வாழ்க்கை சலிப்புத்தட்டுகிறதா? உங்களால் மாற்ற முடியும்!
ஸ்பெய்னிலுள்ள விழித்தெழு! நிருபர்
மார்கரெட்டும் பிரையனும் தங்களுடைய மத்திப 50-களில் இருக்கையில் பொன்னான ஒரு வாய்ப்பு உருவானது: நல்ல ஊதியத்துடன் முன்கூட்டியே ஓய்வுபெறுவது. அப்போதே அவர்கள் மத்திய தரைக்கடல் பகுதியிலிருக்கும் வெப்பநிலைக்காகவும் கடற்கரைகளுக்காகவும் தெற்கு பக்கம் மாறிச்செல்ல தீர்மானித்தனர். இனி எவ்வித கவலைகளோ கஷ்டங்களோ இல்லாமல், கடல் பக்கமாக இருக்கிற வீட்டிலே லாவகமான வாழ்க்கை அவர்களுக்காகக் காத்திருந்தது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அந்தக் கனவு நினைத்தபடி பலிக்கவில்லை. பிரையன் விளக்கினதாவது: “இதெல்லாமே அர்த்தமில்லாததுபோல் தோன்றியது—ஒவ்வொரு நாள் கடக்கையிலும் செய்வதற்கு ஒன்றுமேயில்லை. உண்மைதான், நான் நீச்சலடிப்பேன், கொஞ்ச நேரம் குழிப்பந்தாட்டம் விளையாடுவேன் அல்லது சிறிது நேரம் டென்னிஸ் விளையாடுவேன், மேலும் நான் பேசுவதைக் கேட்க ஆளிருந்தால் தொணதொணத்துக் கொண்டிருப்பேன். எவற்றைப் பற்றி? வீண் காரியங்களைப் பற்றி.”
20 வயதின் முற்பகுதியிலுள்ள கீசெலா என்னும் தாய்க்கு ஒரு அழகான சிறிய பெண் இருக்கிறாள். பிற்பகலில் வழக்கமாக, அம்மாவும் மகளுமாகச் சேர்ந்து பூங்காவனத்திற்கு செல்வார்கள்; மகள் மணற்குழியில் சுவாரஸ்யமாக விளையாடிக்கொண்டு, பண்ணியங்களையும் மணற்கோட்டைகளையும் செய்வதில் முழுமையாக ஆழ்ந்துவிட்டிருப்பாள். இப்படி அவள் விளையாடிக்கொண்டிருக்கையில், அம்மா பூங்காவில், பென்ச்சில் உட்கார்ந்துகொண்டு, பாப்பாவைக் கவனித்துக்கொண்டிருப்பார். அவர் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறாரா? அதோ அவர் உட்கார்ந்துகொண்டு, போர்ட்டபில் ரேடியோவைக் காதையொட்டிவைத்துக் கேட்டுக்கொண்டிருக்கிறார். சிகரெட்டிலிருந்து அதிக புகை வருவதால், தன்னுடைய சிறிய பிள்ளையைப் பார்ப்பதே கஷ்டமாக இருக்கிறது. சலித்துப்போய் அழத் தொடங்குகிறார்.
மேனிலைப் பள்ளி மாணவனாகிய 17 வயதான பீட்டர், நவீன எலெக்ட்ரானிக் சாதனங்கள் சூழ தன் அறையிலே உட்கார்ந்து கொண்டிருக்கிறான். வீடியோ கேம்ஸை விளையாடத் தொடங்குகிறான், இனிமேலும் அக்கறையூட்டுவதாக இல்லாததையே கண்டுணருகிறான். ஏற்கெனவே நூற்றுக்கணக்கான முறை அதை விளையாடி, எப்படி விளையாடித் தோற்கடிக்க வேண்டும் என்பதை நன்றாகவே அறிந்திருக்கிறான். ஏதாவது பாட்டைக் கேட்பானா? எனினும், அவனிடமிருக்கிற எல்லா பாட்டுப்பதிவுகளையும் டஜன்கணக்கான தடவை ஏற்கெனவே கேட்டுவிட்டிருக்கிறான். வாழ்க்கையையே வெறுத்தவனாக, “என்ன செய்வதென்றே தெரியவில்லை,” என்று அங்கலாய்க்கிறான்.
நேரத்தை நீங்கள் வீணடிக்கிறீர்களா?
எல்லாருக்குமே நாளானது மந்தமாகவும் ரசனையற்றதாகவும் இல்லை என்பது மெய்யே. அநேகர் இன்னும் சந்தோஷமான, அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்; எப்படியென்றால், புதிய காரியங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் நிறைவைக் காண்கிறவர்களாகவும் படைப்பின் இயல்பூக்கங்களைத் திருப்தி செய்பவர்களாகவும் மேலும் பிறரோடு, நல்ல உறவை வளர்த்துக் கொள்பவர்களாக இருக்கின்றனர், இன்னும் மிக முக்கியமாக, கடவுளோடு அவ்வாறு வளர்த்துக்கொள்கின்றனர்.
என்றபோதிலும், சலிப்பு எல்லா துறைகளிலுமிருந்து வரும் மக்களைப் பாதிக்கிறது; சமீப கணக்கெடுப்பின் பிரகாரம் 3 ஜெர்மானியர்களில் ஒருவரை அது பாதிக்கிறது. புறநகரில் உள்ள பிரபலமான பொழுதுபோக்கு இடங்களை அடிக்கடி நாடும் பேராசைமிக்க யப்பிக்களும் சப்தமான இசையினாலும் மலிவான பீரை அருந்துவதாலும் நேரத்தைப் போக்குகிற வேலையற்ற இளைஞனும் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டு வாரயிறுதியை அநாவசியமாகக் கழிக்கிற நடுத்தர வயதுள்ள தொழிலாளியும் தன்னுடைய ஆபீஸை விட்டதும் தன்னம்பிக்கையை இழக்கும் அதிகாரியும்—இவர்கள் யாவருமே பொதுக் குறைபாடாகிய சலிப்பின் காரணமாக அவதிப்படுகின்றனர்.
பூர்வ தத்துவஞானிகள் அதை டைடியும் உவீட்டை (லத்தீனில், வாழ்க்கையின் அலுப்பு) என்றழைத்தனர். ஜெர்மானிய மொழியில் அது லாங்கிவைலா (வெகு நேரம்) ஆகும். இழுத்தடிக்கும் நேரம், அர்த்தமற்றதாகத் தோன்றும் வேலை, “கண்காணாத இடத்துக்குப் போய்விட வேண்டும்” என்று ஏங்குவது ஆகிய எல்லாமே சலிப்பிற்கான தனிப்பட்ட அடையாளங்களாகும்.
செல்வந்தர்கள் மாத்திரம் இதற்கு உள்ளாவது கிடையாது. பெரிய செலவாளிகளின் ஊதாரியான வாழ்க்கைப் போக்கை விவரித்தப் பிறகு டைம் பத்திரிகையில் எழுதிய ராஜர் ரோஸன்பிலாட் கவனித்ததாவது: “ஒரு பங்களாவையும் பெரிய தோட்டத்தையும் பெரிய விலங்குகளையும் பெற்று, பெரிய விருந்துகளுக்குச் சென்று முக்கியமான ஆட்களோடு உறவாடிய பிறகு, உலகிலுள்ள பெரிய செலவாளிகள் என்ன தெரிவிக்கின்றனர்? சலிப்படைந்திருப்பதாகவே சொல்கின்றனர். சலிப்புத்தானே.”
அதிகப்படியான ஓய்வே சலிப்புக்குச் சஞ்சீவியாக இருக்கும் என்று ஒரு காலத்தில் நினைத்தார்கள். கடந்த காலத்தில் இருந்த வெறுப்புத்தட்டும் கடின வேலையை முடிவுண்டாக்கும் மனித வேலை சூழ்நிலைகளும் தாராளமான ஓய்வு நேரமும் சாதாரண மனிதனுக்கு வாழ்க்கையை பயனுள்ளதாக்கும் என்று எண்ணினார்கள். என்றாலும், வருத்தகரமாக, அது அந்தளவு எளிதானதல்ல. சும்மா இருக்கும் இந்த நேரத்திலெல்லாம் என்ன செய்வது என்று தீர்மானிப்பது எதிர்பார்த்ததைவிட அதிகடினமாக இருந்துவந்திருக்கிறது. வார நாட்களிலெல்லாம் அநேகர் ஒரு மகிழ்ச்சிமிக்க வார இறுதியைக் களிக்கவேண்டும் என்று ஆவலோடு எதிர்நோக்கி இருக்கின்றனர். ஆனால் வார இறுதியானதும், அவர்கள் எதிர்பார்த்தபடி அது இருப்பது கிடையாது.
சலிப்பின் எதிர்மறையான விளைவுகள்
சிலர் அநேக வேலைகளில் தங்களை ஆழ்த்திக்கொள்வதன் மூலம் சலிப்பிலிருந்து விடுபட நாடுகின்றனர். ஆபீஸில் இல்லாத சமயத்தில் தங்களுடைய நேரத்தை என்ன செய்வது என்று அறவே தெரியாததன் காரணமாக, நிர்ப்பந்தமான வேலைப்பித்தர்கள் சிலர் வேலைப்பைத்தியமாக ஆகியிருக்கின்றனர். வேறு சிலர் தங்களுடைய சலிப்பைப் போக்க குடிப்பதில் இறங்கிவிடுகின்றனர் அல்லது போதை மருந்துகளை அருந்திப்பார்த்து கிளர்ச்சிக்காகத் தேடுகின்றனர். பொழுதுபோக்கு உலகைச் சேர்ந்து, பரபரப்பான வாழ்க்கை நடத்தும் தாரகைகளில் அநேகர், நிகழ்ச்சி முடிந்ததும் கோகெய்ன் போன்ற போதை மருந்துகளை அருந்தி, சூனிய உணர்ச்சியைச் சமாளிக்கின்றனர். என்றும் வளர்ந்துகொண்டே வரும் மணமாகா பருவவயது தாய்மாரின் எண்ணிக்கைக்கு, சலிப்பு ஒரு காரணம் என்று கண்டுகொள்ளப்பட்டிருக்கிறது; ஒரு குழந்தை, தங்களுடைய வெறுமையான வாழ்க்கையை நிறைவு செய்யும் என்று இவர்களில் அநேகர் நினைத்திருக்கக்கூடும்.
அதிகரித்துவரும் குற்றச்செயலுடனும் சலிப்பு சம்பந்தப்படுத்தப்படுகிறது. டைம் பத்திரிகை என்ன குறிப்பிட்டதென்றால் எண்ணிறந்த இளைஞர் 16 வயதில் பள்ளியை விட்டு வெளியேறி, செய்வதற்கு ஏதுமில்லாதிருக்கின்றனர்; மேலும் மேற்கத்திய ஐரோப்பாவில் வேலையற்ற ஆட்களை, வேலைசெய்யும் தங்கள் சகாக்களோடு ஒத்துப் பார்க்கையில், அவர்கள் “தற்கொலை செய்வதற்கான அதிக சாத்தியம் உடையவர்களாகவும், போதை மருந்து தகாப்பிரயோகத்திற்கு மிகவும் ஆளாகக்கூடியவர்களாகவும் திருமணத்திற்கு புறம்பான கருத்தரிப்புகளுக்கு அதிக வாய்ப்புள்ளவர்களாகவும் சட்டத்தை மீறுவதற்கான அதிக சுபாவமிக்கவர்களாகவும்” இருக்கின்றனர். இது மீண்டும், “வேலையற்ற கைகள் செய்வதற்கு ஏதாவது விஷமத்தை சாத்தான் செய்யப் பார்க்கிறான்” என்ற ஆங்கில முதுமொழியை உறுதிசெய்வதாகத் தெரிகிறது.—எபேசியர் 4:28-ஐ ஒத்துப்பாருங்கள்.