கானரித் தீவுகள்—சாதகமான சீதோஷ்ணநிலை, கவர்ந்திழுக்கும் இயற்கைக் காட்சி
ஸ்பெய்னிலுள்ள விழித்தெழு! நிருபர்
அதிதொலைவிலே உள்ள மறு கரையில், ஜிப்ரால்டர் ஜலசந்தியில் இருபுறமும் உள்ள பாறைகளுக்கு அப்பால், மயக்கவைக்கும் சில தீவுகள் இருப்பதாகச் சொல்லப்பட்டது. நிலம் மிகவும் வளங்கொழிப்பதாக, சீதோஷ்ணநிலை அவ்வளவு சாதகமாக இருந்ததாலும், எதுவும் எல்லாமுமே அவ்விடத்தில் விளையும். இவையே ஃபார்ச்சுனேட் தீவுகள் (Fortunate Islands). அவற்றை நாம் இன்று கானரித் தீவுகள் என்று அறிந்திருக்கிறோம். “கானரி,” கானிஸ் என்ற லத்தீன் சொல்லிலிருந்து வந்தது. அங்கு ஏராளமாக வாழ்ந்துவந்த பெரிய, பயங்கரமான நாய்களை இது குறிப்பிடுகிறது.
ரோம கிரேக்க எழுத்தாளர்களால் புனைந்துரைக்கப்பட்ட இந்த மெய் பொய் கற்பனை கலப்பு, கிறிஸ்து வருவதற்கு முன்னான சமயம், அட்லான்டிக்குக்கு கப்பலோட்டி வந்த சில அஞ்சா மாலுமிகள் சொன்ன கதைகளின்பேரில் சார்ந்திருந்தது. இன்று, அந்தப் பழங்கப்பலோட்டிகளின் தடங்களை சுற்றுப்பயணிகளே மறுபடியும் கண்டுபிடிக்கின்றனர். கவர்ச்சியான சில தன்மைகளும் பெரும்பான்மையான மர்மங்களும் மறைந்துவிட்டபோதிலும் இத்தீவுகள் தத்ரூபமாயிருக்கின்றன. உண்மையில் அவற்றின் சீதோஷ்ணநிலை, வடக்கு ஐரோப்பாவின் கடுமையான குளிரிலிருந்து தற்காலிக விடுவிப்பை பெற நாடும் லட்சக்கணக்கான விஜயம் செய்பவர்களை மயக்க வைப்பதற்கு போதிய அளவு சாதகமாகவும் கவர்ந்திழுப்பதாகவும் இருக்கிறது.
மிதமான சீதோஷ்ணநிலை மாத்திரம் கவர்ச்சிகரமானதாக இல்லை. இத்தீவுகள் ஒரே ரகமான பல்வேறு காட்சிகளையும் தாவரங்களையும் உடையவையாக இருப்பதால், ஏழு பிரதான தீவுகளுள் நான்கில், தேசிய பூங்காக்கள் அமைத்தலை சரியெனக் காட்டுவதற்கும் அப்பால் செல்கிறது.
டெனரிஃப்—மேகங்களுக்கு மேல் மலைத் தோட்டம்
பெரிய தீவாகிய டெனரிஃப், மேகங்களுக்கு உயர இருந்து அட்லான்டிக்குக்கு நகர்ந்துவரும் ஓர் எரிந்தணைந்த எரிமலையாகிய பீகோ டெ டேடெவினால் சூழப்பட்டிருக்கிறது. எரிமலை கவிகையைச் சுற்றி, ஆல்ப்ஸ்மலை அடிவாரத்திற்குரிய மாபெரும் அரங்கம் இருக்கிறது. இது மேலோங்கி காணப்படும் எரிமலையோடு சேர்ந்து டேடெ தேசிய பூங்காவை உருவாக்குகிறது. இந்தப் பூங்கா வசந்த காலத்தின் பிற்பகுதியிலும் கோடை காலத்தின் முற்பகுதியிலும் முளைக்கும் விசேஷித்த தாவரங்களுக்கு ஆதரவளிக்கிறது. அச்சமயத்தில், அந்தச் செடிகள் குளிர்கால பனிகளிலிருந்து சேகரிக்கப்பட்டிருக்கும் ஈரத்தை பயன்படுத்திக் கொள்கின்றன. முழு எரிமலைப்பகுதியும் திடீரென வண்ணங்களால் மினுமினுக்கும் மலைத் தோட்டமாக மாறிவிடுகிறது.
இந்தப் பூங்காவில் உள்ள இரண்டு வெகு அபூர்வ பூக்களும் உலகில் வேறு எங்கேயும் காணப்படுவது கிடையாது. அவை சிவப்பு டாஹிநாஸ்தே-உம் டேடெ வியலட்டும். இந்தச் சிவப்பு டாஹிநாஸ்தே தீவுக்கூட்டத்திலேயே அதிக கண்கவர் செடியாக விவாதிக்கப்படுகிறது, எண்ணிலடங்கா இந்தச் சிவப்பு பூங்கொத்துகள் தனித் தண்டைச் சுற்றி நெருக்கமாக சுருண்டு சுருண்டு வளர்ந்து, சுமார் இரண்டு மீட்டரோ அதற்கு மேலான உயரமோ எட்டும். உயர வளர்ந்த புஷ்பங்கள் நல்ல நீலநிறமான வானத்தை, சிவப்பான தாவர சிம்னிகள் வணங்குவதுபோல் காட்சியளிக்கின்றன.
நறுமண மலர்மாலைக் கொண்டு எரிமலையின் தொண்டையை அலங்கரிக்கும் டேடெ வியலட் கெட்டித் தன்மைக்காக பேர்போனது. எந்தவொரு தாவரமும் பிழைக்காத 3,700-மீட்டர் அளவான சிகரத்திலிருந்து ஒருசில மீட்டரே அது வளருகிறது.
ல பால்மா—பசுமையான எரிமலை கொப்பரை
ல பால்மா உலகிலேயே மிகப்பெரிய நிலக்குழிகளில் ஒன்றை கொண்டிருக்கிறது. அதன் விளிம்பு சுமார் 27 கிலோமீட்டர் சுற்றளவுடையதாய், ஏறத்தாழ 2,400 மீட்டர் உயரமுடையதாயிருக்கிறது. அந்தத் தீவின் மையப்பகுதியை ஆக்கிரமித்துக்கொள்ளும் அடியிலுள்ள பிரமாண்டமான பள்ளம் சீரழிந்த எரிமலையாக இருக்கிறது, இது ஆண்டுகளினூடே காற்றாலும் மழையாலும் மேடுபள்ளமாக்கப்பட்டு திண்மையான கொப்பரையாக இப்போது காணப்படுகிறது. எனவேதான் இதற்கு ஸ்பானிய மொழியில் கால்டேரா (கல்ட்ரான் [கொப்பரை] என்பதற்கு ஸ்பானியமொழியில்) என்று பெயரிடப்பட்டது, இந்த வார்த்தையே உலகெங்குமுள்ள அம்மாதிரியான நிலக்குழிகளுக்கு பொருத்தப்படுகிறது.a
இப்போது முழுமையாகத் தேசிய பூங்காவாக இருக்கும் அந்தக் கொப்பரை மிக அழகான ஊசியிலை காட்டால் கிட்டத்தட்ட முற்றிலுமாக மூடப்பட்டிருக்கிறது. செங்குத்தான சரிவுகளை தவிர உயர் மரமான கானரி ஊசியிலை, எல்லாவற்றையும் மூடுகிறது. இவ்வாறு கொப்பரை சுவர்கள் இன்னும் அரிக்கப்படாமல் காக்கிறது. அதன் எட்டாத்தன்மையின் காரணமாக வெளியுலகிலிருந்து முற்றும் துண்டிக்கப்பட்டதாய், கெடாத இந்தக் கொப்பரை உள்ளே துணிகரமாக வரக்கூடிய இயற்கைப் பிரியர்களுக்கு அழகுக்கும் அமைதிக்கும் புகலிடமாக திகழ்கிறது.
கோமெரா —அமெரிக்காவிற்கான படிக்கல்
இந்த ஒதுக்கமான தீவிலிருந்துதான் கொலம்பஸ் ஒன்றும் தெரியாத நாட்டிற்குள் கடற்பயணஞ்செய்தார். அது அப்போதுதான் ஸ்பானியர்களால் கைப்பற்றப்பட்டிருந்தது, படகுகளுக்கு வேண்டிய நீரையும் சரக்குகளையும் ஏற்ற, சான் செபாஸ்டியாண் என்ற சிறிய துறைமுகத்தில் கொலம்பஸ் நிறுத்தினார்.
கொலம்பஸ் காலத்தில் அந்தத் தீவிலிருந்த குடிகளாகிய குவான்ச்செஸ், இன்னும் பழங்கால வாழ்க்கை நடத்தி வந்தனர், ஆனால் அவர்கள் தேவைக்குத் தக்கவாறு மாற்றியமைக்கும் மக்களாக இருந்தனர். அந்தப் பகுதியின் மலை சார்ந்த இயற்கை சூழ்நிலையின் காரணமாக அவர்கள் ஊதல் அடங்கிய ஒரு தனி மொழியை கற்றிருந்தனர். இதைக் கொண்டு பல கிலோமீட்டருக்கும் மேலாக ஒரு மலையுச்சியிலிருந்து இன்னொரு மலையுச்சியில் ஒருவருக்கொருவர் உரையாடினார்கள். அநேகரால் மறக்கப்பட்டாலும், இந்தத் “தொலைவு ஊதல்” உத்திமுறை, வயதான ஆட்களால் இன்னும் பயன்படுத்தப்படுகிறது, சீக்கிரத்தில் செய்தியைக் கடத்த விரும்பினால் அவர்கள் இதைப் பயன்படுத்துவார்கள். ஒதுக்கமான கிராமங்களில் பிரசங்கிக்கும் யெகோவாவின் சாட்சிகள், “சாட்சிகள் இங்கே வந்திருக்கிறார்கள்!” என்ற செய்தி மலை உச்சிகளிலிருந்து ஊதப்படுவதை ஒன்றுக்கும் அதிகமான சந்தர்ப்பங்களில் கேள்விப்பட்டிருக்கிறார்கள்.
அந்தத் தீவின் மேல்சரிவுகளில் ஒரு தேசிய பூங்கா இருக்கிறது, பண்டைய காடு ஒன்றை காக்க இது உண்டாக்கப்பட்டது. எப்போதும் மூடுபனியால் மறைக்கப்பட்டு, இறகினைப்போன்ற தோற்றமுடைய மரப்பாசிகளால் முழுமையாக மூடப்பட்டு முறுக்கப்பட்ட மரக்கிளைகள் நிறைந்திருக்கும் அதன் உள் இருட்டு, வெகுமுன் மறக்கப்பட்ட வனதெய்வங்களைப் பற்றிய கதைகளின் நினைவுகளை கிளறிவிடுகிறது. ஆச்சரியமளிக்கும் வண்ணமாக, இங்கே மரங்களுக்கு அடியிலேயே மழையானது வழக்கமாகப் பெய்கிறது. அடிக்கும் வட பருவக் காற்றுகளால் காட்டின்மீது வேகமாக அடித்துச் செல்லும் மேகங்களிலுள்ள நீரை மரங்கள் மழையாகப் பெய்விக்கின்றன. இவ்விதமாக, மரங்களின் கீழ் சாதாரணமாக நிலையான தூறல் இருக்கிறது, வெளியிலோ மழை பெய்துக்கொண்டிருக்காது.
எஞ்சியிருக்கும் புதைப்படிவங்கள் என்ன காட்டுகின்றனவென்றால் இந்தப் புன்னைமர காடு (லாரிசிள்வா என்றழைக்கப்படுவது) மத்திய தரைக் கடல் பகுதி பூராவும் ஒருகாலத்தில் இருந்தது. ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக சீதோஷ்ணநிலையில் ஏற்பட்ட மாற்றம், கானரி தீவுகளிலுள்ள ஒருசில மலையுச்சிகளாக அதன் அளவைப் பெரும்படியாகக் குறைத்திருக்கிறது.
லான்சாரோட்டெ —வித்தியாசப்பட்ட பாலைவன தீவு
லான்சாரோட்டெ ஒரு பாலைவன தீவாகும். அதில் குடியில்லையென்றாலும் பாலைவனம் போன்றே இருக்கிறது. மழை பெய்வதே அரிது. சிறு மக்கள்தொகைக்கு வாழ்க்கையானது இங்குக் கஷ்டமாகவே இருந்துவந்தது. ஆனால் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த கடுமையான தொடர் எரிமலை வெடிப்புகள், இந்தத் தீவின் தோற்றத்தையே மாற்றின. எரிமலைகள் மரணத்தையும் ஜீவனையும் கொண்டுவந்தன. மரணம் எப்படியென்றால், இந்தத் தீவின் கால்பகுதி எரிமலை குழம்பினால் புதைந்திருந்தது. இவ்விதமாக அநேக கிராமங்களுக்கும் பண்ணைகளுக்கும் திடீரென்று முடிவை கொண்டுவந்தது. ஜீவன் எப்படியென்றால் எரிமலைகளின் சாம்பலினால் தீவிலுள்ளவர்களுக்குப் பிழைப்பு சாத்தியமாயிருந்தது.
எரிமலைகளிலிருந்து கிடைத்த மிச்சமீதியாகிய நுண்துளையுடைய எரிமலை சரளைக்கற்களின் பெரும் திரளான எண்ணிக்கையால், மாதக்கணக்காக மழை பெய்யாவிட்டாலும் தீவிலுள்ளவர்களால் கனிகளையும் காய்கறிகளையும் பயிரிட முடியும். வயல்கள் பத்து சென்டிமீட்டர் சரளைக்கல் படுகையால் மூடப்பட்டிருக்கின்றன, இதனால் கீழ்மண்ணிலுள்ள ஈரத்தன்மையை மாத்திரம் காக்காமல், உண்மையில் ஈரமான இரவு காற்றிலிருக்கிற ஈரத்தை ஈர்த்து, கீழ்மண்ணுக்கு தருகிறது. திராட்சத் தோட்டங்கள், அத்தி மரங்கள், தக்காளிகள், மக்காச்சோளம், மேலும் இதர பயிர்கள் எதிர்பாரா வகையில் அந்தக் கருநிற சரளைக்கல்லிலிருந்து துளிர்விடுகின்றன.
டிமான்ஃபாயா தேசிய பூங்கா பிரமிப்புண்டாக்கும் நிலக்குழிகளையும் அவை வெளிப்படுத்தின எரிமலை குழம்பினால் மூடப்பட்ட பெரும் சுற்றுவட்டாரத்தையும் அடக்குகிறது. பாலைவனம் போன்ற சீதோஷ்ணநிலை கெட்டியான எரிமலை குழம்பை ஏறத்தாழ கெடாது வைத்திருக்கிறது. இதனால் அந்தப் பூங்காவை பார்க்கவருபவர்கள், வெடிப்புகள் முந்தினநாளே தணிந்ததாக நினைத்துக் கொள்வார். இந்தத் தத்ரூபமான எரிமலை இயற்கைக் காட்சி, வெள்ளையான கண்கவர் கிராமங்களோடுகூட, அந்தத் தீவுக்கு தனித்தன்மைவாய்ந்த அசாதாரண அழகை அளிக்கிறது.
பெரும்பாலும் இந்த வசீகரமான எரிமலை தீவுகள், அவற்றில் குடியிருப்பவர்களின் மற்றும் அங்கு வளரும் தாவரங்களின் ஏற்புடைமைக்குப் புகழைச் சேர்க்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, அவற்றின் இயற்கை அழகு போற்றிப்பாராட்டும் பார்வையாளரை, அத்தகைய கதம்பத்தின் படைப்பாளருக்கு துதிசேர்க்கும்படி தூண்டுகிறது.
[அடிக்குறிப்புகள்]
a அ.ஐ.மா., ஆரிகானிலுள்ள க்ரேட்டர் லேக் பிரபலமான கொப்பரையாக இருக்கிறது. பின்னர் நீர் நிரப்பப்பட்டது.
[பக்கம் 18-ன் பெட்டி/படங்கள்]
கானரித் தீவு விலங்குகளும் தாவரங்களும்
கானரி. (1) காட்டில், நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேற்பட்ட தெரிந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கத்தின் விளைவாக, முனைப்பான வண்ணங்களையுடைய கூண்டில் அடைக்கப்பட்ட பிரபலமான பறவைகளைப்போல அந்தளவுக்கு நிறமில்லாதவையாக இருந்தாலும், தீவுக்கூட்டத்தையடுத்து பெயரிடப்பட்டதாக, இந்தப் பறவைகள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன.
ஏயோனியம் இனங்கள். (2) தீவுகளெங்கும் இரண்டு டஜனுக்கும் மேலானவை காணப்படுகின்றன, அநேகம் பாறை வெடிப்புகளில் வளருகின்றன. ஏயோனியம் லான்செர்ரட்டென்சிஸ், (3) போன்ற சில வகைகள், கடினமான எரிமலை குழம்பிலிருந்துங்கூட வளருகின்றன.
டேடெ வியலட். (4) இந்த அருமையான பூக்கள் சாதகமற்ற எரிமலைச் சூழலில், கடல் மட்டத்திற்கு மேலாகக் கிட்டத்தட்ட 3,700 மீட்டரில் வளருகின்றன.
வாழை மரம். (5) நூற்றாண்டுகளாக வாழை மரங்கள் கானரித் தீவுகளில் வளர்க்கப்படுகின்றன. அமெரிக்காவை கண்டுபிடித்தவுடன் ஸ்பானிய காலனியாட்கள் அவற்றை கரிபியனுக்கு கொண்டுசென்றனர்.
சிவப்பான டாஹிநாஸ்தே. (6) சிவப்பான சிறுபூங்கொத்துகள் ஒரு தனித்தண்டைச் சுற்றி சுருண்டு சுருண்டு ஆறு அடிக்கும் மேற்பட்ட உயரத்தைப் பெரும்பாலும் எட்டுகின்றன.
வலுசர்ப்ப மரம். (7) இந்தத் தீவுகளில் மிகவும் அசாதாரண, அருமையான மரமாக இருக்கிறது. இந்த எடுத்துக்காட்டு மூவாயிரம் ஆண்டுகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுபோன்ற பண்டைய மாதிரிகள் நகராண்மை பூங்காக்களில் கவனத்தோடு வளர்க்கப்படுகின்றன.
[ வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
ல பால்மா
டெனரிஃப்
கோமெரா
ஹியர்ரோ
லான்சாரோட்டெ
ஃபுயர்தெவென்ச்சூரா
கிரான்டு கானரி
[படங்கள்]
பீகோ டெ டேடே என்ற எரிந்தணைந்த எரிமலையால் டெனரிஃப் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது
1. கானரி.
2. ஏயோனியம் இனங்கள்.
3. ஏயோனியம் லான்செர்ரட்டென்சிஸ்,
4. டேடெ வியலட்.
5. வாழை மரம்.
6. சிவப்பான டாஹிநாஸ்தே.
7. வலுசர்ப்ப மரம்.
[பக்கம் 16, 17-ன் படங்கள்]
1. கிரானாடில்லியோ
2. தபைபா மஹோரேரா
3. பேரோல் துல்தே
4. எர்சிலா
5. ஹியர்பா ப்ளன்கா
6. டேடெ வியலட்