சலிப்பு மன அழுத்தத்தையும் சோர்வையும் ஏற்படுத்தக் கூடும்
“சலிப்பு மனிதர் அனுபவிக்கும் பிழிந்தெடுக்கும், பொடித்திடும் மன அழுத்தங்களில் மிக மோசமானது.” இப்படியாக ஒக்லஹாமா பல்கலைக்கழகத்தில் உளநூல் மற்றும் நடத்தை இயல்புகளை ஆராயும் அறிவியல் பேராசிரியர் டாக்டர் ஜே ஷர்லே எல்லெ (Elle) பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரையில் அறிக்கை செய்கிறார். “சலிப்பு என்பது நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒன்று சரியாக இல்லை என்ற ஓர் அசெளகரியமான, இன்பம் காணா உணர்வு. ஒரு குறிப்பிட்ட வகையான ஊக்குவிப்புக்கான வேண்டுகோளாக இருக்கிறது, நம்முடைய தேவைகள் பூர்த்திசெய்யப்படவில்லை என்பதற்குரிய ஓர் அறிகுறி, சிக்கிக்கொண்டது போன்ற ஓர் உணர்வு. அது அதிக இறுக்கமான உணர்வு, அநேக விதமான பிரச்னைகளுக்கு வழிநடத்தக்கூடும்—மனச் சோர்வு, போதை மருந்தின் உபயோகம், மனக் கவலை சார்ந்த நோய்கள் அல்லது சலிப்பிலிருந்து விலகுவதற்கு அதிகமாகத் தூங்குதல் போன்ற சாதாரண காரியங்களாக இருக்கலாம்.”
சலிப்புக்கான காரணம் மற்றும் பாதிப்புகள் சம்பந்தமான டாக்டர் ஷர்லேயின் ஆய்வு அண்டார்டிக்காவில் ஓர் ஐந்தாண்டு ஆய்வுத் திட்டத்தின் பாகமாயிருந்தது. அவர் கவனித்த காரியங்களில் அதிக அதிர்ச்சியான ஒரு காரியம் என்னவெனில், சலிப்பு ஒரு விஷமான சுழற்சியை ஆரம்பித்துவைக்கக்கூடும். அது ஒருவரில் அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த மன அழுத்தம் இன்னும் அதிகமான உள்ளழுத்தத்தை உண்டாக்கக்கூடிய சலிப்பை ஏற்படுத்தக்கூடும்.
இந்த சலிப்பு-மன அழுத்தம் என்ற சுழற்சியின் பாதிப்புகள் பெருஞ் சேதத்தை ஏற்படுத்தக்கூடும். டாக்டர் ஷர்லே கூறுவதாவது: “பெரும்பாலான விவாகரத்துகள் கணவன் அல்லது மனைவி வேலையில் சலிப்பு காண்பதாலும், பிள்ளைகள் போய்விட்டார்கள் என்ற சலிப்பாலும், சுவையற்ற சமூக வாழ்க்கையாலும் ஏற்படுகிறது. ஆனால் அவர்கள் இந்தப் பிரச்னை அடிப்படையில் தனிப்பட்ட ஒன்று என்ற உண்மையை ஏற்க முடியாத அல்லது ஏற்க விரும்பாதவர்களாய் இருக்கிறார்கள். எனவே சலிப்புற்ற அந்தத் துணை விவாகரத்து செய்துகொண்டு, “புதிய ஒருவரைக் காண்கிறான்[றாள்], அது சில காலத்துக்குப் பிரச்னையைத் தீர்ப்பதாயிருக்கிறது. கொஞ்ச காலத்துக்கே. பின்பு மீண்டும் முதல் கட்டத்திற்குத் திரும்பிவிடுகிறது.” ஆம், சலிப்பு மீண்டும் அந்தத் தனிநபரை ஒரு தேக்க நிலைக்குள் முழுக்கிவிடுகிறது.
“மனிதனின் மனது மாற்றத்துக்கும், சவாலுக்கும், கற்றுக்கொள்வதற்கும், புதிய அனுபவத்திற்கும் பசியாயிருக்கிறது. வித்தியாசமான காரியங்களைக் கொண்ட வாழ்க்கை அதற்கு சுவையளிக்கும் ஒன்றாய் அல்ல. அது வாழ்க்கையின் பொருளாக இருக்கிறது,” என்கிறார் டாக்டர் ஷர்லே. இது சம்பந்தமாக, பணக்காரர் ஏன் விசேஷமாக சலிப்புப் பிரச்னையை எதிர்ப்படுகின்றனர் என்பதையும் டாக்டர் ஷர்லே விளக்கினார். “அவர்கள் தங்களுக்கு விருப்பமான எதையும் கொண்டிருக்கலாம். ஆனால் ஒரு காரியம் உண்மையிலேயே திருப்தியளித்திடவேண்டுமானால், அதற்காக செயல்படவேண்டும், செயல்பட்டு கண்டடைய வேண்டும். எதுவுமே ஒரு சவாலாக இல்லாதிருக்கும் போது, கவர்ச்சி மிகுந்த இந்த உயிர் வாழும் சிலாக்கியமுங்கூட சலிப்புள்ளாதாக இருக்கும்—இந்த நிலையிலுள்ள அநேகர் போதை மருந்துக்குத் திரும்புவதற்கு இதுவும் ஒரு காரணம்.” (g89 12/22)