“அமைதியா உட்காரு, கவனம் செலுத்து!”
கவனப் பற்றாக்குறை மிகை-இயக்க கோளாறை சமாளிப்பது
“செல்லம் கொடுத்து கொடுத்தே கார்ல் கெட்டுப்போய்விட்டான் என்று எப்பப்பார்த்தாலும் ஜிம் புலம்பினார். நாம் உண்மையில் என்னைத்தான் அர்த்தப்படுத்தினார் அவனை கொஞ்சம் கண்டித்தால் உருப்படுவான் என்று சொன்னார். இப்போது இந்த டாக்டர் அது என்னுடைய தப்பும் கிடையாது, எங்கள் இருவரின் தப்பும் கிடையாது, காலின் ஆசிரியர்களின் தப்பும் கிடையாது என்கிறார்: அப்படியென்றால் எங்களுடைய செல்லப்பிள்ளைக்கு உண்மையில் என்னமோ குறை இருந்தது.”
கவனப் பற்றாக்குறை மிகை-இயக்க கோளாறால் (Attention Deficit Hyperactivity Disorder [ADHD]) கார்ல் அவதிப்படுகிறான்; இது கவனக்குறைவு, முன்யோசனையில்லா நடத்தை, மிதமிஞ்சிய துருதுருப்பு போன்ற பண்புகளை உடைய ஒரு கோளாறு. பள்ளிப் பருவ பிள்ளைகள் அனைவரையும் 3 முதல் 5 சதம் வரை இந்தக் கோளாறு பாதிப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. “அவர்களுடைய மனங்கள், பல சேனல்களை சரிவர தெரிவுசெய்யாத பட்டன்களை உடைய டிவி செட்டுக்களைப் போன்றவை. எந்தவொரு ஒழுங்கோ கட்டுப்பாடோ இல்லாமல் ஒரு சிந்தனையிலிருந்து மற்றொன்றினிடமாக தாவுகிறது” என்பதாக கற்கும் துறையில் நிபுணராக இருக்கும் ப்ரிஸில்லா எல். வெல் கூறுகிறார்.
ADHD-ன் மூன்று முக்கியமான நோய் அறிகுறிகளை சுருக்கமாக பார்க்கலாம்.
கவனக்குறைவு: ADHD இருக்கும் பிள்ளையால் முக்கியமில்லாத விவரங்களை ஒதுக்கித்தள்ளிவிட்டு, ஒரேவொரு விஷயத்தில் மாத்திரம் கவனம்செலுத்த முடியாது. எனவேதான், முக்கியமில்லாத காட்சிகள், ஓசைகள், வாசனைகள் என இவற்றால் அவன் வெகுசுலபமாக கவனச்சிதறலுக்கு ஆளாகிறான். a அவன் உண்மையில் கவனம் செலுத்துகிறான், ஆனால் ஒன்றுகூட அவனது கவனத்தை கவருவதாக இல்லை. எதற்கு முக்கியமாக கவனம் செலுத்தவேண்டும் என்று அவனால் தீர்மானிக்க முடிவதில்லை.
முன்யோசனையில்லாத நடத்தை: ADHD இருக்கும் பிள்ளை, யோசிப்பதற்கு முன்பே செயல்படுகிறான், பின்விளைவுகளைப் பற்றி அவன் கொஞ்சமும் சிந்திப்பதில்லை. சரிவர திட்டமிட தவறுவதையும் காரியங்களைச் சரிவர சீர்தூக்கி பார்க்க தவறுவதையும் அவன் வெளிப்படையாக காட்டுகிறான். சிலநேரங்களில் அவனுடைய செயல்கள் ஆபத்தானவையாக உள்ளன. “அவன் வீட்டுக்கு வெளியே தலைகால் புரியாமல் ஓடி, ஜன்னல் திட்டின்மீது ஏறி, பின் அங்கிருந்து மரத்தின்மீது தாவுகிறான். அதன் விளைவாக, தேவையில்லாத வெட்டுக்காயங்களையும், கீறல்களையும் சிராய்ப்புகளையும் அதிகமாகவே ஏற்படுத்திக்கொள்கிறான், அடிக்கடி டாக்டரிடம் போகிறான்” என்பதாக டாக்டர் பால் வென்டர் எழுதுகிறார்.
மிகை-இயக்கம்: மிகை-இயக்கம் உள்ள பிள்ளைகள் எப்பொழுது பார்த்தாலும் துருதுருவென்று எதையாவது நோண்டிக்கொண்டே இருப்பார்கள். அவர்களால் கொஞ்சம் நேரம்கூட சும்மா உட்கார முடியாது. “அவர்கள் பெரியவர்களாக வளர்ந்தாலும்கூட அப்படியே இருப்பார்கள். கால்களையும், பாதங்களையும், முழங்கைகளையும், கைகளையும், உதடுகளையும், அல்லது நாக்கையும் ஏதேனும் ஒருவகையில் தொடர்ந்து அசைப்பது உன்னிப்பாக கவனித்தால் தெரியவரும்” என டாக்டர் கோர்டன் சர்ஃபான்டின் மறைந்திருக்கும் ஊனம் என்ற தன்னுடைய ஆங்கில புத்தகத்தில் எழுதுகிறார்.
இருப்பினும், கவனக்குறைவும், முன்யோசனையற்ற நடத்தையும் உள்ள சில பிள்ளைகள் மிகை-இயக்கம் உள்ளவர்கள் அல்ல. இவர்களுடைய கோளாறு சில சமயங்களில் வெறுமனே கவனப் பற்றாக்குறை கோளாறு (Attention Deficit Disorder, [ADD]) என்பதாக அழைக்கப்படுகிறது. டாக்டர் ரேனால்டு கோல்டுபர்க் இவ்வாறு ADD-ஐ விளக்குகிறார்: ‘மிகை-இயக்கம் ஏதும் இல்லாமலே [அது] நிகழலாம். அல்லது ஏதாவது ஒரு அளவு மிகை-இயக்கத்தாலும் நிகழலாம், அதாவது கண்ணுக்குத் தெரியாத அளவு முதற்கொண்டு வெறுப்படைய செய்யும் அளவுக்கும், மிதமிஞ்சி செயலிழக்கச்செய்யும் அளவு வரையாகவும்கூட நிகழலாம்.”
ADHD எதனால் உண்டாகிறது?
இவ்வளவு காலமும், பெற்றோர் சரிவர வளர்க்க தவறியது முதல் கதிர்வீச்சின் ஒளி வரை எதுவாக இருந்தாலும் சரி எல்லாமே கவனக்குறைவு பிரச்சினைகளுக்கு காரணங்களாக குற்றம் சாட்டப்பட்டன. ஆனால் மூளையில் நிகழும் சில செயல்களில் ஏற்படும் தொந்தரவுகளே ADHD-யுடன் தொடர்புடையவை என்று இப்போது கருதப்படுகிறது. ADHD நோய் அறிகுறிகளுள்ள வளரிளம் பருவத்தவர் ஒரு 25 பேரைக்கொண்டு தேசிய மனநல நிலையம் ஒரு சோதனையை 1990-ல் நடத்தியது; இவர்களுக்கு, செயலையும் கவனத்தையும் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதிகளில் குளுக்கோஸ் உயிர்ச்சத்தாக மாறுவது (metabolize) மிகவும் மெதுவாக நடந்ததைத் கண்டறிந்தது. ADHD உள்ளவர்களில் சுமார் 40 சதவிகிதத்தினருக்கு, தனிப்பட்டவரின் மரபணு அமைப்பும் ஒரு முக்கிய பங்கு வகிப்பதாகத் தோன்றுகிறது. கர்ப்ப காலத்தில் தாய் உட்கொள்ளும் மதுபானம் அல்லது போதைப் பொருட்கள், ஈய நச்சு, சிலரது விஷயத்தில் உணவு கட்டுப்பாடு முறை ஆகியவையும் ADHD-யுடன் தொடர்புடைய காரணிகளாகும் என்று மிகை-இயக்க பிள்ளையைப் பற்றிய புத்தகம் (ஆங்கிலம்) சொல்கிறது.
ADHD உள்ள வாலிபரும், வளர்ந்தவரும்
சமீப காலங்களில், ADHD என்பது வெறும் பிள்ளைப்பருவத்தில் மாத்திரம் வரும் ஒரு மனநிலை அல்ல என்பதை டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். “உதாரணத்திற்கு, சிகிச்சைக்காக பிள்ளையை பெற்றோர் கொண்டுவருவார்கள், ‘சின்னப்பிள்ளையாக இருக்கும்போது நானும் இப்படித்தான் இருந்தேன்’ என்று சொல்வார்கள். பிறகு, வரிசையில் காத்திருக்க, கூட்டங்களில் அமைதியாக உட்கார, ஒரு வேலையை முடிக்க என இப்படியாக இன்னும்கூட அவர்களுக்கு பிரச்சினை இருப்பதை பிறகு ஒத்துக்கொள்வார்கள்” என்று டாக்டர் லேரி சில்வர் கூறுகிறார். ADHD உள்ள பிள்ளைகளில் சுமார் பாதிக்கும் அதிகமான பிள்ளைகள் இத்தகைய நோய் அறிகுறிகள் சிலவற்றை தங்களுடைய வாலிப பருவத்திற்கும் வளர்ந்த பருவத்திற்கும் (adulthood) கடத்துவதாக தற்போது நம்பப்படுகிறது.
ஆபத்தான நடவடிக்கையில் ஈடுபடும் ADHD உள்ளவர்கள் வாலிப பருவத்தில் சட்டவிரோதமான நடவடிக்கையில் ஈடுபடுபவர்களாகவும் ஒருவேளை மாறிவிடலாம். ADHD உள்ள ஒரு வாலிபரைப்பற்றி அவருடைய அம்மா கூறுவதாவது: “அவனை காலேஜியில் சேர்க்க முடியாதே என்று நான் கவலைப்பட்டதுண்டு. ஆனால் இப்போதோ அவன் ஜெயிலுக்கு போகாமல் இருந்தால் போதும் என்று பிரார்த்திக்கிறேன்.” இப்படிப்பட்ட பயங்கள் நியாயமானவையே என்பதை மிகை-இயக்க கோளாறு உள்ள 103 இளைஞர் குழுவையும், கோளாறு இல்லாத 100 பிள்ளைகள் அடங்கிய குழுவையும் ஒப்பிட்டு நடத்தப்பட்ட சுற்றாய்வு காட்டியது. “மிகை-இயக்க கோளாறு இருந்தவர்கள் குழுவில், அவர்கள் 20-களில் இருந்தபோது அநேகமாக இரண்டு தடவை கைது ஆன பதிவுகளைப் பெற்றிருப்பதாகவும், அநேகமாக ஐந்து தடவை பெரும் குற்றச்செயல் புரிந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டனர்; அநேகமாக பத்து தடவை சிறையில் போடப்பட்டதற்கும் சாத்தியம் இருந்தது” என்று நியூஸ்வீக் பத்திரிகை அறிவிக்கிறது.
வளர்ந்த ஒருவரின் முன் ADHD விசேஷ பிரச்சினைகளின் மூட்டையை வைக்கிறது. டாக்டர் எட்னா கோப்பிலாண்டு கூறுகிறார்: “மிகை-இயக்கம் உள்ள ஒரு பையன் பெரியவனாக வளர்ந்தால், நிலையாக இல்லாமல் அடிக்கடி வேலையை மாற்றிக்கொண்டே இருப்பான், வேலையிலிருந்து தூக்கி எறியப்படுவான், நாள் முழுவதும் நேரத்தை வீணாக்குவான், பரபரப்பாக இருப்பான்.” இதற்கு என்ன காரணம் என்று புரிந்துகொள்ள தவறும்போது, இத்தகைய நோய் அறிகுறிகள் திருமண உறவை நசித்துவிடுகின்றன. ADHD உள்ள ஒருவருடைய மனைவி கூறுகிறார்: “சாதாரணமாக பேசும்போது நான் சொல்வதையெல்லாம் கேட்கவும்கூட மாட்டார். எப்போ பார்த்தாலும் எங்கோ சஞ்சரித்துக்கொண்டிருப்பதைப்போல் இருப்பார்.”
உண்மையில், பல ஆட்களிடத்தில் இப்படிப்பட்ட குணங்கள் இருப்பது சகஜமே கொஞ்சமாவது இருக்கும். “இப்படிப்பட்ட நோய் அறிகுறிகள் எப்போதும் இருந்தனவா என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். ஒருவேளை ஒருவர் வேலையை இழந்ததிலிருந்தோ அல்லது அவருடைய மனைவிக்கு குழந்தை பிறந்ததிலிருந்தோ ஞாபகமறதியுள்ளவராக இருக்கிறார் என்றால், அது ஒரு கோளாறு அல்ல” என்று டாக்டர் ஜார்ஜ் டோரி கூறுகிறார்.
மேலுமாக ஒருவருக்கு உண்மையிலேயே ADHD இருந்தால், நோய் அறிகுறிகள் பரவலாக இருக்கும்; அதாவது அந்த நபரின் கிட்டத்தட்ட ஒவ்வொரு வாழ்க்கை அம்சத்தையும் அவை பாதிக்கும். அப்படி பாதிக்கப்பட்ட ஒரு நபராக 38 வயது காரி இருந்தார்; அவர் மகா புத்திசாலி, துடிப்பாற்றல் மிக்கவர், அவரால் ஒரு வேலையைக்கூட கவனம் சிதறாமல் செய்ய முடிக்க முடியவில்லை. அவர் ஏற்கெனவே 120-க்கும் அதிகமான உத்தியோகங்களை ஒருகை பார்த்துவிட்டார். “என்னால் ஒரு [வேலையைக்கூட] ஒழுங்காக முடிக்க முடியவில்லை என்ற உண்மையை வெறுமனே ஒத்துக்கொண்டேன்” என்று அவர் கூறுகிறார். ஆனால் காரியும், பிள்ளைகள், வாலிபர், வளர்ந்தோர் போன்ற மற்ற அநேகரும் இந்த ADHD-ஐ சமாளிக்க உதவப்பட்டுள்ளனர். எப்படி?
[அடிக்குறிப்பு]
a பெண்களைக் காட்டிலும் ஆண்களே அதிகம் பாதிக்கப்படுவதால், இவ்வாறு பாதிக்கப்படும் நபரை நாம் ஆண்பாலால் குறிப்பிடுகிறோம்.