உலகத்தைக் கவனித்தல்
திக்குவாய்களுக்கு நம்பிக்கை
தான் குழந்தையாய் இருந்தபோது திக்கிப் பேசியதால் ஏற்பட்ட தர்மசங்கடத்தை அனுபவித்த, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு தாய் தன்னுடைய சொந்த பிள்ளைகள் சிறு வயதிலேயே திக்கிப் பேசியதைக் கேட்டு நிலைகுலைந்துபோனாள். ஆகவே நியூ சௌத்வேல்ஸில் உள்ள சிட்னி மருத்துவமனையிலும் சிட்னி பல்கலைக்கழகத்திலும் உள்ள பேச்சு மருத்துவ நிபுணர்களால் சேர்ந்து உருவாக்கப்பட்ட ஒரு திட்டத்தில் ஈடுபாடு கொண்டாள். தெளிவாகவே, குழந்தைகளுக்கு முடிந்தளவு சிறு வயதில் சிகிச்சை அளிப்பதிலேயே வெற்றியின் ரகசியம் அடங்கியிருக்கிறது. குழந்தை வளரவளர இந்தப் பிரச்சினையெல்லாம் தானாகவே சரியாகிவிடும் என்று தவறாகக் கருதி அநேகப் பெற்றோர்கள் சிகிச்சை அளிக்க தாமதித்துவிடுகின்றனர். தி சிட்னி மார்னிங் ஹெரல்டில் அறிக்கை செய்யப்பட்டபடி, இந்தத் திட்டம் “அமோக வெற்றி பெற்றிருக்கிறது, ஆகவே திக்குவாய் முற்றிலும் குணமாக்கப்படலாம் என்பதற்கான முதல் நம்பிக்கையை அளிக்கிறது.” சிறு குழந்தைகளுக்குச் சிகிச்சையளிக்க மருத்துவ நிபுணர்களுக்குச் சுமார் பத்தேபத்து மணிநேரம் மட்டுமே தேவையாயிருக்கிறது; ஆனால் பெரிய பிள்ளைகளுக்கும் பெரியவர்களுக்கும் சிகிச்சையளிக்கவோ, வீட்டில் பெற்றோர்கள் செலவுசெய்த மணிநேரத்திற்குக் கூடுதலாக, நூற்றுக்கணக்கான மணிநேரம் செலவுசெய்ய வேண்டியதாயிருந்தது என்று அது குறிப்பிடுகிறது. “சிகிச்சையளிக்கப்பட்ட, இரண்டு முதல் ஐந்து வயது வரையுள்ள 43 பிள்ளைகளில், சிகிச்சைக்குப்பின் ஒன்று முதல் ஆறு வருடங்களுக்குக் கவனித்தபோது இந்தப் பிரச்சினை ஒருவருக்கும் திரும்ப வரவில்லை என்று நடந்துகொண்டிருக்கும் ஒரு ஆராய்ச்சி கண்டுபிடித்தது” என்பதாக அந்தச் செய்தித்தாள் சொன்னது.
மதச்சுற்றுலாவின் “வர்த்தகம்”
“இத்தாலியிலும் உலகின் [மற்ற பாகங்களிலும்] மதச்சுற்றுலா வளர்ச்சி அடைந்து வருகிறது,” என்று எழுதுகிறது லா ரேப்பூப்ளிக்கா. பட்டியலிட்டுப் பார்த்தால், 1994 “இதற்கு முன்பிருந்த அனைத்துப் பதிவுகளையும் விஞ்சி”விடும் என்பதாக நிபுணர்கள் கணக்கிடுகின்றனர். இத்தாலியில் மட்டும் கத்தோலிக்க மதக் கட்டடங்களுக்கு 3 கோடியே 50 லட்சத்திலிருந்து 3 கோடியே 70 லட்சம் பேர் வரை பார்ப்பதற்கு வந்தனர். இத்தாலியின் வெற்றிக்குக் காரணமாக இருப்பது அதன் “கலைநயம் வாய்ந்தவையாக பட்டியலிடப்பட்டிருக்கும் 30,000 சர்ச்சுகளும், 1,500 புனித ஸ்தலங்களும், 700 அத்தியட்சாதீன அருங்காட்சியகங்களும், டஜன் கணக்கான துறவி மடங்களும், குருமடங்களும், கன்னியாஸ்திரீ மடங்களுமே,” என்று அந்தச் செய்தித்தாள் சொல்லுகிறது. இந்த மதச்சுற்றுலா 4 லட்சம் கோடி லைருக்கும் [2.5 பில்லியன் யு.எஸ். டாலருக்கும்] அதிகமான விற்பனையோட்டத்தை உடைய “வர்த்தகம்” ஒன்றை உருவாக்குகிறது; “ஆனால் மற்ற நாடுகளிலும் மதச்சுற்றுலா அமோக வெற்றியைக் காண்கிறது,” என்பதாக அந்தச் செய்தித்தாள் மேலும் கூறுகிறது.
சாப்பாட்டுக் கோளாறுகள் அதிகரிக்கின்றன
பசியில்லாமை (anorexia), அடங்காப்பசி (bulimia) ஆகிய சாப்பாட்டு கோளாறுகளை உடைய ஆட்களின் எண்ணிக்கை அதிகரிப்பதேன்? “அச்சுறுத்துவதாகவும் கட்டுக்கடங்காததாகவும்” தோன்றும் ஒரு உலகில் பெருத்த மனக்கவலையை ஏற்படுத்தும் உணர்ச்சிப் போராட்டங்களாலேயே என்று உங்கள் குடும்பம் என்ற ஆங்கில பத்திரிகை அறிவிக்கிறது. அவர்களுக்குக் கவலைகளை ஏற்படுத்தும் காரணங்கள் சிக்கலானவை. விரும்பியதை செய்து முடிக்கும்படி பெற்றோரால் கட்டாயப்படுத்தப்படுவது, பெற்றோர்களின் மணவிலக்கு, மற்றும் துர்ப்பிரயோகம் போன்றவை ஆகும். இவை மட்டுமல்லாமல், ஃபேஷன் பத்திரிகைகளைக் கருத்தூன்றி வாசித்தல், மெலிவதற்கான மட்டுக்குமீறிய முயற்சியில் உணவுக் கட்டுப்பாட்டைக் குறித்து படித்தல், அல்லது கிரமமின்றி சாப்பிடும் பழக்கங்களைக் கைக்கொள்ளுதல் போன்றவற்றாலும் அநேகர் இக்கோளாறுகளுக்குப் பலியாகின்றனர் என்று நேஷனல் ஈட்டிங் டிஸார்டர்ஸ் கமிட்டியின் அங்கத்தினராக இருக்கும் டாக்டர் டானி ல க்ராஞ் விவரிக்கிறார். எட்டே எட்டு வயதான குழந்தையும்கூட வல்லுநர்களின் உதவியை நாடியிருந்தபோதிலும், 18 முதல் 22 வயதுள்ள பெண்களே இதற்கு மிக அதிகளவில் ஆளாகின்றனர். இதற்கு பலியானவர்களை வெற்றிகரமாக சிகிச்சை அளித்து குணமாக்கமுடியும், ஆனால் குணமாகவேண்டும் என்று அவர்கள் விரும்பினால் மட்டுமே என்று சொல்லுபவராக, “முற்றிலும் குணமடைய முடியும்” என்று குறிப்பிடுகிறார் டாக்டர் ல க்ராஞ். என்றபோதிலும், சாப்பாட்டுக் கோளாறுகளுக்குப் பலியானவர்களில் 18 சதவீதத்தினர் மரிக்கின்றனர் என்பதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
டெல்லியில் காணாமல்போகும் ஆட்கள்
இந்தியாவின் தலைநகராகிய டெல்லியில் ஒவ்வொரு வருடமும் 10,000-க்கும் அதிகமானோர் காணாமல் போவதாக அறிக்கை செய்யப்படுகின்றனர். இவர்களில் மூன்றிலொரு பாகத்தினர் மட்டுமே கண்டுபிடிக்கப்படுகின்றனர். ஐம்பது சதவீதத்தினர் 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளாக இருக்கின்றனர்; மேலும் 2-க்கு 1 என்ற வீதத்தில் ஆண்கள் பெண்களைவிட அதிகம் காணாமல் போகின்றனர். தி டைம்ஸ் ஆஃப் இண்டியா-வில் அறிக்கை செய்யப்பட்டபடி, ஆயிரக்கணக்கான இளம்பெண்கள் விபசார விடுதிகளில் சேரவேண்டிய நிலை ஏற்படுகிறது. இளம் பையன்களோ பிச்சையெடுக்கவோ அல்லது சின்ன சின்ன ஹோட்டல்களில் குறைந்த கூலிக்கு அதிக நேரம் வேலை செய்யும்படியோ கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
கியூபாவில் யெகோவாவின் சாட்சிகள்
கியூபாவில் உள்ள யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய ஊழியத்தைச் செய்ய அதிக சுதந்திரத்தை அனுபவிப்பவர்களாக இருக்கின்றனர். இது, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை மக்களிடம் பகிர்ந்துகொள்ள அவர்களுக்கு உதவியிருக்கிறது. தங்களுடைய வேலை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு சட்டப்பூர்வமாக்கப்படவில்லை. இருப்பினும் அவர்களுடைய முந்தைய அலுவலகங்களைப் பயன்படுத்திக்கொள்ள அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஆகவே எவ்வித தடையுமின்றி, சிறிய மாநாடுகளை நடத்துமளவுக்குத் தங்களுடைய வணக்கத்துக்காக கூடிவந்திருக்கின்றனர். பத்திரிகைகளை அச்சடிக்க அவர்களுக்கு உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் நடந்த இந்தச் சம்பவங்களால் சந்தோஷமடைந்து பூரித்துப்போன சாட்சிகள், தங்களுடைய பிரசங்க வேலையைத் தொடர்ந்து. நம்பிக்கையளிக்கும் பைபிள்செய்தியை மக்களுக்குச் சொல்ல கடுமையாக முயற்சிக்கின்றனர்.
அன்டார்க்டிகா —முன்பு வெப்பமாயும் பசுமையாயும் இருந்தது
ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று “இலைகள், மரக்கட்டை மற்றும் மகரந்தம் ஆகியவற்றோடு பாசி மற்றும் பூச்சிகளின் முட்டைகள்” ஆகியவற்றின் புதைபடிவங்களை, “தென் துருவத்திலிருந்து 500 கிலோமீட்டர் [300 மைல்] தூரத்தில்” கண்டுபிடித்திருக்கின்றனர்; “இது இன்று இருப்பதைவிட வெப்பமான, 20-25C [35°-45° F.] அளவைக் கொண்ட சீதோஷ்ண நிலையைக் குறித்துக் காட்டுகிறது,” என்றெல்லாம் தி ஆஸ்ட்ரேலியன் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. வண்டின் முட்டைகளைக் கண்டுபிடித்தது, பூச்சிகள் உயிர் வாழ்ந்திருக்கப் போதுமான அளவு வெப்பமான சீதோஷ்ண நிலையாக இருந்தது என்பதை உறுதிப்படுத்திற்று. மேலுமாக, தண்ணீர் உறையாமல் திரவநிலையிலேயே இருந்திருக்க வேண்டும். பயிரிடும் பருவகாலம் தாவரங்கள் பூத்து விதைகளைக் கொடுக்கக்கூடிய அளவுக்கு நீண்டதாக இருந்திருக்க வேண்டும். டாஸ்மேனியாவுக்கு வடதிசையில் 1,600 கிலோமீட்டருக்கும் சற்று குறைவான தூரத்தில் உள்ள மத்திய நியூ சௌத்வேல்ஸிற்கும் தெற்கே, இன்று வளராத தாவரங்கள், (ஆஸ்திரேலிய கண்டத்தின் தெற்கேயுள்ள தீவு மாகாணமாகிய) டாஸ்மேனியாவில் அதே காலப்பகுதியில் காணப்பட்டன என்று அந்த அறிக்கை மேலும் கூறியது. வெப்பமான சீதோஷ்ண நிலை இந்தப் பகுதியை ஒரு காலத்தில் செழிப்பூட்டியிருக்கிறது என்பதற்கான மறைமுக அத்தாட்சியை இது அளிக்கிறது.
ஆரை கருவிழித்திறப்பு நவீனமாக்குதல்
ஆரை கருவிழித்திறப்பு (Radial Keratotomy [RK]) என்பது கிட்டப்பார்வையை (தூரத்துப் பொருட்கள் தெளிவாக தெரியாததை) சரிசெய்வதற்கான ஒரு பிரபல அறுவை சிகிச்சை முறையாகும். இது ஐக்கிய மாகாணங்களில் வருடாவருடம் 2,50,000-க்கும் அதிகமான ஆட்களுக்கு செய்யப்படுகிறது. இவர்களில் 30 சதவிகிதத்திற்கும் அதிகமானோருக்கு முதல் ஆபரேஷனை நேர்த்தியாக்குவதற்கு இரண்டாவது ஆபரேஷன் ஒன்று தேவைப்படுகிறது. இப்போது “இந்த முறை ஓரளவு பாதுகாப்பானதாகவும் பலனளிக்கக்கூடியதாகவும் இருக்கிறது. ஆனால் அருகில் உள்ள பொருட்களைப் பார்ப்பதற்கான திறமை அதிவிரைவில் குறைய இது வழிநடத்தலாம்” என்பதாக, தேசிய கண் ஆராய்ச்சி நிலையத்தால் ஆதரிக்கப்பட்ட பத்து-வருட ஆராய்ச்சி ஒன்று தீர்மானித்திருக்கிறது என்று தி நியூ யார்க் டைம்ஸ் அறிக்கை செய்கிறது. இந்த அறுவை சிகிச்சையின் விளைவைப் பற்றிய விவரமான ஆராய்ச்சி முன்பு அவ்வளவாக அறிந்திராத பின்விளைவை வெளிப்படுத்திற்று: அருகில் உள்ளவற்றைப் பார்க்கும் பார்வையை சிறிது சிறிதாக மங்கலாக்குகிற, கண்ணில் ஏற்படும் படிப்படியான மாற்றங்கள். இந்த அறுவை சிகிச்சை செய்துகொண்ட 43 சதவீதத்தினருக்கு கண் பார்வை மங்குவது கவனிக்கப்பட்டது. சிலருடைய விஷயத்தில் சாதாரணமாக வயதாவதால் இது ஏற்படுகிறது என்று சொல்லலாம். என்றாலும் இன்னும் சிலருடைய விஷயத்தில் “ஆரை கருவிழித்திறப்பு முறையைக் காரணமாகக் காட்டவேண்டியிருப்பதாகத் தோன்றுகிறது. இம்முறை சில மக்களில் சிறு வயதிலேயே மாற்றத்தை உண்டாக்குவதாக தோன்றியது,” என்று அந்தக் கட்டுரை சொன்னது. அந்த ஆராய்ச்சியின் இணை தலைவர் டாக்டர் பீட்டர் ஜே. மெக்டானல், “இன்னும் தீர்வு காணப்படாத பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை மக்கள் உணரவேண்டும். பரிபூரண பார்வை கிடைக்கும் என்ற உத்தரவாதம் கிடையாது” என்று சொன்னார்.
ஒவ்வாமை உள்ளவர்க்கு நிவாரணம்
உலக சுகாதார நிறுவனம் சொல்கிறபடி, உலக மக்களில் 20 சதவீதத்தினருக்கு ஏதாவதொரு வகையான ஒவ்வாமை இருக்கிறது என்று க்ளோபோ சியென்சியா என்ற பிரேஸிலிய பத்திரிகை அறிக்கை செய்கிறது. “ஒவ்வாமைகள் நாகரீகத்தின் ஒரு நோயாக இருப்பதாக அனைத்து அறிகுறிகளுமே காண்பிக்கின்றன,” என்று நோய்த்தடை நிபுணர் ஜூலியோ க்ரோசெ சொல்லுகிறார். “காற்றில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நச்சுப் பொருட்கள் இருக்கின்றன.” கரையான், தூய்மைக்கேடு போன்ற பொதுவான காரணங்களோடு, மன இறுக்கம், மட்டுக்குமீறிய அளவு மருந்தை உபயோகித்தல், உணவுப் பொருட்களில் உபயோகப்படுத்தப்படும் ரசாயனப் பொருட்கள், அழகு சாதனங்கள், பானங்கள் ஆகியவையும் சேருகின்றன. மட்டுக்குமீறிய உடற்பயிற்சியும்கூட ஆஸ்துமாவுக்கு வழிநடத்தும் அல்லது ஆஸ்துமாவைத் தூண்டிவிடலாம். எனினும், சுவாசிக்கும் சரியான முறையை மக்கள் கற்றுக்கொண்டார்களேயானால், “பயிற்சி செய்வதானது ஒவ்வாமையின் தீவிரத்தையும் அது எவ்வளவு அடிக்கடி ஏற்படுகிறது என்பதையும் குறைக்க உதவலாம்,” என்று சொல்கிறார் டாக்டர் க்ரோசெ. ஒவ்வாமை உள்ளவர்கள் தங்களுடைய படுக்கையறையை சுத்தமாகவும் காற்றோட்டமுள்ளதாகவும் வைத்திருக்க வேண்டும்; நாய், பூனை, அல்லது பறவைகள் போன்ற வீட்டு விலங்குகளின் தொடர்பறுக்கவேண்டும்; அதேபோல ஸெண்ட்டுகளையும் வாசனைமிக்க மற்ற பொருட்களையும் தவிர்க்கவேண்டும். அவர்கள் வெப்பநிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்களையும், புகைபிடிப்பதையும், மதுபானங்களையும்கூட தவிர்க்கவேண்டும். மேலும் சிபாரிசு செய்யப்பட்ட மருந்துகளை மட்டும் சாப்பிடவேண்டும்.
ஜப்பான் ஆட்சியாளரது மறைமுக பேச்சைப் புரிந்துகொள்ளுதல்
டோக்கியோவில், “உங்களது அபிப்பிராயம் மதிப்புமிக்க ஒரு ஆலோசனை” அல்லது “உங்களது ஆலோசனைக்கு நாங்கள் விவேகமுடன் பதிலளிப்போம்” என்று சொல்வார்களானால், அதற்கு அர்த்தம் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வாய்ப்பில்லை என்பதாகும். அதேபோன்று, “விவரமாக சிந்திப்போம்” அல்லது “பல கோணங்களிலிருந்து சிந்திப்போம்” என்ற வாக்குறுதிகளும் உணரத்தக்க எந்தவித பலனையும் கொண்டுவரப் போவதில்லை. “உங்களது ஆலோசனையை நாங்கள் ஆராய்ந்து பார்ப்போம்” என்பதானது, சமீப எதிர்காலத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்பதை பொதுவாக அர்த்தப்படுத்துகிறது. ‘சிந்திப்பதற்கான’ வாக்குறுதிகள் ‘ஆராய்வதற்கான,’ வாக்குறுதிகளைப் பார்க்கிலும் ஓரளவு அதிக நம்பிக்கை அளிப்பவையாய் இருக்கின்றன. “ஆழ்ந்து ஆராய்வோம்” என்பது ஒரு கருத்து நடைமுறைப்படுத்தவும்படலாம் என்று அர்த்தப்படுத்துகிறது. சமர்ப்பிக்கப்பட்ட ஆலோசனைகளுக்கு “அரசாங்கம் சாதகமாக இருக்கிறதா அல்லது எதிராக இருக்கிறதா என்பது சிறிதும் புலப்படுவதில்லை” என்னும் குடிமக்களின் முறையீட்டிற்குப் பதில் அளிக்கும்போது, அரசாங்க உயர் அதிகாரி ஒருவர் டோக்கியோ நகர சபை கூட்டங்களில் சாதாரணமாக பயன்படுத்தப்படும் பதங்களை விளக்கினார் என தி டெய்லி யொம்யூரி சொன்னது. இவ்வாறு மறைமுகமாக சொல்வதற்கான காரணம் என்னவென்றால், “நகரசபை உறுப்பினர்களுடைய ஆலோசனைகளை மொட்டையாக நிராகரிப்பதன் மூலம் அவர்களை தர்மசங்கடமான நிலைக்கு ஆளாக்கிவிடாதபடி ஆட்சியாளர்கள் கவனமாக இருக்கின்றனர்.”
குப்பைத் தொட்டியில் மருந்துகள்
ஜெர்மானிய சுகாதார காப்பீட்டுறுதி நிறுவனம் ஒன்று சொல்லுகிறபடி, ஜெர்மனியில் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் குழந்தையும் நாளொன்றுக்கு 1,250 மாத்திரைகள் சாப்பிடக்கூடும்; அவ்வளவு அதிக மருந்துகள் விற்கப்படுகின்றன அல்லது சிபாரிசு செய்யப்படுகின்றன. அவ்வளவு மருந்துகளையும் மக்கள் என்ன செய்கிறார்கள்? இவற்றில் பெரும்பகுதி சாப்பிடப்படாமல் சும்மா தூக்கியெறியப்படுகிறது என்று ஸுயெடாய்ச்ச ட்ஸைடுங் அறிக்கை செய்கிறது. “வருடாவருடம் லட்சக்கணக்கான மதிப்புள்ள மருந்துகள் குப்பைத் தொட்டிக்குப் போகும்படி நாம் அனுமதிக்க முடியாது,” என்று சுகாதார காப்பீட்டுறுதி நிறுவனங்களின் சங்கம் ஒன்றின் தலைவர் வருத்தத்துடன் தெரிவித்தார். மருத்துவர்களும் மருந்து தொழிற்சாலைகளும் நோயாளிகள் பெறும் மருந்துகளைப்பற்றி அவர்களுக்கு அதிக விவரங்களைக் கொடுக்கும்படியும் அதுவும் அவர்கள் “புரிந்துகொள்ளக்கூடிய ஜெர்மானிய பாஷையில்” சொல்லும்படியும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.