சலிப்புக்கு எளிதான பரிகாரமா?
சலிப்படைந்த லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு முடிவில்லா கேளிக்கை நிகழ்ச்சிகளை அளிப்பது இப்போது ஒரு பெரிய வியாபாரமாக இருக்கிறது. அந்நிய நாட்டவரின் விடுமுறை நாட்கள், சிக்கலான இலக்ட்ரானிக் சாதனங்கள், விரிவான விருப்பவேலைகள் ஆகிய இவை யாவுமே வாடிக்கையாளர்களின் நேரத்தை வீணடிப்பதாகவே இருக்கின்றன. எனினும், சலிப்பு இன்னும் ஒரு பெரிய பிரச்சினையாகும். விடுமுறையிலுங்கூட, சலிப்படைந்த விடுமுறை-கழிக்கும்-ஆட்கள் தங்களைப் பூரிப்பாக வைக்க புறத்தூண்டுதலை வேண்டியவர்களாக இருக்கின்றனர். போர்ட்டபில் ரேடியோ தங்களோடு இல்லையென்றால் ஊக்கமான மென்னோட்டக்காரர்கள் அநேகர் ஏதோ முக்கியமானதை இழந்துவிட்டதாக உணருகின்றனர்.
தொலைக்காட்சி போன்ற பொழுதுபோக்குக் கிளர்ச்சியைத் தூண்டி, சலிப்பைக் கலைக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை, ஆனால் எவ்வளவு நேரத்திற்கு? சிலருக்கு அது பழக்கத்தை உருவாக்கும் மருந்துபோல இருக்கிறது. அடுத்த முறை, அதிகமான ஊக்குவிப்பும் மேலுமான கிளர்ச்சியும் தேவைப்படுகின்றன—இல்லையென்றால் இதெல்லாம் முன்னமே பார்த்ததுதானே என்ற உணர்வு மீண்டும் ஏற்கப்படுகிறது. பரிகாரமாக இருப்பதற்கு மாறாக, அத்தகைய பொழுதுபோக்கு, சலிப்புக்குத் துணைபுரியும் காரணியாக முடிவில் விளங்கக்கூடும்.
டிவிதானே சலிப்பை உண்டுபண்ணாது, மிதமிஞ்சி டிவி பார்ப்பதும் சலிப்பை அப்புறப்படுத்தாது. இன்னும் மோசமென்னவென்றால், டிவியில் எவ்வளவுக்கெவ்வளவு ‘தொடர்பு கொண்டி’ருக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு மெய்ம்மையிலிருந்து நீங்கள் தொடர்பறுத்துக்கொள்ளக்கூடும். பிள்ளைகளுடைய விஷயத்தில் இதுவே அதிபெரும்பாலும் நிகழ்கிறது. ஓர் ஆராய்ச்சியில், நான்கு, ஐந்து வயதுள்ள பிள்ளைகளிடம், டிவியை நிராகரிக்க விரும்புவார்களா தங்களுடைய தந்தையை நிராகரிக்க விரும்புவார்களா என்று கேட்டபோது, 3-ல் ஒன்று அப்பாவில்லாமல் வாழ்க்கை மிகவும் நன்றாயிருக்கும் என்று தீர்மானித்தனர்!
எல்லா ஆசைகளையும் பூர்த்திசெய்வதும் பரிகாரமல்ல. அநேக இளைஞர் இப்போது “எல்லா விதமான பொம்மைப் பொருட்களையும் எல்லா விதமான விடுப்பு நாட்களையும் எல்லா விதமான புதிய பாணிகளையும் உள்ளடக்கிய பொருளாதார வளமிக்க காலப்பகுதியில் வளர்க்கப்படுகின்றனர்,” என்று ஜெர்மன் பாராளுமன்றத்தில் சோஷியல் டெமக்கிரேடிக் கட்சி துணைத்தலைவர் குறிப்பிட்டார். அவர்கள் இன்னும் கிளர்ச்சியடைவதற்கு ஏதாகிலும் இருக்கிறதா? எல்லாவிதமான நவீன பொருட்களையும் தங்கள் பிள்ளைகளுக்கு வாங்கிப் பொழியும் நல்லியல்புள்ள பெற்றோர் உண்மையில் நாட்பட நீடிக்கும் சலிப்பினால் பீடிக்கப்பட்ட வளர்ச்சியடைந்த பிராயத்துக்கு வழிவகுக்கின்றனர்.
சலிப்பிற்கான அடிப்படை காரணங்கள்
அறவே சலிப்பிலிருந்து விடுபடுவது நடைமுறையற்ற இலக்காகும். இவ்வுலகில் வாழ்க்கையானது தொடர்ந்த கிளர்ச்சியும் மகிழ்ச்சியும் உள்ள வாழ்க்கையாக இருக்கவே முடியாது. அத்தகைய உண்மைநிலையற்ற எதிர்பார்ப்பு அநாவசியமான திருப்தியின்மையை ஒருவேளை உண்டாக்கலாம். அதே சமயத்தில், காரியங்களை மோசமாக்குவதற்கு திட்டவட்டமான காரணிகளும் இருக்கின்றன.
உதாரணமாக, இன்று குடும்பங்கள் மென்மேலுமாகச் சீர்குலைந்து வருகின்றன. அம்மாவும் அப்பாவும் தங்களுடைய சொந்த பொழுதுபோக்கில் மிகவும் மூழ்கிவிட்டிருப்பதால், இனிமேலும் தங்களுடைய பிள்ளைகளோடு போதுமான நேரத்தைச் செலவழிக்காததால் இது இருக்கக்கூடுமா? டிஸ்கோக்கள், வீடியோ பார்லர்கள், கடைகள் போன்ற இடங்களில் தங்களையே மகிழ்ச்சியுள்ளவர்களாக வைத்துக்கொள்வதற்கு தங்கள் சொந்த வழிகளை நாடித்தேடுவது ஆச்சரியமல்ல. இதன் விளைவாக, அநேக வீடுகளில் குடும்ப உல்லாசப் பயணங்கள் மேலும் இதர கூட்டு-நடவடிக்கைகள் கடந்தகால காரியங்களாகிவிட்டிருக்கின்றன.
இன்னும் சிலர் தங்களுடைய உவர்ப்பான வாழ்க்கையினால் மிகவும் திருப்தியற்றவர்களாக, தங்களை அறியாமலேயே ஒரு கூண்டிற்குள் தங்களை அடைத்துக்கொண்டு, யாரைக் குறித்தும் அக்கறையற்றவர்களாகத் தங்களுடைய சொந்த காரியங்களைச் செய்து வருகின்றனர். அவர்கள் மென்மேலுமாக தங்களையே தனிமைப்படுத்துகையில், அகவுணர்வு என்றழைக்கப்படுகிறதை அடையும் வீணான நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்கின்றனர். ஆனால் அவ்வாறு நடப்பதே கிடையாது. ஏனென்றால் சொல்லப்படுவதுபோல, எந்தத் தனி மரமும் காடு ஆகாது. நமக்குக் கூட்டுறவும் தொடர்பும் அவசியம். ஆகையால், தவிர்க்கமுடியாத விதமாக, தங்களையே பிரித்துக்கொள்ளும் தனிநபர்கள் சலிப்பைப் பரவச் செய்பவர்களாக, தெரியாத்தனமாகத் தங்களுக்கும் தங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் வாழ்க்கையைச் சாரமற்றதாகச் செய்கின்றனர்.
என்றபோதிலும், இந்தப் பிரச்சினை ஓரளவு ஆழமாயிருக்கிறது, 17-ம் நூற்றாண்டு பிரெஞ்சு தத்துவஞானியாகிய பிளேஸ் பாஸ்கல் தெளிவாகக் கவனித்ததுபோல: “அலுப்பு இருதயத்தின் ஆழங்களிலிருந்து [மேலெழும்புகிறது], அங்குத்தானே அதன் இயல்பான வேர்களைக் கொண்டதாகவும் மனதை அதன் நஞ்சால் [நிரப்புவதாகவும்] இருக்கிறது.” எவ்வளவு உண்மை!
வாழ்க்கையில் ஏன், எப்படி என்ற தொல்லையூட்டும் சந்தேகங்களால் இருதயம் நிரப்பப்பட்டிருக்கும் வரை, சலிப்பு இருக்கவே செய்யும். ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை அர்த்தமுள்ளதாயிருக்கிறது என்ற மனப்பூர்வமான நம்பிக்கை அவசியம். எனினும், ஒருவர் தான் ஏன் வாழ்கிறார் என்பதை அறியாது, இலக்குகள் இல்லாது, பிற்காலத்துக்கான ஸ்திரமான நம்பிக்கைகள் இல்லாது வாழ்க்கையை நேர்நிலையான நோக்குநிலையோடு எவ்வாறு காண முடியும்?
இங்குத்தானே அடிப்படையான கேள்விகள் எழும்புகின்றன: வாழ்க்கையின் அர்த்தமென்ன? நான் எதற்காக இருக்கிறேன்? என்னுடைய பிற்காலம் என்னவாயிருக்கும்? “ஒருவருடைய வாழ்க்கையில் அர்த்தத்தைக் கண்டுபிடிக்க முயலுவதே மனிதனில் இருக்கும் பிரதான உந்துவிக்கும் சக்தியாகும்,” என்று டாக்டர் விக்டார் ஃப்ராங்கில் குறிப்பிட்டார். என்றபோதிலும், அத்தகைய அர்த்தத்தை எங்குக் கண்டுபிடிக்கலாம்? இந்தக் கேள்விகள் எங்குத் திருப்திகரமாகப் பதிலளிக்கப்படும்?
சலிப்புக் குறைவு—எப்படி?
அத்தகைய அடிப்படையான கேள்விகளுக்கு எல்லாவற்றையும்விட மிகப் பழமையான புத்தகம் அறிவொளி தருகிறது. 19-வது நூற்றாண்டைச் சேர்ந்த ஜெர்மானிய கவிஞனாகிய ஹைன்ரிக் ஹைனா சொன்னார்: “ஒரு புத்தகத்தை வாசித்ததனால் கிடைத்த அறிவொளிக்காக நன்றிசொல்ல நான் கடன்பட்டிருக்கிறேன்.” எந்தப் புத்தகம்? பைபிள். சார்ல்ஸ் டிக்கன்ஸ் அவ்வாறே சொன்னார்: “உலகில் எப்போதுமே இருந்திராத அல்லது இருக்கப்போகிற சிறந்த புத்தகம் அது, ஏனென்றால், எந்தவொரு மனித சிருஷ்டியும் . . . வழிநடத்தப்படக்கூடிய சிறந்த பாடங்களை அது கற்றுத்தருகிறது.”
அதைக் குறித்து எந்தச் சந்தேகமுமில்லை. அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு மெய்யான வழிகாட்டி பைபிளாகும். அது, கடவுள் மனிதனுக்கு ஒரு வேலையைக் கொடுத்தார் என்ற குறிப்பை ஆதி முதல் அந்தம் வரை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. மனிதன் பூமியைப் பராமரித்து, அதை அழகுபடுத்தி, விலங்கினத்தின்மீது அன்பான மேற்பார்வை செலுத்தி, எல்லாவற்றையும்விட, யெகோவா சிருஷ்டிகரைத் துதிக்கவேண்டியவனாக இருந்தான். இந்த வேலை அதிகத்தை உட்படுத்தியது, சலிப்பிற்கு இடமேயளிக்கவில்லை! கடவுள் பக்கமாக இருந்து, அவருக்கென்று ஒப்புக்கொடுத்து, முழுமையாக அர்ப்பணித்திருப்பது வாழ்க்கைக்கு அர்த்தத்தை அதிகரித்து, சலிப்பைக் களைந்துவிடுகிறது என்று லட்சக்கணக்கான சுறுசுறுப்புள்ள கிறிஸ்தவர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.
பரவலான சலிப்பு நவீனநாளைய காரியமாக இருக்கலாம்—பெரும்பான்மையான பண்டைய மொழிகள் அதற்கு ஒரு வார்த்தையையும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. என்றாலும், பைபிள் வாழ்க்கையின் அர்த்தத்தைக் காட்டுவதோடு, சலிப்பை எதிர்த்துப் போராடுவதற்கான நடைமுறையான ஆலோசனைகளை உள்ளடக்கியிருக்கிறது. உதாரணமாக, ‘தன்னையே தனிமைப்படுத்துகிறவன் எல்லா நடைமுறையான ஞானத்திற்கும் விரோதமாகச் சண்டை செய்வான்’ என்று அது சொல்கிறது. (நீதிமொழிகள் 18:1, NW) மறுவார்த்தைகளில், ஒரு கூண்டில் உங்களை அடைத்து வைத்துக்கொள்ளாதீர்கள்!
மனிதன் இயல்பாகவே கூடி வாழும் பிரியமுள்ளவன். அவன் மற்ற மக்களோடு பழக வேண்டும், கூட்டுறவு கொள்வதற்கான உள்ளார்ந்த தேவையும் அவனுக்கு இருக்கிறது. மற்ற மக்களோடு கூடிவாழும் இந்த இயல்பான ஆசையை அடக்கப்பார்ப்பது—தனிமையிலிருப்பது, வெறும் பார்வையாளராக இருப்பது—ஞானமற்ற காரியமாகும். அவ்விதமாகவே, நம்மைநாமே வெறும் மேற்பூச்சான தனிப்பட்ட உறவுகளுக்கு மட்டுப்படுத்துவது, எல்லா நடைமுறையான ஞானத்தையும் உதாசீனப்படுத்துவதற்கு சமமாகும்.
அக்கடாவென்று திரைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருப்பது அல்லது கம்ப்யூட்டரில் விவரனையை உள்ளீடு செய்வதோடு மட்டுப்படுத்துவது மிகவும் சுலபம் என்பது உண்மைதான். மற்ற மக்களோடு ஒத்திணங்கிப்போவது ஒரு பெரிய சவால்தான். எனினும், பிரயோஜனமானது ஏதாவதொன்றை சொல்வதும் பிறரோடு எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பகிர்ந்துகொள்வதும் பலனளிப்பதாக, சலிப்படைவதற்கு குறைந்த வாய்ப்பை அளிக்கிறது.—அப்போஸ்தலர் 20:35.
மனித இயல்பை உன்னிப்பாய் கவனித்த சாலொமோன் இந்தப் பலமான பரிந்துரையைச் செய்தார்: “இச்சைக்கு லகானை விடுவதைக் காட்டிலும் உன் கண் எதிரே உள்ளதோடு நிறைவாயிருப்பது நலம்.” (பிரசங்கி 6:9, புதிய ஆங்கில பைபிள்) மறுவார்த்தைகளில், உங்களுடைய தற்போதைய சூழ்நிலைகளை முடிந்தளவு பயன்படுத்திக்கொள்ளுங்கள். இப்போது காண்பதன்மீது மனதை ஒருமுகப்படுத்துங்கள். மெய்ம்மையிலிருந்து விடுபடுவதற்காக ஆசையோடு விரும்புவதை அல்லது சாலொமோன் சொல்வதுபோல ‘இச்சைக்கு லகானை விடுவதைக்’ காட்டிலும் அது எவ்வளவோ மேல்.
நன்கு திட்டமிடப்பட்ட நாட்கள், குறிப்பிட்ட இலக்குகள், கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என்ற தீவிர ஆசை சலிப்பை மேற்கொள்ள உங்களுக்கு உதவும். ஏன், ஓய்வு பெற்ற பின்பும் ஒருவர் அநேக காரியங்களை இன்னும் முயன்றடையலாம். பலீரிக் தீவுகளிலுள்ள யெகோவாவின் சாட்சியாகிய 70-களின் முற்பகுதியிலுள்ள ஓய்வுபெற்ற ஓர் ஆள், ஜெர்மானிய மொழியை ஆர்வத்துடன் கற்றுவருகிறார். அவருடைய இலக்கு? விடுமுறைக்காக ஜெர்மனியிலிருந்து விஜயம் செய்யக்கூடிய சலிப்படைந்த ஆட்கள் அநேகரிடம் கடவுளுடைய வார்த்தையைப் பற்றி பேச விரும்புகிறார். அவருக்குச் சலிப்பு ஒரு பிரச்சினையாகவே இல்லை!
கடைசியாக, உங்களுடைய கைகளால் ஏதாகிலும் செய்வதைப் பற்றியென்ன? ஏதோவொரு கைவேலையிலோ வர்ணச் சித்திரம் வரைவதிலோ கீதவாத்தியம் வாசிப்பதிலோ திறன்களை ஏன் வளர்த்துக்கொள்ளக்கூடாது? சாதனைபடைக்கும் உணர்ச்சி இருக்குமேயானால், தன்மானம் வளர்கிறது. ஊக்கமாக வேலைசெய்ய மனமுவந்தவர்களாக, வீட்டில் உதவுவதைக் குறித்து ஏன் யோசித்துப் பார்க்கக்கூடாது? எந்தவொரு வீட்டிலும் பொருத்துவதற்கு சாதாரணமாக, அநேக சின்னச்சின்ன வேலைகள் இருக்கின்றன. உங்களுடைய சலிப்பான வாழ்க்கையை எண்ணிக் கவலைப்படுவதற்கு மாறாக, வேலைசெய்ய மனமுள்ளவர்களாயிருந்து, வீட்டில் கருத்தார்ந்த வேலை செய்து, ஏதாவதொரு கலையில் திறம்பட்டவர்களாகுங்கள். பலன் கிடைக்காமற்போகாது.—நீதிமொழிகள் 22:29, NW.
மேலுமாக, நாம் எடுக்கும் எந்தவொரு வேலையிலும் முழு ஆத்துமாவோடு வேலை செய்ய பைபிள் புத்திமதி அளிக்கிறது. (கொலோசெயர் 3:24) நிச்சயமாகவே, அது எதை அர்த்தப்படுத்துகிறதென்றால் முழுமையாக ஈடுபட்டு, நாம் செய்வதில் உண்மையில் அக்கறையெடுப்பதாகும். அக்கறை என்பதற்கான “இன்டெரெஸ்ட்” என்ற ஆங்கில வார்த்தை, இன்டெரெஸ்ஸி என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வருகிறது என்பதை நினைவிற்கொள்வது பிரயோஜனமுள்ளதாக இருக்கும்; இதன் நேர்பொருளானது “இடையே இருத்தல், அல்லது மத்தியில்,” மறுவார்த்தைகளில், செய்கிற வேலையில் மூழ்கியிருப்பதாகும். அது ஆர்வமுள்ளதாக்கும்.
அநேக வருஷங்களுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த நல்ல புத்திமதிகளை எல்லாம் பொருத்தினால் ஓய்வு நேரத்தில் மனச்சோர்வினால் அவதிப்படும் ஆட்களுக்குப் பெரிய வித்தியாசத்தை உண்டுபண்ணும். ஆகவே, செய்வதன்பேரில் முழு ஈடுபாடு கொண்டவர்களாக இருங்கள். மற்ற ஆட்களோடு சேர்ந்து பழகுங்கள். பிறருக்காகக் காரியங்களைச் செய்யுங்கள். கற்றுக்கொண்டே இருங்கள். பிறரோடு தாராளமாகத் தொடர்பு கொள்ளுங்கள். வாழ்க்கையின் மெய்யான நோக்கத்தைக் கண்டறியுங்கள். இதெல்லாவற்றையும் செய்வதன் மூலம் ‘வாழ்க்கை ஏன் இவ்வளவு சலிப்பூட்டுவதாயிருக்கிறது?’ என்று நீங்கள் வருந்தமாட்டீர்கள்.
[பக்கம் 7-ன் பெட்டி]
சலிப்பை எவ்வாறு மேற்கொள்வது
1. ரெடிமேட் பொழுதுபோக்கினால் தனிப்பட்ட முன்முயற்சியை முடக்கிப் போடாதீர்கள். கவனமாற்றங்கள் மற்றும் பொழுதுபோக்கு விஷயத்தில் தெரிந்தெடுப்பவர்களாயிருங்கள்.
2. மக்களோடு பழகுங்கள்.
3. கற்றுக்கொண்டே இருங்கள். தனிப்பட்ட இலக்குகளைக் கொண்டிருங்கள்.
4. படைப்புத் திறம்படைத்தவர்களாயிருங்கள். உங்கள் கைகளால் ஏதாகிலும் செய்யுங்கள்.
5. வாழ்க்கையில் நோக்கத்தைக் கொண்டிருங்கள். கடவுளைக் கருத்தில் கொள்ளுங்கள்.