மென்னோட்டத்தை அனுபவியுங்கள்—ஆனால் ஆபத்துக்களுக்கு உஷார்!
பதினெட்டு வயது நிரம்பிய அவனுக்கு “ஓடுவதற்கான அவனுடைய ஏக்கத்தைத் திருப்திசெய்வதற்கு நீண்ட நீண்ட தூரங்கள்” தேவைப்பட்டன என்பதாக ஜெர்மன் செய்தித்தாள் சுட்டெட்ஷி ஸீட்டிங் அறிவிக்கிறது. காலை 2 மணிக்கும் மறுபடியும் காலை 6 மணிக்கும், “படுக்கைக்கு வந்து அமைதியாகவும் திருப்தியாகவும் படுத்துக்கொள்வதற்கு முன்பாக அவன் ஓரிரு டஜன் கிலோமீட்டர் தூரம்” ஓடுவான். இது ஒருக்காலும் அபூர்வமான ஒரு நிகழ்ச்சியாக இல்லை, ஏனென்றால் பல்வேறு தேசங்களிலுள்ள ஆய்வுத்துறை விஞ்ஞானிகள் எண்டார்ஃபினுக்கு அடிமையாகியுள்ள மென்னோட்டக்காரர்களைத் தற்போது ஆய்வுசெய்துவருகின்றனர். இப்படிப்பட்ட பழக்கத்துக்கு அடிமையாதல் எவ்வாறு ஏற்படலாம்?
தொடர்ச்சியான மற்றும் நீண்ட நேர சரீரப் பிரயாசத்தின் காரணமாக தசை நரம்புகளில் எண்டார்ஃபின் உருவாவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். எண்டார்ஃபின்கள் சுபிட்ச உணர்வை ஏற்படுத்தும் (உள்ளிருந்து சுரக்கும்) நோவாற்றும் மருந்தாகும்—தீவிர மென்னோட்டக்காரர்களுக்குச் சில சமயங்களில் ஊக்கமான ஒரு உணர்வை இது அளிக்கிறது. விளையாட்டு மருத்துவத்தை ஆய்வுசெய்யும் ஒரு சர்வதேச சங்கத்தின் தலைவர் வில்டார் ஹால்மான் பின்வருமாறு உறுதியாகச் சொல்கிறார்: “வலியை மறந்து தூங்கச் செய்யும் இந்த மருந்துகள் துர்ப்பழக்கத்துக்கு அடிமையாவதற்கு வழிநடத்துமா இல்லையா என்பது விவாதத்துக்குரிய விஷயமாகவே நீண்டகாலமாக இருந்துவந்திருக்கிறது. இப்பொழுது அது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.” ஆகவே, நீண்ட தூரங்கள் ஓடுவதில் அல்லது மென்னோட்டத்தில், நிச்சயமாகவே அளவுக்கு அதிகமான சரீர முயற்சியில், உள்ளார்ந்த ஆபத்து இருப்பதாக தோன்றுகிறது.
கடுமையாக பிரயாசப்படுவதை உட்படுத்தும் விளையாட்டுகளோடு சம்பந்தப்பட்ட வேறு ஏதேனும் உடல் நல ஆபத்து இருக்கக்கூடுமா? ஆம். சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பாக மாரத்தானிலிருந்து ஆதன்ஸுக்கு ஓடிய கிரேக்க நாட்டு தூதுவனின் கதை உங்களுக்கு நினைவிலிருக்கலாம். கட்டுக்கதையின்படி, பெர்சியர்களின் மீது கிரேக்கரின் வெற்றி பற்றிய செய்தியை ஆதன்ஸுக்கு கொண்டு வந்தப்பின் அவன் அவ்விடத்திலேயே விழுந்து மாண்டுபோனான். இந்தக் கதையில் ஆய்வாளர்கள் தசைகளில் எண்டார்ஃபின்களின் உதாரணத்தைக் காண்கிறார்கள். நீண்ட நேரம் விடாமுயற்சியுடன் செய்யப்படும் நடவடிக்கையினால் சடுதியாக இதயம் நின்றுவிடுவதால் அது மரணத்துக்கு வழிநடத்தக்கூடும் என்பதாக அவர்கள் சொல்கின்றனர். ஏனென்றால் எண்டார்ஃபின்கள் வலி உணர்ச்சியைக் குறைத்துவிடுகின்றன. உதாரணமாக, சாதாரணமான சூழ்நிலைமைகளின்கீழ் கடுமையான நெஞ்சு வலி ஓடுபவரை நின்றுவிடும்படியாகச் செய்துவிடுகிறது. நிபுணர்களின் கருத்துப்படி, இது இருதயம் தன்னை எப்போதும்போல் மறுபடியும் சீர்செய்துகொள்வதை அனுமதிக்கிறது. ஆனால் அளவுக்கு அதிகமான சரீர முயற்சியின் போது, எண்டார்ஃபின்கள் வலி உணர்ச்சியைத் தணித்து உடலினால் அனுப்பிவைக்கப்படும் சமிக்ஞைகளை ஓட்டக்காரர் உணரமுடியாதபடிச் செய்துவிடுகின்றன. இது அழிவுண்டாக்கும் பின்விளைவுகளைக் கொண்டிருக்க முடியும்.
மறுபட்சத்தில் சமநிலையான உடல் பயிற்சி ஆரோக்கியமானது, இப்படிப்பட்ட சமயங்களில் வெளியிடப்படும் எண்டார்ஃபின்கள் உடன்பாடான பாதிப்பை உடையனவாக இருக்கின்றன. வழக்கமாக மென்னோட்டப்பயிற்சி செய்யும் ஒரு பெண் விளக்குகிறாள்: “என்னுடைய மனநிலையைக் கட்டுப்படுத்துவதற்கு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பழக்கம் எனக்கிருந்தது, ஆனால் இப்பொழுது எனக்கு மோசமான மனநிலை இருக்கையில், நான் ஓடுகிறேன்.” சுறுசுறுப்பான நடை அல்லது ஓட்டம் நிச்சயமாகவே மனச்சோர்வை நீக்க அல்லது குறைந்தபட்சம் சமாளிக்கவாவது உதவக்கூடும். எண்டார்ஃபின்கள் இப்படிப்பட்ட சமயங்களில் உதவுவதாக தெரிகின்றன. உடற்பயிற்சியில் அளவுக்கு அதிகமாக ஈடுபடும்போது மாத்திரமே அது ஆபத்தாக இருக்கிறது.—1 தீமோத்தேயு 4:8-ஐ ஒப்பிடுக.