கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்—பிளவுற்ற ஒரு மதம்
கிரீஸிலுள்ள விழித்தெழு! நிருபர்
கடவுளையும் சத்தியத்தையும் நேசித்து அவருடைய வணக்கத்திற்கு ஆழமான மரியாதை காட்டக்கூடிய நேர்மையான ஜனங்களுக்கு, கிரீஸ் நாட்டில் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சிலுள்ள தற்போதைய நிலைமை, மிகைப்படுத்தாமல் கூறினால், திகைப்பூட்டுகிறது. அங்கே உள்ள வருந்தத்தக்க ஐக்கியமின்மை, எதிர்க்கட்சிகளிடையே நடக்கும் கலகத்தனமான மோதல்கள், ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விசைமாரியான வெட்கக்கேடான அவதூறுகள், “கடவுளுடைய ஒரே உண்மையான சர்ச்” என்று தன்னையே கூறிக்கொள்ளும் மதத்தின் ஆவிக்குரிய வழிநடத்துதல் கொடுக்க இயலாமை ஆகியவை, அநேக கிரேக்கர்கள் ஏமாற்றமும் வெறுப்பும் அடையும்படி செய்திருக்கின்றன.
இந்த விவகாரங்களினால், பொது மக்கள் நிலைகுலைந்துபோய் சீற்றமடைந்திருக்கிறார்கள். ஒரு பல்கலைக்கழக பேராசிரியர், முன்னணி வாய்ந்த ஒரு கிரேக்க பத்திரிகைக்கு எழுதும்போது, இவ்வாறு புலம்பினார்: “கிரீஸ் நாட்டின் சர்ச் முன் என்றுமில்லாதளவுக்கு கடுமையாயும் நீடித்துமிருக்கும் இந்த நெருக்கடியினால், சின்னாபின்னம் ஆக்கப்பட்டிருக்கிறது. இது [சர்ச்சினுடைய] அதிகாரத்தைக் கேள்விக்குறியாக்கி, அதன் நிறுவனங்களின் உள்ளார்ந்த மதிப்பை அழிக்கிறது. வருத்தகரமாக இந்த பொல்லாங்கு இன்னும் நீடித்துக்கொண்டிருக்கிறது.”
இந்த நிலைமை எவ்வாறு வளர்ந்தது? கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச், அரசாங்கத்துடன் அனுபவித்திருந்த நெருங்கிய கூட்டுறவு உண்மையிலேயே பயனுள்ளதாயிருக்கிறதா? சர்ச்சிற்கும் அரசாங்கத்திற்கும் உள்ள உறவுகளின் எதிர்காலம் என்ன? உண்மையான, ஐக்கியப்பட்ட கிறிஸ்தவ சபையை தேடும் மக்களுக்கு என்ன மாறுதல் இருக்கிறது? இந்த விஷயங்களை நாம் ஆராய்ந்து, இதை குறித்து பைபிள் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
அதிகாரத்திற்காக ஒரு போராட்டம்
1967-74 வரையாக கிரீஸின் மேல் ஒரு இராணுவ சர்வாதிகாராட்சி ஆண்டபோது, தன்னுடைய சொந்த அதிகாரத்தை வலுப்படுத்த, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் நடவடிக்கைகளில் அது தீவிரமாகத் தலையிட்டது. முழுமையான ஆதிக்கத்தை எடுத்துக்கொள்ளும் முயற்சியின் ஒரு பாகமாக படைத்துறை செயலாட்சிக்குழு, ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் மிக உயர்ந்த செயற்குழுவான புனித குருமன்றத்தைக் கலைத்து, தன்னுடைய சொந்த குருமன்றத்தை, அது குறிப்பிட்டபடி, “தகுதியின் அடிப்படையில்” நியமித்தது. 1974-ல் மக்களாட்சி திரும்பவும் நிலைநாட்டப்பட்டபோது, சர்ச்சின் செயற்குழு, தன்னுடைய கட்டளை கோட்பாட்டின்படி மறுபடியுமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன் விளைவாக செயலாட்சிக் குழுவால் நியமிக்கப்பட்ட மன்றத்தைச் சேர்ந்த பிஷப்புகள் விலக்கப்பட்டு, மற்றவர்கள் பதிலுக்கு அமர்விக்கப்பட்டார்கள்.
ஆயினும் 1990-ல் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டவரைவு, நீக்கப்பட்ட பிஷப்புகள் உலகியல் சார்ந்த நீதிமன்றங்களிலும், முடிவிலே அரசாங்க அவையான மிகப் பெரிய ஆட்சி நீதிமன்றத்திலும் முறையிட்டு, தங்களுடைய இடங்களை மறுபடியுமாக கோர உரிமையளித்தது. அந்த பாதிரிமாரில் மூன்று பேர் அவ்வாறே செய்து, முடிவில் தங்களுடைய வழக்கில் வெற்றி பெற்றார்கள். அதன் விளைவாக இன்று, கிரீஸ் நாட்டில் மூன்று தனித்தனியான ஆர்த்தடாக்ஸ் அதிமேற்றிராசனங்கள் ஒவ்வொன்றும் இரண்டு பிஷப்புகளை கொண்டிருக்கின்றன—ஒருவர் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சினால் மாத்திரமே பணித்துறைக்குரிய அங்கீகாரம் பெற்றவராயும், மற்றொருவர் அரசாங்க அவை குழுவினால் பணித்துறைக்குரிய ஏற்புடையவராகவும் இருக்கிறார்.
“சண்டையிடும் கிறிஸ்தவர்கள்”
முன்பு நீக்கப்பட்ட பிஷப்புகள், திரும்பவும் தங்களுடைய இருக்கைகளைக் கைப்பற்றி, பணித்துறைக்குரிய சர்ச்சினால் நியமிக்கப்பட்ட மற்ற பிஷப்புகளின் இருக்கையை முழுமையாக ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். கூடுதலாக, அவர்களில் ஒவ்வொருவரும் தங்களுக்காக உணர்ச்சி வேகத்துடன் குரலெழுப்ப ஒரு மிகப் பெரிய தொகுதியான ஆதரவாளர்களைக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை ஒரு செய்தித்தாள் “மத வெறியர்கள்” என்று வர்ணித்தது. இந்த நிலைமை கடுமையான விளைவுகளை அனற்பொறியூட்டியது. நாடெங்குமுள்ள தொலைக்காட்சிகள், திரளான “சண்டையிடும் கிறிஸ்தவர்கள்” வலுக்கட்டாயமாக சர்ச்சிற்குள் நுழைவதையும் அங்கேயுள்ள மத சம்பந்தப்பட்ட சிலைகளை நொறுக்குவதையும், பாதிரிமாரையும் எதிர்க்கட்சியை சார்ந்த பொதுமக்களையும் தாக்கினதையும் ஒளிபரப்பின. அநேக சந்தர்ப்பங்களில் அமளியை கட்டுப்படுத்தக்கூடிய போலீஸார், தலையிட்டு அமைதியை நிலைநாட்ட வேண்டியிருந்தது. கிஃபீஸியாவில் வசதி வாய்ந்த ஆதன்ஸ் புறநகரிலுள்ள சர்ச்சுகளில் 1993-ம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நிலைமைகள் ஒரு உச்சக்கட்டத்தை அடைந்தன. அதற்கு பின்னால், லாரிஸா நகரத்தில் 1994-ம் ஆண்டு ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களில் குருட்டுத்தனமானவிதத்தில் தொடர்ந்து நடந்த மதவெறித்தனம், கிரீஸ் நாட்டிலுள்ள பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஜூலை 28, 1994-ல் புனித குருமன்றத்தால் லாரிஸாவில் நியமிக்கப்பட்ட பிஷப் இக்நேஷியஸ் பதவியேற்றபோதுதான் மிக மூர்க்கத்தனமான மோதல்கள் நடந்தன. இத்நோஸ் என்ற செய்தித்தாள், “புதிய பிஷப்புக்கு லாரிஸா ஒரு போர்த்தளமாகிறது—இருண்ட காலங்கள் மறுமலர்ச்சியடைந்தன,” என்ற தன்னுடைய முதல் பக்கத் தலையங்கத்தில் பின்வருமாறு காட்டியது: “ஒரே ஒரு பதம்தான் பொருந்துகிறது: இருண்ட காலங்கள். நேற்று லாரிஸாவில் நடந்த, . . . தெருச்சண்டைகள், கலகத்தனமான மோதல்கள், உடல்காயங்கள் போன்றவற்றை வேறு என்னவென்று விவரிப்பது?”
சில வாரங்களுக்குப் பின்னர், பிஷப் இக்நேஷியஸின் காரை எதிரிகள் “மூர்க்கத்தனமாய்த் துரத்தி இரும்புக் கம்பிகளினாலும் மட்டைகளினாலும் தாக்கினார்கள்.” ஒரு பத்திரிகையாளர் இவ்வாறு வியந்தார்: “மரணத்தை விளைவிக்கும் வன்முறை செயல்களையும், கொள்ளைக்கூட்டத்தார் செய்கிறது போன்ற செயல்களையும் இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தங்களுடைய மத வெறியின் காரணமாக இதை செய்திருக்கிறபோது, இவர்கள் கிறிஸ்தவக் கருத்துக்களாலும் புகட்டப்பட்டிருக்கிறார்கள் என்று ஒருவர் ஏற்றுக்கொள்வது எப்படி சாத்தியமாகும்? . . . இப்படிப்பட்ட செயல்கள் பிரபலமான சர்ச் தலைவர்களால், உற்சாகப்படுத்தப்பட்டு, பொறுத்துக்கொள்ளப்படுகின்றன.”
கிறிஸ்மஸ் பண்டிகையின்போது, நிலைமை மேலும் மோசமடைந்தது. 1994 டிசம்பர் 23-26 வரை லாரிஸாவில் நடந்த பயங்கரமான நிகழ்ச்சிகளைக் குறித்து எலஃபதரோட்டிபியா என்ற செய்தித்தாள் இவ்வாறு எழுதியது: “நீடித்துவந்த இந்தப் போர் கிறிஸ்மஸ் [கொண்டாட்டத்தைக்] கெடுத்து, மறுபடியுமாக லாரிஸாவிலே ஒரு வெட்கக்கேடான கிறிஸ்மஸிற்கு வழிநடத்தியது. . . . கிறிஸ்துவின் பிறப்பை சர்ச் மணிகள் அறிவிக்கும்போதே, போலீஸாரின் தடிகள் ‘நல்லவர்கள் கெட்டவர்கள்’ என்ற பாரபட்சமில்லாமல் எல்லோர் தலையின்மேலும் விழுந்தவண்ணமாக இருந்தன. லாரிஸாவிலுள்ள செய்ன்ட் கான்ஸ்டன்டைன் சர்ச்சிலுள்ள முற்றத்தில், கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்களுக்கும் ஆசீர்வாதங்களுக்கும் பதிலாக கலகங்களும், மோதல்களும், வசைமாரியான சாபங்களும், சிறைப்பிடிப்புகளும் நடந்தன. . . . [இக்நேஷியஸிற்கு எதிராக நடந்த] போராட்டங்கள் விரைவில் வாய்மொழியான பழித்தூற்றலாகி, பின்னர் போலீஸாருடன் மோதல்களாயின. . . . சர்ச் முற்றத்தை ஒரு போர்க்களமாக்கினார்கள்.”
மக்கள் இதற்கு எப்படி பிரதிபலித்தார்கள்? ஒரு ஆர்த்தடாக்ஸ் சமய நபர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்: “தங்களை கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்கிறவர்கள், புனிதமான மத விடுமுறைகளின்போது இப்படிப்பட்ட கலகத்தனமான குற்றங்களை எப்படி செய்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. சர்ச்சிலே அடிபடக்கூடிய அபாயமிருப்பதால், நான் எப்படி அங்கே போகமுடியும்?” மேலுமாக சமயப்பற்றுள்ள ஒரு ஆர்த்தடாக்ஸ் பெண்மணி இவ்வாறு கூறினார்: “இந்த சம்பவங்களுக்கு பிறகு, சர்ச்சிற்கு போக நான் பயப்படுகிறேன்.”
மேலும், இது போதாதென்று கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச் சம்பந்தபட்ட ஒழுக்கக்கேடான அவதூறுகள் விசைமாரியாக வெளியாகியுள்ளன. பழமை சின்னங்களின் கள்ள வியாபாரம், பொதுப்பணத்தை கையாடல், ஒத்தபாலின மற்றும் சிறுவர் புணர்ச்சியுடைய பாதிரிகளடங்கிய குருமார் தொகுதியின் குறிப்பிட்ட உறுப்பினர்களின் பால்வகை ஒழுக்கஞ்சார்ந்த தரங்கெட்ட நடத்தைகள் போன்றவற்றை செய்தித்துறை திரும்பத்திரும்ப வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. மதிப்புமிக்க அரும்பொருட் சிலைகளுக்கும், விலையேறிய கலைப்பொருட்களுக்கும், கட்டுப்பாடில்லாத நுழைவுரிமை அநேக பாதிரிமாருக்கு இருக்கிறதினால் இதிலே கள்ள வியாபாரம் செய்வது சாத்தியமாக இருக்கலாம்.
மனிதர்களைப் பின்பற்றவேண்டாம் என்கிற அப்போஸ்தலனாகிய பவுலின் பலமான கண்டிப்பை இந்த நிலைமை படுமோசமாக மீறுகிறது! ஏனென்றால் இது “கருத்துவேறுபாடுகளையும்” “பிரிவினைகளையும்” உண்டாக்கும்.—1 கொரிந்தியர் 1:10-13, NW; 3:1-4.
சர்ச்-அரசாங்க உறவுகள்—என்ன எதிர்காலம்?
கிரீஸ் அரசாங்கத்தின் துவக்கத்திலிருந்தே, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச் ஒரு முதன்மையான மதமாக தனிச்சலுகைக்குரிய அந்தஸ்தை அனுபவித்து வந்திருக்கிறது. கிரீஸ் நாட்டிலே இன்னும் சர்ச்-அரசாங்கம் என்ற பிரிவினை ஏதும் இல்லை. அரசாங்க சட்டமைப்பே கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சை, கிரீஸ் நாட்டின் “மேலோங்கின மதமாக” உத்தரவாதமளிக்கிறது. பொது மக்களின் வாழ்க்கையை உள்ளடக்கிய எல்லா துறைகளிலும், பொது நிர்வாகம், நீதிமுறை, காவல்துறை, பொதுக்கல்வி, மற்றும் சமுதாயத்தின் எல்லாவிதமான கோணங்களிலும், கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச் ஊடுருவியுள்ளது என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. இப்படி எல்லா இடத்திலும் சூழ்ந்திருக்கிற சர்ச்சினால், கிரீஸ் நாட்டிலுள்ள சிறுபான்மை மதத்தொகுதியினருக்கு அநீதியும், விவரிக்கமுடியாத துயரங்களும் உண்டாகியுள்ளன. அரசாங்க சட்டமைப்பு மத சுயாதீனத்திற்கு உத்தரவாதமளித்தாலும், ஒரு சிறுபான்மை மதத்தொகுதி தன்னுடைய உரிமைக்காக முயற்சியெடுக்கும் போதெல்லாம் மதச்சாய்வு, எதிர்ச்சார்பு, பகைநிலை போன்ற சர்ச்-அரசாங்க உறவுகள் பின்னி வைத்திருக்கும் நுழைய முடியாத வலையினுள் அகப்பட்டுவிட்டதை உணருகிறது.
எதிர்காலத்தில் அரசாங்க சட்டமைப்பு திருத்தியமைக்கப்படும் என்ற சாத்தியம் தெளிவாக தெரிகிறதினால், சர்ச்சையும் அரசாங்கத்தையும் பிரிக்கக் கோரி ஒரு பலமான வேண்டுகோள் ஏற்கெனவே கேட்டுக்கொண்டிருக்கிறது. சர்ச் மற்றும் அரசாங்கத்தின் இந்த நெருங்கிய கூட்டுறவினால் உண்டான பிரச்சினைகளுக்கு, செல்வாக்குள்ள கிரேக்க அரசமைப்புச் சட்ட நிபுணர்களும், ஆராய்ச்சியாளர்களும் கவனத்தைத் திருப்பச் சொல்கிறார்கள். இந்த இரண்டு வஸ்துக்களையும் கண்டிப்பாக பிரிப்பதே, இதற்கு ஒரே உருப்படியான தீர்வு என்று அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இடைநேரத்தில், அப்படி முடிவாக நிகழக்கூடிய பிரிவை எதிர்த்து சர்ச் தலைவர்கள் குரலெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். சர்ச்-அரசாங்க உறவுகளின் முன்னேற்றத்தினால் உணர்ச்சியை பாதிக்கக்கூடிய ஒரு பிரச்சினையைக் குறித்து, ஆர்த்தடாக்ஸ் பிஷப் ஒருவர் இவ்வாறு எழுதினார்: “இதன் விளைவாக குருமாருக்கு கொடுக்கும் சம்பளத்தை அரசாங்கம் நிறுத்திவிடுமா? . . . அநேக திருச்சபை வட்டாரங்கள் குருமார் இல்லாமல் போகப்போவதை இது அர்த்தப்படுத்தும்.”—மத்தேயு 6:33-ஐ ஒப்பிடுக.
சர்ச்சிற்கும் கிரீஸ் நாட்டு அரசாங்கத்திற்குமிடையே உள்ள நெருங்கிய உறவின் மற்றொரு விளைவு என்னவென்றால், எல்லா கிரேக்க குடிமக்களின் அடையாள அட்டைகளும் அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்று தெரிவிக்க வேண்டும் என கிரேக்க சட்டம் தேவைப்படுத்துகிறது. கிரீஸ் நாட்டைக் கட்டுப்படுத்துகிற ஐரோப்பாவின் ஒன்றிய ஒழுங்குமுறை விதிகளுக்கும், மனித உரிமைகளின் ஐரோப்பிய அவையின் விதிகளுக்கும் இது நேரடியான முரண்பாடாக உள்ளது. சிறுபான்மை மதத்தொகுதியினர் பொதுவாக இந்த வேறுபாட்டுக்கு பலியாகிறதினால் பரந்த-மனப்பான்மையுடைய மக்கள் இதற்கு பலமாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஒரு பத்திரிகையாளர் இவ்வாறு குறிப்பிட்டார்: “ஒரு சிறுபான்மை மதத்தொகுதி, அதனுடைய மத சுயாதீனத்தை செயல்படுத்தும்படியான அதன் உரிமைகளைப் பொறுத்தவரையில் இந்த உண்மைநிலை ஒருவேளை எதிர்மறையான விளைவுகளைக் கொண்டிருக்கலாம்.” இதை குறிப்பிட்டு டா னியா என்ற செய்தித்தாள் இவ்வாறு எழுதியது: “ஒருவருடைய மதத்தை தனிப்பட்ட அடையாள அட்டையில் கட்டாயமாக பதிவு செய்தல் போன்ற காரியங்களில், சர்ச்சின் ஆதிக்கமான வழிகளையும், இது சம்பந்தப்பட்ட அதனுடைய பிரதிபலிப்புகளையும், அரசாங்கம் புறக்கணித்து தன்னுடைய தீர்மானங்களை தானே எடுத்து, சட்டங்களை நிறைவேற்றவேண்டும்.”
அப்படிப்பட்ட பிரிவினைக்கான அவசரத் தேவையை வலியுறுத்தி, அரசாங்கச் சட்டமைப்பின் பேராசிரியரும், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் உறுப்பினருமான, டிமிட்ரிஸ் ட்ஸாட்சோஸ் கூறினார்: “சமுதாயம், அரசியல், மற்றும் கல்வித் துறைகளில் தான் செலுத்திவந்த ஆதிக்கத்தை [கிரீஸ்] சர்ச் நிறுத்தவேண்டும். கிரேக்க சர்ச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பாங்கு கொடியதாக இருக்கிறது. நம் கல்வி முறையின் மேலும், நம் சமுதாயத்தின் மேலும் ஆளுகிற கொடுங்கோலாக உள்ளது.” மற்றொரு பேட்டியில் இதே பேராசிரியர் இவ்வாறு கூறினார்: “கிரீஸ் நாட்டு சர்ச்சின் அச்சமூட்டுகிற சக்தி, மாறுதலை எதிர்க்கிற அரசியல்வாதிகளோடு மாத்திரம் நின்றுவிடவில்லை, கிரேக்க சமுதாயத்தின் முற்போக்கான துறைகளையும் அது சமாளித்து ஊடுருவியுள்ளது. சர்ச்சும் அரசாங்கமும் பிரிந்திருக்க வேண்டுமென்று தனிப்பட்ட முறையில் நான் வேண்டுகிறேன். ஆர்த்தடாக்ஸ் கிரேக்கர்களும் கிரீஸிலுள்ள மற்ற மத ஆதரவாளர்களோடு ஒரு சமநிலைக்கு கொண்டுவரப்படவேண்டும் என்று நான் கேட்கிறேன்.”
உண்மைக் கிறிஸ்தவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள்
கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சில் உண்மைக் கிறிஸ்தவத்தின் அடையாளத்தை கண்டுபிடிப்பது மெய்யாகவே கடினம்தான். கிறிஸ்தவ சமயத்தில், பிரிவினைகளோ பிளவுகளோ ஏற்படவேண்டும் என்று இயேசு கருதவில்லை. தம்முடைய சீஷர்கள் ‘எல்லோரும் ஒன்றாயிருக்க வேண்டும்’ என்று தம் பிதாவிடம் அவர் ஜெபம் செய்தார். (யோவான் 17:21) இந்த சீஷர்கள் ‘ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாக’ இருக்கவேண்டியிருந்தது. இந்த அன்பே, இயேசுவை மெய்யாக பின்பற்றுவோரின் தனிச்சிறப்புமிக்க அடையாளமாக இருந்தது.—யோவான் 13:35.
கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சில் ஒற்றுமை நழுவிக்கொண்டிருக்கிறது. ஆயினும், இன்றுள்ள மத அமைப்புகளினுள், இது ஒன்றும் ஒரு தனித்தன்மை வாய்ந்த காரியமாக இல்லை. இன்னும் மிக நுட்பமாக கூறுவதென்றால், கிறிஸ்தவமண்டலத்தின் மதங்களை தொல்லையூட்டுகிற பிரிவினையை இது பிரதிநிதித்துவம் செய்யக்கூடியதாக உள்ளது.
“சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்கிறேன்” என்று 1 கொரிந்தியர் 1:10-ல் அப்போஸ்தலனாகிய பவுல் கூறினார். கடவுளை உள்ளார நேசிப்பவர்கள் இந்த வார்த்தைகளை, இப்போதிருக்கும் வருந்தத்தக்க நிகழ்ச்சிகளுடன் ஒத்துப்போகவைப்பதற்கு கடினமாக காண்கிறார்கள்.
ஆம், இயேசுவின் உண்மையான சீஷர்கள் தங்களுக்குள்ளே முறிக்க முடியாத ஒற்றுமையை அனுபவிக்கிறார்கள். கிறிஸ்தவ அன்பினால் அவர்கள் ஒற்றுமையாக கட்டப்பட்டிருப்பதினால், தங்களுக்குள்ளே எந்தவிதமான அரசியல், கட்சி, மற்றும் கொள்கை வித்தியாசங்களோ இல்லாமலிருக்கிறார்கள். ‘அவர்களுடைய கனிகள்,’ அல்லது செயல்களினால் தம்மைப் பின்பற்றுபவர்களை எல்லோரும் அறிய முடியும் என்று இயேசு தெளிவாக விளக்கினார். (மத்தேயு 7:16) கிரீஸ் நாட்டிலும், உலகத்திலிருக்கிற எல்லா பாகங்களிலும், உண்மையான கிறிஸ்தவ ஐக்கியத்தை அனுபவிக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய ‘கனிகளை’ ஆராய்ந்து பார்க்க இந்த பத்திரிகையின் பிரசுரிப்பாளர்கள் உங்களை அழைக்கிறார்கள்.
[பக்கம் 18-ன் படம்]
ஹபாதிரிமார் போலீஸாருடன் மோதினார்கள்
[பக்கம் 15-ன் படத்திற்கான நன்றி]
From the book The Pictorial History of the World