உலகத்தைக் கவனித்தல்
எத்தனை அநேக கருச்சிதைவுகள்?
“உலகில் சுமார் 33 மில்லியன் சட்டப்பூர்வமான கருச்சிதைவுகள் வருஷந்தோறும் நடக்கின்றன, மேலும் இதனோடு சட்டப்பூர்வமாயில்லாத கருச்சிதைவுகளை எல்லாம் சேர்த்தால், மொத்தம் 40 மில்லியனுக்கும் 60 மில்லியனுக்கும் இடையே இருக்கும்,” என்று போனஸ் அயர்ஸ் காலை செய்தித்தாள், கிலாரின் சொல்கிறது. “உலக மக்கள்தொகையில் எழுபத்தாறு சதவீதத்தினர் கருச்சிதைவு செய்வது சட்டப்பூர்வமாயிருக்கும் நாடுகளில் வாழ்கின்றனர்.” கருச்சிதைவினால் அழிக்கப்பட்ட உயிர்களின் எண்ணிக்கை அர்ஜன்டினாவின் மக்கள்தொகையைக் காட்டிலும் அதிகமாயிருக்கிறது; மேலும் ஒவ்வொரு வருஷமும் எகிப்து, இத்தாலி, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, பிரான்ஸ் அல்லது பிரிட்டன் போன்ற நாடுகளில் ஒன்றின் முழு மக்கள்தொகையையும் அழிப்பதற்குச் சமமாயிருக்கிறது. இது இரண்டாம் உலகப் போரின் முழு ஆறு ஆண்டுகளில் காவுகொள்ளப்பட்ட பலியாட்களுக்குச் சமமாயிருக்கிறது; இவர்கள் சுமார் ஐந்து கோடி பேராகக் கணக்கிடப்பட்டனர்.
வாழ்வதற்கான சிறந்த இடம்?
உலகிலேயே வாழ்வதற்கான சிறந்த இடம் கனடா என்ற முடிவுக்கு ஐக்கிய நாடுகள் வந்துள்ளது. “அட்டவணை தொகுக்கப்பட்ட ஐந்து வருஷங்களில் இரண்டாம் முறையாக, 173 நாடுகளில் கனடா முதலிடத்தை வகித்திருக்கிறது,” என்று தி டோரன்டோ ஸ்டார் அறிவிக்கிறது. “என்றபோதிலும்,” இது “கனடா நாட்டவர் மாத்திரம் மிக உயர்ந்த வாழ்க்கை தராதரத்தை அனுபவித்து மகிழ்ந்தனர் என்பதை அர்த்தப்படுத்தவில்லை” என்றும் சொல்கிறது. கனடா ஏன் சிறந்த இடமென கருதப்பட்டது? ஐநா வளர்ச்சி திட்டத்தால் தயாரிக்கப்பட்ட அறிக்கை, நாடுகளை ஒட்டுமொத்தமாக மூன்று காரணிகளால் வரிசைப்படுத்துகிறது: சராசரி வருமானம், கல்வியறிவு, வாழ்நாட்காலமாகும். நீண்ட ஆயுள் வாழ்வதில் கனடா நாட்டு மக்கள் ஆறாவதாக இருந்தனர்; சராசரி வாழ்நாட்காலம் 77.2 வருஷங்கள். கல்வி மற்றும் உடல்நலப் பராமரிப்பு, மேலும் தொலைக்காட்சிகள், வாகனங்கள் போன்றவற்றை உரியவராயிருத்தல் ஆகியவற்றிற்கு பணம் செலவழிப்பதைப் பொருத்தமட்டில் கனடா முதலிடத்திற்கு சற்று அருகாமையில் இருந்தது.
பிரேஸிலின் இந்திய தொகுதிகள்
“பிரேஸிலில் இன்னும், முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட அல்லது வெள்ளையர்களோடு அரிதாக மற்றும் சிநேகப்பான்மையற்ற தொடர்புடைய 59 இந்திய தொகுதிகள் இருக்கின்றன,” என்று ஆ எஸ்டாடோ டெ எஸ். பவ்லூ அறிவிக்கிறது. “இந்த மொத்த தொகுதிகளில், 80-கள் முதற்கொண்டு ஒன்பது தொகுதிகளே தேசிய இந்திய ஸ்தாபனத்தால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.” அமேசான் காடுகளில் புதிய இனங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. தனிமைப்படுத்தப்பட்ட இந்தியர்களில் பெரும்பான்மையர் 150 பேராகவோ அதற்கு குறைவாக அடங்கிய தொகுதிகளாகவோ வாழ்கின்றனர். பிரேஸில் 532 இந்தியர் பகுதிகளையும் 180 வித்தியாசப்பட்ட இனத் தொகுதிகளையும் 260 ஆயிரம் இந்தியர்களையும் கொண்டிருக்கிறது. அவை மொத்தமாக 9,09,705 சதுர கிலோமீட்டரை உள்ளடக்குகின்றன—பிரேஸில் பிராந்தியத்தில் சுமார் 11 சதவீதம்—என்றாலும் இதில் பாதிப் பகுதிகளுக்குத் திட்டவட்டமான எல்லைகள் இல்லை. பந்தங்களை உருவாக்கவும் நவீன உலகின் தலையிடுதல்களிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு இனத்தாருக்கு உதவவும், கிராமப்புற பழக்கவழக்கங்களைப் பதிவுசெய்து சுற்றுவட்டாரத்திலுள்ள பிற தொகுதிகளுடன் டேப்புகளைப் பகிர்ந்துகொள்ள, வீடியோ காமராவை எப்படிப் பயன்படுத்துவது என்று மனிதவியல் நூலர் அவர்களுக்கு சொல்லித் தந்திருக்கின்றனர். சமீபத்தில், ஒருவருக்கொருவர் படங்களைப் பரிமாறிப் பார்த்தப் பிறகு, வையாபி தொகுதியும் ஸோயெ தொகுதியும் ஒருமைப்பட்டன. ஒத்த கிளைமொழிகளைப் பேசி, அவர்கள் தங்களுடைய பழங்கதைகளையும் சடங்குமுறைகளையும் மேலும் வேட்டையாடுதல், குணப்படுத்துதல், சமைத்தல், நெசவுவேலை செய்தல் ஆகிய வேலை முறைகளையும் கலந்து பேசினர்.
ஒரு வெற்றிகரமான அறுவைசிகிச்சை
ஏப்ரலில் இரண்டாம் போப் ஜான் பாலுக்கு அறுவைசிகிச்சையளித்த மருத்துவக் குழு இடுப்பு அறுவைசிகிச்சை “நன்றாகச் செய்யப்பட்டிருக்க முடியாது” என “நியாயப்படி தகுதியாயிருந்த பெருமை”யோடு கூறியதை லா ஸ்டாம்பா என்ற இத்தாலிய செய்தித்தாள் சொல்கிறது. ஆனால் தற்போதைய போப்புக்கு செய்யப்பட்ட அறுவைசிகிச்சைகள் எப்போதுமே சிறந்த விளைவுகளைக் கொண்டிருந்திருக்கவில்லை. 1981-ல் அவரைச் சுட்டுக்கொல்லும்படி எடுக்கப்பட்ட பிரயாசையையடுத்து அறுவைசிகிச்சை செய்யப்படுகையில், இரண்டாம் ஜான் பால் இரத்தமேற்றுதலினால் உண்டான மிகவும் ஆபத்தான சைட்டோமெகலோ வைரஸ் தொற்றுநோய்க்காகச் சிகிச்சை அளிக்கப்படுவதற்கு ஆஸ்பத்திரியிலேயே இரண்டு மாதங்கள் கிடக்கவேண்டியதாக இருந்தது. எனவே, லா ஸ்டாம்பா பிரகாரம், இந்த முறை “இரத்த இழப்பு அதிகமாக” இருந்தாலும், இரத்தமேற்றுதல் செய்யப்படவே இல்லை. மாறாக, அந்தச் செய்தித்தாள் குறிப்பிடுகிறது: “அறுவைசிகிச்சையின்போது போப் இழந்த இரத்தம் திரும்பவும் பெறப்பட்டு, கிருமிகள் போக்கப்பட்டு, திரும்பவும் உட்செலுத்தப்பட்டது.”
எய்ட்ஸுக்குச் சீக்கிரத்தில் நிவாரணம் இல்லை
கடந்த வருட ஆகஸ்டில், ஜப்பானில் கூடிவந்த 10-வது சர்வதேச மாநாடு, எய்ட்ஸைத் தடுப்பதற்கு ஊசிகளைத் தயாரிக்க எடுக்கப்பட்ட பிரயத்தனங்களும் அதற்குச் சிகிச்சையளிக்க மருந்துகளைத் தயாரிக்க எடுக்கப்பட்ட பிரயத்தனங்களும் பெரும்பான்மையாகத் தோல்வியடைந்திருக்கின்றன என்றும் இப்பத்தாண்டு முடிவதற்குள் எதுவும் எதிர்பார்க்கப்படுவதில்லை என்றும் ஒப்புக்கொண்டது. “உலகில் ஹெச்.ஐ.வி. நோயினுடைய ஆரம்பக்கட்டத்திலேயே நாம் இருக்கிறோம்,” என்று ஜார்ஜியாவிலுள்ள அட்லான்டாவிலிருக்கும் நோய் கட்டுப்பாட்டுக்கும் நோய் தடுப்புக்குமான மையங்களைச் சேர்ந்த டாக்டர் ஜேம்ஸ் கரன் சொன்னார். உலகமுழுவதிலும் சுமார் 1 கோடியே 70 லட்ச மக்கள் இந்நோயினால் பீடிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது; இது முந்தைய வருஷத்தைக் காட்டிலும் 30 லட்சம் அதிகமாயிருந்தது. விசனகரமாக, இந்த எண்ணிக்கையில் பத்து லட்சம் பேர் பிள்ளைகளாயிருந்தனர். இதே நிலை தொடர்ந்தால், 2000-வது வருஷத்திற்குள் மொத்தமாக மூன்று கோடியிலிருந்து நான்கு கோடி மக்கள் நோயினால் பீடிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பு சொல்கிறது. எய்ட்ஸ் நோய் முற்றிய ஆட்கள் 12 மாதங்களில் 60 சதவீதமாக உயர்ந்தனர், இறந்தவர்கள் உள்பட மத்திப 1994-ன் மொத்தத்தை நான்கு மில்லியனுக்குக் கொண்டுவந்தது. ஹெச்ஐவி நோய் தொற்றிய சமயத்திற்கும் எய்ட்ஸ் அறிகுறிகள் துவங்குவதற்கும் இடையே பத்து வருட அவகாசம் எடுக்கலாம். வளர்ந்துவரும் இந்நோய்க்கு எதிராகப் போராடுவதில் சீக்கிரமான முன்னேற்றம் இல்லாததன் காரணமாக, எய்ட்ஸ் மாநாடானது வருடாவருடம் நடத்தப்படுவதற்குப் பதிலாக, இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது; அடுத்த கூட்டமானது கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியாவிலிருக்கும் வான்கூவரில், ஜூலை 1996-ற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.
வாழ்க்கையின் ஆரம்பக்கட்டத்திலேயே பாதிக்கப்பட்ட பிள்ளைகள்
“உலகிடமான பிள்ளையின் மனச்சாய்வு 3 வயதிற்கு முன்னால் அவனோ அவளோ பெறக்கூடிய கவனிப்பு அளவின்பேரில் பெரிதும் சார்ந்திருக்கிறது; இது முறையாக, நரம்பு வளர்ச்சியின்பேரிலும் பிரச்சினைகளை ஆக்கப்பூர்வமாகத் தீர்க்கும் நம்பிக்கையின்பேரிலும் திறனின்பேரிலும் பாதிப்பை உடையதாயிருக்கிறது,” என்று டோரன்டோவின் குளோப் அண்ட் மெயில் அறிவிக்கிறது. “கீழான தராதரமுடைய பொருளாதார, சமூக சூழ்நிலைமைகளில் வாழும் இளைஞர் ஆக்கவளமுடைய, நன்கு சீர்திருத்தப்பட்ட பெரியவர்களாக வளருவதற்கு குறைவான வாய்ப்பையே உடையவர்களாக இருக்கின்றனர்.” முன்னேற்றமடைந்த ஆய்விற்கான கனடா நாட்டு நிறுவனத்தின் தலைவராகிய டாக்டர் ஃப்ரேஸர் மஸ்டர்டு என்பவரின் பிரகாரம், அத்தகைய பிள்ளைகள் பள்ளியை விட்டு விலகி, வன்முறையால் பிரச்சினைகளைத் தீர்க்கும் மனச்சாய்வுள்ளவர்களாகப் பெருமளவு இருக்கின்றனர். “பிரச்சினைகளைக் கையாளும் திறன்களை நன்றாய் வளர்த்துக்கொள்வதானது சமூகத்தோடு ஒத்திணங்கிப்போவதற்கான உங்களுடைய திறனின்மீது பெரும்படியான பாதிப்பை உடையதாயிருக்கிறது,” என்று அவர் சொன்னார். யேல் பல்கலைக்கழகத்திலும் மான்ட்ரீல் பல்கலைக்கழகத்திலும் செய்யப்பட்ட ஆய்வுகள் என்ன காட்டுகின்றனவென்றால், “பெற்றோர் பிள்ளைகளோடு அர்த்தமுள்ள பரஸ்பர செயலில் ஈடுபடுவது ஓர் இளைஞரின் சரீரப்பிரகாரமான, அறிவுப்பிரகாரமான, உணர்ச்சிப்பிரகாரமான வளர்ச்சிக்குப் பெரிதும் நன்மைபயக்குவதாக இருக்கிறது,” என்று குளோப் சொல்கிறது.
பயணஞ்செய்கையில் கவனமுள்ளவர்களாயிருங்கள்
பயணஞ்செய்கையில், உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் குறித்து கவனமுள்ளவர்களாயிருங்கள். “மூட்டைமுடிச்சுகளைத் திருடுபவர்களும் ஜேப்படி கொள்ளைக்காரர்களும் கவனக்குறைவாகப் பயணஞ்செய்வோரிடமாகக் கட்டுப்படுத்த முடியாத ஆசையை உடையவர்களாயிருக்கின்றனர்,” என்று பிரேஸிலில் வெளியாகும் கிலாடியா பத்திரிகை தகவலளிக்கிறது. அதேபோல, “யாராவது உங்களை இடித்தால் அல்லது உங்கள் துணிமணிகளில் எதையாவது சிந்தினால், விழிப்புள்ளவர்களாயிருங்கள். இவை யாவுமே கவனத்தைத் திசைதிருப்ப செய்யப்படும் பிரபலமான ஏமாற்றுவேலைகளாகும்.” மேலும், யாராவது தகவல் கேட்டாலோ உதவி கேட்டாலோ ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள். இலேசாகக் கவனத்தை அலைபாயவிடுவது உங்களுடைய மூட்டைமுடிச்சுகள் பறிபோவதற்குக் காரணமாகலாம். சாவோ பாலோவிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரியும் ஆட்ரியானோ காலேரோ பிரகாரம், விமான நிலையத்தில் வருகையைத் தெரிவிக்கையில் சூட்கேஸ்களைக் காட்டும்போதும் வாடகைக்குக் கார் எடுக்கும் கவுன்டரில் ஆவணங்களைக் கையொப்பமிடும்போதும் ஹோட்டலில் வருகைப் பதிவு செய்யும்போதும் ஹோட்டலை விட்டு வெளியேறும்போதும் டாக்ஸியில் பிள்ளைகளை உட்கார வைக்கும்போதும் கடை ஜன்னல்களில் உள்ள விளம்பரப் பொருட்களைப் பார்க்கும்போதும் காப்பி அருந்தும்போதும் விசேஷ கவனம் தேவையாயிருக்கிறது. உங்களுடைய சாவிகள் திருட்டுப்போனால் பூட்டுகளை உடனே மாற்றும்படி அந்தப் பத்திரிகை உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறது. திருடன் உங்கள் மூட்டைமுடிச்சை, தான் கண்டதாகச் சொல்லி, காணாமற்போன பொருட்கள் எல்லாவற்றையும் திரும்பக் கொடுக்கவுங்கூடும், ஆனால் பின்னர் உங்கள் வீட்டிலுள்ளவற்றைக் கொள்ளையடிக்க அவன் மற்றொரு சாவிக் கொத்தைச் செய்திருக்கக்கூடும்.
எந்தத் தவறான எண்ணமும் உத்தேசிக்கப்படவில்லை
ஜப்பானை விஜயம் செய்யும்போது “அந்நியர்களுக்கு அனுமதி கிடையாது” என்று கோரும் அடையாளச் சின்னங்களைப் பார்க்கும் விருந்தாளிகள் நிலைகுலைந்துபோய், எரிச்சலடையக்கூடாது என்று புலன்விசாரணைகள் செய்யும் ஜப்பான் ஹெல்ப்லைன் அமைப்பு கூறுகிறது. உதவும் மனப்பான்மையுடைய மக்களாலேயே அத்தகைய அடையாளச்சின்னங்களில் பெரும்பான்மையானவைப் போடப்பட்டிருக்கின்றன. இவ்விதமாகச் சிந்திப்பதற்கு ஓர் உதாரணம், டோக்கியோவிலுள்ள ஆகிஹாபாரா பகுதியிலுள்ள சிறிய எலக்ட்ரானிக் கடையின் சொந்தக்காரரால் கொடுக்கப்பட்ட இந்த விளக்கமாகும்: “என்னால் [அந்நிய மொழிகள்] எதையுமே பேச முடியாததன் காரணமாக, என் கடைக்கு வரக்கூடிய ஜப்பானிய மொழி பேசாத அநேக மக்களை நான் தொந்தரவுபடுத்தி வருகிறேன். மக்களை அசெளகரியப்படுத்தாமலிருக்க, அத்தகைய அடையாளச்சின்னத்தைப் போடுவதே என்னால் செய்யமுடிந்த நல்ல காரியம் என்று நான் எண்ணினேன்.” ஆசாஹி ஈவ்விங் நியூஸ் அறிவித்தது: “பெரும்பான்மையருடைய விஷயத்தில், ஜப்பானியர் அல்லாதவர்களோடு சிறிது தொடர்பையே வைத்திருந்த ஆட்களிடம் தப்பெண்ணம் ஏற்பட்டு, சூழ்நிலையைச் சமாளிக்க, இல்லை என்று சொல்வதே சிறந்த வழியாகும் என்று இதனால் நினைக்கின்றனர்.”
அறிவுள்ள வாத்தியக்காரர்கள்
எலி கொலையாளிகள் பதவிக்கான 76 காலியிடங்களை நிரப்ப விளம்பரப்படுத்தியதால், பம்பாய் நகராட்சி கழகம் பிரச்சினைக்குள்ளானது. “எலி கொலையாளியின் கல்வித் தகுதி வெறும் ஆரம்பப் பள்ளிப் படிப்பாக இருக்கையில், 40,000-க்கும் சற்று மேற்பட்ட மனுதாரர்களில் பெரும்பான்மையர் பட்டதாரிகளாகவும் பல்கலைக்கழகத்தில் சேரத் தகுதியுள்ளவர்களாகவும் காலேஜ் படிப்பை நிறுத்தியவர்களாகவும் இருக்கின்றனர்,” என்று இண்டியன் எக்ஸ்பிரஸ் அறிவிக்கிறது. “எப்படி ஒரு பட்டதாரியை எலி கொலையாளியாக நாங்கள் நியமிக்க முடியும்?” என்று ஓர் அலுவலர் கேட்டார். எலிகள் இரவில் தேடப்பட்டு, கனத்த தடியால் கொல்லப்படுகின்றன; புதிதாய்க் கொல்லப்பட்ட 25 எலிகளுக்கு 100 ரூபாய் (3 டாலருக்கும் சற்று மேலாக, ஐ.மா.) தரப்பட்டது. அந்தக் கழகம் “மேம்பட்டவொரு ஆளெடுப்பு திட்டத்”திற்காகத் தேடிவருகிறது. ஆனால் குடிமை அதிகாரிகள் இந்தப் பிரச்சினையை மாத்திரம் எதிர்ப்படுவது கிடையாது. அவர்கள் மதச் சார்பான பிரச்சினையையும் எதிர்ப்படுகின்றனர். ஜைன மத உறுப்பினர்களும் விலங்குகள் கொல்வதை அனுமதியாத இதர மதங்களும் மனிதத்தன்மையினிமித்தம் எலிகளைக் கொன்றுபோடாதபடி பணியாட்களுக்குப் பணம் தள்ளுபவர்களாக இருக்கின்றனர்.