உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g94 11/22 பக். 13-15
  • பாணிகள்—அவற்றின் கவர்ச்சி என்ன?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பாணிகள்—அவற்றின் கவர்ச்சி என்ன?
  • விழித்தெழு!—1994
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • இளைஞரும் அவர்களுடைய உடை பாணிகளும்
  • உயர் தொழில்நுட்பம் உயர்ந்த பாணி
  • பாணிகள்—இயல்புக்கு மாறானவையும் ஆபத்தானவையும்
  • பாணிகள்—அவற்றிற்குப் பின்னால் இருப்பது என்ன?
  • நவீன பாணிகள்—அவற்றை நான் பின்பற்ற வேண்டுமா?
    விழித்தெழு!—1994
  • நான் நவீன பாணியைப் பின்பற்ற வேண்டுமா?
    விழித்தெழு!—1987
  • ‘க்ளாமர்’ —இருண்ட பக்கம்
    விழித்தெழு!—2003
  • என் உடைகள் உண்மையான என்னை வெளிப்படுத்துகிறதா?
    இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள்
மேலும் பார்க்க
விழித்தெழு!—1994
g94 11/22 பக். 13-15

இளைஞர் கேட்கின்றனர்

பாணிகள்—அவற்றின் கவர்ச்சி என்ன?

கவர்ச்சிவாசகங்களை உடைய டி-ஷர்ட்டுகளை அணியும் பிரபல பாணியால் செல்வாக்குச் செலுத்தப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான—ஒருவேளை லட்சக்கணக்கான—இளைஞரில் இளம் ஆவெரியும் ஒருவன். நிச்சயமாகவே, கவர்ச்சிவாசகங்களை உடைய டி-ஷர்ட்டுகள் நெடுங்காலமாகப் புழக்கத்தில் இருந்திருக்கின்றன; இளைஞராயிருந்தபோது உங்கள் பெற்றோருங்கூட அவற்றை அணிந்திருப்பார்கள். என்றபோதிலும், நியூஸ்வீக் பத்திரிகையின்படி, இந்தப் பாணி ஒரு புதிய அம்சத்தைக் கொண்டிருக்கிறது. தற்போது சில இளைஞர், “மிக இழிவான நிலையிலிருந்து நேரடியாக எடுக்கப்பட்ட வாசகங்களைப் பளிச்சிடும் டி-ஷர்ட்டுகளை பகட்டாக அணிகிறார்கள்.”

பெரும்பாலும், அச்சிடுவதற்கே தகுதியற்றவையாக இருக்கும் வாசகங்களை இந்தப் புதிய ஷர்ட்டுகள் கொண்டிருக்கின்றன. இனசம்பந்தமான நிந்தனைக் குறிப்புகளிலிருந்து பெண்களைப் பற்றிய கீழ்த்தரமான குறிப்புகள் வரையாக அவை அமைகின்றன. இந்த வெறித்தன பாணியைப் பின்பற்றுகிறவர்கள்—தங்களுடைய பெற்றோர் உட்பட—மற்றவர்கள் இந்த அருவருப்பான வாசகங்களைக் குறித்து எப்படி உணருகிறார்கள் என்பதைப்பற்றி சிறிதும் அக்கறை கொள்வதாகத் தோன்றுவதில்லை. வெறுப்பூட்டும் குறிப்பிட்ட ஒரு ஷர்ட்டை ஏன் அணிந்தான் என்று 18-வயதான ஆன்ட்ரியா ஓர் இளைஞனிடம் கேட்டபோது, “அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை; ‘அது நவீனமானது,’ ‘எல்லாரும் அதை அணிகிறார்கள்’ என்பது போன்ற சாக்குப்போக்குகளை அவன் சொல்லிக்கொண்டிருந்தான்.”

கடந்த பத்தாண்டுகளில், நூற்றுக்கணக்கான பாணிகள் இளைஞரின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. எல்லாக் காலத்திலும் மிகப் பிரபலமானதும்—லாபகரமானதுமான—பாணிகளில் ஒன்று என்னவென்றால் ஹுல்லா வளையத்திற்கான வெறியார்வம்; அது 1950-களில் ஐக்கிய மாகாணங்களில் பிரபலமாக ஆனது. ஒருசில வருடங்களுக்குமுன் செல்வீர்களானால், தங்கமீன்களை விழுங்குவதும் ஒரு தொலைபேசி சாவடிக்குள் எத்தனைபேர் நிற்க முடியும் என்று பார்ப்பதும் பிரபலமாக இருந்தது. சமீபத்திய வருடங்களில், பிரேக் நடனம், மங்கிய ஜீன்ஸுகள், சறுக்கு காலணிகள், “விரைந்தோடுதல்” (எல்லாருக்கும் முன்பாக அம்மணமாக ஓடுதல்) ஆகியவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலப்பகுதியில் பிரபலமாக இருந்தன. பைபிள் எழுத்தாளர் ஒருவர் குறிப்பிட்டார்: “இவ்வுலகத்தின் வேஷம் கடந்துபோகிறதே.” (1 கொரிந்தியர் 7:31) இன்று டஜன்கணக்கான பாணிகள்—முட்டாள்தனமானவையிலிருந்து அபாயகரமானவை வரையாக—இளைஞர் மத்தியில் தற்போது நடைமுறையில் உள்ளன.

இளைஞரும் அவர்களுடைய உடை பாணிகளும்

உதாரணமாக, உடையை எடுத்துக்கொள்ளுங்கள். டைம் பத்திரிகையின்படி, ராப் இசை (அடிக்கடி ஹிப்-ஹாப் என்று அழைக்கப்படுவது) “நுண் சில்லுகளுக்கு அடுத்து, ஒருவேளை தற்போது மிகவும் வெற்றிகரமான அமெரிக்க ஏற்றுமதியாக, உலகளாவிய இளைய சமுதாயத்தில் ஊடுருவிக்கொண்டும் உண்மையில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டும் இருக்கிறது.” ஆனால், நீங்கள் நன்றாகவே அறிந்திருக்கிறபடி, ராப் என்பது இசையைவிட மிக அதிகத்தைக் குறிக்கிறது. டைம் மேலும் தொடர்கிறது: “உலகளாவிய ஃபேஷன் பொருளாகவும் ராப் இருக்கிறது. அமெரிக்காவின் அடிப்படை நவீன பாணி உடைகள்—பாகி பான்ட்டுகள், விலையுயர்ந்த ஸ்நீக்கர்கள், முக்காடோடுகூடிய ஸ்வெட்ஷர்ட்டுகள், பகட்டான நகைகள்—உள்ளூர் மாற்றங்களுடன் எவ்விடத்திலும் காணப்படுகின்றன.” பிரபல குழுக்கள் மூலமாகவும்—இசை வீடியோக்கள் மூலமாகவும்—அளவுக்கதிகமாக முன்னேற்றுவிக்கப்படுவது, ஹிப்-ஹாப் பாணிகள் அதிகப்படியாக வளர்வதற்கு ஊக்கமூட்டியிருக்கிறது.

தொளதொளவென்று தொங்கும் உடைகள் மலிவானவையாக இல்லை—கணுக்காலுக்கு மேல்வரையாக இருக்கும் ஓடுவதற்கான ஷூக்களும் பெரும்பாலும் அதிக விலையுடையவை! ஆனால் அநேக இளைஞர், அவை அந்த விலைக்கு உகந்தவை என நினைக்கின்றனர். மார்க்கஸ் என்ற பெயருடைய இளைஞன் சொன்னபடி, “நீங்கள் பாகி உடைகளை அணியாவிட்டால், நீங்கள் ஹிப் ஹாப்பிற்கு இசைவானவர்களாக இல்லை.”

பிரபல “க்ரன்ஜ்” தோற்றத்திடமாக ரசனையைக் கொண்டிருக்கும் இளைஞருக்கு அது ஏற்றதாக இருக்கிறது. இந்த உடைவெறிக்கே உரியதாக இருக்கும் கிழிந்த ஜீன்ஸ்களும் வண்ணப்பட்டைகளையுடைய சட்டைகளும் சில அமெரிக்க மறைமுக ராக் குழுக்களால் பிரசித்தி செய்யப்பட்டன. “க்ரன்ஜ்” தோற்றத்திற்கு ஒத்த உடை “ஏழ்மை தோற்றத்தை அளித்ததாக” ஒரு எழுத்தாளர் கூறினார். உண்மையில், அப்படியொரு தோற்றத்தை மட்டுமே அளித்தது. அந்த அரைகுறை உடையானது மலிவானதாக இல்லவே இல்லை. பின்னர் “பழைய நேர்த்தியான பாணி” இருக்கிறது. கனடாவைச் சேர்ந்த மக்லின்ஸ் பத்திரிகையின்படி, “பிந்திய 1960-கள் மற்றும் ஆரம்ப 1970-களிலிருந்த பாணிகளை மீண்டும் புதுப்பிக்கும் ஃபேஷன்கள்” இவை. டிஸ்கோ இசையைப்போலவே நெடுங்காலமாக பழம்பாணி ஆகிவிட்டிருந்த தடித்த சோல்களை உடைய ஷூக்கள், பெல் பாட்டம் பான்ட்டுகள் போன்ற துணை சாதனங்களுக்காக இளைஞர் உயர்ந்த விலைகளைச் செலுத்துவதை பெரியவர்கள் ஆச்சரியத்தோடு வியந்து நோக்குகின்றனர்.

உயர் தொழில்நுட்பம் உயர்ந்த பாணி

கற்பனாசக்தியுள்ள இளைஞர் உண்மையில் எப்படி எதையும் உயர்ந்த பாணியாக மாற்றக்கூடும் என்பதற்கு மற்றொரு உதாரணம் மின்னணு பாக்கட் பேஜர்கள் அல்லது பீப்பர்கள் (beepers). ஆரம்பத்தில், அடிக்கடி அழைப்புகளைப் பெறும் டாக்டர்களாலும் மற்ற தொழில் அதிகாரிகளாலும் பயன்படுத்தப்பட்ட இந்தக் கருவிகள், விரைவில் நகர போதைப்பொருள் வியாபாரிகளிடம் பிரபலமாயின. போதைப்பொருள் விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களாகும் சாத்தியம் உள்ளவர்களோடு சந்திக்கும் ஏற்பாடுகளைச் செய்வதை இந்த பீப்பர்கள் எளிதாக்கின. தி நியூ யார்க் டைம்ஸ் சொல்லுகிறபடி, “அவற்றின் உபயோகம் அவ்வளவு பரவலாக இருந்ததால் [பாக்கட் பேஜர்கள்] போதைப்பொருள் பண்பாட்டின் ஒரு அடையாளமாக ஆகிவிட்டன.” அப்படியென்றால், தேசிய அளவில் பள்ளி குழுமங்கள் சிறிய நுண்கருவிகளுக்கு பள்ளியில் தடைவிதிக்கத் தொடங்கியதில் ஆச்சரியமேதுமில்லை!

என்றபோதிலும், இதனால் பயனேதும் ஏற்படவில்லை. நகர இளைஞர் மத்தியில் பீப்பர்கள் மிகப் பிரபலமாகிவிட்டன. சிலர் அவற்றைத் தாங்கள் உத்தேசித்த நோக்கத்திற்காகப் பயன்படுத்துகின்றனர்; தாங்கள் எங்கிருக்கிறார்கள் என்பதைச் சரியாக தங்கள் பெற்றோர் அறிந்துகொள்ள உதவுவதற்கு, அல்லது அவசர சூழ்நிலை எழும்புகையில் அவர்களோடு தொடர்பு கொள்வதற்கு உதவும் பேச்சுத்தொடர்பு கருவிகளாகப் பயன்படுத்துகின்றனர். ஆனால் மற்ற இளைஞருக்கு அது வெறுமனே ஒரு பாணியாக வைக்கும் துணைக்கருவியாக இருக்கிறது. டைம்ஸ் சொல்லுகிறபடி, “பருவவயதினர்கள் பீப்பர்களை தோள்பைகளிலும், கோட் பாக்கட்களிலும், பெல்ட்களிலும் செருகி வைக்கிறார்கள். பீப்பர் கைக்கடிகாரங்களும், பீப்பர் டைகளும், பீப்பர் பேனாக்களும், நீல, இளஞ்சிவப்பு, சிவப்பு பீப்பர்களும், சாதாரணமான பழைய கறுப்பு மற்றும் பழுப்பு நிற பீப்பர்களும் இருக்கின்றன.” பெரியவர்கள் சிலர் பீப்பர்களை இன்னும் போதைப்பொருள் உபயோகத்துடன் தொடர்புபடுத்தி பேசிக்கொண்டிருந்தாலும், நியூ யார்க் நகர போலீஸ் அதிகாரி ஒருவர் சொல்கிறார்: “அது மிக விரைவாக விற்பனையாகும் ஒரு பொருள். அதை வைத்திருக்கும் ஒருசில இளைஞரே போதைப்பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் பெரும்பாலானோர் அவ்வாறில்லை. அது வெறுமனே ஒரு பாணியாக இருக்கிறது.”

பாணிகள்—இயல்புக்கு மாறானவையும் ஆபத்தானவையும்

உடுத்தும் பாணிகள், மிகச் சிறந்த நிலையில் பொறுத்துக்கொள்ளக் கூடியவையாயும் மிக மோசமான அளவில் வெறுப்பூட்டுபவையாயும் இருக்கையில், சில பிரபலமான பாணிகள் பொது அறிவின் எல்லா நியமங்களையும் மீறுவதாகத் தோன்றுகின்றன. சில பிரபல மாடல்களின் நலிந்த தோற்றத்தைப் பெறுவதற்காக, பல இளம் பெண்கள், தங்கள் ஆரோக்கியம் மற்றும் நலனின்மீது ஏற்படும் விளைவுகளைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் பாணிக்கேற்ற உணவு திட்டங்களை மேற்கொள்கின்றனர். “கட்டுப்பாட்டு உணவு திட்டங்களை மேற்கொள்வது தேசியளவில் ஊன்றியிருக்கும் ஒரு கருத்துவெறி. சிறந்த அளவில் விற்பனையாகும் ஏதாவது 10 புத்தகங்களின் பட்டியலை எடுத்துப் பாருங்கள், வழக்கமாக ஒரு திட்ட உணவு புத்தகத்தையும் அவ்வரிசையில் காண்பீர்கள்,” என்று ஆல்வன் ரோஸன்பாம் எழுதுகிறார். பிரபலமான இந்தப் புத்தகங்களில் பல, முன்னேற்றுவிக்கும் உணவு திட்டங்களால் கிடைக்கும் பலன் சந்தேகத்திற்குரியதே என்று ரோஸன்பாம் குறிப்பிடுகிறார். பசியில்லா உளநோய் போன்ற உண்ணுதல் கோளாறுகள் பருவவயதினர் மத்தியில் கவலைக்குரிய விதத்தில் அதிகரிப்பதற்கு, மெலிவதற்கான வெறியை அநேக நிபுணர்கள் குறைகூறுகிறார்கள்.a

தனிப்பட்ட தோற்றத்தை அழகுபடுத்துவதற்கான பாணிசார்ந்த மற்ற முறைகள் அவற்றைப்போலவே ஆபத்தானவையாக—இயல்புக்கு மாறானவையாக—இருக்கக்கூடும். நியூஸ்வீக்-லுள்ள ஒரு கட்டுரையின்படி, “பழங்கால மக்கள் மற்றும் சட்டப்பாதுகாப்பற்றவர்களின் கலையாகிய பச்சைகுத்துதல், நிலையாக முக்கிய பாணியாக வந்துகொண்டிருக்கிறது.” திரைப்படத்தில் புகழ்பெற்றவர்கள், ஹெவி மெட்டல் ராக் பாடகர்கள் ஆகியோரின் முன்மாதிரிகளால் உந்துவிக்கப்பட்டு, சில இளைஞர் பெரிய அடையாளங்கள் தங்கள் சொந்த உடல்களில் நிரந்தரமாக பச்சைகுத்தப்பட்டு வைக்கப்படும் வாய்ப்பிற்காகக் காத்திருக்கிறார்கள். பச்சைகுத்தும் மைகளால் ஏற்படும் ஈரல் அழற்சி மற்றும் ஒவ்வாமை எதிர்விளைவுகளின் ஆபத்துக்களைப் பற்றி மருத்துவர்களால் எச்சரிக்கப்பட்டும், அவர்கள் அதைப் பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

அல்லது உடலைத் துளைத்தல் என்ற வினோதமான பாணியைப் பற்றியதென்ன? சில பண்பாடுகளில் பெண்கள் காதுகளைத் துளைத்துக் கொள்வது வழக்கமாக இருக்கக்கூடும் என்றாலும், சிலர் எல்லா நியாயத்தன்மைக்கும் அப்பால் சென்று தங்கள் நாக்குகளிலும் தொப்புள்களிலும் துளையிடப்படும்படிசெய்து அவற்றில் பகட்டான நகைகளைத் தொங்கவிடுகிறார்கள். அவன் அல்லது அவளுடைய பெற்றோரை வருத்தப்படுத்த வேண்டும் என்று தீர்மானமாக இருக்கும் எந்த ஒரு இளைஞனுக்கும் ஒரு பெரிய மூக்குத்தியைவிட அதிர்ச்சியூட்டும் வேறு எதையும் தேர்ந்தெடுப்பது கடினமாக இருக்கும்.

பாணிகள்—அவற்றிற்குப் பின்னால் இருப்பது என்ன?

வளரிளமை பருவத்தினரும் இளமையும் (Adolescents and Youth) என்ற புத்தகம் ஒரு பாணியை “கருத்து வேறுபாட்டுக் குழு ஒன்றைப் போல தோன்றும் ஒரு குறுகிய கால ஃபேஷன்” என்று விளக்குகிறது. “பாணிகள் பொருள் விளக்கத்தின்படி, தற்காலிகமானவை, முன்னறிந்து கூற முடியாதவை, மேலும் அவை விசேஷமாக பருவ வயதினரின் மத்தியில் பரவியிருக்கின்றன.” ஆனால் லட்சக்கணக்கான இளைஞரை தீடீரென்று பாகி ஜீன்ஸ் அணியச் செய்வது அல்லது பீப்பர்களைக் கொண்டுநடக்கச் செய்வதுதான் என்ன? தயாரிப்பாளர்களும் விளம்பரதாரர்களும் அந்தக் கேள்விக்கு ஓர் அறிவியல்பூர்வ பதிலைக் கொண்டிருக்க விரும்புவர். தி எக்கானமிஸ்ட் என்ற பிரிட்டிஷ் பத்திரிகையிலுள்ள ஒரு கட்டுரை ஒத்துக்கொண்டது: “பாணிகளும் ஃபேஷன்களும் அறிவுக்குப் பொருந்தும் விளக்கத்தை எதிர்ப்பதாகத் தோன்றுகின்றன.”

என்றபோதிலும், வளரிளமை பருவத்தினரும் இளமையும் என்ற புத்தகம், இவ்வாறு சொல்வதன்மூலம் ஒரு விளக்கத்தை அளிக்க துணிகிறது: “பாணிகளின் பிரபலதன்மையை பல்வேறு காரணங்கள் விவரிக்கக்கூடும்: கவனத்தை ஈர்ப்பதற்கான ஆசை; உடன் சகாக்கள் உயர்வாக மதிப்பவற்றிற்கு இசைந்து செல்லும்படியான தூண்டுதல்; தனிப்பட்டவர்களாகவும் வயது தொகுதிகளாகவும் வேறுபட்டு காணப்படுவதற்கான தேவை; வழக்கத்திற்கு மாறானவற்றிற்கான கவர்ச்சி.” பருவவயது பையன் ஒருவன் வெறுமனே இவ்வாறு சொன்னான்: “வெறித்தனமாக நடந்துகொண்டு, அதை உங்களைவிட்டு வெளியேற்றுவதற்கு உயர்நிலைப் பள்ளி [மேல்நிலைப் பள்ளி] பருவம் ஒரு நல்ல சமயமாக இருக்கிறது.”

இளமைக்குரிய நடத்தையை பைபிள் கண்டனம் செய்வதில்லை. உண்மையில், அது சொல்கிறது: “இளைஞரே, உங்கள் இளமையை அனுபவியுங்கள். நீங்கள் இன்னும் இளைஞராய் இருக்கையில் மகிழ்ச்சியாய் இருங்கள். உங்களுக்கு விருப்பமானதைச் செய்யுங்கள், உங்கள் இருதயத்தின ஆசையைப் பின்தொடருங்கள்.” என்றபோதிலும், அந்தப் புத்திமதியைப் பின்தொடர்ந்து பைபிள் இந்த எச்சரிப்பையும் கொடுக்கிறது: “ஆனால் நீங்கள் எதைச் செய்தாலும் அதற்காகக் கடவுள் உங்களை நியாயந்தீர்க்கப் போகிறார் என்பதை நினைவில் வையுங்கள்.” (பிரசங்கி 11:9, டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்) இந்த நடுநிலையான புத்திமதியைக் கருத்தில் கொள்கையில், நவீன புதுப்பாணிகளுக்கு ஒரு கிறிஸ்தவ இளைஞன் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்? ஒரு நவீன புதுப்பாணியை ஏற்பதற்கு நீங்கள்தான் முதல் ஆளாக இருக்கவேண்டுமா? இந்தத் தொடரின் எமது அடுத்த கட்டுரை இந்தக் கருத்துக்களின்பேரில் சில உதவியுள்ள புத்திமதியை அளிக்கும்.

[அடிக்குறிப்புகள்]

a உண்ணுதல் கோளாறுகள் பற்றிய தகவலுக்கு, டிசம்பர் 22, 1990 (ஆங்கிலம்) விழித்தெழு!-வை பாருங்கள். மேலும், எடை குறைத்தல் பற்றிய சமநிலையான தகவலுக்கு ஏப்ரல் 22 மற்றும் மே 8, 1994-லுள்ள “இளைஞர் கேட்கின்றனர் . . .” கட்டுரைகளையும் பாருங்கள்.

[பக்கம் 14-ன் சிறு குறிப்பு]

“இந்த ஷர்ட்டுகள் . . . எல்லாரும் அவற்றை அணிகிறார்கள்.” 17-வயது ஆவெரி

[பக்கம் 15-ன் படம்]

உடலில் துளையிடுவதும் பச்சைகுத்துவதும் மிக பிரபலமாகி இருக்கின்றன

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்