உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g94 11/22 பக். 28-29
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1994
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஐநா தோல்வி
  • மனித விளக்கமேதுமில்லை
  • பறவை மறைவு எச்சரிக்கைகளை விடுக்கிறது
  • பருவவயது தாய்மார்
  • காதுகேளாதோருக்கு கம்ப்யூட்டர் உதவி
  • முதல் உலகப் போர் கலைப்பொருள் ரயிலைத் தடம்புரளச் செய்கிறது
  • கைத்துப்பாக்கிகளின் கொலைக்குரிய உபயோகம்
  • அடைக்கலம் புகும் கரடிகள்
  • எங்கும் மோசமாக நடத்தப்படும் அகதிகள்
  • ஆபத்தான கும்மாளம்
  • அதிகரிக்கும் எண்ணிக்கையான அகதிகள்
    விழித்தெழு!—1996
  • சந்தோஷமாக யெகோவாவுக்குச் சேவை செய்ய மற்ற தேசத்தாருக்கு உதவுங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
  • தீர்வு என்ன?
    விழித்தெழு!—1996
  • உலகத்தைக் கவனித்தல்
    விழித்தெழு!—1994
மேலும் பார்க்க
விழித்தெழு!—1994
g94 11/22 பக். 28-29

உலகத்தைக் கவனித்தல்

ஐநா தோல்வி

“ஐக்கிய நாடுகளுக்கு மட்டுமே அது தோல்வி அல்ல; சர்வதேச சமுதாயத்திற்கே தோல்வியாக இருக்கிறது. மேலும் நாம் எல்லாருமே இந்தத் தோல்விக்குப் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறோம்,” என்று ருவாண்டாவில் நடக்கும் படுகொலையைப் பற்றி பேசுகையில் ஐநா செயலர் பூட்ரோஸ் பூட்ரோஸ் காலி வருத்தந்தெரிவித்தார். “அங்கு ஒரு இன அழிவு நடத்தப்பட்டிருக்கிறது. 2,00,000-க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்; என்ன செய்யப்படவேண்டும் என்று சர்வதேச சமுதாயம் இன்னும் கலந்துபேசிக்கொண்டிருக்கிறது.” மே 26 அன்று அறிக்கை செய்யப்பட்டபடி, அந்தச் செயலர், தீர்வைக் காணும் முயற்சியில் 30-க்கும் மேற்பட்ட தேச தலைவர்களுக்கு எழுதியிருப்பதாகவும் துருப்புகளை அனுப்பும்படி கேட்டுக்கொண்டிருப்பதாகவும் வித்தியாசமான அமைப்புகளுடன் உழைத்திருப்பதாகவும் சொன்னார். “கவலைக்குரிய விதத்தில் நான் தோல்வி அடைந்தேன். இது ஒரு அவமானம். அதை ஒத்துக்கொள்ளும் முதல் ஆளாக நான் இருக்கிறேன்,” என்று அவர் மேலுமாகச் சொன்னார். முக்கியமாக ஐநா-வின் சொந்த நிதிநிலை கஷ்டங்கள் காரணமாக செலவு ஈடு தொகைகளைத் தாமதமாகத் தரத் தொடங்கியிருப்பதால், ஒருசில ஆப்பிரிக்க தேசங்களாலேயே துருப்புகளை அனுப்புவதற்கான செலவுகளைத் தாங்கிக்கொள்ள முடியும். பெரும்பாலான மேற்கத்திய தேசங்கள் ஈடுபடுவதற்கு மறுத்திருக்கின்றன; அமெரிக்க ராணுவ சக்தியைப் பயன்படுத்துவது, பிரச்சினையில் இருக்கும் காரியங்களை நோக்குகையில் நியாயமானதாக இருக்கவில்லை என்று ஐ.மா. ஜனாதிபதியாகிய பில் கிளின்டன் குறிப்பிட்டார். ஆட்களையும் பணத்தையும் கொடுக்கும் தேசங்கள், ஐநா-வின் 17 வெவ்வேறுபட்ட நடவடிக்கைகளுக்காக நன்கொடையளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுவதால், “கொடையாளர் களைப்பின்”மீது குற்றஞ்சாட்டுகிறார் திரு. பூட்ரோஸ் காலி என்று தி நியூ யார்க் டைம்ஸ் சொல்லுகிறது.

மனித விளக்கமேதுமில்லை

“ருவாண்டாவின் திகைக்க வைக்கும் இரத்தவேட்கைக்கு ஏதாவது விளக்கம் இருக்கமுடியுமா?” என்று லண்டனின் தி எக்கானமிஸ்ட் கேட்கிறது. “நெடுங்காலமாக நிலைத்திருக்கும் [இன] பகைகூட அந்தக் கொடூரமான படுகொலையை விவரிப்பதில்லை.” டூட்ஸியும் ஹூட்டூவும் சற்று வித்தியாச தோற்றமுடையவர்களாய் இருக்கக்கூடும் என்றாலும், அவர்கள் நூற்றாண்டுகளாக அருகருகே வாழ்ந்துவந்து, பொதுவான மொழியையும் பண்பாட்டையும் உடையவர்களாய் இருந்திருக்கின்றனர். அவர்களுடைய குலமரபு வேறுபாட்டை ஸ்காட்டியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்குமுள்ள வேறுபாட்டோடு அந்தக் கட்டுரை ஒப்பிடுகிறது. “என்றாலும் இப்போது அவர்கள் ஒருவரையொருவர் எதிர்ப்பவர்களாக மாறியிருக்கிறார்கள்; பீரங்கிகள் அல்லது அதிக தூரத்திற்குச் சுடும் சுழல் துப்பாக்கி இயந்திரங்களை வைத்தில்லாமல், வெட்டுக்கத்திகளையும், மண்வெட்டிகளையும், தடிகளையும் வெறுங்கைகளையும் வைத்து எதிர்க்கிறார்கள். அயலகத்தார் அயலகத்தாரை, பழைய குழந்தைப்பருவ நண்பர்களைக்கூட கொலை செய்திருக்கின்றனர். ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் சரியொப்பாகவே படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். ஏன்? எவராலும் சொல்ல முடிவதாகத் தோன்றவில்லை.”

பறவை மறைவு எச்சரிக்கைகளை விடுக்கிறது

பறவைகளில் கட்டுறுதி வாய்ந்த இனங்களான—சிட்டுக்குருவிகள், மைனாக்கள், காகங்கள்—கடுமையான சூழ்நிலைகளில் செழுமையாக வாழ்கையில், உலகின் பெரும்பாலான பறவைகள் அவ்வளவு நல்லபடியாக இல்லை. 9,600 பறவை வகைகளில், 70 சதவீதம் குறைந்துகொண்டிருக்கின்றன; அண்மை காலத்தில் 1,000 வகைகள் இல்லாமற்போகவும் கூடும். “நேரடியாக ஏற்படும் இழப்புகளுக்கும் மேலாக அதிர்ச்சியூட்டுவது என்னவென்றால், மற்ற உயிர் வகைகளைப் போலில்லாமல், பறவைகள் குறிப்பாக மற்ற வகைகளின்—முழு சூழியல் அமைப்புமுறைகளின்—ஆரோக்கியத்தையும் நன்கு சுட்டிக் காட்டுபவையாக இருக்கின்றன,” என்று உலக கவனிப்பு (World Watch) பத்திரிகை சொல்லுகிறது. “நாம் பார்ப்பது, வரப்போகும் சீரழிவிற்கு வெறும் ஓர் எச்சரிப்பாக மட்டுமல்லாமல், சீரழிவின் பாகமாகவே—கிரகத்தின் ஆரோக்கியத்தைச் சமநிலையில் வைத்திருக்கும் சூழியல் வலைப்பின்னலின் கிழிசலாகவே—இருக்கிறது.” தொந்தரவு செய்யும் விலங்கு மற்றும் பூச்சிகளை பறவைகள் கட்டுப்பாட்டில் வைக்கின்றன; தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கும், தங்கள் எச்சங்கள் வாயிலாக மர விதைகளைத் தூவி காடு மீட்டலுக்கும் உதவுகின்றன. ஆனால் நேரடியான வேட்டை, அளவுக்கதிகமான இரசாயன பொருட்களைப் பயன்படுத்துதல், நச்சுப் பொருள் கழிவுகள், எண்ணைக் கசிவுகள் ஆகியவை மூலமாகக் கொல்லுவதுபோக, மனிதர்கள் காடுகளை வெட்டி, மேய்ச்சலுக்கும் உழுவதற்கும் புல்வெளிகளைப் பயன்படுத்தி, ஈரப்பதமுள்ள நிலங்களை வடித்தெடுத்து, பேரளவான பகுதிகளை பெரிய அணைக்கட்டு திட்டங்களால் துடைத்தழிப்பதன் மூலம் இயற்கை நிலக்காட்சியை மாற்றிவிடுவதால், அவற்றின் உயிர் அச்சுறுத்தப்பட்டு அவற்றின் வாழ்விடங்கள் அழிக்கப்படுகின்றன. “பறவைகளும்—அவற்றோடு மற்ற விலங்குகளும் தாவரங்களும்—இல்லாமற்போகும் வேகம் விரைவாக அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதுபோல் தோன்றுகிறது,” என்று அந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது.

பருவவயது தாய்மார்

உலகெங்கும் ஒவ்வொரு வருடமும் 15-லிருந்து 20 வயதுக்கு இடைப்பட்ட ஒன்றரை கோடிக்கு அதிகமான பெண்கள் பிள்ளை பெறுவதாக ஐநா-வின் மக்கள்தொகை நிதி பத்திரிகையான பாப்பூலை கணக்கிடுகிறது. இந்த எண்ணிக்கை 15 வயதுக்கு இளைய பெண்களை உட்படுத்துவதில்லை; கருச்சிதைவுகளை அல்லது கருசிதைந்து வெளியேறுதல்களை கணக்கில் சேர்த்துக்கொள்வதுமில்லை. ஆப்பிரிக்காவில் மட்டும், பெண்களில் சுமார் 28 சதவீதமானோர் தங்களுக்கு 18 வயதாவதற்குள் பிள்ளை பெற்றுவிடுகிறார்கள். அந்தக் கண்டத்தில், பாலுறவு காரியங்களைப் பற்றிய அறியாமையும், பால்ய திருமணங்களும், இளம் பெண்களை வயதான பணக்கார ஆண்களுடன் உறவுகளுக்குள் ஈடுபடும்படி செய்யும் பொருளாதார நெருக்கடிகளும் பருவவயது கருத்தரிப்புகள் அதிகரிப்பதற்கான காரணங்களில் உட்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். “கருவுற்றிருக்கையில் அல்லது பிள்ளைபேற்றின்போது 20-34 வயதான பெண்களைவிட பருவவயது பெண்கள், சராசரியாக இரண்டு மடங்கு அதிகமான மரிக்கும் அபாயத்தை எதிர்ப்படுவது மட்டுமல்லாமல், பருவவயது தாய்மாரின் சிசுக்கள் மரித்துவிடும் சாத்தியமும் அதிகமாக இருக்கிறது,” என்பதாக பாப்பூலை சொல்லுகிறது.

காதுகேளாதோருக்கு கம்ப்யூட்டர் உதவி

புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு கம்ப்யூட்டர் அமைப்புமுறை, சீக்கிரத்தில், காதுகேளாதோர் சகஜமான முறையில் பேச கற்றுக்கொள்வதற்கு உதவி செய்யக்கூடும். காதுகேளாதோருக்கு, எப்படி பேசுவது என்று கற்றுக்கொள்வது ஏறக்குறைய ஒரு அந்நிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு ஒத்ததாக இருக்கிறது. ஸ்காட்லாந்தில் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மொழி தொழில்நுட்ப ஆய்வு மையத்தில் இந்தத் திட்டத்தின் வளர்ச்சியைக் கிளறிவிட்டது இந்த உண்மையே. அந்த அமைப்புமுறையின் கம்ப்யூட்டர் ஒரு மாணவனின் பேச்சை ஆராய்ந்து, சரியான உச்சரிப்பிற்குத் தேவையான திருத்தங்களும் சரிப்படுத்தல்களும் எங்குத் தேவைப்படுகின்றன என்று உடனடியாகக் குறிப்பிடுவதாக ஏஜன்ஸி பிரான்ஸ் பிரஸ் செய்தி சேவையின் அறிக்கை ஒன்று சொல்லுகிறது. கூடுதலாக, காதுகேளாதோர் தங்கள் பேச்சில் குரல் ஏற்ற இறக்கத்தையும் ஒத்திசைவையும் படிப்படியாக முன்னேற்றுவிப்பதற்கு உதவும்படி திட்டமைக்கப்பட்ட தேவையான பாடங்களின் ஒரு தொடரையும் அந்தத் திட்டம் உட்படுத்தும். இந்த அமைப்புமுறை அந்நிய மொழிகளை காதுகேளாதோருக்குக் கற்றுக்கொடுப்பதற்காகவும் நன்கு பயன்படுத்தப்படும்.

முதல் உலகப் போர் கலைப்பொருள் ரயிலைத் தடம்புரளச் செய்கிறது

முதல் உலகப் போரின் கலைப்பொருள் ஒன்று, பிரஞ்சு தேசிய ரயில்வேயின் பெருமையாகிய அதன் TGV-யை (அதிவேக இரயிலை), பிரான்ஸுக்கு வடக்கில் புதிதாகத் திறக்கப்பட்ட அதன் பாரிஸ்-வாலென்ஸியன்ஸ் தடத்தில் தடம்புரளச் செய்தது. TGV இரயில்களுக்குக் கீழேயுள்ள முன்னர் கண்டுபிடிக்கப்படாத நிலத்தடி மாடங்கள் திடீரென்று இடிந்துவிழுந்தபோது அந்த விபத்து நடந்ததாக லா மாண்ட் என்ற பாரிஸ் செய்தித்தாள் அறிவிக்கிறது. 1914-18-ன் சண்டையில் நடந்த, மிகவும் இரத்தம் சிந்தப்பட்ட யுத்தங்களில் ஒன்றாகிய சோம் யுத்தம் நடந்த பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது. மேற்பரப்பிலிருந்து அவற்றைக் கண்டுபிடிப்பது ஏறக்குறைய சாத்தியமற்றதாகத் தோன்றினாலும், நிலத்தடி பாதைகளும், புதைந்து கிடக்கும் அகழ்வெட்டுகளும், வெடிகளால் ஏற்பட்ட குழிகளும்—முதல் உலகப் போரின் அகழ்வெட்டு போராட்டத்தின் மீதங்கள்—அந்த முழு பகுதியிலும் படர்ந்திருக்கின்றன. அந்த இரயில்பாதையின் அடித்தளத்தை சீராகத் தேடிப்பார்த்து சாத்தியமாக இருக்கும் மற்ற ஆபத்தான பகுதிகளைக் கண்டுப்பிடித்து பலப்படுத்தும்படி தொழில்நுட்ப தொகுதிகள் அனுப்பப்பட்டன.

கைத்துப்பாக்கிகளின் கொலைக்குரிய உபயோகம்

1992-ல் எத்தனை மக்கள் கைத்துப்பாக்கிகளால் கொலை செய்யப்பட்டார்கள்? சமீபத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, ஆஸ்திரேலியாவில் 13 பேர், பிரிட்டனில் 33 பேர், கனடாவில் 128 பேர், ஜப்பானில் 60 பேர், ஸ்வீடனில் 36 பேர், ஸ்விட்ஸர்லாந்தில் 97 பேர், மற்றும் ஐக்கிய மாகாணங்களில் திகைப்பூட்டும் வகையில் 13,220 பேராக இருந்தனர். இன்டர்நேஷனல் ஹெரால்ட் டிரிப்யூன் என்பதில் அறிக்கை செய்யப்பட்டபடி, 1991-ல் ஐக்கிய மாகாணங்களில் மனிதகொலைகள், தற்கொலைகள், மற்றும் விபத்துகளில் சுடக்கூடிய கருவிகளால் 38,317 மக்கள் கொல்லப்பட்டார்கள்—ஒவ்வொரு நாளும் 100-க்கு அதிகமான மரணங்கள். ஐந்தே வருடங்களில் துப்பாக்கிச் சூடு காயங்களின் காரணமாக ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 449-லிருந்து 1,220 வரையாக அதிகரித்தது என்பதாக ஐ.மா. ஜனாதிபதி பில் கிளின்டன் கூறினார். இந்தப் படுகொலையைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு 20 வினாடிகளிலும் ஒரு புதிய கைத்துப்பாக்கியை உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்கிறார்கள்.

அடைக்கலம் புகும் கரடிகள்

போரின் பாழாக்கும் அழிவுகளிலிருந்து அடைக்கலம் நாடுகிறவர்கள் மனிதர்கள் மட்டுமல்ல. “முன்னாள் யுகோஸ்லாவியாவில் தொடரும் போரால் அச்சுறுத்தப்பட்டு, பாஸ்னியாவின் பெரிய இலையுதிரா காடுகளிலிருந்து பழுப்பு நிற கரடி வெளியேறி வடக்கே இத்தாலியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது,” என்று நியூ ஸயன்டிஸ்ட் குறிப்பிடுகிறது. “இத்தாலி மற்றும் ஸ்லோவினியாவிலுள்ள சுற்றுச்சூழலியலாளர்கள் அடைக்கலம் புகும் கரடிகளைப் பாதுகாக்க முயலும்படி கூட்டுச் சேர்ந்திருக்கிறார்கள்.” என்றபோதிலும், அந்தக் கரடிகள் மனிதர்களிடமிருந்து மற்ற ஆபத்துக்களை எதிர்பட்டிருக்கின்றன. இடம்பெயர்ந்து செல்லும் கரடிகளில் பல, இத்தாலிய மற்றும் ஸ்லோவினிய நெடுஞ்சாலைகளில் கார்களால் கொல்லப்பட்டிருக்கின்றன. சில, வளர்ப்பு விலங்குகளைத் தாக்கியப்பின்னர் கொல்லப்பட்டும் அல்லது திருடர்களால் கொல்லப்பட்டும் இருக்கின்றன. தங்கள் பயிர்களுக்கு சேதம் உண்டாக்கும் அல்லது தங்கள் வளர்ப்பு விலங்குகளைத் தாக்கும் விலங்குகளைக் கொல்வதற்கு ஸ்லோவினியாவிலுள்ள விவசாயிகள் சட்டப்படியாக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். கரடிகளுக்கு உணவு அளித்து, அதன் மூலமாக பாதுகாப்பான பகுதிகளில் அவை தங்கும்படி உதவ நிதி திரட்டப்பட்டு வருகிறது.

எங்கும் மோசமாக நடத்தப்படும் அகதிகள்

1993-ல் அகதிகளின் எண்ணிக்கையில் பெரும் உலகளாவிய அதிகரிப்பு இருந்ததாக, இரண்டு கோடிக்கும் அதிகமாகச் சென்றதாக, ஐக்கிய நாடுகள் அகதிகள் ஹைகமிஷனின் ஆணையராகிய சாடாகோ ஓகாட்டா சொல்கிறார். அவர் பதவி ஏற்றபோது, 1991-ல் ஒன்றரை கோடி அகதிகள் மட்டுமே இருந்தனர். அரசியலில் நிலையற்றதன்மை மற்றும் இன கலவரங்கள் அகதிகளின் அதிகரிப்பிற்கான முக்கிய காரணங்களாக இருப்பதாக ஜெர்மன் செய்தித்தாளாகிய ஸூயட்டாய்ஷா ட்ஸைட்டுங் அறிக்கை செய்கிறது. என்றபோதிலும், அகதிகள் எங்கும் மோசமாக நடத்தப்படுவதாகத் தோன்றுகிறது. ஏன்? ஏனென்றால், அவர்கள் புதிதாகச் சென்றிருக்கும் நாடுகளில், பெரும்பாலும் அகதிகளே வன்முறைக்கு அதிகப்படியான குறியிலக்காக இருக்கிறார்கள் என்று அந்த ஆணையர் மேலுமாகச் சொன்னார். இன பகையும் அயல்நாட்டினருக்கான வெறுப்பும் பரவலாகிக்கொண்டு வருகின்றன என்று அவர் சொன்னார்.

ஆபத்தான கும்மாளம்

“திருவிழாவின் சமயத்தில் மனிதகொலைகளின் எண்ணிக்கை 58 சதவீதம் அதிகரிக்கிறது,” என்று பிரேஸிலிய செய்தித்தாளாகிய ஓ எஸ்டாடோ டி ஸாயுன் பெளலூ அறிக்கை செய்கிறது. சாவோ பாலோவில், “79 மனிதகொலைகளும் 124 கொலை முயற்சிகளும் இருந்தன.” மேலுமாக “வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், தெருவில் செல்லும் மக்கள் என்று திருடர்கள் தாக்குதல்கள் நடத்தியபோது” அந்த ஐந்து நாட்களில், 2,227 திருட்டுகளும் (1993-ல் 277) 807 தாக்குதல்களும் (1993-ல் 282) சம்பவித்தன. 37 தற்கொலைகளும் 25 கற்பழிப்புகளும் நடந்தன. “ரியோடி ஜனீரோவில், 1993-ன் திருவிழாவுடன் ஒப்பிடுகையில் வன்முறை 14 சதவீதம் அதிகரித்ததாக சிவில் போலீஸ் அறிக்கை செய்தது. 63 கொலைகள் நடந்தன, கடந்த வருடத்தைவிட 10 அதிகம்.” ஷார்னல் டோ பிராஸில் என்ற செய்தித்தாளில், “திருவிழாவின் அபாயங்களை” பற்றி எழுதுகையில், ரியோடி ஜனீரோவின் கார்டினல் ஆர்ச்பிஷப்பாகிய டாம் ஏயுஷேன்யோ டி ஆராயூஷோ சாலஸ் சொன்னார்: “திருவிழாவை பொழுதுபோக்காகவும் சந்தோஷத்தின் வெளிக்காட்டாகவும் கொண்டிருப்பதற்கு சர்ச் எதிரானதாக இல்லை; இவை இரண்டும் மக்களுடைய உளம்சார்ந்த சமநிலைக்கு மிக உதவியானவை. நாம் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி, நம்மைக் கட்டுப்படுத்தும் ஒழுக்கச் சட்ட மீறுதல்களை சர்ச் நிச்சயமாகவே கண்டனம் செய்கிறது.”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்