டான்ஜானியாவில் ஓர் இரவுநேர சந்திப்பு
கென்யாவில் யெகோவாவின் சாட்சிகளுடைய சர்வதேச மாநாட்டிற்குப் பிறகு, டான்ஜானியாவினுள் எங்களுடைய தனிப்பட்ட பயணத்தை ஆர்வத்துடன் தொடங்கினோம்.
முதலாவதாக நாங்கள் மன்யாரா ஏரி தேசிய பூங்காவில் நிறுத்தினோம். பல்வகையான வனவாழ் விலங்குகளை—நீல குரங்குகள், இம்பாலாக்கள், காட்டு எருமை, வரிக்குதிரைகள், இன்னும் பலவற்றைக் கண்டு நாங்கள் வியப்புற்றோம். ஆங்காங்கே நீர்யானைகளால் நிரப்பப்பட்ட ஒரு குளத்தை உற்றுநோக்குவதைக் கற்பனைசெய்துபாருங்கள். மற்ற பக்கத்தில் ஒட்டைச்சிவிங்கி ஒன்று உண்ணுவதையும், தொலைதூரத்துப் புல்வெளியில் ஒரு சிங்கத்தையும், அதற்கு அப்பால், எருதுபோன்ற தோற்றமுடைய மான்வகை கூட்டத்தையும் பார்ப்பதை எண்ணிப்பாருங்கள்.
எங்கோரோங்கோரோ எரிமலைவாயை வந்தடைந்தபின், அந்த எரிமலை பெருவாய்க்குள் (உயிரற்ற எரிமலைக்குள்) செல்வதற்கு ஒருநாள் சுற்றுலாவிற்காக வழிகாட்டுபவர் ஒருவரையும் நான்கு சக்கர வாகனம் ஒன்றையும் வாடகைக்கு அமர்த்தினோம். விளிம்பிலிருந்து எரிமலைவாயின் அடிமட்டம் வரையாக அந்தக் கரடுமுரடான பாதையில் சுமார் 600 மீட்டர் சென்றோம். என்னே ஒரு காட்சி! பரந்த சமவெளியினூடே வனவாழ்வு பரவி இருந்தது. இடப்பெயர்ச்சியின்போது செல்வதைப்போல் எருதுபோன்ற மான்வகை கூட்டங்கள் சென்றன. வரிக்குதிரைகள், தென் ஆப்பிரிக்க மான்வகைகள், தாம்ஸன் மற்றும் க்ரான்ட் சிறு மான் வகைகள் மிகுந்து காணப்பட்டன. நாங்கள் நிறுத்திய ஒரு இடத்தில், பிடரி மயிருள்ள சிங்கம் ஒன்று, நாங்கள் அதற்கு நேரே மேலிருந்து பார்க்கிறோம் என்பதைப்பற்றி கவலையேபடாமல் எங்கள் வாகனத்தின் நிழலில் ஓய்வெடுத்தது. பின்னர், தொலைதூரத்தில் கறுப்பு காண்டா மிருகத்தையும், அருகாமையில் காட்டு யானைகள் மரங்களை உண்பதையும் பார்ப்பதற்காக சற்று நின்றோம். விளிம்பினிடமாகத் திரும்பி வருகையில், நினைவில் நின்ற பல மிருகங்களை ஞாபகப்படுத்திப் பார்த்தோம். நாங்கள் எதையாவது மறந்துவிட்டோமா?
ஆம், ஆப்பிரிக்க சிறுத்தை. ஆனால் காட்டில் அதில் ஒன்றைக் காணலாம் என்று நம்புவது ஏறக்குறைய கற்பனையாகவே இருக்கும். எர்வின் பாயர் என்ற படப்பிடிப்பாளர் இவ்வாறு குறிப்பிட்டார்: “சுற்றுப்பயணிகள் அளவுக்கதிக ஆர்வத்துடனும் ஊக்கத்துடனும் சிறுத்தைகளைப் பின்தொடர்கின்றனர்; இந்த மிருகங்களைக் காண்பது மிக அரிது என்பது இதற்கு ஓரளவு காரணமாகவாவது இருக்கிறது; ஆகவே, புகைப்படம் எடுப்பதைப்பற்றி சொல்லவே வேண்டாம். குறிப்பிடத்தக்க பயணங்களில், அநேக பயணிகள் ஒன்றைக்கூட பார்ப்பதில்லை. என்னுடைய 15 பயணங்களில், மொத்தமாக நான் எட்டு சிறுத்தைகளைக் கண்டிருக்கிறேன், அவற்றில் ஒன்று மட்டுமே காமராவில் படம் எடுக்கும் அளவிற்கு பக்கத்தில் இருந்தது.”—சர்வதேச வனவாழ்வு (ஆங்கிலம்).
இரவுநேரம் நெருங்கிக்கொண்டிருந்தபோது மற்றொரு பிரச்சினை எங்கள் மனதில் எழும்பியது. ஒரு தங்கும் விடுதியில் செய்யப்பட்டிருந்த முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டிருந்தன; ஆகவே நாங்கள் தங்கும் இடங்களுக்காகத் தேட வேண்டியிருந்தது. கும்மிருட்டில், தளமிடப்படாத ஒரு பாதையில் இது எங்களைக் கொண்டு சென்றது. முன் இருக்கையில் அமர்ந்திருந்த எங்களில் இருவர் திடீரென்று திடுக்குற்றோம். எங்கள் முன்விளக்குகளின் ஒளிக்கதிர்களுக்குள் பழுப்பு நிற கற்றை ஒன்று படர்ந்தது. நாங்கள் சீக்கிரமாக நிறுத்திவிட்டு, ஆச்சரியத்தில் திணறிப்போனோம்!
எங்களுக்கு நேர் எதிரில், முழுவளர்ச்சியடைந்த சிறுத்தை ஒன்று நின்றது! பின் இருக்கைகளில் இருந்தவர்கள் வசதியற்ற இடத்தில் உட்கார்ந்திருந்தார்கள் என்றால் சீக்கிரத்தில் அந்நிலை மாறியது. அந்தச் சிறுத்தை, ரோட்டின் வலதுபக்கத்திற்குப் பாய்ந்தோடி, அசைவின்றி நின்றது. அந்த வெளிச்சத்தின் மத்தியில், நாங்கள் யாவரும் காணும்விதத்தில், ‘என்ன செய்வது?’ ‘தாக்குவதா, அல்லது தெரியாத ஒரு “பகைவனிடம்” முதுகைக் காண்பித்துக்கொண்டு, புதருக்குள் ஓட முயலுவதா?’ என்று அது யோசித்துக்கொண்டு நிற்பதுபோல் தோன்றியது.
எங்கள் கூட்டாளிகளில் ஒருவரான ஏட்ரியன், மிக அருகாமையில் இருந்தார்; சக்தி மற்றும் அழகை உள்ளடக்கியிருக்கும் இந்தச் சுருண்ட ஸ்பிரிங்கிடமிருந்து வெறும் ஒரு மீட்டர் தூரத்திலேயே இருந்தார். “சீக்கிரமாக அந்த ஃப்ளாஷை என்கிட்ட தாங்க,” என்று கிசுகிசுத்தவாறே முழுவதுமே தானாக இயங்குகிற தன்னுடைய காமராவை பற்றிக்கொண்டார். அவருக்குப் பின்னிருந்தவர்கள், “ஒரு சத்தத்தையும் உண்டாக்காதீர்கள்,” என்று மெதுவாக எச்சரித்தனர். சீக்கிரமாக காமரா தயாராக்கப்பட்டு, ஒரு படம் எடுக்கப்பட்டது; ஆனால் வேனின் உள்பக்கத்திடமாக அந்த ஃப்ளாஷ் திருப்பப்பட்டிருந்ததால், அது ஒரு தோல்விபோல் தோன்றியது. பாட்ரிகள் தயாரானதும், ஏட்ரியன் மெதுவாகத் தன் ஜன்னலை இறக்கிவிட்டார். அந்தச் சிறுத்தை தன் வாலின் நுனியை வீசியெறிந்துகொண்டு, அதன் கண்கள் பளிச்சிட, ஒரு கைநீள தூரத்தில் நின்றுகொண்டிருந்தது.
நாங்கள் இரண்டாவது படத்தை எடுத்ததும், அது, தான் என்ன செய்யவேண்டும் என்பதைத் தீர்மானித்தது. அந்தப் பெரிய சிறுத்தை, புதர்களுக்குள்ளாகப் பாய்ந்து சென்று மறைந்தது. எங்கள் வேனுக்குள் என்னே ஒரு கிளர்ச்சி! மறக்கமுடியாத ஒரு அனுபவம், மிகவும் அரியதோர் அனுபவம் என்று வழிகாட்டிகள் பின்னர் கூறினர். அந்த இரண்டாவது படம் மிக நன்றாக இருந்ததால், டான்ஜானியாவிலிருந்த அந்தக் கிளர்ச்சியூட்டும் இரவுநேர சந்திப்பைப் பற்றிய நினைவுகளைத் தக்கவைப்பதற்கு அதை வைத்திருந்தோம்.