கிழக்கு ஐரோப்பா ஒரு சமய மறுமலர்ச்சி?
கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் கடந்த பல பத்தாண்டுகளில் பேச்சுரிமையின் அடக்குமுறை மதத்தின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை உட்படுத்தியிருக்கிறது. நாத்தீகம் சுறுசுறுப்பாக பிரசங்கிக்கப்பட்டது. அநேக சுற்றுலாப் பயணிகள் லெனின்கிராட்டுக்குச் சென்று காண்பது போன்று ஒரு சில கத்தீட்ரல்களும் சர்ச்சுகளும் நாத்தீக அருங்காட்சியகங்களாக மாற்றப்பட்டன. மத குருவாக செயலாற்றும் எவரும் அப்போதைய ஆட்சியின் கைப்பாவையாக ஆனார்கள். 1967-ல், துறவிமடங்கள், சர்ச்சுகள், மசூதிகள் போன்ற தொழுகையிடங்கள் அனைத்தும் முறைப்படி மூடப்பட்டதால், அல்பேனியா, டிரானா வானொலியினால், “உலகின் முதல் நாத்தீக நாடு” என்பதாகவும்கூட அறிவிக்கப்பட்டது.
இப்பொழுது, கிழக்கு ஐரோப்பாவில் எல்லா இடங்களிலும், சுயாதீனம் வசந்த கால மலர்களைப் போல மலர்ந்து கொண்டிருப்பதால், மதத்துக்கு என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது? ஃபிரெஞ்சு எழுத்தாளர் ஜீன்-ஃபிரான்காய்ஸ் கான் எழுதிய வண்ணமே: “அடக்குமுறையினால் தாக்கப்படும் மதம் ஒடுக்குதலினால் தாக்கப்படும் தேசத்தோடு செயலில் இணைந்துவிடக்கூடும். அது ஈரானில் நேற்று சம்பவித்தது. இன்று அது சோவியத் அஸர்பேஜனில் சம்பவிக்கிறது. நாளை அது ரஷ்யா முழுவதிலும் காட்டுத் தீயைப் போல பரவக்கூடும்.” இப்பொழுதும் கூட சில மதங்கள் தேசீய இலட்சியங்களோடும் விருப்பங்களோடும் தங்களை ஒன்றுசேர்த்துக்கொண்டு, அரசியல் எதிர்ப்புக்கு உதவும் முக்கிய சாதனங்களில் ஒன்றாக மாறி, அவர்களுடைய கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் குருக்கள் மற்றும் லூதரன் பாதிரிமார்களின் பிரசன்னத்தினால் அதற்கு புனிதத்தன்மையூட்டுகின்றன.
ஆகவே, புதிய குடியாட்சி சூழ்நிலையில் மத சுயாதீனம் எவ்விதமாக இருக்கிறது?
காரியங்கள் எவ்விதமாக மாறிவிட்டிருக்கின்றன!
கிழக்கு ஐரோப்பாவின் முக்கிய மதங்கள், விசேஷமாக கத்தோலிக்க சர்ச், புதிய அரசாங்கங்களிடமிருந்து சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்றுக்கொள்ள உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது. உதாரணமாக, “பிப்ரவரி 9-ம் தேதி [1990] போப்பின் அரசவைக்கும் ஹங்கேரி குடியரசுக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று கையொப்பமானது” என்பதாக எல் ஆஸர்வேட்டோர் ரோமானோ அறிவிப்பு செய்தது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு தரப்பினரும் அரசாங்க செயலாட்சி உறவுகளை மீண்டும் நிலைநாட்டிக் கொள்ள ஒப்புக்கொண்டனர். (வத்திக்கன் தனிப்பட்ட தனியுரிமையுடைய ஆட்சியாக கருதப்படுகிறது.)
1946-ல் கீழடக்கி வைக்கப்பட்ட, யூக்ரேனியன் வழிபாட்டு முறையின் கத்தோலிக்க சர்ச், சட்டப்படியான உரிமையை கோரியிருப்பதாகவும், “யூக்ரேனில் சர்ச் வாழ்க்கையைப் பற்றிய நடைமுறையான கேள்விகளைக் குறித்து ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சோடும் அரசாங்கத்தோடும்” பேச்சு வார்த்தைக்குள் பிரவேசித்திருப்பதாகவும் வத்திக்கனிலிருந்து வரும் மற்றொரு அறிக்கை குறிப்பிடுகிறது.
1990, ஏப்ரலில் போப், செக்கோஸ்லோவாக்கியாவுக்கு சென்றார், ப்ராக் விமான நிலையத்தில் “குடியரசு தலைவர் திரு. வாக்லவ் ஹேவல் . . . உட்பட சர்ச் மற்றும் அரசாங்க பிரமுகர்களால்” வரவேற்பளிக்கப்பட்டார். (எல் ஆஸர்வேட்டோர் ரோமானோ) புதிய ஒரு சமய சூழ்நிலை அங்கும்கூட உருவாகிக் கொண்டிருக்கிறது.
போலந்தில் கத்தோலிக்க சர்ச் எப்போதுமே கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு சக்தியாக இருந்திருக்கிறது. இப்பொழுது, புதிதாக கிடைத்துள்ள சுதந்திரத்தின் காரணமாக, அது தன் தசைகளை முறுக்கிக்கொண்டு, பள்ளிகளில் மத பாடங்களை மீண்டும் அறிமுகப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒரு பாதிரியார் சொன்னார்: “பள்ளிகள் தேசத்தின் உடைமைகளாகும். போலந்து நாடு 90 சதவீதத்துக்கும் மேல் கத்தோலிக்கர்களால் ஆனது. . . . மற்ற மதங்களுக்கு தகுதியான மரியாதையோடு, பள்ளியில் மத போதனை கொடுக்கப்படுவது ஆசிரியர்கள், மற்றும் . . . அதிகாரிகளின் அதிகாரத்தை மீட்டுத்தருவதாக இருக்கும், ஏனென்றால் அது மனிதனின் நன்னெறி சார்ந்த ஆதாரத்தோடு தொடர்புடையதாய் இருக்கிறது.”
ருமேனியாவிலுள்ள ஆர்த்தடாக்ஸ் சர்ச்சைப் பற்றிய ஓர் அறிக்கை சொல்வதாவது: “ஆட்சிமுறையோடு [சீஸஸ்கு] உடனிணைந்து செயல்பட்ட வட்டார முதல்வரும் அநேக ஆயர்களும் ராஜினாமா செய்ய வற்புறுத்தப்பட்டனர். சர்ச்சுக்கு மீண்டும் உயிர்ப்பூட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. முன்னாள் அவிசுவாசிகள் அநேகர் மதத்தில் ஈடுபாடு கொள்ள ஆரம்பித்து உள்ளூர் சர்ச்சுகளை நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள் . . . 40 ஆண்டுகளுக்கு முன்பாக கலைக்கப்படும்படி வற்புறுத்தப்பட்ட ரோமானியன் பைசான்டீன் கத்தோலிக்க சர்ச், மறுபடியுமாக சீராக அமைத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது.”—ஆர்த்தடாக்ஸ் யூனிட்டி, ஜூலை 1990.
அல்பேனியாவில் மாற்றங்கள்
செய்தி அறிக்கைகளின்படி, யூகோஸ்லாவியாவுக்கும் கிரீஸுக்கும் இடையே ஏட்ரியாட்டிக் கரையின் மீது ஒடுங்கியிருக்கும் 30,25,000 குடிமக்களைக் கொண்ட சிறிய மலைப்பாங்கான தேசமாகிய அல்பேனியாவில் வியப்புத் தரும் மாற்றங்கள் மெதுவாக ஏற்பட்டு வருகின்றன. ஜெர்மன் செய்தித்தாள் டை வெல்ட் பின்வருமாறு அறிக்கை செய்தது: “ஐரோப்பாவில் பழம்பாணி கம்யூனிஸத்தின் கடைசி கோட்டையான அல்பேனியாவில், மக்கள்” மேல் நாட்டு தூதரகங்களில் தஞ்சம் புகுவதன் மூலம் “தங்கள் கால்களால் ஓட்டுப் போட ஆரம்பித்திருக்கிறார்கள்.” இங்கிருந்து இவர்கள் பின்பு இத்தாலி, ஜெர்மனி, இன்னும் மற்ற நாடுகளுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டனர்.
அறிக்கை தொடர்ந்து சொல்கிறது: “மே, 1990-ல் அல்பேனியர்களுக்கு பாஸ்போர்ட்டுகளும் மத ஈடுபாட்டை தடை செய்யும் சட்டங்களின் ஒழிப்பும் வாக்களிக்கப்பட்டது.” (1990, ஜூலை 15, தி ஜெர்மன் டிரிப்யூனிலிருந்து மேற்கோள்) வரலாற்று பேராசிரியர் டென்னிஸ் R. ஜான்ஸ் எழுதிய வண்ணமே: “முழுமையான மதசார்பு நீக்கத்திற்கான நீண்ட கடினமான போரட்டம் ஒருபுறமாக தள்ளி வைக்கப்பட்டிருப்பது போல தெரிகிறது.” என்றபோதிலும் அவர் கூடுதலாகச் சொல்கிறார்: “இந்தச் சமுதாயத்தில் மதம் உண்மையில் ஒடுக்குகின்ற தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதற்கு . . . அத்தாட்சி இருக்கிறது.”
இந்தச் சூழ்நிலையில், யெகோவாவின் சாட்சிகள் அவர்களுடைய வழக்கமான மற்றும் கண்டிப்பான நடுநிலைமையைக் காத்துவருகின்றனர். பைபிள் நியமங்களின் அடிப்படையில், அவர்கள் அரசியலிலும் தேசீயம் சார்ந்த பிரிவினைகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதில்லை. கடவுளுடைய ராஜ்யத்தை உலகம் முழுவதிலும் பிரசங்கிக்கும் தங்கள் வேலையை நிறைவேற்றுவதற்கு சமாதானமான ஒரு சூழலைத் தங்களுக்கு அருளிச் செய்வதற்கு அவர்கள் கடவுளில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.—மத்தேயு 22:21; 1 தீமோத்தேயு 2:1, 2; 1 பேதுரு 2:13–15.
ஆகவே, கிழக்கு ஐரோப்பாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி என்ன? தடையுத்தரவின் கீழ் அவர்கள் செழித்திருக்கின்றனரா? அவர்களுக்கு மத சுதந்திரம் இருக்கிறதா? (g91 1/8)
[பக்கம் 7-ன் படம்]
கிழக்கு ஐரோப்பாவின் சர்ச்சுகளுக்கு மக்கள் திரும்பிவருவார்களா?