்லை, பைபிளும்கூட இருக்கவில்லை. ரொம்ப கஷ்டமாக இருந்தது. யெகோவாவைப் பற்றியும் அவருடைய குமாரனான இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பற்றியும் தியானித்ததுதான் சோர்ந்துபோகாமல் இருக்க எனக்கு உதவியது. அதோடு, என் பெற்றோரின் முன்மாதிரியும் என்னைப் பலப்படுத்தியது. அதுமட்டுமல்ல, சதா ஜெபம் செய்ததும் மனமுடைந்து போகாதபடி எனக்குப் பலமூட்டியது.
கடைசியில், ஸ்கோப்ஜி நகரத்திற்கு அருகே உள்ள இட்ரிஸோவோ என்ற புறநகர் பகுதியிலிருந்த சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டேன். அந்தச் சிறைச்சாலையில், கைதிகள் வெவ்வேறு வேலைகளிலும் கைத்தொழில்களிலும் ஈடுபட்டார்கள். ஆரம்பத்தில் சுத்தம் செய்பவனாகவும் அலுவலகங்களுக்கு இடையே ‘கூரியராகவும்’ வேலை பார்த்தேன். முன்னர் இரகசியப் போலீசாக இருந்த ஒரு கைதி மட்டும் என்னை அடிக்கடி வம்புக்கு இழுத்தான், ஆனாலும் காவலாளிகள், கைதிகள், சிறைச்சாலை மானேஜர் என அங்கிருந்த மற்ற எல்லோருடனும் நான் சுமுகமாகவே பழகினேன்.
சிறைச்சாலை பேக்கரிக்கு ரொட்டி தயாரிக்க ஒருவர் தேவைப்படுகிறார் எனப் பிற்பாடு தெரிந்துகொண்டேன். அதன்பின் சில நாட்கள் கழித்து, அட்டெண்டன்ஸ் எடுப்பதற்காக சிறைச்சாலை மானேஜர் வந்திருந்தார். அப்போது, வரிசையிலிருந்த கைதிகள் ஒவ்வொருவரையும் தாண்டி கடைசியில் என் எதிரே வந்து நின்றார்; நின்றதும், “நீ ஒரு பேக்கரா?” என்று கேட்டார். அதற்கு “ஆமாம், சார்” என்றேன். உடனே, “நாளைக்கு காலையில் பேக்கரிக்குப் போய் வேலை செய்” என்றார். என்னிடம் அடாவடித்தனம் செய்த அந்தக் கைதி அடிக்கொருதரம் பேக்கரி வழியாகப் போய்வந்தான், ஆனால் இனிமேலும் அவனால் ஒன்றுமே செய்ய முடியாமல்போனது. 1950 பிப்ரவரி மாதத்திலிருந்து ஜூலை வரையாக அங்குதான் வேலை பார்த்தேன்.
பிறகு, மாசிடோனியாவுக்குத் தெற்கே ப்ரெஸ்பா என்ற ஏரிக்கு அருகே இருந்த வோல்கோடெரி என்ற இராணுவக் குடியிருப்புப் பகுதிக்கு மாற்றப்பட்டேன். அதன் பக்கத்து ஊரான ஓட்டெஷோவோவிலிருந்து என்னால் வீட்டுக்குக் கடிதம் எழுத முடிந்தது. அங்கு மற்ற கைதிகளோடு சேர்ந்து சாலை அமைக்கும் வேலையில் ஈடுபட்டேன், ஆனால் பெரும்பாலான நேரம் பேக்கரியில்தான் வேலை செய்தேன்; அங்கு வேலை செய்ததால் நிறைய விஷயங்கள் எனக்கு அனுகூலமாக அமைந்தன. 1952 நவம்பரில் அந்தச் சிறையிலிருந்து விடுதலையானேன்.
போதோம் கிராமத்தைவிட்டு நான் வந்த பிறகு, அங்கு ஒரு சபை உருவாகியிருந்தது. தொடக்கத்தில், ஸ்போட்னயெ கோர்யெ என்ற இடத்திலிருந்த ஒரு கெஸ்ட் ஹவுஸில் சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. பிற்பாடு, எங்கள் வீட்டிலேயே கூட்டங்களை நடத்த அப்பா ஓர் அறையை ஒதுக்கிக்கொடுத்தார். மாசிடோனியாவிலிருந்து நான் திரும்பி வந்தபோது அந்தச் சபையோடு சந்தோஷமாகக் கூட்டுறவுகொண்டேன். சிறைக்குப் போவதற்கு முன் ஸ்டன்க்கா என்ற பெண் எனக்கு அறிமுகமாகியிருந்தாள்; இப்போது அவளுடன் மீண்டும் பழக ஆரம்பித்தேன். ஏப்ரல் 24, 1954-ல் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். ஆனால், எனக்குக் கிடைத்த அந்தக் கொஞ்சநாள் சுதந்திரம் சீக்கிரத்திலேயே பறிபோனது.
மரிபோர் ஊரில் சிறைவாசம்
செப்டம்பர் 1954-ல், இராணுவத்தில் சேரச்சொல்லி மீண்டும் அழைக்கப்பட்டேன். இந்த முறை மறுத்தபோது, மூன்றரை ஆண்டுகளுக்குச் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, ஸ்லோவேனியாவின் கிழக்குக் கோடியிலுள்ள மரிபோர் என்ற இடத்திலுள்ள சிறைக்கு அனுப்பப்பட்டேன். அங்கு சென்ற மாத்திரத்தில், சில பேப்பர்களையும் பென்சில்களையும் வாங்கிக்கொண்டேன். பைபிள் வசனங்கள், காவற்கோபுரத்தில் வெளிவந்திருந்த மேற்கோள்கள், கிறிஸ்தவப் பிரசுரங்களிலுள்ள கருத்துகள் என ஞாபகத்திற்கு வந்த எல்லாவற்றையும் ஒவ்வொரு நாளும் எழுத ஆரம்பித்தேன். எழுதியதையெல்லாம் வாசித்த பிறகு, ஞாபகம் வரவர இன்னும் நிறைய குறிப்புகளை தொடர்ந்து எழுதிக்கொண்டே வந்து, அதை ஒரு புத்தகமாக்கினேன். சிறைவாசம் முடிவடைந்தபோது, என் புத்தகமும் முடிந்தது. நான் இப்படி எழுதியது சத்தியத்தின் மீது என் மனதை ஒருமுகப்படுத்துவதற்கும் ஆன்மீக ரீதியில் தொடர்ந்து பலமாக இருப்பதற்கும் எனக்கு உதவியது. ஜெபமும் தியானமும்கூட என் ஆன்மீக பலத்திற்கு இன்றியமையாதவையாக இருந்தன, சத்தியத்தை இன்னுமதிக தைரியத்துடன் மற்றவர்களுக்குச் சொல்ல கைகொடுத்தன.
அச்சமயத்தில், மாதம் ஒரு முறை எனக்கு ஒரு லெட்டர் வருவதற்கு அனுமதி இருந்தது, அதேபோல் மாதம் ஒரு முறை யாராவது ஒருவர் என்னை 15 நிமிடம் சந்திக்கவும் அனுமதி இருந்தது. அதனால் ஸ்டன்க்கா இரா முழுக்க இரயில் பிரயாணம் செய்து அதிகாலையிலேயே சிறைக்கு வந்து என்னைச் சந்திப்பாள், அப்போதுதான் அவளால் அதே நாளில் வீடு திரும்ப முடியும். அவள் இப்படி ஒவ்வொரு முறையும் என்னை வந்து சந்தித்தது மனதிற்கு ரொம்பவுமே தெம்பாக இருந்தது. அதன்பின், எப்படியாவது ஒரு பைபிளைப் பெற வேண்டுமென ஒரு திட்டம் போட்டேன். ஸ்டன்க்காவும் நானும் ஒரு டேபிளில் எதிரெதிரே உட்கார்ந்திருந்தோம், எங்களைக் கண்காணிக்க ஒரு காவலாளி நியமிக்கப்பட்டிருந்தார். அந்தக் காவலாளி வேறெங்கோ பார்த்துக்கொண்டிருந்தபோது, சட்டென ஸ்டன்க்காவின் ஹான்ட்-பேகிற்குள் ஒரு கடிதத்தைப் போட்டேன்; அடுத்த முறை அவள் வரும்போது பேகில் ஒரு பைபிளை எடுத்து வருமாறு அதில் எழுதியிருந்தேன்.
பைபிளை அப்படி எடுத்துக்கொண்டு போவது மிகமிக ஆபத்தென்று ஸ்டன்க்காவும் என் பெற்றோரும் நினைத்ததால், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தை மட்டும் பிரித்தெடுத்து, அதன் பக்கங்களைச் சில பன்களுக்குள் வைத்துக் கொடுத்தார்கள். எனக்கு மிகவும் தேவையாயிருந்த பைபிள் இப்படித்தான் எனக்குக் கிடைத்தது. காவற்கோபுர பிரதிகளும் இதே முறையில் எனக்குக் கிடைத்தன, அவற்றை ஸ்டன்க்கா கைப்படவே எழுதியிருந்தாள்; அவற்றைப் பெற்றுக்கொண்டதும் உடனடியாக என் கைப்பட ஒரு பிரதியை எடுத்துக்கொண்டு அவள் கொடுத்தவற்றை அழித்துவிடுவேன், காரணம், அவை எங்கிருந்து எனக்குக் கிடைத்தனவென்று யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக.
நான் தொடர்ந்து சாட்சி கொடுத்து வந்ததால், நிச்சயம் ஒருநாள் மாட்டிக்கொள்ளப் போகிறேன் என சக கைதிகள் சொல்லி வந்தார்கள். ஒருசமயம், சக கைதி ஒருவனோடு ரொம்ப சுவாரஸ்யமாக பைபிளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது பூட்டுத் திறக்கிற சத்தம் கேட்டது, ஒரு காவலாளி உள்ளே வந்து நின்றார். இனி அவ்வளவுதான், தனிச்சிறையிலே என்னைத் தள்ளப்போகிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் அவர் அந்த எண்ணத்துடன் அங்கு வரவில்லை. நாங்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டதால், தானும் அதைக் கேட்பதற்காக வந்திருந்தார். தான் கேட்ட கேள்விகளுக்குப் பதில்கள் கிடைத்த திருப்தியில், அங்கிருந்து கிளம்பி சிறைக்கதவைப் பூட்டிவிட்டுச் சென்றுவிட்டார்.
தண்டனைக்காலம் முடிவடையவிருந்த கடைசி மாதத்தில், கைதிகளைச் சீர்திருத்தும் பொறுப்பிலிருந்த ஒரு கமிஷனர் என்னைப் பாராட்டினார், சத்தியத்தின் சார்பில் திடமான நிலைநிற்கை எடுத்ததற்காக! யெகோவாவின் பெயரை அறிவிப்பதில் நான் எடுத்த முயற்சிகளுக்குக் கிடைத்த நல்ல பலனாகவே அதை நினைத்தேன். 1958 மே மாதம், மீண்டும் விடுதலையானேன்.
ஆஸ்திரியாவுக்குத் தப்பித்தல், பிறகு ஆஸ்திரேலியாவுக்கு
கொஞ்ச காலமாகவே உடம்பு சரியில்லாமல் இருந்த என் அம்மா, 1958 ஆகஸ்ட் மாதத்தில் கண்ணை மூடினார். அதற்கடுத்த மாதம், இராணுவத்தில் சேரச்சொல்லி மூன்றாவது முறையாக எனக்கு அழைப்பு வந்தது. அன்று சாயங்காலமே நானும் ஸ்டன்க்காவும் நாட்டின் எல்லையைக் கடந்துசெல்வதென்ற மிக முக்கியமான தீர்மானத்தை எடுத்தோம். அப்போதுதான் ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் எல்லையைக் கடந்தோம். யாரிடமும் சொல்லாமல், இரண்டு தோள் பைகளையும், ஒரு தார்ப்பாயையும் எடுத்துக்கொண்டோம்; பிறகு ஜன்னல் வழியாகக் குதித்து, ஸ்டோல் மலைக்கு மேற்கே உள்ள ஆஸ்திரிய எல்லைப்பகுதியை நோக்கி நடையைக்கட்டினோம். எங்களுக்குக் கொஞ்சம் விடுதலை அவசியமென்று யெகோவா அறிந்து எங்களுக்காகவே ஒரு வழியை ஏற்பாடு செய்துகொடுத்ததைப் போல் உணர்ந்தோம்.
ஆஸ்திரிய அதிகாரிகள், ஸால்ஸ்பர்க் அருகே இருந்த அகதிகள் முகாமிற்கு எங்களை அனுப்பி வைத்தார்கள். ஆறு மாதங்கள் அங்கு தங்கியிருந்த சமயத்தில், அந்த ஊரிலிருந்த யெகோவாவின் சாட்சிகளோடுதான் நாங்கள் எப்போதும் இருந்தோம்; அதனால் கொஞ்ச நேரம் மட்டுமே முகாமில் செலவிட்டோம். முகாமிலிருந்த மற்றவர்களுக்கு ஒரே ஆச்சரியம், அவ்வளவு சீக்கிரம் எப்படி எங்களுக்கு நண்பர்கள் கிடைத்தார்களென்று! இந்தச் சமயத்தில்தான் எங்கள் வாழ்க்கையிலேயே முதன்முதலாக ஒரு மாநாட்டில் கலந்துகொண்டோம். அதுமட்டுமல்ல, முதன்முதலில் எந்தத் தடையுமில்லாமல் வீடு வீடாகச் சென்றும் பிரசங்கித்தோம். ஆனால், அந்த அன்பான நண்பர்களை விட்டுப்பிரிவதற்கான சமயம் வந்தபோது, மனதிற்கு ரொம்பவுமே வேதனையாக இருந்தது.
நாங்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு ஆஸ்திரிய அதிகாரிகள் ஏற்பாடு செய்துகொடுத்தார்கள். அவ்வளவு தூரம் செல்வோமென நாங்கள் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. இத்தாலியிலுள்ள ஜினோவாவுக்கு இரயிலில் பயணித்தோம், அதன்பின் ஆஸ்திரேலியாவுக்குக் கப்பலேறினோம். கடைசியில், நியூ சௌத் வேல்ஸில் உள்ள வோலோங்காங் நகரில் குடியேறினோம். இங்கு, 1965 மார்ச் 30-ம் தேதி எங்கள் மகன் ஃபிலிப் பிறந்தான்.
நாங்கள் ஆஸ்திரேலியாவில் வசிப்பதால், யுகோஸ்லாவியா என்று முன்னர் அழைக்கப்பட்ட இடங்களிலிருந்து வருகிறவர்களிடம் பிரசங்கிக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைப்பதோடு, ஊழியத்தின் வேறு பல அம்சங்களிலும் எங்களால் பங்குகொள்ள முடிகிறது. ஐக்கியப்பட்ட குடும்பமாக யெகோவாவுக்குச் சேவை செய்யும் ஆசீர்வாதம் கிடைத்ததற்காகவும், வேறுபல ஆசீர்வாதங்களுக்காகவும் எங்கள் மனம் நன்றியால் நிரம்பிவழிகிறது. ஃபிலிப்பும் அவனது மனைவி சூஸீயும் ஆஸ்திரேலியாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் கிளை அலுவலகத்தில் சேவை செய்கிற பாக்கியத்தைப் பெற்றிருக்கிறார்கள்; ஸ்லோவேனியாவிலுள்ள கிளை அலுவலகத்தில் இரண்டு வருடம் சேவை செய்கிற வாய்ப்பையும்கூட பெற்றிருந்தார்கள்.
வயதாவதால் வருகிற கஷ்டங்கள், உடல் உபாதைகள் என ஒரு பக்கம் இருந்தாலும், நானும் என் மனைவியும் யெகோவாவுக்கு இன்னமும் சந்தோஷமாகச் சேவை செய்து வருகிறோம். என் பெற்றோரின் அருமையான முன்மாதிரிக்கு நான் மிகவும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்! “நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்ன வார்த்தைகளுக்கு இசைவாக நடக்க அவர்களுடைய முன்மாதிரி என்னை எப்போதும் பலப்படுத்தி வருகிறது.—ரோமர் 12:12.
[பக்கம் 16, 17-ன் படம்]
1920-களின் இறுதியில் என் பெற்றோர்
[பக்கம் 17-ன் படம்]
தனக்குச் சத்தியத்தைக் கற்றுக்கொடுத்த ஆனக்காவுடன் வலது கோடியில் அம்மா
[பக்கம் 18-ன் படம்]
என் மனைவி ஸ்டன்க்காவுடன், மணமுடித்த கொஞ்ச நாட்களுக்குள்
[பக்கம் 19-ன் படம்]
1955-ல் எங்கள் வீட்டில் கூடிவந்த சபை
[பக்கம் 20-ன் படம்]
என் மனைவி, மகன் ஃபிலிப், அவனுடைய மனைவி சூஸி ஆகியோருடன்