அதிகம் தேவைப்படும்போது
முந்தின கட்டுரைகளில் கொடுக்கப்பட்டிருந்த அநேக ஆலோசனைகள் மிகவும் உதவிபுரிபவையாக இருக்கலாம். இருந்தபோதிலும், சிலசமயங்களில் ஏற்படும் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் கூடுதல் உதவி தேவைப்படலாம். உதாரணமாக, தனிநபரின் பின்னணி வரலாற்று ஆராய்ச்சிகள் (Case studies) உணர்ச்சிவசப்படுபவர்களாக மட்டுமல்லாமல் மிக அபாயகரமாகவும் உள்ள பிள்ளைகளைப் பற்றிய அறிக்கைகளை உள்ளடக்குகின்றன. இந்தப் பிள்ளைகள் அன்பான குடும்பங்களால் கவனித்துக் கொள்ளப்படுகிறவர்கள்தான். இருந்தாலும் தங்களுக்குத் தோன்றினால், பொருட்களை அடித்து நொறுக்குவது, ஆட்களிடம் கத்துவது, தீப்பிடிக்கச் செய்வது, துப்பாக்கிகளால் சுடுவது, (கிடைத்தால்) கத்திகளில் குத்துவது, விலங்குகளுக்கும் மற்றவர்களுக்கும் அல்லது தங்களுக்கும் கேடுவிளைவிப்பது ஆகியவற்றினால் தங்களுடைய நாசகரமான நடத்தையைக் காண்பிக்கின்றனர். சுருங்கக் கூறினால், அவர்கள் குழப்பத்தின் உருவாயிருக்கின்றனர்.
பிள்ளைக்கு மிகச் சிறந்த பராமரிப்பு கிடைப்பதற்காக, மருத்துவ உதவி பெறுவதா வேண்டாமா என்பது எடுக்கப்படவேண்டிய தனிப்பட்ட சொந்த தீர்மானமாக இருக்கிறது. தங்களுடைய பிள்ளைக்கே உரித்தான தனிப்பட்ட தேவைகளை எவ்வாறு பூர்த்திசெய்வது என்பதைப்பற்றி ஒவ்வொரு குடும்பமும் தீர்மானிக்கவேண்டும். அவ்வாறு தீர்மானிக்கையில் நீதிமொழிகள் 22:6-ல் பெற்றோருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஆறுதலளிக்கும் வாக்குறுதியை மனதில் கொண்டிருக்கவேண்டும்.
தற்காலத்தில் மிகவும் சர்ச்சைக்குள்ளாயிருக்கும் சிகிச்சைகளில் ஒன்று மருந்தின் உபயோகம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும். அடிக்கடி சிபாரிசு செய்யப்படும் மருந்தாகிய ரிட்டாலின் பெரும்பாலும் பலவகை விளைவுகளைக் கொண்டிருந்தது. தங்களுடைய பிள்ளை ரிட்டாலினை அல்லது நடவடிக்கையை மாற்றியமைக்கும் மருந்துகளைச் சாப்பிடும்போது அவனிடம் காணப்பட்ட முன்னேற்றத்தைப்பற்றி அநேக குடும்பங்கள் அதிக சந்தோஷமடைந்திருந்தன. என்றபோதிலும், இந்த மருந்துகளின் பயனுள்ள தன்மையைப்பற்றி மட்டுமல்லாமல், இதை அதிக அளவில் அடிக்கடி சாப்பிடும்படி சிபாரிசு செய்வதைப் பற்றியும் உள்ள தற்போதைய விவாதம் தொடர்கிறது. உண்மையிலேயே, சில டாக்டர்கள் இவற்றின் மதிப்பை முழுமையாக கேள்விக்கு உள்ளாக்குகின்றனர். உதாரணமாக, இந்த ரிட்டாலினை நீண்டகாலம் உபயோகித்து வருவது கேடுவிளைவிக்கக்கூடிய அநேக பக்கவிளைவுகளைக் கொண்டிருக்கலாம் என்று இவர்கள் சொல்கின்றனர். ஆனாலும், அநேக குடும்பங்களும் டாக்டர்களும் முன்னேற்றுவிக்கப்பட்ட நடத்தையோடும் படிப்பில் முன்னேற்றத்தோடும் ஒருசில பக்கவிளைவுகளையே சுட்டிக்காண்பிக்கின்றனர் என்பதையும் மீண்டும் அழுத்திக் காண்பிக்கவேண்டும். ஆர்வத்தைத் தூண்டும்வகையில், ADD உள்ளவர்களாகக் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது மருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வயதுவந்தவர்களில் பலரும்கூட அதன் பலன்களைக் கண்டு சந்தோஷமடைகின்றனர். ஆகவே மருந்தின் உபயோகம் கவனமான ஆராய்ச்சி மற்றும் சீர்தூக்குதலின் அடிப்படையில் தீர்மானிக்கப்படவேண்டிய ஒரு தனிப்பட்ட தீர்மானமாக இருக்கிறது.
மருந்தை உபயோகித்துப் பார்த்து நல்ல முடிவுகள் கிடைக்காதவர்களுக்கு மாற்று சிகிச்சைமுறைகள் இருக்கின்றன. வைட்டமின் மற்றும் மூலிகை அல்லது இவையிரண்டும் கலந்த சிகிச்சைகளைப்பற்றி அநேக குடும்பங்கள் வாசித்தும், அவற்றை உபயோகித்து நல்ல முடிவுகளைக் கண்டுமிருக்கின்றன. முன்பே குறிப்பிட்டிருந்தபடி, சிலருடைய விஷயத்தில் ADD/ADHD மூளையில் நடைபெறும் உயிர்வேதியியல் சீர்குலைவுகளினால் ஏற்படுத்தப்படலாம். ஆகவே இந்தச் சிகிச்சைகள் சரிசெய்ய உதவுவதாக நம்பப்படுகின்றன.
அதுமட்டுமல்லாமல், ADD/ADHD-களோடு தொடர்புடைய மற்ற அநேக பிரச்சினைகளைத் தூண்டிவிடுவதாகச் சிலரால் கருதப்படும் மற்ற காரணிகளும் இருக்கின்றன. “சில குழந்தைகளுக்கு சரீரப்பிரகாரமான சுகவீனமும் அல்லது உணர்ச்சி சம்பந்தமான, நடத்தை சம்பந்தமான பிரச்சினைகளும், கற்றுக்கொள்வதில் பிரச்சினைகளும் இருக்கின்றன. இவை ஒவ்வாமைகளோடு அல்லது ஒரு சுற்றுப்புற சூழ்நிலையில் வாழ்வதோடு ஓரளவோ முழுமையாகவோ சம்பந்தப்பட்டவையாய் இருக்கின்றன,” என்று இஸ் திஸ் யுவர் சைல்ட்? என்ற தனது புத்தகத்தில் டாக்டர் டாரிஸ் ராப் குறிப்பிடுகிறார். மேலும், நிறமிகள், சர்க்கரைகள், கூட்டுப்பொருட்கள் ஆகியவற்றுக்கான எதிர்விளைவுகள், மூர்க்கத்தனமான கோபம், மனநிலை ஊசல்கள், உறக்கமின்மை ஆகியவற்றை வெளிக்காட்டி உண்மையிலேயே இந்தப் பிரச்சினைகளைக் காப்பியடிக்கின்றன.
தங்களுடைய பிள்ளைகளின் நடத்தையை எப்படி மாற்றிவிடுவது என்று அநேக குடும்பங்கள் கற்றுக்கொண்டன. இருப்பினும் பிள்ளைகள் படிப்பில் எப்படி தேறுகிறார்கள் என்பது கூடுதலான பிரச்சினைகளை உருவாக்கக்கூடும். சில பிள்ளைகளுக்கு ட்யூஷன், ஆலோசனை வழங்குதல், ஆதரவு தொகுதிகள், விசேஷித்த ஆசிரியர்கள் போன்ற விசேஷித்த சேவைகள் உதவியாய் இருக்கின்றன. ஏனென்றால் இந்தப் பிள்ளைகள் ஒரு ஆசிரியர் ஒரு மாணவர் (one-on-one) ஏற்பாட்டில் நல்ல தேர்ச்சியைக் காண்பிக்கும் மனோபாவத்தைக் கொண்டிருக்கின்றனர். சில குடும்பங்கள் அவற்றின் டாக்டர் ஆலோசனையின்படி வீட்டில் கற்பிக்கும் ஏற்பாடு வெற்றி தருவதாக இருந்ததாக அறிக்கை செய்திருக்கின்றன.
டாக்டர் மெல் லவினின் பள்ளிகள் பொருத்தியமைக்கப்படுகின்றன (Schools Attuned) போன்ற அநேக புதிய கல்வித் திட்டங்களைக் கவனிக்கத் தவறக்கூடாது. இது பிள்ளைகளின் தனிப்பட்ட தனித்தன்மையையும் வித்தியாசத்தையும் வெளிக்கொண்டுவருகிறது. டாக்டர் லவினின் திட்டமானது, ஒவ்வொரு பிள்ளைகளின் தேவைகளையும் பூர்த்திசெய்வதற்காக கல்வியை மாற்றியமைப்பதை ஆதரிக்கிறது. ஐக்கிய மாகாணங்களில் இந்த வெவ்வேறு வகையான அணுகுமுறை நடைமுறையாக்கப்பட்டிருந்த இடங்களிலெல்லாம், நல்ல பலன்கள் கிடைத்திருப்பதாகத் தோன்றுகிறது.
எதிர்காலம்
பிள்ளைகளை வளர்ப்பது ஒரு புதிய வீட்டை வாங்குவதற்கு ஒப்பிடலாம். இரண்டுக்குமே வாழ்நாள் முழுவதும் செலவு செய்யவேண்டியிருக்கிறது. எனினும், சூழ்நிலைகள் காரணமாக, வாங்கப்போகிறவர்கள் தங்களுக்கு அவ்வளவாக விருப்பப்படாத வீட்டைவைத்துத் திருப்தியடையும்படி வற்புறுத்தப்படுகின்றனர். அதைப்போலவே, சாத்தானிய உலகத்தில் அபூரண பிள்ளைகளை வளர்க்கும் அபூரண பெற்றோர் தாங்கள் எதிர்பார்த்தளவுக்கு தேர்ச்சி பெறாத குழந்தைகளைவைத்து திருப்தியடையும்படி வற்புறுத்தப்படுகின்றனர். புதிதாக வாங்கப்பட்ட அந்த வீடு வழக்கத்திற்கு மாறான அல்லது விருப்பத்திற்கு மாறான அம்சங்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் வேலையின் மூலமும் சிறிது கற்பனாசக்தியோடும் விகாரமான அநேக அம்சங்கள் கிட்டத்தட்ட நீக்கப்படலாம். அசெளகரியமான ஒரு கட்டுமான அம்சமும்கூட விரைவில் வீட்டின் விருப்பப்படக்கூடிய ஒரு அம்சமாக மாறலாம்.
அதேபோல, தங்களுடைய வழக்கத்துக்கு மாறான பிள்ளையின் தனிப்பட்ட தேவைகளுக்குப் பெற்றோர் தங்களை மாற்றியமைத்துக் கொள்வார்களேயானால், அவர்களின் வாழ்க்கையில் அவனோ அவளோ ஒரு அழகான பாகமாக மாறக்கூடும். ஒவ்வொரு பிள்ளையும் தன்னுடைய சொந்த பண்புகளுக்காக பாராட்டப்படவேண்டும். ஆகவே, நம்பிக்கைகரமான அம்சங்களின்மேல் கவனத்தைச் செலுத்துங்கள். பிள்ளைகள அடக்கி ஒடுக்குவதைவிட, ஒவ்வொருவருடைய படைப்புத் திறமையையும் உற்சாகப்படுத்துங்கள். அவனோ அவளோ மரியாதையையும் அன்பையும் பெற தகுதியான மதிப்புமிக்க நபர்—யெகோவா தேவனிடமிருந்து கிடைத்த விலையேறப்பெற்ற பரிசு என்று பாராட்டுங்கள்.—சங்கீதம் 127:4-6.