இளைஞர் கேட்கின்றனர்
நவீன பாணிகள்—அவற்றை நான் பின்பற்ற வேண்டுமா?
‘அது ரொம்ப பொருத்தமாக இருக்கிறது!’ ‘அது அதிக கவர்ச்சியாக தோன்றுகிறது!’ நவீன பாணியை நீ பின்பற்றுவதை உன் சகாக்கள் காண்கையில் இத்தகைய பாராட்டுதல்கள் தாராளமாக வெளிவரக்கூடும். ஆம், நவீன பாணிகள் ஒருவாறு கவனத்தைக் கவர்ந்து பலமான பிரதிபலிப்புக்களைத் தூண்டுகின்றன.
இருப்பினும், நவீன பாணிகள் வானிலையைப் போன்று வெகு சீக்கிரம் மாறிவிடக்கூடும், ஒரு குறுகிய காலத்துக்குள் மறைந்துவிடுவதிலும் அவை பேர்போனவை. ஒரு வர்த்தக ஆய்வின்படி ஒரு நவீன பாணி முதலாவது தன் பிடியை துணிச்சலும் பொது கருத்துக்கு முரணான மனநிலையும் கொண்ட இளைஞர்களில் கொள்ள ஆரம்பிக்கிறது. அப்பாணி பரவ ஆரம்பிக்கையில் உற்பத்தியாளர்களும் விளம்பரதாரர்களும் அதைப் பத்திரிகைகள், டிவி, வானொலி விளம்பரங்கள் ஆகியவற்றின் மூலம் வளர்த்து விடுகின்றனர். அதை மரியாதைக்குரியதாகவும் கெளரவத்துக்குரியதாகவும் தோன்றச் செய்வதற்கு இசைக்கலைஞர்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் பணம் கொடுக்கப்படுகிறது. இளைஞர்கள் தாமே அதை பெரும் உற்சாகத்தோடு முன்னேற்றுவிக்கக்கூடும். அதைப் பற்றிக்கொண்டால் “பேரளவான பருவ வயதினரிடையே” அது மட்டுக்கு மீறிய வேட்கையாக மாறிவிடக்கூடும்.
இருப்பினும், ஒரு பாணி இறுதியில் அதன் கவர்ச்சியை இழந்து இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகிறது. (அமெரிக்கன் டெமோகிராஃபிக்ஸ்) ஆனால் ஒரு புதிய நாகரீகப் பாங்கு, நடனம் அல்லது புதுமையான கருவி போன்றவை வெறி ஆர்வத்தோடு நாடப்படுகையில் நீங்களும் அவ்வாறே செய்யும்படிக்கு உக்கிரமான அழுத்தத்தின்கீழ் இருப்பதாக ஒருவேளை உணரக்கூடும். “நீங்கள் வித்தியாசமாக இருக்க முற்படுகையில், தள்ளிவைக்கப்பட்ட ஒருவரைப் போல உணரும்படி செய்யப்படுகிறீர்கள்” என்று சொன்ன பதினைந்து வயது கிம்மைப் போல அநேகர் உணருகின்றனர்.
பாணிகளைப் பின்பற்றுவது ஒரு பெறும்செலவை உட்படுத்தும் நடவடிக்கையாகவும் இருக்கக்கூடும். உதாரணமாக சில ஆண்டுகளுக்கு முன் பிரெஞ்சு இளைஞர்களிடையே ஆரம்பித்த குண்டூசி பாணியை எடுத்துக் கொள்ளுங்கள். நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில், 1991-ல் வெளிவந்த ஓர் கட்டுரையின் பிரகாரம், “உங்கள் பந்து விளையாட்டு தொப்பியிலோ அல்லது சட்டைப் பாக்கெட்டுகளிலோ பலவண்ணத்தில் பளபளக்கும் தட்டைத் தலையுடைய குண்டூசிகளை முழுவதும் நிரப்பிக்கொள்வது அத்தியாவசியமான ஒன்றாக ஆகிவிட்டது.” இந்தப் பாணி தீங்கற்றது போல் தோன்றியது—ஆனால் பிரபல உற்பத்தியாளரால் வடிவமைக்கப்பட்ட ஒவ்வொரு குண்டூசிக்கும் அபாண்டமாக 12 டாலர் நீங்கள் கொடுத்து வாங்க வேண்டும்.
ஒரு இளைஞர் “பொருத்தமாய்” தோன்றுவதற்கு வெறுமனே அதிகப் பணத்தை செலவழிப்பதற்கும் அதிகமாக செய்யவேண்டியிருக்கும். ஒரு தளக்கட்டுப் பந்தாட்ட தொப்பியை அணிந்துகொள்வது நாகரீகப் பாங்காக இருக்கிற சில இளைஞர் தொகுதிகளிடையே, நீங்கள் சரியான தொகுதியை அடையாளம் காண்பிப்பதற்கு சரியான நிறமுள்ள தொப்பியை வாங்க வேண்டியிருக்கும், மேலும் அந்தத் தொப்பியை நீங்கள் அணியும் விதம் அந்த பாணியின் ஒரு பாகம் ஆகும்.
அநேக இளைஞர்கள் இதற்கு ஆழ்ந்த முக்கியத்துவம் கொடுக்கின்றனர். கெளரவத்தையும் அங்கீகாரத்தையும் பெறுவதற்கு சில பாணிகளை அத்தியாவசியமானதாக காண்கின்றனர். அப்படியிருந்தாலும், அப்பாணிகளைப் பின்பற்றுவதில் சேர்ந்துகொள்வது எப்போதுமே புத்திசாலித்தனமான காரியமல்ல என்பதை நாம் பார்ப்போம்.
உங்களுடைய நடைகளின் பேரில் கவனமாயிருத்தல்
பாணிகள் அனைத்தையும் பைபிள் முழுவதுமாக கண்டனம் செய்வதில்லை. சில பிரபலமான வேலைகள் அதன் பாணிக்குரிய தன்மையைக் கொண்டிருந்தபோதிலும் பொருத்தமானதாய் இருக்கும். உதாரணமாக, மெதுவாக ஓட்டமிட்டுச் செல்லுதல் ஒருசில வருடங்களுக்கு முன் பிரபலமானபோது, அது ஒரு பாணி என்று சிலரால் கருதப்பட்டது. ஆனால் தேகத்திற்குகந்த மிதமான உடற்பயிற்சியின் நன்மைகளை யார் தான் மறுக்கமுடியும்?—1 தீமோத்தேயு 4:8-ஐ ஒப்பிடவும்.
இருப்பினும், சில பாணிகள் அற்பமானவையிலிருந்து முற்றிலும் ஆபத்தானது வரை வித்தியாசப்பட்ட வகையில் உள்ளன. பண்டையகால நீதிமொழி ஒன்றின் எச்சரிப்பு பொருத்தமானதாய் இருக்கிறது: “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின் மேல் கவனமாயிருக்கிறான்.” (நீதிமொழிகள் 14:15) விவேகமுள்ள ஒரு நபர் ஞானமுள்ளவராயும், பகுத்துணரக்கூடியவராயும் இருக்கிறார். ஏதோவொரு புதிய போக்கு வெறுமனே பிரபலமாயிருப்பதன் காரணமாக அவன் குருட்டுத்தனமாக அதை பின்பற்றுவதில்லை. அவர் ஞானமாக அவருடைய செயல்களின் விளைவுகளைத் தீர ஆலோசிக்கிறார்.
சிந்தித்துப் பார்ப்பதற்கு விலை ஒரு காரணமாக இருக்கலாம். உணவை விரைவாகத் தயாரித்துக் கொடுக்கும் ஒரு சிற்றுண்டிச்சாலையில் வேலை செய்துகொண்டிருக்கும் ஒரு பருவ வயது பெண்ணைப் பற்றி கனடா நாட்டுப் பத்திரிகை சொல்கிறது. அவள் கடின உழைப்பின் மூலம் சம்பாதித்த பணத்தில் பாதிக்கு மேல் நவீன பாணி உடைகளை வாங்குவதற்கு செலவிடுகிறாள். “திரவியம் கேடகம்” என்று பைபிள் சொல்கிறது. அதாவது, அது தேவைப்படும் ஒரு பயனுள்ள கருவி. (பிரசங்கி 7:12) ஒரு எழுத்தாளர் அதைச் சொல்கிறபடி, “ஒன்று அல்லது இரண்டு குறிப்பிட்ட காலப்பகுதிகளுக்குள் வழக்கிலில்லாதபடி போய் விடுவதற்கென்று தயாரிக்கப்பட்ட” பொருட்களின் பேரில் உங்கள் பணத்தை வீண்செலவு செய்யமுடியுமா?
உடல் சம்பந்தமான ஆபத்து சிந்திப்பதற்கு மற்றொரு காரணமாய் இருக்கலாம். சமீபத்தில் ஆச்சரியமூட்டும் வீரச்செயல்கள் நிறைந்த நடனம் அதிக பிரபலமானதாக இருந்தது. ஆனால் அது அநேக காயங்களை முதுகில் ஏற்படுத்தியது. நம் நாளைப் பற்றியென்ன? இரவு விடுதிகளிலும், ராக் இசை விருந்துகளிலும் நடைபெறும் மூர்க்கத்தனமான கூத்தாடித்தனத்தைக் குறித்து ரோலிங் ஸ்டோன் என்ற பத்திரிகையில் வெளியான கட்டுரை பேசுகிறது: “மேடை குதித்தல்” (மேடையிலிருந்து பாராட்டுத் தெரிவித்துக் கொண்டிருக்கும் ரசிகர்களின் கைகளில் குதிப்பது), “பங்க் இசை நடனத்தில் நடனமாடிக் கொண்டிருப்போர் ஒருவர் மீது ஒருவர் மோதி அடித்துக்கொள்ளுவது, நடன அரங்கு மன்றத்தில் அளவுக்கு மீறி ஆட்களின் கும்பலும், நடனமாடுபவர்கள் ஒருவர் மேல் ஒருவர் மோதிக்கொண்டும் இருப்பது”—இப்படிப்பட்ட “நடனங்கள்” உண்மையில் இசையின் தாளத்துக்கேற்ப அமைக்கப்பட்டிருக்கும் வன்முறைகளே. “இது உண்மையில் அளவுக்கு மீறி இருக்கிறது,” என்று ஒரு இளம் பெண் குறைகூறுகிறாள். அவள் அதை இவ்வாறு விவரிக்கிறாள்: “நடனமாடுபவர்கள் வெறிபிடித்தவர்களைப் போல் நடன அரங்கை முழுவதுமாக பயன்படுத்திக்கொண்டு அவர்களால் முடிந்த அளவு விரைவாக எவ்வித தடையுமின்றி சுற்றி சுற்றி நடனமாடி அக்கம்பக்கத்தில் நின்றுகொண்டிருப்பவர்களைக் குறித்து கவனமில்லாமல் அவர்களை ஓங்கி பலமாக அடிப்பார்கள்.” உங்கள் சகாக்கள் சிலருக்கு இப்படிப்பட்ட நடத்தை கவர்ச்சியூட்டுவதாய் இருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட இடங்களில் இருப்பது அல்லது அப்படிப்பட்ட காரியங்களைச் செய்வது, “அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து தெளிந்த புத்தியுள்ளவர்களாய் ஜீவனம்பண்ணுங்கள்” என்று கிறிஸ்தவர்களுக்குக் கட்டளையிடும் கடவுளின் தயவைப் பெற்றுக்கொள்ளச் செய்யுமா?—தீத்து 2:12.
உடலில் துளை போடுவது, பச்சைக் குத்திக்கொள்வது—இளைஞர் மத்தியில் பிரபலமாகிக்கொண்டு வரும் இந்தச் செயல்களின் சுகாதாரக் கேடுகளைப் பற்றியென்ன? பச்சைக் குத்திக்கொள்வது, கல்லீரல் அழற்சி, எய்ட்ஸ் போன்ற மருத்துவ சம்பந்தமான தீங்குகளை விளைவிக்கலாம்; ஊசிகளும் கருவிகளும் சுத்தம் செய்யப்படவில்லையென்றால் அவ்வாறு நேரிடலாம் என்று மருத்துவர்கள் சொல்கின்றனர். அந்த பாணி மறக்கப்பட்டுப் போய் வெகு காலத்துக்குப் பின்னும் நிரந்தரமாக அலங்கரிக்கப்பட்டிருக்கும் தோற்றம் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. சில பச்சைக்குத்தல்கள் லேசர் மூலம் நீக்கப்படலாம். ஆனால் லேசர் சிகிச்சைமுறை, ஒவ்வொரு முறையும் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நோவுண்டாக்கும் அநேக சிகிச்சை நேரப்பகுதிகளை உட்படுத்துகிறது.
சில குறிப்பிட்ட பாணிகளைப் பின்பற்றுவது, எல்லாவற்றைக் காட்டிலும் அதிக சாவுக்கேதுவான ஆவிக்குரிய தீமை ஏற்படுவதில் விளைவடையும். அநேக பாணிகள் புகழ்பெற்றவர்கள் பேரில் மையம் கொண்டுள்ளது—நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், இசையமைப்பாளர்கள், அவர்களைப் போன்று மற்றவர்கள். தற்போது பிரபலமாயிருக்கும் நபர்களைப் போல் உடுத்திக்கொள்வது, செயல்படுவது “பொருத்தமானதாக” ஆகி விடுகிறது. ஆனால் அப்படிப்பட்ட புகழுக்குரியவர்களை வணங்குவதைக் குறித்து யெகோவா தேவன் எவ்வாறு நோக்குகிறார்? அதை விக்கிரக வணக்கம் போன்றதாக எண்ணுகிறார். பைபிள் இவ்வாறு எச்சரிக்கிறது: “விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்.” (1 கொரிந்தியர் 10:14) புகழ்பெற்றவர்களில் அநேகர் பைபிளின் ஒழுக்க தராதரங்களுக்கு எந்தவித மதிப்பையும் கொண்டில்லை. (1 கொரிந்தியர் 6:9-11) விஷயம் அப்படியிருப்பதால், அப்படிப்பட்டவர்களுக்கு ஆர்வமதிப்பு கொடுப்பதைப் போன்று அவர்களைப் போல் உடுத்திக்கொண்டு அல்லது நடந்துகொண்டிருந்தால் கடவுள் அதில் பிரியப்படுவாரா?
மற்றவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் அபிப்பிராயம்
இளைஞர்கள் தங்கள் பெற்றோருக்கு மதிப்பு கொடுக்கும்படி பைபிள் கட்டளையிடுகிறது. (எபேசியர் 6:2) நீங்கள் அவர்களுக்கு முன்பு உடல்முழுவதும் நகைகளை அணிந்துகொண்டு அல்லது பச்சைக்குத்திக்கொண்டு தோன்றினால் அது அவர்களுக்கு அவமதிப்பாக இருக்கும் அல்லவா? உங்கள் வகுப்பில் இருக்கும் மற்றவர்களைப் பற்றியென்ன? நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்து மற்றவர்களோடு உங்களுடைய விசுவாசத்தை பகிர்ந்துகொண்டால், நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு கடினமாயிருக்குமல்லவா?—2 கொரிந்தியர் 6:3-ஐ ஒப்பிடவும்.
ராப் இசைக்கலைஞர்கள் அதிக பிரபலமாக ஆக்கியிருக்கும் சில பாணிகளை உடுத்திக்கொள்வதைப் பற்றி அதே விஷயம் சொல்லப்படலாம். அநேக பிராந்தியங்களில் பந்தாட்டக்காரர்கள் அணியும் தொப்பி வெறுமனே தலையை மூடுவதற்கு மட்டுமே என்பது உண்மைதான். ஆனால் சில நகர்ப்புறங்களில் “சில குறிப்பிட்ட வகையான தொப்பிகள் பிரபலமடைவதில் மானிடர்களிடையே உள்ள சிக்கலான உறவுகள் இப்போது முக்கிய பங்கை வகிக்கின்றன.” (என்டர்டெய்ன்மென்ட் வீக்லி) குறிப்பிட்ட வகையான தொப்பிகள், மேற்சட்டைகள், காலணிகள் அல்லது மற்ற அணிகலன்களை அணிவது நீங்கள் ராப் வாழ்க்கை பாணியை பின்பற்றுகிறீர்கள் என்ற அபிப்பிராயத்தைக் கொடுக்குமா? கிறிஸ்தவ அன்பு “அயோக்கியமானதை செய்யாது” அல்லது திடுக்கிட வைக்கும் முறையில் நடந்துகொள்ளாது என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.—1 கொரிந்தியர் 13:5.
பழமைப் பற்றாளர் நிரம்பிய ஓர் பட்டணத்தில் பருவ வயது பெண்கள் தொகுதி ஒன்றுக்கு என்ன நடந்தது என்பதை கவனியுங்கள். பீப்பிள் பத்திரிகையின் பிரகாரம், உள்ளூர் மக்களின் உணர்ச்சிகளை கருதாது “ஹிப்-ஹாப் பாணியில் அமைந்த உடைகளை அணிந்து” பள்ளிக்குச் சென்றனர். ஒரு பெண் விளக்கினாள்: “நாங்கள் இந்த உடைகளை MTV-யில் (மியூசிக் டெலிவிஷனில்) பார்க்கிறோம். இந்த அலைவரிசையில் இசை வீடியோக்கள் முக்கியமாய் காட்டப்படுகின்றன. அந்த ஆடைகள் நன்றாக தோன்றுவதாய் எனக்குப் பட்டது.” ஆயினும் நவீன போக்கில் அமைந்த அந்த ஆடைகள் சர்ச்சையையும் இன வன்முறையையும் ஆரம்பித்தன.
எனவே, நாம் கிறிஸ்தவர்களாக ‘தகுதியான வஸ்திரத்தினாலும் தெளிந்த புத்தியினாலும் நம்மை அலங்கரிக்க வேண்டும்.’ (1 தீமோத்தேயு 2:10) ஒருவருடைய தனிப்பட்ட விருப்பங்களை வற்புறுத்தாது மற்றவர்களுடைய உணர்ச்சிகளையும் மனப்பான்மைகளையும் கவனத்தில் கொள்வதை இது குறிக்கிறது. மற்றவர்கள் மோசமானவை என்று கருதும் உடை மற்றும் நடத்தை பாணிகளையும் தவிர்ப்பதையும்கூட இது அர்த்தப்படுத்துகிறது.
ஜாக்கிரதையாய் இருப்பதற்கான தேவை
ஒவ்வொரு நவீன பாணியையும் நிச்சயமாகவே அதன் சொந்த தகுதிகளின் அடிப்படையில் மதிப்பிட வேண்டும். இருப்பினும், பிசாசாகிய சாத்தான் இவ்வுலகத்தின் அதிபதி என்பதையும் “எவனை விழுங்கலாமோ” என்பதே அவனுடைய நோக்கம் என்பதையும் நினைவில் வையுங்கள். (1 பேதுரு 5:8; யோவான் 12:31; 1 யோவான் 5:19) சந்தேகமின்றி சில பிரபலமான நவீன பாணிகள் இளைஞர்களைக் கடவுளிடமிருந்து திசைதிருப்புவதற்கென்று சாத்தானால் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. எனவே, ஜாக்கிரதையாக இருப்பது பொருத்தமானது.
பொதுவாக, எந்த ஒரு புதிய போக்கையும் அல்லது நவீன பாணியையும் முதலாவது பின்பற்றுவோரில் ஒருவராக இருப்பது ஞானமானதல்ல என்று சொல்வது பாதுகாப்பானது. பழமைப் பற்றாளராக இருக்க நாடுவது அதைவிட அதிக பாதுகாப்பானது. மறுபட்சத்தில், “மிஞ்சின நீதிமானாய்” இராதபடியும்கூட பைபிள் எச்சரிக்கை அளிக்கிறது. (பிரசங்கி 7:16) ஆனால் படுமோசமான விதத்தில் நம் நாளுக்கு பொருந்தாத விநோதமான அல்லது அசாதாரணமான வகையில் நீங்கள் தோற்றமளிக்கும் அளவுக்கு நாகரீகப் பாணியில் ஏற்படும் மாற்றங்களை எதிர்க்கவேண்டிய அவசியமில்லை.
ஒரு நவீன பாணி தெளிவாக பைபிள் நியமங்களுக்கோ அல்லது நற்புத்திக்கோ முரணாக இருக்கையில் அதை தவிர்ப்பது புத்திசாலித்தனமான காரியம். உங்களுடைய சகாக்களிலிருந்து வித்தியாசமாக இருப்பது எளிதல்ல என்பது உண்மையே. எழுத்தாளர் ஷேரன் ஸ்காட் “முடியாது என்று சொல்லி உங்கள் நட்பை காத்துக்கொள்வது எப்படி?” (ஆங்கிலம்) என்ற தன் புத்தகத்தில் கேட்கிறார்: “உங்களுக்காக அவர்கள் தீர்மானங்களைச் செய்யுமளவுக்கு அத்தனை திறமிக்க, உங்களை அவ்வளவு நன்றாக அறிந்த நண்பர்கள் யாராவது உங்களுக்கு இருக்கிறார்களா? அநேகமாய் இருக்கமாட்டார்கள்!” உங்களுடைய பெற்றோரின் விருப்பத்தினாலும் உங்களுடைய பைபிளால் பழக்குவிக்கப்பட்ட மனச்சாட்சியினாலும் வழிநடத்தப்படுவது மேலானதாய் இருக்குமல்லவா? அவ்விதமாக செய்வது உங்களுடைய எல்லா சகாக்களின் அங்கீகாரத்தையும் ஒருவேளை கொண்டுவராது. ஆனால் அது யெகோவாவின் அங்கீகாரத்தைக் கொண்டுவரும், அது குறுகிய காலம் நீடிக்கும் ஒரு நவீன பாணியைப் போல் அன்றி நித்தியமாய் இருக்கக்கூடும்!—சங்கீதம் 41:12; நீதிமொழிகள் 12:2.
[பக்கம் 16-ன் படம்]
ஒரு குறிப்பிட்ட நவீன பாணியை நீங்கள் பின்பற்றினால் உங்கள் பெற்றோர் எவ்விதம் பிரதிபலிப்பார்கள்?