உலகத்தை அதிர வைத்த அந்த வருடம்
“1914-18-ல் நடந்த பெரிய போர், நம்முடைய காலத்தை அந்தக் காலத்திலிருந்து பிரிக்கின்ற சுட்டுப்பாழாக்கப்பட்ட பூமிப் பட்டை போன்று அமைந்திருக்கின்றது. அநேக உயிர்களைத் துடைத்துப் போட்டதில் . . . , நம்பிக்கைகளை அழித்துவிட்டதில், எண்ணங்களை மாற்றியதில், குணப்படுத்த முடியாத ஏமாற்றத்தின் காயங்களை விட்டுச் சென்றதில், அது சரீர மற்றும் மன சம்பந்தப்பட்ட பிளவை இரண்டு சகாப்தங்களின் தொடக்கங்களுக்கிடையே உண்டுபண்ணியது.”—பார்பரா டச்மானின் கர்வமான கோபுரத்திலிருந்து—யுத்தத்திற்கு முன்னான உலகம் பற்றிய ஒரு சித்திரம் 1890-1914.
“பெரும் விளைவுகளை உண்டாக்கிய இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இளைஞராயிருந்த ஆயிரக்கணக்கானோர் இன்றும் உயிருடனிருப்பதால், அது கிட்டத்தட்ட—ஆனால் இன்னமும் முழுமையாக இல்லாத—சரித்திரத்தின் பாகமாக இருக்கின்றது.”—லின் மக்டொனால்டு எழுதிய 1914 என்ற புத்தகத்திலிருந்து, 1987-ல் பிரசுரிக்கப்பட்டது.
ஏன் 1914-ம் வருடத்தில் அக்கறையுள்ளவர்களாக இருக்க வேண்டும்? ‘எதிர்காலமே என்னுடைய அக்கறைக்குரியதாயிருக்கிறது, கடந்த காலம் அல்ல,’ என்பதாக நீங்கள் சொல்லலாம். உலகளாவிய தூய்மைக்கேடு, குடும்ப வாழ்க்கையில் முறிவு, குற்றச்செயல்கள் அதிகரிப்பு, மன நோய்கள், வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்னைகள் அதிகரிக்க, மனிதனின் எதிர்காலம் மங்கியதாகத் தோன்றலாம். எனினும், 1914-ன் அர்த்தத்தை பரிசீலித்துப் பார்த்த அநேகர் ஒரு மேம்பட்ட எதிர்காலத்துக்கான நம்பிக்கைக்கு அடிப்படையைக் கண்டு கொண்டுள்ளனர்.
மனிதகுலம், “வேதனைகளுக்கு ஆரம்பம்,” என்று அழைக்கப்படுவதை 1914-ல் அனுபவித்தது என்று பல பத்தாண்டுகளாக காவற்கோபுரம் விளக்கி வந்துள்ளது. மனிதனுடைய பொல்லாங்கான ஒழுங்குமுறையின் முடிவுக்கு முன்னால் நிகழும் நிகழ்ச்சிகளைப் பற்றிய இயேசு கிறிஸ்துவின் தீர்க்கதரிசனத்தின் பாகமாக இந்தச் சொற்றொடர் அமைந்துள்ளது.—மத்தேயு 24:7, 8.
இன்று, 1914-ன் கவனத்தை ஈர்த்த நிகழ்ச்சிகளை மனிதகுலத்தின் ஒரு சிறிய சதவிகிதத்தினரால் நினைவுகூர முடிகிறது. கடவுள் பூமியை அழிவிலிருந்து காப்பாற்றும் முன்னே அந்த முதுமையடைந்த சந்ததி ஒழிந்து போய்விடுமா? பைபிள் தீர்க்கதரிசனத்தின்படி அப்படியல்ல. இயேசு, “இவைகளையெல்லாம் நீங்கள் காணும் போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள். இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்து போகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்,” என்று வாக்களித்திருக்கிறார்.—மத்தேயு 24:33, 34.
ஏன் 1914 அவ்வளவு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மதித்துணருவதற்கு, 1914-ன் மத்திய பாகம் வரையாக இருந்த உலக நிலைமைகளைக் கவனியுங்கள். அதற்கு முந்திய காலத்தில், ரஷ்யாவின் சார் நிக்கோலஸ், ஜெர்மனியின் கெய்சர் வில்ஹெல்ம், மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரியின் பேரரசர் ஃபிரான்ஸ் யோஸெப் போன்ற முடிமன்னர்கள் அதிக வல்லமையைக் கொண்டு செயல்நடத்தினர். இந்த மனிதரில் ஒவ்வொருவரும் நாற்பது லட்சத்துக்கும் அதிகமான சண்டையிடும் மனிதர்களைப் படைதிரட்டி, யுத்தத்திற்கு அனுப்பக்கூடிய நிலையில் இருந்தனர். ஆனால், அவர்களுடைய முற்பிதாக்கள் ஒரு பெரிய “கிறிஸ்தவ தேசத்தின்” வெவ்வேறு பாகங்களை ஆட்சி செய்ய கடவுள் தங்களை நியமித்திருப்பதாக அறிவித்துக்கொண்டு பரிசுத்த ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டதில் கையெழுத்திட்டு இருந்தனர்.
என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா-வின் படி, இந்தப் பத்திரம், “19-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய அரசியல் தந்திரத்தின் போக்கை பெரிய அளவில் பாதித்தது.” அது சம உரிமை இயக்கங்களை எதிர்க்கவும், மன்னர்களின் தெய்வீக உரிமை எனப்பட்டதற்கு ஆதரவு காட்டவும் பயன்பட்டது. கெய்சர் வில்ஹெல்ம், சார் நிக்கோலஸிற்கு, “கிறிஸ்தவ மன்னர்களாகிய நாம், பரலோகம் நம்மீது சுமத்தியிருக்கும் ஒரு பரிசுத்த கடமையைக் கொண்டிருக்கிறோம், அது [மன்னர்களின் தெய்வீக உரிமை] என்ற தத்துவத்தை நிலை நிறுத்துவதாகும்.” என்று எழுதினார். இது ஐரோப்பிய மன்னர்கள் கடவுளுடைய ராஜ்யத்துடன் எவ்விதத்திலோ சம்பந்தப்பட்டவர்களென அர்த்தம் கொள்கிறதா? (1 கொரிந்தியர் 4:8 ஒப்பிடுக.) இந்த ராஜாக்களை ஆதரித்த சர்ச்சுகளைப் பற்றியதென்ன? அவை கிறிஸ்தவத்தை பின்பற்றுவதாக உரிமைபாராட்டியது உண்மையானதா? இந்தக் கேள்விகளுக்கான விடைகள் 1914-ஐ தொடர்ந்த வருடங்களில் தெளிவாயின.
ஆகஸ்டில், திடீரென்று
பிரிட்டிஷ் அரசியல் மேதை வின்ஸ்டன் சர்ச்சில், “1914-ன் வசந்தம் மற்றும் கோடைக் காலம் ஐரோப்பாவில் தனித்தன்மை வாய்ந்த அமைதியினால் குறிக்கப்பட்டதாயிருந்தது,” என்று எழுதினார். எதிர்காலத்தைப் பற்றி மக்கள் பொதுவாக நன்னம்பிக்கையைக் கொண்டிருந்தனர். தன்னுடைய புத்தகம் உலக யுத்தம் 1-ல் லூயிஸ் சின்டர், “1914-ன் உலகம் நம்பிக்கையினாலும், வாக்குறுதிகளாலும் நிரம்பியிருந்தது,” என்று சொன்னார்.
உண்மைதான், அநேக வருடங்களாக பிரிட்டனுக்கும் ஜெர்மனிக்குமிடையே ஆழமான பகைமை இருந்தது. எனினும் வரலாற்று ஆசிரியர் G. P. கூச் ஆறு ஆட்சிகளின் கீழே என்ற தன்னுடைய புத்தகத்தில் விளக்கும் வண்ணமாக: “1911, 1912 அல்லது 1913-ல் இருந்ததைவிட 1914-ல் ஒரு ஐரோப்பிய சண்டை தோன்றுவது குறைந்த சாத்தியமுள்ளதாயிருந்தது . . . முந்திய வருடங்களில் இருந்ததைவிட இரண்டு அரசாங்கங்களிடையே நல்லுறவு இருந்தது.” 1914-ல் பிரிட்டன் அமைச்சரவையின் ஓர் உறுப்பினராயிருந்த வின்ஸ்டன் சர்ச்சிலின்படி: “ஜெர்மனி, சமாதானத்தின் பேரில் எங்களுடைய கருத்தையே கொண்டிருப்பது போல இருந்தது.”
எனினும், ஜூன் 28, 1914-ல் ஆஸ்திரியா-ஹங்கேரி பேரரசின் பட்டத்து இளவரசன் சாராஜிவோவில் கொல்லப்பட்டதுடன், அடிவானத்தில் கரிய மேகம் தோன்றியது. ஒரு மாதம் கழித்து, பேரரசர் ஃபிரான்ஸ் யோஸெப் செர்பியாவுடன் போரை அறிவித்து, அந்த ராஜ்யத்தைத் தாக்க தன் படைகளுக்கு உத்தரவிட்டார். இதற்கிடையில், ஆகஸ்டு 3, 1914-ன் இரவில், கெய்சர் வில்ஹெல்மின் உத்தரவின்படி ஒரு பெரிய ஜெர்மானியப் படை பெல்ஜியம் ராஜ்யத்தைத் தாக்கி, ஃபிரான்ஸை நோக்கித் தங்கள் வழியில் முன்னேறினர். அடுத்த நாள் பிரிட்டன், ஜெர்மனியின் மீது போரை அறிவித்தது. சார் நிக்கோலஸைப் பற்றியதில், அவர் பெரிய ரஷ்யப் படையை, ஜெர்மனியுடனும், ஆஸ்திரியா-ஹங்கேரியுடனும் யுத்தம் செய்யத் திரட்டத் தொடங்கினார். ஒருவரையொருவர் படுகொலை செய்யும் இரத்தக் குளியலில் ஐரோப்பிய கண்டம் மூழ்கும்படி செய்யும் ஐரோப்பிய மன்னர்களைத் தடுத்து நிறுத்துவதில் பரிசுத்த ஒப்பந்தம் தோல்வியுற்றது. ஆனால் பெரிய அதிர்ச்சிகள் இன்னமும் வரவேண்டும்.
கிறிஸ்மஸுக்குள் முடிந்துவிட்டதா?
போர் துவக்கம், ஜனங்களின் நன்னம்பிக்கையைத் தளர்த்திவிடவில்லை. அநேகர் அது ஒரு மேம்பட்ட உலகைக் கொண்டு வரும் என்று நம்பினர், ஐரோப்பா முழுவதும் பெரிய கூட்டத்தினர் கூடி அதற்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். ஐரோப்பாவில் தலைமைத்துவத்திற்கான போராட்டம்—1848-1918 என்ற தன் புத்தகத்தில் “முழுமையாக இராணுவ அம்சத்தின் அடிப்படையிலன்றி, 1914-ல் ஒருவரும் யுத்தத்தின் அபாயங்களைப் பற்றி கவலையுடன் நோக்கவில்லை . . . ஒரு சமுதாய அழிவை யாரும் எதிர்பார்க்கவில்லை,” என்று A. J. P. டெய்லர் எழுதுகிறார். மாறாக அநேகர் அது சில மாதங்களில் முடிந்துவிடும் என்பதாக முன்னுரைத்தனர்.
எனினும், ஐரோப்பியர்கள் தங்கள் 1914-ம் வருட கிறிஸ்மஸைக் கொண்டாடுவதற்கு வெகு முன்பே, தெற்கில் ஸ்விட்சர்லாந்து தொடங்கி, வடக்கில் பெல்ஜியக் கடற்கரை வரையாக நீண்டுள்ள 700 கிலோமீட்டரில் அமைந்துள்ள வரிசையான மறைவுக்குழிகளில் ஒரு மோசமான இக்கட்டு நிலை ஏற்பட்டுவிட்டது. இது மேற்கு முன்னணி என்று அழைக்கப்பட்டது. ஜெர்மன் ஆசிரியர் ஹெர்பர்ட் ஸீல்ஸ்பாக் 1914-ன் கடைசி நாளில் தன்னுடைய நாட்குறிப்பேட்டில் குறிக்கும் போது இதைக் குறிப்பிடுகிறார். அந்தக் குறிப்பு வாசிக்கிறதாவது: “இந்தப் பயங்கரமான யுத்தம் மேலும் மேலும் செல்கிறது, நீங்களோ, தொடக்கத்தில் இது சில வாரங்களில் முடிந்துவிடும் என்று எண்ணினீர்கள். இப்பொழுது முடிவு கண்ணில் படவில்லை.” இதற்கிடையே, ஐரோப்பாவின் மற்ற பாகங்களில் இரத்தம் தோய்ந்த யுத்தங்கள் ரஷ்யா, ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி மற்றும் செர்பியப் படைகளுக்கிடையே உச்சநிலையில் நடந்துகொண்டு இருந்தன. சண்டை விரைவில் ஐரோப்பாவுக்கு வெளியே பரவ, சமுத்திரத்திலும், ஆப்பிரிக்கா, மத்தியக் கிழக்கு மற்றும் பசிபிக் தீவுகளிலும் யுத்தங்கள் நடைபெற்றன.
நான்கு ஆண்டுகள் கழித்து ஐரோப்பா பாழாக்கப்பட்டது. ஜெர்மனி, ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரி ஒவ்வொன்றும் பத்து முதல் இருபது லட்சம் வரையாக சிப்பாய்களை இழந்துவிட்டது. 1917-ன் ருஷ்யப் புரட்சியில் ரஷ்யா தன் முடியாட்சியைக்கூட இழந்துவிட்டிருந்தது. ஐரோப்பாவின் மன்னர்களுக்கும், அவர்களுடைய மதகுரு ஆதரவாளர்களுக்கும் என்னே ஓர் அதிர்ச்சி! நவீன வரலாற்றாசிரியர்கள் இன்னமும் தங்கள் வியப்பை வெளிப்படுத்துகின்றனர். தன்னுடைய புத்தகம் ராஜரீக அஸ்தமனம் என்பதில் கார்டன் புரூக்-ஷெப்பர்ட் கேட்கிறார்: “ஆட்சியாளர்கள், அநேகமாக இரத்த சம்பந்தமாகவோ அல்லது திருமணம் மூலமாகவோ உறவினர்களாக இருப்பவர்கள், ராஜ்யபாரத்தைக் காப்பாற்ற தங்களை ஒப்புக்கொடுத்தவர்கள், எவ்விதமாக அவர்களில் அநேகரை இல்லாமல் செய்து, தப்பிப்பிழைத்தவரை பலவீனர்களாக்கிய அந்த உடன்பிறப்புக் கொலையின் இரத்தக்குளியலில் அவர்கள் தவறிவிழத் தங்களை அனுமதித்தனர்?”
ஃபிரெஞ்சு குடியரசும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட படைவீரர்களை இழந்தது. யுத்தத்திற்கு வெகு காலத்துக்கு முன்பே தன்னுடைய முடியாட்சியில் அதிகம் பலவீனப்பட்டிருந்த பிரிட்டனும் 9,00,000-த்திற்கு மேல் இழந்தது. மொத்தத்தில், 90 லட்சம் சிப்பாய்கள் இறந்தனர், மேலும் 210 லட்சம் பேர் காயமடைந்தனர். படைத்துறை சாராதவர்களின் இழப்புப் பற்றி, தி உவார்ல்ட் புக் என்ஸைக்ளோபீடியா குறிப்பிடுவதாவது: “நோய்கள், பட்டினி இன்னும் மற்ற யுத்தம் சம்பந்தப்பட்ட விளைவுகளினால் எவ்வளவு பொதுமக்கள் மாண்டனர் என்று ஒருவரும் அறியார். சில வரலாற்று ஆசிரியர்கள், படைவீரர் அளவு பொதுமக்களும் மாண்டதாக எண்ணுகின்றனர்.” பூமி முழுவதும் 1918-ன் ஸ்பானிஷ் ஃபுளு கொள்ளைநோய் மற்றொரு 2,10,00,000 பேரை கொன்று போட்டது.
முழுமையான மாற்றம்
பெரிய யுத்தம் என்று அன்று அழைக்கப்பட்ட அதற்குப் பின்பு உலகம் அதேபோன்று இல்லை. கிறிஸ்தவமண்டலத்தைச் சேர்ந்த அநேக சர்ச்சுகள் உற்சாகத்துடன் அதில் பங்கு பெற்றதால், தப்பிப்பிழைத்த மயக்கந் தெளிந்த அநேகர் நாஸ்திகத்துக்கு ஆதரவு காட்டி மதத்தைப் புறக்கணித்தனர். மற்றவர்கள் பொருள் சம்பந்தப்பட்ட செல்வத்தையும் சிற்றின்பத்தையும் தேடுவதற்குத் திரும்பினர். வசந்தத்தின் வழிபாட்டு முறை என்ற தன் புத்தகத்தில் பேராசிரியர் மாட்ரிஸ் எக்ஸ்டீய்ன்ஸ் சொல்வதின்படி, 1920-கள் “இன்பமே நலம் என்னும் கோட்பாடு மற்றும் தற்காதல் கோட்பாடுகளில் குறிப்பிடும் அளவு உச்சநிலைகளைக் கண்டன.”
“யுத்தம் ஒழுக்கத் தராதரங்களை தாக்கியது,” என்பதாக பேராசிரியர் எக்ஸ்டீய்ன்ஸ் விளக்குகிறார். இரு தரப்பிலுள்ளவர்களும், மொத்தமான படுகொலை ஒழுக்க அளவில் சரியானது என்று மத, ராணுவ மற்றும் அரசியல் தலைவர்களால் போதிக்கப்பட்டனர். “யூத கிறிஸ்தவ நெறிமுறைகளில் வேரூன்றியதாகச் சொல்லப்படும் இது, உண்மையில் ஒழுக்கத் தரத்தின் மீது மிக மோசமான ஒரு தாக்குதலாகும்,” என்று எக்ஸ்டீய்ன்ஸ் ஒப்புக்கொள்கிறார். மேலும் அவர் சொல்கிறார்: “மேற்கு முன்னணியில் விலைமகளிர் இல்லங்கள், இராணுவ முகாம்களின் ஒரு முறையான சேர்க்கையானது . . . வீட்டு முன்னணியில், பெண்களும் ஆண்களும் ஆகிய இரு சாராருமே ஒழுக்கமற்றவர்களானார்கள். விலைமகளிர் வேசித்தனம் அதிகமாகியது.”
ஆம், 1914 அதிகத்தை மாற்றியது. அது ஒரு மேம்பட்ட உலகத்தை உண்டாக்கவில்லை. அந்த யுத்தம் அநேகர் நம்பியபடி “எல்லா யுத்தங்களையும் முடித்த ஒரு யுத்தமாக” முடியவில்லை. மாறாக, சரித்திராசிரியர் பார்பரா டச்மான் குறிப்பிடுகிறபடி: “1914 வரையாக இருந்த ஆரவாரமான கருத்துகளும் உற்சாகங்களும் மெதுவாக மிகப் பெரிய ஏமாற்றத்தின் கீழே அமுங்கியது.”
என்றபோதிலும், 1914-ன் சோகத்தைக் கண்டுணர்ந்த சிலர், அந்த வருடத்தின் நிகழ்ச்சிகளினால் ஆச்சரியப்படவில்லை. உண்மையில், யுத்தம் துவங்குவதற்கு முன்னே அவர்கள் “அச்சந்தரும் குழப்பத்தின் காலத்தை,” எதிர் நோக்கியிருந்தனர். யார் அவர்கள்? மற்றவர்கள் அறியாத எதை அவர்கள் அறிந்திருந்தனர்?
[பக்கம் 5-ன் பெட்டி]
1914-ல் பிரிட்டனின் நன்நம்பிக்கை
“ஏறக்குறைய ஒரு நூற்றாண்டாக, நம்முடைய தீவைச் சுற்றியுள்ள கடல்களில் எந்த விரோதியும் தோன்றியது கிடையாது. . . . அமைதியான இந்த கடற்கரைகளுக்கு ஆபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பைக் கற்பனை செய்வதும்கூட கடினமாக இருந்தது. . . . முன்னொருபோதும் லண்டன் இத்தனை களிப்பாக இத்தனை செழிப்பாக காணப்பட்டது கிடையாது. முன்னொருபோதும் செய்வதற்கும் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் தகுதிவாய்ந்த காரியங்கள் இத்தனை அதிகம் இருந்ததில்லை. ஒப்பிடப்பட முடியாத அந்த 1914 காலப்பகுதியில் அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தது, உண்மையில் ஒரு சகாப்தத்தின் முடிவே என்பதை வயதானவர்களோ இளைஞர்களோ சற்றேனும் நினைக்கவில்லை.”—ஜெஃப்ரி மார்கஸ் எழுதிய விளக்குகள் அணைவதற்கு முன்பு.