சவாலை எதிர்ப்படுதல்
பல வருடங்களாக ADHD-க்கு பல்வேறு சிகிச்சை முறைகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் சில சிகிச்சைகள் உணவு பழக்கத்தினிடமாக கவனத்தை ஒருமுகப்படுத்துகின்றன. இருப்பினும், உணவில் சுவைக்காகச் சேர்க்கப்படும் பொருட்கள் மிகை-இயக்கத்தை பொதுவாகவே உண்டாக்குவதில்லை என்றும், பெரும்பாலும் ஊட்டச்சத்து திரவங்களால் ஒருபிரயோஜனமும் இல்லை என்றும் சில ஆய்வுகள் காட்டுகின்றன. மருத்துவ சிகிச்சை, நடத்தையை மாற்றியமைத்தல், அறிவாற்றல் பயிற்சி முதலியன ADHD-க்கு அளிக்கப்படும் வேறுசில சிகிச்சை முறைகளாகும். a
மருத்துவ சிகிச்சை. ADHD-ல் அநேகமாக மூளை சரிவர இயங்காமை உட்பட்டிருப்பதால், இரசாயன சமநிலையை சரியாக ஏற்படுத்துவதற்காக அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை பலருக்கு பலனளித்திருக்கிறது. b இருப்பினும், கற்றுக்கொள்ளும் செயலை மருத்துவ சிகிச்சை மாற்றீடு செய்துவிடாது. அது வெறுமனே கவனத்தை ஒருமுகப்படுத்த அந்தப் பிள்ளைக்கு உதவுகிறது; அந்தப் பிள்ளை புதிய திறமைகளைக் கற்றுக்கொள்ள ஒரு அஸ்திவாரத்தை அமைத்துக்கொடுக்கிறது.
அதேபோல், ADHD உள்ள வளர்ந்த பெரியவர்களில் அநேகருக்கும் மருத்துவ சிகிச்சை உதவியுள்ளது. ஆனால், இளைஞர்களும் சரி வளர்ந்தவர்களும் சரி, ஜாக்கிரதையாக இருப்பது அவசியம்; ஏனென்றால் ADHD சிகிச்சைக்காக தரப்படும் தூண்டுதல் அளிக்கும் சில மருந்துவகைகள் அவற்றிற்கு நம்மை அடிமையாக்கும்.
நடத்தையை மாற்றியமைத்தல். ஒரு பிள்ளைக்கு இருக்கும் ADHD, சிட்சை கொடுக்கவேண்டிய கடமையிலிருந்து பெற்றோர்களை விடுவிப்பதில்லை. இந்த விஷயத்தில் ஒருவேளை பிள்ளைக்கு விசேஷ தேவைகள் இருந்தாலும்கூட, பெற்றோருக்கு பின்வரும் புத்திமதியை பைபிள் கொடுக்கிறது: “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.” (நீதிமொழிகள் 22:6) மிகை-இயக்கம் உள்ள உங்களது பிள்ளை என்ற ஆங்கில புத்தகத்தில், அதன் ஆசிரியர் பார்பரா இன்ஜர்சால் குறிப்பிடுவதாவது: “பிள்ளையை அதன் போக்கிலேயே வெறுமனே விட்டுவிடும் பெற்றோர், மிகை-இயக்கம் உள்ள அந்தப் பிள்ளை ‘கட்டுக்கு அடங்காமல்’ செல்ல அனுமதிக்கும் பெற்றோர், எந்தவிதத்திலும் பிள்ளைக்கு உதவப்போவதில்லை. மற்ற பிள்ளைகளைப்போல், மிகை-இயக்கம் உள்ள பிள்ளைக்கும் தொடர்ச்சியான சிட்சை தேவை. அந்தச் சிட்சையோடு அந்தப் பிள்ளையையும் ஒரு மனுஷனாய் மதித்து நடத்த வேண்டியது அவசியம். அப்படியென்றால், தெளிவாக வரம்புகளை வைக்கவேண்டும், பொருத்தமான பாராட்டு பரிசுகள் அளிக்க வேண்டும், தண்டனையும் கொடுக்கவேண்டும்.”
ஆகவேதான், உறுதியான ஒழுங்கமைப்பை பெற்றோர் வகுத்து தருவது மிகவும் அவசியம். மேலுமாக, வழுவாத கிரம முறையில் அன்றாட செயல்கள் இருத்தல் வேண்டும். இதற்கான அட்டவணையைத் தயாரிக்கும்போது, வீட்டுப்பாடம் செய்வதற்கும், படிப்பதற்கும், குளிப்பதற்கும் என இதுபோன்ற காரியங்களுக்கு நேரத்தை ஒதுக்குவதையும் உள்ளடக்கி, பிள்ளைக்கு கொஞ்சம் சுதந்திரத்தையும் கொடுக்க பெற்றோர் விரும்பலாம். பிறகு இதைப் பின்பற்றுவதில் மாறாமல் நிலையாக இருக்க வேண்டும். தினந்தோறும் வழக்கமாக செய்யும் காரியம் செய்யப்படுகிறதா என்று நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். ஃபை டெல்டா காப்பான் குறிப்பிடுகிறது: “ADD அல்லது ADHD என்று அறியப்படும் நோய்குறியை உடைய பிள்ளை எதைவேண்டுமென்றாலும் செய்வதற்கான உரிமையை தருவதில்லை என்று அந்தப் பிள்ளைக்கும் அதன் பெற்றோருக்கும் விளக்க வேண்டிய கடமை மருத்துவர்களுக்கும், உளநோய் மருத்துவர்களுக்கும், பள்ளி அதிகாரிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் இருக்கிறது. ஆனால், அப்படிப்பட்ட பிள்ளைக்கு பொருத்தமான உதவியளிக்கும் விதத்தில் ஒரு விளக்க உரையை தருவதும் அவசியம்.”
அறிவாற்றல் பயிற்சி. அந்தப் பிள்ளை தன்னைப் பற்றியும் தனது கோளாறைப் பற்றியும் உள்ள கருத்தை மாற்றிக்கொள்ள உதவியளிப்பது இப்பயிற்சியில் உள்ளடங்கியுள்ளது. “கவனப் பற்றாக்குறை கோளாறு உள்ள நபர்கள், அழகாகவும், அறிவாளியாகவும், நல் உள்ளம் படைத்தவர்களாகவும் இருந்தாலும்கூட தங்களை ‘அசிங்கமானவர்களாகவும், முட்டாள்களாகவும், ஒன்றுக்கும் லாயக்கற்றவர்களாகவும்’ உணருவார்கள்.” என்று டாக்டர் ரேனால்டு கோல்டுபர்க் குறிப்பிடுகிறார். ஆகவே, ADD அல்லது ADHD உள்ள பிள்ளை அதனுடைய சுய மதிப்பை பற்றி சரியான நோக்குநிலையைக் கொண்டிருப்பது அவசியம், அதனுடைய கவனப் பற்றாக்குறை பிரச்சினைகளை சமாளிக்க முடியும் என்று அறிவதும் அவசியம். விசேஷமாக வாலிப பருவத்தின்போது இது மிகவும் அவசியம். ADHD உள்ள ஒருவர் டீன்ஏஜை அடைவதற்குள்ளாக, அவருடைய சக மாணாக்கரிடமிருந்தும், ஆசிரியர்களிடமிருந்தும், உடன் பிறந்தோரிடமிருந்தும் ஒருவேளை பெற்றோரிடமிருந்தும்கூட வெளிப்படும் குறைகூறுதல்களுக்கு அவர் அதிகமாகவே இலக்காகியிருப்பார். இப்போது அவர் யதார்த்தமான இலக்குகளை வைப்பதும், தன்னைப்பற்றி கடுமையாக மதிப்பிட்டுக்கொள்வதற்கு மாறாக நியாயமாக மதிப்பிட்டுக்கொள்வதும் அவசியம்.
ADHD உள்ள வளர்ந்த பெரியவர்களும் மேற்குறிப்பிட்ட சிகிச்சை முறைகளைப் பின்பற்றலாம். டாக்டர் கோல்டுபர்க் எழுதுகிறார்: “வயதுக்கு ஏற்றார்போல் [சிகிச்சைகளை] மாற்றியமைத்து கொள்வது அவசியம்; ஆனால் பொருத்தமாக இருந்தால் மருத்துவ சிகிச்சை, நடத்தையை மாற்றியமைத்தல், அறிவாற்றல் [பயிற்சி] என்ற அடிப்படை சிகிச்சை முறைகள் வாழ்நாள் முழுவதற்கும் பயனளிக்கும் வழிமுறைகளாகவும் இருக்கின்றன.”
உதவி அளித்தல்
ADHD உள்ள ஒரு இளைஞனின் அப்பா ஜான் என்பவர், இதேபோன்ற சூழ்நிலைமையில் இருக்கும் பெற்றோருக்கு கூறுவதாவது: “இந்தப் பிரச்சினையைப் பற்றி உங்களுக்கு முடிந்தவரை எல்லா தகவல்களையும் கற்றறிந்துகொள்ளுங்கள். அறிவின் அடிப்படையில் தீர்மானங்களை எடுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் பிள்ளையை நேசியுங்கள், அவனில் சுய மரியாதையை வளர்த்திடுங்கள். குறைந்த சுயமதிப்பு என்பது மனநிலையை வேரறுக்கும் கறையான் போன்றது.”
ADHD உள்ள பிள்ளைக்கு போதுமான உதவி கிடைக்க பெற்றோர் இருவரும் ஒத்துழைக்க வேண்டும். ADHD உள்ள பிள்ளை “வீட்டில் தான் நேசிக்கப்படுவதை அறிந்துகொள்வதும், அத்தகைய நேசம் ஒருவரிடம் மற்றவர் நேசமாக இருக்கும் பெற்றோரிடமிருந்து வருகிறதென்பதை அறிந்துகொள்வதும்” அவசியம் என்று டாக்டர் கோர்டன் சர்ஃபான்டின் எழுதுகிறார். (எங்களால் நேரெழுத்தாக்கப்பட்டது.) வருத்தகரமாக, அத்தகைய நேசம் எப்போதும் வெளிக்காட்டப்படுவதில்லை. டாக்டர் சர்ஃபான்டின் தொடர்ந்து கூறுவதாவது: “சாதாரண குடும்பத்தில் இருப்பதைக் காட்டிலும் [ஒரு ADHD பிள்ளை] உள்ள குடும்பத்தில் குடும்ப சச்சரவும், குடும்ப பிளவும் கிட்டத்தட்ட மூன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் இருப்பது நன்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது.” அத்தகைய சச்சரவை தவிர்ப்பதற்காக, ADHD உள்ள பிள்ளையை வளர்ப்பதில் அப்பா முக்கிய பங்கு வகிக்க வேண்டும். பொறுப்பை முழுக்க முழுக்க அம்மாவின் தலையில் கட்டிவிடக்கூடாது.—எபேசியர் 6:4; 1 பேதுரு 3:7.
நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தின் பாகமாக இல்லாதிருந்தாலும்கூட, பெரும் உதவியாக இருக்கலாம். எப்படி? முன்பு குறிப்பிட்ட ஜான் கூறுகிறார்: “தயவாக இருங்கள். மேலோட்டமாக காரியங்களை பார்க்காதீர்கள். அந்தப் பிள்ளையைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். பெற்றோரிடத்திலும் பேசுங்கள். அவர்கள் எவ்வாறு சமாளிக்கிறார்கள்? ஒவ்வொரு நாளும் அவர்கள் எவற்றையெல்லாம் சமாளிக்க வேண்டியுள்ளது?”—நீதிமொழிகள் 17:17.
கிறிஸ்தவ சபையிலுள்ள அங்கத்தினர்கள், ADHD உள்ள பிள்ளைக்கும், அதன் பெற்றோருக்கும் அதிக உதவியாக இருக்க முடியும். எப்படி? அவர்களிடத்தில் தாங்கள் எதிர்பார்க்கும் காரியங்களில் நியாயமாக இருப்பதன் மூலமே. (பிலிப்பியர் 4:5, NW) சில நேரங்களில் ADHD உள்ள பிள்ளை ஒருவேளை அமைதிகுலைப்பவனாக இருக்கலாம், “உங்கள் பிள்ளையை கொஞ்சம் அடக்கி வைக்கக்கூடாதா?” அல்லது “நீங்கள் ஏன் அவனை வெறுமனே கண்டிக்கக்கூடாது?” என்று இரக்கமேயில்லாமல் கேட்பதற்கு பதிலாக, பகுத்தறிவுள்ள ஒரு உடன் விசுவாசி, ADHD உள்ள ஒரு பிள்ளையை வளர்ப்பதில் உட்பட்டிருக்கும் அன்றாட வேலைகளால் அந்தப் பெற்றோர் ஏற்கெனவே திணறிக்கொண்டிருப்பார்கள் என்பதை உணர்ந்துகொள்வார். உண்மைதான், பிள்ளையின் அமைதிகுலைக்கும் சுபாவத்தை கட்டுப்படுத்த பெற்றோரும் தங்களால் இயன்றமட்டும் செய்யவேண்டும். இருந்தபோதிலும், உடன் விசுவாசிகள் எரிச்சலோடு சிடுசிடுப்பதற்கு பதிலாக, “பிறரிடம் பரிவு” காட்டவும், ‘ஆசி கூறவும்’ முயலவேண்டும். (1 இராயப்பர் 3:8, 9, தமிழ் கத்தோலிக்க பைபிள்) பரிவுள்ள உடன் விசுவாசிகளின் மூலமாகத்தான் பெரும்பாலும் கடவுள் ‘சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்கிறார்.’—2 கொரிந்தியர் 7:5-7.
கற்பதிலுள்ள குறைபாடுகள், ADHD போன்ற எல்லாவிதமான மனித அபூரணங்களும் முதல் மனிதனாகிய ஆதாமிடமிருந்தே கடத்தப்பட்டவை என்று பைபிள் மாணாக்கர்கள் நன்றாகவே அறிந்துள்ளனர். (ரோமர் 5:12) சிருஷ்டிகராகிய யெகோவா நீதியான ஒரு புதிய உலகை கொண்டுவருவதற்கான தம்முடைய வாக்கை நிறைவேற்றுவார், வேதனையளிக்கும் வியாதி இனிமேலும் அதில் இருக்காது என்பதையும் அவர்கள் அறிவார்கள். (ஏசாயா 33:24; வெளிப்படுத்துதல் 21:1-4) ADHD போன்ற கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு இந்த வாக்குறுதியே ஒரு பிரதான பக்கபலமாக உள்ளது. “வயது, பயிற்சி, அனுபவம் ஆகியவை இந்தக் கோளாறை புரிந்துகொள்வதற்கும், அதைச் சமாளிப்பதற்கும் எங்கள் மகனுக்கு உதவுகின்றன. ஆனால் இந்தக் காரிய ஒழுங்குமுறையில் அவன் முழுமையாக குணமடையமாட்டான். புதிய உலகில் யெகோவா எங்கள் மகனின் கோளாறை சரிப்படுத்துவார், அவனுடைய வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கும்படி செய்வார் என்பதே ஒவ்வொரு நாளும் நாங்கள் அடையும் ஆறுதல்” என்று கூறுகிறார் ஜான்.
[அடிக்குறிப்புகள்]
a விழித்தெழு! எந்தவொரு குறிப்பிட்ட சிகிச்சையையும் பரிந்துரை செய்வதில்லை. கிறிஸ்தவர்கள், தாங்கள் எடுக்கும் எந்தவொரு சிகிச்சையும் பைபிள் நியமங்களுக்கு முரண்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கவேண்டும்.
b மருத்துவ சிகிச்சையினால் சிலர் வேண்டாத பக்கவிளைவுகளாலும், அதோடுகூட கவலை, வேறுசில உணர்ச்சி சம்பந்தமான பிரச்சினைகளாலும் அவதிப்படுகிறார்கள். மேலுமாக, ட்யூரட் நோய்க்குறி போன்ற வலிப்பு கோளாறுகள் இருக்கும் நோயாளிகளுக்கு தூண்டுதல் அளிக்கும் மருந்தானது வலிப்புகளை இன்னும் தீவிரமடையச்செய்யலாம். ஆகவே, மருத்துவ சிகிச்சையளிக்கும் மருத்துவரின் கண்காணிப்பின்கீழ் அது அளிக்கப்படவேண்டும்.
[பக்கம் 9-ன் படம்]
ADHD உள்ள பிள்ளைக்கு கனிவான அதேசமயத்தில் இடைவிடாத சிட்சை தேவை
[பக்கம் 10-ன் படம்]
பெற்றோரின் பாராட்டு அதிமுக்கியம்
[பக்கம் 8-ன் பெட்டி]
பெற்றோரின் கவனத்திற்கு
கிட்டத்தட்ட எல்லா பிள்ளைகளும் சில நேரங்களில் கவனக்குறைவு உள்ளவர்களாகவும், முன்யோசனையற்று நடப்பவர்களாகவும், மிதமிஞ்சி சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். இத்தகையப் பண்புகள் இருந்தால் எப்போதும் ADHD இருக்கவேண்டும் என்பதற்கில்லை. பிஃபோர் இட் டிஸ் டூ லேட் என்னும் தன்னுடைய புத்தகத்தில் டாக்டர் ஸ்டான்டன் இ. சாமனோ குறிப்பிடுவதாவது: “ஒரு பிள்ளை ஒன்றை செய்ய விரும்பவில்லை என்றதும் அவன் ஏதோ ஒரு வகை ஊனத்தால் துன்பப்படுகிறான் என்று சொல்லி விடுகின்றனர். அல்லது அவனது கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு நிலைமைதான் அவனை இப்படி செய்ய வைத்தது என்று நினைத்து கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடும் சந்தர்ப்பங்கள் எத்தனையோ நான் பார்த்திருக்கிறேன்.”
டாக்டர் ரிச்சர்டு ப்ராம்ஃபில்டு என்பவரும்கூட எச்சரிக்கையாக இருக்கவேண்டியதன் அவசியத்தை உணருகிறார். அவர் இவ்வாறு எழுதுகிறார்: “ADHD உள்ளதாக கண்டுபிடிக்கப்படும் சிலருக்கு நரம்பு சம்பந்தமாக பாதிப்பு இருக்கிறது, மருத்துவ சிகிச்சை கண்டிப்பாக தேவைதான். ஆனால், எல்லா விதமான துர்ப்பிரயோகங்களுக்கும், மாய்மாலங்களுக்கும், கவனக்குறைவுக்கும், மற்ற சமூக இன்னல்களுக்கும் இந்தக் கோளாறுதான் காரணம் என்று தவறுதலாக சுட்டிக்காட்டப்படுகிறது; பெரும்பாலான இப்படிப்பட்ட செயல்களோடு ADHD-க்கு எந்தவொரு தொடர்பும் கிடையாது. பார்க்கப்போனால், கொள்கை இன்றி இருக்கும் நவீன கால வாழ்க்கையே—இங்கும் அங்கும் வன்முறை, போதைப்பொருள் துர்ப்பிரயோகம், இவற்றைவிட குறைந்த பாதிப்பை தரும் ஒழுங்கற்ற குடும்பங்கள், கூச்சலும் குழப்பமும் உள்ள குடும்பங்களே—எந்தவொரு நரம்பு சம்பந்தமான கோளாறைவிட ADHD அமைதியின்மையை பேணி வளர்க்க அதிக பொருத்தமானவை.”
எனவே, நல்ல காரணத்தோடுதான் ADHD-ஐ “எதற்கெடுத்தாலும் குறைகூறுவதற்கு” எதிராக டாக்டர் ரேனால்டு கோல்டுபர்க் எச்சரிக்கிறார். “சரியான முடிவுக்கு வரவேண்டுமென்றால் ஒவ்வொரு அறிகுறிகளையும் நன்கு ஆராய்ந்து பார்ப்பது மிகவும் அவசியம்” என்று அவர் ஆலோசனை தருகிறார். ADHD-க்கு ஒத்த நோய் அறிகுறிகள் உடல் நல அல்லது உணர்ச்சி சம்பந்தமான பல பிரச்சினைகளில் ஏதேனும் ஒன்றை சுட்டிக்காட்டுபவையாக இருக்கலாம். ஆகவே, சரியாக வியாதியைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றால், அனுபவம்வாய்ந்த மருத்துவரின் உதவி மிகவும் அவசியம். வியாதியை கண்டுபிடித்த பின்பும், மருத்துவ சிகிச்சை கொடுப்பதிலுள்ள நன்மை தீமைகளை பெற்றோர் சீர்தூக்கிப்பார்ப்பது நல்லது. விரும்பத்தகாத நோய்க்குறிகளை ரிட்டாலின் (Ritalin) மருந்து போக்கிவிடலாம்; ஆனால் தூக்கமின்மை, அதிகமான கவலை, நடுக்கம் போன்ற வேண்டாத பக்கவிளைவுகளையும் அது உண்டாக்கலாம். இவ்வாறாக, பிள்ளைக்கு இருக்கும் நோய் அறிகுறிகளை வெறுமனே போக்குவதற்காக உடனடியாக மருந்து கொடுப்பதைப் பற்றி டாக்டர் ரிச்சர்டு ப்ராம்ஃபில்டு எச்சரிக்கிறார். “நிறைய பிள்ளைகளுக்கும், வளர்ந்த பெரியவர்களில் இன்னும் அதிக அதிகமான ஆட்களுக்கும் ரிட்டாலின் கொஞ்சம்கூட சம்பந்தம் இல்லாமல் கொடுக்கப்படுகிறது. எனது அனுபவத்தின்படி, ரிட்டாலினின் உபயோகம், பிள்ளைகளின் நடத்தையை எவ்வளவு தூரத்திற்கு பெற்றோர்களாலும், ஆசிரியர்களாலும் பொருத்துக்கொள்ள முடியும் என்பதை பெரிதும் சார்ந்துள்ளது. பிள்ளைகளுடைய தேவையைப் பூர்த்திசெய்வதற்கு பதிலாக அவர்களை அமைதிப்படுத்துவதற்காகவே அதிக ரிட்டாலின் கொடுக்கப்பட்ட பிள்ளைகளை எனக்குத் தெரியும்” என்று அவர் கூறுகிறார்.
ஆகவே, பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு ADHD இருக்கிறது அல்லது கற்பதில் குறைபாடு உள்ளது என்ற முத்திரையை உடனடியாக குத்திவிடக்கூடாது. அதற்கு மாறாக, ஒரு திறமைவாய்ந்த வல்லுநரின் உதவியோடு, அறிகுறிகளை கவனமாக ஆராய வேண்டும். ஒரு பிள்ளைக்கு கற்பதில் குறைபாடு இருக்கிறது அல்லது ADHD இருக்கிறது என்று உறுதிசெய்தபின், அந்தப் பிரச்சினையைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள பெற்றோர் நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்; அப்போதுதான் தங்களுடைய பிள்ளைகளுக்கு மிகச் சிறந்தவிதத்தில் நன்மை தரும் வகையில் அவர்களால் செயல்பட முடியும்.