சமாளிக்கமுடியாத பிள்ளையை வளர்த்தல்
“உனக்கு இன்னக்கி எல்லாம் நல்லபடியா நடந்ததா?” காரில் தொற்றி ஏறுகிற தன் மகனிடம் கேட்டாள் சூசன். அவள் அவனைப் பள்ளிக்கூடத்திலிருந்து கூட்டிக்கொண்டுபோக வந்திருந்தாள். முகத்தைச் சுளித்தவனாய், அவன் அவளைச் சட்டைசெய்யவேயில்லை. “அப்படீன்னா, இன்னக்கி நீ சங்கடப்படற மாதிரி ஏதாவது நடந்திருக்கும்,” அவள் பரிவுடன் கூறுகிறாள். “நீ அதப்பத்தி சொல்ல விரும்புறியா?”
“என்னை சும்மா தனியே விடுங்கமா,” அவன் பதிலுக்கு முணுமுணுக்கிறான்.
“எனக்கு உன்னப்பத்திதான் கவலையா இருக்கு. நீ ரொம்ப கவலையா இருக்கிறமாதிரி தெரியுது. உனக்கு உதவிசெய்யலாம்னு எனக்கு ஆச.”
“உங்க உதவி ஒண்ணும் தேவையில்ல!” அவன் கத்துகிறான். “என்னை கொஞ்சம் தனியா இருக்க விடுங்க! உங்கள கண்டாலே எனக்கு வெறுப்பா இருக்குது. நான் செத்துப்போயிட்டாக்கூட பரவால்லன்னு தோணுது!”
“ஜிம்மி!” சூசனுக்கு மேல்மூச்சு வாங்குகிறது, “எங்கிட்ட இப்படி பேசாத, இல்லன்னா—இல்லன்னா அடி குடுப்பேன்! உங்கிட்ட நல்லா இருக்கத்தானே முயற்சிக்கிறேன். உனக்கு என்ன ஆச்சுன்னு தெரியலயே. நான் என்ன சொன்னாலும், என்ன செஞ்சாலும் உனக்கு இஷ்டப்பட மாட்டேங்குதே.”
நாள் முழுவதும் வேலைசெய்ததில் குழம்பிப்போய், களைத்துப்போயிருக்கும் சூசன், தனக்கு எப்படித்தான் இப்படியொரு பிள்ளை வந்து வாய்த்தானோ என்று யோசித்தவளாக, விரைந்துகொண்டிருக்கும் வாகனங்களுக்கு இடையில் வளைத்து வளைத்து ஓட்டிக்கொண்டுபோனாள். அவள் கலங்கிப்போயிருக்கிறாள், நம்பிக்கையிழந்து, கோபமாக இருக்கிறாள்; தன் மகன்மேலேயே அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது, அதோடுகூட குற்றவுணர்ச்சி அவளை வாதிக்கிறது. அவனை—தன்னுடைய சொந்த பிள்ளையை வீட்டுக்குக் கொண்டுபோகவே சூசன் நடுங்குகிறாள். இன்று பள்ளிக்கூடத்தில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ளவே விருப்பமில்லை என்ற நிலைக்குக் கிட்டத்தட்ட வந்திருக்கிறாள். ஆசிரியர் மீண்டும் ஃபோன் பண்ணுவார் என்பதில் சந்தேகமேயில்லை. சிலசமயங்களில் சூசனுக்கு சமாளிக்கவே முடியாமல் போய்விடுகிறது.
இவ்வாறு ஒன்றுமில்லாத விஷயமாக தோன்றுபவையெல்லாம் கவலை நிறைந்த கடுமையான உணர்ச்சிப்பூர்வ பரீட்சைகளாக வெடித்தெழுகின்றன. ADD/ADHD உள்ள பிள்ளைகளோ, மற்றபடி “சமாளிக்கமுடியாதவர்கள்” என்று விவரிக்கப்படும் பிள்ளைகளோ பிரச்சினைகளை எதிர்ப்படும்போது தங்களுக்கே உரித்தான மிகுந்த ஆவேசத்தோடு பிரதிபலிக்கின்றனர். சட்டென்று கோபம் பொத்துக்கொண்டுவரும் நிலையை அடையும் மனோபாவத்தை அவர்கள் கொண்டிருந்து, பெற்றோரைக் கோபப்படுத்திவிட்டு, என்ன செய்வதென்று தெரியாமல், இறுதியில் சக்தியிழந்துபோகின்றனர்.
சீர்தூக்குதலும் குறுக்கிடுதலும்
எடுத்துக்காட்டாய் விளங்கும் வகையில், இந்தப் பிள்ளைகள் புத்திசாலிகளாகவும், படைப்புத்திறமை உள்ளவர்களாகவும், அளவுக்குமீறி உணர்ச்சிவசப்படுபவர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் அசாதாரண தேவைகளைக்கொண்ட ஆரோக்கியமான பிள்ளைகள் என்பதையும், இதன் விளைவாக விசேஷித்த ஆழமான புரிந்துகொள்ளுதல் இவர்களுக்குத் தேவைப்படுகிறது என்பதையும் உணருவது முக்கியமானதாக இருக்கிறது. அத்தகைய பிள்ளைகளின் பெற்றோர் வெற்றிதருவதாக கண்டிருக்கும் சில நியமங்களும் கருத்துக்களும் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.
முதலாவதாக, பிள்ளையை விசனப்படுத்தும் நிலைமைகளையும் தூண்டுகோல்களையும் கண்டுபிடிப்பது அவசியமாக இருக்கிறது. (நீதிமொழிகள் 20:5-ஐ ஒப்பிடவும்.) உணர்ச்சிப்பூர்வ போராட்டங்களுக்குச் சற்றுமுன் பிள்ளைகளில் ஏற்படும் அறிகுறிகளைப் பெற்றோர் கவனித்து, தாமதமின்றி குறுக்கிடுவது அவசியமாக இருக்கிறது. அதிகரித்துவரும் ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் முகபாவத்தையும் குறிப்பிட்ட ஒரு நிலைமையைச் சமாளிக்க முடியாத நிலையும் ஒரு முக்கிய அறிகுறியாகும். பிள்ளைத் தன்னையே கட்டுப்படுத்தவேண்டும் என்று கனிவான வார்த்தைகளால் நினைப்பூட்டுவது அல்லது அவசியப்படுமானால் அவனையே அந்த நிலைமையிலிருந்து விலக்கிவைப்பது ஒருவேளை உதவலாம். உதாரணமாக, இடைவேளைகள் [time-outs] விடுவது தண்டிப்பதற்காகவே உள்ள ஒரு வழியாய் அல்ல, ஆனால் திரும்பவும் அமைதியாகி, நியாயமாக செயல்படுவதற்கு பிள்ளைக்கும் பெற்றோருக்கும் ஒரு வாய்ப்பைக் கொடுப்பதில் பலனளிப்பதாக இருக்கிறது.
கொடுத்துள்ள உதாரணத்தில், ஜிம்மி சாதாரண கேள்விகளுக்கெல்லாம் தகாதமுறையில் பதில்சொன்னான். இது ஜிம்மியின் அனுதின நடத்தையாக இருக்கிறது. இந்தக் கோபத்தைப் பெற்றோர் தனக்கெதிராக தனிப்பட்ட முறையில் காண்பிக்கப்பட்ட கோபமாக எடுத்துக்கொள்வது சுலபம்தான். என்றாலும், அழுத்தத்தைச் சகிக்கும் அளவைத் தாண்டிவிட்டார்களேயானால் இந்தப் பிள்ளைகள் பெரும்பாலும் புரிந்துகொள்ளும் திறமையை (நியாயமாக யோசித்தலை) இழந்துவிடுகின்றனர் என்பதை உணர்ந்துகொள்வது அவசியமாக இருக்கிறது. ஆகவே, உட்பார்வையுடன் நடந்துகொள்வது முக்கியம். (நீதிமொழிகள் 19:11) ஜிம்மியின் விஷயத்தைப் பொருத்தவரை, சூசன் பேசியேதீரவேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்காமல், தன் மகன் தன்னையே கட்டுப்படுத்திக் கொள்வதற்கு அவகாசம் கொடுத்து, ஒருவேளை பின்னர் அந்நாளைய சம்பவங்களை அவர்கள் பேசியிருப்பதன் மூலம் நிலைமையைத் தணிய வைத்திருக்கமுடியும்.
அழுத்தத்தால் சோர்வடைந்த பிள்ளைகள்
இந்த நவீன உலகை அல்லல்படுத்தும் பெரும் பிரச்சினைகள், அழுத்தங்கள், கவலைகள் ஆகியவற்றை மனித குடும்பம் இதற்குமுன் ஒருபோதும் எதிர்ப்பட்டதில்லை. நிலைமைகள் மாறுகின்றன, தேவைகள் திடீரென அதிகரிக்கின்றன, மேலும் குழந்தைகளிடமிருந்து அதிகம் கேட்கப்படுகிறது. நல்ல பிள்ளைகள், கெட்ட நடத்தை (Good Kids, Bad Behavior) என்ற புத்தகம் இந்தப் பிரச்சினையைப்பற்றி கூறுகிறது: “பிள்ளைகள் அனுபவித்துக்கொண்டிருப்பதாக தோன்றும் பிரச்சினைகளில் அநேகம், மாறிக்கொண்டேவரும் சமூக எதிர்பார்ப்புகளினால் உண்டாக்கப்படுபவையாகவோ செல்வாக்கு செலுத்தப்படுபவையாகவோ இருக்கலாம்.” ADD/ADHD உள்ள பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடம் ஒரு கொடுங்கனவாக இருக்கலாம். தங்களுடைய சொந்த குறைபாடுகளைப் பூர்த்திசெய்ய போராடிக்கொண்டிருக்கையில், சாதகமற்றதாகவும் ஆபத்தானதாகவும் தோன்றக்கூடிய ஒரு சூழ்நிலையில் தொடர்ந்து விரைவில் மாறிக்கொண்டே இருக்கும் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் திடீர் அதிகரிப்புக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொள்ளும்படி அவர்கள் வற்புறுத்தப்பட்டு, அவர்களுடைய கவலை அதிகரிக்கப்படுகிறது. இந்தப் பிரச்சினைகளையெல்லாம் சமாளிக்க பிள்ளைகள் உணர்ச்சிப்பூர்வமாக முதிர்ச்சி அடையாதவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்குப் பெற்றோரின் உதவி தேவைப்படுகிறது.
முரண்பாடுகளைக் குறைத்திடுங்கள்
சந்தோஷமும் ஆரோக்கியமுமுள்ள பிள்ளைகளைக் கொண்டிருக்க, ஒழுங்கும் நிலையானத்தன்மையும் உள்ள ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தித் தருவது முக்கியமானதாக இருக்கிறது. வீட்டில் முரண்பாட்டைக் குறைப்பதற்கான மிகச் சிறந்த ஒரு திட்டம் எளிமையாக்கப்பட்ட வாழ்க்கைப் பாணியைப் பின்பற்றுவதோடு தொடங்கலாம். இந்தப் பிள்ளைகள் உணர்ச்சிவசப்படுபவர்களாகவும், கவனத்தைச் சிதறவிடுபவர்களாகவும், துருதுருவென்று இருப்பவர்களாகவும் இருப்பதனால், அளவுக்குமீறிய தூண்டுதலினால் வரும் எதிர்மறையான விளைவுகளைக் குறைப்பது அவசியமாக இருக்கிறது. அத்தகைய பிள்ளைகள் ஒரே சமயத்தில் வைத்துவிளையாட அனுமதிக்கும் விளையாட்டுச் சாமான்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிடுங்கள். ஒரு சமயத்தில் ஒரு வேலையை அல்லது திட்டத்தை மட்டும் கொடுங்கள்; அதை முடிக்கும்வரை வேறு எதையும் கொடுக்காமலிருக்க முயற்சியுங்கள். இந்தப் பிள்ளைகள் பெரும்பாலும் தங்களைத்தாங்களே சீரற்றவர்களாக ஆக்கிக்கொள்வதால், ஒழுங்கமைத்துக் கொடுத்தல் அவர்களுடைய குழப்பத்தைக் குறைக்கிறது. எளிதாகக் கையில் அகப்படக்கூடிய சாதனங்களை பிள்ளைகள் எந்தளவு குறைந்த எண்ணிக்கையில் கையாளவேண்டி இருக்கிறதோ, முக்கியமாக இருக்கும் காரியங்களைக் கையாளுவது அவர்களுக்கு அந்தளவு எளிதாக இருக்கிறது.
வீட்டில் அழுத்தத்தைக் குறைக்கும் மற்றொரு சிறப்பான வழி என்னவென்றால், பிள்ளைக்கு ஒரு நிலையானத்தன்மையின் உணர்ச்சியைக் கொடுக்கிற, நல்ல திட்டமிட்ட, ஆனால் கெடுபிடியல்லாத, வழக்கமுறையை நடைமுறைப்படுத்துவதாகும். அட்டவணையின் நேரம், சம்பவங்கள் நடக்கவேண்டிய வரிசையைப் போல் அவ்வளவு முக்கியமானதல்ல. கீழ்க்கண்ட நடைமுறையான ஆலோசனைகளைப் பின்பற்றுவதன்மூலம் இதை நிறைவேற்றலாம். எளிய மற்றும் நல்ல சரிவிகித உணவுகள் மற்றும் சிற்றுண்டிகள் மூலம் ஒழுங்கான இடைவேளைகளில் தேவையான சத்துணவைக் கொடுங்கள். அவர்களைத் தூங்கவைக்கத் தயாரிப்பதற்காக செய்யும் வழக்கமான காரியங்களை அனலோடும் அன்போடும் அவசரமின்றியும் செய்யுங்கள். கடைகளுக்குச் செல்லுதல் மிகை இயக்கப் பிள்ளைகளை மட்டுக்குமீறி தூண்டிவிடலாம்; ஆகவே முன்கூட்டியே திட்டமிட்டு அதிக கடைகளுக்குள் நுழையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வெளியே கூட்டிக்கொண்டு போகும்போது அவர்கள் எவ்வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்பதை விளக்குங்கள். விசேஷித்த தேவைகளையுடைய பிள்ளை தான் உணர்ச்சிவசப்பட்டு நடந்துகொள்ளுவதைக் கட்டுப்படுத்துவதற்கு திட்டவட்டமான வழக்கமுறைகள் உதவுகின்றன. மேலும் பெற்றோரின் பிரதிபலிப்புகளைப் பிள்ளைகள் முன்கூட்டியே அறிந்துகொள்ளவும் இது உதவுகிறது.
திட்டவட்டமாக இருப்பதற்கான உணர்ச்சியோடுகூட, விதிமுறைகளை ஏற்படுத்தி, மீறக்கூடாத விதிகளை மீறினால் ஏற்படும் விளைவுகளையும் அதில் உள்ளடக்குவது பயனுள்ளதாக இருக்கிறது. தாய் தகப்பன் இருவராலும் ஒத்துக்கொள்ளப்பட்டவையும், முரண்பாடற்றவையுமான தெளிவாக்கப்பட்ட விதிகள், ஏற்றுக்கொள்ளப்படும் நடத்தையின் எல்லைகளைப் பிள்ளைகளுக்கு நிர்ணயிக்கின்றன. அதோடுகூட அவர்களின் நடத்தைக்குத் தாங்களே பொறுப்பாளிகள் என்ற உணர்ச்சியையும் கற்பிக்கின்றன. தேவையானால் (பெற்றோரும் பிள்ளையும்கூட ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கு) விதிகளின் பட்டியலை அனைவரும் எளிதில் காண வசதியான ஒரு இடத்தில் ஒட்டிவையுங்கள். உணர்ச்சி சம்பந்தமான பாதுகாப்புக்கு முரண்பாடில்லாமல் இருப்பது முக்கியமாக இருக்கிறது.
ஒரு பிள்ளையின் முன்னுரிமைகளையும் விருப்புவெறுப்புகளையும் புரிந்துகொண்டு அவற்றிற்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ளுதலும் குடும்பத்தில் அவசியமில்லாமல் உருவாகும் அழுத்தங்களை மட்டுப்படுத்த பேருதவிபுரியும். இந்தப் பிள்ளைகளின் விசேஷித்த குணம் ஏறுமாறானதும் உணர்ச்சிவசப்படக்கூடியதுமாக இருப்பதால், மற்ற பிள்ளைகளோடு செயல்தொடர்புகொள்ளுதல் மிகக் கடினமான ஒரு அனுபவமாக இருக்கலாம். பகிர்ந்துகொள்ளுதல் முக்கியமாக, விளையாட்டு சாமான்களைப் பகிர்ந்துகொள்ளுதல், மற்ற பிள்ளைகளோடு சண்டையை உண்டாக்கும் ஒரு முக்கியமான விஷயமாக இருக்கலாம். ஆதலால் அத்தகைய பிள்ளைகள் பகிர்ந்துகொள்ள விரும்பும் விளையாட்டு சாமான்களைத் தெரிந்துகொள்ளும்படி பெற்றோர் விட்டுவிடலாம். கூடுதலாக, அவர்களோடு விளையாடுவதற்குக் குறைந்த எண்ணிக்கையுள்ள கூட்டாளிகளைக் கொடுப்பதன் மூலமும், அவர்களை மட்டுக்குமீறி கிளர்ச்சியடையச் செய்யாத செயல்களை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமும் அவர்கள் தூண்டுவிக்கப்படும் அளவைச் சீர்படுத்துவதும்கூட அவர்கள் தங்களுடைய ஏறுமாறான உணர்ச்சிவசப்பட்ட நடத்தையைக் கட்டுப்படுத்த உதவலாம்.
ஒவ்வொரு பிள்ளையும் தனக்கே உரித்தான வழியில் வளர்ந்துவரும்படி விட்டுவிடுவதும், தேவையில்லாத காரியங்களுக்கு இணங்கிப்போகும்படி அழுத்தம் கொடுப்பதையோ, நெருக்குவதையோ தவிர்ப்பதும் பெற்றோருக்கு முக்கியமாக இருக்கிறது. ஒரு பிள்ளை குறிப்பிட்ட ஒரு உணவை அல்லது துணிமணியை வெறுக்குமானால் அதை தவிர்த்துவிடுங்கள். இந்தச் சிறிய விஷயங்களுக்கெல்லாம் பிள்ளையை வற்புறுத்துவது பிரயோஜனமுள்ளதாக இருக்காது. அடிப்படையாகவே ஒவ்வொன்றையும் கட்டுப்படுத்த முயற்சிக்காதீர்கள். சமநிலையுடையோராக இருங்கள். ஆனால் ஒரு கிறிஸ்தவ குடும்பத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படத்தக்கவை எவை என்று நீங்கள் நிர்ணயித்து விட்டீர்களேயானால் அவற்றைக் கடைப்பிடியுங்கள்.
நடத்தையை நிர்வகித்தல்
முன்கூட்டியே அறிந்துகொள்ளப்பட முடியாத பிள்ளைகளுக்கு அதிகளவு நிர்வாகம் அவசியமாயிருக்கிறது. இதன் விளைவாக, அநேகப் பெற்றோர் தாங்கள் அடிக்கடி சிட்சைகொடுக்க வேண்டியிருக்கிறதோ என்ற குற்றவுணர்ச்சியால் வாதிக்கப்படுகின்றனர். எனினும், சிட்சிப்பதற்கும் தகாதமுறையில் நடத்துவதற்கும் உள்ள வித்தியாசத்தைப் பகுத்துணர்வது முக்கியமாக இருக்கிறது. எ ஃபைன் லைன்—வென் டிஸிப்ளின் பிக்கம்ஸ் சைல்ட் அபியூஸ் என்ற புத்தகம் சொல்லுகிறபடி, சரீரப்பிரகாரமான துர்ப்பிரயோகம் அனைத்திலும் 21 சதவீதம், பிள்ளைகள் வீண்வம்பு பண்ணும்போதுதான் சம்பவிக்கிறது என்பதாக அறிக்கை செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே, ADD/ADHD உள்ள பிள்ளைகள் “சரீரப்பிரகாரமாக துர்ப்பிரயோகிக்கப்படுவதற்கும் அசட்டை செய்யப்படுதலுக்கும் உள்ளாகும் அதிக ஆபத்தில் இருக்கின்றனர்” என்பதாக அந்த ஆராய்ச்சி முடிவுக்கு வருகிறது. மறுக்கமுடியாதவகையில், விசேஷ தேவைகளைக் கொண்ட இளைஞரை வளர்த்தல் அழுத்தம் நிறைந்ததாய் இருக்கக்கூடும். ஆனால் அவர்களை நிர்வகிப்பது ஆரோக்கியமானதும் சமநிலையானதுமாக இருக்கவேண்டும். இந்தப் பிள்ளைகள் வழக்கமாகவே நல்ல புத்திசாலிகளாகவும் அதிக படைப்புத்திறமை உள்ளவர்களாகவும் இருப்பதனால், நியாயமாக யோசிப்பதைத் தேவைப்படுத்தும் சூழ்நிலைகளைக் கையாளும் பெற்றோருக்கு இவர்கள் ஒரு சவாலாக இருக்கின்றனர். அப்படிப்பட்ட பிள்ளைகள் ஒரு பெற்றோரின் மிகவும் புத்திக்கூர்மையும் நியாயமுமான யோசனையில் உள்ள குற்றங்களைச் சுட்டிக்காட்டும் வழியைக் கொண்டிருக்கின்றனர். அவர்களை அவ்வாறு செய்ய விட்டுவிடாதீர்கள்! பெற்றோராக உங்கள் அதிகாரத்தை உங்கள்வசத்திலேயே வைத்திருங்கள்.
அன்பான வழியில், ஆனால் உறுதியுடன், விளக்கத்தைச் சுருக்கமாக அளியுங்கள்; அதாவது, வளவளவென்று விளக்கிக்கொண்டு இருக்கவேண்டாம். மேலும் மீறக்கூடாத விதிகளை மீறும்படி விட்டுக்கொடுத்து விடாதீர்கள். “உள்ளதை” ஆம் என்றும் “இல்லாததை” இல்லை என்றும் மெய்ப்பியுங்கள். (மத்தேயு 5:37-ஐ ஒப்பிடவும்.) பிள்ளைகள் ராஜதந்திரிகள் அல்ல; இதன் காரணமாக, அவர்களோடு பேரம்பேசிக்கொண்டிருப்பது, வாக்குவாதங்கள், கோபம், ஏமாற்றம் போன்றவற்றிற்கு வழிநடத்தி, கூச்சலிடுதல், வன்முறை போன்றவையாக மாறுமளவுக்கும் தீவிரமடையலாம். (எபேசியர் 4:31) அதைப்போலவே அளவுக்குமீறி எச்சரிப்புக் கொடுப்பதையும் தவிர்த்துவிடுங்கள். சிட்சை தேவையாயிருக்குமானால், தாமதமின்றி சிட்சிக்கவேண்டும். ரெய்சிங் பாஸிடிவ் கிட்ஸ் இன் எ நெகடிவ் உவர்ல்ட் என்ற புத்தகம் இவ்வாறு வற்புறுத்துகிறது: “சாந்தம், நம்பிக்கை, உறுதி—ஆகிய இவற்றால் ஆனதுதான் அதிகாரம்.” கூடுதலாக தி ஜெர்மன் ட்ரிப்யூன் கொடுக்கக்கூடிய தலை சிறந்த ஆலோசனைகளைக் கவனியுங்கள்: “குழந்தையிடம் பேசும்போது எப்போதுமே அதன் கவனத்தை ஈர்க்கும்வண்ணம் பேசுங்கள். அடிக்கடி அதன் பெயரைப் பயன்படுத்துங்கள். கண்ணோடு கண் பார்த்து பேசுங்கள். எளிமையான மொழிநடையில் பேசுங்கள்.”
பெற்றோர் கட்டுப்பாட்டை இழக்கும்போது துர்ப்பிரயோகம் செய்யப்படுகிறது. ஒரு பெற்றோர் கூச்சலிடுகிறார் என்றால், அவர் ஏற்கெனவே கட்டுப்பாட்டை இழந்துவிட்டிருக்கிறார். பிள்ளை-வளர்ப்பு மற்றும் சிட்சை என்ற பொருளில் நீதிமொழிகள் அதிகாரம் 15 பேசுகிறது. உதாரணமாக, 4-ம் வசனம் (தமிழ்க் கத்தோலிக்க பைபிள்) கூறுகிறது: “சமாதான வாக்கு வாழ்வுதரும் மரமாம். அடக்கப்படாத வாய் உயிரை நசுக்கும்”; 18-ம் வசனம்: “கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடிய சாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்”; இறுதியாக, 28-ம் வசனம்: “நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்.” ஆகவே, நாம் என்ன சொல்கிறோம் என்பதை மட்டுமல்லாமல், எப்படி சொல்கிறோம் என்பதையும் அறிந்திருப்பது முக்கியமாக இருக்கிறது.
பாராட்டுதல், கண்டனமல்ல
வளர்க்க கடினமாக உள்ள பிள்ளைகள் படைப்புத்திறமைமிக்க, விநோதமான, பைத்தியக்காரத்தனமாகவும்கூட உள்ள, காரியங்களையெல்லாம் செய்வதனால், குற்றம்காண்பது, கிண்டல் பண்ணுவது, தாழ்த்திப் பேசுவது, கோபத்தில் தாக்குவது போன்றவை பெற்றோருக்கு எளிதாக இருக்கிறது. எனினும், டுடேஸ் இங்லிஷ் வர்ஷன் சொல்லுகிறபடி, பைபிள் எபேசியர் 6:4-ல் “கிறிஸ்தவ சிட்சையிலும் போதனையிலும்” பிள்ளைகளை வளர்க்கும்படி பெற்றோருக்கு அறிவுரை கூறுகிறது. தவறு செய்தவர்களை இயேசு எவ்வாறு சிட்சித்தார்? மக்களைப் பயிற்றுவித்து கற்றுக்கொடுத்த போதனாமுறை சிட்சையை (instructive discipline) இயேசு பயன்படுத்தினார். அவர்களோடு பாரபட்சமின்றியும் உறுதியாகவும் நடந்துகொண்டார். சிட்சை என்பது ஒரு செய்முறை, ஒரு போதனா முறையுமாகும். பிள்ளைகளைக் கையாளும்போது இது வழக்கமாக திரும்பத்திரும்ப செய்யப்படவேண்டி இருக்கிறது.—ஆங்கில விழித்தெழு! செப்டம்பர் 8, 1992 இதழில் “பைபிளின் கருத்து . . . ‘சிட்சையின் பிரம்பு’—பழமைபட்டு விட்டதா?,” என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
பொருத்தமான சிட்சை, நம்பிக்கை, பாசம், நிலையானத்தன்மை ஆகியவற்றாலான ஒரு சூழ்நிலையை உருவாக்குகிறது. ஆகவே சிட்சை அவசியமாய் இருக்கும்போது, அது விளக்கங்களோடு கொடுக்கப்படவேண்டும். பிள்ளைகளைப் பயிற்றுவிப்பதற்கு உடனடி தீர்வுகள் ஒன்றும் கிடையாது, ஏனென்றால் பிள்ளைகள் காலப்போக்கில், படிப்படியாகத்தான் கற்றுக்கொள்கின்றனர். எந்தப் பிள்ளையையும், முக்கியமாக வளர்ப்பதை சமாளிக்கமுடியாத பிள்ளையை, தகுந்த முறையில் வளர்க்க, அதிக கரிசனை காட்டுதலும் நேசித்தலும், அதிக நேரமும் வேலைசெய்வதும் தேவைப்படுகிறது. கீழ்க்கண்ட சுருக்கமான பழமொழியை ஞாபகத்தில் வைத்திருப்பது உதவியாய் இருக்கலாம்: “செய்வதைச் சொல்லுங்கள், சொல்வதைச் செய்யுங்கள், செய்வதாகச் சொல்வதையே செய்யுங்கள்.”
கவலைதரும் நடத்தையைக் காண்பிக்கும் பிள்ளைகளைக் கையாளுவதன் பிரச்சினையின் அம்சங்களில் பெருத்த ஏமாற்றத்தைத் தரும் ஒரு அம்சமானது அவர்கள் மட்டுக்குமீறிய கவனத்திற்காக ஏங்குவதாகும். அடிக்கடி அவர்களுக்குக் கிடைக்கும் கவனம் நம்பிக்கைகரமாக இருப்பதைவிட எதிர்மறையானதாகவே இருக்கிறது. இருப்பினும், நல்ல நடத்தையையோ அல்லது ஒரு வேலையை நல்லபடியாக செய்திருப்பதையோ உடனடியாக கவனியுங்கள், பாராட்டுங்கள், அல்லது பரிசு கொடுங்கள். ஒரு பிள்ளைக்கு இது மிகவும் உற்சாகமூட்டுவதாக இருக்கிறது. தொடக்கத்தில் உங்களுடைய முயற்சிகள் உங்கள் திறமைக்கு அப்பாற்பட்டவையாய் இருப்பதாகத் தோன்றலாம், ஆனால் பலன்களைப் பார்க்கும்போது அவை மிகவும் பிரயோஜனமானவையே. பிள்ளைகளுக்குச் சிறிய சிறிய, ஆனால் உடனடியான பரிசுகள் தேவைப்படுகின்றன.
க்ரேகோடு ஏற்பட்ட ஒரு தகப்பனின் அனுபவம்
“எங்கள் மகன் க்ரேகுக்கு ஐந்து வயதாகி அவன் மழலையர் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, அவனுக்கு ADHD இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அச்சமயத்தில் நாங்கள் ஒரு குழந்தை வளர்ச்சி மருத்துவர் ஒருவரைப் போய் பார்த்தோம். க்ரேகுக்கு நிச்சயமாக ADHD இருக்கிறது என்பதை அவர் ஊர்ஜிதப்படுத்தினார். எங்களிடம் அவர் சொன்னார்: ‘இது அவனுடைய தவறு கிடையாது, உங்களுடைய தவறும் கிடையாது. அவனால் நிலைமையை மாற்றவே முடியாது, ஆனால் உங்களால் முடியும்.’
“அந்த வார்த்தைகளை நாங்கள் அடிக்கடி நினைத்துப் பார்க்கிறோம். ஏனென்றால் அவ்வார்த்தைகள் தன்னுடைய ADHD-ஐ சமாளிக்க எங்கள் மகனுக்கு உதவ, பெற்றோராக எங்களுக்கு ஒரு பெரிய உத்தரவாதம் இருக்கிறது என்பதை எங்களுக்குத் தெட்டத் தெளிவாக்குகின்றன. அன்று டாக்டர் எங்களைப் படிக்கச் சொல்லி வீட்டுக்குப் பிரசுரங்களைக் கொடுத்து அனுப்பினார். கடந்த மூன்று வருட காலத்தில் நாங்கள் பெற்றுக்கொண்ட அறிவானது, க்ரேகுக்கு பெற்றோராக நாங்கள் செய்யவேண்டிய உத்தரவாதங்களை நிறைவேற்றுவதில் மிகவும் முக்கியமானதாக இருந்துவந்திருக்கிறது என்று நம்புகிறோம்.
“தகுதியான நடத்தையை வளர்த்துவதும் எச்சரிக்கைகள் கொடுப்பதும், அவசியப்படுமானால் தவறான நடத்தைக்கு ஒரு தண்டனையைக் கொடுப்பதும் ADHD உள்ள பிள்ளையை வளர்ப்பதில் மிக முக்கியமாக இருக்கிறது. உங்களால் எந்தளவுக்கு அதிகம் திட்டமிட்டவர்களாகவும் முரண்பாடின்றியும் நடந்துகொள்ளமுடிகிறதோ, அந்தளவுக்கு நீங்கள் நல்ல பலனை அடைவீர்கள். ADHD உள்ள ஒரு பிள்ளையை வளர்ப்பதில் இந்த எளிய கூற்றுகள் ஒருவேளை முக்கிய அம்சங்களாக இருக்கலாம். எனினும், இதை நீங்கள் ஒரு நாளில் பல தடவைகள் செய்யவேண்டிய தேவையிருப்பதால் சுலபமாக வாயில் சொல்லிவிடலாம், ஆனால் செய்வதுதான் கடினம்.
“மிகவும் பலனளிப்பதாக நாங்கள் கண்ட ஒரு கருவியானது இடைவேளை விடுவது ஆகும். ஒரு தவறான நடத்தையை மாற்ற நாங்கள் எப்பொழுதெல்லாம் இடைவேளை விடுகிறோமோ அப்பொழுதெல்லாம் நம்பிக்கையளிக்கும் மிக நல்ல நடத்தையை ஊக்கப்படுத்தி வளர்ப்பதற்கான ஒரு திட்டத்தையும் தொடங்கிவைக்கிறோம். நல்ல நடத்தையை வளரச்செய்யும் இந்தக் காரியம் அங்கீகாரத்தைத் தெரிவிக்கும் ஒரு வார்த்தையாகவோ, ஒரு கட்டியணைத்தலாகவோ, அல்லது உறுதியளிக்கும் ஏதோவொன்றாகவோ அல்லது சலுகையாகவோ இருக்கலாம். நாங்கள் கடைக்குப்போய் ஒரு ஸ்டிக்கர் அட்டவணையை (sticker chart) வாங்கினோம். அதன் தலைப்பில் தகுதியான நடத்தை எது என்பதை எழுதினோம். க்ரேக் தகுந்தமுறையில் நடந்துகொள்வதை நாங்கள் காணும் ஒவ்வொரு தடவையும் அவனுடைய அட்டவணையில் ஒட்டிக்கொள்வதற்காக அவனுக்கு ஒரு ஸ்டிக்கரைத் தருகிறோம். அந்த அட்டவணையில் ஸ்டிக்கர்கள் நிறைந்ததும், உதாரணமாக 20 ஸ்டிக்கர்கள் என்று வைத்துக்கொள்வோமே, அவனுக்கு ஒரு பரிசு கிடைக்கிறது. இது வழக்கமாகவே ஒரு பூங்காவுக்குச் சென்றுவருவதைப் போன்றதாக, அவன் எதைச் செய்வதில் சந்தோஷப்படுகிறானோ அதுவாக இருக்கிறது. நன்றாக நடந்துகொள்ளும்படி இது அவனை உந்துவிக்கிறது, ஆகவே இது மிகவும் உதவுவதாய் இருக்கிறது. அவன் அந்த ஸ்டிக்கர்களை ஒட்டி, அவன் எவ்விதமாக நடந்துகொள்கிறான் மற்றும் எவ்வளவு சீக்கிரம் அவனுக்கு ஒரு பரிசு கிடைக்கப்போகிறது என்றெல்லாம் அதிலிருந்து அவனால் காணமுடியும்.
“பலனுள்ளதாக நாங்கள் கண்டிருக்கும் மற்றொரு கருவி க்ரேகுக்குத் தெரிவுகளை முன்வைப்பதாகும். நேரடியான ஒரு கட்டளையைக் கொடுப்பதற்குப் பதிலாக, அவனுக்கு ஒரு தெரிவைக் கொடுக்கிறோம். அவன் தகுதியானமுறையில் நடந்துகொள்ளலாம், இல்லையென்றால் அதனால் வரும் நியாயமான பின்விளைவுகளை அனுபவிக்கலாம், இரண்டிலொன்று. இது அவனுக்குப் பொறுப்புணர்ச்சியையும் சரியான தீர்மானங்கள் எடுக்கவும் கற்பிக்கிறது. ஒரு கடையிலோ ஹோட்டலிலோ சேட்டைப் பண்ணுவதைப்போன்ற ஏதோவொன்று தொடர்ந்து பிரச்சினையாகவே இருந்துவருமானால், ஸ்டிக்கர் ஒட்டுவதற்கான அட்டவணையை ஒரு பரிசோடு சேர்த்து உபயோகிக்கலாம். இவ்விதமாக தகுதியான நடத்தையினால் வரக்கூடிய நன்மைகளை அவன் பார்க்கிறான், மேலும் அவனுடைய முன்னேற்றத்திற்கான எங்கள் அங்கீகாரத்தையும் நாங்கள் காட்டுகிறோம்
“பிள்ளையின் நடத்தையையும் பிரதிபலிப்புகளையும் சீர்படுத்துவதற்கான அவனுடைய அல்லது அவளுடைய திறமையை ADHD பாதிக்கிறது என்பது பெரும்பாலான ஜனங்களுக்குத் தெரிவதில்லை. இந்தப் பிள்ளைகள் கடினமாக முயற்சித்திருந்தால் தாங்கள் கவனம்செலுத்தும் சமயத்தையும் தங்களுடைய நடத்தையையும் கட்டுப்படுத்தியிருக்கமுடியும் என்பதாக அநேக மக்கள் கருதுகின்றனர். ஆகவே இப்பிள்ளைகள் நன்கு நடந்துகொள்ள தவறும்போது அவர்கள் பெற்றோர்மேல் பழியைப் போடுகின்றனர்.
“இராஜ்ய மன்றத்தில் நடைபெறும் சபை கூட்டத்தில் இரண்டு மணிநேரம் அடங்கி உட்கார்ந்திருப்பது ADHD உள்ள ஒரு பிள்ளைக்குச் சரீரப்பிரகாரமாகவே முடியாத காரியமாகும். க்ரேக் ஐந்தே ஐந்து வயது உள்ளவனாய் இருந்தபோது ஒவ்வொரு கூட்டத்திற்கு முன்பும் அழுதுகொண்டு, ‘இந்தக் கூட்டம் முடியறதுக்கு ரொம்ப நேரம் ஆகுமா இல்ல சீக்கிரமே முடிஞ்சிருமா?’ என்று கேட்டதை நாங்கள் ஒருக்காலும் மறக்கமாட்டோம். இரண்டு மணிநேர கூட்டமாக இருக்குமானால் அவன் அதிகம் அழுவான். ஏனென்றால் தன்னால் அவ்வளவு நேரம் அடங்கி உட்கார்ந்திருக்க முடியாது என்பது அவனுக்குத் தெரியும். ADHD விளைவிக்கும் சீர்கேட்டையும் குறைபாடுகளையும் நாங்கள் புரிந்துகொண்டு விட்டுவிடவேண்டும். அந்தச் சீர்கேட்டை யாரையும்விட யெகோவா நன்கு புரிந்துகொள்கிறார். ஆகவே அது ஆறுதலின் ஒரு மூலமாக இருக்கிறது. தற்போது க்ரேக் சிகிச்சையின்கீழ் இல்லை, தனது வயதுக்கேற்ற வகுப்பில் படித்துக்கொண்டிருக்கிறான்.
“யெகோவாவை எங்களுடைய நம்பிக்கையாக்கிக்கொள்வதும் புதிய உலகத்தை நோக்கியிருப்பதும் எங்களுக்குச் சமாளிக்க உதவுகிறது. ஏற்கெனவே எங்களுடைய நம்பிக்கையை க்ரேக் பெரிதும் மதித்துணருகிறான். பரதீஸிய பூமியில் யெகோவா எவ்வாறு ADHD-ஐ ஒழித்துக்கட்டுவார் என்பதைப்பற்றி அவன் நினைக்கும்போது, அவன் திளைப்படைந்து, கண்களில் நீரும் ததும்புகிறது.”
[பக்கம் 9-ன் பெட்டி]
நல்ல நடத்தைக்கான பரிசுகளாக இருக்கக்கூடியவை:
1. பாராட்டுதல்—நன்கு செய்து முடிக்கப்பட்ட ஒரு வேலைக்காக வார்த்தைகளால் சொல்லப்படும் பாராட்டுதல்; நல்ல நடத்தைக்காக வெளிக்காட்டப்படும் போற்றுதல். இவற்றோடுகூட அன்பு, கட்டியணைத்தல்கள், கனிவான முகபாவங்கள் போன்றவை சேர்ந்து வெளிக்காட்டப்படும்.
2. அட்டவணை முறை—நல்ல நடத்தையை ஊக்குவிப்பதற்காக, கவர்ச்சிகரமான ஸ்டிக்கர்களோடோ நட்சத்திர வடிவ ஸ்டிக்கர்களோடோ அனைவரும் காணத்தக்க இடத்தில் வைக்கப்பட்டதுமாகும்.
3. நல்ல காரியங்களின் பட்டியல்—ஏற்றுக்கொள்ளப்பட்ட புகழத்தக்க சாதனைகளைப் பற்றியது. பிள்ளை ஏதோவொரு காரியத்தை நல்லபடியாக செய்கிற ஒவ்வொரு முறையும், தொடக்கத்தில் அது எவ்வளவு சிறிய காரியமாக இருந்தாலும்சரி, அதை எழுதி வையுங்கள், அதைக் குடும்ப அங்கத்தினர் ஒருவருக்கு வாசித்துக் காட்டுங்கள்.
4. நடத்தைமானி—பிள்ளை எதையாவது நல்லபடி செய்யும்போது, பிள்ளையின் வயதைப் பொறுத்து அனுசரித்து, பீன்ஸ்களையோ ஆரஞ்சு மிட்டாய்களையோ ஒரு ஜாடியில் போட்டுவையுங்கள் (காணப்படும் வகை ஊக்குவிப்பு). அதன் நோக்கம் பரிசு அளிப்பதற்காக ஒரு புள்ளிக் கணக்கு முறையை ஸ்தாபிப்பதாகும். பரிசு, எப்படியிருந்தாலும் குடும்பத்தினர் செய்யலாமென்றிருந்த ஏதோவொன்றை, திரைப்படத்துக்குப் போவது, ஸ்கேட்டிங் விளையாட்டு, அல்லது ஹோட்டலுக்குப்போய் சாப்பிடுதல் போன்ற ஏதாவதொன்றையும் உள்ளடக்கலாம். “நீ ஒழுங்கா நடந்துக்கில்லன்னா கூட்டிக்கிட்டுப்போக மாட்டோம்,” என்று பிள்ளைக்கு அழுத்திக்காட்டுவதைவிட, “நீ ஒழுங்கா நடந்துக்கிட்டா, கூட்டிக்கிட்டுப்போவோம்,” என்று சொல்லிப்பாருங்கள். முக்கியமானது என்னவென்றால் எதிர்மறையான எண்ணங்களை நம்பிக்கைகரமான எண்ணங்களாக மாற்றுவதே. ஆனாலும் மாற்றம் ஏற்படுத்துவதற்கு நியாயமான அவகாசம் கொடுக்கவேண்டும்.
[பக்கம் 7-ன் படம்]
உரையாடல்கள் சிலசமயங்களில் உணர்ச்சிவேகத்தினால் வெடித்தெழும் நிலைக்குப் போகலாம்
[பக்கம் 8-ன் படம்]
தீர்மானங்கள் எடுக்கும்போது விளக்குங்கள், அவற்றைக் கடைப்பிடியுங்கள்
[பக்கம் 10-ன் படம்]
தன்னுடைய ஸ்டிக்கர் அட்டவணையில் பெருமிதத்துடன் புது ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டுகிறான்