இளைஞர் கேட்கின்றனர் . . .
நான் நவீன பாணியைப் பின்பற்ற வேண்டுமா?
ப்ரேக் நடனம் என்றழைக்கப்படும் ஒரு நவீன பாணியைக் பற்றி அநேக இளைஞர்கள் தங்கள் கருத்தைத் தெரிவித்தார்கள்: “அதை அவர்கள் பள்ளியில்—உடற்பயிற்சிக் கூடத்திலும் நடைப்பாதைகளிலும் ஆடுகிறார்கள்.” “பள்ளியில் மேசைகளின் மீதும் பெஞ்சுகளின் மீதும் அதைச் செய்வதை நான் பார்த்திருக்கிறேன்.” தரக்குறைவானது உட்பட புதிய அலை உடைகளும், சிகை அலங்காரமுங்கூட பிரபலமான பாணிகளாக இருக்கின்றன. ஓடுவதும், அலுவல் ஆடைத் தொகுதியோடு அணியப்படும் காலணிகளும், வீடியோ விளையாட்டுகளும் பிரபலமான பொதுபோக்குகளாக நாடக மேடை விளக்கு வட்டத்தில் இடம் பெற்றிருக்கின்றன. ஆம், நம்முடையது பாணிகள் நிறைந்த ஒரு சகாப்தமாகும். ஆனால் ஏன்? பாணிகள் எங்கிருந்து வருகின்றன.
ஒரு பாணி என்பது, பொதுவாக ஒரு சிலரால் மட்டுமீறிய ஆர்வத்தோடு பின்பற்றப்படும் ஒரு ஈடுபாடு அல்லது கவர்ச்சி என்பதாகவும், ஆனால் அது குறுகிய காலமே நிலைத்திருக்கிறது என்பதாகவும் தொகுத்துரைக்கப்படுகிறது. உதாரணத்துக்கு குறுகிய காலத்துக்கு மிகவும் பிரபலமாயிருந்த ஹூலா வளையம் என்றழைக்கப்பட்ட ஒரு விளையாட்டுப் பொருளை எடுத்துக்கொள்ளுங்கள். 1983, டிசம்பர் 12 நியூஸ்வீக் பின்வருமாறு சொன்னது: “ஹூலா வளையத்தைப் போன்று வேறு எந்த விளையாட்டுப் பொருளும் இத்தனை அநேக மக்களின் ஆர்வத்தைத் தூண்டியது கிடையாது. 26 ரூபாய் மதிப்புள்ள இந்த ப்ளாஸ்டிக் வளையம் 1958-ல் காட்சியில் உருண்டோடி வந்தது. விரைவில் 300 இலட்சம் அமெரிக்கர்கள் இதில் ஈடுபாடுகொள்ள ஆரம்பித்தார்கள். ஆனால் அதே வேகத்தில் இந்த மூன்று அடி வளையத்தில் அவர்கள் ஆர்வமிழந்துவிட்டார்கள். வருடத்தின் முடிவுக்குள் இந்தப் பாணி மறைந்துவிட்டது.”
முதலாவதாக, பாணிகள் எவ்விதமாக இவ்வளவு பிரபலமாகின்றன? சில நேரங்களில் அது வாய் வார்த்தையால் பரவுகிறது. ஆனால் பெரும்பாலும் பாணிகளை வளர்ப்பது இசைப் பாடகர்களும், நாடக மற்றும் திரைப்பட நடிகர்களும், விளையாட்டு வீரர்களும் உற்பத்தியாளர்களும் இனத் தொகுதிகளும் மற்றவர்களுமே. திறமையாகச் செய்யப்படும் விளம்பரங்களும், டி.வி. விளம்பரதாரர்களின் நிகழ்ச்சிகளும் இளைஞர்களின் கவனத்தைக் கவரும் வகையில் விசேஷமாகத் திட்டமிடப்படுகின்றன. ஆனால் விளம்பரம் செய்பவர்கள் அநேகமாக இளைஞர்களைக் குறி வைப்பதற்கு காரணம் என்ன?
இளைஞர்கள் நாகரீக பாணிகளைப் பின்பற்றுவது ஏன்?
மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என விரும்புவது இயற்கையே. குறிப்பாக இளைஞர்கள் இந்தத் தேவையை உணருகிறார்கள். இதை நன்றாக அறிந்தவர்களாய், விளம்பரம் செய்பவர்கள், ஒரு பாணியை வளர்ப்பதற்கு ஒரு வழியாக இதை முழுவதுமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். விளம்பரதாரர்கள், இளைஞர்களை இந்த அல்லது அந்தப் பொருளை அணிவதால் பயன்படுத்துவதால் அல்லது கேட்பதால் பிரபலமான, புகழ்பெற்ற, மற்றும் மகிழ்ச்சியான ஆட்களாக இருப்பதாக அநேகமாக வருணிக்கிறார்கள். ஐக்கிய மாகாணங்கள் செய்திகள் மற்றும் உலக அறிக்கை பேட்டி கண்ட ஒரு மனிதன் சொன்ன விதமாகவே: “பாணிகள் அவை எங்கே காணப்பட்டாலும்சரி, அவை ஒருவித அந்தஸ்தை உருவாக்குகின்றன. . . . புதிதான ஏதோ ஒன்றின் பாகமாக இருக்க வேண்டும் என்ற மக்களின் ஆசைக்குங்கூட பாணிகள் கவர்ச்சியூட்டுவதாக இருக்கிறது.
பதினெட்டு வயதுள்ள நீல் இதை ஒப்புக்கொள்கிறான். ஏன் இத்தனை அநேக இளைஞர்கள் நவீன பாணிகளை நாடிச் செல்கிறார்கள் என்பதை விளக்குகையில், “எல்லாருமே ஏற்றுக்கொள்ளப்பட விரும்புகிறார்கள்” என்பதாக அவன் சொல்கிறான். பதினெட்டு வயதுள்ள ஜெரால்ட், “தங்களின் நண்பர்களின் மதிப்பைப் பெற்றுக்கொள்ளவே” இளைஞர்கள் நல்ல தரமான, பெயருள்ள உடைகளை உடுத்துகிறார்கள் என்று சொல்கிறான். ஒத்த வயதிலுள்ளவர்களிடமிருந்து வரும் இந்த அழுத்தம் எத்தனை சக்தி வாய்ந்தது என்பதை 13 வயது பேம் விளக்குகிறாள்: “உங்கள் நண்பர்கள் அவற்றை உடுத்திக் கொண்டிருப்பதை நீங்கள் பார்ப்பதால் நீங்களுங்கூட அவற்றைக் கொண்டிருக்க விரும்புகிறீர்கள்.”
தனிப்பட்ட வகையில் விசேஷமாக தங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக இல்லாமல், ஆனால் அதுவே செய்யப்பட வேண்டிய ஒன்றாகக் கருதப்படுவதால் ஒரு குறிப்பிட்ட போக்கைப் பின்பற்றும் சில இளைஞர்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். நீங்கள் எப்போதாவது அவ்விதமாக நினைத்ததுண்டா? என்றபோதிலும் நீங்கள் ஒருவேளை பின்வருமாறு யோசிக்கலாம் . . .
எல்லா பாணிகளும் கெட்டவையா?
கட்டாயம் அவ்விதமாக இருக்க வேண்டும் என்றில்லை. உதாரணமாக, சமீப ஆண்டுகளில் அதிகதிகமாகப் பிரபலமாகி வரும் ஒரு காரியம் ஓடுவதாகும். மிதமாக இதைச் செய்து வந்த சிலர், தங்கள் உடல் ஆரோக்கியம் முன்னேற இது உதவியதாகச் சொல்கிறார்கள்.
ஆனால் பாணிகள் எப்பொழுதும் ஆராக்கியத்துக்கு உதவியாக இருப்பதில்லை. ப்ரேக் நடனத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இது “கழைக்கூத்தாடி வித்தை மற்றும் இயந்திரத்தைப் போன்ற அசைவுகளின் சுறுசுறுப்பான கலவை”யாக விவரிக்கப்பட்டிருக்கிறது. இது கழைக்கூத்து வித்தைகள், அபிநயக் கூத்து மற்றும் இசையின் விரும்பத்தக்க அம்சங்களின் ஒரு கலவையாக” இருக்கிறது. ஆம் நிச்சயமாகவே நடனம் சுத்தமானதும் ஆரோக்கியமானதுமான ஒரு வேடிக்கை விளையாட்டாக இருக்கக்கூடும்.
ஆனால் ப்ரேக் நடனத்தின் சில அம்சங்கள் ஆபத்தாக இருப்பதாகச் சொல்லப்படுவது கவனிக்கப்பட வேண்டும். இதனால் பின் முதுகின் கீழ்ப்புறத்தில் நோவும் குனிவதில் பிரச்னையும் ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது. இந்த நோய்க் குறிகளை அமெரிக்க குடும்ப மருத்துவன் ப்ரேக் நடன முதுகு நோய்க் குறி என்றழைக்கிறது. தலையை பம்பரமாக சுழற்றுவதே விசேஷமாக ஆபத்தானதாக இருக்கிறது. ஏஷியா வீக்கின் பிரகாரம் மலேசியாவில், ஒரு இளைஞன், ப்ரேக் நடனம் செய்யும்போது கழுத்து முறிந்து மரித்துப்போனான்! இந்தோனீஷியாவிலுள்ள ஜக்கார்டாவில், தலையைச் சுழற்றுவதைத் தடை செய்திருப்பதைக் குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை. குறைந்த அபாயமுள்ள மற்ற நடனங்களை இது அனுமதிக்கிறது. உங்களுடைய உடல் ஆரோக்கியத்தை அல்லது உங்கள் உயிரையும் கூட ஆபத்திற்குட்படுத்தக்கூடிய ஒரு நடவடிக்கையில் ஈடுபடுவது ஞானமாக இருக்குமா?—1 நாளாகமம் 11:17-19 ஒப்பிடவும்.
அந்தப் பாணியை நான் பின்பற்ற வேண்டுமா?
சிலர், எது அவர்களுக்கு நேர்த்தியாக இருக்கிறது அல்லது இல்லை என்பதைத் தங்களுக்கு மற்றவர்கள் தீர்மானிக்க அனுமதிக்கிறார்கள். உண்மையில் அவர்கள் ஒரு அடிமைக்குச் சற்று மேலாக இருக்கிறார்கள். ரோமர் 6:16 சொல்லுகிற விதமாகவே: “எதற்குக் கீழ்ப்படியும்படி, உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?” மக்கால்ஸ் பத்திரிகை குறிப்பிடுவது அக்கறையூட்டுவதாக இருக்கிறது: “பெரும்பாலும் அனைத்துமே புதிய பாணிகளுக்குக் கீழ்ப்பட்டதாகிவிட்டிருக்கின்றன: உணவு, ஓய்வு நேர பொழுதுபோக்குகள், புத்தகங்கள், கொச்சைப் பேச்சு, தட்டுமுட்டு சாமான்கள், செல்லப் பிராணிகள், மனிதர்கள் மற்றும் இடங்கள்.” ஆனால் மற்றவர்களுக்கு அடிமையாகி நீங்கள் என்ன சாப்பிட வேண்டும், வாசிக்க வேண்டும் அல்லது வாங்கவேண்டு என்பதை அவர்கள் தீர்மானிக்க அனுமதிப்பது ஞானமாக இருக்கிறதா?
ஒரு பைபிள் நீதிமொழி சொல்கிறது: “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின் மேல் கவனமாயிருக்கிறான்.” (நீதிமொழிகள் 14:15) இந்த ஞானமான ஆலோசனையின்படி எது நேர்த்தியாக இருக்கும், எது இருக்காது என்பதை மற்றவர்கள் உங்களுக்குச் சொல்வதை அனுமதிப்பதைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். எது உங்களுடைய வாழ்க்கைப் பாணியின், உணவின் அல்லது உடையின் பாகமாக இருக்கும் என்பதை மற்றவர்கள் உங்களுக்குக் கட்டளையிட அனுமதிக்க அவசரப்படாதீர்கள்.
ஒரு பாணியைப் பின்பற்றுவதற்கு முன்பாக, சிந்திக்க வேண்டிய மற்றொரு விஷயம், அதை உற்சாகப்படுத்தி அதைப் பின்பற்றும் ஆட்களின் வாழ்க்கை முறையாக இருக்கிறது. அநேகமாக இவர்கள் ஒழுக்கங்கெட்ட வாழ்க்கையை நடத்துகிறவர்களாக அவர்கள் நிலைநாட்டும் போக்கில் அதைப் பிரதிபலிக்கிறவர்களாக இருக்கிறார்கள். சிலர் அவர்கள் பின்பற்றும் பாணியினால் எதிர்ப்பையும் கலகத்தையும் வெளிப்படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். பைபிள் தராதரங்களுக்கிசைவாக வாழ நாடும் ஒரு கிறிஸ்தவன், ஒரு குறிப்பிட்ட பாணி, பிலிப்பியர் 4:8-ல் பைபிள் சொல்லும் காரியத்துக்கு எவ்விதமாக ஒப்பிடுகிறது என்பதைச் சிந்திக்க விரும்புவான்: “உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள்.” இந்தப் பட்டியலுக்கு இசைவாக இல்லையென்றால், அதைப் பின்பற்றுவது ஞானமான காரியமாக இருக்குமா?
சிந்திக்க வேண்டிய மற்ற காரியங்கள்: (1) உங்கள் பெற்றோர் அதை எவ்விதமாகக் கருதுகிறார்கள்? உங்களுடைய பெற்றோரை பழங்காலத்தவர் என்பதாக நினைப்பதற்கு முன்பாக, நீதிமொழிகள் 23:22-லுள்ள பைபிள் புத்திமதியை நினைவில் கொள்ளுங்கள்: “உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு, உன் தாய் வயது சென்றவளாகும்போது, அவளை அசட்டைப்பண்ணாதே.”
(2) உங்களைப் பற்றிய மற்றும் நீங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் காரியத்தைப் பற்றிய மற்றவர்களுடைய அபிப்பிராயத்தை அது எவ்விதமாகப் பாதிக்கும்? மற்றவர்கள் என்ன யோசிக்கிறார்கள் என்பது உண்மையில் முக்கியத்துவமுள்ளதாக இருக்கிறதா? உடன் கிறிஸ்தவர்களின் நோக்குநிலையை சிந்தித்துப் பார்க்க வேண்டிய அவர்களுடைய உத்தரவாதத்தைக் குறித்து முதல் நூற்றாண்டிலிருந்த சில கிறிஸ்தவர்களோடு வாதிடுவது அவசியமாக இருந்ததை அப்போஸ்தலனாகிய பவுல் கண்டான். பின்வருமாறு சொல்லும் அளவுக்கு அவன் சென்றான்: “ஆதலால் போஜனம் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் புசியாதிருப்பேன்.”—1 கொரிந்தியர் 8:13.
(3) உங்களை அது எவ்விதமாக சரீரபிரகாரமாயும் ஆவியின் பிரகாரமாயும் பாதிக்கும்? குறிப்பிட்ட ஒரு பாணியைப் பின்பற்றுவதற்கு முன்பாக உங்களைப் பின்வருமாறு கேட்டுக்கொள்ளுங்கள்: அதைப் பின்பற்றுவது “தெளிந்த புத்தியை” பிரதிபலிக்குமா? (2 தீமோத்தேயு 1:7) அது என்னுடைய உடல் நலத்தை ஒருவேளை என்னுடைய உயிரையும் கூட ஆபத்திற்குள்ளாக்குமா? சரீர பிரகாரமாக உங்களுக்குத் தீங்கிழைக்காமல் அல்லது உங்களின் ஆவிக்குரிய முன்னேற்றத்தை அழித்துவிடாமலிருக்கும் காரியங்களில் உங்களுடைய நேரத்தைச் செலவழிப்பது எத்தனை மேலானதாக இருக்கும்!
ஆகவே நவீன பாணிகளைப் பின்பற்ற அநேக இளைஞர்கள் அவசரப்படுகையில் நீங்கள் வித்தியாசமானவராக இருக்கலாம். நீங்களே சுயமாக சிந்தித்து ஞானமுள்ள தீர்மானங்களைச் செய்ய கற்றுக்கொள்ளலாம். “இவ்வுலகத்தின் வேஷம் கடந்து போகிறதே” என்பதாகப் பைபிள் சொல்லுகிறது. (1 கொரிந்தியர் 7:31) அவர்கள் என்ன செய்ய வேண்டும், சொல்ல வேண்டும் அல்லது உடுத்திக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி அநேகரைக் கவலைக்கொள்ளச் செய்யும் மாற்றத்தில் இடையறாத சுழற்சியில் நீங்கள் சிக்கிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. (மத்தேயு 6:31, 32 ஒப்பிடவும்) வாழ்க்கையில் கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதிலே உங்களுடைய கவனத்தை ஒருமுகப்படுத்திக் கொள்ளுங்கள். கடவுளைப் பிரியப்படுத்தக்கூடிய குணாதிசயங்களை வளர்த்துக்கொள்வது, உண்மையான நண்பர்களை அடையவுங்கூட உங்களுக்கு உதவி செய்யக்கூடும்.—நீங்கள் நவீன பாணியைப் பின்பற்றுவதால் அல்ல, ஆனால் ஒரு நபராக உங்களை உங்களுக்காகவே ஏற்றுக்கொள்பவர்களாக இருக்கும் நண்பர்களாக இவர்கள் இருப்பார்கள். (g86 8/8)
[பக்கம் 12-ன் சிறு குறிப்பு]
குறிப்பிட்ட ஒரு போக்கை பின்பற்றுவதன் காரணமாக இளைஞர்கள் பிரபலமானவர்களாகவும், வெற்றி பெறுகிறவர்களாகவும் மகிழ்ச்சியுள்ளவர்களாகவும் இருப்பதாக அநேகமாக விளம்பரதாரர்கள் வருணிக்கிறார்கள்
[பக்கம் 13-ன் படங்கள்]
ஹூலா வளையம் உங்களுக்கு நினைவிருக்கிறதா?
ப்ரேக் நடனத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?